17. பூரண சரணாகதி.

ஒரு சிறந்த இறை பக்தனுக்கும்,
ஒரு சலவைத் தொழிலாளிக்கும்
வலுத்து விட்ட வாக்குவாதம்
வம்புச் சண்டையில் முடியவே;
துவைக்கலானான் அப்பக்தனையும்
துணிகளைப் போலவே வண்ணான்.
“கண்ணா! கண்ணா!” என்று பக்தன்
கதறுவது கேட்டதும் எழுந்தான்,
ஒய்யாரமாக வைகுண்டத்திலே
ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தவன்.
நான்கடிகள் நடந்து சென்றவன்,
மீண்டும் வந்து அமர்ந்துவிடவே,
நாயகனிடம் விவரம் கேட்டாள்,
நானிலம் வணங்கும் இலக்குமி.
“நானே செல்ல வேண்டியதில்லை;
தானே திருப்பி அடிக்கத் துணிந்தவன்,
தன்னையே காத்துக் கொள்வான்;
என்னை எதிர்பார்க்க மாட்டான்!”
சரணாகதியும் பலன்கள் தரும்
பூரணமாக இருந்தால் மட்டுமே.
போராடியவரை பாஞ்சாலிக்குமே
புடவைகள் தரவில்லையே கண்ணன்.
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
https://visalramani.wordpress.com/about/2491-2/17-பரிபூரண-சரணாகதி/