நான்கு நிலைகள்

“உறங்குவது போலும் சாக்காடு”, நாம் அறிவோம்.
உறங்கும் போது, நாம் ஆன்மாவில் ஒடுங்குவோம்.
இடம், பொருள், ஏவல், காலம் எல்லாமே,
இடமில்லாது அப்போது மறைந்து போகுமே!
கனவுலகு புகுந்ததும், நாம் கடவுள் ஆகின்றோம்!
நினைத்தைப் படைக்கும், திறன் அடைகின்றோம்!
“வானம்!”, என்றவுடன் நீல வானம் வந்திடும்!
“வனம்!” என்றவுடன் பச்சை வனம் உருவாகிடும்!
ஆதவன், சந்திரன், தாரகைகள் எல்லாம்,
பேதமில்லாமல் ஓடி வரும், அழைத்ததும்!
எந்தப் பொருளும், இடமும், காலமும்,
எந்த விலங்கும், மனிதனும், பறவையும்,
நினைத்த நொடியில் உருவாகிடுவர்;
நினைத்த போது மறைந்து செல்லுவர்!
நினைத்த படியே பேசிப் பழகுவர்;
நினைத்த செயல்களையே புரிவர்.
நம் சின்ன அறிவும், சிறிய அனுபவமும்,
நம் சின்னத் திறனும், சிறிய சக்தியும்,
சொன்னபடி உருவாகும் ஒரு பெரும்
மன்னுலகம்; ஒரு பெரும் மாய உலகம்!
கண்களை விழித்தால், காணவே காணோம்,
கற்பனையில் உருவான அந்த மாய உலகம்!
கனவைத் தாண்டினால், கனவு பொய் ஆகும்.
நனவு நிலையில், கனவுகள் பொய் ஆகும்.
நனவைத் தாண்டினால்… என்ன ஆகும்?
நனவைத் தாண்டினால், நனவும் பொய் ஆகும்!
நிறைந்த அறிவும், அளவில்லா அனுபவமும்,
குறைவில்லாத் திறனும், குவிந்த ஞானமும்,
செறிந்த அந்த உயரிய இறைவனின்,
சிறந்த கற்பனையே நம் நனவுலகம்!
கனவுலகு நம் கற்பனையின் படைப்பு,
நனவுலகு அவன் கற்பனையின் படைப்பு !
கனவைத் தாண்டினால், கனவு மறைவதுபோல்,
நனவைத் தாண்டினால், இவ்வுலகே மறையும்!
எங்கும் நிறைந்த இறைவனே இருப்பான்.
எல்லாப் பொருட்களும் அவனாக இருக்கும்!
நாம, ரூப, பேதம் இன்றி எல்லாம் அவனே.
நாம் காண்பதெல்லாம் எங்கும் பிரம்மமே.
இந்த அற்புத நிலையே துரியம் ஆகும்.
இந்த நிலை அடைந்தால் துயரம் போகும்!
உறக்கம், கனவு, நனவு, உறக்கம் என்றே,
கிறங்குகின்றோம் நாம் வாழ் நாளெல்லாம்;
உறக்கத்தையும், கனவையும் கடப்பது போல் ,
நனவையும் கடந்து, துரியத்தை அடைந்தால் ….
இல்லை பயங்கள், இல்லை பாவங்கள்,
இல்லை மொழிகள், இல்லை செயல்கள்,
இல்லை பேதங்கள், இல்லை தொல்லைகள்
இன்பமே எங்குமே! இன்பமே என்றுமே!
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
https://visalramani.wordpress.com/about/தலைவனும்-நாமும்/நான்கு-நிலைகள்/