உள்ளமும், உயர்வும்

வேறு ஊர்களில் வாழ்ந்த நண்பர்கள் இருவர்,
மாறுபட்ட பழக்கவழக்கத்தினர், சந்தித்தனர்.
ஒருவன் உல்லாசத்தை மிகவும் விழைவான்;
ஒருவன் உலக நியதிக்கு மிகவும் அஞ்சுவான்.
கண்டனர் இருவரும் ஒரு பெரிய அறிவிப்பு;
‘கடவுள் பற்றி உள்ளது இன்று சொற்பொழிவு’.
ஒருவன் கூறினான், ” நாம் கதை கேட்போம்”;
ஒருவன் கூறினான், ” நாம் உல்லாசிப்போம்”.
நாடியதைத் தாம் தாம் பெற்றிட விரும்பி,
நண்பர்கள் இருவரும் பிரிந்து சென்றனர்.
ஒருவன் சென்றான் இறைக் கதை கேட்டிட,
ஒருவன் சென்றான் உள்ளூர்ப் பரத்தையிடம்.
கதை கேட்பவன் மனம் கதையில் ஒன்றாமல்,
காரிகை வீட்டையே சுற்றி வட்டமிட்டது;
“நான் தான் தவறு செய்துவிட்டேனோ?
அவனுடன் அங்கு சென்று இருக்கலாமோ?”
பரத்தையின் வீட்டை அடைந்தவன் அங்கே,
பரம சுகத்தை அடையவில்லை அன்று.
“இறைவனின் உயரிய கதையைக் கேளாமல்,
இங்கு வந்து வீணாகிப் போனேனோ நான்!”
பாவமே அடைந்தான், அங்கு பரந்தாமனின்
புகழைக் கேட்டும் மன அமைதி அழிந்தவன்!
பாவத்தைத் தன் உடலால் செய்திருந்ததால்,
பாவமே அடைந்தான் மற்ற நண்பனும்!
எண்ணத்தில் இறைவன் நிறைந்தால்,
எண்ணவோ, பண்ணவோ தோன்றாது,
எந்த வித பாவச் செயல்களையுமே!
இந்த உண்மையே நமக்கு உணர்த்துவது ,
“உள்ளமே நம் உயர்வு, அல்லது தாழ்வுக்கு
உண்மையான காரணம் ஆகும் என்பதை!”
கள்ளம் இல்லா வெள்ளை உள்ளமே,
கடவுள் வாழ்ந்திடும் நல்ல உள்ளம்!
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
https://visalramani.wordpress.com/about/தலைவனும்-நாமும்/உள்ளமும்-உயர்வும்/