புஜ பலம், நிஜ பலம்

புஜ பலம் என்றுமே நிஜ பலம் அன்று;
புத்தி பலம் தான் நிஜ பலம் என்றுமே.
நன்றாய் நமக்கு உணர்த்திடும் இதை,
தொன்று தொட்டு வரும் ஒரு நல்ல கதை.
சாபம் அடைந்த, தேவர்கள் கூட்டம்,
பாபம் நீங்கி, பலம் முன்போல் அடைய;
பாற்கடல் கடைந்து, அமுத கலசத்தை,
நோற்பது போல, பெற்றிட வேண்டும்.
“அரக்கர்கள் ஆயினும் நீர் எம் உறவினரே,
அமுதம் பெற்றிட எமக்கு உதவிட வேண்டும்!
தேனாம் அமுதை பகிர்ந்து கொள்வோம்” எனத்
தேன் போல் இனிக்க பேசினர் தேவர்கள்.
மந்தர மலையையே மா மத்தாக்கி,
வாசுகி பாம்பை பெரும் கயிறாக்கி,
முந்தித் தலைப் பக்கம் சென்று நின்றனர்,
கேசவன் மாயம் உணர்ந்த தேவர்கள்.
“வலிமை நிறைந்த அரக்கர் நாங்கள்,
வால்புறம் ஏன் நாம் பிடித்திட வேண்டும்?
தலைப்புறம் எமக்கு தந்திடுவீர்”, என
தொலை நோக்கில்லா அசுரர் வேண்டினர்.
கடைந்த போது துவண்ட மேனியால்,
வீசியது வாசுகி விஷ மூச்சு காற்றை.
கடைசி அரக்கன் வரை விஷ வாயுவினால்,
வீரியம் இழந்து வாடிப் போயினர் அசுரர்.
வால் பக்கம் உள்ள வானவர்கள் எல்லாம் ,
மால் அவன் கருணையால் ஒரு சிறிதும்
துயர் இன்றியும் முன்போன்றே சற்றும்
அயர்வின்றியும் கடைந்தனர் பாற்கடலை.
விரும்பியதை அளிக்கும் காமதேனுவை,
விரும்பினர் வேள்வி வளர்க்கும் முனிவர்;
வியனுலகு காணா வெண்பரி உச்சைசிரவசை,
விரும்பிப் பெற்றான் மன்னன் மகாபலி.
ஐராவதம் என்னும் வெள்ளை யானையை,
சுரர்கள் தலைவன் இந்திரன் பெற்றான்.
சிவப்பொளி வீசிய கௌஸ்துபம் என்னும்
சீரிய மணி ஸ்ரீமன் நாராயணனுக்கே.
பாரிஜாதம் என்னும் தெய்வீக மரத்தை,
கோரிப் பெற்றது தேவர்கள் கூட்டம்.
அப்சரஸ் என்னும் தெய்வ மங்கையரை,
அடைந்து மகிழ்ந்தார் வானுலகத்தோர்.
அமுதமே பெண்ணாகி வந்த திருமகள்,
ஆதி தேவன் நாராயணனை வரித்தாள்.
மதுவின் தெய்வமாய் மனத்தை மயக்கி,
மதத்தை வளர்த்தும் வாருணி அசுரர்களுக்கு!
கலசமும் கையுமாய் கடலில் இருந்து,
களையான முகத்துடன் வந்த தன்வந்த்ரியின்,
கலசத்தைப் பறித்து கலஹம் செய்தாலும்,
கடைசி வரை அமுதம் பெறவில்லை அசுரர்!
அனைத்து பொருட்களையும் தங்கள் வசமே,
அமைத்துக்கொண்டது தேவர்கள் கூட்டம்.
அமுத பகிர்விலும் மோகினியாக வந்து,
தமது வசீகரத்தால் வஞ்சித்தார் கண்ணன்.
ஆயிரம் யானைகள் பலம் இருந்தாலும்,
ஆயிரம் தோள்கள் பெற்று இருந்தாலும்,
ஆயிரம் ஆயுதங்கள் வைத்து இருந்தாலும்,
புய பலம் தோற்கும் புத்தி பலத்திடம்!
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
https://visalramani.wordpress.com/about/தலைவனும்-நாமும்/56-புஜ-பலமும்-நிஜ-பலமும்/