உத்தம குரு

இறையருள் பெற நாம் எண்ணும்போதே,
இறையருளால் உத்தம குருவும் வருவார்!
நாம் நாடித் தேடிச் சென்றிடும் முன்பே,
நம்மைத் தேடி வந்து விடுவார் அவரே!
உத்தம குரு வெறும் மனிதர் அல்ல,
இறையே அந்த குரு வடிவு எடுக்கும்!
உத்தம குருவும் இறையும் ஒன்றென
விரைவில் நாம் விளங்கிக் கொள்வோம்.
மந்திரங்கள் காதுகளில் உபதேசிப்பார்;
மனதில் வைராக்கியத்தை வளர்ப்பார்;
அறிவில் விவேகம்தனை விதைப்பார்;
ஆன்மாவில் நாட்டம் கொள்ளச் செய்வார்.
ஜீவாத்மாவையும், அது அலைந்து தேடிடும்
பரமாத்மாவையும், குரு சேர்த்து வைப்பார்;
பார்வை அற்றவனுக்கு வழி காட்டுவது போல,
நேர்மை மாறாத நல்வழியில் நம்மை நடத்துவார்.
கங்கையைப் போலப் புனிதமானவர் குரு;
விந்தைகள் பலப்பல புரிய வல்லவர் குரு;
நிந்தனையால் அவர் உள்ளம் மாறுபடார்;
சிந்தனைச் சிற்பி என்பவரே நல்ல குரு.
மூன்று வகை வைத்தியர்கள் உண்டு;
மூன்று வகையினர் குருவும் ஆவர்.
அதமம், மத்யமம், உத்தமம் என நாம்,
அறியும் வகைகள் உண்டு இரண்டிலும்.
முதல் வகை வைத்தியர், நாடியைச் சோதித்து,
மருந்தை அளித்து விட்டுச் சென்று விடுவார்.
முதல் வகை குரு நல்ல முறையில் போதித்து,
“மகனே! இனி உன் சமர்த்து!” என்றிடுவார்.
இரண்டாம் வகை வைத்தியர் மருந்தை,
வற்புறுத்தி, வலியுறுத்தி உண்ண வைப்பார்.
இரண்டாம் வகை குரு, இனிய சொற்களால்,
வற்புறுத்தி, நம்மை நல்வழிப்படுத்துவார்.
அடுத்த வகை வைத்தியர் நம்மை, “பாடு
படுத்தி”யேனும் மருந்தைச் செலுத்துவார்.
பலப்பிரயோகம் செய்தேனும் நம்மை,
நலம்பட வாழ்விப்பவரே ஒரு உத்தம குரு.
குருவருளும், இறைஅருளும் ஒன்றாய்க்
கூடி வரும்போது, நம் உலக வாழ்வில்
குறை இன்றிக் கோரினவை கைக்கூடும்.
குருவை வரவேற்கத் தயாராகுங்கள்!
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
https://visalramani.wordpress.com/about/தலைவனும்-நாமும்/உத்தம-குரு/