தொடரும் வகையில்

தாய் தந்தையருக்குத் தருவதற்குத்
தாமதம் செய்யும் அவர் மகன்கள்,
தாம் பெற்ற செல்வங்களுக்கு மட்டும்
தங்கு தடை இன்றி அளிப்பது ஏன்?
தம்மை வாரிசுகளாகப் பெற்றவரைவிடத்
தம் வாரிசுகளிடம் அதிக அக்கறை ஏன்?
விடுகதை போலத் தோற்றம் அளித்ததை,
விடாமல் ஒரு நாள் நான் ஆராய்ந்தேன்!
ஓடும் ஒரு பெரு நதியைப் போலவே
ஓடவேண்டும் சந்ததிகளும் என்றே,
கடவுள் வகுத்த நியதியே இந்தக்
காரணம் கூற இயலாத பண்பு!
தனக்குத் தந்தவருக்கே தானும் தந்தால்,
கணக்குத் தீர்ந்து, முடிந்து போகுமே!
கணக்குத் தொடர நாம் விரும்பினால்,
கணக்கைத் தீர்த்துவிடக் கூடாது!
தந்தை தன் மகனுக்கு என்றும், அவன்
தன்னுடைய மகனுக்கு என்றும் ஒரு
சங்கிலித் தொடர்போலத் தொடருவதே
இங்கிதமான வாழ்க்கை முறை ஆம்.
இறைவன் அறிவான் நல்ல வழிகளை,
இயல்பை அமைப்பான் தகுந்தபடியே.
செய்தவனுக்குத் தெரியாதா மீண்டும்
செய்ய வேண்டியது என்ன என்று?
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
https://visalramani.wordpress.com/about/உலகமும்-நாமும்/95-தொடரும்-வகையில்/