அருகில், தொலைவில்

முதுகும் முதுகும் ஒட்டி நிற்கும் இருவர் ,
முகம் கண்டு எப்படிப் பேச முடியும்?
எதிர் எதிரே வந்து நிற்க விரும்பினால்,
எண்ணி ஓர் அடி பின் வாங்கினாலே போதும்.
“முன் வைத்த காலைப் பின் வையேன்” என,
முரண்டு பிடித்து முன் நோக்கிச் சென்றால்;
முழு உலகையுமே சுற்றி வர முயன்றால்;
முகமன் கூறலாம் அதன் பாதிச் சுற்றிலே.
நினைத்துப் பார்த்தால் அதிசயம், உண்மை;
அனைத்துப் பொருட்களையும் விடவும் நம்
அருகில் இருப்பவன் நாம் காண இயலாத,
சிறு வடிவுடைய அந்த ஆண்டவன் தானே!
கை அளவு இதயத்தில் கட்டை விரல் உயரத்தில்,
மையத்தில் அமர்ந்து, ஆட்சி செய்கிறான் அவன்.
குருதி கொப்பளிக்கும் நம் இருதயமே அவன்,
விரும்பி அமரும் ஒரு இரத்தின சிம்மாசனம்.
சூரியன், சந்திரன், மின்னும் தாரகைகளை,
சீரிய முறையில் கண்ணால் காண முடியுது.
மழையை, மின்னல் கீற்றினை காண முடியுது;
மாதவனை மட்டும் ஏன் காண முடியவில்லை?
விரித்த வலை போன்றே நம் ஐம் பொறிகள்,
விரிந்து பரந்து வெளியே செல்கின்றன.
திருப்பி அவற்றை உள்ளே செலுத்தினால்,
திவ்ய மங்களனை நாம் உணர முடியும்.
மிக மிக அருகில் அவன் இருந்த போதிலும்,
மிக மிகத் தொலைவில் இருப்பது போல,
உணர்வது தவறான பயண திசையினால்!
உள்முகம் சென்றால் உணர்வோம் அவனை.
பாதையை மாற்றுவோம் உள்முகம் நோக்கி,
பயணத்தைத் தொடர்வோம் இறைவனை நோக்கி,
பரந்த உலகில் மாறாத சிறந்த பயன் என்று,
பரந்தாமனை விடவும் வேறு என்ன உண்டு?
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.