சாதனை வகைகள்

உலகில் உள்ள பொருட்கள் எல்லாம்,
பலவகை பட்டு இருப்பது போலவே;
சாதனை முயற்சிகளும் மனிதரிடம்,
பேதங்களுடனே தான் காணப்படும்.
முதலில் நிற்பவன் வெறும் தரைமீதும்,
அடுத்து வருபவன் அவன் தோள் மீதும்,
நிற்பது போன்றே சாதனை சிறப்புறும்,
அடுத்து அடுத்து வரும் பிறவிகளில்!
தம் தம் குணங்களுக்கு ஏற்பவே,
புரிவார் சாதனைகளை, மனிதர்கள்.
தம் தம் முயற்சிகளுக்கு ஏற்பவே,
பெறுவார் வெற்றியும், தோல்வியும்.
பறவை ஒன்று தன் கூரிய அலகில்,
பழத்தைப் பற்றிப் பறக்கையிலே;
பழம் நழுவி விழுவது போலே சிலர்
நழுவுவார் தங்கள் முயற்சிகளில்.
மரத்துக்கு மரம் தாவி குதிக்கையில்,
கிடைத்த பழத்தை தவற விட்டு விட்ட,
குரங்கைப் போலே சில மனிதர்கள்,
படைத்த சாதனையைப் பறி கொடுப்பர்.
சிறந்த சாதனை எது என்று தெரியுமா?
சிறிய எறும்பு போல், களைப்படையாமல்,
சீரான வேகத்துடன், மாறாத நோக்குடன்,
சிந்தாமல், சிதறாமல் செய்யும் சாதனையே .
“சாதனை சித்தர்கள்” அநேகர் அடைவர்;
சித்தியைப் பல வேறு சிரமங்கள் பட்டு.
“கிருபா சித்தர்கள்” அடைவர் சித்தியை;
சிரமம் இன்றி , முற்றும் இறை அருளாலே!
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
https://visalramani.wordpress.com/about/தலைவனும்-நாமும்/சாதனையின்-வகைகள்/