வெள்ளைப் பொய்கள்

உலகமே ஒரு நாடக மேடை, அதில்
உள்ளோர் எல்லோரும் நடிகர்களே!
உலவுகின்றது இப்படியும் ஒரு கருத்து;
உண்மையும் இதில் கலந்து உள்ளது.
நாம் நினைப்பதை எல்லாம் வெளியே
நால்வரிடம் விவரமாகக் கூற முடியாது;
அல்லவை நேரினும் நல்லறிவுரை கூடாது;
நல்லவை போல் எண்ணுவோம்; அது பாசாங்கு!
வெள்ளைப் பொய்கள் என்று ஒன்று உண்டு;
வெள்ளை மனத்தவர் கூறிடும் பொய்கள்;
விபரீதம் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டி
விளம்பப்படும் இவ்வகை வெள்ளைப் பொய்கள்!
கலகங்கள், கலவரங்கள் பரவுவதைக்
கவனத்துடன் தடுக்க வேண்டிய அரசே,
பரப்பும் பல வித ஊடகங்கள் மூலம்,
பலப் பல வெள்ளைப் பொய்களை!
குடும்பத்தில் குழப்பம் வராமல் இருக்க,
கூறவேண்டும் சில வெள்ளைப் பொய்கள்!
குறைகளை மறைத்து நிறைவைக் காட்ட,
கூற வேண்டும் சில வெள்ளைப் பொய்கள்!
உண்மை இல்லாது இருந்த போதிலும்,
உலகில் விரும்பப்படுகின்றன இவைகள்;
வெள்ளை மனத்துடன், நன்மை விரும்பி,
வெளிச் சொல்லும் இவைகள் மெய்களே!
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
https://visalramani.wordpress.com/about/உலகமும்-நாமும்/84-வெள்ளைப்-பொய்கள்/
P.S
I strongly suspect that a story department is in full swing to think up spread and confuse the masses about the Truth and Falsehood, appointed by the government itself!