ராமனும், கண்ணனும்

ராமனும் கண்ணனும் அவதாரங்களே!
ஆயினும் அவர்கள் வேறுபட்டவர்களே!
சீரிய மனையினில் பிறந்தவன் ராமன்;
சிறைச் சாலையினில் பிறந்தவன் கண்ணன்.
இளமையில் வளமாய் வாழ்ந்தவன் ராமன்;
இளமையில் ஒளிந்து வாழ்ந்தவன் கண்ணன்.
அரசிளங் குமரன் ராமன் என்றால்,
ஆவினம் மேய்ப்பவன் கண்ணன்.
மிக மிக குறைவாய் பேசுவான் ராமன்;
மிக மிக அதிகம் பேசுவான் கண்ணன்.
சத்தியம் ஒன்றே பேசுவான் ராமன்;
சத்தியம் என்பதே கண்ணன் பேச்சு!
ஜயஜய எனவே வாழ்த்தினர் ராமனை;
ஜெயித்துக் கொல்ல முயன்றனர் கண்ணனை.
நண்பர்களை என்றும் கை விடான் ராமன்;
நகர்ந்து சென்று கொண்டே இருப்பான் கண்ணன்.
பெண்களைக் கண்டால் விலகுவான் ராமன்;
பெண்களைக் கண்டால் விரும்புவான் கண்ணன்.
கௌரவமாய் நின்று பழகுவான் ராமன்;
கூடிக் குலாவி மகிழ்வான் கண்ணன்.
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை ராமனுக்கு;
தன் சொல்லே உயர்ந்த மந்திரம் கண்ணனுக்கு.
துயர் வரும் போது துடித்தான் ராமன்;
துயர் வரும் போது சிரித்தான் கண்ணன்.
மனிதன் போலவே வாழ்ந்தான் ராமன்;
மாயங்கள் பலப் பல செய்தான் கண்ணன்.
மற்றவர் கருத்தை மதித்தான் ராமன்;
மற்றவர்க்கு கீதை போதித்தான் கண்ணன்.
ராம ராஜ்ஜியம் எனப் புகழ்ந்து பாடினாலும்,
கிருஷ்ண சாயுஜ்யம் என்றே புகல்கின்றார்!
ராமன் செய்ததை நாம் பார்த்துப் படிக்கணும்;
கண்ணன் சொன்னதை நாம் கேட்டுப் படிக்கணும்.
ராமனும், கண்ணனும் எத்தனை எத்தனை
மாறுபட்டாலும், அன்றி வேறுபட்டாலும்,
இருவருமே நம் பாரதத்தின் தூண்கள்!
இருவருமே நம் அனைவரின் கண்கள்!
வாழ்க வளமுடன்.
விசாலாக்ஷி ரமணி
https://visalramani.wordpress.com/about/தலைவனும்-நாமும்/ராமனும்-கண்ணனும்/