Everybody is a God - even those who warn you of the
impending danger and / or offer to help you out! :help:
14. ஈஸ்வரன்.

“உலகில் உள்ள பொருட்கள் அனைத்துமே
உண்மையில் ஈஸ்வரனின் ஸ்வரூபங்களே!”
உபதேசித்தார் பெரும் குரு நாதர் ஒருவர்;
உபதேசம் பெற்றான் அவருடைய சீடன்.
எல்லோரும் ஈஸ்வரர்களே என்பதால்
எல்லையில்லா மகிழ்ச்சியுடன் அவன்.
செல்லும்போது எதிரே வந்தான் - ஒரு
பொல்லாத யானை மேல் அமர்ந்த பாகன்.
“விலகுங்கள்! விலகுங்கள்!” என்று பாகன்
விலாப் புடைக்கக் கத்திய போதிலும்;
விலகவில்லை கொஞ்சமும் அந்தச் சீடன்!
விரும்பி யானையின் அருகிலேயே வந்தான்!
“நானும் ஈஸ்வரன், யானையும் ஈஸ்வரன்,
நான் ஏன் அஞ்சிப் பாதை விலக வேண்டும்?”
நடந்து வந்த யானை துதிக்கையால் தூக்கி
நாலு வட்டங்கள் சுழற்றி வீசிவிட்டுச் சென்றது!
நல்ல வேளையாக உயிர் போகவில்லை!
நல்ல காயங்களுடனே தப்பிவிட்டான்.
நடந்ததைத் தன் குருவிடம் சொல்லவே,
நகைக்கலானார் அவர் விழுந்து விழுந்து!
“யானையும் ஈஸ்வரன்தான்! அதுவும் சரி.
நீயும் ஈஸ்வரன்தான் ஒப்புக் கொள்கின்றேன்.
யானையின் மேல் அமர்ந்த இன்னொரு ஈஸ்வரன்
நீங்கிச் செல்லும்படிச்சொன்னது கேட்கவில்லையா ?”
சொற்களின் பொருளை அறிவதால் மட்டும்
சொல்லப்பட்ட கருத்துக்கள் புரிந்து விடாது.
கருத்தினைப் புரிந்து கொண்டால் மட்டுமே
கற்றதன் பயன் நமக்குத் தப்பாது கிடைக்கும்.
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
https://visalramani.wordpress.com/about/2491-2/14-சொல்லும்-பொருளும்/