6. தன்னைப் போலவே!

உலகைத் துறந்து, மனத்தை அடக்கி,
உண்மை சமாதியில் இருந்தார் ஒருவர்.
களவு புரிந்து ஓடி வந்தவன், அவரைக்
களவாளி ஒருவன் என்றே நினைத்தான்.
“வீரர்கள் வருமுன் நான் ஓடிச் சென்று
வீட்டை அடைந்தால் பிழைப்பேனே!”
நொடியில் மறைந்தான் அக்களவாளி.
ஆடியபடியே வந்தான் மிடாக்குடியன்.
“வயிறு முட்டக் கள் குடித்து விட்டு
வழியில் கிடப்பதைப் பாருங்களேன்!
ஒரு பானைக் கள் நான் குடித்தாலும்
தெருவில் விழுந்து புரண்டதுண்டோ ?”
யார் வந்து போனதையும் அறியாமல்,
யார் சொன்ன சொல்லையும் கேளாமல்,
வசை மொழிகளையும் கூட உணராமல்,
அசையாமலேயே இருந்தார் அம்மனிதர்.
மகான் ஒருவர் வந்தார் அவ்வழியே.
மண்ணில் கிடக்கும் மா மனிதனைக்
கண்டதும் கீழே அமர்ந்து மிருதுவாக,
கால்களை வருடலானார் மகிழ்வுடன்!
“எத்தனை பெரிய மகானோ இவர்!
என் பாக்கியம் தொண்டு செய்வதே!”
தன்னைப் போலவே சக மனிதர்களை
உன்னுகின்றான் ஒவ்வொரு மனிதனும்.
நல்லவருக்கு எல்லோரும் நல்லோரே!
அல்லாதவருக்கு அனைவரும் தீயோரே!
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.