ருசியும், வாசனையும்

ருசியும், வாசனையும் உணவுக்கு மட்டுமல்ல;
ருசியும், வாசனையும் பிறவிக்கும் தேவை.
மணக்க மணக்க உண்டபின், ருசி நாவிலும்,
மணம் கையிலும், நெடு நேரம் தங்கிவிடும்.
அனுபவித்த பொருட்களின் பலவிதத் தாக்கம்,
மனதினில் மாறாமல் நிலை கொண்டிருக்கும்.
நமக்கு பிடித்த பொருட்களில், நமக்கு ருசி;
நமக்கு அவை வேண்டுமென்ற அவா, வாசனை.
நாம் எடுக்கும் பிறவிகள் அனைத்துமே,
நம் ருசி, வாசனைகளைப் பொறுத்தவையே !
இசையில் ஆர்வம், நடனத்தில் நாட்டம் ,
இயலில் ஆர்வம், நாடகத்தில் நாட்டம் ,
கலைகளில் நாட்டம் , கற்பதில் ஆர்வம்,
சிலை வடிப்பதில் சிந்தனை என நம்மால்,
காரணம் கூற முடியாத ஆசைகளை, நம்
கண்மணிகளிடம் நாம் காண்கின்றோமே!
எங்கிருந்து வந்தன இந்த ஆர்வங்கள்?
எப்படி உண்டாயின இந்த நாட்டங்கள்?
பூர்வ ஜன்மத்து ருசியும், வாசனையும்,
ஆர்வமாய் அவரைப் பின்தொடருவதாலே!
நல்ல ருசிகளையும், நல்ல வாசனைகளையும்,
நாமும் நித்தம் மேற்கொள்ள வேண்டும்.
இப்பிறவியில் மட்டுமின்றி அவை எல்லாம் ,
எப்பிறவியிலும் நமக்கு பயக்கும் நன்மையே.
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
https://visalramani.wordpress.com/about/தலைவனும்-நாமும்/ருசியும்-வாசனையும்/