ஆசாபாசம் = ஆசை + பாசம்
மனிதனைத் தளைப்படுத்தும் கண்ணுக்குத் தெரியாத பொன் விலங்குகள் இவை.
மனிதன் இவற்றைக் களைந்து கடந்துவிட்டால் அவன் ஒரு புனிதன் ஆகிவிடலாம்
ஆசைகள் அறுமின்

“ஆசை தான் துன்பத்துக்கு காரணம்”,
ஆர் தான் அறியார் இதை எனினும்,
ஆசையை அறுத்தவர் யார் உள்ளார்?
அலைந்து தேட வேண்டும் உலகில்!
ஆசைகள் நிரம்பிய மனமானது, ஒரு
ஓட்டைக் குடம்; என்றுமே நிறையாது!
ஆசைகளை நிறைவேற்ற முயன்றால்,
ஓங்கும் அவை, நெய் இட்ட நெருப்பாக!
மத யானைகள் போல் வலம் வருகின்ற,
மனதின் ஆசைகளை அடக்கத் தேவை,
விவேகம் என்ற ஒரு கூரிய அங்குசம்;
வைராக்கியம் எனும் ஒரு இரும்புச் சங்கிலி.
ஆசை கொண்ட மனத் தராசின் முள்,
ஈசனை விட்டு விலகியே நிற்கும்;
ஆசை, செய்த தவத்தைக் கெடுக்கும்;
ஆசை, வளர்த்த பக்தியை அழிக்கும்.
பிறவிப் பிணி என்னும் முள் மரத்தின்,
மறுக்க முடியாத வித்துக்கள் ஆசைகளே!
அஞ்சி அகன்றிடுவீர் ஆசைகளில் இருந்து;
வஞ்சித்து வாழ்வை அழித்திடும் அவைகள்.
துன்பத்துக்கு இனிய முகமன் கூறி,
துன்பக் கடலில் நம்மைத் தள்ளும் ஆசை;
இன்பத்துக்கு விடை கொடுத்து அனுப்பி,
இன்பத்தை விலக்கி வைக்கும் ஆசை.
ஆசைகள் குறைந்து அழியும் போது,
லேசாகிவிடும் மனிதனின் மனது;
லேசாகிய மனமே உயர எழும்பும்;
ஈசனை நாடும்; பிறவியை நீக்கும்.
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
https://visalramani.wordpress.com/about/உலகமும்-நாமும்/ஆசைகள்-அழிமின்/