புலன்கள், பொறிகள்

புலன் என்பது நல்ல வயல் வெளி.
புலப்படும் பொருட்களை எல்லாம்
வளரச் செய்யும் ஒரு வயல் வெளி;
மலரச் செய்யும் ஒரு மண் வெளி.
“வெளி”யினில் ஒலியை வைத்தான்.
“வளி”யினில் உணர்வை வைத்தான்.
“ஒளி”யினில் வடிவம் வைத்தான்.
ஓடையில் சுவையை வைத்தான்.
மண்ணிலே மணத்தை வைத்தான்.
மனதிலே ஆசைகள் வைத்தான்.
எண்ண எண்ணத் தொலையாத,
இன்பங்கள் உலகில் வைத்தான்.
உணர்வுக்கு உடலை, ஓசைக்கு செவியை,
மணத்திற்கு நாசியை, சுவைக்கு நாவை,
வடிவுக்கு கண்களைத் தந்து, ஆக்கினான்
வடிகட்டிய முட்டாள்களாக நம்மை.
எலியைப் பிடிக்கும் பொறியைப் போல,
எமக்குள் வைத்தான் ஐந்து பொறிகளை.
புலியின் பலம் கொண்டவைகள் அவை;
புரட்டிப் புரட்டிப் போடுகின்றன நம்மை!
ஒளியைக் கண்டு உவந்து வந்து, அந்த
ஒளியிலேயே மடியும் விட்டில் பூச்சி!
இசைக்கு மயங்கி நெருங்கும் மானோ,
இசைக்கும் வேடனுக்கு இசைந்த உணவு!
சுவைக்கு மயங்கி வரும் மீனோ, அதன்
சுவை கண்டவருக்கு உணவாகிவிடும்!
சுகத்தில் மயங்கி வரும் யானையோ
சுதந்திரத்தை இழந்து சிறைப்படும்.
ஒரு பொறியாலே உயிர் போகும் எனில்,
ஐம்பொறி வசப்பட்ட நம் கதி என்ன?
நினைக்க நினைக்க மனம் தான் பதறி,
நனைக்கும் பெருகும் கண்ணீர் அருவி!
கண்ணொரு பக்கம், நாவொரு பக்கம்,
காதொரு பக்கம், உடல் ஒரு பக்கம்,
அறிவொரு பக்கம், மனமொரு பக்கம்,
தறி கெட்டு ஓடும் குதிரைகள் ஆனால்….
ஐம் புலன்கள் இருந்து என்ன பயன்?
ஐம் பொறிகள் இருந்து என்ன பயன்?
எல்லாம் தந்தும், எதுவும் பயனின்றி,
செல்லாக் காசாய் நம்மை ஆக்கி வைத்ததேன்?
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
https://visalramani.wordpress.com/about/தலைவனும்-நாமும்/புலன்களும்-பொறிகளும்/