மூன்று திருடர்கள்

காட்டுவழியில் தனியே சென்றான்,
கால் நடையாக ஒரு வழிப்போக்கன்,
மூட்டையில் தன் பொருட்களை எல்லாம்,
கட்டித் தன்னுடன் எடுத்துச் சென்றான்.
மூன்று திருடர்கள் வழி மறித்தனர்;
மூட்டைப் பொருளையும் கைப்பற்றி,
தனியனைக் கொன்று வீசிவிடவும்,
தமக்குள் பேசி முடிவு செய்தனர்.
கத்தியை உருவினான் முதல் திருடன்,
கட்டி போட்டான் இரண்டாம் திருடன்,
மூன்றாம் திருடன் அவ்விருவரையும்,
முயன்று தடுத்து அவன் உயிர் காத்தான்!
முதல் இருவரும் முன்னே செல்ல,
மூன்றாம் திருடன் கட்டை அவிழ்த்து
வழித்துணையாக உடன் வந்தான்,
வழிப்போக்கன் செல்லும் வீடு வரை.
உள்ளே அழைத்தும் வர மறுத்து,
உடனே மறைந்தான் அத்திருடன்.
வீட்டை அடைந்ததும் அப்பயணி,
விட்டான் ஒரு நிம்மதி பெருமூச்சு!
உலகமே அந்தக் காடு, அதில் தனியே
உலவிடும் ஜீவனே வழிப்போக்கன்;
மூட்டையின் செல்வம் ஆத்மஞானம்,
மூன்று திருடர்களும் முக்குணங்கள்.
கத்தியை எடுத்த திருடனே ராஜசன்,
கட்டிப் போட்ட திருடனே தாமசன்,
கட்டை அவிழ்த்து விட்டவன் சத்துவன்,
வீட்டை அடைவித்தவனும் அவனே.
வீடே வீடு பேறு! வீட்டை அடைந்தால்
விட்டுப்போகும் நம் அச்சமெல்லாம்.
சத்துவன் நல்லவன் நமக்கு உதவிடினும்,
சத்தியமாய் அவனும் ஒரு திருடனே!
முக்குணம் முற்றிலும் ஒழிந்தால்
மட்டுமே கிட்டும் நமக்கு வீடுபேறு.
வீட்டுக்கு வழி காட்டிய சத்துவனாலும் ,
வீட்டினுள் நம்மோடு வரமுடியாது!
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
https://visalramani.wordpress.com/about/தலைவனும்-நாமும்/67-மூன்று-திருடர்கள்/