உருவமும், அருவமும்

எங்கும் நிறைந்த இறைவன் எவனோ அவன்
எந்த உருவமோ அன்றி உடலோ இல்லாதவன்;
எங்கும் நிறைந்த அவனை வெறும் அருவமாக
எண்ணிப் பார்ப்பதும் வெகு கடினமே ஆகும்.
ஐம்பொறிகள் வழியே அனைத்தையும்,
ஐயம் திரிபற அறிந்து கொள்ளும் நாம்,
ஐயம் பொறிகளின் உதவி சற்றும் இன்றி
ஐயனையும் கூட அறிந்துவிட முடியாது.
உருவ வழிபாடு தோன்றியது இந்த
ஒரு காரணத்திற்காகவே அறிவோம்;
அருமை பெருமைகள் அனைத்தையும்
ஒருங்கே பெற்ற ஒரு அழகிய வடிவு!
நினைக்கும்போதே மனம் நிறைந்து
நனைக்கும் கண்ணீர்த் துளிகள் வழிந்து;
இனிக்கும் அந்த உருவத்திடம் மயங்கி
மனத்தை பறி கொடாதார் யாரோ?
உருவ வழிபாட்டை மறுக்கும் மதமும்
உருவங்களின் துணையையே நாடும்;
இறைவனின் தூதனாகவோ, அல்லது
இறைவனின் சிறந்த குழந்தையாகவோ.
வெற்றிடத்தின் மீது மனத்தைப் பதித்து,
வெகு நேரம் தியானம் செய்வது கடினம்;
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அழகில்
உள்ளத்தைத் தொலைத்துவிடலாம் எளிதாக!
மந்திரம், தந்திரம், யந்திரம் என்கின்ற
மூன்றுமே பலன் அளிக்கும் ஒருபோலவே;
சுந்தர ரூபம் தரும் இன்பத்தை வேறு
எந்த ரூபமுமே தர இயலாது அல்லவா?
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
https://visalramani.wordpress.com/about/தலைவனும்-நாமும்/88-உருவமும்-அருவமும்/