உடலும், உள்ளமும்

ஒரு சந்நியாசி, உலகைத் துறந்தவர்.
அருகில் வீட்டில் ஒரு இளம் பெண்;
அழகிய அவளை நாடி வருவார்,
அல்லும் பகலும் பலவித ஆண்கள்.
துறவிக்கு கோபம் பெண்ணின் மீது,
“பரத்தையின் வாழ்வும் ஒரு வாழ்வா?
சுமக்க முடியாத பாவம் செய்பவள்,
சுழல்வாள் ஒரு நாள் நரக வேதனையில்!”
பெண்ணோ துறவியை மிகவும் மதித்தாள்;
கண்கண்ட கடவுளாக அவரை மதித்தாள்.
செய்யும் தொழிலை மனமார வெறுத்து,
செய்தாள் பிரார்த்தனை தினம் மனமுருகி.
துறவிக்கு கிடைத்தது ஒரு புதுப் பணி!
வந்து போகும் ஒவ்வொரு ஆணுக்கும்,
ஒரு சிறு கல்லை எடுத்து வைத்ததில்,
ஒரு சிறு கல்மலையே குவிந்துவிட்டது!
ஒரே இரவில் இறந்து போயினர் இருவரும்.
துறவியின் ஆத்மா கொடிய நரகத்திற்கும்,
பரத்தையின் ஆத்மா இனிய சுவர்கத்துக்கும்,
பறந்து சென்றன பாருங்கள் அங்கே அதிசயம்!
“ஈனப் பிறவிக்கு அளித்தீர் சுவர்கம்,
இறை அடியவனுக்கு இந்த நரகமா?”
துறவியின் கேள்விக்கு கிடைத்தது,
இறுமாப்பு அகற்றும் ஒரு சிறந்த விடை.
“பதிதை ஆனாலும், பாவம் செய்தாலும்,
பரமனையே எண்ணிக் கண்ணீர் உகுத்தாள்.
துறவி நீர் ஆயினும், துறவையே துறந்தீர்;
வரும் ஆண்களையே நீர் கண்காணித்தீர்!
உடலால் பாவம் செய்தவள் நீத்த உடலை,
உடனே நாய், நரிகள் தின்பதைப் பாரும்!
உடலால் உயர்ந்த உங்கள் உடலுக்கு,
உடனே மாலை மரியாதைகள் பாரும்!
உள்ளத்தால் உயர்ந்தவளுக்கு சுவர்கம்;
உள்ளத்தில் கள்ளம் கொண்டவர்க்கு நரகம்;
இதுவே இறைவனின் நியதியும் ஆகும்;
இதுவே இறைவனின் நீதியும் ஆகும்!”
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
https://visalramani.wordpress.com/about/தலைவனும்-நாமும்/உடலும்-உள்ளமும்/