I think...so I am!
I eat .....so I become!!
உணவும், உணர்வும்

“எதை நினைக்கின்றாயோ நீ,
அதுவாகவே மாறிவிடுகின்றாய் நீ “!
“எதை உணவாக உண்கின்றாயோ,
அது நீயாகவே மாறிவிடுகின்றது!”
கூறுவது வேதம் என்னும் போது இந்தக்
கூற்றும் உண்மையே ஆகி விடுகின்றது.
உணர்வும், உணவும், உண்மையிலேயே;
மணமும், மலரும் போலப் பிணைந்துள்ளன.
இனிய ரசமுள்ளதாய், சுவைமிகுந்ததாய் ,
இன்பத்தைப் பெருக்கி, உடலுக்கு
வலிமை தரும், நல்ல உணவுவகைகள்,
வளர்க்கும் மேன்மையான சாந்த குணத்தை.
அதிக காரத்துடன், உப்புச் சுவையுடன்,
அதிக புளிப்புடன், கசப்பும், சூடும்,
கலந்த உணவுகள் வளர்த்தும் நம்மிடம்,
கண்டவர் அஞ்சும் ராஜச குணத்தை.
பழயதை, புளித்ததை, சுவை இழந்ததை,
பல மணி கழிந்ததால் ரசம் இழந்ததை,
உண்பதால் வளரும் மந்த புத்தியும் ,
மண் உள்ளோர் வெறுக்கும் தாமச குணமும்.
தாமசன், அறியாமையிலேயே உழன்று,
தன் அரிய மனிதப் பிறவியை வீணடிப்பான்!
ராஜசனோ, பற்பல கர்மகளால் தளைப்பட்டு,
மீண்டும் மீண்டும் பிறவியில் அழுந்துவான்!
சத்வ குணன் சாதனைப் படிகளில் ஏறி,
சாந்த குணம் பெற்று, ஞானமும் அடைவான்.
கடும் சுவை உணவுகளைத் தவிர்த்திடல் நலமே.
கெடும் உணவுகளையும் தவிர்த்திடல் நலமே.
மனத்தை மயக்கும் மதுவைத் தவிர்த்து,
உடலைக் கெடுக்கும் புகையையும் தவிர்த்து,
மனதுக்கும் உடலுக்கும் நன்மை பயக்கும்,
உணவினை உண்டு நலம் பெற வாழ்வோம்.
வாழ்க வளமுடன்,
https://visalramani.wordpress.com/about/உலகமும்-நாமும்/உணவும்-உணர்வும்/விசாலாக்ஷி ரமணி