20. பக்தி, பகுத்தறிவு.
மூவுலக சஞ்சாரியான நாரதர்
முன் நிற்கக் கண்டார் இருவரை.
இருவருமே நல்ல தபஸ்விகள்,
இறையைக் காண விழைபவர்கள்.
“வைகுண்டத்திலிருந்தா வருகின்றீர்?
வைகுண்டநாதன் என்ன செய்கின்றார்?”
நாரதர் சிரித்து விட்டுச் சொன்னார்,
“நாரணனுக்கு எல்லாமே விளையாட்டு!
யானைகளையும், ஒட்டகங்களையும்,
யாராலுமே செய்ய முடியாதபடி, அவர்
ஊசியின் சிறு கண்ணின் வழியே
உள்ளே புகச் செய்கின்றார், ஆஹா!”
முதலாம் யோகி பரம பக்தர்,
முழு விசுவாசம் உடையவர்.
“செய்வார்! செய்வார்! அவர் தான்
செய்ய வல்லவர் அற்புதங்களை!”
இரண்டாமவர் பகுத்தறிவுவாதி;
இளநகை புரிந்தார் அப்போது.
“யானையாவது? ஊசிக் காதாவது?
யாருக்கு காது குத்துகின்றீர்கள்?”
“முடியும்” என்றால் எல்லாம் முடியும்;
“முடியாது” என்றால் எதுவும் முடியாது!
“உருவம்” என்றால் உண்டு உருவம்;
“அருவம்” என்றால் வெறும் அருவமே.
நாம் விரும்புகின்றபடியே தன்னை,
நமக்குக் வெளிக்காட்டுவான் இறைவன்!
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
https://visalramani.wordpress.com/about/2491-2/20-பக்தியும்-பகுத்தறிவும்/