சாபமும் ஒரு வரமே

கருமையும் அழகே, காந்தலும் ருசியே;
கருதி நோக்கினால் சாபமும் ஒரு வரமே!
சாபவிமோசனம் ஏற்படும் பொழுதே,
தாபங்கள் தீர்ந்து, உயர்வும் வரும்.
முனிகுமாரர் வைகுந்தம் செல்கையில்,
முரட்டுத்தனமாய் தடுத்து நிறுத்திய,
ஜெய, விஜயர்கள் அடைந்தனர் சாபம்,
ஜென்மங்கள் மூன்று உலகில் பிறக்கும்படி.
இரு அசுரர்களாகி கோபத்தைக் கழிக்க,
இரண்யாக்கன், இரண்யகசிபு என உலகில்,
தோன்றியதாலேயே நமக்கு கிடைத்தன,
தோன்றலின் வராக, நரசிம்ம அவதாரம்.
ராட்சதர்களாகி காமத்தைக் கழிக்க,
ராவணன், கும்பகர்ணன் என உலகில்,
தோன்றியதாலேயே நாம் அடைந்தோம்,
சான்றோன் ஆகிய ராமனின் அவதாரம்.
மனிதர்களாகித் தம் லோபத்தைக் கழித்த,
மதம் கொண்ட சிசுபாலன், தந்தவக்த்ரனை,
மாய்க்கப் பிறந்ததால் உலகம் பெற்றது,
மயக்கும் மாயக் கண்ணனின் அவதாரம்.
தன் அடியவர்களையே சாபத்தினால்,
தன் எதிரிகளாக் காண்பித்து, இறைவன்,
ஏற்படுத்தியதே இந்த விளையாட்டு,
ஏற்பட்டது உலகனைத்துக்கும் நன்மை!
அகத்தியர் சாபத்தால் பாண்டிய மன்னன்,
அழகிய களிறுகளின் அரசன் ஆனான்.
காலை இழுத்து, தேவலர் சாபத்தால்,
கந்தர்வன் ஹூ ஹூ முதலை ஆனான்.
இருவரையும் விடுவித்து, கந்தருவனுக்கு
இருந்த உருவமும், மன்னனுக்கு முக்தியும்,
இறைவன் கைவிடான் என்ற உறுதியை ,
இவ்வுலகினர்க்கும் கொடுத்தான் இறைவன்.
அருட் பிரசாதமான மாலையை தேவர்கள்,
அவமதித்து, சாபத்தால் ஒளி இழந்தனர்.
கிடைத்தன பாற்கடல் கடைந்திடும்போது ,
காமதேனு, கற்பகம், திருமகள், அமுது!
ஒருவரின் நஞ்சு ஒருவரின் மருந்து ஆம்;
ஒருவரின் சாபம் பலரின் பரிசு ஆம்!
எது எப்படி நடந்தாலும் அது நன்மைக்கே,
என்று திடமாக நாமும் நம்பிடுவோம்.
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி