ALL LIVING THINGS MAKE SURE THAT THEY EAT, REST AND REPRODUCE!
HOW MANY HUMANS ENSURE THAT THEIR BRAIN IS ALSO
FED WITH USEFUL INFO ON A DAILY BASIS REGULARLY ???
அறிவுக்கு உணவு

உடல் நன்கு பணி புரியத் தேவை
உணவும், உறக்கமும், உழைப்பும்.
அறிவு நன்கு பணி புரியவும் தேவை
உணவும், உறக்கமும், உழைப்புமே!
அறிவின் உணவு கருத்துப் புதையல்;
அறிவின் உறக்கம் தியானம், மௌனம்;
அறிவின் உழைப்பு சிந்தனை ஓட்டம்;
அறிவின் பயனோ மயக்கம் ஒழிதல்.
ஒரு நாள் உணவு உண்ணாவிடினும்,
சரிவரப் பணி செய்ய மறுக்கும் உடம்பு;
ஒரு நாளும் ஒழியாமல் தம் அறிவுக்கு
சரிவர உணவு அளிப்பவர் யார் உளர்?
கல்விச் செல்வம் சாலச் சிறந்தது ஆயினும்
கேள்விச் செல்வமும் சமச் சிறப்புடையது.
கல்வி கற்காதவர்களும் படிக்க இயலாதாரும்
கேள்விச் செல்வதினால் பயனுற முடியும்.
செவிக்கு உணவு இல்லாதபோது தான்
சற்று வயிற்றுக்கும் ஈவர் சான்றோர்;
வயிற்றுக்கு உணவு ஈந்த பிறகாவது
சற்று அறிவுக்கும் நாம் ஈயக் கூடாதா?
எத்தனை மகான்கள், மாமேதைகள்!
எத்தனை சிறந்த சிந்தனையாளர்கள்!
எத்தனை ஞானிகள், ஆச்சாரியார்கள்!
எத்தனை மிக அரிய சிறந்த புத்தகங்கள்!
படிக்க நினைத்துத் தொடங்கினால்,
படித்து முடிக்க ஒரு ஜன்மம் போதாது!
படித்துக் கொண்டே இருந்தால் அன்றி
படித்தது மனதில் பதிந்து நிற்காது.
பஞ்சமே இல்லை நேரத்துக்கு! ஆனால்
படிக்க மட்டும் சிலருக்கு நேரமே இல்லை!
பஞ்சமிர்தம் போலக் கையில் கொடுத்தாலும்
கொஞ்சமும் உண்ணார், பயன் அறியாதார்.
பார்ப்பது மெகா தொடர்களை மட்டுமே,
படிப்பது கிசு கிசுப் புத்தகங்களை மட்டுமே,
அலசுவதில் அடங்கும் அரசியல் மற்றும்
அடுத்த வீட்டு வம்புகளும், சினிமாவும்!
குப்பை கூளம் நிறைந்துள்ள இடத்தில்,
எப்படி நன்மைகள் உள்ளே நுழையும்?
நல்லவை நுழைந்தாலே தூய்மை வரும்;
நல்லெண்ணங்கள் தூய்மையில் வளரும்!
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
https://visalramani.wordpress.com/about/உலகமும்-நாமும்/54-அறிவுக்கு-உணவு/