ஜல்லிக்கட்டுக்கதை
இக்கதையும் சென்ற ஆண்டு பொங்கலுக்கு முன் எழுதப்பட்ட கதை
கற்பனைக்குதிரை 4
ஜல்லிக் கட்டுக் கதை ( பகுதி1)
இது ஒரு கட்டுக்கதை அல்ல. நம் தமிழ்நாட்டில் இன்றைய வரலாற்றின் நிகழ்வின் அடிப் படையில் எழுதப் பட்ட இந்த ஆண்டு பொங்கலுக்கு முன்னால் எழுதப்பட்ட ஒரு கற்பனை.
முன்னுரை
பள்ளிக்கட்டு, சபரிமலைக்கு; கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை, சாமியே ஐயப்பா, ஐயப்பா சாமியே,
சாமியேய்........ சரணம் ஐயப்பா என்ற சரண கோஷம் விண்ணை முட்ட மகர சங்கிராந்தி முடிவடையும் நேரத்தில் "ஜல்லிக்கட்டு, தமிழர்களுக்கு; குத்தும், காயமும் உடலுக்கு மெத்தை, அஃதின்றிப் பொங்கலே பொய்யப்பா, ஏறு தழுவுதலே..... மெய்யப்பா, அது தமிழனின் உரிமையப்பா" என்ற கோஷம் போடும் நிலைமைக்கு தமிழர்கள் இன்று தள்ளப் பட்டுவிட்டனர். இதனால் பல வீடுகளிலும் மகிழ்ச்சியும் பொங்கலும் பொங்க வேண்டிய வேளையில் தமிழக மக்களும், அதைவிட வரப்போகும் தேர்தல் காரணமாக, அரசியல் கட்சிகளும் ஆர்ப்பரித்துப் பொங்கும் நிலை தோன்றிவிட்டது. ஜல்லிக்கட்டை பிராணிகளின் வதைத் தடுப்புப் பிரிவின் கீழ் சுப்ரீம் கோர்ட் தடை செய்ததை நீக்க பத்து நாட்களுக்கு முன் ஒரு போராட்டம் நடந்தது. தேர்தல் இன்னும் சில மாதங்களே இருக்கும் இந்நேரத்தில் திடீரென்று தமிழர்களின் வீரம் பற்றிய நினைவு வரவே, கடந்த ஐந்து மாதங்களாக நடந்து வந்த மதுவிலக்கு ஆதரவுப் பிரசாரத்தை தேர்தல் அறிக்கைகளுக்குள் பூட்டிவைத்து விட்டு, முழு ஆவேசத்துடன் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அனைத்துக் கட்சிகளும் குதித்தன. மத்திய அரசும் அதே நோக்கத்தை ஒட்டி ஜல்லிக் கட்டு நிகழ்ச்சியை அனுமதித்து ஒரு சட்டம் ஒன்று இயற்ற, நம்பிக்கை இழந்து இருந்த ஒரு சில ஜல்லிக்கட்டு வீரர்களும் ஆர்வத்துடனும், ஆரவாரத்துடனும் எழ, அதுவரையில் அக்கடா என்று இருந்த எருதுகள், ஒரு சோகப் பார்வையுடனும் பயத்துடனும் எழுந்தன. இதனால் தமிழ்நாடே இன்று இரண்டு பட்டு ஒரு சாரார் ஜல்லிக்கட்டை ஆதரித்தும், இன்னொருசாரார் வழக்கம்போல் அதை எதிர்த்தும் நிற்க, மாடுபிடிச் சண்டை சூடு பிடிக்க ஆரம்பித்தது. சபாஷ் சரியான போட்டி என்று இந்தச் சண்டையைப் பற்றி எந்தத் தீர்மானமும் செய்யாத பலர் எட்ட இருந்து வேடிக்கை பார்த்து மகிழ்ந்தனர். இதற்குள் மிருகவதைத் தடுப்புச் சட்ட ஆதரவளர்கள் அதிர்ச்சியுற்று இந்த மத்திய அரசின் சட்டத்தை எதிர்க்க, பொங்கல் இரண்டே நாட்கள் இருக்கும்போது இந்த எருதுச் சண்டைக்குத் தடை விதித்தது சுப்ரிம் கோர்ட். மக்கள் தங்கள் கட்சியை எடுத்துப்பேச, இந்த வாயில்லா ஜீவன்களான எருதுகளுக்குப் பதில் மிருக வதைத்தடுப்புச் சட்ட ஆதரவாளர்கள் குரல் கொடுக்கிறார்கள். ஆனாலும் எருதுகளுக்கு முழு நியாயம் செய்ததாக ஆகுமா? எனவே என்னுடைய இந்தக் கோர்ட்டில் மனிதர்கள் தங்கள் பக்கத்தை எடுத்துச் சொன்ன பிறகு, எருதுகளையே தங்கள் கட்சிக்குப் பேச அனுமதிக்கிறேன்.
பகுதி2
வழக்கம்போல் இல்லாமல், வீண்வாதங்களை எல்லாம் சென்ஸார் செய்து சுருக்கமாக வழங்கப்பட்ட வழக்கின் சாரம் இதோ:
வாதப் பிரதிவாதங்கள்
நீதிபதி: உங்க கட்சி வாதத்தை ஆரம்பியுங்க.
ஜ(ல்லிக்கட்டை ஆதரிக்கும் மக்கள் கட்சியின்) வக்கீல்: நீதிபதி அவர்களே, ஜல்லிக்கட்டு என்பது மஞ்சு விரட்டு என்ற பெயரிலும், மாடுபிடிச்சண்டை என்ற பெயரிலும், ஏறு தழுவுதல் என்ற பெயரிலும் இன்னும் பல்வேறு பெயர்களிலும் தமிழ்நாடு முழுவதும் தமிழனின் ஒரு வீர விளையாட்டாக புராண காலந்தொட்டு அனுசரித்து வரப்படுகிறது. பசுவை லட்சுமியின் அம்சமாகக் கருதுவது போல் .....
எருது வக்கீல்: இங்கே எங்களைப் பற்றிப் பேசாமல் எதிர் கட்சி வக்கீல் பசுக்களை அனாவசியமாக இழுக்கிறார். ( நீதிபதி: அமைதி, அமைதி)
ஜ.வக்கீல்: நான் இங்கு பசுவைப்பற்றி பேச வரவில்லை, மைலார்ட். எப்படிப் பசுவையும், எருதையைம்
மனிதர்கள் கௌரவப் படுத்துகிறார்கள் என்று சொல்ல வந்தேனே ஒழிய பசுவைப் பற்றிப் பேசவரவில்லை.
நீதிபதி: சரி, நேரத்தை வீண் அடிக்காமல் சுருக்காக உங்கள் கட்சியின் கருத்தைச் சொல்லுங்கள்.
ஜ.வக்கீல்: தமிழ்க் கடவுளான சிவனின் வாகனமாகக் கௌரவிக்கப்படும் எருதைப் போற்றுவது தமிழனின் மரபு. இதோ இங்கே நிற்கிறாரே எருது வக்கீல், அவரையும் நாங்கள் மதிக்கிறோம். சாதுப் பசுவுடன் நாங்கள் இந்த வீர விளையாட்டை விளையாடவில்லை. ஆண்மை மிக்க, வீரியம் வாய்ந்த வீர எருதுடன்தான் விளையாடுகிறோம். இது தமிழனின் ஒரு கலாசாரச் சின்னம். இதைத்தடை செய்வது என்பது தமிழினத்தை இழிவு படுத்துவதாகும். இந்த விளையாட்டிற்கு ஏன் தடை?
எ.வக்கீல்: மை லார்ட்,இது ஒரு கொடுமையான விளையாட்டு. இதில் நாங்கள் சித்திர வதை செய்யப்படுகிறோம். நாங்கள் பொதி சுமக்கிறோம். வண்டி இழுக்கிறோம். ஏர் உழுகிறோம். அதைப் பற்றி எல்லாம் என்றாவது நாங்கள் எங்கள் உணவை உண்ணும் நேரம் தவிர, வேறு நேரத்தில் எங்கள் வாயைத்திறந்து இருக்கிறோமா? ஆனால் வீர விளையாட்டு என்று சொல்லி இவர்கள் எங்களின் தோலைக் குத்திக் கிளறிக் காயப்படுத்திப் பலவித இன்னல்களுக்கும், கொடுமைகளுக்கும் உட்படுத்துகிறார்கள். எனவே இதைத்தடை செய்ய வேண்டும்.
ஜ.வக்கீல்: இந்த எருது வக்கீல் இந்த வீர விளையாட்டைப் பற்றி எதுவுமே தெரியாத, ஏன் எருதுகளை வாழ்க்கையிலே பார்த்திராத பல எருமைகளாலும் - மன்னிக்க வேண்டும்- சோணங்கிகளினாலும் தூண்டப்பட்டு இவர் இவ்வாறு பேசுவது பற்றிக்கொண்டு வருகிறது. இதை எதிர்ப்பவர்கள் பெரும்பாலோரும் பண்பற்ற படித்தவர்கள், நகரவாசிகள்தான். நகரத்திலிருந்து நகரா இந்த நகரவாசிகளுக்கு, நம் ஊர் கிராமங்களைப்பற்றியும் அவர்களுடைய பழக்க வழக்கங்களைப் பற்றியும் என்ன தெரியும்? இவர்களுக்கு எருதுக்கும் உள்ள வேறுபாடு தெரியுமா? அவர்கள் என்றாவது ஒரு எருதையாவது அருகிலிருந்து பார்த்திருப்பார்களா? அன்புடன் அதைத் தடவிக் கொடுத்து இருப்பார்களா? அரவணைத்து இருப்பார்களா? கரப்பான்பூச்சி, எருது, எருமை இப்படி எதைக் கண்டாலும் பயந்து காத தூரம் ஓடுபவர்கள் அவர்கள். அவர்கள் பேச்சைக்கேட்டு அவர்களின் வக்கீல் பேசுவதைக் கண்டால் ஏதோ சம்திங் வாங்கிக் கொண்டுதான் இவ்வாறு பேசுகிறார் என்று தோன்றுகிறது
எ. வக்கீல்: இதைக் கடுமையாக ஆட்சேபிக்கிறேன், மை லார்ட். இவர் எங்கள் இனத்தைக் கொடுமைப்படுத்துவது மாத்திரம் இல்லாமல் அவமானமும் படுத்துகிறார். இந்த மனிதர்கள் மாதிரி ஏதவது சம்திங் வாங்கிக்கொண்டு சுயலாபம் பார்க்கும் கயவர்கள் அல்ல நாங்கள். லஞ்சம் வாங்குவதும் ஊழல் செய்வதும், நம்பிக்கைத் துரோகம் செய்வதும் இந்த மனிதர்களின் புத்தி. சுட்டுப் போட்டாலும் எங்களுக்கு இந்தப் புத்தி வராது. ஜல்லிக்கட்டு வேண்டும் என்று மல்லுக்கட்டுக்கு நிற்கும் நீங்கள், எப்போதாவது எங்கள் வயிறு நிறையும் அளவிற்குக் புல்லுக்கட்டாவது கண்களில் காண்பித்திருப்பீர்களா?
ஜ.வக்கீல்: இதை நான் ஆட்சேபிக்கிறேன். சினிமா வசனம் போல கேட்க அழகாய் இருக்கிறது என்பதால் வாய்க்கு வந்ததை பேசக்கூடாது. நாளொன்றுக்கு நூறு ரூபாய்க்குப் புல்லுக்கட்டு வாங்கிப் போடுகிறோம்.....
நீதிபதி: சரி, விஷயத்திற்கு வாருங்கள்.
ஜ.வக்கீல்: நாங்கள் எல்லாக் காளைகளுடனும், முக்கியமாக சோதாக் காளைகளுடனும் மோதுவதில்லை. இதற்காக என்றே பராமரிக்கப்பட்டு பழக்கப்படுத்தப்பட்ட வீரியம் வாய்ந்த காளைகளுடன்தான் மோதுகிறோம். ஏறுதழுவுதல் என்ற இது, தவறாக எருதுடன் மோதல், சண்டை போடுதல் என்று விஷம்ப் பிரசாரம் செய்யப்படுகிறது. வீரியம் வாய்ந்த காளைகளை களத்தில் இறக்கி அவற்றை ஒரு குறிப்பிட்ட தூரம் ஓடவிட்டு அது துள்ளிக்குதித்து வீரிட்டு ஓடும்போது அந்தக் குறிப்பிட்ட எல்லைக்குள் அந்த எருதினால் உதறப்படாமலும், தள்ளப்படாமலும், கீழே விழாமலும்எருதிற்கு எந்த பாதிப்பும், சேதமும் இல்லாமலும் அதைக் கடைசி வரையில் அணைத்து அரவணைத்துச் செல்பவனே வெற்றி பெற்றவனாகக் கருதப்படுவான். அந்த வீரனுக்கு அக்காலத்தில் பொற்காசும் தற்காலத்தில் அதற்கேற்ப காகிதக்காசும் கொடுத்துக் கொண்டாடப்படுவதுதான் இந்த வீர விளையாட்டு. இதில் வெற்றி பெற்ற வீரனையே மணப்பதாக பல வீரப்பெண்மணிகள் சபதம் எடுப்பது வழக்கம். இது தமிழ்நாட்டின் தொன்றுதொட்ட பழக்கம். இன்றும் இந்த வீரவழக்கம் தொடருகிறது.
பகுதி3
எ. வக்கீல்:: இவர்களுடைய வீர சபதத்திற்கும், விளையாட்டிற்கும் நாங்கள் என்ன விளையாட்டுப் பொருளா? இந்தக் கேடு கெட்ட மனிதர்கள் ஜெயிக்க எங்களுக்குப் பிடிக்காத சனியன் பிடித்த சாராயத்தை ஊற்றியும், வேறு விதத்தில் போதை ஏற்றியும், கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவியும் எங்களை ஆத்திரப்படுத்தியும், ஆவேசப்படுத்தியும் வெறி ஏற்றுவார்கள். நாங்கள் வாடிவாசலிலிருந்து வேகமாக அரங்கத்திற்கு வந்த உடனே எங்கள் மீது பல போக்கற்ற இளம் வாலிபர்கள் பாய்ந்து, கூறிய ஆணிகள் பதித்த கட்டைகளாலும், ஈட்டி போன்ற உபகரணங்களாலும் படுகாயப்படுத்துவது கொடுமை இல்லாமல் வேறு என்ன? எங்கள் சம்மதம் பெறாமல் எங்களுக்கு இஷ்டமில்லாத இந்தச் சண்டையில் எங்களை ஈடுபடுத்துவது ஒருதலைப் பட்சமானது. எங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் எங்கள் கொம்பினால் குத்தப்பட்டும் தூக்கி எறியப்பட்டும் ஒரு சிலர் இறப்பதும், படுகாயங்களடைவதும் ஆண்டுதோறும் நடை பெறுகின்றன. ஆனால் அவர்கள் காயத்திற்கும் இறப்புக்களுக்கும் நாங்கள் பொறுப்பில்லை. அவர்களே அதை விரும்பி ஏற்றுக்கொண்டுதான் வருகிறார்கள். நீங்கள் எங்களுக்குப் பலவிதத்திலும் புரிகிற கொடுமைகளுக்கு உங்களை மிதித்து, குத்திக் கொன்றால் கூட தப்பே இல்லை. நாங்கள் உங்களை மாதிரி கேடு கெட்ட ஜன்மங்கள் இல்லை. அந்தப் பாவம் எங்களுக்கு வேண்டாம் என்றுதான் சொல்கிறோம். மேலும் பார்க்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகப் பெருமக்கள் விசிலடித்தும், கூக்குரலிட்டும் எங்களை நடுங்க வைப்பதால் நாங்கள் அரண்டு போய் உயிருக்குப் பயந்து ஓடும்போது எங்கள் மேல் பலர் பாய்ந்து துன்புறுத்துவது கொடுமை இல்லாமல் அது வீர விளையாட்டா? அப்படி வீர விளையாட்டு விளையாட வேண்டுமென்றால் வாருங்கள். ஒண்டிக்கு ஒண்டி விளையாடுவோம், வருவீர்களா? உங்க வீரத்தை அப்போது காட்டுங்கள். நாங்கள் உங்களைவிட பலமடங்கு பலசாலிகள் தான். எங்கள் ஒருவரின் சராசரி எடை 350 கிலோ கிராம். உங்களின் சராசரி எடை ஒருவர்க்கு 70 கிலோ கிராம்னு வைத்துக் கொள்ளுவோம். அப்படி இருக்க சம பலத்துடனோ அல்லது எடையுடனோ ஒரு ஐந்து பேர் எங்கள் மேல் பாய்ந்து போராடினால் அது நியாயம். தர்மம். அதை விட்டுவிட்டு ஊரிலே இருக்கிற எல்லோரும் பாய்ந்தால் அது எப்படி நியாயமோ, முறையோ ஆகும்? ஏன் உங்கள் வீரத்தைக் காட்ட ஒரு சிங்கத்தோடோ அல்லது புலியோடோ சண்டை போடுவதுதானே. முறம் கொண்டு ஒரு தமிழ்ப் பெண் புலியை விரட்டியதாகப் பெருமை அடித்துக் கொள்ளும் நீங்கள், ஏன் எங்களைப் போன்ற சாதுவான ஆடு,மாடு, கோழி கொக்கு போன்றவர்களிடம் உங்கள் வீரத்தைக் காட்டுகிறீர்கள்? ஏனென்றால் நாங்கள் இளிச்ச வாயர்கள். நாங்கள் வெறும் புல்பூண்டுகளைத் தான் சாப்பிடுகிறோம். உங்களையும் சாப்பிடுவதில்லை. உங்களைப் போல வேறு உயிரினங்களையும் சாப்பிடுவதில்லையே. உங்களுக்கு உதவியாகத்தானே நாங்கள் இருக்கிறோம். அப்படி இருக்க நீங்கள் ஏன் எங்களைத் தொந்திரவு செய்கிறீர்கள்?
ஜ. வக்கீல்: இவர் உண்மையை மாற்றிக்கூறுகிறார் யுவர் ஆனர். யாரும் இவர் கூறுவது போல் குச்சிகளையும், ஆணிகளையும் பயன்படுத்துவதில்லை. சாராயம் கொடுப்பதில்லை. கண்களில் மிளகாய்ப் பொடி தூவுவதில்லை. எங்கோ, எப்போதோ நடந்திருக்கலாம். அவ்வாறு நடப்பது தெரிந்தால் நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம். எங்கள் வீர விளையாட்டை ஒழிப்பதற்கென்றே இவர் எங்கள் மீது வீண் பழி சுமத்துகிறார். நான் கேட்கிறேன் நாங்கள் விளையாடும் இந்த விளையாட்டு ஒரு கொடுமையான விளையாட்டென்றால், உங்களால் சுமக்க முடியாத அளவுக்குச் சுமைகளை ஏற்றி வண்டியை இழுக்க முடியாமல் இழுக்கும்படி செய்வதற்கு என்ன பெயர்? காய்ச்சிய இரும்பினால் உங்கள் உடம்பில் சூடு போடும் வழக்கத்திற்கு என்ன பெயர்? உங்களை ஆண்மையை இழக்கப் பயன் படுத்தப்படும் முறையின் கொடுமைக்கு என்ன பெயர்? இது தவிர வயதின்காரணமாகவோ, வேறு காரணங்களுக்காகவோ பயன்படாது போன முப்பது அல்லது நாற்பது எருதுகளை பத்து எருதுகளே கொள்ளளவு உள்ள ஒரு லாரியில், கால்கள் அசைக்க முடியாமலும், படுக்கவும் முடியாமலும் கட்டிப்போட்டு, ஆகாரமும் தண்ணீரும் இன்றி நின்றபடி நெடு நேரம் பயணம் செய்யும்படி செய்வதற்கு என்ன பெயர்? கடைசியல் கேரளாவிலுள்ள இறைச்சிக் கூடங்களுக்கு அனுப்பப் பட்டு அங்கு நீங்கள் தலை கீழாகத் தொங்க விடப்பட்டு கொடூரமாகக் கொல்லப்படுவதற்கு என்ன பெயர்? சாப்பிடுவதற்காகப் பல மிருகங்களும் கொல்லப்படுகின்றனவே, அதற்கு எல்லாம் என்ன பெயர்? சாமி பேரைச் சொல்லிப் பலி இடுகிறார்களே அதற்கு என்ன பெயர்? நாய்களையும் பூனைகளையும் வீட்டில் வளர்க்கிறார்களே. அவற்றின் இயற்கைச் சூழலிலிருந்து பிரித்து வீட்டுக்குள் அடைக்கப்படுவது என்ன நியாயம்? இதற்கு எல்லாம் நாட்டில் தடை இருக்கிறதா? இல்லையே. இதை எல்லாம் தடை செய்யாமல் ஒரு தமிழ் நாட்டு வீர விளையாட்டைத் தடை செய்வது என்ன நியாயம்? இதைத்தடை செய்வதனால் நல்ல வீரிய எருமைகள் நாட்டில் இல்லாமல் போய்விடும். நாட்டு மக்களிடம் ஏற்கெனவே மங்கிவிட்ட வீர உணர்ச்சி ஜல்லிக்கட்டுத் தடையினால் இன்னும் மங்கி வடும். பல இளம் பெண்களின் கனவுகள் சிதைந்து விடும். இப்போதே இந்த எருதுகளின் மதிப்பு மார்க்கெட்டில் வெகுவாகக் குறைந்து விட்டது. இதை எல்லாம் யோசிக்க வேண்டாமா? இந்த ஜல்லிக்கட்டினால் பொங்கல் திருவிழா பொலிவு அடைகிறது. பல வெளி நாட்டவரும் வந்து இதைப் பார்ப்பதால் இதன் மதிப்பு கூடுகிறது. இது இல்லை என்றால் பொங்கல் திருவிழா எங்களுக்குக் கருப்புப்பொங்கல் விழாதானே தவிர இனிப்புப் பொங்கல் விழா இல்லை. தமிழர்களின் பண்பாட்டையே சீர் அழிக்கும் இந்தத் தடை உடனடியாக நீக்கப்பட வேண்டும். அனைத்துக் கட்சிகளுமே ஆதரிக்கும் இந்த ஜல்லிக் கட்டு நடைபெற தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் அனைவர் சார்பிலும் கனம் நீதிபதி அவர்களைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
பகுதி4
*
எ. வக்கீல்: இவர் குறிப்பிட்ட கொடூரங்கள் பலவற்றிற்கும் ஏற்கெனவே தடைச்சட்டம் உள்ளது. அதை சரியான முறையில் அமல் படுத்தாததுதான் தவறே தவிர அந்தச் சட்டங்கள் இல்லாமல் இல்லை. நீங்கள் கூறிய வேறு சில கருத்துக்களை நாங்கள் ஏற்றுக் கொண்டு அவற்றையும் தடை செய்ய அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்வோம். உண்பதற்காக உயிர்கள் கொல்லப்படுவது இயற்கையின் நியதி. கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்ற பழமொழி நீங்கள் அறிந்ததே. நாய்களையும் பூனைகளையும் வளர்ப்பது தடை செய்யப்படவேண்டும் என்றால் எங்களையும் வீட்டுப் பிராணியாக வளர்க்கக் கூடாது. நாங்கள் மிருக வதைத்தடை அமைப்புடன் பேசி நீங்கள் சொன்ன பல தடைச்சட்டங்களையும் கொண்டு வருவோம். மக்களின் வீர விளையாட்டுக்கு எதிரி அல்ல நாங்கள். சிங்கம் அல்லது புலியுடன் போராடி உங்களின் வீரத்தைக் காட்டுங்களேன். இல்லை வேறு பழந்தமிழ் வீர விளையாட்டுக்களான கபடி, வில்வித்தை, மல்போர், சிலம்பம் என்று ஏராளமான விளையாட்டுகளுக்கு உயிர் கொடுத்து உங்கள் வீரத்தை நிலை நாட்டுங்களேன்.அப்போது நாங்கள் மட்டுமல்ல, இந்த உலகமே உங்கள் வீரத்தைப் போற்றும். தமிழர்கள் பின் பற்ற எவ்வளவோ வேறு பல நல்ல பண்புகளும் பாரம்பரியமும் இருக்க, ஏதோ ஜல்லிக்கட்டு ஒன்றுதான் தமிழர்களின் புராதான வீர விளையாட்டு என்பது உங்கள் நெஞ்சில் வீரமுமில்லை, ஈரமுமில்லை என்று காட்டுகிறது. மறக்கப்பட்ட மற்ற வீர விளையட்டுக்களுக்கு புத்துயிர் கொடுங்கள். எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள். "அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரிக்கிறார்கள். எனவே இந்த ஐல்லிக்கட்டை ஆதரித்துத் தீர்ப்பு வழங்க வேண்டும்" என்று எதிர் கட்சி வக்கீல் கேட்டுக் கொண்டார். நான் சொல்கிறேன். வரும் தேர்தலில் அரசியல் ஆதாயம் பெறவே அவர்கள் இதை ஆதரிக்கிறார்கள். அவர்கள் மற்றவர்கள் இதில் ஈடுபடுவதை ஆதரிக்கிறார்களே தவிர , இது வரையில் தங்கள் வீட்டு வீர மகன்களை இந்த விளயாட்டிற்கு என்றாவது அனுப்பி இருப்பார்களா? கிடையாது? அது ஏன்? எனவே கனம் நீதிபதி அவர்களே! எங்கள் பக்கம் உள்ள நியாயங்களை ஏற்று எங்களை ஜல்லிக்கட்டிலிருந்து விடுவிக்க ஜல்லிக்கட்டுத் தடை தொடரவேண்டும் என்று விரும்புகிறேன்.
இரு பக்க வாதங்களும் ஓய்ந்தன. முடிவை எல்லோரும் ஆவலுடன் எதிர் பார்த்தவாறு நீதிபதியையே பார்க்கின்றனர்.
தீர்ப்பு
நீதிபதி: இதற்கான தீர்ப்பு போன வருட பொங்கலுக்கு முன்பு கூறியது போலவே, அடுத்த பொங்கல் வரையிலும் ஒத்தி வைக்கப்படுகிறது.
இதனால் எருதுக் கூட்டம் சந்தோஷமடைய, அவர்களின் எதிரிக்கூட்டம் பெரும் ஏமாற்றமும் ஆத்திரமும் அடைந்தார்கள். வாதாடிய ஜல்லிக்கட்டு வக்கீலுக்கு சல்லிக்காசு கூட தரமாட்டோம் என்ற கோபத்துடன் அவர் தெருவில் நடமாட முடியாத அளவிற்கு ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் அவர்மீது ஆத்திரம் அடைந்து ரோட்டில் இருந்த ஜல்லிக்கற்களை இவர்மீதும், அரசாங்கக் கட்டிடங்களின்மீது எறிந்தும் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தார்கள். ஒரு சிலர் ரோடுகளில் "தான் உண்டு, தன் வேலை உண்டு" என்று திரிந்த சில எருதுகளின் மீது காரணமில்லாமல் ஆத்திரம் கொண்டு, ஓரிரு கற்களை வீசினார்கள். அவை பயந்து நாற்கால் பாய்ச்சலில் ஓடவே அவற்றைத் தொடர்ந்து துரத்தி ஒரு சிலர் தங்கள் ஜல்லிக்கட்டு ஆர்வத்தைத் தீர்த்துக் கொண்டனர். வேறு சிலர் ஜல்லிக்கட்டு இல்லாத பொங்கல் பொங்கலே இல்லை, அது கருப்புப் பொங்கல் என்றும் கசப்புப் பொங்கல் என்றும் கூறி தங்கள் ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்தனர். வேறு பலர் ஆங்காங்கே நடு ரோட்டில் உட்கார்ந்து பொங்கல் சாப்பிடாமல் தர்ணா செய்தார்கள். போராட்டங்கள் நடத்தினார்கள். சில இடங்களில் இதைக் கண்டிக்கும் வகையில் நாய்ப் பிடிச்சண்டைகளப் போட்டு மகிழ்ந்தார்கள். மக்கள் பலரும் வரவிருக்கும் தேர்தலில் யாருக்கும் ஓட்டுப் போடுவதில்லை என்று கட்சிகள் ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் வரை தீர்மானித்தார்கள். அரசியல் கட்சிகள் என்ன செய்வது என்று தெரியாமல் வழக்கம்போல மத்திய அரசை திட்டித் தீர்த்தார்கள். அதே சமயத்தில் தங்கள் குழந்தைகள் யாரும் ஜல்லிக்கட்டில் ஈடுபடுவதை விரும்பாமல் தடுத்தார்கள். ( இதற்கிடையே ஆங்காங்கே அரசாங்கத்தின் மறைமுக ஆசியுடனும், போலீஸின் பாராமுகத்துடனும் ஜல்லிக்கட்டு நடந்ததாக இரகசியச் செய்திகள் பகிரங்கமாகக் கசிய ஆரம்பித்தன.) சட்டத்திற்குப் பயந்த சில வீர வாலிபர்கள் மஞ்சு விரட்டு என்று கூறப்படும் இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை உள்ளூரிலிருக்கும் மஞ்சு என்ற பெயர் கொண்ட பெண்களை பின்னாலே சென்று விரட்ட ஆரம்பித்தார்கள்.