விண்ணோர், மண்ணோர்

விண்ணோர் விழைவர், இடையராத ஆனந்தம்;
மண்ணோர் அடைவர், அளவிலாத அனுபவம்.
விண்ணோர் உதவியை நாடுவர் இறையிடம்;
மண்ணோர் விடுதலை தேடுவர் இறையிடம்.
என்றென்றும் வாழவே விரும்புவர் விண்ணோர்;
என்றும் பிறவா வரம் வேண்டுவர் மண்ணோர்.
இறைவனைக் கண்டு கெஞ்சுவர் விண்ணோர்;
இறைவனிடம் அன்பில் விஞ்சுவர் மண்ணோர்.
சுக போகங்களே வாழ்வாகும் விண்ணுலகில்;
இக போதனைகளே வாழ்வாகும் மண்ணுலகில்.
விண்ணுலகில் அருந்தும் அமுதே உணவு;
மண்ணுலகில் உண்ணும் உணவே அமுது.
இமையாமல் விழித்து இருப்பர் விண்ணோர்;
இமைத்து இமைத்து விழிப்பர் மண்ணோர்.
தானம், தவம் ஏதும் இல்லை தேவர்களுக்கு;
தானம், தவம் உண்டு மண்ணுலகத்தினருக்கு.
இன்பப்படும் குழந்தையை விட அதிகமாகவே,
துன்பப்படும் குழந்தையைப் பேணுவர் பெற்றோர்.
அன்புக்கு உரியவராக மனிதரைக் கருதுவான்,
அன்புடன் அரவணைத்து வழிகாட்டும் ஈசன்.
ஆன்மீகம் மனிதனுக்குப் புதையலாய் தந்தான்.
ஆன்மீக சாதனைகள் தேவர்களுக்கு இல்லை.
போகத்திலே உழலும் தேவர்களை விடவும்,
யோகத்தையே உவக்கும் மனிதர்களே மேல்!
வாழ்க வளமுடன்.
விசாலாக்ஷி ரமணி
https://visalramani.wordpress.com/about/தலைவனும்-நாமும்/விண்ணோரும்-மண்ணோரும்/