தீவிர பக்தன்

பார்த்தன் மனத்தில் ஒருமுறை,
கர்வம் தோன்றி வளரலானது;
“பாரினில் பரம பக்தன் நானே!”
கார்வண்ணன் சிறிது நகைத்தான்.
“உனக்கு ஒரு நல்ல வேடிக்கையை,
தனித்துக் காட்டுவேன் வா!” எனப்
பார்த்தனை அழைத்துச் சென்றான்,
பார்த்தசாரதி ஓர் தனி இடத்துக்கு.
உலர்ந்து காய்ந்த புல்லை மட்டுமே,
உண்டு உயிர் வாழுகின்ற ஒரு
வினோத மனிதனைக் கண்டு,
வியப்பில் ஆழ்ந்தான் பார்த்தன்!
படைப்பில் அரியவன் ஆகிய அவன்
இடுப்பில் இருந்த வாளே காரணம்.
புல்லைத் தின்னும் இம் மனிதனிடம்,
கொல்லும் வாளா என வியந்தான்!
வினோத மனிதன் அவனிடம் உரைத்தான்,
“எனது பரம எதிரிகள் நால்வர் ஆவர்;
கண்டதும் கொல்வேன் நான் அவர்களை,
கத்தியும் என்னிடம் உள்ளது பார்!” என்றான்.
“முதல் முதல் எதிரி அந்த நாரதனே;
முழு நேரமும் பாட்டு, வீணை எனத்
தொல்லைகள் பலவும் செய்வான்,
எல்லை இல்லாத நம் இறைவனை!
இரண்டாவது எதிரி திரௌபதியே;
இரக்கம் என்பதே இல்லை அவளிடம்;
உண்ணவிடாமல் வரவழைத்தாள்,
கண்ணனைக் காம்ய வனத்துக்கு!
நீரிலும், நெருப்பிலும், இறைவனை
நுழையச் செய்து, தூணிலிருந்தும்
தோன்றச் செய்தான் நரஹரியாக,
மூன்றாம் எதிரியான பிரஹ்லாதன்.
நான்காம் எதிரி அந்த அர்ஜுனனே.
இறைவனைத் தேர்ப்பாகன் ஆக்கி,
இவன் அமர்ந்தான் அந்தத் தேரில்,
இவன் மேலே, கண்ணன் கீழே என!
பார்த்தனின் பொங்கிய மனோ கர்வம்,
பாலில் தண்ணீர் தெளித்தது போல
நொடியில் அடங்கியது! “தீவிர பக்தன்
தேடினாலும் கிடையான் இவனைப் போல!”
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
https://visalramani.wordpress.com/about/தலைவனும்-நாமும்/71-தீவிர-பக்தன்/