நல்லதும், அல்லதும்

நல்லதும் அல்லதும் சேர்ந்தே உள்ளன,
நம்மை சுற்றிய பொருட்களில் எல்லாம்;
அல்லதை நீக்கி நல்லதை நாடுகின்ற,
நல்ல வழக்கம் நமக்கு மிகவும் தேவை.
சிறந்த குணங்கள் நிறைந்த பிறவியிலும்,
குறைந்த அளவிலேனும் குறைகள் இருக்கும்;
சிறந்தவற்றை மட்டும் பிரித்து ஏற்கும்,
நிறைந்த மன நிலையை பெற்றிடுவோம்!
மெல்லிய வலையால் நல்லதை விட்டு விட்டு,
சல்லடை சேர்க்கும் அல்லதை மட்டும் !
சல்லடை போலவே நாமும் மாறி, மனதில்
அல்லதை மட்டுமே சேர்த்திடல் கூடாது!
அல்லதை நீக்கிடும் பெரிய முறமோ,
நல்லதைத் தன்னிடம் தக்க வைக்கும்.
நல்லவை மனதில் தங்கிட முறம்போல
அல்லவை ஒதுக்கிட அறிந்திடுவோம்!
நீரில் கலந்த பாலைத் தன் திறனால்,
பிரித்து எடுக்கும் அன்னம் போலவே,
அல்லதை விடுத்து, நலம் பட வாழ்ந்திட,
நல்லதை எடுக்க நாம் கற்றிடுவோம்!
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
https://visalramani.wordpress.com/about/உலகமும்-நாமும்/நல்லதும்-அல்லதும்/