• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

வளவன் கனவு- வரலாற்று நாவல்

Status
Not open for further replies.
வளவன் கனவு- வரலாற்று நாவல்

வளவன் கனவு- வரலாற்று நாவல்
முன்னுரை

களப்பிரர் காலம் தமிழகத்தின் இருண்ட காலம் எனப்படுகிறது. காரணம் அப்பொழுது என்ன நடந்தது என்பதைக் காட்டும் வரலாற்று ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பது தான். அந்தக் கால வரலாறு தானே எழுத முடியவில்லை, கற்பனை செய்ய என்ன தடை? அதைத் தான் இந்த நாவலில் செய்திருக்கிறேன்.

கற்பனை செய்ய உரிமை கிடைத்துவிட்டது என்பதற்காக அஸ்திவாரம் இல்லாமல் ஆகாயக் கோட்டை கட்டவில்லை. இந்த நாவலில் வரும் ஒவ்வொரு முக்கிய நிகழ்வுக்கும் ஆதாரம் உண்டு. அவை வலுவாக இல்லாமையால் ஒன்றுக்கு மேற்பட்ட ஊகங்களுக்கு இடம் அளிப்பவையாக உள்ளன. அவற்றில் ஒன்றை நான் தேர்ந்தெடுத்துள்ளேன். எதிர்த்தரப்பு ஊகமே சரியானது என்று நிரூபிக்கப்படும் வரையில் என்னுடையது கொடிகட்டிப் பறக்கும். யார் கண்டார்கள், என் ஊகம் உண்மையாகக் கூட ஏற்றுக் கொள்ளப்படலாம்.

தலைப்பைப் பார்த்தவுடன் கல்கியும் அவரது பார்த்திபன் கனவும் தான் நினைவுக்கு வரும். அந்த எழுத்துலகச் சக்கரவர்த்தியால் பாதிக்கப்படாதவர் யார்? அவர் தரத்தை எட்ட முடிந்தவர் யார்?

இதோ நானும் என் பொல்லாச் சிறகை விரித்து ஆடத் தொடங்குகிறேன். வாரம் ஒரு பகுதியாக 27 வாரங்கள் வெளிவர இருக்கும் இது வரலாற்றுப் புதினம் என்ற பெயருக்குத் தகுதி உடையதா என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் நீங்கள்.

1
நதிப் பயணம்​
கணானாம் த்வா கணபதிம் ஹவாமஹே கவிம் கவீனாம் உபமச்ரவஸ்தமம்
ஜ்யேஷ்ட ராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹமணஸ்பதிம் ஆனச்ருண்வன் ஊதிபிஸ் ஸீதஸாதனம்
- ரிக்வேதம்
(கூட்டத்தின் தலைவரான உம்மைப் போற்றி அழைக்கிறோம். நீர் அறிஞர்களுக்குள் அறிஞர். ஒப்பற்ற புகழ் படைத்தவர். ஒளி பொருந்தியவர்களில் சிறந்தவர். வேதத்திற்கு வேத நாயகராய் விளங்குபவரே, எங்களுடைய பிரார்த்தனைக்குச் செவிசாய்த்து அருள் பொலிவுடன் உமக்குரிய ஆசனத்தில் இங்கு எழுந்தருள்வீராக.)

நர்மதை நதி ஓடிக்கொண்டிருந்தது. என்ன வேகம்! என்ன வேகம்! எதற்கு இந்த அவசரம்? கன்றின் குரல் கேட்டு ஓடும் பசுவைப் போலல்லவா வேறு எந்தச் சிந்தனையும் இல்லாமல் தன் இலக்கை நோக்கி ஓடுகிறது! கடலைச் சந்திக்க இவ்வளவு ஆர்வமா? கரையில் முளைகளில் கட்டப்பட்டிருந்த படகுகள் நீரின் வேகத்தால் அடித்துச் செல்லப்பட்டு விடும் போல அவற்றின் கயிறுகள் இழுத்துக் கொண்டு விறைப்பாக நின்றன.
சினோர் நகரில் நதியின் வடகரையில் நின்றுகொண்டிருந்த ஆங்கிரஸ பிரமராயர் ஒரு கணம் அந்த நீர்ப் பெருக்கின் அழகில் மெய் மறந்து நின்றார். ‘நம் நாட்டுக் காவிரிக்கு இவ்வளவு வேகம் இல்லை. அது பெருகி வரும் நாட்களில் செக்கச்செவேல் என்று நுங்கும் நுரையுமாக இருப்பதைப் போல் இல்லாது இந்த நீர் எவ்வளவு தெளிவாக உள்ளது! மேலும் இது காவிரி போல் சில மாதங்கள் வறண்டு போகாமல் ஆண்டு முழுவதும் ஓடும் ஜீவநதியாக உள்ளது’ என்று மனதிற்குள் ஒப்பிட்டுக் கொண்டார்.
மறுகணம் திடீரென்று விழிப்பு வந்தவர் போல அவர் தன்னைச் சுற்றிப் பார்வையிட்டார். இன்று அவருக்கு ஏகப்பட்ட வேலைகள் உள்ளன. கடந்த இரண்டு மாதமாக அலைந்த அலைச்சல் முடிவடைந்து அவருடைய வேலையில் இன்று ஒரு புதிய திருப்பம். இன்னும் ஒரு மாதத்திற்கு அவருக்கு ஓடும் நதியையோ, பாடும் குயிலையோ ரசிப்பதற்குத் தேவையான ஓய்வு இல்லை.

“முதல் படகில் எல்லோரும் ஏறியாகி விட்டதா? பொறுப்பாளர் யார்?” என்று கேட்டவர் தன் கையில் இருந்த சுவடிக்கட்டிலிருந்து ஒரு ஓலையை எடுத்தார். “அம்ருத நயினார்” என்று விளித்தார். படகில் உட்கார்ந்திருந்த நயினார், “எல்லாம் சரியாக இருக்கிறது அமைச்சரே, என் வசம் எட்டு குடும்பங்களைச் சேர்ந்த முப்பது மனிதர்கள் இருக்கிறார்கள், எல்லோருக்கும் தேவையான உணவு இருக்கிறது. சோழநாட்டு மாலுமிகள் நால்வரும் இருக்கிறார்கள்.”

“சரி, நீங்கள் புறப்படலாம். காழித் துறைமுகத்தில் சந்திப்போம்.” பச்சைக் கொடியை அசைத்தார் பிரமராயர்.

படகில் உட்கார்ந்திருந்தவர்கள்,
கணானாம் த்வா கணபதிம் ஹவாமஹே கவிம் கவீனாம் உபமச்ரவஸ்தமம்
ஜ்யேஷ்ட ராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹமணஸ்பதிம் ஆனச்ருண்வன் ஊதிபிஸ் ஸீதஸாதனம்
என்று ஒரே குரலில் முழங்கினர். படகு புறப்பட்டது.

பிரமராயர், “சரி, அடுத்த படகு தயாராக இருக்கிறதா?” என்று கேட்டுவிட்டுத் தன் கையில் இருந்த ஓலையைப் பார்த்து, ‘ஆனந்த நயினார்’ என்று படித்தார். “சித்தமாக உள்ளேன், அமைச்சரே. என் பொறுப்பில் முப்பது பேர் உள்ளனர். ஐந்து குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். மாலுமிகள் ஆயத்தமாக உள்ளனர். உணவுப் பொருள் உள்ளது. உத்தரவு கிடைத்தால் நாங்கள் புறப்படுவோம்’ என்றார் அவர்.

“சரி, போகலாம். காழியில் காத்திருங்கள். நான் வந்துவிடுகிறேன்” என்றார். பயணிகளின் விநாயகர் துதியுடன் புறப்பட்டது படகு.
இப்படியே 99 படகுகள் புறப்பட்டுச் சென்றன. நூறாவது படகில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு, ஆங்கிரஸ பிரமராயர் தானும் ஏறி அமர்ந்தார். படகு புறப்பட்டது. எல்லோரும் ’கணானாம் த்வா’ சொன்னார்கள். முடித்தபின் ஆங்கிரஸர் அருகில் அமர்ந்திருந்த ஒருவரிடம் கேட்டார், “எல்லோரும் விநாயகரைக் குறித்து வேத மந்திரம் சொல்கிறீர்களே, அவர் வேத தெய்வமாகத் தெரியவில்லையே” என்றார்.
அவர் மறுமொழி சொன்னார், “வேத தெய்வம் அல்ல என்றாலும் இங்கு நாங்கள் பரம்பரையாக வணங்கி வரும் தெய்வம். இடையூறு இல்லாமல் வேலை முடிவதற்கு நாங்கள் அவரைத்தான் வேண்டுவோம். அதற்காக இந்த வேத மந்திரத்தை ஓதுவது எங்கள் முன்னோர்களின் வழக்கம்” என்றார். ‘சோழநாட்டின் மாரியம்மன், ஐயனார் போல இவர் இந்த வட்டாரத்தின் தொல்பழம் தெய்வம் போலத் தோன்றுகிறது. எந்தத் தெய்வமாக இருந்தால் என்ன, எல்லாம் நல்லபடியாக நடந்தால் சரிதான்’ என்று நினைத்துக் கொண்டார் ஆங்கிரஸர். படகில் ஒரு விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது. அதை நோக்கிக் கும்பிட்டார்.

கடந்த இரண்டு மாதமாக என்ன அலைச்சல் அலைந்திருக்கிறார்! சோழ நாட்டில் நடப்பதற்கும் இங்கு நடப்பதற்கும் பெரிய வேறுபாடு உண்டு. அங்கு எல்லாம் சமவெளி. ஒரு நாளில் இரண்டு காத தூரம் நடக்கலாம். இங்கு மலைப் பகுதி. அரைக்காதம் நடப்பதற்குள் கால்கள் கெஞ்சுகின்றன. ‘இந்த மனிதர்கள் நம்மை விட உடல் வலிமையும் ஆன்ம வலிமையும் மிக்கவர்கள் தாம். இவர்களை பத்திரமாகச் சோழநாட்டுக்குக் கொண்டு சேர்ப்பிக்க வேண்டும், விநாயகப் பெருமான் துணை புரிய வேண்டும்’ என்று பிரார்த்தித்துக் கொண்டார்.

மாலுமிகள் லாகவமாகப் படகை ஓட்டிச் சென்றனர். அவர்களுக்குத் துடுப்புப் போட வேண்டிய வேலையே இல்லை. நீரின் போக்கில் போனதால் படகு மிக வேகமாக ஓடியது. பாறைகளில் மோதாமல் பார்த்துக் கொள்வது தான் அவர்களது வேலை. வரும்போது பட்ட சிரமத்தை நினைத்துக் கொண்டார். கடலில் அனாயாசமாகப் படகோட்டிய சோழ நாட்டு மாலுமிகளால் இந்த நதியில் எதிர்த்து வர முடியவில்லை. அதனால் பாருகச்சம் துறைமுகத்தில் உள்ளூர் மாலுமிகளை அமர்த்திக் கொண்டார். அவர்கள் மிக வலிமையானவர்கள். அவர்களும் உதவியதால் நீரின் போக்குக்கு எதிராகப் படகை ஓட்டி வர முடிந்தது.

இந்த இரண்டு மாதத்தில் எத்தனை பேர் எவ்வளவு உதவி செய்திருக்கிறார்கள்! அவந்தி தேசத்தின் சிற்றரசர் நம் சோழ மன்னனின் வேண்டுகோளைப் பெரிதாக மதித்து நமக்குத் தேவையானதைச் சேகரித்துக் கொடுத்தாரே! நேற்று கார்வான் நகரில் அந்த மூவாயிரம் பேர் கூடியிருந்தது தெய்விகமான காட்சியாக இருந்தது. இவர்கள் சோழநாட்டில் போய் இறங்கியதும் மன்னர் மிக மகிழ்ச்சி அடைவார். தேவதேவன் அருளால் மன்னர் விருப்பம் நிறைவேற வேண்டும். சோழநாடு முன்போல வலிமையும் புகழும் பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். சினோர் நகரம் சிறிது சிறிதாகக் கண் பார்வையிலிருந்து மறைந்தது.
 
வளவன் கனவு - 2 புதிய வானம், புதிய பூமி

நர்மதாயை நமப் ப்ராத: நர்மதாயை நமோநிசி
நமோஸ்து நர்மதே துப்யம் த்ராஹி மாம் விஷஸர்ப்பத:
-வடமர்களின் சந்தியாவந்தன மந்திரம்
(நர்மதையே உன்னைப் பகலும் இரவும் வணங்குகிறேன். விஷப்பாம்புகளிடமிருந்து என்னைக் காப்பாயாக.)

ஒவ்வொரு படகிலும் இருந்த மக்கள் நர்மதை நதியின் இரு கரையிலும் உள்ள பல வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள். முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள். அவர்கள் கற்ற வேதமும், சோழ மன்னனின் அழைப்பும் அவர்களை இன்று இணைத்திருக்கிறது. அவர்கள் ஒருவர்க்கொருவர் அறிமுகம் செய்து கொண்டார்கள்.
எல்லோரும் வெளிப்பார்வைக்கு உற்சாகமாகத் தோன்றினாலும் அனைவர் மனதிலும் உள்ளூர ஒரு அச்சம் இருந்து வந்தது. ‘புதிய தேசத்துக்குப் போகிறோம். அது எப்படி இருக்குமோ, தெரியவில்லை. அங்கு மலையே இல்லையாம், கங்கைக்கரை போல சமதரையாக இருக்குமாம். அங்குள்ள தட்ப வெப்பம் வித்தியாசமாக இருக்குமாம். குளிரும் குறைவு, வெய்யிலும் குறைவு என்கிறார்கள். மழைக்காலத்தில் மழை பெய்யாமல் சரத் காலத்தில் பெய்யுமாம். காவிரியில் சில மாதங்கள் தான் தண்ணீர் ஓடுமாம். தண்ணீருக்குக் கஷ்டப்பட வேண்டி இருக்குமோ’ என்றெல்லாம் பல வகையான சந்தேகங்கள்.
‘எல்லாவற்றையும் சமாளித்துக்கொள்ளலாம். மனிதர்கள் எப்படி இருப்பார்கள் என்று தெரியவில்லை. இங்கு நம்மை அழைக்க வந்தவர்களைப் பார்த்தால் நல்ல மனிதர்களாகத்தான் தெரிகிறது. சோழ தேசத்தில் எல்லோரும் அப்படியே இருப்பார்களா? சரி, பசுபதிநாதனும் நர்மதை நதியும் நமக்கு எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் துணை இருப்பார்கள். அவர்களிடம் பாரத்தை ஒப்படைத்து விட்டுக் கவலையற்று இருப்போம்’ என்று சமாதானம் செய்து கொண்டார்கள்.
‘பிறந்த மண், உறவினர்கள், பழகிய மனிதர்கள் இவர்களைப் பிரிவது தான் கஷ்டமாக இருக்கிறது. என்ன செய்வது? ஒரு தேசத்தின் நன்மைக்காக ஒரு ஊரையே பலியிடலாம் என்று சாஸ்திரம் சொல்கிறது. இங்கு நாம் சோழ தேசத்தின் நன்மைக்காகச் செல்கிறோம். பிறந்த மண், உறவினர் என்ற அற்ப ஆசைகளைப் பலியிடத் தான் வேண்டும்’ என்று சொல்லிக்கொண்டார்கள்.
‘நாம் பிறந்து வளர்ந்த ஊரில் நமக்கு எந்தக் குறையும் இல்லை. ஆனால் நம் சௌக்கியத்தை மட்டும் பார்த்தால் போதுமா? லோகக்ஷேமம் தானே பிராமணனின் தர்மமாகச் சொல்லப்பட்டிருக்கிறது? சோழ தேசத்தைப் புனருத்தாரணம் செய்ய நம் உதவி தேவை என்று சொல்லும் போது என் சௌக்கியம் தான் பெரிது என்று சொல்ல முடியுமா?
‘சோழதேச அதிகாரிகள் கேட்டுக்கொண்டபடி அவந்தி அரசர் பறையறைந்து அறிவிக்கும்போது பல நிபந்தனைகளைத் தெரிவித்திருந்தார். வேதம் கற்காதவர்கள், அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள், நோயுள்ளவர்கள், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்டவர்கள் வரக்கூடாது என்று விதித்திருந்தார்கள். ஒரு தாய்க்கு ஒரு மகனாக இருப்பவர்களும், மூத்த மகனாக இருப்பவர்களும் பெற்றோரை விட்டுவிட்டுச் செல்லக்கூடாது என்றும் கூறினார்கள். இதில் ஒரு சிலர்தான் தேற முடியும். அவர்களும் தன் சொந்த சௌக்கியத்தைக் காரணம் காட்டி வரவில்லை என்றால் அது தர்மமாகாது.
‘ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு வேலி நிலம் தருவதாகச் சொல்லி இருக்கிறார்கள். ஒரு வேலி என்றால் எவ்வளவு பெரியது என்று தெரியவில்லை. ஜீவனத்துக்குத் தேவையானது கொடுப்பார்கள் என்று நம்பலாம். அங்கு சோழ தேசத்தில் விவசாயம் செய்வது மிகச் சுலபமாம். மண் மிருதுவாக இருக்குமாம். மலைப் பிரதேசம் போலக் கடினமான தரை இல்லையாம். அந்த விவசாயம் கூட நாம் செய்ய வேண்டியது இல்லையாம். யாரோ பயிரிடுவார்கள், பாடுபடுவார்கள். விளைவில் ஆறில் ஒரு பகுதி நமக்கு வந்துவிடுமாம். வேதத்தை ஓதிக்கொண்டும் சொல்லிக்கொடுத்துக்கொண்டும் இருப்பது தான் நமது வேலை என்கிறார்கள். பார்ப்போம். துணிந்து வந்துவிட்டோம். நல்லதே நடக்கும் என்று எதிர்பார்ப்போம். எல்லோரையும் காப்பாற்றும் ஈசன் நம்மை மட்டும் காக்காமல் இருந்து விடுவானா’ என்று பேசிக் கொண்டார்கள்.
ஒவ்வொரு படகிலும் ஒரு சோழியப் பிராமணர் இருந்தார். நயினார் என்ற பட்டப் பெயர் கொண்டவர்கள் அவர்கள். கார்வான் பிராமணர்கள் தாங்கள் போய்ச் சேரும் இடம் பற்றிப் பல கேள்விகள் அவர்களிடம் கேட்டவண்ணம் இருந்தனர். அவர்களும் இவர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்படி சோழ நாட்டின் பெருமைகளை எடுத்துக் கூறி வந்தனர்.
“புதிய இடம் எப்படி இருக்குமோ என்ற கவலை வேண்டாம். தமிழ் மக்கள் விருந்தோம்பும் பண்பு உள்ளவர்கள். உங்களை அன்புடன் ஏற்றுக்கொள்வார்கள்.”
“புதிய இடங்களுக்குப் போய்க் குடி அமர்வது எங்கள் சமூகத்திற்குப் புதியது அல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எங்கள் முன்னோர்கள் மிச்ர (எகிப்து) தேசத்தில் நீலநதிக்கரையில் வாழ்ந்தவர்கள். அங்கு ஏற்பட்ட ஒரு கலவரத்தின் விளைவாக நாங்கள் கடல் கடந்து கொங்கணக் கடற்கரையில் குடியேறினோம். அங்கு நாங்கள் வேதம் கற்றுக் கொண்டோம். அது முதல் நாங்கள் சித்த பாவனர்கள் (தூய்மையான மனம் உடையவர்கள்) என்று அழைக்கப்பட்டோம். மீன் பிடித்தல் எங்களது குலத் தொழில். 500 ஆண்டுகளுக்கு முன் இங்கு சமணம் பரவிய போது மக்கள் மீன் உண்பதைத் தவிர்க்கத் தொடங்கினார்கள். எங்கள் தொழிலுக்கு ஆதரவில்லாமல் போயிற்று. எனவே எங்கள் முன்னோர்கள் உள்நாட்டில் பற்பல வேலைகளில் அமர்ந்தனர். அவர்களில் ஒரு பகுதியினர் வேதம் ஓதுதலைத் தொழிலாகக் கொண்டார்கள். அவர்களை நர்மதை நதிக்கரையில் குடியேற்றி உஜ்ஜயினி அரசர் ஆதரித்தார். இப்பொழுதும் அந்த வேதம்தான் எங்களைச் சோழநாட்டுக்கு அழைத்துப் போகிறது. எல்லாச் சூழ்நிலைகளுக்கும் வளைந்து கொடுக்கும் பண்பு எங்களிடம் உண்டு. அதனால்தான் இந்தக் குடியேற்றத்துக்குச் சம்மதித்தோம். சரி, உங்கள் பூர்விகத்தைப் பற்றிச் சொல்லுங்கள்.
“நாங்கள் சோழியப் பிராமணர். சோழநாட்டின் பூர்விகக் குடிகள். பாண்டிய நாட்டிலும் எங்களவர்கள் உண்டு. எங்களில் பல குழுக்கள் உண்டு. செந்தூர் என்னுமிடத்தில் திருசுதந்திரர் என்றும் மதுரையில் பட்டர் என்றும் ஆனைக்காவில் பிரதமசாகி, அய்யாநம்பி, திருணபட்டன் என்றும் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு பெயர் உண்டு. சோழர் தலைநகரமான ஆரூர்ப்பகுதியில் வாழ்பவர்களில் நயினார், பிரமராயர் என்று இரு குழுக்கள் உண்டு. பிரமராயர்கள் பெரும்பாலும் அரசுப் பதவிகளில் இருப்பார்கள். நான் நயினார் குலத்தைச் சேர்ந்தவன். கோயில், விண்ணகரங்களில் பூஜை செய்வது தான் எங்களுக்கு முக்கிய தொழில்.”
“கோயில் என்றால் என்ன? விண்ணகரம் என்றால் என்ன?”
“விஷ்ணுவை வழிபடும் இடத்துக்கு விண்ணகரம் என்று பெயர். காளி, மாரியம்மன் போன்ற கிராமிய தெய்வங்களை வழிபடும் இடத்துக்குப் பொது இல் என்று பெயர். வீரர்கள் இறந்தால் அங்கு ஒரு கல் நட்டு வருஷத்துக்கு ஒரு முறை பூஜை செய்வார்கள். அரசர் இறந்தால் அவர் நினைவாக நடப்பட்ட கல்லைச் சுற்றிச் சுவர் எடுத்து மேல் கூரை அமைப்போம். இது கோ இல், அதாவது, அரசரின் வீடு எனப்படும். இந்த நடு கல்லிற்குத் தினமும் எண்ணெய் தடவி நீர், பால் அபிஷேகம் செய்து உணவு படைப்பது வழக்கம்.”
“சோழநாட்டின் நீர்வளம் பற்றிச் சொல்லுங்கள்.”
“அங்கு உங்கள் ஊரில் வர்ஷ ருதுவில் மழை பெய்வது போல குடகு நாட்டிலும் பெய்யும். அது எங்கள் காவிரியில் வெள்ளத்தைக் கொண்டுவரும். அது முடிந்தவுடன் சரத் ருதுவில் எங்களுக்கு மழைக் காலம். ஆகவே எங்கள் நீர் வளத்துக்குப் பஞ்சம் இல்லை. காவிரி கொண்டுவரும் வண்டல் மண் எங்கள் வயல்களில் எல்லாம் படிந்து அதை வளப்படுத்துகிறது. சிறு முயற்சியிலேயே ஏராளமாக விளையும். உணவுக்குப் பஞ்சமே இல்லை. சோழநாடு சோறுடைத்து என்றும் சோற்றால் மடை அடைக்கும் சோழ நாடு என்றும் சொல்வார்கள்.”
“உங்கள் நாட்டில் என்ன மொழி பேசுகிறீர்கள்? நாங்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வது எப்படி?”
“நாங்கள் பேசுவது தமிழ். அது தவிர அங்கு ஸம்ஸ்கிருதம் அறிந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். முற்காலத்தில் வடக்கிலிருந்து வந்த சமண சாக்கியர்கள் ஸம்ஸ்கிருதமும் பிராகிருதமும் மட்டுமே அறிந்தவர்கள். அவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே இணைப்பு மொழியாக இருந்தது ஸம்ஸ்கிருதம்தான். முன்பு அறிஞர்கள் மத்தியில் மட்டும் இருந்த ஸம்ஸ்கிருதம், சமணம் பரவியதால் இப்பொழுது சாதாரண ஜனங்கள் வரை பரவி விட்டது. எனவே நீங்கள் என்னுடன் பேசும் ஸம்ஸ்கிருதத்தைக் கொண்டே சமாளித்துக் கொள்ளலாம். விரைவில் தமிழ் கற்றுக் கொள்ளவும் முடியும்.”
கேட்ட விஷயமாக இருந்தாலும் திரும்பத் திரும்பக் கேட்பதில் அலுப்பு ஏற்படவில்லை. இதுவரை பார்த்திராத ஒரு புதிய வானம் புதிய பூமியைப் பற்றிய மனச் சித்திரம் முழுமையாகும் வரை இந்த மாதிரியான உரையாடல்கள் தொடர்ந்து நடைபெற்றன.
சினோரிலிருந்து பாருகச்சம் துறைமுகம் ஐந்து காத தூரம். எதிர்த்துச் செல்லும் போது இதே தூரத்துக்கு மூன்று நாள் ஆயிற்று. இப்பொழுது நீரின் போக்கில் வந்ததால் ஒரே நாளில் பாருகச்சம் வந்துவிட்டன படகுகள். இரவு அங்கே தங்கினார்கள்.
இனி கடல் பயணம் தான். படகின் பாய்கள் விரிக்கப்பட்டன. காற்று சாதகமாக இருந்தது. கரையை ஒட்டியே பயணம் செய்தனர். பகல் முழுவதும் பயணம். மாலையில் நீர் வசதி உள்ள இடத்தில் தங்கி உணவு சமைத்து உண்டு, உறங்கி, மறுநாள் விடியற்காலையில் எழுந்து ஆண்கள் அனுஷ்டானங்களைச் செய்ய, பெண்கள் அன்றைய பகலுக்கான உணவைத் தயாரிப்பதில் ஈடுபட்டனர். உணவும் நீரும் படகில் ஏற்றப்பட்டன. மீண்டும் பகல் முழுவதும் பயணம். இப்படி ஒரு மாதம் போக வேண்டும்.
 
அன்புடையீர்!

வணக்கம். உங்கள் வரலாற்றுப் புதினம் கண்டது ஓர் இனிய மகிழ்ச்சி.

நர்மதை நீரோட்டம் போல் விரைவாகவும் அருமையாகவும் ஓடுகிறது கதை. தொடர்ந்து படிக்கிறேன்.
இதைப் புத்தகமாக்கி வெளியிட்டீர்களா?

அன்புடன்,
ரமணி
 
நன்றி திரு சாய்தேவோ,
நீண்ட நாட்கள் கழித்து உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.
வளவன் கனவு தொடராக வெளிவந்து வாசகரின் அபிப்பிராயத்தைத் தெரிந்துகொண்டபின் தேவையான திருத்தங்களுடன் புத்தகமாக வெளிவரும்.
திரைப்படமாக எடுக்கவும் ஒருவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது தமிழ்நாட்டில் பிராமணர் குடியேற்றம் பற்றியது என்பது முதலிலேயே தெரிந்திருக்கும். சைவத்தின் வரலாறும் இதில் அடங்கியுள்ளது. தொடர்ந்து படியுங்கள். குறைகளைத் தெரிவியுங்கள்.
 
3 புதிய பாடல் புதிய தெய்வம்

ஈசன் அவனல்லாது இல்லை எனநினைந்து
கூசி மனத்தகத்துக் கொண்டிருந்து பேசி
மறவாது வாழ்வாரை மண்ணுலகத் தென்றும்
பிறவாமைக் காக்கும் பிரான்
-அம்மையார்.

சோழ மன்னர் செந்தீ வளவன் கொலு மண்டபத்தில் வந்து அமர்ந்தார். அவர் முகம் கவலைக் குறியைக் காட்டியது. தலைமை அமைச்சர் அச்சுதப் பிரமராயரை நோக்கி, “பிரமராயரே, நம் மனிதர்கள் நர்மதைக்கரைக்குப் போய் மூன்று மாதம் ஆகிறது. இன்னும் வரவில்லை, அவர்களிடமிருந்து எந்தச் செய்தியும் வரவில்லையே” என்றார்.
“வந்துவிடுவார்கள் மன்னா. கவலை வேண்டாம். எப்படியும் போக ஒரு மாதம், வர ஒரு மாதம் ஆகும். மேலும் ஆங்கிரஸ பிரமராயர் போன காரியத்தைச் செவ்வனே முடித்துக்கொண்டுதானே வரவேண்டும். நாடுவிட்டு நாடு குடியேறுவது என்பது எளிதான செயல் அல்லவே? அவர்களுக்குச் செய்தியைத் தெரிவித்து அவர்கள் யோசனை செய்து சம்மதித்தபின் அவர்களை ஒன்று கூட்டிக் கொண்டு வரவேண்டும். இதற்கு நான்கு மாத காலம் ஆகும். நேற்று வந்த ஒற்றர் செய்தியின்படி, வர விரும்புபவர்கள் அனைவரும் வைகாசி மாதம் பவுர்ணமி அன்று, அதாவது முந்தாநாள், கார்வான் நகரில் கூட வேண்டும் என்று ஆங்கிரஸர் அறிவித்து இருக்கிறார். நேற்று புறப்பட்டிருப்பார்கள். இன்று கடல் பயணத்தைத் தொடங்கியிருப்பார்கள்.”
“நம் அமைச்சர் ஆங்கிரஸரின் திறமையில் நமக்கு நம்பிக்கை உண்டு. இருந்தாலும் நீண்ட கடற்பயணம் ஆயிற்றே, புயல் போன்ற இயற்கை உற்பாதங்கள் ஏற்படாமல் இருக்க வேண்டுமே என்பது தான் நம் கவலைக்குக் காரணம்.”
“நம் மாலுமிகள் திறமையானவர்கள். எந்தப் புயல் வெள்ளமானாலும் பாதுகாப்பாகப் படகைச் செலுத்துவதில் வல்லவர்கள். மேலும் இது புயல் வீசும் காலமும் அல்ல. கடுங்கோடை. இன்னும் ஒரு மாதம் போனால் மேற்குப் பகுதிகளில் பெரு மழை தொடங்கிவிடும். அதற்குள் அவர்கள் வந்து விடுவார்கள். லகுலீசர் காப்பார். கவலை வேண்டாம் மன்னா.”
லகுலீசர் பெயரைக் கேட்டவுடன் அரசரின் மனம் பழைய நினைவுகளில் மூழ்கியது.
ஒரு ஆண்டுக்கு முன்னால் ஒரு நாள். அரசர் கொலு மண்டபத்தில் வீற்றிருக்கும்போது ஒரு புலவர் வந்தார். வழக்கம்போல மன்னரைப் புகழ்ந்து பாடி பரிசு பெற்றுச் செல்வதற்காக வருவோரில் ஒருவர் என்று நினைத்த மன்னருக்கு அவர் பேசிய முதல் சொல்லே அதிர்ச்சியைத் தந்தது.

“மன்னா, இப்பொழுது நான் சொல்லப் போகும் பாடல் உங்களைப் புகழ்ந்து பாடப்பட்டதும் அல்ல, என்னால் இயற்றப்பட்டதும் அல்ல. மேலும் நான் பரிசு பெறவும் வரவில்லை. மன்னர் தயவால் என்னுடைய நிலம் எனக்குப் போதுமான வருவாய் தருகிறது. பாடலைப் படிக்கவா?”
“படியும்.”
அழலாட அங்கை சிவந்ததோ அங்கை
அழகால் அழல்சிவந்த வாறோ- கழலாடப்
பேயோடு கானிற் பிறங்க அனலேந்தித்
தீயாடு வாய்இதனைச் செப்பு.

சுடலையில் தீயின் நடுவே கையில் தீயேந்தி நடனமாடுபவனைப் பார்த்துப் புலவர் கேட்கிறார், “உன் கையின் சிவப்பு நிறத்தால் தீ சிவந்ததா அல்லது அத்தீயினால் உன் கை சிவந்ததா ?

“அடடா, என்ன கற்பனை நயம்! மேலே படியும்.”

காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின்
வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு- மாலையின்
தாங்குருவே போலுஞ் சடைக்கற்றை மற்றவற்கு
வீங்கிருளே போலும் மிடறு.

காலை நேரத்துச் சிவந்த வானம் அவனது திருமேனிக்கும், உச்சி வேளை வெண்ணிற வானம் அவன் அணிந்துள்ள வெண்ணீற்றிற்கும், மாலையில் மறைகின்ற ஞாயிற்றின் கதிர்கள் அவனது விரிந்த சடைக்கும், கருத்த இரவு அவன் கறை மிடற்றிற்கும் உவமையாயின.

“ஆஹா, என்ன சிறப்பான உவமை! மேலே படியும்.”

இருளின் உருவென்கோ மாமேகம் என்கோ
மருளின் மணிநீலம் என்கோ- அருளெமக்கு
நன்றுடையாய் செஞ்சடைமேல் நக்கிலங்கு வெண்மதியம்
ஒன்றுடையாய் கண்டத் தொளி.

இறைவா, உன் கண்டத்தில் உள்ள ஒளி பொருந்திய கருமைக்கு உவமையாக எதைக் கூறுவேன்? இருளையா, மாமேகத்தையா, நீல மணியையா ?

“என்கோ, என்கோ என்ற தொடர் என்னை எங்கோ உயர்த்திச் செல்கிறது. என்ன அழகான சொல் பிரயோகம்! இன்னும் இருக்கிறதா?”

“நிறைய உள்ளது மன்னா. சொற்சுவை மட்டுமல்ல. இறைவனிடத்து அவர் காட்டும் அன்புச் சுவையும் சிறப்புடைத்து. இதைக் கேளுங்கள்.”

இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்
படரும் நெறிபணியா ரேனும்- சுடருருவில்
என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க்
கன்பறா தென்நெஞ் சவர்க்கு.

என் துன்பத்தை அவர் தீர்க்காவிட்டாலும், என் மேல் இரக்கம் கொள்ளாவிட்டாலும், நான் பின்பற்ற வேண்டிய வழி பற்றி எனக்கு உணர்த்தாவிட்டாலும் எலும்பு மாலை அணிந்து, சுடுகாட்டு நெருப்பினிடையே தானும் ஒரு சுடராகக் கையில் தீ ஏந்தி நடனம் ஆடுகின்ற எம்மானிடம் நான் கொண்ட அன்பு மாறாது.

அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும்
அவர்க்கேநாம் அன்பாவ தல்லால்- பவர்ச்சடைமேல்
பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்
காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்.

நாம் எத்தனை பிறவி எடுத்தாலும் அவ்வப் பிறவிகளிலும், தன் நீண்ட சடையில் பிளவுபட்ட திங்களைச் சூடிய பெம்மானுக்கே அடிமையராய் வாழ்வோம். அவரல்லாத பிறர்க்கு ஒருபோதும் ஆளாக மாட்டோம்.

வேதியனை வேதப் பொருளானை வேதத்துக்
காதியனை ஆதிரைநன் னாளானைச் சோதிப்பான்
வல்லேன மாய்ப்புக்கு மாலவனும் மாட்டாது
கில்லேன மாஎன்றான் கீழ்.

வேதத்தை ஓதுபவனும், வேதத்திற்குப் பொருளாய் உள்ளவனும், வேதத்தைச் செய்தவனும் ஆகிய ஆதிரை நன்னாளானைச் சோதிப்பதற்கு மாலவனும் பன்றி உருவெடுத்து கீழே தோண்டிச் சென்று ‘என்னால் முடியவில்லை அம்மா’ என்றான்.

“புலவரே, இந்தப் பாடல்களில் போற்றப்பட்டுள்ள தெய்வம் யார் என்று தெரியவில்லையே. அவர் வேதத்துக்கு ஆதியன் என்று பேசப்பட்டாலும் அவர் வேத தெய்வமாகவும் தெரியவில்லை. கிராமியத் தெய்வமாகவும் தெரியவில்லை. எப்படி இருப்பினும் அந்தத் தெய்வத்தின் மேல் புலவர் செலுத்தும் அன்பு மிக ஆழ்ந்தது, உறுதியானது. இதை இயற்றியவர் யார்? இது போன்று இன்னும் எத்தனை பாடல்கள் உள்ளன?”

“மன்னா, இது என் தந்தையார் எழுதி வைத்த சுவடி. அவர் என் குழந்தைப் பருவத்திலேயே இறந்து விட்டார். இந்தச் சுவடி என் வீட்டுப் பரணில் இருந்தது. இது பேயார் என்ற ஒரு பெண்பால் புலவர் இயற்றியது என்று என் தாய் சொல்லி அறிந்தேன். படித்துப் பார்த்ததில் சிறப்பாக இருக்கவே, சிறப்புடைய பொருள்கள் அரசர்க்கே உரியன என்ற வழக்குப்படி சமூகத்தில் இதைத் தெரிவிக்க வந்தேன். மொத்தம் 143 பாடல்கள் உள்ளன. இது எந்தத் தெய்வத்தைக் குறிக்கிறது என்பதை நான் அறியவில்லை.”
“புலவரே, நீங்கள் இங்கேயே தங்கிவிடுங்கள். முழுவதையும் படித்துக் காட்டிவிட்டுப் போகலாம். அமைச்சரே, இந்தப் பாடலை நீர் கேட்டிருக்கிறீரா, இதை எழுதியது யார் தெரியுமா?”

“பேயார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். காரைக்காலைச் சேர்ந்தவர். அவர் ஏதோ பேய் பிடித்த பெண் என்றுதான் நினைத்திருந்தேன். அவர் இவ்வளவு அழகிய பாடல்களை இயற்றியிருப்பார் என்று நான் இதுவரையில் அறியவில்லை.”
“அமைச்சரே, அவரைப் பற்றிய முழுத் தகவல்களையும் சேகரித்துச் சொல்லும்.”

“உத்தரவு மன்னா.”

புலவர் அமைச்சர் காட்டிய விடுதியில் தங்கினார். அரசருக்கு ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் அரண்மனைக்கு வந்து பாடல்களைப் படித்துப் பொருள் கூறி வந்தார்.
 
Dear Sri Vikrama

Just discovered your thought provoking novel. I apologize upfront for this English message in the middle of such beautiful expressions in your novel.
Like you noted, your novel and its style reminds me of the time when I spent reading Parthipan Kanavu many decades ago. My reading speed is far slower to read novels of this kind but I was able to enjoy the beauty of descriptions.

In order to enjoy and be along with your creative descriptions I wanted to know the exact time period and the locations of India where the novel is based on. For people like me, here is what I found

https://ta.wikipedia.org/wiki/களப்பிரர்

I have some suggestions for your to consider. Your targeted audience may not need what I have to suggest. I had to go back and forth a few times to remember who is who and their relationships. Since your novel is based on seemingly extensive research if you happen to find time you could include both the factual aspects (like Nayinar and their background, how they fit in the novel etc) in a running glossary. You dont need to do this, I think it may be just my issue trying to remember who is who using names from another era.

Overall very significant and beautiful effort.

Wish you all the best - Regards
 
Dear Sri TKS,
Thank you for your suggestions.
The novel is set on Tamilnadu of the 4th to 7th century AD
Karaikal Ammaiyar is considered to have lived in 5th century AD. I have taken it to be around 450. She was not known outside a small circle in the immediate period following her Mukti.
My assumption is that a Chola King heard of her and decided to propagate her works. He did more than that which will be revealed in the next chapters.

The Kalabhras are said to have ruled over Tamilnadu from 250 AD to 575 AD. During their period religion, arts and literature declined.
Not much is known about this period since there are no concrete evidences. As far as I have read, a book by Sri Mayilai Seeni Venkatasami is the only one to throw some light on this period. He says that Cholas and Pandyas were not totally annihilated nor incapacitated by the Kalabhras. The above Tamil Kings shone outside Tamilnadu in this period. There were powerful Chola and Pandya kings. I assume that they were subordinates to the Kalabhras and the Tamil Kings were trying to regain their freedom.
The bottleneck to freedom was the other worldliness of the people which was caused by the spread of Jainism. The Chola King, whom I have named, Senthee Valavan sees, in the songs of Ammaiyar, an opportunity to instil devotion into the people and thereby he hopes to revive the ancient Tamil valour and ebullience. That was his dream and this story says that after four or five generations his dream was fulfilled.
 
Dear Sri TKS,
Regarding your query on Nayinars-
The brahmins connected with temple worship in Thiruvarur belong to two groups. Nayinar and Brahmarayar.
The formers are the actual priests and the the latter perform subordinate works such as preparing and bringing naivedyam, giving the lighted lamps to the priests during the pooja etc. (Source Kudavayil Balasubrahmanyan's book. I forgot the title. Perhaps it is Thiruvarur Kumbhabhisheka Malar.)
The Brahmarayars were once glorious. Kalki's Ponniyin Selvan has the Prime Minister Aniruddha Brahmarayar.
The various brahmin groups found in isolated pockets are collectively called Sozhias. Ayyanambi, Trnabhattan in Thiruvanaikka, Thirusuthanthirar in Thiruchendur, Bhattar in Madurai. This information was gathered from a many volumed book, The peoples of India -authored by V.S.Deep Kumar, and edited by K.S.Singh.
Though all these groups perform the duties of Sivacharya in the respective places, they are distinct from Sivacharyas and most of the Sozhias have now merged with other Brahmin groups. Only the Nambiars of Avudaiyarkoil and the Bhattars of Thiruvellarai claim that they are Sozhias. I have personally visited these places and gathered this information
 
4 காரைக்கால் அம்மையார்

பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன்- நிறந்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே
எஞ்ஞான்று தீர்ப்ப திடர்.
அம்மையார்


ஏழு நாட்களில் அமைச்சர் தான் திரட்டிய தகவல்களுடன் அரசரைச் சந்தித்தார். “அந்தப் பாடல்களை இயற்றியவர் புனிதவதி என்ற பெயருடன் காரைக்காலில் ஒரு சமணக் குடும்பத்தில் தோன்றியவர். அவர் சிறுமியாக இருந்தபோது அவர் வீட்டு வாசலில் ஒரு அடியார் உணவு கேட்டு வந்தார். தாயிடமிருந்து அவருக்கு உணவு பெற்றளித்தாள் புனிதவதி. அதன் பின் அடியார் திண்ணையில் அமர்ந்து அங்குள்ள சிறுவர், சிறுமியரைக் கூட்டிக் கதைகள் சொல்லத் தொடங்கினார். அவை ஆலமர்செல்வன் என்னும் தெய்வத்தைப் பற்றியவை. அவை புனிதவதியின் மனதில் ஆழப் பதிந்தன.

புனிதவதியின் பெற்றோர்கள் நாத்திகர்கள் என்பதால் அவர் அதற்கு முன் உலகைப் படைத்துக் காக்கும் இறைவன் ஒருவன் உண்டு என்பதையே அறியாதிருந்தார். அந்தக் கதைகளைக் கேட்ட பின் அவர் இறைவனைப் பற்றியே இரவும் பகலும் சிந்திக்கலானார்.
வயது வந்ததும் நாகையைச் சேர்ந்த பரமதத்தன் என்ற வணிகனுடன் அவருக்குத் திருமணம் ஆயிற்று. காரைக்காலிலேயே ஒரு தனி வீட்டில் இருவரும் இல்லறம் நடத்தினர். ஒரு நாள் தன் கடைக்குச் சென்றிருந்த அவளது கணவன் இரண்டு மாங்கனிகள் வாங்கி வீட்டிற்கு அனுப்பினான்.

வீட்டு வாசலில் ஒரு அடியார் வந்து, ஈசனைப் போற்றிப் பாடி, உணவு யாசித்தார். புனிதவதி அவருக்குச் சோறு பரிமாறினார். கறியமுதம் எதுவும் சித்தம் ஆகாததால் அதற்கு மாற்றாக, கணவன் அனுப்பிய பழங்களில் ஒன்றை இட்டு அடியவரின் பசி மாற்றி மகிழ்ந்தார்.
வீட்டுக்கு வந்த பரமதத்தன், உணவுடன் கூட மாங்கனியைச் சுவைத்தான். உயர்வான சுவையுடன் கூடியதாக இருக்கவே, இன்னொன்றையும் போடுமாறு கேட்டான். ஈசனடியார்க்குக் கொடுத்து விட்டேன் என்று சொன்னால், நாத்திகனான தன் கணவன் கோபிப்பானோ என்று அஞ்சிய புனிதவதி இந்த இக்கட்டிலிருந்து தன்னைக் காக்குமாறு இறைவனை வேண்டினார். இறை அருளால் அவர் கையில் ஒரு மாங்கனி வந்து சேர்ந்தது. அதைக் கணவனுக்குப் படைத்தார். அது மேலும் அதிகச் சுவையுள்ளதாகவும் வேறுபட்டதாகவும் இருக்கவே அது பற்றி அவன் வினவினான். இறைவன் கொடுத்தது என்னும் செய்தியை அவன் நம்பவில்லை. நிரூபணம் வேண்டினான். இறை அருளால் புனிதவதி மீண்டும் ஒரு பழம் வருவித்தார். இறைவனை நம்பாத அவன் அவளைப் பேய்மகள் என்று கருதி அவளை விட்டு நீங்கிப் பாண்டிநாடு சென்றான். வருடங்கள் பல ஆகியும் அவன் திரும்பாத நிலையில், கணவனே தனக்குக் கதி என்று எண்ணிய அவர் கணவன் இருக்குமிடத்தைத் தேடி விசாரித்துக் கொண்டு சென்றார்.

அங்கு பரமதத்தன் வேறு பெண்ணை மணம் செய்து கொண்டு ஒரு பெண் மகவைப் பெற்றிருந்தான். புனிதவதியார் அவனது வீட்டிற்கு வந்ததும், “பேய் அணங்கே, எங்களைத் துன்புறுத்தாதே, சென்று விடு” என்று வேண்டி தன் மனைவியுடன் அவரது காலில் விழுந்தான். இதைப் பார்த்த அவளது பெற்றோரும் உறவினர்களும் அவளைப் பேய் எனவே கருதிப் புறக்கணித்தனர்.

அதன் பின் அவர் தன்னைப் பேய் என்று கூறிக் கொள்வதில் இன்பம் அடைந்தார். இறைவனைக் குறித்துப் பாடல்கள் இயற்றிப் பாடிக் கொண்டு ஊர் ஊராகச் சென்றார். பலரும் அவரிடம் அஞ்சி ஓடினர். சிலர் மட்டும் அவரைப் பின் தொடர்ந்து சென்று அவர் கூறும் பாடல்களை எல்லாம் ஏட்டில் எழுதி வந்தனர். இன்று நம்மிடம் வந்துள்ள கவிராயரின் தந்தை அத்தகையோரில் ஒருவர்” என்று சொல்லி முடித்தார் அமைச்சர்.

அரசர் வியப்படைந்தார். “இதுவரை அவருடைய பாடல்களைக் கேட்டு அளவிலா வியப்பும் மகிழ்வும் அடைந்தேன். இத்தகைய சிறந்த பாடல்களை இயற்றியவர் நிச்சயம் பேயாக இருக்க முடியாது. சேற்றில் பிறந்த செந்தாமரை போல் நாத்திகக் கூட்டத்தில் தோன்றிய இந்த அம்மையாரை அவரது இயற்பெயர் கொண்டு அழைப்பதும் மரியாதை ஆகாது. இனி அவரைக் காரைக்கால் அம்மையார் என்றே அழைப்போம். அமைச்சரே, காரைக்கால் அம்மையாரைப் போற்றிய மனிதர்கள் யார் யார், எங்குள்ளனர் என்று விசாரியுங்கள்” என்று கட்டளை இட்டார் அரசர்.
 
5 களப்பிரர்

நாணாதுடைநீத் தோர்களுங்கஞ்சி நாட்காலை
ஊணாப்பகலுண் டோ துவோர்கள் உரைக்குஞ்சொல்
பேணாதுறுசீர் பெறுதுமென்பீரெம் பெருமானார்
சேணார்கோயில் சிராப்பள்ளிசென்று சேர்மினே.
-சம்பந்தர்
கி.பி. 250 முதல் 575 வரை உள்ள காலம் தமிழகத்தின் இருண்ட காலம் எனப்படுகிறது. அப்பொழுது தமிழ்நாட்டில் என்ன நடந்தது என்பதைத் தெரிவிக்கக் கூடிய கல்வெட்டுகளோ, பட்டயங்களோ, இலக்கியங்களோ இல்லை. கருநாடகத்திலிருந்து களப்பிரர் என்னும் கூட்டத்தார் படையெடுத்து வந்து சேர சோழ பாண்டிய அரசர்களை வென்று அடிமைப்படுத்தினர் என்பது மட்டு்ம் தெரிகிறது.

அப்பொழுது சோழ நாட்டின் நிலப்பரப்பு பெரிதாக இருந்தது. சோழன் மீண்டும் வலிமை பெறக் கூடாது என்பதற்காக அந்நாட்டின் பல பகுதிகளைக் களப்பிரர்கள் பல குறுநில மன்னர்களுக்குப் பிரித்துக் கொடுத்துக் கப்பம் கட்டம் செய்தனர். கரிகால் சோழன் தலைநகராகக் கொண்டு ஆண்ட உறையூர் சோழர்கள் கையை விட்டுப் போய் விட்டது. தஞ்சாவூருக்குக் கிழக்கே உள்ள சிறு பகுதி மட்டும் சோழநாடு என்ற பெயருடன் இருந்தது. எனவே சோழர்கள் தங்கள் குல முன்னோனான மனுநீதிச் சோழன் ஆண்ட ஆரூரைத் தலைநகராகக் கொண்டு ஆளத் தொடங்கினர். இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் கடந்தன. சோழநாடு முழுமையையும் மீட்டுப் பழைய பெருமையை மீண்டும் நிலை நாட்ட வேண்டும் என்ற ஏக்கம் மட்டும் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்தது.

சிறு பகுதியாக இருந்தாலும் காவிரியால் வளம் பெற்ற சோழநாட்டில் செல்வத்திற்குக் குறைவில்லை. ஒரு பெரிய படை திரட்டிக் குறுநில மன்னர்களைத் தன் வசப்படுத்திக் களப்பிரர்களிடமிருந்து விடுதலை பெறத் தேவையான செல்வம் சோழ மன்னர்களிடம் இருந்தது. ஆனால் அதற்குத் தேவையான மக்கள் ஒத்துழைப்பு இல்லை.
சமண சாக்கிய சமயங்கள் தமிழ்நாட்டில் நுழைந்து கிட்டத்தட்ட எண்ணூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. துவக்க காலத்தில் அவை மகாவீரர், புத்தரின் உயர்ந்த கொள்கைகளைப் பின்பற்றுவோரைக் கொண்டிருந்தன. கடவுள் என்று ஒன்று உண்டு என்பதை ஒப்புக் கொள்ளாவிட்டாலும் அவை உண்மை, அகிம்சை, பேராசையின்மை, புலனடக்கம், கள்ளுண்ணாமை ஆகியவற்றைப் பரப்பி மக்களைப் பண்படுத்தின. இவ்வுலகில் அறநெறியைக் கடைப்பிடித்து வாழ்வதன் மூலம் மறு பிறவி இல்லாத நிலையான முத்தியை அடையலாம் என்று போதித்தன. சமண சாக்கியத் துறவிகளை மக்கள் போற்றி ஆதரித்தனர்.
நாத்திகத்தையும் அறநெறியையும் சேர்த்துக் கடைப்பிடிப்பது பண்பட்ட மனிதர்களுக்கே சாத்தியம். பெரும்பாலான மக்களை அறநெறியில் நிலைக்கச் செய்வது இறைவன் தண்டிப்பான் என்ற அச்சம்தான். அச்சமே கீழ்களது ஆசாரம் என்றார் வள்ளுவரும்.

சில நூற்றாண்டுகளுக்குப் பின் நாளடைவில் மக்களுக்கு அறநெறி நாட்டம் குறைந்தது. கடவுள் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டவர்களுக்கு முத்தி என்ற நிலை உண்டு என்பதிலும் சந்தேகம் வந்தது. இருக்கிறதோ இல்லையோ என்று ஐயத்திற்குள்ளான மறு உலகுக்காக இன்று நம்மை நாம் ஏன் வருத்திக் கொள்ள வேண்டும், இன்றைய ஆசையை இன்றே நிறைவேற்றிக் கொள்வோம் என்று எண்ணம் ஓங்கியது.

மக்களுக்கு வழிகாட்ட வேண்டிய துறவிகளே ஒழுக்கம் தவறி வாழத் தலைப்பட்டனர். உழைக்க விருப்பம் இன்றிப் பிச்சை எடுத்து வாழ்வதும், ஆடையின்றித் திரிவதும், குளிக்காமல், பல் துலக்காமல் உண்பதும், தவம் என்ற பெயரில் போதை தரும் காடியைக் குடித்து விட்டு மயங்கிக் கிடப்பதுமான குறிக்கோள் இல்லாத வாழ்க்கை வாழ்ந்தனர்.

புத்தரும் மகாவீரரும் வகுத்த கொள்கைகள் இத்தகைய நாகரிகமற்ற வாழ்க்கை முறையைப் போதிக்கவில்லை. சமுதாயக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு மனம் போன போக்கில் வாழ விரும்பிய சிலர் இச்சமயங்களைப் போர்வையாகப் பயன்படுத்தி அவ்வாறு நடந்து கொண்டனர். இந்தக் கலாசாரம் பரவியதால் சமுதாயம் முழுமையும் நாகரிகத்தில் பின்னடைவு கொண்டது.
அறநெறியைக் கடைப்பிடித்த சமணர்களும் இவ்வுலக வாழ்வில் உற்சாகம் இல்லாமல் மறு உலக வாழ்வில் நாட்டம் செலுத்தியதால் போர் புரியும் மனப்போக்கு மக்களிடையே இல்லாமல் போயிற்று. இதனால் வீரமுள்ள ஒரு படையை உருவாக்குவது என்பது மன்னர்களுக்கு இயலவில்லை. தமிழ் மன்னர்கள் களப்பிரர்களிடம் அடிமைப்படுவதற்குக் காரணமான இப்பண்பு அவர்கள் மீண்டும் தலைதூக்குதலையும் தடுத்துக் கொண்டிருந்தது.

முந்திய காலங்களில் சோழியப் பிராமணர்கள் இறை உணர்வையும் அற உணர்வையும் போதித்து மக்களை நல்வழிப்படுத்தி வந்தனர். ஆனால் தற்போதோ, பிராமணர்களிலேயே பலர் சமண சாக்கிய சமயத்தைத் தழுவினர். எஞ்சி இருந்தவர்கள் சிறுபான்மையர் ஆகிவிட்டபடியால் சமுதாயத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தான் உண்டு தன் வழிபாடு உண்டு என்று இருந்தனர்.

எனவே இந்தப் போக்கை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டியது ஒரு சமுதாயக் கட்டாயமாக இருந்தது. இதை முதலில் உணர்ந்தவர்கள் சோழர்கள்தாம். பல்லவ, பாண்டிய மன்னர்களில் சிலர் சமணத்தைத் தழுவியிருந்தனர். ஆனால் சோழர்கள் சமணத்தின் சிறந்த பண்புகளைப் போற்றினாலும் கூட முழுமையாகச் சமணத்துக்கு மாறாமல் தங்கள் பழைய சமயக் கொள்கையில் உறுதியாக நின்றனர்.

அம்மையாரின் பாடல்களில் மனதைப் பறிகொடுத்த செந்தீ வளவனுக்குச் சோழநாட்டை மீண்டும் பெருமையுறச் செய்வதற்கான வழி அதில் இருப்பதாக உள்ளுணர்வு கூறியது.
செந்தீ வளவன் அம்மையாரின் பாடல்களை முழுவதும் கேட்டார். அவற்றின் இலக்கியச் சுவையை ரசித்தார். ஆழ்ந்த பக்திச் சுவையை மெச்சினார். ஆனால் அம்மையார் குறிப்பிடும் தெய்வம், பனித்த சடையும் பால் வெண்ணீறும் அணிந்த தெய்வம் எது என்பது அவருக்குத் தெரியவில்லை. மாரியம்மன், ஐயனார் போன்ற தொல் பழம் கிராமியத் தெய்வமாக இருக்குமோ என்றால் அதுவும் இல்லை. அதை வேதநாயகன் என்று அம்மையார் குறிப்பிடுகிறார். அவர் அறிந்தவரை வேதத்தில் சுடுகாட்டில் நடனமாடும் தெய்வம் எதுவும் இல்லை. அதைப்பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வர வர மிகுந்து வந்தது.
அறிவானும் தானே அறிவிப்பான் தானே என்று அம்மையார் கூறுவது போல, அறிய வேண்டும் என்ற ஆர்வத்தை மனதில் ஏற்படுத்திய இறைவனே அறிவிப்பானாகவும் வந்து உபதேசம் செய்வார் என்று வளவன் நம்பினார். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை.
 
6 லகுலீசர்

நமஸ்தே ருத்ர மன்யவ உதோத இஷவே நம:
நமஸ்தே அஸ்து தன்வனே பாஹுப்யாம் உத தே நம:
-ஸ்ரீருத்ரம்
ருத்திரனின் கோபத்துக்கு வணக்கம், அவரது அம்புக்கும், வில்லுக்கும் கைகளுக்கும் வணக்கம்.

புலவர் பரிசு பெற்றுக் கொண்டு போன எட்டாம் நாள் அரசவைக்கு ஒரு வடதேசப் பிராமணர் வந்தார். அவரது தோற்றமே வித்தியாசமானதாக இருந்தது. சோழியர்களைப் போல் அல்லாமல் அவரது உடல் நல்ல சிவந்த நிறமாக இருந்தது. சோழநாட்டில் பிராமணரும் பிறரும் குடுமியை முன்பக்கமாக நெற்றிக்கு மேல் அலங்காரமாக இருக்கும்படி முடிந்துகொள்வது வழக்கம். இவரோ தலையை முன்பக்கம் மழித்து, குடுமியைப் பின்பக்கம் முடிந்துகொண்டிருந்தார். சோழியர்களின் நெற்றியை அலங்கரித்தது ‘ப’ வடிவச் சந்தனக் கோடு. இவரோ சாம்பலைக் குழைத்து படுக்கைவாட்டில் மூன்று கோடுகளாக அணிந்திருந்தார். சோழியர்கள் வேட்டியைத் தட்டாடையாக அணிவது வழக்கம். இவர் ஒரு நீண்ட வேட்டியின் முனைகளை விசிறி மடிப்பாக மடித்து முன்புறமும் பின்புறமும் சொருகியிருந்தார்.

அரசர் அவரை வரவேற்று இருக்கையில் அமரச் செய்து, “எங்கிருந்து வருகிறீர்கள்? இங்கு வந்த நோக்கம் என்ன?” என்று விசாரித்தார். வந்தவர் பேசத் தொடங்கினார்.
“நான் அவந்தி நாட்டிலிருந்து வருகிறேன். எங்கள் பேரரசர் நரசிம்மகுப்தர் பாடலிபுத்திரத்தில் உள்ளார். அவந்தியின் தலைநகரான உஜ்ஜயினியில் எங்கள் சிற்றரசர் அக்னிகுப்தர் ஆட்சி செய்கிறார். பர்த்ருஹரி, காளிதாஸர் போன்ற பல புகழ்பெற்ற கவிஞர்களும் ப்ரம்மகுப்தர், பாஸ்கராசார்யர் போன்ற கணித அறிஞர்களும் தோன்றிய பூமி உஜ்ஜயினி. அங்கே சில காலமாக செல்வாக்குடன் வளர்ந்து வரும் ஒரு சமயத்தைப் பற்றித் தங்களுக்குத் தெரிவிக்கவே வந்தேன்” என்றார். அரசர் காது கொடுத்துக் கவனமாகக் கேட்டார்.

“உஜ்ஜயினிக்கு தென்மேற்கில் நர்மதை நதிக்கு வடக்கில் காயாவரோகணம் என்னும் ஒரு சிறு நகரம் உள்ளது. அதன் பெயருக்குக் காரணமானவர் ஒரு மகான். யுவா சர்மா என்ற பெயர் கொண்ட அவர் 16 வயதாக இருக்கும்போது மரத்திலிருந்து தவறி விழுந்தார். நீண்ட நேரம் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்ததால் அவர் இறந்து விட்டார் என்று எண்ணி அவரைச் சுடுகாட்டுக்குத் தூக்கிச் சென்று சிதையில் கிடத்தித் தீ வைத்துவிட்டு வந்து விட்டனர்.

உண்மையில் அவர் இறக்கவில்லை. சூடு பட்டதும் அவருக்குப் பிரக்ஞை வந்தது. கை கால்களை உதறிக்கொண்டு சிதையிலிருந்து வெளிவந்தார். தீ நேரடியாகப் பட்டதால் நெஞ்சுப் பகுதி மட்டும் கறுத்துவிட்டது. மற்றபடி அவருக்கு உடலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தான் எங்கிருக்கிறோம் என்று உணரச் சிறிது காலம் பிடித்தது. தான் இறந்துவிட்டதாக எண்ணி உறவினர்கள் இவ்வாறு செய்திருக்கிறார்கள் என்பதை அறிந்தார். தான் இறக்கவில்லை என்று அறிந்தால் அவர்கள் மகிழ்வார்கள் என்று எண்ணி வீடு நோக்கி நடந்தார். நரிகள் கூட்டமாக அவரைச் சூழ்ந்து கொண்டு வேட்டையாடத் துடித்தன. அவற்றை விரட்டுவதற்காக அங்கு கிடந்த பாடையின் மூங்கிலைக் கையில் எடுத்துக் கொண்டார். சிதையில் வைக்கும்போது உடலிலிருந்து ஆடையை அகற்றிவிடுவது வழக்கம். எனவே அவர் நிர்வாணமாகவே நடந்தார். அவரை ஊர் எல்லையில் கண்ட உடனேயே எல்லோரும் யுவா சர்மாவின் ஆவிதான் பேய் வடிவில் வந்துள்ளது எனப் பயந்து ஓடத் தொடங்கினார்கள். தன் வீட்டு வாசலில் நின்று கூப்பிட்டார். உள்ளிருந்து எவரும் வெளிவரவில்லை. இவருக்கோ பசி. உணவிடுங்கள் அம்மா என்று கூவிக் கொண்டே தெருத்தெருவாக அலைந்தார். எவரும் கதவு திறக்கவில்லை. நம் கதி இப்படியா ஆகவேண்டும் என்று நொந்துகொண்டு மீண்டும் சுடுகாட்டிற்கே போனார். பசி மிக வாட்டியது. இங்கு கிடைக்கும் இலை எதையாவது தின்போம். பசி தீரலாம். விஷச் செடியாக இருந்தாலும் நல்லதுதான். உண்மையாகவே உயிர் போய் விடும் என்று தீர்மானித்து அங்கிருந்த ஊமத்தைச் செடியின் இலைகளைப் பறித்து வயிறு கொண்ட மட்டும் தின்றார். சற்று நேரத்தில் அவருக்குக் கனவா, மயக்கமா, உறக்கமா என்று புரியாத நிலை ஏற்பட்டது.

அந்நிலையில் அவருக்கு ஒரு மானதக் காட்சி தோன்றியது. ஒரு பெரிய மலை. அதன் உச்சியில் பனி படர்ந்திருக்கிறது. அதன் கீழ்ப் பகுதிகளில் அடர்ந்த காடு. அழகாகவும் காணப்படுகிறது, அச்சம் தருவதாகவும் இருக்கிறது. அங்கே ஒரு ஆறு பெருக்கெடுத்துக் கீழ்நோக்கி இறங்குகிறது. சற்று நேரத்தில் அந்த மலை ஒரு மனித உருவாக மாறுகிறது. மலை உச்சி தெரிந்த இடத்தில் பிறைச் சந்திரன் தெரிகிறது. காடு அவரது சடையாக மாறுகிறது. அந்த ஆற்று நீர் அவரது சடை மேல் கொட்டிக் கொண்டிருக்கிறது. அவருடைய இடப்பக்கம் பெண் உருவமாக இருக்கிறது. அவரைச் சுற்றிப் பல விதமான மிருகங்கள் நிற்கின்றன. அவரது கையில் வில் கத்தி போன்ற பல ஆயுதங்கள். அச்சம் தரும் இந்தத் தெய்வம் யார் என்று இந்த இளைஞர் திகைத்து நின்றபோது அவர் கற்ற வேதம் நினைவுக்கு வந்தது. ஆம், இது ருத்ரன்தான். உடனே அவர் நமஸ்தே ருத்ர மன்யவ உதோத இஷவே நம: என்று ருத்ர மந்திரத்தைச் சொல்லத் தொடங்கினார். காட்சி மறைந்தது. அவருக்குச் சுய நினைவு வந்தது. அது முதல் அவருக்குப் பசி உணர்வே அற்றுப் போய் விட்டது. ஊர்ப் பக்கம் போக வேண்டிய தேவையும் இல்லாமல் போயிற்று. கள்ளிச் செடிகள் சூழ்ந்த சுடுகாட்டிலேயே ருத்ரத்தைச் சொல்லிக் கொண்டு நாட்களைக் கழிக்கலானார்.

மக்கள் அவரை மறந்துவிட்டார்கள். நீண்ட காலம் கழித்து ஒரு நாள் அந்த ஊரில் ஒரு பெண்மணி இறந்துவிட்டார். அவரைத் தூக்கிக் கொண்டு ஒரு கூட்டம் சுடுகாட்டுக்கு வந்தது. மேய்ச்சலுக்கு வந்த மாடுகள் வெய்யில் நேரத்தில் ஒரு ஆலமரத்தடியில் படுத்து அசை போட்டுக் கொண்டிருந்தன. அவற்றின் நடுவே ஒரு கல்லின் மேல் யுவா சர்மா ஆடையில்லாமல் உட்கார்ந்திருந்தார். அவரைப் பார்த்த உடன் தூக்கி வந்தவர்களும் பிறரும் பாடையைத் தொப்பென்று கீழே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். இறந்தவரின் மகன் மட்டும் தீச்சட்டியுடன் செய்வதறியாது திகைத்தும் பயத்தால் நடுங்கிக் கொண்டும் நின்றான்.
யுவா சர்மா அவனைப் பார்த்து, “பயப்படாதே, நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன்” என்று கூறினார். அவன் சற்றே தைரியமடைந்து கீழே கிடந்த தன் தாயின் உடலைப் பார்த்தான். யுவா சர்மா அருகில் சென்று அந்தப் பிரேதத்தைத் தூக்கிச் சிதையில் வைத்து
உரிய மந்திரங்களைக் கூறி, அவனைக் கொண்டு எரி மூட்டச் செய்தார். தன் கடமை நிறைவேறியதில் திருப்தி கொண்ட அவன் அவரை நன்றியுடன் வணங்கினான்.
அவன் ஊருக்குள் சென்று சுடுகாட்டில் நடந்ததை எல்லாம் விவரித்தான். ஊர் மக்கள் தைரியம் அடைந்து ஒவ்வொருவராகச் சுடுகாட்டுக்கு வந்து இவரைப் பார்த்துப் பேசத் தொடங்கினர். இவரும் தனக்கு ஏற்பட்ட மானதக் காட்சியையும் பசியில்லாமல் போனதையும் வந்தவர்களிடம் தெரிவித்தார். ருத்ரனே இவருடைய இறந்துபோன உடலில் வந்து இறங்கியதாக ஊர் மக்கள் நம்பினர். இந்த நிகழ்வை காயாவரோகணம் (உடலில் இறங்குதல்) என்று கொண்டாடினர். அதனால் அந்த ஊரின் பெயரே காயாவரோகணம் ஆயிற்று. அது சுருங்கி இப்பொழுது கார்வான் என்று அழைக்கப்படுகிறது.

யுவா சர்மாவை ஊருக்குள் அழைக்க எவரும் துணியவில்லை. அவரைத் தெய்வமாகக் கருதி சுடுகாட்டுக்கு வந்து வணங்கினர். கையில் கோல் வைத்திருந்ததால் அவரை லகுலீசர் என்று அழைத்தனர். அவரது பழைய பெயர் மறைந்து விட்டது.
தனக்குக் காட்சி தந்த பசுபதியை ருத்ரம் முதலான வேத மந்திரங்களைக் கூறி வழிபடுமாறு அவர் உபதேசித்தார். அவரது போதனைகள் பாசுபதம் எனப்பட்டன. பலர் அவருக்குச் சீடர்கள் ஆயினர். அவர்கள் பாரதத்தின் பல பகுதிகளுக்கும் சென்று அவரது போதனைகளைப் பரப்பினர். தமிழ்நாட்டுக்குக் கூடச் சிலர் வந்திருக்கிறார்கள்.

இதெல்லாம் நடந்து இருநூறு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. காலப்போக்கில் அவரது போதனைகள் உருமாறின. லகுலீசர் நெஞ்சு கறுப்பாக இருப்பதை நினைவூட்டும் வகையில் சிலர் தங்கள் முகங்களில் கரி பூசிக் கொண்டு திரிந்தனர். அவர்கள் காலாமுகர்கள் என அழைக்கப்பட்டனர். காபாலிகர் எனப்பட்ட வேறு சிலர் உடம்பெல்லாம் சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிக் கொண்டு மண்டை ஓடுகளை மாலையாக அணிந்து திரிந்தனர். இதனால் லகுலீசரின் புகழுக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது.”

வடதேச பிராமணர் நிறுத்தினார். அரசருக்குப் பனி மூட்டம் கலைந்து சூரிய உதயம் ஆனாற்போல இதுவரை புரியாத பல விஷயங்கள் புலப்பட்டன. புறநானூறு முதலான தமிழ் நூல்களில் நீல மணி மிடற்றன், கள்ளிக் காட்டில் அமர்ந்திருப்பவர், ஆலமர் செல்வன், விடையேறி என்று குறிப்பிடப்படும் தெய்வம் லகுலீசரின் சீடர்கள் பரப்பிய தெய்வமாகத்தான் இருக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. லகுலீசர் 16வது வயதில் யமன் பிடியிலிருந்து மீண்டது இங்கு மார்க்கண்டேயன் கதையாக உருமாறி இருக்கவேண்டும் என நினைத்தார். அதுவே இறைவன் யமனைக் காலால் உதைத்தாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. லகுலீசர் உணவு தேடி ஒரு நாள் ஆடையில்லாமல் பிச்சை எடுக்கச் சென்ற நிகழ்ச்சியை இறைவன் பலி ஏற்றுத் திரிவதாக அம்மையார் குறிப்பிட்டுள்ளார். லகுலீசர் நெஞ்சில் தீ சுட்டுக் கறுத்தது நஞ்சு உண்டு அவர் கழுத்துக் கருமை அடைந்ததாகக் கூறப்பட்டுள்ளது. அம்மையாருக்கு உபதேசம் செய்தவர் லகுலீச சம்பிரதாயத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். செவி வழிச் செய்தியாகப் பரவும்போது கால தேச இடைவெளி காரணமாக இவை சில சில மாற்றங்களை அடைந்துள்ளன என்று நினைத்தார் அரசர்.
 
Last edited:
7. சிவன் எனும் நாமம்

தனக்கே அடியனாய்த் தன்னடைந்து வாழும்
எனக்கே அருளாவாறு என்கொல்- மனக்கினிய
சீராளன் கங்கை மணவாளன் செம்மேனிப்
பேராளன் வானோர் பிரான்
-அம்மையார்

வடமர் மீண்டும் பேசத் தொடங்கினார். “லகுலீசருக்கு குசிகர், கர்க்கர், மித்ரர், கௌருசேயர் என்று நான்கு சீடர்கள் உண்டு. அவர்களுடைய சிஷ்ய பரம்பரை பல்கிப் பெருகியது. இவர்கள் மூலமாகப் பாரதம் முழுவதும் பல பகுதிகளிலும் லகுலீசம் பரவியது. காலப்போக்கில் அது காலாமுகம், காபாலிகம் என்று பலவகையாக உருமாறிவிட்டது. அவரது உண்மையான சீடர்கள் கார்வானைச் சுற்றிய பகுதிகளில் மட்டும்தான் உள்ளனர். லகுலீசரது போதனைகள் பரவிய பின் எங்கள் நாட்டில் சமணம் முற்றிலும் ஒழிந்துவிட்டது. பாரதம் முழுவதும் பாசுபதத்தைப் பரப்ப வேண்டும் என்பதற்காக எங்கள் நாட்டிலிருந்து பலரும் இப்படிப் பல தேசங்களுக்கும் செல்கிறோம். என்னைச் சோழ தேசத்துக்குச் செல்லும்படி எங்கள் குரு அனுப்பினார். அவரது ஆணைப்படி இங்கு வந்துள்ளேன்” என்றார்.

“உங்கள் வழிபடு தெய்வம் பற்றிச் சொல்லுங்கள்” என்று அரசர் கேட்டார்.

அவர் விடையளித்தார். “எங்களுக்கு ருத்ரன்தான் தெய்வம். யஜுர் வேதத்தில் உள்ள ருத்ரம்தான் லகுலீசர் எங்களுக்கு உபதேசித்த பிரார்த்தனை மந்திரம். இதில் இறைவன் எல்லாமாக வியாபித்து நிற்பது கூறப்பட்டுள்ளது. நமோநம என்று முன்னூறு முறை வணங்கப்படும் தெய்வம் நான்கு வேதங்களிலும் ருத்ரன் அன்றி வேறு இல்லை. பதிநான்கு முறைகள் அவர் மங்களகரமானவர் என்ற பொருளுள்ள சிவ என்ற அடைமொழியால் சிறப்பிக்கப்படுகிறார். இந்தச் சிறப்பும் வேறு எந்த வேத தெய்வத்துக்கும் இல்லை. ருத்ரத்தில் ருத்ரனுக்குப் பல விதமான பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் நமச்சிவாய என்ற மந்திரத்தை நாங்கள் ஜபம் செய்யப் பயன்படுத்துகிறோம். ருத்ரன் என்றும் பசுபதி என்றும் சிவன் என்றும் அழைக்கப்படுகிற அவரே வேதத்தின் பிரதான தெய்வம் என்பது லகுலீசரது போதனை. அந்தச் சிவனே லகுலீசராக அவதரித்தார். அவரை நாங்கள் வணங்குகிறோம். அதனால் எங்கள் சமயம் லகுலீசம் எனவும் பாசுபதம் எனவும் சைவம் எனவும் அழைக்கப்படுகிறது.”

“சிவ என்ற பெயர் நன்றாக இருக்கிறது. வடமொழியில் அது மங்களகரமானவர் என்று பொருள் படுகிறது. தமிழில் சிவந்த நிறமுள்ளவர் என்பதைக் குறிப்பிடுகிறது. இறைவனைச் செம்மேனிப் பேராளன் என்று அம்மையார் குறிப்பிடுகிறார். இரு மொழியிலும் உயர்ந்த பொருள் உள்ள அச்சொல் கொண்டு அழைப்பதையே நான் விரும்புகிறேன். சரி, நீங்கள் சிவனை எப்படி வழிபடுகிறீர்கள்? எங்கள் நாட்டில் சுதையால் விக்கிரகம் அமைத்து வழிபடுவது போல் ஏதேனும் விக்கிரகம் வைத்து வணங்குகிறீர்களா?”

“எங்களைப் பொறுத்தவரை குரு வேறு, தெய்வம் வேறு அல்ல. லகுலீசரே ருத்ரன். அவர் சிவனுடன் இரண்டறக் கலந்திருப்பதாக நம்புகிறோம். அதைச் சித்தரிக்கும் வகையில் ஒரு வட்ட வடிவத் தூணின் மேல் பகுதியைக் கிண்ணம் கவிழ்த்தாற் போல செதுக்கி, நடுப்பகுதியில் லகுலீசரின் உருவத்தைச் செதுக்குகிறோம். விளிம்பு இல்லாத தூணின் பகுதியாக குருவின் உருவம் இருப்பது ஆதி அந்தம் இல்லாத இறைவனுடன் அவர் கலந்திருப்பதைக் காட்டுகிறது. இந்த வடிவத்தை நாங்கள் லிங்கம் என்கிறோம், அதற்கு அடையாளம் என்று பொருள். கர்க்கர் பரம்பரையில் வந்த நாங்கள் குருவை பத்மாசனத்தில் உட்கார்ந்த நிலையில் காட்டுகிறோம். மற்ற பரம்பரையில் வந்தவர்கள் குருவை நின்ற நிலையிலோ, ஒற்றைக் காலைத் தொங்கவிட்டுக் கல்மேல் அமர்ந்த நிலையிலோ சித்தரித்து லிங்கம் அமைக்கிறார்கள். லகுலீசர் மட்டுமன்றி அவரது சீடப் பரம்பரையில் வந்த குருமார்களின் உருவம் பொறித்த லிங்கங்களும் உண்டு. தூண் பின்புலம் இல்லாமல் லகுலீசர் தனது நான்கு சீடர்களுக்கு உபதேசம் செய்யும் கோலத்தில் அமைந்த உருவங்களும் உள்ளன.
“வழிபாடு நடைபெறுவது சுடுகாட்டிலா அல்லது ஊருக்குள்ளா?”

“ஊருக்குள்தான்.”

“உங்கள் நெற்றியில் அணிந்திருப்பது சுடுகாட்டுச் சாம்பல் தானா?”

“இல்லை மன்னா, நாங்கள் தினசரி இரு வேளையும் அக்னி ஹோத்ரம் செய்பவர்கள். அதில் கிடைக்கும் சாம்பலை நீரில் குழைத்து அணிவோம்.”

மிகக் கவனமாகக் கேட்டார் அரசர். சென்ற வாரம் அவருக்கு ஏற்பட்ட உள்ளுணர்வு இப்பொழுது ஒரு வடிவம் எடுத்தது. ஏதோ தீர்மானத்திற்கு வந்தது போல அவர் முகம் பளிச்சிட்டது. அமைச்சரைப் பார்த்தார். ‘அமைச்சரே’ என்றார். அவர் பதிலுக்கு ‘மன்னா’ என்றார். இந்த ஒருவார்த்தைப் பரிமாற்றத்தில் ஒருவர் மற்றவரின் எண்ணங்களைப் புரிந்து கொண்டனர். இருவருமே மதியூகிகள். பேச்சுக்கு என்ன அவசியம்?

இப்பொழுது அமைச்சர் பேச ஆரம்பித்தார். “வேதியரே, நீங்கள் இந்த நாட்டிலேயே நிந்தரமாகத் தங்க முடியுமா?”

“மன்னிக்க வேண்டும் அமைச்சரே. எனக்கு வயதான தாய் தந்தையர் இருக்கின்றனர். நான் மூத்த மகன். அவர்கள் இருக்கும் வரை நான் அங்குதான் இருக்க வேண்டும்.”

“நீங்கள் ஊரை விட்டுக் கிளம்பி எவ்வளவு நாள் ஆகிறது?”

“ஆறு மாதம் ஆகிறது.”

“எந்த வழியாக வந்தீர்கள்?”

“சப்தபுர மலையைக் கடந்து தக்ஷிண பீடபூமி வழியாக வந்தேன். வழியில் பல ஆறுகள் காடுகள் இவற்றைக் கடந்து மைசூருக்கு வந்தபின் காவிரிக் கரையோடு நடந்து சோழ நாட்டை அடைந்தேன்.”

தான் அறிந்த உண்மையைப் பிறர்க்கு எடுத்துரைத்து எல்லோரும் நலம்பெற வேண்டும் என்னும் எண்ணம் அவர் உள்ளத்தில் எவ்வளவு வலுவாக இருந்தால் இத்தனை இடர்ப்பாடுகளையும் தாங்கிக் கொண்டு அவரைப் பயணம் செய்ய வைத்திருக்கும் என்று அரசர் வியந்தார்.

அமைச்சர் கேட்டார். “அடுத்து வேறு எங்கு போவதாக உத்தேசம்?”

“பாண்டிய மன்னனைப் பார்த்து விட்டு எங்கள் நாட்டுக்குத் திரும்ப வேண்டும்.”

“பாண்டிய நாட்டில் உங்களுக்கு வரவேற்பு இருக்காது. அங்கு அரசரே சமண சமயத்தவர். சரி, நர்மதை நதி மேற்குக் கடலில் தானே கலக்கிறது?”

“ஆம், அமைச்சரே.”

“அந்த இடத்தின் பெயர் என்ன?”

“பாருகச்சம். பரூச் என்றும் சொல்வார்கள். பார்கவ முனிவர் கச்சம் அதாவது ஆமை வடிவில் அங்கு வந்ததால் அந்தப் பெயர் ஏற்பட்டதாக ஐதிஹம்.”

“உங்கள் ஊரிலிருந்து பாருகச்சம் வரை படகில் செல்ல முடியுமா, வழியில் நீர்வீழ்ச்சிகள் எதுவும் இல்லையே?”

“படகில் செல்லலாம்.”

அரசரின் முகத்தைப் பார்த்துக் கொண்டே அமைச்சர் வேதியரிடம் சொன்னார். “இங்கேயே ஒரு மாதம் தங்குங்கள்.” அரசர் ஆமோதிப்பது போல் தலையை அசைத்தார். “நானும் உங்களுடன் வருகிறேன். படகிலேயே போய் விடலாம். ஒரே மாதத்தில் போய்விடலாம் என நினைக்கிறேன்.”

“படகிலா?”

“ஆம். இங்கே நாகைத் துறைமுகத்தில் ஏறிக் கன்னியாகுமரி, மங்களூர் வழியாக பாருகச்சத்தை அடைவோம். அங்கிருந்து நர்மதையில் படகைச் செலுத்திக் கார்வானில் இறங்குவோம்.”

“கார்வான் நதிக்கரையில் இல்லை. சினோர்தான் நதிக்கரைப் பட்டணம். அங்கிருந்து ஒரு நாள் நடையில் கார்வானை அடையலாம்.”

“மன்னா, இவருடன் சென்று வர அனுமதி வேண்டுகிறேன்.”

“நான் சொல்லாமலே என் மனதில் உள்ளதைச் சரியாகப் புரிந்து கொண்டீர்கள், பிரமராயரே. இத்தகைய அமைச்சர்களைப் பெற்ற நான் உண்மையில் பாக்கியசாலி. சரி, ஒரு படகை ஏற்பாடு செய்யுங்கள். துணைக்குச் சில காவலர்களை அழைத்துக் கொள்ளுங்கள். தேவையான உணவுப் பொருள்களை நிரப்புங்கள். தேவையான பொற்காசுகளை எடுத்துக் கொள்ளுங்கள். சென்று கார்வான் பிராமணர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பாருங்கள். அவந்தி அரசரைப் பார்த்து, அவர்களில் சிலரை இங்கு அனுப்ப முடியுமா என்று கேளுங்கள். வருவார்கள் என்றால் ஆங்கிரஸ பிரமராயரை அனுப்பி அவர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யலாம். என் மனதில் உள்ள லட்சியம் வர வர நெருங்கி வருவதை உணர்கிறேன். இறைவன் வழிகாட்டட்டும்.”

“சரி, மன்னா.”

“நீங்கள் வடதேசம் போவதற்கு முன் செய்ய வேண்டிய மற்றொரு வேலை உள்ளது.”

“சொல்லுங்கள் மன்னா.”

“அம்மையாரைப் போற்றுபவர்கள் எங்கெங்கு இருக்கிறார்கள் என்று கணக்கெடுக்கச் சொன்னனே, அது எந்த அளவில் இருக்கிறது?”

“எல்லா ஊர்களிலிருந்தும் தகவல் வந்து விட்டது மன்னா. ஏழு ஊர்களில் அம்மையார் நீண்ட நாட்கள் தங்கி இருக்கிறார். அங்கெல்லாம் அம்மையாரைப் போற்றும் மனிதர்கள் இன்றும் இருக்கிறார்கள்.”

“அந்த ஏழு ஊர்களுக்கும் அம்மையாரின் நினைவாக ஆலங்காடு என்று பெயர் மாற்ற ஏற்பாடு செய்யுங்கள்.”

“நம் தலைநகருக்கு மேற்கே அரைக் காத தூரத்திற்கும் குறைவாக ஒரு ஊர் உள்ளது. அதுதான் அன்று வந்த கவிராயரின் ஊர்.”

“அப்படியா, அந்த ஊர்தான் நமக்கு அம்மையாரைப் பற்றி அறிந்துகொள்ள வழிகாட்டியது. அதற்குத் தலை ஆலங்காடு என்று பெயரிடுங்கள்.”

“அந்த ஏழு ஊர்களில் வடக்குக் கோடியில் உள்ளது பழையனூர், அம்மையார் காலமான இடம். அது பல்லவர் வசம் உள்ளது.”

“பல்லவ மன்னன் சைவத்துக்குச் சாதகமாக இருப்பாரா என்பதை ஒற்றர் மூலம் அறிய ஏற்பாடு செய்யுங்கள். முதலில் நம் நாட்டில் உள்ள ஆறு ஆலங்காடுகளிலும் கோயில்கள் ஏற்படுத்த வேண்டும். அங்கு இந்தக் கார்வான் வேதியர் சொன்னபடி லிங்கங்கள் அமைத்து அதற்குத் தினசரி பூசை செய்வதற்கு ஏற்பாடு செய்யுங்கள். அங்கெல்லாம் அம்மையாரின் பாடல்கள் தினந்தோறும் ஓதப்பட வேண்டும்.”

“சரி, மன்னா. லிங்கம் அமைப்பதில்தான் ஒரு பிரச்சினை. கல்லில் உருவம் செதுக்கக் கூடியவர்கள் நம் சோழ தேசத்தில் இல்லை. இங்கே எல்லோரும் அம்மி கல்லுரல் செதுக்கும் கல் தச்சர்கள் தாம். இங்கு சுதை வேலை செய்யக் கூடியவர்கள் இருக்கிறார்கள். விண்ணகரங்களில் உள்ள திருமால் உருவங்கள் போல் சுதையில் செய்து விடலாமா?”

“சுதை விக்கிரகம் வேண்டாம். என்றும் உள்ள ஈசனுக்கு என்றும் நிலைக்கக் கூடிய கருங்கல்லில்தான் லிங்கம் அமைக்க வேண்டும். நம் கல் தச்சர்களைக் கொண்டு இரு முழ நீளமுள்ள வட்ட வடிவத் தூணை அமைக்கச் சொல்லுங்கள். இதில் ஒரு முழம் மண்ணில் புதைந்து இருக்கட்டும். அதன் மேற்புறம் குழவி போல அரைக்கோளமாக இருக்கட்டும்.

அன்றுந் திருவுருவங் காணாதே ஆட்பட்டேன்
இன்றுந் திருவுருவங் காண்கிலேன்- என்றுந்தான்
எவ்வுருவோ நும்பிரான் என்பார்கட்கு என்னுரைக்கேன்
எவ்வுருவோ நின்னுருவம் ஏது

என்று அம்மையார் இறைவனின் அருவத்தைக் குறிக்கிறார். படர்சடை, பொன் மலை போல் திருமேனி, தாமரை போல் அடி என்று உருவத் தோற்றத்தையும் குறிக்கிறார். நாம் அமைக்கும் லிங்கம் அருவத்தையும் உருவத்தையும் ஒருங்கே குறிப்பதாக இருக்கட்டும்.”

“சரி மன்னா.”

“இங்கு ஆரூரில் புற்று வழிபடப்படுகிறது. இனி அது சிவனுக்கு உரிய அடையாளமாக இருக்கட்டும். இங்கும் நாள் தோறும் அம்மையாரின் பாடல்கள் ஓதப்பட வேண்டும்.”

“சரி மன்னா.”

“அத்துடன் காழி, கடவூர், நாலூர், விற்குடி, வீழிமிழலை ஆகிய ஐந்து ஊர்களின் மயானங்களில் லிங்கம் நட்டுக் கோயில் கட்டிப் பூசை நடைபெற ஏற்பாடு செய்யுங்கள். இந்தப் பன்னிரண்டு கேந்திரங்களும் தமிழ்நாட்டின் தலை விதியை மாற்றப் போகின்றன. சோழ வம்சம் தன் இழந்த பெருமையை மீண்டும் அடையப் போகிறது.”

கோயில் கட்டுவதற்கும் சோழவம்சம் பெருமை அடைவதற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் என்று புரியாமல் விழித்தார் வடம வேதியர். அது அரசருக்கும் அமைச்சருக்கும்தான் தெரியும் .

இப்பொழுது அமைச்சர் பேசினார், “மன்னிக்க வேண்டும் மன்னா. சமயத்துறையில் இவ்வளவு விரைவான மாற்றங்களை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பதைக் கொஞ்சம் யோசிக்க வேண்டும். அவரவர்க்கு அவரவர் நம்பிக்கையே உண்மையாகத் தோன்றும். வெளிதேசக் கடவுளை அவர்கள் மேல் திணித்தால் அவர்கள் ஏற்க மறுக்கக் கூடும்.”

“கவலை வேண்டாம், அமைச்சரே. நாம் செய்வது மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத பெரும் மாற்றங்கள் அல்ல. பழம் தமிழ் இலக்கியங்களில் இந்தத் தெய்வத்தைப் பற்றிய குறிப்புகள் இருப்பதால் இது வெளியிலிருந்து திணிக்கப்பட்ட தெய்வமாக இராது. மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

“மேலும் நான் முன் சொன்ன காழி முதலான ஊர்களில் மயானத்தில் சுடலை மாடன் வழிபாடு நடப்பது உண்மை தானே. சுடலை மாடனின் உருவம் மேலே குறுகிச் செல்லும் ஒரு செவ்வகமும் அதன்மேல் ஒரு அரை வட்டமுமாகச் செங்கல்லால் அமைக்கப்படுகிறது. நாம் சொல்லும் சிவலிங்க வடிவம் வட்டம் குறுகி அரைக் கோளத்தில் முடிகிறது. அதிலிருந்து சிறிதளவுதான் மாறுகிறது.”

அரசர் தரையில் படம் வரைந்து காண்பித்தார்.


“மாடன் பொது இல்லைச் சுற்றிய பகுதிகளில் ஆலமரம் காணப்படும் நிலையை பரவலாகக் காணமுடிகிறது. அம்மையார் கூறும் தெய்வமும் ஆலங்காட்டுத் தெய்வம்தான்.
அம்மையார் நமது நாட்டில் பிறந்தவர். நம் மொழியில் பாடல்களை இயற்றியவர். சமணம் மக்களுடைய போர்க்குணத்தை நசுக்கி வீரம் இல்லாமல் செய்து விட்டது. இவ்வுலக வாழ்வில் உற்சாகம் இன்மையை ஏற்படுத்திக் கலைகளில் நாட்டத்தைக் குறைத்து விட்டது. ஆனால் அதிருஷ்டவசமாக, அது மக்களின் இலக்கிய நாட்டத்தைக் குறைக்கவில்லை. இன்றும் சங்க இலக்கியங்களைப் படிப்பவர்களும் போதிப்பவர்களும் நம் நாட்டில் இருக்கிறார்கள். அவர்களிடையே அம்மையாரின் பாடல்கள் பரவ வழி செய்தால் போதும். இவ்வளவு உயர்ந்த இலக்கியச் சுவை கொண்ட நூல் அண்மைக் காலத்தில் தோன்றியதில்லை என்பதை ஒப்புக் கொள்வார்கள், பரமதத்தன் இறை நம்பிக்கை இல்லாதவன், ஆனால் பேய் பற்றிய கதைகளை நம்பியவன். அதனால் மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தி வெளிப்பட்ட போது அது பேயின் வேலையாகத்தான் இருக்க வேண்டும் எனக் கருதினான். அம்மையாரின் பாடல்களைப் படித்தவர்கள், இவ்வளவு அற்புதமான நூலைப் படைத்தவர் பேய் மகளாக இருக்க முடியாது என்பதை உணர்வர். அவருடைய ஆழ்ந்த இறையன்பு படிப்பவரைத் தொற்றிக் கொள்ளும்.”

அமைச்சர் அரசரின் மதியூகத்தை வியந்தார். “மக்களின் நாடியைப் பிடித்துப் பார்த்து அவர்களுக்கு ஏற்ற வகையில் தொலைநோக்குத் திட்டம் தீட்டி, உடனடியாக முடிவு எடுக்கும் திறமை இருப்பதால்தான் அவர் சிறந்த அரசராக இருக்கிறார். அரசருக்குச் செய்தி சேகரித்துக் கொடுப்பதும், அவர் கூறும் செய்தியை மக்களிடம் சேர்ப்பிப்பதும் ஆன தகவல் களஞ்சியமாக மட்டுமே நான் இருப்பதால் நான் அமைச்சராக அவருக்குக் கீழ் நிலையில் இருக்கிறேன்” என்று நினைத்துக் கொண்டார்.
 
8 -காழித் துறைமுகம்

அடலே றமருங் கொடியண்ணல்
மடலார் குழலா ளொடுமன்னுங்
கடலார் புடைசூழ் தருகாழி
தொடர்வா ரவர்தூ நெறியாரே
-சம்பந்தர்

பரூச்சிலிருந்து புறப்பட்ட படகுகள் பத்து நாட்களில் மங்களூர்த் துறைமுகத்தை அடைந்தன. சரிபாதி தூரம் வந்துவிட்டோம். இதே வேகத்தில் போனால் இன்னும் பத்து நாட்களில் காழியை அடைந்து விடலாம் என்று ஆங்கிரஸ பிரமராயர் கணக்கிட்டார்.

எல்லாம் மனிதக் கணக்கின்படியா நடக்கிறது? மங்களூரைத் தாண்டியதும் தென்மேற்குப் பருவக்காற்று துங்கியது. பலத்த காற்றில் படகு பின்னோக்கி நகர ஆரம்பித்தது. அவ்வப்போது மழையும் பெய்தது. பாய்களைச் சுருட்டி வைத்துவிட்டு மாலுமிகள் கோலை ஊன்றிப் படகைத் தள்ளத் தொடங்கினர். பயணிகளும் துடுப்புப் போட்டனர். பயணம் மெதுவாகச் சென்றது.

அடுத்த பத்து நாட்களில் முன் சென்றதில் பாதி தூரம்தான் செல்ல முடிந்தது. கன்னியாகுமரியை அடைந்தார்கள். இங்கு மழை விடாமல் வலுவாகப் பெய்யத் தொடங்கியது. படகில் நிரம்பும் தண்ணீரை அனைவரும் சேர்ந்து இறைத்துக் கொண்டு, நனைந்து கொண்டே படகில் பயணம் செய்தனர். நல்ல வேளையாக உணவுப் பொருட்கள் மரப்பெட்டிகளுக்குள் இருந்தபடியால் அவை நனையாமல் தப்பின. ஆனால் கரையில் இறங்கி உணவு சமைப்பதற்கு வழி இல்லை. இறங்கும் இடத்தில் ஆங்காங்கு கிடைக்கும் எரிதுரும்புகளைச் சேகரித்துத்தான் அடுப்பு மூட்டுவது வழக்கம். கரை நெடுகிலும் சவுக்குத் தோப்புகள் இருந்தன. இது வரை பிரச்சினை ஏற்படவில்லை. இப்போது இறங்கின இடத்தில் சத்தைகள் எல்லாம் நனைந்து கிடந்தன. அரணிக்கட்டையில் உண்டாகும் நெருப்பைப் பற்ற வைக்கப் பயன்படாது.

இந்த வருடம் பருவக்காற்று நான்கு நாட்கள் முன்னதாகத் துவங்கிவிட்டது. நாம் ஒரு வாரம் முன்னதாகப் புறப்பட்டிருக்க வேண்டும் என்று ஆங்கிரஸ பிரமராயர் நினைத்துக் கொண்டார். நம் செயலில் என்ன இருக்கிறது? எல்லாம் இறைவன் சித்தம் என்று தேர்ந்தார். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மனிதர்களுக்கு உணவளிக்கும் பொறுப்பைச் சுமந்திருந்த அவர் மாற்று வழிகளைப் பற்றிச் சிந்தித்தார்.

ஆண்களில் சிலரை அழைத்துக் கொண்டு ஊருக்குள் சென்றார். பொற்காசுகளைக் கொடுத்துப் பழங்கள், காய்கறிகள், தேங்காய்கள் எவ்வளவு கிடைக்குமோ எல்லாவற்றையும் வாங்கிச் சுமந்து கொண்டு எல்லோரும் படகுத் துறைக்கு வந்தனர். அவற்றை உண்டு அன்றைய பொழுதைப் போக்கினர்.

ராமேசுவரம் வந்தார்கள். அங்கு மழை பெய்திருக்கவில்லை. காற்றும் இல்லை. கிழக்குக் கரைக்கு வந்து விட்டோம். இனி பயமில்லை. நல்ல காரியத்துக்கு நானூறு விக்கினங்கள் என்று சொல்வார்கள். இறைவனை நாம் மறந்துவிடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவன் இவ்வாறு நம்மைச் சோதனை செய்தான் போலும் என்று சமாதானம் செய்துகொண்டார். குமரியை விட்டுப் புறப்பட்ட ஐந்தாம் நாள் மறைக்காடு துறைமுகத்தை அடைந்தார்கள்.

இறைவனின் சோதனை தொடர்ந்தது. இரண்டு நாட்கள் இரவும் பகலும் மழையில் நனைந்து கொண்டே வந்ததால் அனைவருக்கும் சளி பிடித்தது. எல்லோரும் இருமிக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலானோருக்குக் காய்ச்சலும் வந்து விட்டது. மாலுமிகளும் சோர்ந்து போய்விட்டார்கள். மறைக்காடு துறைமுகத்திலோ அல்லது நாகையிலோ இறங்கிவிடலாம் என்று ஆங்கிரஸ பிரமராயர் முதலில் நினைத்தார். ஆனால் அரச ஆணை காழித் துறைமுகத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டும் என்பது. காழியில் அரசருக்கு மட்டுமே தெரிந்த ஏதோ முக்கியத்துவம் இருக்கிறது, அதை மீறக்கூடாது என்று எண்ணினார். அவருக்கும் உடல்நிலை சரியில்லை என்றாலும் சமாளித்துக்கொண்டு எல்லோரையும் உற்சாகப்படுத்தினார். மாலுமிகள் இருக்கின்ற சக்தியை எல்லாம் திரட்டிக் காழித் துறைமுகத்தில் இருந்த உப்பனாற்றில் பயணித்து ஓரிடத்தில் படகை நிறுத்தினார்கள்.
வடமர்களும் நயினார்களும் மாலுமிகளும் கரையில் இறங்கிப் படுத்துக் கொண்டார்கள். ஆங்கிரஸர் மட்டும் தன் உடல் நோவைப் பொருட்படுத்தாது நடந்து சென்று பஞ்சாயத்துத் தலைவரிடம் போய்த் தெரிவித்தார். சற்று நேரத்தில் அங்கு உள்ளூர் மக்கள் பெரும் திரளாகக் கூடிவிட்டார்கள். அவர்கள் வந்தவர்களுக்குத் தேவையான உணவு சமைத்துக் கொடுத்தார்கள். அந்த உணவும், அவர்களின் அன்பான உபசரிப்பும், இடைவிடாத ஒரு மாதப் பயணத்துக்குப் பின் கிடைத்த ஓய்வும் அவர்களது உடல் நலத்தை மீட்டுத் தந்தன.
மறைக்காடு வந்தவுடன் ஒரு குதிரை வீரன் மூலமாகச் செய்தி அனுப்பியிருந்ததால் மறுநாள் அரசர் அங்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே அரசர் செந்தீ வளவன் அமைச்சர்கள் குதிரை வீரர்கள் புடைசூழ அங்கு வந்தார். அவரைக் கண்டதும் பிராமணர்கள் ‘ஜய விஜயீ பவ’ என்று வாழ்த்தினர்.

மூவாயிரம் வடமர்கள் ஒருங்கே நின்ற காட்சி அரசரின் மனத்தை நெகிழவைத்தது. நாட்டின் நலனுக்காகத் தான் போட்டிருக்கும் திட்டம் சரிவர நிறைவேறி வருவதற்காக அவர் இறைவனுக்கு நன்றி தெரிவித்தார். நயினார்களைக் கொண்டு அங்கு புதிதாக அமைக்கப்பட்டிருந்த லிங்கத்துக்குப் பால் அபிஷேகம் செய்யச் செய்தார். அப்பொழுது ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் எல்லோரும் சேர்ந்து ஒரே குரலில் ருத்ரத்தைப் பாராயணம் செய்தனர். சரியான ஸ்வரத்தோடு வந்த அப்பெருங்கோஷம் விண்ணைப் பிளந்தது. கேட்டுக் கொண்டிருந்த அரசருக்கும் மற்ற உள்ளூர் மக்களுக்கும் புல்லரித்தது.
அரசர் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்தார். அந்த லிங்கத்தின் முன் விழுந்து வணங்கினார். மந்திரி பிரதானிகள் வியப்பில் வாயடைத்து நின்றனர். அரசர் தரையில் விழுந்து வணங்கிய காட்சி இதுவரையில் அவர்கள் கண்டிராத, கேட்டிராத ஒரு நிகழ்ச்சி.
எழுந்திருந்த அரசர் பேசத் தொடங்கினார். “வடமர்களைச் சோழநாடு வரவேற்கிறது. நீங்கள் அனைவரும் வீடு, வாசல், சொந்த பந்தம், பிறந்த மண் எல்லாவற்றையும் துறந்து என் வேண்டுகோளை ஏற்று இங்கு வந்ததற்கு நானும் இந்த நாடும் நன்றிக் கடன் பட்டிருக்கிறோம். உங்களில் ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு கிராமத்தில் குடி அமர்த்தப்படும். அங்கு உங்களுக்கு ஒரு வீடு கட்டிக் கொடுக்கப்படும். அங்கெல்லாம் ஒரு கோயிலும் கட்டப்படும். அங்கு லிங்கப் பெருமானைப் பூசை செய்ய உள்ளூர் மனிதர் ஒருவர் நியமிக்கப்படுவார். உங்கள் வேலை அங்கு உட்கார்ந்து வேதம் ஓதுதலும், மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதும் மட்டுமே. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு வேலி நிலம் இறையிலி ஆக்கப்படும். அதாவது அதற்கு வரி அரசு அதிகாரிகளிடம் கட்ட வேண்டியதில்லை. அந்த அளவு தானியம் உங்களுக்கு மானியமாக அளிக்கப்படும். மக்களிடம் பரவியுள்ள நாத்திகத்தைப் போக்கி நல்வழிப்படுத்தும் பொறுப்பை உங்களிடம் ஒப்படைத்துள்ளேன்.

“இன்று நீங்கள் எண்ணூறு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்திருக்கிறீர்கள். நீங்கள் தலைமுறை தலைமுறையாக இங்கு வாழலாம். இந்த எண்ணூறு எட்டாயிரமாக எட்டு லட்சமாகப் பெருகட்டும். அத்தனை பேரும் சோழநாட்டு மக்களாகவே கருதப்படுவீர்கள். உங்களில் வயதில் மூத்த தலைவர்களைக் கொண்ட நூறு குடும்பங்கள் இங்கேயே காழியிலேயே தங்க வைக்கப்படுவீர்கள். முன்னூறு குடும்பங்கள் குடந்தையைத் தலைமையிடமாகக் கொண்டு அருகிலுள்ள கிராமங்களில் குடியமர்த்தப்படுவீர்கள். மற்றொரு முன்னூறு குடும்பங்கள் படகில் அழைத்துச் செல்லப்பட்டு நாகையைத் தலைமையிடமாகக் கொண்டு பக்கத்திலுள்ள கிராமங்களில் குடியமர்த்தப்படுவீர்கள். மீதம் உள்ள நூறு குடும்பங்கள் காஞ்சியில் தங்கவைக்கப்படுவீர்கள். குடந்தை, நாகை, காஞ்சி ஆகிய மூன்று இடங்களிலும் உள்ள கோவில்கள் உங்கள் தாய்நாட்டை நினைவூட்டும் வகையில் காயாவரோகணம் என்று பெயரிடப்படும். ஒவ்வொரு காயாவரோகணத்திலும் ஒரு அரசு அதிகாரி இருப்பார். உங்களுக்கு எந்தக் குறை இருந்தாலும் அவரிடம் தெரிவித்து நிவாரணம் பெறலாம்.”

அரசரின் பின்னால் சற்றுத் தொலைவில் நின்று கொண்டிருந்த ஆங்கிரஸர் அருகில் இருந்த அச்சுத பிரமராயரிடம் கிசுகிசுத்தார். “அரசர் என்னவோ காஞ்சியில் குடியமர்த்துவோம், கோயில் கட்டுவோம் என்கிறாரே, அது பல்லவர் வசம் அல்லவா இருக்கிறது?” என்றார்.
அவர் காதோடு அச்சுதர் விடையளித்தார். “நீங்கள் வடநாடு சென்றிருந்த போது நடந்தது உங்களுக்குத் தெரியாது. பல்லவ மன்னனுக்கு நம் அரசர் ஓலை அனுப்பினார். பண்டைத் தமிழ்ச் சமயத்தைப் புதுப்பித்து மக்களிடையே புத்துணர்ச்சி ஊட்டுவதற்காக ஒரு திட்டம் வைத்திருக்கிறேன். அதற்கு உங்கள் ஒத்துழைப்பை நாடுகிறேன். சோழநாட்டில் பிறந்த ஒரு இறையடியார் உங்கள் நாட்டில் சித்தி அடைந்துள்ளார். அவர் நினைவைப் போற்றும் வகையில் அந்த ஊருக்கு ஆலங்காடு என்று பெயரிட வேண்டுகிறேன். மேலும் வடதேசத்திலிருந்து வரும் நூறு அந்தணர்களுக்கு காஞ்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இறையிலி நிலம் அளிக்க வேண்டும் என்பதும் என் வேண்டுகோள். உங்கள் ஆட்சிப் பகுதி ஒரு காலத்தில் எங்கள் முன்னோர்களுக்குச் சொந்தமாக இருந்தது என்ற உரிமையில் இதைக் கூறவில்லை. இன்று நாம் இருவருமே களப்பிரர்களுக்கு அடிமையாகச் சம அந்தஸ்தில் இருக்கிறோம். நமக்குள் எதுவும் பகைமை இல்லை. உங்களிடமிருந்து நாட்டைக் கைப்பற்றும் எண்ணமோ, அதைச் செயலாற்றும் திறனோ எங்களுக்கு இல்லை என்பதை அறிவீர்கள். இது மக்களிடையே இறை உணர்வை வளர்ப்பதற்கான முயற்சியே அன்றி இதில் எந்த அரசியல் நோக்கமும் கிடையாது. மற்ற விவரங்கள் இது கொண்டுவரும் எங்கள் அரசு அதிகாரி சொல்வார் என்று எழுதி அனுப்பினார். பல்லவ மன்னர் ஒப்புக் கொண்டார். அதனால்தான் காஞ்சியில் சிலரைக் குடியமர்த்தத் திட்டம்.”

மன்னரின் தொலைநோக்குப் பார்வையை ஆங்கிரஸர் வியந்தார்.

மன்னர் தொடர்ந்து பேசினார். “சோழநாட்டின் பெருமையை மீண்டும் நிலைநாட்ட நான் மேற்கொண்ட முயற்சிகளை எல்லாம் இறைவன் நிறைவேற்றி வருகின்றான். இந்தக் காழியில் ஒரு மகான் தோன்றி சமணத்தை நிர்மூலமாக்குவதாக ஒரு கனவு கண்டேன். அதனால்தான் நீங்கள் அனைவரும் இந்தக் காழி மண்ணில் காலடி வைக்க வேண்டுமென்று விரும்பினேன்.”

“நல்ல வேளை. நான் இவர்களை மறைக்காடு அல்லது நாகையில் இறக்கிவிடாமல் இங்கு கொண்டுவந்தேன். அவர் காழிக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் காரணம் இப்போது புரிகிறது” என்று சொல்லிக்கொண்டார் ஆங்கிரஸர்.

அரசர் தொடர்ந்தார், “காழியைத் தேர்ந்தெடுத்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு. இதுதான் சமணம் குறைவாகப் பரவியுள்ள பகுதியின் வடக்கு எல்லை. கொள்ளிடத்துக்கு வடக்கில் தில்லை, பாடலிபுரம் முதலான இடங்கள் என் ஆட்சிக்கு உட்பட்டவைதான் என்றாலும் இங்கெல்லாம் சமணம் தலை தூக்கி நிற்கிறது. தில்லையில் சமணர்கள் வெறியாட்டம் ஆடுகின்றனர். வேத சமயத்தைச் சார்ந்தோரை வாதத்திற்கு இழுப்பதும், வம்பு செய்வதும் வசை பாடுவதும் எல்லை மீறிப் போகவே அங்குள்ள அந்தணர்கள் மேற்கே மலைநாட்டுக்குப் போய்விட்டனர். அவர்கள் பூசித்து வந்த கோவிந்தராஜர் விண்ணகரம் மூடியே கிடப்பதால் முட்செடிகளும் புதர்களும் மண்டியுள்ளன. அந்த வளாகத்தில் சமணர்கள் யட்சிணிக்கு ஒரு ஆலயம் அமைத்துள்ளனர்.

“அதற்கும் வடக்கே போனால் காஞ்சிபுரம் சமண சாக்கியக் கல்விக்கூடமாகவே ஆகிவிட்டது. இங்கு பல பிராமணர்கள் சமண சாக்கியக் கல்வி பயின்று கங்கைக்கரையில் ஆசிரியராகப் பணிபுரிகிறார்கள். காஞ்சிபுரம் பல்லவர் வசம் உள்ளது. தற்போதைய பல்லவ மன்னர் வேத சமயத்தில் பற்று உடையவர். அவருக்குச் சொந்தமான பகுதியில் கோயில் கட்ட அனுமதி கொடுத்திருக்கிறார். சமணக் கேந்திரமான பாடலிபுரத்தை வடக்கு, தெற்கு ஆகிய இரு புறங்களிலிருந்தும் தாக்குவதுதான் என் திட்டம்.

“உலக வாழ்வில் ஈடுபாடு இல்லாமல் மறு உலகத்தையே நினைத்துக் கொண்டிருக்கிற சோம்பேறி நிலை மாறிச் சோழமக்கள் கல்வியிலும் கலைகளிலும் சிறப்புற்று விளங்க வேண்டும். இறை நம்பிக்கையின் வலிமை பெரியது. அது செயற்கரிய செயல்களைச் செய்விக்கும். காழி மயானத்தில் கட்டப்பட்டுள்ள இந்தக் கோயிலுக்கு இப்பொழுது கீற்று வேய்ந்த கூரை போடப்பட்டுள்ளது. வருங்காலத்தில் அது பெரிய மாளிகையாக உருவாகும். இது போன்ற கோயில்கள் சோழநாடு முழுவதும் பல கட்டப்படும். கருங்கல்லே கிடைக்காத சோழநாட்டில் தொலைதூரத்திலிருந்து கல் கொண்டு வந்து அம்மி கல்லுரல்கள் மட்டும் செய்து கொண்டிருக்கிறோம். வருங்காலத்தில் என்றுமுள ஈசற்கு என்றுமுள கோயிலாகக் கருங்கல்லாலும் கோயில் கட்டுவோம். ஈசனின் பெருமையைத் தொலைதூரம் வரை பறை சாற்றுவதற்காக அவற்றின் மேல் வானை முட்டும் விமானங்கள் கட்டுவோம்.

“எவர்க்கும் தலைவணங்காத நான் இன்று நிலம் தோய்ந்து வணங்கியது என் நாட்டு மக்களுக்கு வியப்பாக இருக்கும். நானும் என் வம்சத்தவரும் சிவனுக்கு மட்டுமே தலைவணங்குவோம். சிவபாத சேகரர்களாகவே இருப்போம்.”

அரசர் பேசி முடித்தார். அனைவரும் ‘ஜய விஜயீ பவ’ என்று முழங்கினர்.
 
9- பாடலிபுரம்*

உரிந்தகூறை யுருவத் தொடுதெரு வத்திடைத்
திரிந்துதின்னுஞ் சிறுநோன் பரும்பெருந் தேரரும்
எரிந்துசொன்னவ் வுரைகொள் ளாதேயெடுத் தேத்துமின்
புரிந்தவெண் ணீற்றண்ணல் பாதிரிப்புலி யூரையே
-சம்பந்தர்

மாணவர்களுக்கு அன்றைய பாடத்தை முடித்து வீட்டுக்கு அனுப்பி விட்டு, அவர்கள் கொண்டு வந்திருந்த உணவை உண்டார் ஜினசேனர். குண்டிகையிலிருந்து நீரை எடுத்துக் குடித்துவிட்டு நமோ அரிஹந்தானம் என்று சொல்லிக் கொண்டே தூணில் சாய்ந்து உட்கார்ந்தார். வயதாகிவிட்டது, அவரால் முன்பு போல இருக்க முடியவில்லை. இன்னும் எத்தனை நாள் இந்த உடம்பைத் தூக்கிக் கொண்டு திரிய வேண்டுமோ, தெரியவில்லை. சல்லேகனம் (வடக்கிருந்து உயிர்நீத்தல்) செய்து கொள்ள வேண்டும். ஆனால் அதற்கு முன் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன.

மாலை கொஞ்சம் கொஞ்சமாக மங்கி வந்தது. தூணில் சாய்ந்தபடியே சற்றுக் கண்ணயர்ந்தார். காலடிச் சத்தம் கேட்டு விழித்துக் கொண்டார். நன்றாக இருட்டிவிட்டது. கண்ணுக்கு ஒன்றும் தெரியவில்லை. யார் என்று கேட்டார். ‘நமோ அரிஹந்தானம், வணங்குகிறேன் மஹாமுனியே’ என்று பதில் வந்தது.

“தர்மமித்ரரா, வாருங்கள். உங்களைத்தான் நினைத்துக் கொண்டேன். யாத்திரை எல்லாம் எப்படி இருந்தது? தர்மம் நன்றாகப் ப்ரவர்த்திக்கிறதா?” என்று கேட்டார்.
தர்மமித்ரர் படியேறிப் பள்ளிக்குள் வந்தார். மயிற் பீலியால் தரையைத் தடவிவிட்டுக் கையிலிருந்த தடுக்கையும் உறியுடன் கூடிய குண்டிகையையும் கீழே ஒரு புறமாக வைத்தார். பின் மஹாகுருவின் முன்பு உள்ள இடத்தையும் பீலியால் கூட்டிவிட்டு உட்கார்ந்தார்.

“இந்தச் சோழதேசம் இனி நாம் வசிக்க ஏற்றதல்ல, மகா குருவே.”

“ஏன், என்ன ஆயிற்று?”

“காலம் கெட்டுப் போய்விட்டது. பெரியவர்கள் சொல்வதை சிறியவர்கள் கேட்பதில்லை. குரு சொன்னதைச் சீடர்கள் கேட்பதில்லை.”

“இது எக்காலத்திலும் உள்ளது தானே, இப்பொழுது புதிதாக என்ன நடந்தது? சொல்லுங்கள்.”
“யாத்திரை போயிருந்த இடத்தில் எல்லாம் கெட்ட செய்திகளாகவே காதில் விழுந்தன.
மக்களுக்கு வர வர தர்மத்தின் மீது பிடிப்பு விட்டுப் போய்விட்டது. குருவையே எதிர்த்துக் கேள்வி கேட்கிறார்கள்.”

“விவரமாகச் சொல்லுங்கள்.”

“அதிகை என்ற ஊரில் பிட்சைக்குப் போயிருந்தேன். அங்கு பள்ளியில் தங்கியிருந்த சிரமணர் (சமணத் துறவி) ஒருவரும் வந்திருந்தார். ஒரு சிராவகர் (சமண இல்லறத்தார்) வீட்டின் முன் நின்றோம். எங்களைக் கண்டதும் அந்த வீட்டு அம்மாள் உள்ளே சென்று கஞ்சி கொண்டு வந்தார். அந்த நேரத்தில் வெளியே சென்றிருந்த அவரது கணவர் வந்தார். அவர் கையில் ஆட்டு மாமிசம் இருந்தது.

“இது சிராவகர் வீடு என்றல்லவா நினைத்து வந்தோம்? நீங்கள் சிராவகர் இல்லையா?

“சிராவகர்தான்.''

“மாமிசம் சாப்பிடுவதுண்டா? அப்படியாயின் நாங்கள் இங்கே பிட்சை வாங்கக் கூடாது என்றேன்.

“நீங்கள் எல்லோரும் ரகசியமாக மீன் பிடித்து உண்கிறீர்கள், அகிம்சை உபதேசம் எல்லாம் ஊருக்குத் தானா, உங்களுக்கு இல்லையா என்று கேட்டார்.

“நாங்கள் மீன் பிடித்ததும் இல்லை, உண்டதும் இல்லையே என்றேன்.

“நீங்கள் என்றால் உங்களைப் போன்ற சிரமணர்கள் என்று பொருள். பள்ளியில் தங்கும் சில சிரமணர்கள் அருகிலுள்ள வாய்க்காலில் மேலே வரும் மீன்களைக் கம்பால் அடித்துக் கொன்று தின்கிறார்கள். நானே என் கண்ணால் பார்த்தேன். இப்படிச் சில பேர் இந்த ஊருக்கு வந்து போயிருக்கிறார்கள் என்றார். நாங்கள் பிட்சை வாங்காமல் வந்துவிட்டோம்.”

“அப்படிச் சிலர் இருப்பது பற்றி நானும் கேள்விப்பட்டேன். இவர்களால் நம் தர்மத்தின் பெயர் கெடுகிறது.”

“இன்னொரு ஊரில் பள்ளியில் தங்கியிருந்தபோது நான்கு சிராவகர்கள் வந்தனர். அவர்களில் ஒருவர் ஆசாரக் கோவையைப் பாடம் சொல்லவேண்டும் என்று கேட்டு ஓலைச்சுவடியுடன் வந்திருந்தார். நான் சொல்லிக் கொண்டிருந்தபோது ஒருவர் இந்த ஆசாரங்கள் எல்லாம் எதற்கு என்றார்.

“ஏன், நாம் நல்ல கதி அடையத்தான் என்றேன்.

“இறந்த பிறகு நாம் எங்கே போகிறோம் என்பது உங்களுக்குத் தெரியுமா, நிர்வாணம் என்ற மோட்ச நிலை ஒன்று உண்டு என்பதை எப்படி நம்புவது, நீங்கள் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டார்.

“நாம் ஒவ்வொருவரும் அதை நேரடியாக அறியமுடியாது. நமக்காக ஜினர் தவம் செய்து ரத்தினம் போன்ற இந்த உண்மைகளைக் கண்டறிந்தார். அவரைப் பூரணமாக நம்புவதுதான் இதற்கெல்லாம் நிரூபணம் என்றேன்.

“கடவுளை நேரடியாக அறியமுடியாது என்பதால் கடவுள் இல்லை என்கிறீர்கள். ஒருவர் தவம் செய்து அறிந்து கடவுள் உண்டு என்று சொல்கிறார். அவரைப் பூரணமாக நம்புவதற்கும் ஜினரை நம்புவதற்கும் என்ன வித்தியாசம், எல்லாமே நம்பிக்கைகள்தான், எது உண்மை என்றார். எனக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை.

“ஜினரை நம்பினால் கடைத்தேறுவீர்கள். இல்லாவிட்டால் மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து உழல்வீர்கள் என்றேன்.

“அதற்கு அவர், எத்தனை பிறவிகள் எடுத்தாலும் இறைவனுக்கே ஆட்பட்டு இருப்போம். இறைவனிடம் அன்பு செய்வதாக இருந்தால் மீண்டும் பிறப்பது தவறல்ல என்று காரைக்கால் அம்மையார் கூறுகிறார். அவரும் எங்களைப் போலச் சிராவகியாக இருந்தவர்தான். உங்கள் வறட்டு வாதங்கள் எங்களுக்கு மன அமைதி தரவில்லை. என்றோ எங்கோ கிடைக்கப் போகிற முத்தி நிலைக்காக, இன்றைய வாழ்க்கையை இனிமை இல்லாத பாலைவனமாக ஆக்கிக் கொள்ள நாங்கள் சித்தமாக இல்லை என்றார்.”

“கவலைப்பட வேண்டிய நிலைதான்.”

“இன்னொரு ஊரில் பிட்சை எடுக்கும்போது, கிட்டே வராதே ஐயா, காலையில் கண் விழித்ததும் பல் கூட விளக்காமல் பிட்சைக்கு வந்து விட்டீர்கள். துர்நாற்றம் வீசுகிறது. மகாவீரர் உங்களைக் குளிக்க வேண்டாம் என்றா சொன்னார். உடம்புக்கு முக்கியத்துவம் கொடுக்காதே என்று அவர் சொன்னதற்கு இதுதான் பொருளா? இரண்டு வேளையும் வயிற்றுக்குக் கொட்டிக் கொள்கிறீர்களே, இது மட்டும் உடம்புக்கு முக்கியத்துவம் கொடுக்காத செயலா என்று கேட்டார்.

“நாடு எங்கிலும் இது போன்று நம்பிக்கைக் குறைவு ஏற்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் காரணம் வடதேசத்திலிருந்து வந்திருக்கின்ற சில பிராமணர்கள்தான். அவர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பட்டுப் போன வேதத்தை மீண்டும் துளிர்க்கச் செய்ய முயல்கிறார்கள்.”

“தர்மமித்ரரே, நாம் தர்மத்தைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்றுள்ளோம். இது போன்ற போக்கை முளையிலேயே கிள்ள வேண்டும். நீங்களும் இந்த மடத்தைச் சேர்ந்த மற்ற சிரமணர்களும் தீவிரமாகத் தர்மப் பிரசாரம் செய்யவேண்டும். ஒவ்வொரு சிராவகரையும் சந்தித்து தர்மத்தை வலியுறுத்த வேண்டும். முன்பு போல பிட்சை வாங்கி உண்டுவிட்டு பள்ளியில் படுத்து உறங்குவது கூடாது. வழியில் சந்திக்கும் அத்தனை சிரமணர்களிடமும் சொல்லுங்கள். நாம் இந்த முயற்சியில் வெற்றி பெறும் வரை நான் என் சல்லேகனத்தை ஒத்தி வைக்கிறேன்.”

தர்மமித்ரர் சோழநாட்டில் சூறாவளிப் பயணம் செய்தார். சிராவகர்களிடம், “நமது சமயம் ஆபத்தில் இருக்கிறது. இதற்குக் காரணமான வடமர்களை விரட்டுங்கள்” என்றார். வடமருக்கு மான்யம் கொடுத்து வந்த நில உடமையாளர்களிடம் வந்து, “அரசருக்குக் கொடுக்க வேண்டிய வரியை இவர்களுக்குக் கொடுக்கிறீர்களே. இவர்கள் என்ன அரசருக்குச் சமமானவர்களா? இவர்கள் பஞ்சம் பிழைக்க வந்தவர்கள். அடிமைப்பட்ட அரசர்கள் கைகட்டி நின்று கப்பம் செலுத்துவது போல இவர்களுக்கு நீங்கள் உங்கள் தானியத்தைச் செலுத்துகிறீர்களே, இது தன்மானத்துக்கு இழுக்கு இல்லையா?” என்று உசுப்பிவிட்டார். சோழியப் பிராமணர்களையும் அவர் தன் வலையில் வீழ்த்தினர். “உங்களுக்கு வேலை செய்ததற்குத்தான் ஊதியம் கொடுக்கப்படுகிறது. வடமர்களுக்கோ ஒரு வேலையும் இல்லாமல் மிகுதியான மானியம் கொடுக்கப்படுகிறது” என்றார்.

சோழநாடு ஒரு சமயப் போருக்குத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டது.
------- ------------------------------------------- -----------------------------------
*பாடலிபுரம் என்பது திருப்பாதிரிப்புலியூர் (இன்றைய கடலூர் புதுநகர்)
 
Dear Sri Moorthy,
Thank you for your suggestions. Here is a list of the dramatis personae. This will be updated and prefixed to every ensuing chapter.

Period of Karaikal Ammaiyar Middle of the 5[SUP]th[/SUP] century C.E.
Period of the story upto the 13[SUP]th[/SUP] chapter - End of the 5[SUP]th[/SUP] century or beginning of the 6the century.

செந்தீ வளவன்- The Chola King who initiated steps to bring in Brahmins from north.
அச்சுதப் பிரமராயர் Prime Minister of the Chola King
ஆங்கிரஸ பிரமராயர் A minister of the same king. He went to Karvan to bring the Brahmins.
காரைக்கால் அம்மையார்- Original name Punithavathi. Her songs inspired the Chola King to revive Saivam in Chola Kingdom..
கவிராயர்- The man who brought the songs of Karaikal Ammaiyar to the knowledge of the Chola King.
பரமதத்தன் Husband of Karaikal Ammaiyar
நரசிம்மகுப்தர் The Gupta Empror in Pataliputra (Bihar) at the time of the story.
அக்னிகுப்தர் The Gupta king of Avanti, subordinate to the emperor
லகுலீசர் known as யுவா சர்மா in his boyhood, became the founder of the Pasupatha Saivam.
ஜினசேனர்.The Chief Jain Monk in Patalipura (Cuddalore)
தர்மமித்ரர் The second rank Jain monk wandering around.
ஹரதத்த சர்மா- One of the Brahmins who immigrated into Tamilnadu. He was settled in Thiruvanchiam, a holy place in Chola Kingdom.
சந்திரசேனர் Haradatta Sarma’s neighbour, a Jain householder.
விசுவசேனன் son of Chandrasena
சுநந்தா- daughter of Haradatta Sarma
 
10 திருவாஞ்சியம்

வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம்
பொன்னி யன்ற சடையிற் பொலிவித்த புராணனார்
தென்ன வென்றுவரி வண்டிசை செய்திரு வாஞ்சியம்
என்னை யாளுடை யானிட மாகவு கந்ததே
-சம்பந்தர்
ஹரதத்த சர்மா திருவாஞ்சியம்வாசி ஆகி மூன்று வருடங்கள் ஆகின்றன. அதற்குள் ஊர் மக்கள் அத்தனை பேரின் அன்புக்கும் மரியாதைக்கும் பாத்திரமாகிவிட்டார். ஊரில் யார் வீட்டில் எந்த விசேஷமானாலும் வலுவில் போய் உதவி செய்வார். அடுத்த வீட்டுக்காரர் கூரை வேய்ந்து கொண்டிருந்தால் இவர் கீழே நின்று கீற்று எடுத்துக் கொடுப்பார். பக்கத்துத் தெருவில் திருமணம் என்றால் பந்தல்கால் நடுவதற்குக் கடப்பாரையுடன் வந்து நிற்பார். பனைமட்டை வெட்டிக் கொண்டு வந்து விசிறி செய்தாலும் சரி, தேங்காய்நார் கொண்டு மாட்டுத்தும்பு திரித்தாலும் சரி, தனக்கு மட்டும் செய்து கொள்ளாமல் அக்கம் பக்கத்து வீடுகளுக்கும் செய்து கொடுப்பார். கோயிலில் உட்கார்ந்து அவர் வேதம் சொல்லும் காட்சி மக்களைக் கவர்ந்தது. பொருள் புரியாவிட்டாலும் ஸ்வரத்துடன் கூடிய அந்த ஒலிக்கோவை அவரது கணீரென்ற குரலில் வெளிப்படும்போது அவர்களுக்கு ஒரு இனம் புரியாத ஆனந்தம் ஏற்பட்டது.

ஊர் மக்கள் தங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளை அவரிடம் சொல்லி ஆலோசனை கேட்கத் தொடங்கினர். அறநெறிக்கும் உலகியலுக்கும் ஏற்ற வகையில் அவர் சொல்லும் ஆலோசனைகள் எல்லோருக்கும் மனதிற்குப் பிடித்ததாகவும் நடைமுறை சாத்தியமானதாகவும் இருந்தன. தான் சொல்வதைத் தானே கடைப்பிடிக்காத ஊத்தைவாய்ச் சமணத் துறவிகளின் அறநெறி உபதேசங்களையே கேட்டு வந்த மக்களுக்கு உடல் தூய்மை, உடைத் தூய்மை, உள்ளத் தூய்மை கொண்ட ஹரதத்தர் அன்பிற்கும் மரியாதைக்கும் உரியவராக ஆனதில் வியப்பில்லை.

நூறு குடும்பங்கள் கொண்ட அந்த ஊரில் இருபது சிராவகக் குடும்பங்கள் இருந்தன. அவர்கள் அருகர்களை மட்டும் வணங்கினர். மற்றவர்கள் திருமால், மாரியம்மன் போன்ற தெய்வங்களை வழிபடுவதோடு அருகர்களையும் வழிபட்டனர். மற்றபடி வாழ்க்கை முறை இரு சமயத்தாருக்கும் ஒரே மாதிரியாக இருந்தது. அவர்கள் ஒருவர்க்கொருவர் நல்லிணக்கத்துடன் வாழ்ந்தனர். சமணத் துறவிகள் வந்தால் எல்லோருமே உணவளிப்பர். மாமிசம் சாப்பிடுபவர்களின் வீட்டிற்கு மட்டும் அவர்கள் போக மாட்டார்கள். அத்தகையோர் சிறுபான்மையராகவே இருந்தனர்.

அவருடைய வீட்டிற்கு அடுத்த வீட்டில் இருந்த சந்திரசேனர் ஒரு சிராவகர். வந்த சில நாட்களிலேயே இரு குடும்பத்தவர்களும் நெருங்கிய நண்பர்கள் ஆயினர். இல்லத்தரசிகள் தங்கள் தங்கள் வீட்டுக் கொல்லையில் நின்று பேசி நட்புறவை வளர்த்தனர். ஆடவர்கள் திண்ணையில் உட்கார்ந்து பேசினர். பெண் குழந்தைகள் மற்றவர் வீட்டுக்குள் சென்று விளையாடினர். பையன்கள் தோப்பிலும் ஆற்றங்கரையிலும் திடல்களிலும் சென்று விளையாட்டிலும் பேச்சிலும் ஈடுபட்டனர். அடுத்த வீட்டுப் பெண் சுநந்தா ஹரதத்தரின் பெண்ணிடம் கோலம் போடவும் பாட்டுப் பாடவும் கற்றுக் கொண்டாள். அவளுடைய தந்தைக்கு முதலில் இது பிடிக்கவில்லை.

“நம் குடும்பங்களில் இது வழக்கம் இல்லை, அம்மா” என்றார்.

“போங்கள் அப்பா. அடுத்த வீட்டு வாசலில் கோலம் போட்டிருப்பது எவ்வளவு அழகாக இருக்கிறது. நானும் நம் வீட்டு வாசலில் இதுமாதிரி போடப் போகிறேன். இந்தச் சின்ன ஆசைக்குக் கூடத் தடை போடுகிறீர்களே!”

“சின்ன ஆசை நிறைவேறியவுடன் பெரிய ஆசைக்கு அழைத்துப் போகும். அது நிறைவேறினால் அதைவிடப் பெரிய ஆசை. இப்படிப் போனால் ஒரு காலத்தில் நிறைவேறாத ஆசையுடன் செத்துப் போவோம். மீண்டும் பிறப்போம். இந்தப் பிறவியில் துன்பப்படுவது போதாதா, மீண்டும் பிறக்க வேண்டுமா?”

“ஏன் அப்பா எப்பொழுதும் துன்பத்தையே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? இந்த உலகில் இன்பமே இல்லையா? கோலம் போடுவது ஒரு இன்பம், பாட்டுப் பாடுவது ஒரு இன்பம், பறவைகள் பாடுவதைக் கேட்பது இன்பம், ஓடும் நதியையும் பெய்யும் மழையையும் ரசிப்பது இன்பம். வாலைத் தூக்கிக் கொண்டு கன்றுக்குட்டி துள்ளிக் குதிப்பதிலும் குரங்குக் குட்டி அனாயாசமாக ஒரு கிளையிலிருந்து இன்னொன்றுக்குத் தாவுவதிலும் அழகும் இன்பமும் பொங்குகின்றன. அதை எல்லாம் ரசிக்கத் தெரியாத மனம் வெறும் பாலைவனம். உலகில் இயற்கையாகக் கொட்டிக் கிடக்கும் அழகையும் மனித முயற்சியால் ஏற்படுத்தப்படும் அழகையும் ரசித்தால் மோட்சம் கிடைக்காது என்றால் அந்த மோட்சமே எனக்கு வேண்டாம்.”

சந்திரசேனர் மறுமொழி சொல்லவில்லை. அவரது மனைவி சொன்னாள். “வீட்டில் எறும்புக்கு எட்டாமல் எல்லாவற்றையும் உறியில் வைக்கிறோம். எறும்பும் உயிர் வாழவேண்டாமா? அதற்குத்தான் வாசலில் கோலம் போடுகிறோம். நமக்கும் இடைஞ்சல் இல்லை, அவையும் உயிர் பிழைக்கும் என்று அடுத்த வீட்டு மாமி சொல்கிறார்கள்” என்றாள்.

சந்திரசேனருக்கு இதில் நியாயம் இருப்பது தெரிந்தது. “சரிம்மா, உன் விருப்பப்படி செய்” என்றார்.

சிறுகச் சிறுக அந்த ஊரிலுள்ள அத்தனைச் சிராவகர் வீட்டிலும் கோலம் போடுவது வழக்கமாகிவிட்டது.

சந்திரசேனரின் மூத்த மகன் விசுவசேனன் ஹரதத்தரின் மகன் பசுபதியுடன் ஒத்த வயதுடையவன். இருவரும் தோப்பிலும் ஆற்றங்கரையிலும் மணிக்கணக்காகப் பேசினார்கள். பசுபதி தன் பழைய இருப்பிடம் பற்றிச் சொல்வதை எல்லாம் திறந்த வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருப்பான் விசுவசேனன். ஊரிலுள்ள மற்ற இளைஞர்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். அந்த வயதிற்கு உள்ள இயல்புப்படி, எல்லோருக்குமே சமயங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற விருப்பம் இருந்தது. சமயப் பழக்க வழக்கங்களைப் பற்றி விவாதித்தனர். லகுலீசரின் கொள்கைகள் எப்படி அம்மையாரின் பாடல்களில் வெளிப்படுகிறது என்று பசுபதி சொன்னது எல்லோரையும் கவர்ந்தது.
 
Thanks for this great initiative. Many of us will be benefitted by reading this work of yours.
May the work get due recognition and appreciation amongst a wider audience!
 
இந்த அத்தியாயத்தில் வரும் கதாபாத்திரங்கள்
ஹரதத்தர்- One of the Vadama immigrants from Karvan. He was settled in Thiruvanchiam, now known as Srivanchiam.
ரோகிணி- Haradatta’s wife
பசுபதி- Haradatta- Rohini’s son
மல்லிகை- Pasupathi’s lover and later wife.
முருகையன்- Mallikai’s father. An original resident of Thiruvanchiam.

11 மணக்கோலம்

அயிலாரும் அம்பத னாற்புர மூன்றெய்து
குயிலாரும் மென்மொழி யாளொரு கூறாகி
மயிலாரும் மல்கிய சோலை மணஞ்சேரிப்
பயில்வானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே.
-சம்பந்தர்
இன்று எப்படியும் அம்மாவிடம் பேசிவிட வேண்டும் என்ற முடிவோடு பசுபதி வீட்டிற்குள் நுழைந்தான். நல்ல வேளை அப்பா கோயிலுக்குச் சென்றுள்ளார். தங்கையும் அடுத்த வீட்டில் பேசிக் கொண்டிருக்கிறாள்.

“அம்மா, உன்னை ஒன்று கேட்கவேண்டும்” என்றான்.

“சொல்லுடா” என்றாள் ரோகிணி.

“கோடி வீட்டு முருகையன் மகள் மல்லிகையைப் பற்றி என்ன நினைக்கிறாய்?”

“ஏன், நல்ல பெண். வீட்டு வேலைகள் நன்றாகச் செய்கிறாள். தம்பி தங்கைகளை நன்றாகக் கவனித்துக் கொள்கிறாள். அம்மாவுக்கு உதவியாக இருக்கிறாள்.”

“அவள் உனக்கு மருமகளாக வர ஏற்றவளா என்று சொல்.”

“ஓகோ, அப்படியா விஷயம். நல்ல பெண் எனக்கு மருமகளாக வந்தால் சந்தோஷம்தான்.”

“இது வரை அவளை ஒரு மூன்றாம் மனுஷியாகக் கருதி ஒரு அபிப்ராயம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறாய். இனி அவளை மருமகளாக வரப் போகிறவள் என்ற கோணத்தில் கவனி. அப்பொழுதுதான் குறைகள் தென்படும். மூன்று மாதம் கழித்தும் உனக்கு இதே அபிப்ராயம் இருந்தால் மேற்கொண்டு தொடரலாம்.”

“சரி, அப்பாவிடமும் சொல்கிறேன். அவரும் கவனிக்கட்டும்.”

“வேண்டாம், வேண்டாம். அவருக்கு மனதில் ஒன்று வைத்துக் கொண்டு ரகசியமாக ஆராயத் தெரியாது. அவர் போனால் ஒன்று சம்பந்தத்தை முடித்துக் கொண்டு வருவார் அல்லது முறித்துக் கொண்டு வருவார். உன் மனதோடு இருக்கட்டும். இது சரியாக வரவில்லை என்றால் வேறு யோசனையும் வைத்திருக்கிறேன்.”

‘பதினெட்டு வயது ஆகி விட்டது, விவாகம் செய்ய வேண்டிய காலம்தான். நம் தேசமாக இருந்தால் பெண்ணைப் பெற்றவர்கள் வரன் கேட்டு வருவார்கள். இதற்குள் விவாகம் ஆகி இருக்கும். இந்த ஊரில் நாம்தான் பெண் கேட்டுப் போகவேண்டும் போல் இருக்கிறது. அதுவும் தவறில்லை. கேட்போம். இவனுக்குத்தான் இந்த வயதிற்குள் என்ன விவேகம்! என்ன மன முதிர்ச்சி! தீர்க்காயுசாக இருக்க வேண்டும்’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.
மூன்று மாதம் அந்தப் பெண்ணுடன் நெருங்கிப் பழகி அவளைப் பற்றித் தெரிந்துகொண்டாள் ரோகிணி. பொருத்தமாக இருக்கும் என்று உறுதி செய்துகொண்டபின் கணவரிடம் தெரிவித்தாள். இருவரும் முறைப்படி பெண் கேட்டனர். திருமணம் உறுதி செய்யப்பட்டது.

அந்த ஊர் மக்களிடையே பல சாதிகள் இருந்தன. ஆனாலும் தன் சாதிக்குள்தான் திருமணம் செய்வது என்ற வழக்கம் இல்லை. தந்தையின் சாதியே குழந்தைகளுக்கும் என்ற முறை இருந்ததால் சாதிகள் அழியாமல் நிலைத்திருந்தன. சமூகத்தில் நல்லிணக்கமும் இருந்தது.
ஹரதத்தரின் மகனுக்கும் முருகையனின் மகளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டதில் பிரச்சினை எதுவும் இல்லை. எந்த முறைப்படி நடத்துவது என்பது பற்றி இருவரும் ஆலோசித்தனர். வடம முறைப்படி கன்னிகாதானம் செய்வது என்றும் தமிழ் முறைப்படி தாலி கட்டுவது என்றும் முடிவாயிற்று. அக்னியை வழிபட்டு வலம் வந்து அதைச் சாட்சியாகக் கொள்வது இரு சம்பிரதாயங்களுக்கும் பொதுவாக இருந்ததால் அதைக் கடைப்பிடிப்பது என்றும் முடிவாயிற்று.

ஊர் மக்கள் அனைவரும் உற்சாகத்துடன் திருமண வேலைகளில் ஈடுபட்டனர். எல்லோருக்கும் இரு திறத்துப் பெற்றோர்களும் விருந்தளித்து மகிழ்ந்தனர்.
மகனும் மருமகளும் மகிழ்ச்சியாக இல்லறம் தொடங்கியதில் ஹரதத்தரின் மனைவிக்குப் பேரானந்தம். இருவரையும் பார்த்தால் கண் பட்டுவிடும் போல் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு திருஷ்டி கழித்து வாழ்த்தினாள்.
 
Dramatis personae
Haradatta – One of the Vadama immigrants, who settled in Thiruvanchiam
Pauspathi – His son
Rohini – His wife
Mallikai- Pasupathi’s wife
Murugaiyan- Mallikai’s father
Idumban- Mallikai’s maternal uncle

12 திருஷ்டி பட்டது

உடம்புபோர் சீவரர் ஊண்தொழிற் சமணர்கள்
விடம்படும் உரையவை மெய்யல விரிபுனல்
வடம்படு மலர்கொடு வணங்குமின் வைகலுந்
தடம்புனல் சூழ்தரு சக்கரப் பள்ளியே.
-சம்பந்தர்
ஹரதத்தருக்கு உறவினர்கள் எவரும் இல்லை. திருமணத்துக்கு அக்கம்பக்கத்தில் ஐந்தாறு கிராமங்களில் இருந்த வடமர்களை அழைத்திருந்தார். அவர்கள் வந்து நடத்திக் கொடுத்து வாழ்த்திச் சென்றனர்.

முருகையனுக்கோ ஜனக்கட்டு மிகுதி. உள்ளூரிலும் அக்கம் பக்கத்துக் கிராமங்களிலும் அவருக்கு உறவினர்கள் நிறைய இருந்தனர். திருமணத்துக்குப் பின் அவர்கள் ஒவ்வொருவராக புது தம்பதிகளைத் தத்தம் வீட்டிற்கு அழைத்து விருந்தளித்து உபசரித்தனர்.
திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆயிற்று. இன்னும் விருந்து ஓய்ந்தபாடில்லை. மல்லிகையின் தாய் மாமன் இடும்பன் இரு நாழிகைத் தொலைவில் உள்ள தீபங்குடி* என்னும் கிராமத்தில் ஊர்த்தலைவராக இருந்தார். அவர் விருந்துக்குக் கூப்பிட்டிருந்தார். முருகையன் ஒரு வண்டி கட்டி இருவரையும் அனுப்பினார். விருந்து முடிந்தது. ‘போய்ட்டு வரோம், மாமா’ என்று சொல்லிக் கொண்டு மல்லிகை வண்டியில் ஏறினாள். பின்னால் வாயில் வெற்றிலையை மென்றுகொண்டு பசுபதியும் ஏறினான். வண்டி புறப்பட்டது.

பசுபதி பேசாமல் கண்ணை மூடிக் கொண்டு வந்தான். உண்ட மயக்கம் தூங்குகிறார் போலும் என்று மல்லிகை எண்ணினாள். வீடு சமீபித்தபோது அவனைத் தட்டி எழுப்ப வேண்டியிருந்தது. அரை மயக்கமாக இருந்தான். இறங்கியவுடன் வாந்தி எடுத்தான். தள்ளாடிக் கொண்டே வந்த அவனைப் படுக்க வைத்தார்கள்.

சாப்பிட்டதும் சாப்பிடாததுமாக வண்டியில் குலுங்கிக் குலுங்கி வந்ததுதான் வாந்திக்குக் காரணமாக இருக்கும் என்று நினைத்த அவனுடைய அம்மா ‘சுக்கு வெந்நீர் போட்டுத் தருகிறேன், சாப்பிட்டால் சரியாகிவிடும்’ என்று சொல்லிக் கொண்டு உள்ளே போனாள்.
மாமியார் போட்டு எடுத்து வந்த வெந்நீரை மல்லிகா அவன் வாயில் விட்டாள். அது வழிந்து விட்டது. இது சாதாரண அஜீரணம் இல்லை என்று எல்லோருக்கும் பட்டது. முருகையனும் அங்கே இருந்தார். வைத்தியரை அழைத்து வரச் சொல்லி ஆள் அனுப்பினார். வைத்தியர் வந்து பார்த்தார். ‘நாடி விழுந்து விட்டது. உடம்பெல்லாம் நீலம் பாரித்து இருக்கிறது. ஏதோ விஷகடி’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். எல்லோருக்கும் இடி விழுந்தாற்போல் இருந்தது.
சற்று நேரத்தில் ஊர் மக்கள் எல்லோரும் அங்கே கூடினர். ஊரே சோகத்தில் மூழ்கியது. ‘ஐயோ, எவ்வளவு நல்ல பிள்ளை, எவ்வளவு நல்ல பெண், இவர்களுக்கா இப்படி ஆகவேண்டும்’ என்று பரிதாபப்பட்டனர். ‘நேற்று தாழம்பூ பறித்து வந்து மனைவிக்குக் கொடுத்தான். அதில் இருந்த பூநாகம் ஏதாவது தீண்டி இருக்குமோ?’ என்றார்கள் சிலர். ‘வண்டியிலே விரிப்பின் கீழே போட்டிருந்த வைக்கோலுக்குள் தேள், நண்டுவாக்காளி எதாவது இருந்து கொட்டியிருக்கும்’ என்றார்கள் சிலர். பசுபதியின் நண்பர் பட்டாளம் வந்து கதறியது. உறவினர்களுக்கெல்லாம் சொல்லி அனுப்பப்பட்டது. ஹரதத்தர் திருமணத்திற்கு வந்திருந்த வடமர்களுக்குச் செய்தி அனுப்பினார்.

சுடுகாட்டில் ஏகப்பட்ட கூட்டம். பிரேதத்தைச் சிதையில் அடுக்கினார்கள். வடமப் பிராமணர் ஒருவர் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தார். நடைப்பிணமாகத் தென்பட்ட ஹரதத்தர் கண்களில் நீர் வழிய அவர் சொல்லியபடி சடங்குகளைச் செய்து கொண்டிருந்தார். அருகில் முருகையன் வாயில் துணியைப் புதைத்துக் கொண்டு நின்றுகொண்டிருந்தார்.

இந்த அகால மரணம் அனைவரையும் உலுக்கி எடுத்துவிட்டது. வாழ்க்கையின் நிலையாமையை மனிதன் பிரத்தியட்சமாக உணரும் தருணம் அது. ‘பதினெட்டு வயது என்பது சாகக்கூடிய வயதா, எந்த நிமிஷம் யாருக்கு என்ன ஆகும் என்பது தெரியவில்லை. இன்று இவர், நாளை யாரோ’ என்று ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார். அவரை எதிரொலிப்பது போல, ஆனால் தணிந்த குரலில் இடும்பன் தன் பக்கத்தில் நின்றிருந்தவரிடம், ‘இன்று இவர், நாளை அவர்’ என்று சொல்லிக் கண்களால் சைகை காட்டினார். அவர் பேசியதையும் அவர் கண் காட்டிய திசையில் இரு வடமர்கள் நின்றுகொண்டிருந்ததையும் பசுபதியின் நண்பன் ஒருவன் கவனித்துவிட்டான். இடும்பன் முகத்திலும் அவரது நண்பர் முகத்திலும் ஒரு விஷமத்தனமான புன்னகை தோன்றி மறைந்ததும் அவன் பார்வையிலிருந்து தப்பவில்லை. உடனே முருகையனிடம் சென்று தான் கவனித்ததைக் கூறினான்.

முருகையன் சீறிக்கொண்டு வந்தார். “மகாபாவி, என் மருமகனை நீயாடா கொன்றாய்?” என்று கேட்டுக் கொண்டே அவர் முகத்தில் மாறி மாறிக் கைகளால் ஆக்ரோஷமாகக் குத்தினார். எதிர்பாராத தாக்குதலால் நிலை குலைந்த இடும்பன் கீழே விழுந்தார். சிலர் அவரையும் முருகையனையும் பிரித்தனர். விஷயம் பரவியது.

“உண்மையாக இருந்தாலும் இருக்கும், வடமர்களை எல்லாம் நாட்டை விட்டுத் துரத்தணும்னு இவர் எப்பவும் சொல்லிக்கிட்டு இருப்பாரு.”

“அதுக்காக இப்படியா, சொந்தத் தங்கச்சி மருமகனையா விஷம் வெச்சுக் கொல்வாங்க?”

“இந்தப் பொண்ணை இடும்பன் தன் மகனுக்குக் கட்டி வெக்கணும்னு நினைச்சிருப்பார் போல. அது நடக்கல்லைன்னதும் இப்படிப் பழி வாங்கிட்டாரு.”

“ஒரு வருசமா ஒரு சமணத்துறவியும் வேறு சில ஆளுங்களும் இவரை வந்து அடிக்கடி பார்த்துப் பேசிக்கிட்டு இருக்காங்க. அதிலிருந்து இவர் இந்தப் பிராமணர்களை எல்லாம் நாட்டை விட்டுத் துரத்தணும்னு சொல்லிக்கிட்டு இருப்பாரு.”

ஊர் மக்கள் பலவாறாகப் பேசிக் கொண்டார்கள். கூட்டத்தில் இருந்த ஊர்த்தலைவருக்கு விஷயம் எட்டியது. சிதை எரியத் தொடங்கியதும் எல்லோரும் திரும்ப எத்தனித்தபோது ஊர்த்தலைவர், “யாரும் இந்த இடத்தை விட்டுப் போகக் கூடாது. யார் யாருக்கு என்ன தெரியுமோ அதை எல்லாம் பஞ்சாயத்தார் முன்னிலையில் தெரிவித்துச் சத்தியப் பிரமாணம் செய்து விட்டுத்தான் போகவேண்டும்” என்று அறிவித்தார். ஓலைகளும் எழுத்தாணிகளும் தருவிக்கப்பட்டன.

அங்கு வந்த மக்களை ஒவ்வொருவராக விசாரித்தார். அவரவர் தனக்குத் தெரிந்ததைச் சொன்னார்கள். அவை ஏட்டில் எழுதப்பட்டு கையொப்பம் பெறப்பட்டன. இடும்பன் அடிக்கடி சமணத் துறவியுடன் சுற்றியதைப் பலரும் கவனித்திருந்தார்கள். சமணத் துறவிக்கும் உங்களுக்கும் நெருக்கத்திற்குக் காரணம் என்ன என்பதற்கு இடும்பனால் சரியான விடை அளிக்க முடியவில்லை. பல கோணங்களில் அவரை நெருக்கிய பிறகு, தான் பசுபதிக்கு வெற்றிலையில் விஷம் தடவிக் கொடுத்ததை ஒப்புக் கொண்டார்.

கடைசியில் ஊர்த்தலைவர் சொன்னார், “இவர்கள் சொல்வதை எல்லாம் பார்த்தால் இது கொலை வழக்கு என்று தெரிகிறது. அதனாலும், குற்றம் சாட்டப்பட்டவரும் ஒரு ஊர்த்தலைவர் என்பதாலும் நாங்கள் இதில் விசாரித்துத் தீர்ப்பு வழங்க முடியாது. இதை அரசர்தான் விசாரிக்க வேண்டும், அவருக்குத் தகவல் அனுப்புகிறேன்” என்று அறிவித்தார்.
----------------------------------------------------------- --------------------------------------------------
* திருவாஞ்சியம் அருகில் உள்ள தீபங்குடி ஒரு சமணக் கேந்திரமாக இருந்திருக்கிறது. இன்றும் அங்கு ஒரு ஜினாலயம் உள்ளது.
 
13 குடந்தைக் காரோணம்

பூவார்பொய்கை அலர்தாமரைசெங் கழுநீர்புறவெல்லாந்
தேவார்சிந்தை அந்தணாளர் சீராலடிபோற்றக்
கூவார்குயில்கள் ஆலும்மயில்கள் இன்சொற்கிளிப்பிள்ளை
காவார்பொழில்சூழ்ந் தழகார்குடந்தைக் காரோணத்தாரே
-சம்பந்தர்

ஆங்கிரஸ பிரமராயர் தூக்கம் வராமல் கோவிலின் முன் முகப்பில் இங்கும் அங்கும் உலவிக் கொண்டிருந்தார். இன்று பிற்பகல் வந்த செய்தி அவரது உள்ளத்தை மிகவும் கலக்கியிருந்தது. ஒரு வருடமாகவே அவர் கவலைப்படும் வகையிலான தகவல்கள் காதில் விழுந்து கொண்டிருந்தன. ஆனால் இன்று வந்தது எல்லாவற்றிற்கும் உச்சகட்டமானதாக இருந்தது.
மூவாயிரம் பேரின் உயிருக்கும் நல்வாழ்வுக்கும் கௌரவத்துக்கும் பொறுப்பேற்றுக் கொண்ட தான் கடமையில் தவறிவிட்டோமோ என்று அஞ்சினார். அரசருக்கும் இந்தச் செய்தி போயிருக்கிறது. அவர் கூப்பிட்டுக் கேட்டால் என்ன சொல்வது என்று சிந்தித்தார். இரவு முழுவதும் பலவிதமான எண்ணங்கள் அவரது உள்ளத்தைக் கடைந்தன. விடியற்காலையில் சற்றுக் கண்ணயர்ந்தார்.

கண்விழித்ததும் அவருக்குத் தெளிவு ஏற்பட்டது. இதில் நாம் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. அரசரைப் போய்ப் பார்ப்போம். அவர் சொன்னபடியே கேட்போம் என்று தீர்மானித்தார். குதிரையைச் சித்தம் செய்ய உத்திரவிட்டார்.

அப்பொழுது அவரை நோக்கி ஒரு அரச சேவகன் வந்தான். குதிரையிலிருந்து இறங்கி வந்தவன், ‘அரசரிடமிருந்து அவசர ஓலை’ என்று சொல்லி நீட்டினான். இவ்வளவு அதிகாலையில் இங்கு வருவதென்றால் இவன் நள்ளிரவில் புறப்பட்டிருக்கவேண்டும். விஷயம் மிக முக்கியமானதாக இருக்க வேண்டும் என்று நினைத்து ஓலையை வாங்கிப் படித்தார். “வடம பிராமணர்களின் பாதுகாப்பு குறித்து ஆலோசிப்பதற்காக, வரும் மாசி மகத்தன்று குடந்தைக் காரோணத்தில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடந்தைக் கோட்டத்தில் உள்ள எல்லா வடமர்களுக்கும் செய்தி அனுப்பிவிட்டோம். எல்லோரையும் கலந்து தகுந்த ஏற்பாடுகள் செய்யவும்.” இதைத் தொடர்ந்து மேலும் சில செய்திகளும் அதில் இருந்தன.

‘என் மனதை உறுத்திக்கொண்டிருந்த விஷயம் என்னைக் காட்டிலும் அரசரை மிகவும் பாதித்திருக்கிறது என்று தெரிகிறது. அவர்தான் எவ்வளவு சுறுசுறுப்பாக வேலை செய்திருக்கிறார்’ என்று வியந்தார் ஆங்கிரஸர். ‘நான் நேற்றே போய் அவரைப் பார்த்திருக்க வேண்டும், யோசனை செய்து காலத்தை வீணாக்கிவிட்டேனே’ என்று குற்ற உணர்வு கொண்டார்.

மாசி மகம் வந்தது. அந்த வட்டார வடமர்கள் எல்லோரும் முதல் நாள் மாலையே புறப்பட்டு வந்துவிட்டார்கள். ஒவ்வொருவரிடமும் ஆங்கிரஸர் தனித்தனியே கலந்து ஆலோசித்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன் அவர்கள் ஒன்று கூடி இருந்தபோது அவர்கள் மனதில் இருந்த உற்சாகம், நம்பிக்கை இப்பொழுது இல்லை என்பதை அவர்களது முகம் காட்டியது. ஒரு சோகமான அமைதி அங்கே நிலவியது.

ஆங்கிரஸர் பேசத் தொடங்கினார்.
“சிவஸ்வரூபமான பிராமணோத்தமர்களுக்கு வணக்கம். நம் நாட்டுப் பிரஜை ஒருவர் அகால மரணம் அடைவிக்கப்பட்டது நமக்கு வருத்தம் தருகிறது. வளர்ந்து வரும் இளைஞனைப் பறிகொடுத்த உறவினர்களின் துக்கத்தை உணர்கிறேன். இது அவர்களுக்கு மட்டும் இழப்பு அல்ல. நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதற்காக நம் அரசர் போட்ட திட்டத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவாகக் கருதுகிறேன். வடம சமூகம் முழுவதும் பாதுகாப்பு இழந்ததாக உணர்ந்து கலங்கி இருக்கிறீர்கள் என்பதை அறிவேன். கலக்கம் அடையவேண்டாம். பிறந்த மண்ணுக்குத் திரும்பிப் போகலாமா என்ற யோசனையும் வேண்டாம்.

“இது ஒரு அரிதான நிகழ்ச்சி. சோழநாட்டில் கடந்த 200 ஆண்டுகளில் ஒரு கொலை கூட நடந்ததில்லை. சமணர்களின் அகிம்சைப் பிரசாரம் எல்லை மீறிப் போய், போர் புரிய முன்வரக் கூடிய வீரர் கூட இல்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டது. இதனால்தான் தமிழ் அரசர்கள் பலமிழந்து, நாம் அனைவரும் களப்பிரருக்கு அடிமையாக வாழ்கிறோம்.

“இது போன்ற கொலைகள் தொடருமோ என்ற அச்சம் வேண்டாம். இனி அந்த நிலை மாறும். பாம்பு தனக்கு மிக சமீபத்தில் வந்துவிட்டது, இனி தப்பிக்க முடியாது என்று உணரும் போது தவளை மிக ஆக்ரோஷமாகச் சண்டை இடும். அது போலத்தான் இதுவும். சமணம் அழியும் காலம் வந்து விட்டது. அதைக் காப்பாற்றக் கடைசி முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். சைவம் ஓங்கும். அதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துவிட்டன. அவற்றில் இதுவும் ஒன்று.

“அகிம்சையைப் போதிப்பவர்களே அதைக் கடைப்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இனி அவர்கள் பேச்சில் மக்களுக்குக் கொஞ்சம் நஞ்சம் மிச்சமிருந்த மரியாதையும் போய்விடும். எனவே இதை ஒரு நல்ல சகுனமாகவும் கருதுகிறேன். பாரதப் போரில் அரவான் பலியிடப்பட்டது போல சோழநாட்டின் நன்மைக்காக இன்று இந்த இளைஞன் பலி ஆகி இருக்கிறான். பாண்டவர்கள் வெற்றி பெற்றது போல இறுதியில் நாம் வெற்றி பெறுவோம்.

“கொலை செய்தவர் முறைப்படி விசாரிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு விட்டார் என்று நேற்று செய்தி வந்தது. அது மட்டுமே உங்களுக்குப் பாதுகாப்பு தராது என்பதை அறிவேன். குற்றம் செய்யத் துணிபவர்கள் எல்லோருமே தண்டனைக்கு அஞ்சிக் குற்றம் செய்யாது இருப்பார்கள் என்று கூற முடியாது. சோழ நாட்டின் பெரும்பாலான மக்கள் நீதிக்கும் அறநெறிகளுக்கும் கட்டுப்பட்டவர்கள்தான். இருப்பினும் வழி தவறிய சிலர் தவறாக நடக்கக் கூடும்.

“ஒற்றர் படை வலுப்படுத்தப்பட்டுள்ளது. வடமர்களுக்கு எதிராக யார் யார் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று அறிந்து அவர்களைத் தனிக் கவனத்தின் கீழ்க்கொண்டுவர அரசர் ஏற்பாடு செய்திருக்கிறார்.

“மக்கள் இணக்கமாக வாழும் நிலை ஏற்படச் சில ஆண்டுகள் ஆகும். அது வரை உங்களுக்கு ஆபத்து நேராமல் பாதுகாப்பது என் கடமை. எனவே ஒரு அறிவுரை கூற விரும்புகிறேன். வடமர்கள் எவரும் பிற சாதியினர் கொடுக்கும் உணவுப் பொருட்களை உண்ண வேண்டாம். சோழியப் பிராமணர்கள் வீட்டில் கூட நீங்கள் சாப்பிட வேண்டாம். வடமர்களைத் தவிர பிறருடன் திருமண உறவு கொள்ளாதீர்கள். உறவு ஏற்பட்டால் சாப்பிட நேரிடும். பின்னர் இது போன்ற விரும்பத் தகாத விளைவுகள் ஏற்பட வழியாகும். சமணர்களால் ஏற்படும் அச்சம் முழுமையாக நீங்கும் வரை இதைக் கடைப்பிடிப்போம்.

“உங்களால் சைவம் தழைக்கட்டும். சைவத்தால் சோழநாடு செழிக்கட்டும். சோழர்களால் தமிழ் கூறும் நல்லுலகம் பெருமை பெறட்டும்.”

பேசி நிறுத்தினார்.

வடமர்களில் ஒருவர் எழுந்தார். “ஒவ்வொரு கோயிலிலும் பல வகைச் சாதியாரும் பூசை செய்கிறார்களே, அவர்கள் இறைவனுக்கு நிவேதனம் செய்த பிரசாதத்தைக் கொடுத்தால் அதைச் சாப்பிடலாமா, கூடாதா?”

“முக்கியமான பிரச்சினைதான். சிவாலயங்களில் பூசை செய்பவர் யாராக இருந்தாலும் உணவு சமைப்பவர் வடமராகவே இருக்கட்டும். ஒவ்வொரு கோயிலிலும் சமைப்பதற்கென்று ஒரு பிராமணப்பிள்ளையை நியமிக்க அரசரிடம் பரிந்துரைக்கிறேன்.”

மற்றொருவர் கேட்டார், “நாங்கள் ஒரு கிராமத்துக்கு ஒன்று அல்லது இரண்டு குடும்பங்கள்தான் இருக்கிறோம். நம் சமூகத்துக்குள்தான் திருமணம் செய்வது என்று வைத்துக் கொண்டால் எங்கள் பெண் பிள்ளைகளுக்கெல்லாம் எப்படிக் கல்யாணம் ஆகும்?”

“உங்கள் பிள்ளை வேத அத்தியயனம் பூர்த்தி செய்து சமாவர்த்தனம் ஆனபிறகு அவனை யாத்திரையாகப் புறப்பட்டுப் போகச் சொல்லுங்கள். வழியில் வடமர் வீடுகளில் தங்கி உணவு உண்டு அவன் பல கிராமங்களையும் சுற்றி வரட்டும். பெண்ணைப் பெற்றவர்கள் அவனைத் தங்கள் பெண்ணுக்குப் பொருத்தமானவன் எனக் கருதினால் திருமணம் நிச்சயம் செய்யட்டும். இந்த முறையில் உங்கள் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் நடத்தலாம்” என்றார் ஆங்கிரஸர்.

அவரவரும் கனத்த மனத்துடன் அவரவர் கிராமம் நோக்கித் திரும்பினர்.
-------------------------------------------------------------------------------------------
* கும்பகோணம் மகாமகக் குளத்தின் வடகரையில் இன்று காசிவிசுவநாதர் கோயில் என்று அழைக்கப்படுவது முன்பு குடந்தைக் காரோணம் எனப்பட்டது.
 
வளவன் கனவு- 14

காழியில் ஆழிப் பேரலை**

ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூருமிவ னென்ன
அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததோர் காலமிது வென்னப்
பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
-சம்பந்தர்
வருடங்கள் உருண்டோடின. செந்தீ வளவன் சிவபதவி அடைந்தார். அவரது மகன் செம்மேனிச் சோழன் பதவிக்கு வந்து தன் தந்தையின் லட்சியங்களைப் பின்பற்றினார். அவர் காலத்தில் காழி, கடையூர், வீழிமிழலை ஆகிய மூன்று மயானக் கோயில்களின் கூரைகள் செங்கல் கொண்டு ஒட்டிய மண்டபங்களாக மாற்றப்பட்டன. வடமர்களில் புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்குப் புதிய மானியங்கள் அளிக்கப்பட்டன.
கோயில் இல்லாத ஊர்களில் புதிய கோயில்கள் கட்டப்பட்டன. அம்மையாரின் பாடல்கள் மக்களிடையே பரவின. அதனால் மக்களுடைய மனப்போக்கில் நல்ல மாற்றம் தென்பட்டது. துன்பங்கள் வந்தால் அவற்றை அனுபவித்துத்தான் தீர்க்கவேண்டும், அதிலிருந்து விடுபட முயலக்கூடாது, அப்பொழுது தான் மறுபிறவி இல்லாத மோட்ச உலகம் கிடைக்கும் என்றது சமணம். நமக்குத் துயரம் வந்தால் இறைவன் மாற்றுவான், இவ்வுலக வாழ்வையும் மறுஉலக வாழ்வையும் தரக்கூடியவன் இறைவன், அவனைப் பணிந்தால் எந்த உலகம் வேண்டினாலும் தருவான், அவன் நம்மை மீண்டும் பிறக்க வைத்தாலும் அவனிடம் அன்பு செலுத்தினோம் என்றால் வாழ்க்கை சுமையாக இராது என்று அம்மையார் கூறியது மக்களுக்கு மனதுக்கு இதமாக இருந்தது. இறைநம்பிக்கை ஏற்பட்டது. எப்பொழுதும் மறு உலக வாழ்வைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இவ்வுலக வாழ்க்கையைப் புறக்கணிக்கும் போக்கு மறைந்தது. உலக வாழ்க்கையில் ஈடுபாடு ஏற்பட்டது. கலைகள் வளரத் தொடங்கின. கோயில் கட்டும் கலையில் புதிய உத்திகளைக் கையாளத் தொடங்கினர். சோழநாடு மீண்டும் பழைய பெருமையை அடையவேண்டுமென்ற எண்ணம் மக்களுக்கும் ஏற்பட்டது. படையில் மக்கள் பெரும் அளவில் சேரத் தொடங்கினர். களப்பிரர்களைத் தோற்கடித்து சோழநாட்டை அடிமைத்தளையிலிருந்து நீக்கவேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே வளரலாயிற்று.
மேலும் சில வருடங்கள் கழிந்தன. செம்மேனிச் சோழனுக்குப் பின் அரசரான ஆதிரை வளவனும் தன் பாட்டனார் வகுத்த பாதையிலிருந்து சற்றும் வழுவாமல் தொடர்ந்து சென்றார். அவர் காலத்தில் பல போர்கள் நடந்தன. ஒவ்வொன்றிலும் அவரே வெற்றி பெற்றார். அவற்றின் முடிவில் உறையூர் மீட்கப்பட்டது. களப்பிரர்க்குக் கப்பம் கட்டி வந்த உறையூரின் குறுநில மன்னர் சோழர்களுக்குக் கப்பம் கட்ட ஒப்புக் கொண்டார்.
அவர் காலத்தில் வெற்றிகரமான நிகழ்ச்சிகள் பல தொடர்ந்து நடைபெற்றமையால் அவர் சுபதேவர்* என்று அழைக்கப்பட்டார். அந்தப் பெயருக்குப் பங்கம் ஏற்படுத்துவது போல ஒரு நிகழ்வு நடைபெற்றது. ஆனால் முடிவில் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்பது போல பெரிய விபத்து தவிர்க்கப்பட்டு சுபமாகவே முடிந்தது.
கார்வானிலிருந்து வந்த அந்தணர்கள் ஒவ்வொருவராகச் சிவகதி அடைந்தனர். அவர்களது பிள்ளைகளும் பேரர்களும் கொள்ளுப் பேரர்களும் தலையெடுத்தனர். அவர்கள் தங்கள் முன்னோர்களின் தர்மத்தை விடாமல் தொடர்ந்து நடத்தி வந்தனர். வேத கோஷமும் வேள்விப்புகையும் அங்கு விண்ணை நிறைத்தன. கொள்ளிடத்திற்கு அக்கரையிலிருந்த தில்லையிலிருந்து மக்கள் அங்கு வந்து அவர்களது தீ வழிபாட்டையும் கோவிலில் நடைபெறும் லிங்க வழிபாட்டையும் கண்டு பரவசப்பட்டுச் சென்றனர். காழி அந்தணர்களும் ஆறு கடந்து சென்று மக்களுக்கு இறைநெறியையும் அறநெறியையும் புகட்டி வந்தனர்.
ஒரு நாள் காலை. காழிக் கடற்கரையிலிருந்து மீனவர்கள் கூட்டமாக ஓடி வந்தனர். ‘ஓடிப் போங்கள், கடல் உள்ளே வந்து கொண்டிருக்கிறது’ என்று கத்தினர். நிறுத்தி விசாரித்தவர்களிடம், ‘நிற்க நேரம் இல்லை. இன்னும் அரை நாழிகையில் கடல் இங்கே வந்துவிடும். தொலைவில் தென்னை மரம் உயரத்திற்கு அலை ஆர்ப்பரிக்கிறது. அது இங்கே வந்தால் ஊரே அழிந்துவிடும்’ என்று சொல்லிக் கொண்டே மேற்கு நோக்கி ஓடினர்.
காழி அந்தணர் குடும்பங்கள் யாவும் வீதிக்கு வந்து விட்டன. அவர்களில் கவுண்டின்ய கோத்திரத்தைச் சேர்ந்த மிக மூத்தவர் ஒருவர் இருந்தார். கார்வானிலிருந்து வந்தவர்களில் அவர் மட்டுமே மிச்சம். 90 வயதைக் கடந்த அவர் கூறினார், “நாம் இந்தத் தெய்வத்தை நம்பி இங்கே குடியேறி இருக்கிறோம். அந்தத் தெய்வ நம்பிக்கையை நாம் காப்பாற்றினால் அது நம்மைக் காப்பாற்றும். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் ஓடுங்கள். இளைஞர்கள் இங்கு இருந்து லிங்கப் பெருமானை நீர் தாக்காத உயரத்துக்குக் கொண்டு போங்கள்” என்று உத்திரவிட்டார். நான்கு இளைஞர்கள் அவசரம் அவசரமாக லிங்கத்தை ஆட்டி அசைத்துப் பிடுங்கினர். தோளில் சுமந்துகொண்டு புறப்பட்டனர்.
“மனிதன் பிழைப்பதே பெரிய கஷ்டமாக உள்ளது. கல்லைக் கட்டிச் சுமக்கிறீர்களே! உங்களால் வேகமாக ஓட முடியுமா?” என்று கேட்டுக் கொண்டே ஓடினார் ஒருவர்.
“இது வெறும் கல் இல்லையப்பா. இது சோழநாட்டை முன்னேற்ற அரசர் செந்தீ வளவனும் அவரது சந்ததியாரும் மேற்கொண்டுள்ள தீவிர விரதத்தின் அடையாளம். அவர் எங்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையின் அடையாளம். நம்பிக்கை மலையை நகர்த்தும் என்ற உண்மையின் அடையாளம். வடிவத்தைக் காத்தால் சக்தியைக் காக்கலாம். சக்தியின் பொருட்டாக வடிவத்தைக் காக்க வேண்டும். இதைக் காப்பதில் நாம் காட்டும் ஈடுபாடு நாட்டு மக்களுக்கு இன்றும் வருங்காலத்திலும் ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுக்கும்” என்றார் பெரியவர். இளைஞர்கள் அவருக்குக் கட்டுப்பட்டு நின்றனர். அவரது யோசனையின் பேரில் ஒரு உயரமான தென்னை மரத்தை அணுகினர். ‘முடிந்தவர் முடிந்த வரை ஏறுங்கள் மரத்தில்’ என்றார் பெரியவர். அவருடைய பேரன் விச்வேசன்தான் முதலில் ஏறினான். வேறு பத்து இளைஞர்கள் ஏறி வெவ்வேறு உயரத்தில் தொத்திக் கொண்டனர். ஒருவர் தோள் மீது ஒருவராக நின்று ஒரு மனித ஏணியை உருவாக்கினர். மற்றவர்கள் ஒரு பிரப்பங்கூடையில் லிங்கத்தை வைத்தனர். நீண்ட பிரப்பங்கொடியால் அதைப் பிணைத்து அதன் முனையைக் கீழிருந்தவரிடம் கொடுத்தனர். அவர் அதைப் பிடித்துத் தூக்கி மேலே உள்ளவரிடம் கொடுக்க, படிப்படியாகக் கூடை உச்சாணியில் இருந்த விச்வேசனிடம் போயிற்று. அத்தனை பேரும் மரத்தைக் கட்டிக்கொண்டு அங்கேயே நின்றனர். உயிர் போனாலும் இந்த இடத்தை விட்டு நகரமாட்டோம் என்ற உறுதியுடன் நமச்சிவாய மந்திரத்தைக் கோஷித்துக்கொண்டு நின்றனர்.
தொலைவில் அலைகள் தென்னைமர உயரத்துக்கு எழுவதையும் தடால் என்று கீழே விழுவதையும் மரத்தின் மேல் பகுதியில் நின்றவர்களால் பார்க்க முடிந்தது. அந்த உயரமான அலைகள் கரையை நோக்கி நகர்ந்தன. அவற்றின் விளைவால் ஊருக்குள் நீர் புகத் தொடங்கியது. தென்னை மரத்தைக் கட்டிக் கொண்டு நின்றவர்களில் கீழே இருந்தவரின் முழங்கால் வரை நீர் வந்தது. அது மேலும் உயர்ந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. நமச்சிவாய கோஷம் இன்னும் வலுவாக எழும்பிற்று. நல்ல வேளையாக அப்படி ஆகாமல் அலை வரும்போது உயர்வதும் தாழும்போது வடிவதுமாக இருந்தது. கடல் கரையைக் கடந்து உள்ளே வரவில்லை. இப்படியே ஐந்து நாழிகை நேரம் கழிந்தது. இவர்களது உறுதியின் முன் கடல் தோல்வி அடைந்தது. அலைகளின் உயரம் குறைந்து கொண்டே வந்து இயல்பு நிலை ஏற்பட்டது. வந்த ஆபத்து நீங்கியது என்பதை உறுதி செய்துகொண்டபின் மெதுவாகக் கூடையை இறக்கினர். அதனுடைய பழைய இடத்தில் வைத்தனர்.
உச்சியிலிருந்து இறங்கி வந்த பேரன் ‘தாத்தா எங்கே?’ என்று கேட்டான். அந்த வினாவை எல்லோரும் எதிரொலித்தனர். ‘மற்றவர்களுடன் மேற்கு நோக்கிப் போயிருப்பாரோ’ என்றனர் சிலர். இல்லை. ‘அவர் மரத்தடியில் நின்றுகொண்டு ருத்ரம் சொல்லிக் கொண்டிருந்தாரே’ என்றனர் சிலர். மரத்தடிக்குப் போய்ப் பார்த்தனர். அங்கே கடல் நீர் வந்து சேறாக்கிய நிலத்தில் கிழவர் அமைதியாகப் படுத்திருந்தார். அசைத்துப் பார்த்தார்கள். அசைவில்லை. அவர் சிவகதியை அடைந்துவிட்டார். சோழமன்னர் அவரை எதற்காக அழைத்து வந்தாரோ, அந்தக் கடமையை நிறைவேற்றிவிட்ட நிறைவு தெய்விக ஒளியாக அவர் முகத்தில் பிரகாசித்தது.

*சுபதேவர்- பெரியபுராணத்தில் இந்தப் பெயர் தான் கொடுக்கப்பட்டுள்ளது.
** சுனாமி ஒன்று சம்பந்தர் காலத்துக்கு முன் ஏற்பட்டிருந்ததும் காழி நகரம் அதில் தப்பிப் பிழைத்ததும் அவரது பாடல்கள் பலவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தலைநகர் மாற்றம்

புள்ளி னம்புகழ் போற்றிய பூந்தராய்

வெள்ளந் தாங்கு விகிர்தன் அடிதொழ
ஞாலத் தில்லுயர் வாருள்கு நன்னெறி
மூல மாய முதல்வன்தானே
-சம்பந்தர்

ஆழிப் பேரலை காழி நகருக்குள் நுழையவில்லை. அது மட்டுமல்ல, கடல் தன் பழைய எல்லையிலிருந்து அரைக் காத தூரம் பின் வாங்கியும் போய் விட்டது. சற்றுத் தூரத்தில் இருந்த புகாரில் அந்த அளவு தூரம் கடல் உள்ளே நுழைந்து நகர் முற்றிலுமாக நீரினுள் மூழ்கி விட்டது. கடையூர் மயானக் கோயிலில் கடல் நீர் உட்புகுந்து கோயில் முழுகி விட்டது. ஆனால் ஒரு நாள் கழிந்து வடிந்து விட்டது. கோயில் வளாகம் முழுவதும் மண்ணும் சேறும் இறந்த பிராணிகளின் உடல்களுமாகக் கிடந்தன. காழி மட்டும் சிறிதளவு கூடப் பாதிக்கப்படாமல் காப்பாற்றப்பட்டது இறைவனின் திருவுள்ளம் என்று கருதினார் ஆதிரை வளவன். அது ஒரு புண்ணிய பூமி, அங்கு ஒரு மகான் தோன்றுவார் என்று தன் தாத்தா கனவு கண்டு சொன்னதை நினைவு கூர்ந்தார். அது வெறும் கனவு அல்ல, தீர்க்க தரிசனம் என்பதை உணர்ந்தார்.
அரசர் தம் மீது கொண்டிருந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவதற்காகத் தன் உயிரையும் பொருட்படுத்தாது சிவலிங்கத்தைக் காப்பாற்றிய வேதியர்களின் தியாகத்தை நன்றியுடன் பாராட்டினார் அவர். அந்தக் கோயில் ஒரு மாளிகையாக உயரும் என்று செந்தீ வளவன் சொல்லியிருந்ததை அவர் மறக்கவில்லை. அதைச் செயல்படுத்துவதைத் தன் முதல் கடமையாகக் கொண்டார். லிங்கத்தை அதன் பழைய இடத்தில் பிரதிஷ்டை செய்தார். இறைவனின் திருவுரு சிறிது நேரம் தென்னை மர உச்சியில் வைக்கப்பட்டிருந்ததை நினைவு கூரும் வகையில் பின்னால் ஒரு உயரமான கட்டிடம் எழுப்பி அதில் தோணியப்பராக வந்து காழியைக் காப்பாற்றிய பெருமானின் உருவச்சிலையைச் சுதையில் அமைத்தார்.

கடையூர் மயானத்தில் தன் தந்தை கட்டிய கோயில் நீரில் மூழ்கிச் சிதிலமடைந்ததைக் கண்டு வருந்தினார் அரசர். வருங்காலத்தில் இனி அத்தகைய நிகழ்வுகளால் பாதிக்கப்படாவண்ணம் உள்நாட்டில் ஒரு கோயில் கட்ட விரும்பினார். நல்ல வேளையாக, மயானக் கோயிலைக் கட்டிய ஸ்தபதிகளில் பலர் உயிருடன் இருந்தார்கள். அவர்களைக் கொண்டு அதே போன்ற ஒரு கோயிலை மயானக் கோயிலிலுக்கு மேற்கில் ஒரு நாழிகை தூரத்தில் அமைக்கச் செய்தார்.
காழியில் நடந்த நிகழ்ச்சிகள் நாடெங்கும் பரவின. அக்கம்பக்கத்திலிருந்த மக்கள் எல்லோரும் அங்கு வந்து பார்த்து வியந்து சென்றனர். வடம வேதியரின் புனித பூமி அது என்று போற்றினர். கொள்ளிடத்திற்கு மறு கரையிலிருந்த சமணர்களையும் இது உலுக்கிச் சைவத்தின் பால் நாட்டம் கொள்ளச் செய்தது. மூன்று தலைமுறைகளுக்கு முன் மேற்கே மலைநாட்டில் குடியேறிய சோழியப் பிராமணர்கள் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டார்கள். தங்கள் முன்னோர்களின் இடத்துக்கு மீண்டும் வரவேண்டும் என்ற எண்ணம் அவர்களிடையே தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்தது. இப்பொழுது ஒரு நல்ல வாய்ப்பு என்று எண்ணிய அவர்களில் 3000 பேர் தில்லையில் வந்து மீண்டும் குடியமர்ந்தார்கள். கோவிந்தராசர் விண்ணகரம் இருந்த சித்திரகூடம் மீண்டும் தன் பழைய பொலிவை அடைந்தது. தங்கள் பழைய இடத்தில் தாங்கள் குடியேற மூலகாரணமான சிவபெருமானுக்கு நன்றி செலுத்தும் வகையில் கோயில் வளாகத்தில் ஒரு லிங்கத் திருமேனி அமைத்து அதற்கு மூலநாதர் எனப் பெயரிட்டனர். இதை அவர்களில் சிலர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனாலும் பெரும்பாலானோரின் கருத்துக்கு மாறாக அவர்களால் எதுவும் பேச முடியவில்லை.

ஆழிப் பேரலைக்குப் பூம்புகார் பலியானபின் அரசர் சுபதேவர், தலைநகர் ஆரூரில் இருப்பது உசிதம் இல்லை என்று கருதினார். ஆரூரிலிருந்து ஒரு காத தூரத்தில் கடல் உள்ளது. அடுத்த பேரலை இதை விடப் பெரியதாக வந்தால் ஆரூர் பிழைக்காது. படைவீரர்களின் எண்ணிக்கையும் வர வர அதிகரித்து வருகிறது. எனவே மேற்கில் ஒரு புதிய தலைநகரை உருவாக்க நினைத்தார். குடந்தைக் காரோணத்திற்குத் தென்மேற்கில் அமைக்கலாம் என அமைச்சர்கள் ஆலோசனை கூறினர். அதன்படி திருமலைராயன் ஆற்றுக்கும் முடிகொண்டான் ஆற்றுக்கும் இடையில் பழையாறை என்னுமிடத்தை மையமாகக் கொண்டு புதிய தலைநகர் உருவாகியது. சோழன் மாளிகை என்ற பெயரில் ஒரு பெரிய மாளிகை கட்டப்பட்டது. அதன் நான்கு திசைகளிலும் தாராசுரம், பட்டிசரம்,* சத்திமுற்றம், நல்லூர் ஆகிய இடங்களில் சிவாலயங்கள் கட்டப்பட்டன. நந்திபுரம் என்னுமிடத்தில் ஒரு விண்ணகரமும் கட்டப்பட்டது.
படைவீரர்கள் தங்குவதற்கென ஆரியப்படையூர், பம்பைப்படையூர், மணற்படையூர், புதுப்படையூர் என நான்கு பாடிகள் அமைக்கப்பட்டன. இரு காததூரம் சுற்றளவுள்ள இந்நகரம் ஆங்காங்கு பல காவல் கொத்தளங்களை உடையதாகத் திட்டமிட்டுக் கட்டப்பட்டது. ஆனால் சுபதேவருக்கு அதில் குடியேறும் பாக்கியம் கிட்டவில்லை. அவரது மறைவுக்குப்பின் அவரது மகன் செங்கணான் என்ற கோச்செங்கட்சோழன் முதன்முதலாகப் பழையாறையிலிருந்து ஆட்சி செய்யத் தொடங்கினார்.

செங்கணான் ஆட்சியில் படை வலிமை மேலும் பெருகியது. உறையூரிலிருந்த குறுநில மன்னர் நீக்கப்பட்டார். உறையூர் சோழர்களின் நேர் ஆட்சியின் கீழ் வந்தது. ஆட்சிப்பரப்பு பெருகியதால் சோழர்களின் செல்வ வளம் பெருகியது.

செங்கணான் இறைபக்தி மிக உள்ளவர். மக்களிடத்திலும் இறை உணர்வு பெருகவேண்டும் என்பதற்காகத் தன் நாட்டில் பல ஆலயங்களைக் கட்டினார். சமணம் செல்வாக்கு இழந்தது. சமணர்கள் கூட்டம் கூட்டமாகச் சைவத்தை ஏற்றுக்கொண்டனர். சமணப் பள்ளிகள் பாழடைந்து கிடந்தன. சில பிற்காலச் சமணத் துறவிகள் ஒழுக்கம் குன்றினார்கள் என்றாலும் சமணப் பள்ளிகள் தவம் புரிந்தோர் பலர் வாழ்ந்த புனித பூமி என்பதால் செங்கணான் அவற்றை இடிக்கவில்லை. அவற்றைச் சுற்றிச் சுவர் எடுத்து சமாதி போல் கட்டி அதன் மேல் சிவாலயங்களையும் விண்ணகரங்களையும் கட்டினார். துறவிகளின் சமாதி மேல் வழிபாட்டிடங்கள் அமைப்பது வழக்கமாக இருந்ததால் இது மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. உயரமாக அமைந்த மேடைகளின் மேல் இருந்ததால் அவை மாடக் கோயில்கள்** எனப்பட்டன.


* இன்று பட்டீஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது
** யானை ஏறாமல் இருப்பதற்காக மாடக்கோயில்கள் கட்டப்பட்டன என்று சொல்லப்படுகிறது. ஆனால் சோழநாட்டில் அந்த அளவு காட்டு யானைகள் சுதந்திரமாகத் திரிந்தன என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top