மூவகை மனிதர்கள்

உலகின் அனைத்துப் பொருட்களிலும்
உண்டு மூன்று வெவ்வேறு வகைகள்;
உத்தமம் எனவும், மத்தியமம் எனவும்,
உருப்படா அதமம் எனவும் மூவகைகள்.
தேனைத் தவிர எதையுமே உண்ணாத
தேனீக்கள் உன்னதமான உத்தம வகை;
தேன் கிடைக்காவிடில் இறக்குமேயன்றி,
தேடிச் செல்லா அவை வேறு உணவை!
தேனை உண்ட பின்னும், தேடிச் சென்று
தெருவில் இருக்கும் கழிவுகளையும்
பேதம் இன்றி உண்ணும் வெறும் ஈக்கள்
பெயர் பெரும் மத்தியம வகை என்று!
சாணப் புழுக்கள் என்ற ஒரு வகையோ
சாணத்திலே பிறந்து, வளர்ந்து, வாழ்பவை.
தேனில் இட்டால் உடனே மடிந்து போகும்,
சாணத்திலே ஊறும் அவ்வகைப் புழுக்கள்.
நாம் காணும் மனிதரும் மூவகையினர்.
நல்லதை மட்டுமே நாடிச் செல்பவர்;
நல்லதையும், அல்லதையும் நாடுபவர்;
அல்லதை மட்டுமே என்றும் நாடுபவர்.
ஆறு அறிவும், அரிய மனிதப் பிறவியும்
அடைந்தும், அவற்றை வீணாக்கலாமா?
நல்லதையே நாடி, நன்மைகளே செய்து,
நல்லதையே எண்ணி நலம் பெறுவோம்.
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
https://visalramani.wordpress.com/about/தலைவனும்-நாமும்/92-மூன்று-வகை-மனிதர்கள்/