#164. தவத்தில் வெல்லலாம்!
கல்லை மலை மேலே ஏற்றுவது கடினம்,
கல் நழுவிக் கீழே விழுவது எளிது;
உலகில் எல்லா முயற்சிகளும் இங்ஙனமே,
உயர்வது கடினம், நழுவுதல் எளிது.
ஆத்ம தரிசனத்தை விரும்புகின்றவர்,
தவம், தியானம் செய்வது வழக்கம்;
ஆத்மத் தேடலில் பலவிதமான,
தடங்கல்கள் நாடி வருவதும் வழக்கம்!
தடைபட்ட யோகம் என்ன ஆகும்?
தடுக்கப்பட்ட இடத்திலேயே நிற்குமா?
முழுவதும் நழுவிக் கீழே விழுந்து விடுமா?
குழப்புகின்ற கேள்விதான் என்றுமே!
கண்ணன் என்ன சொன்னான் பார்போம்.
பண்ணின தவம் என்றுமே வீணாகாது;
விட்ட இடத்திலிருந்தே மீண்டும் ஒருவர்,
தொட்டுத் தவத்தைத் தொடரலாம் என்றான்.
தடைபட்ட தவத்தினர் மீண்டும், மீண்டும்
தவமுடையோர் இல்லத்திலேயே வந்து
தவறாமல் பிறப்பார்! தடைபட்ட தனது
தவத்தைத் தொடர்ந்து, முடிவில் வெல்லுவார்.
பாதிக் கிணறு தாண்டினால், எவரும்
நீரில் விழுந்து விடுவார் நிச்சயமாக;
பாதி யோகத்தில் தடைபட்டவரோ எனில்,
மீதியைத் தொடருவார், மீண்டும் பிறந்து!
அரைகுறை முயற்சியேதான் என்றாலும்,
அதுவும் ஒருவருடைய சாதனையே.
விடாமல் தொடர்ந்தால் வெற்றி நிச்சயம்,
விமலன் அருட்பார்வை கிடைப்பதாலே!
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி