மன்மதனா? அந்தகனா?

இயற்கையின் விநோதங்களில் ஒன்று
எதிர்மறைப் பொருட்கள் கவர்ச்சி கொள்வது!
எள்ளும் அரிசியும் போன்ற எதிர்மறைகள்
எள்ளளவும் தயக்கமின்றி இணைந்து கொள்வது!
சிறிய உருவம் கொண்ட ஒரு மனிதன்
பெரிய வடிவப் பெண்ணை விரும்புவதும்;
தங்கம் போன்று மின்னும் ஒரு பெண்
தரங்கெட்ட ஒருவனை விரும்புவதும்;
எழுப்பும் நம் உள்ளத்தில் ஒரு கேள்வி,
“ஏன் பல முறை இப்படியே நிகழ்கிறது?
மலர் அம்பு எய்து மனிதரை மயக்கும்
மன்மதன் என்பவன் ஒரு அந்தகனா?”
காதலில் “விழுந்தோம்” என்கின்றார்கள்.
காதலில் “எழுந்தோம்” என்று யாரேனும்
ஒருவரேனும் கூறியது உண்டா இதுவரை?
ஒவ்வாதவர்கள் வேறு என்ன கூற முடியும்?
காதலுக்கு கண் இல்லை, உண்மைதான்.
காதலுக்கு அறிவுத் திறனுமா இல்லை?
கண்ணிமை போலத் தன்னைக் காத்தவரை
கண நேரத்தில் தூக்கி எறிவதும் எப்படி?
பட்டு மெத்தையும், பால் சோறும் தந்த
பாசம் மிகு தாய், தந்தையரை மறந்து,
நெஞ்சில் கொஞ்சமும் ஈரமில்லாது – அவர்
நெஞ்சங்களைக் கலங்க வைப்பதும் எப்படி?
நான், நான் எனத் தன்னையே மையப்படுத்தி
தான்தோன்றியாகச் செயல்படுவதும் எப்படி?
நன்றி மறந்து, சுற்றமனைத்தும் வெறுத்து
நானிலத்தில் உலவித் திரிவதும் எப்படி?
“மன்மதனே! உனக்கு ஒரு வேண்டுகோள்;
மலர்க்கணை விடும் முன்னர் சற்றே யோசி,
மனமும், குணமும், குலமும், கல்வியும்,
மண் துகள் அளவேனும் பொருந்துமா என்று!”
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
https://visalramani.wordpress.com/about/உலகமும்-நாமும்/73-மன்மதனா-அந்தகனா/