• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

வளவன் கனவு- வரலாற்று நாவல்

Status
Not open for further replies.
16 சப்த விடங்கர்கள்

நீரானே நீள்சடை மேலொர் நிரைகொன்றைத்
தாரானே தாமரை மேலயன் தான்றொழுஞ்
சீரானே சீர்திக ழுந்திருக் காறாயில்
ஊரானே யென்பவர் ஊனமி லாதாரே
-சம்பந்தர்

உலகிலேயே முதல் முறையாகத் தெய்வத்தை ஆடும் கோலத்தில் கற்பனை செய்த பெருமைக்கு உரியவர் காரைக்கால் அம்மையார். பிரபஞ்சத்தைப் படைத்துக் காத்து அழிக்கும் செயலை அம்மையார் கருத்தில் உருவான ஆடும் கோலமே நன்றாகக் காட்டுவதாகச் சோழ அரசர் செங்கணான் கருதினார். அருவுருவத்தைக் காட்டும் லிங்கம் அன்றியும் இறைவனின் ஆடும் திருக்கோலத்தையும் சிலையாக வடித்து மக்கள் வழிபடும் வகையில் எல்லாக் கோயில்களிலும் அமைக்க வேண்டும் என விரும்பினார். என்றுமுள ஈசற்கு எல்லாமே என்றும் நிலைக்கக் கூடியதாக அமைய வேண்டும் என்ற அவரது முன்னோரின் கருத்தையே அவரும் கொண்டிருந்தார். சோழநாட்டில் கருங்கல்லும் கிடைப்பதில்லை. அதைச் செதுக்கத் தெரிந்தாரும் இல்லை. சுதைச் சிற்பம் செய்பவர்கள்தான் இருந்தார்கள். சுதை விக்கிரகங்கள் சில ஆண்டுகள் கழித்துக் காரை உதிரத் தொடங்கும். எனவே சுதையில் உருவம் அமைக்க அவருக்கு விருப்பமில்லை.

அப்பொழுது குடந்தை நகரில் பித்தளைப் பாத்திரம் செய்யும் தொழில் வளர்ந்து இருந்தது. அதை அடுத்த நாச்சியார்கோவிலில் வெண்கலப் பாத்திரங்கள் செய்யப்பட்டன. அந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி இறைவனின் உருவத்தை உலோகத்தில் செய்ய முடியும் என்று அவருக்குத் தோன்றியது. உலோகத்தில் ஆடற்பெருமானின் கோலத்தை வடிப்பவருக்கு ஆயிரம் பொன் தருவதாக நாட்டு மக்களுக்குப் பறையறைந்து அறிவிக்குமாறு ஊர்த்தலைவர்களுக்கு உத்திரவிட்டார் அவர். அத்துடன் உலோகத் தொழில் கற்றுக் கொள்ள முன்வருபவர்களுக்கும் மானியங்கள் தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சோழநாட்டின் தில்லைக்குத் தென்மேற்கில் காத தூரத்தில் மண்ணூர் என்று ஒரு சிறு கிராமம். அங்கு மட்பாண்டம் செய்யும் குலத்தில் தோன்றிய ஆதன் என்ற ஒரு இளைஞன் இருந்தான். அவன் தன் தந்தையிடம் மட்பாண்டம் செய்யும் தொழிலையும் ஐயனார் கோயில்களுக்குத் தேவையான யானை, குதிரை, வீரர்கள் பொம்மைகளைச் செய்யும் தொழிலையும் திறம்படக் கற்றுத் தேர்ச்சி பெற்றிருந்தான். விண்ணகரங்களில் சுதை விக்கிரகங்கள் செய்யவும் கற்றுக்கொண்டிருந்தான்.

ஒரு நாள் அந்த ஊர்த்தலைவர் அவனைக் கூப்பிட்டனுப்பினார். அவனைக் கண்டதும், “தில்லைக் கோட்டத் தலைவரிடமிருந்து ஓலை வந்திருக்கிறது. பொம்மை செய்கிறவர்களுக்கு உலோகத் தொழில் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறாராம் அரசர். அதைக் கற்றுக் கொண்டு உலோகத்தில் பொம்மை செய்தால் பரிசு உண்டாம். கற்றுக் கொள்கிறாயா?” என்றார்.

“சரிங்க. எங்கேங்க போகணும்?”

“நாச்சியார் கோவிலில் ஆதித்த ஆசாரி என்பவர் கிட்டே கற்றுக் கொள்ள வேண்டும். இன்னொரு விஷயம் இருக்கிறது, கேள். காரைக்கால் அம்மையார் பாட்டைப் படித்து அதில் சொன்னபடி கடவுளுடைய உருவத்தைச் செய்து கொடுத்தால் ஆயிரம் பொன் பரிசு என்று எழுதி இருக்கிறது. உனக்கு அந்தப் பரிசு கிடைக்கும் என்று தோன்றுகிறது. உன்னால் இந்த ஊருக்கும் பெருமை ஏற்படட்டும்.”

“அம்மையார் பாட்டு யாரிடத்தில் கிடைக்கும்?”

“தில்லையில் சித்ரகூடம் விண்ணகரில் புதிதாக லிங்கம் என்று ஒன்று வைத்துப் பூசை செய்கிறார்களாம். அங்கே ஒருவர் அம்மையார் பாட்டைத் தினமும் படிக்கிறார் என்று கேள்விப்பட்டேன். முதலில் அங்கே போய்ப்ப் பார்.”

ஆதன் புறப்பட்டு முதலில் தில்லையை அடைந்தான். அங்கே இருந்த அந்தணர் வீடுகளில் போய் விசாரித்தான். மகேச சர்மா என்ற இளைஞன் சிவலிங்க சன்னிதியில் அம்மையார் பாடல்களைப் படித்துக் கொண்டிருக்கிறான் என்பதை அறிந்தான். மகேசனிடம் சென்று அறிமுகப்படுத்திக் கொண்டான்.

மகேசன் அம்மையார் பாடல்களில் விவரிக்கப்பட்டுள்ள இறைவனின் உருவத்தை விளக்கினான். உடனே ஆதன் மண் தரையில் விரலால் படம் வரைந்து காட்டினான். பிறகு அதன் மேல் களிமண் கொண்டு முப்பரிமாண உருவத்தைச் செய்து காண்பித்தான். மிக அற்புதமாக அமைந்திருந்தது அந்தச் சிற்பம். “வெற்றி உனக்கே என்று என் உள் மனது சொல்கிறது. போய்த் தொழிலைக் கற்றுக் கொண்டு வா. நான் உனக்கு எல்லா உதவிகளும் செய்வேன்” என்று உறுதியளித்தான் மகேசன்.

அங்கிருந்து புறப்பட்டு இரண்டு நாள் நடந்து நாச்சியார்கோவிலில் ஆதித்த ஆசாரியின் தொழில் கூடத்தை அடைந்தான். அங்கு சோழநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வேறு ஏழு பேர் வந்திருந்தனர். எல்லாருமே இவனைப் போல் இளைஞர்கள். ஆசாரி வெண்கலப் பாத்திரம் செய்பவர். அவர் இந்த இளைஞர்களுக்கு அரசர் ஆணைப்படி தொழில் கற்றுக் கொடுத்தார்.
வெண்கலப் பாத்திரம் செய்ய வேண்டுமென்றால் செய்ய நினைத்த பாத்திரத்தைப் போல் மெழுகினால் ஒரு அச்சு செய்துகொள்வர். அதன் உள்ளும் புறமும் களிமண்ணால் கனமான பூச்சு இடுவர். அது காய்ந்ததும் அதிலுள்ள ஒரு ஓட்டை வழியாக மெழுகை உருக்கி எடுத்துவிடுவர். பின்னர் அந்த ஓட்டை வழியாக உலோகக் கலவையைக் காய்ச்சி ஊற்றுவர். இடைவெளியில் உலோகம் பரவி உறைந்து விட்டபின் களிமண்ணை உடைத்து எடுத்து விடுவர்.

ஆதித்த ஆசாரி தெளிவாகக் கூறிவிட்டார். “பாத்திரம் செய்வது வேறு, உலோகத்தில் பொம்மை செய்வது வேறு. பாத்திரங்கள் எல்லாம் ஒரு போக்கான வளைவை உடையவை. உருவங்கள் பல வளைவுகள், நெளிவுகள், சுளிவுகள் பல கோணங்களில் உள்ளவை. உலோகத்தை உருக்குவது வார்ப்பது ஆகிய வேலைகள்தான் நான் உங்களுக்குக் கற்றுத் தர முடியும். மற்றவை நீங்களாகத்தான் கற்றுக் கொள்ள வேண்டும்.”

இளைஞர்கள் ஒரு மாதத்தில் பாத்திரத் தொழில் கற்றுக் கொண்டனர். பல வளைவுகளை உடைய பொம்மை உருவத்திற்கு ஏற்ற வழி எது என்று யோசிக்கத் தொடங்கினர். தேன் மெழுகினால் பொம்மை செய்து அதன் மீது மண்ணால் மெழுகிவிட்டால் மண் அச்சின் உள்பகுதி அந்தப் பொம்மையின் வடிவத்தை வளைவு நெளிவுகளுடன் காட்டும். மெழுகை உருக்கி வெளியில் எடுத்து விட்டால் அவர்களுக்குத் தேவையான அச்சு கிடைத்துவிடும் என்று அறிந்தனர். ஆதித்த ஆசாரியின் வழிகாட்டுதலில் அவர்கள் இதைச் செயல்படுத்தினர். ஒரு பெண் கையில் விளக்கு வைத்திருப்பது போல மெழுகுப் பொம்மை செய்து அதிலிருந்து ஒரு வெண்கல உருவத்தை அவர்கள் வார்த்து எடுத்த போது அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. ஆயிரம் பொன் பரிசு பெறுவதில் முதல் படியைக் கடந்து விட்டோம் என நம்பினர். இந்த உருவத்தை அந்த ஊரின் பெயரால் நாச்சியார் விளக்கு என அழைத்தனர்.

தமிழ்நாட்டின் முதல் உலோக பொம்மையான அதை ஆசாரியும் அவரது எட்டு சீடர்களும் பழையாறைக்கு எடுத்துச் சென்றனர். அரசர் இதைப் பார்த்து மகிழ்ந்தார். எல்லோருக்கும் பரிசு கொடுத்துப் பாராட்டினார். அம்மையார் இறைவனைப் ‘பொன்னுரு’ ‘பொன்வரையே போல்வான்’, என்று வர்ணிப்பதால் இந்த வடிவத்தைப் பொன்னால் செய்தால் என்ன என்று தோன்றியது. அரசவைப் பொற்கொல்லரைக் கூப்பிட்டுக் கேட்டார். அவர், “வெண்கலத்திற்குப் பயன்படுத்தும் தாமிரம், துத்தநாகம், ஈயம் இவற்றோடு வெள்ளி, பொன் இவற்றையும் கலந்தால் உருவம் பொன் நிறமாக அமையும். முழுப் பொன்னால் செய்வதை விட இது உறுதியாகவும் இருக்கும்” என்று கூறினார்.

மாணவர்கள் தொழிலை நன்றாகக் கற்றுக் கொண்டுவிட்டனர். இனி அவர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொருவரும் தனியே முயற்சி செய்து ஆயிரம் பொன் பரிசைத் தானே அடைய வேண்டும் என விரும்பினர். தங்கள் தங்கள் ஊருக்குக் கிளம்பினர். அரசர் அவர்களுக்குத் தேவையான உலோகக் கட்டிகள், மெழுகு முதலான எல்லாப் பொருட்களையும் கொடுக்கச் செய்தார்.

அந்த எட்டுப் பேரில் திருக்காறாயில் என்ற ஊரைச் சேர்ந்த ஒரு இளைஞன் இருந்தான். அவன் ஐந்து உலோகக் கலவையைப் பயன்படுத்தி அழகிய விக்கிரகம் ஒன்று செய்தான். ஆனாலும் ஒரு பெருங்குறை இருந்தது. ஆடற் கோலத்தைக் காட்ட வேண்டுமென்றால் ஒரு காலை மேலே தூக்கவேண்டும். இந்த இளைஞன் செய்த இறைவனின் வடிவத்தில் இரண்டு கால்களும் சேர்ந்து நின்ற நிலையில்தான் வடிக்க முடிந்தது. ஆரூர், நாகை, நள்ளாறு, மறைக்காடு, வாய்மூர், கோளிலி ஆகிய ஊர்களிலிருந்து வந்த மாணவர்களும் அதே போலத் தனித்தனியே முயன்றனர். எல்லோருக்கும் நின்ற கோலம்தான் செய்ய முடிந்ததே தவிர அரசரின் விருப்பப்படி ஆடும் கோலத்தைச் சிலையில் வடிக்க முடியவில்லை. அவற்றில் நடனத்தைக் கற்பனைதான் செய்து கொள்ள வேண்டியிருந்தது. அவற்றைப் பார்த்த அரசர் அந்தச் சிலைகளை அந்தந்த ஊர்க் கோயிலில் வைத்துப் பூசிக்கச் செய்தார். உளி கொண்டு செதுக்காமல் செய்யப்பட்டதால் அந்த உருவங்கள் விடங்க மூர்த்திகள் எனப்பட்டன. திருக்காறாயில் மூர்த்தி ஆதி விடங்கர் எனப்பட்டது.

மாற்று வழிகளை யோசிக்குமாறு இளைஞர்களை அரசர் ஊக்குவித்தார்.
 
17 சமயப் பிளவு
வந்து எதிர்ந்த தாடகைதன் உரத்தைக் கீறி வரு குருதி பொழிதர வன்கணை ஒன்று ஏவி
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து வல்லரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்
செந்தளிர்வாய் மலர் நகை சேர் செழுந்தண் சோலைத் தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த அணிமணி - ஆசனத்து இருந்த அம்மான் தானே
-குலசேகர ஆழ்வார்

ஆதன் உலோகக் கட்டிகளைச் சுமந்து கொண்டு தன் ஊரை நோக்கிப் புறப்பட்டான். வழியில் மகேசனைப் பார்த்துத் தகவல் தெரிவிக்கலாம் என்று தில்லைக்குச் சென்றான்.
மகேசன் இவனுடைய தொழில் பயிற்சி பற்றி ஆர்வத்துடன் கேட்டறிந்தான். “இங்கேயே இருந்துவிடு, உனக்கு எல்லா வசதிகளும் செய்து தருகிறேன்” என்றான். ஆதன் ஒப்புக் கொண்டான்.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்து பார்த்தனர். அவர்களுக்கும் இதில் ஆர்வம் ஏற்பட்டது. ஆடும் நிலையில் ஒரு இறை வடிவம் உருவானால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்து மகிழ்ந்தனர். செய்தி ஊர் பூராவும் பரவியது.
தில்லைச் சோழிய அந்தணர்களில் கோவிந்த பட்டர் என்று ஒருவர் இருந்தார். அவர் சித்திரகூடம் விண்ணகரத்தில் பூசை செய்பவர். அவருக்குச் சித்திரகூட வளாகத்தில் சிவலிங்கம் வைக்கப்பட்டதில் விருப்பம் இல்லை. என்றாலும் அவருக்குச் சாதகமாகப் பேசக்கூடியவர் மிகுதியாக இல்லாததால் அவர் முணுமுணுத்துக் கொண்டு பேசாமல் இருந்துவிட்டார்.
ஆடற்பெருமானின் உருவச்சிலை செய்வதற்கு ஏற்பாடு நடக்கிறது என்ற செய்தி அவருக்குக் கவலை தந்தது. ‘ஏற்கெனவே ஒரு லிங்கத்தை விண்ணகர வளாகத்தில் வைப்பதற்கு அனுமதி கொடுத்துவிட்டோம். இதை இப்படியே விட்டால் விண்ணகரம் முழுவதும் இவர்கள் ஆக்கிரமித்து விடுவார்கள். மயானத்தாடி என்பது வேதத்தில் இல்லாதது. இந்த அவைதிகம் பரவினால் ஒரு காலத்தில் கோவிந்தராஜாவையே கடலில் தூக்கி எறிந்தாலும் எறிந்துவிடுவார்கள்’ என்று நினைத்தார். விண்ணகரத்துக்கு வருபவர்களிடம் எல்லாம் இதைப் பற்றிப் புலம்பிக்கொண்டிருந்தார். சிலர் அவர் சொல்வது நியாயம்தான் என ஒப்புக் கொண்டார்கள்.
‘முன்னர் ஒரு தடவை அவைதிக மதத்தவர்கள் தில்லையை ஆக்கிரமித்துக் கொண்டார்கள். அதனால் பிராமணர்கள் எல்லாரும் நாட்டை விட்டே ஓட வேண்டியிருந்தது. மூன்று தலைமுறைகளுக்குப் பின் இப்பொழுதுதான் திரும்ப வந்திருக்கிறோம். இனி ஒரு முறை இந்த அவைதிகம் தலைதூக்க இடம் கொடுக்கக் கூடாது. முளையிலேயே கிள்ள வேண்டும்’ என்றனர்.
கோவிந்த பட்டர் சொன்னதை ஏற்றுக்கொள்ளாதவர்களும் இருந்தார்கள். “எது ஐயா அவைதிக மதம்? வேத ருத்ரன்தான் சிவன். அவரே ஆடற்பெருமான்” என்றனர்.
ஊர் பூராவும் இதே பேச்சு. கோவிந்த பட்டருக்குச் சாதகமாகச் சிலரும் எதிர்ப்பாகச் சிலரும் அணி திரண்டனர். ஆங்காங்கு வாதப் பிரதி வாதங்கள், பூசல்கள், கைகலப்புகள் ஏற்பட்டன. இது நாள் கணக்கில் தொடர்ந்தது.
ஒரு நாள் கோவிந்த பட்டர் தன் ஆதரவாளர்கள் விண்ணகரத்தில் கூடியிருக்கும் போது கர்ப்பக்கிரகத்தின் மேல்தளத்தில் நின்று கொண்டு ஒரு அறிவிப்பை வெளியிட்டார். “நாம் உயிரைக் கொடுத்தாவது நமது சனாதன தர்மத்தைக் காப்பாற்றுவோம் என்று பிரதிக்ஞை எடுத்துக் கொள்ள வேண்டும். நாராயணனே வேதப் பிரதிபாத்யமான தெய்வம். இது சத்தியம்” என்று சொல்லிக் கொண்டே யாரும் எதிர்பாராத வகையில் அங்கிருந்து தலைகீழாக விழுந்தார். மண்டை சிதறி உயிர் துறந்தார். கூட்டம் திகைத்து நின்றது. அடுத்த கணம் அவர்களிடம் ஒரு வெறி கிளம்பியது. ‘நானும் உயிர் விடுகிறேன்’ என்று சொல்லிக் கொண்டு சிலர் மேலே ஏறினார்கள். மற்றவர்கள் அவர்களைத் தடுத்து, ‘கோவிந்த பட்டரின் லட்சியத்தை நிறைவேற்ற நாம் உயிருடன் இருந்தாக வேண்டும்’ என்பதை நினைவுபடுத்தினர்.
பட்டரின் மரணம் ஊரில் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியது, மக்கள் ஆடற்பெருமானின் ஆதரவாளர், எதிர்ப்பாளர் என இரண்டு அணிகளாகப் பிரிந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே வெவ்வேறு அணிகளில் போய்ச் சேர்ந்தனர். பழம் தமிழ்ச் சமயம் சைவம் வைணவம் என இரண்டாகப் பிளந்தது.
இந்தச் சூழ்நிலையில் இங்கு இருந்துகொண்டு சிலை வடிப்பது சாத்தியம் இல்லை என்று மகேசன் கருதினான். கொள்ளிடம் தாண்டி அக்கரையில் சிவலிங்க வழிபாட்டாளர்கள் நிறைய இருக்கிறார்கள், அங்கு போய்விடலாம் என்று ஆதனுடன் கிளம்பினான். அவர்களுடன் மேலும் ஐம்பது இளைஞர்கள் வந்தார்கள். எல்லோரும் காழியை நோக்கிப் புறப்பட்டனர்.
அரசருக்கு ஒற்றர் மூலம் இந்தச் செய்தி கிடைத்தது. ஆடற்பெருமான் விஷயம் மக்களிடையே இவ்வளவு கலவரத்தை ஏற்படுத்தும் என்று அவர் எதிர்பாராதால் மிகுந்த வருத்தம் அடைந்தார். அதற்காக சிலை வடிக்கும் வேலை தடைபடக்கூடாது என்று விரும்பினார். தில்லையிலிருந்து வருபவர்களுக்குத் தேவையான உணவு அளிக்க ஏற்பாடு செய்யுமாறும் வீடு கட்டித் தருமாறும் காழி ஊர்த்தலைவருக்கு உத்திரவிட்டார். காழி நகருக்குக் கிழக்கே கடல் பின்வாங்கியதால் ஏற்பட்ட புதிய நிலம் புல் பூண்டு முளைத்து இருந்தது. அங்கு தில்லையிலிருந்து வந்தவர்களுக்குக் கூரை வீடுகள் கட்டப்பட்டன.
தில்லையில் ஏற்பட்ட பிளவு நாடு முழுவதும் பரவியது. சைவத்தை ஏற்றுக்கொண்டவர்களுக்கும் பழமைவாதிகளுக்கும் இடையே ஆங்காங்கு வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டன. சமய அடிப்படையில் குடும்பங்கள் உடைந்தன. ஒரே குடும்பத்தில் அண்ணன் ஒரு கட்சியும் தம்பி ஒரு கட்சியுமாயினர். தந்தை ஒரு பக்கமும் மகன் ஒரு பக்கமுமாக இருந்த நிலை பல இடங்களில் காணப்பட்டது. இது பிராமணர்களிடையே மட்டும்தான் இருந்தது. மற்றவர்கள் ‘பிராமணர்கள் வேதத்தைப் பற்றி என்னவோ சண்டை போட்டுக் கொள்கிறார்கள், நமக்கு இதனால் எந்தப் பாதிப்பும் இல்லை’ என்று இருந்தனர்.
மயிலாடுதுறைக்குக் கிழக்கே பறியலூர் (பரசலூர்) என்ற ஊரில் தக்கன் (தட்சன்)* என்றொரு செல்வந்தர். அவர் சிவன் வேத தெய்வம் அல்ல என்ற கட்சியைச் சேர்ந்தவர். அவர் ஒரு முறை வேள்வி செய்ய விரும்பினார். அதில் வழக்கமாக அவிர்ப்பாகம் பெறும் தெய்வங்களான இந்திரன், அக்னி, விஷ்ணு ஆகியோருக்கு ஆகுதி அளிக்க ஏற்பாடு செய்தார். அவரைச் சூழ இருந்தவர்கள் சிவனுக்கும் அவிர்ப்பாகம் கொடுக்க வேண்டும் என விரும்பினர். சிவன் என்றொரு தெய்வம் வேதத்தில் இல்லை என வாதாடினார் அவர். ருத்ரன்தான் சிவன் என்றனர் இவர்கள். ருத்ரன் என்றால் அவருக்குக் கடைசியாக மிச்சம் மீதி ஏதாவது இருந்தால் அதைத்தான் கொடுக்க வேண்டும் என்று சதபத பிராமணம் கூறுகிறது. எனவே கடைசியாகப் பார்க்கலாம் என்றார் அவர். சைவ வாதிகளோ விஷ்ணுவுக்கு உள்ள மரியாதை சிவனுக்கும் கொடுக்கப்படவேண்டும் என்றனர்.
அவரது பெண் சதி தேவியும் மாப்பிள்ளையும் சைவ வாதிகள். தான் சொன்னால் தன் தந்தை ஒப்புக் கொள்வார் என சதி நினைத்தாள். தட்சன் அதற்கும் மசியவில்லை. அவள் அவமானப்படுத்தப்பட்டாள். உடனே அவள் யாகத் தீயில் குதித்து உயிர் விட்டாள். சைவ வாதிகள் வெறி கொண்டு எழுந்தனர். அவர்களில் வீரபத்திரன் என்பவர் யாகத் தீயை அணைத்து, மட்பாண்டங்களை உடைத்து யாகத்தை அழித்தார். யாகத்தில் பங்கு கொண்டவர்கள் யாவரும் தாக்கப்பட்டனர். தக்கன் தலை அறுபட்டுக் கீழே விழுந்தார்.
இது போன்ற நிகழ்ச்சிகள் ஆங்காங்கு நடைபெற்று வந்தன.
ஒரு நாள் தில்லைச் சைவ அந்தணர்கள் ஊர் எல்லையில் கூடினர். அப்பொழுது அவர்களுக்குத் தலைமை ஏற்றவர் பேசினார்,
“ஆடற்பெருமானின் சிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. சிற்பியும் அவருக்குத் துணையாக இருப்பவர்களும் இரவு பகல் ஊண் உறக்கமின்றி அதில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்கள் வெற்றி பெறும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
“சிலை செய்யப்பட்டு விட்டாலும் அதை இங்கே கொண்டுவருவதற்கு எதிர்ப்பு கடுமையானதாக இருக்கும். உயிரைக் கொடுத்தாவது நாம் அதை முறியடித்தே ஆக வேண்டும். அதற்காக நாம் ஒரு பிரதிக்ஞை எடுத்துக் கொள்ள வேண்டும்.”
“கோவிந்த பட்டர் போலவா?” என்று கூட்டத்தில் ஒரு குரல் எழுந்தது.
“அது போலத் தற்கொலை செய்து கொள்வதால் எந்தப் பயனும் விளையாது. ஆடற்பெருமானை இங்கு கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யும் முயற்சியில் எதிரிகளால் கொல்லப்பட்டு உயிர் போவதானால் போகட்டும். நாமாக உயிரைப் போக்கிக் கொள்ளுதல் சாஸ்திர விரோதம், நடைமுறைக்கும் பயன்படாது.
“இந்தச் சித்திரகூட விண்ணகர வளாகத்தில் நம் அனைவருக்கும் உரிமை உண்டு. நாம் இதுவரை மலைநாட்டில் இருந்தோம். அங்கு இருப்பது போல இங்கும் ஒரு அம்பலத்தை ஏற்படுத்தி அதில் ஆடலரசனை அமர்த்தி வைப்போம். அதுவரையில் நாம் நெய், பால் ஆகிய பொருட்களைத் தவிர்த்து ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் உணவு உண்போம். ஆயுள் முழுவதும் ஆடற்பெருமானுக்கே அடிமை செய்து வாழ்வோம். உங்களில் எத்தனை பேர் இந்த தீக்ஷையை எடுத்துக் கொள்வீர்கள்?” என்று கேட்டார்.
கூட்டம் முழுவதும் ஒருவர் மிச்சமில்லாமல் ‘ஓம் நமச்சிவாய’ என்றது.
“எல்லோரும் ஒற்றுமையாக இருப்பது எனக்கு நம்பிக்கையும் வலிமையும் அளிக்கிறது. நம்மை எதிர்ப்பவர்களிடமிருந்து நம்மை வேறுபடுத்திக் காட்ட ஒரு அடையாளம் தேவை. எனவே நாம் அனைவரும் நம் சிகை அலங்காரத்தை மாற்றிக் கொள்வோம்.”
“எப்படி?” என்றது கூட்டம்.
“சோழியர்கள் என்ற முறையில் நாம் அனைவரும் முன் குடுமி வைத்திருக்கிறோம். வடமர்கள் பின் குடுமி வைத்திருக்கிறார்கள். ஈசனைப் பற்றிய விஷயத்தில் நமக்கும் அவர்களுக்கும் ஒற்றுமை இருந்தாலும் ஆடற்பெருமானுக்கு அடிமைப்பட்டிருப்போம் என்று தீக்ஷை எடுத்துக் கொண்டவர்கள் என்ற முறையில் நாம் அவர்களிடமிருந்தும் நம்மை வேறுபடுத்திக் கொள்ள வேண்டும். எனவே நாம் இனிக் குடுமிகளைப் பக்கவாட்டில் முடிந்து கொள்வோம்.”
‘ஓம் நமச்சிவாய’ என்று கோஷம் எழுப்பி கூட்டம் அதை ஆமோதித்தது.
தில்லை அந்தணர்கள் மேற்கு மலைநாட்டுக்குக் குடிபெயர்ந்த பிறகு சமணர்கள் சித்திரகூட வளாகத்தில் கோவிந்தராஜருக்கு வடக்கில் சுதையால் செய்யப்பட்ட ஒரு யக்ஷி உருவத்தை பிரதிஷ்டை செய்திருந்தனர். அவர்கள் சம்பிரதாயப்படி யக்ஷர்களும் யக்ஷிணிகளும் குபேர வம்சத்தைச் சேர்ந்தவர்கள், செல்வத்தைக் காப்பவர்கள். யக்ஷிணிகளில் இருபத்து நான்கு வகை உண்டு. இங்கு வைக்கப்பட்டது சாமுண்டா என்ற வகையைச் சேர்ந்தது. அச்சுறுத்தும் தோற்றம் கொண்டது. மலைநாட்டிலிருந்து அந்தணர்கள் திரும்பி வந்து சித்திரகூட வளாகத்தைக் கைப்பற்றிய பிறகு பழம் தமிழ்ச்சமயத்தார் அந்த யக்ஷியைக் காளி என்ற பெயரில் வணங்கலாயினர்.**
அதற்கு வடக்கில்தான் மூலநாதர் லிங்கம் வைக்கப்பட்டிருந்தது. சமணப் பள்ளிகளின் சமாதி மீது ஆலயங்கள் கட்டுவது வழக்கமாக இருந்ததால் யக்ஷிணி ஆலயத்தின் மேல்தான் ஆடற்பெருமானைப் பிரதிஷ்டை செய்ய வேண்டுமென்று தீக்ஷிதர்கள் திட்டமிட்டிருந்தார்கள். அதைக் காளி என்று சிலர் வணங்கியதால் அதை அங்கிருந்து அகற்றுவதற்கு எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்த்து அதைத் தீர்க்க விரும்பினார்கள்.
தீக்ஷிதர்கள் ஒவ்வொரு சாதியின் முக்கியஸ்தர்களையும் சந்தித்துப் பேசினார்கள். “காளி என்ற பெயரால் வணங்கப்பட்டாலும் இது சமண தெய்வம். அதனால் அதை இந்த வளாகத்திலிருந்து அகற்ற வேண்டும். வேண்டுமானால் நாம் ஒரு காளி விக்கிரகம் ஏற்படுத்தி ஊர் எல்லையில் வைக்கலாம். கிராமிய தெய்வங்கள் ஊர் எல்லையில்தான் இருப்பது வழக்கம்” என்று சொன்னார்கள். அது சமணர்கள் பூசித்தது என்பதை முதியோர்கள் உறுதிப்படுத்தியதால் மற்ற சாதியினர் ஒப்புக் கொண்டார்கள்.
யக்ஷிணி செல்வத்தின் காவலாளி. எனவே அதை முற்றிலுமாக மூடக் கூடாது என தீக்ஷிதர்கள் தீர்மானித்தனர். “அதன் மேலே அம்பலத்தை அமைத்து விடுவோம். யக்ஷிணி சன்னிதிக்குச் சென்று வரத் தனிச் சுரங்க வழி ஏற்படுத்துவோம்” என்று தீக்ஷிதர்கள் தீர்மானித்தனர்.
-------------------------------- ---------------------------------------------- --------------------------------------------
* தக்கன் கதை அம்மையாரால் குறிப்பிடப்படவில்லை. எனவே அம்மையார் காலத்துக்குப் பின் இது நிகழ்ந்திருக்கலாம்.
** சிதம்பரத்தில் ஆடற்பெருமானின் சன்னிதி அருகில் உள்ள ரகசியம் என்று சொல்லப்படும் இடத்தின் கீழ் ஒரு நிலவறை உள்ளது, அதன் நுழைவாயிலை அடைத்து ஒரு மண் சுவர் அமைக்கப்பட்டுள்ளது, அதற்குப் புனுகுமாலை சாத்தப்பட்டுப் பூசை நடக்கிறது. அங்கு ஒரு காளி கோயில் இருந்திருக்க வேண்டும் என்று கூறுகிறது ஆ. பத்மாவதி எழுதிய சைவத்தின் தோற்றம், வை. தட்சிணாமூர்த்தி எழுதிய ஸ்ரீநடராச தத்துவம்.
 
18 தில்லை விடங்கன்
பொன்னொத்த மேனிமேல் வெண்ணீ றணிந்து புரிசடைகண்
மின்னொத் திலங்கப் பலிதேர்ந் துழலும் விடங்கர்வேடச்
சின்னத்தி னான்மலி தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம்
என்னத்த னாடல்கண் டின்புற்ற தாலிவ் விருநிலமே.
-அப்பர்
மகேசனும் ஆதனும் வேறு நான்கு இளைஞர்களும் சிலை வடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மற்றவர்கள் இவர்களுக்குப் பாதுகாப்பாகச் சூழ்ந்து நின்றனர். மகேசன் ஆடலரசன் சிலை ஒன்றை மெழுகில் செய்தான். ஒரு காலை ஊன்றி ஒரு காலைத் தூக்கிக் கைகளைப் பக்கவாட்டில் விரித்த நிலையில் அமைந்த அந்தக் கோலம் கண்ணைக் கவர்ந்தது. அதற்கு அகலமான பீடம் ஒன்று அமைத்து அதன் மேல் கால் நிற்குமாறு பொருத்தினான். சிலை உறுதியாக நின்றது. ஆனால் சற்று நேரத்தில் முழுச் சிலையின் எடையைத் தாங்க முடியாமல் நின்ற கால் கொஞ்சம் கொஞ்சமாகக் கீழே வளையத் தொடங்கியது.
மனித உடலின் முழுப் பாரத்தையும் ஒரு காலில் தாங்கி நடனம் ஆடலாம். மெழுகுச்சிலையின் காலுக்கு அந்த வலு இல்லை. இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது என்று இருவரும் இரவு பகலாக யோசனை செய்தனர். காவலுக்கு வந்தவர்களும் யோசித்தனர்.
அம்மையாரின் பாடல்களைப் பலமுறை படித்துப் படித்து மகேசன் மனதில் அந்த உருவமே சுழன்று கொண்டிருந்தது. ஆதனுக்கும் அப்படியே.
ஒரு நாள் மகேசன் திடீரென்று, “முழுப் பாரமும் காலில் தாக்காமல் பக்கவாட்டில் அதற்குத் துணையாக வேறு ஏதேனும் கொடுக்கலாமா?” என்று கேட்டான். ஆதனுக்குத் தீப்பொறி போல ஒரு கருத்து பளிச்சிட்டது. ஆடற்பெருமான் ஆடும் போது கைகள் வீசப்படும், ஆடை பறக்கும், சடை விரியும். இப்படி மையத்தை விட்டு வெளியில் செல்லும் பகுதிகளையெல்லாம் இணைத்து ஒரு வட்டம் அமைத்து அதைப் பின்புலமாக அமைத்தால் பாரம் சீராகப் பரவி நிற்கும். நிற்கும் காலில் அதிகப் பாரம் தாக்காது என்று தோன்றியது.
அதை உடனே செயல்படுத்தினான். ஆடற் பெருமானின் நீட்டிய கைகள், பறக்கும் ஆடைகள், விரித்த சடைகள், தோளிலிருந்து எட்டிப் பார்க்கும் பாம்பு இவற்றின் முனைகளைத் தொட்டுக் கொண்டு இருக்குமாறு ஒரு வட்டப் பட்டை (திருவாசி) அமைத்தான். வீசிய கைகளையும் காலையும் உள்ளடக்கும் அளவுக்கு வட்டம் பெரிதாக அமைக்க வேண்டியிருந்தது. அதனால் சிலையை உயர்த்துவதற்காகப் பீடத்தின் உயரத்தை அதிகரிக்க வேண்டியாயிற்று. பீடத்தை வெறுமனே உயர்த்தாமல் அதைக் கலைநுட்பத்தோடு செய்ய விரும்பினான் ஆதன்.
மகேசனுக்கு ‘தானவனைப் பாதத் தனிவிரலாற் செற்றான்’ என்று அம்மையார் கூறியது நெஞ்சில் சுழன்றுகொண்டிருந்தது. ஆடலரசன் பாதத்தின் கீழ் ஒரு அரக்கன் உருவத்தை வைக்கலாமே என்று யோசனை கூறினான். ஆதன் அவ்வாறே ஒரு அரக்கன் உருவத்தைச் செய்து பீடத்துக்கும் பாதத்துக்கும் இடையில் வைத்தான். உயரப் பிரச்சினையும் தீர்ந்தது.
இப்பொழுது அவன் செய்த சிலை உறுதியாக நின்றது. பார்ப்பதற்கு முன்னைவிடக் கவர்ச்சியாகவும் இருந்தது. வெற்றி பெற்றுவிட்டோம் என்று சொல்லிக் கொண்டே அதற்கு வண்டல் மண், உமிச்சாம்பல், பசுஞ்சாணம் இவற்றால் கவசம் இட்டுக் காய வைத்தார்கள். காய்ந்தபின் அதன் மேல் இன்னொரு பூச்சு களிமண்ணால் இட்டார்கள். அதுவும் காய்ந்த பின் இன்னொரு பூச்சு களிமண்ணும் மணலும் சேர்த்து இட்டார்கள். அதை இரும்புக் கம்பிகளால் கட்டிக் காயவைத்தார்கள். நன்றாகக் காய்ந்தபின் அதைத் தீயிலிட்டு மெழுகை உருக்கி எடுத்து விட்டு இறைவனை வேண்டிக்கொண்டு உலோகக் கலவையைக் காய்ச்சி ஊற்றினான் ஆதன். இரண்டு நாட்கள் ஆறவிட்டு, ஆறிக் குளிர்ந்தபின் மண்காப்பைத் தட்டிவிட்டுப் பார்த்தால் கண்ணையும் கருத்தையும் கவரும் ஆடற்பெருமான் வடிவம் கண்முன் நின்றது. இவ்வளவு நாள் கற்பனையிலேயே இருந்த வடிவம் கண்முன்னே தோன்றியதும் அனைவரும் அதைப் பார்த்துக் கொண்டே உணர்ச்சிப் பெருக்கால் கண்ணீர் வடித்தார்கள்.
நீண்ட நேரத்துக்குப் பின்தான் அவர்களுக்கு நினைவு வந்தது. காவலுக்கு வந்திருந்த நண்பர்களைக் கூப்பிட்டார்கள். எல்லோரும் வந்து பார்த்தார்கள். வியந்தார்கள், வியந்து கொண்டே இருந்தார்கள். ஒருவருக்காவது வேறு நினைவு இல்லை. எவ்வளவு முயற்சிக்குப் பின் இது சாத்தியமாகி இருக்கிறது! சோழநாட்டில், ஏன், உலகத்திலேயே ஆடும் நிலையிலான முதல் சிலை இது என்று எண்ணும்போது இது நம்முடையது, நமது தில்லைக்குச் சொந்தமானது என்ற பெருமிதம் ஏற்பட்டது.
ஊர் மக்கள் வந்து வைத்த கண் வாங்காமல் பார்த்தார்கள். எத்தனை நேரம் பார்த்தாலும் எவருக்கும் திகட்டவில்லை. அரசருக்குச் சொல்லி அனுப்பினார்கள். மறுநாளே அரசர் செங்கணான் வந்துவிட்டார். பார்த்த உடனேயே பரவசமடைந்தார். அவரது கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் பெருகியது. ‘இதோ, எல்லோரும் அம்மையார் வர்ணித்த கோலத்தைப் பார்த்து மகிழ முடிந்துள்ளது. இது சைவ சமய வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமையும்’ என்று நினைத்து நெடுஞ்சாண்கிடையாக அந்தச் சிலை முன் விழுந்து வணங்கினார். ஒவ்வொரு பகுதியாகப் பார்த்து ரசித்தார். பொன்னுரு, பொன்னடிகள், தூக்கிய திருவடி, தலையில் நிலா, மார்பில் பாம்பு, பொன்னைச் சுருளாகச் செய்தனைய சடை- அம்மையார் வடித்த சொற்சிலையை, இதுவரை மனக்கண் உள்ளவர்கள் மட்டுமே காண முடிந்ததை, இந்த இளைஞன் பொற்சிலையாக வடித்து எல்லா வகை மக்களும் புறக் கண்ணால் காண வைத்திருக்கிறான்.
தூக்கிய திருவடியில்தான் என்ன வேகத்தைக் காட்டியிருக்கிறான் இந்தச் சிற்பி! ‘இறைவன் அடி பெயர்ந்தால் பாதாளம் பெயரும், அவரது முடி நகர்ந்தால் அண்டத்தின் உச்சி உடையும், கைகள் அசைந்தால் வான் திசைகள் உடையும்’ என்று அம்மையார் வருணித்த சண்ட மாருத வேகத்தைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறான்.
“ஆதனாரே, இங்கு வாரும். உலகம் முழுவதும் பாராட்டக் கூடிய ஒரு சாதனையைச் செய்திருக்கிறீர். அறிவித்தபடி உமக்கு ஆயிரம் பொன் பரிசு தருவோம். இனி உமது ஊர் உமது பெயரால் ஆதனூர்* என்று அழைக்கப்படும்” என்று அறிவித்தார்.
“காழிப்பதி புண்ணிய பூமி என்று என் கொள்ளுத் தாத்தா கூறியது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது. இங்குதான் ஆடற்பெருமான் உலோக வடிவில் அவதாரம் செய்ய வேண்டுமென்று திருவுள்ளம் கொண்டிருந்தார் போலும். இந்த ஆதனோடு பயின்ற சிற்பிகள் ஏழு பேர் தங்கள் தங்கள் ஊர்களில் சிலை செய்ய முயன்று வெற்றி பெறவில்லை. ஆதனைக் கொண்டு அவர்களைப் பயிற்றுவித்து இது போல் பல விக்கிரகங்களை ஏற்படுத்தி எல்லா ஊர்க் கோயில்களிலும் வைக்க ஏற்பாடு செய்வோம். இந்த விக்கிரகம் இந்த ஊர்க் கோவிலில் இருக்கட்டும்” என்றார் அரசர்.
உடனே தில்லை அந்தணர்கள், “மன்னிக்க வேண்டும், அரசே. இது தில்லை வாழ் அந்தணர்களின் முயற்சியால் உருவானது. செய்தது ஆதன்தான் எனினும் அவருக்கு வேண்டிய வசதிகளும் பாதுகாப்பும் கொடுத்து உதவியது தில்லை அந்தணர்களே. எனவே இந்த விக்கிரகம் தில்லை அந்தணர்களுக்கே உரியதாக்கப்பட உத்திரவிடவேண்டும். மேலும் இதுவரை சமணக் கோட்டையாக இருந்த தில்லை இப்பொழுதுதான் அவர்களிடமிருந்து விடுதலை பெற்றிருக்கிறது. அந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் இந்த விக்கிரகம் தில்லையில் அமைவதுதான் சிறப்பாக இருக்கும்” என்றனர்.
அரசர் மறுப்புக் கூறவில்லை. “முதல் சிவலிங்கம் ஏற்படுத்தப்பட்ட பெருமை காழிக்கு இருக்கட்டும். முதல் ஆடற்பெருமான் சிலையைக் கொண்ட பெருமை தில்லைக்கு இருக்கட்டும் என்றார். ஆனால் ஒன்று, தில்லைக்கு உரிய ஆடலரசனின் முதல் விடங்கப் பெருமான் உதயமானதை முன்னிட்டு இந்த இடம் இனி தில்லை விடங்கன்* என்று அழைக்கப்படும்” என்றார்.
ஆனால் அந்த விக்கிரகத்தைத் தில்லைக்குக் கொண்டு செல்வது அவ்வளவு எளிதாக இல்லை. வைணவர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு வரும் என்பது நிச்சயமாகத் தெரிந்தது. எனவே ஆடற்பெருமான் தில்லை விடங்கனிலேயே வைக்கப்பட்டிருந்தார். அங்கேயே அவருக்குப் பூசைகள் செய்யப்பட்டு வந்தன. தில்லையிலிருந்து தீக்ஷிதர்களும், பல வகைச் சாதியினரும் கூட்டம் கூட்டமாக அங்கு சென்று அவரைத் தரிசித்து வந்தனர். இவ்வளவு உயர்ந்த விக்கிரகம் நமது ஊரில் வைத்துப் பூசிக்கப்பட வேண்டுமென்ற எண்ணம் அவர்களிடையே வலுவாக வளர்ந்து வந்தது.
--- ------------------------------------------------------------------------- ---------------------------------------------------
* ஆதனூர் தில்லைக்குத் தென்மேற்கில் உள்ளது.
* தில்லைவிடங்கன் சீர்காழிக்குக் கிழக்கே உள்ளது.
 
19 நியாயசபை
அங்கண் முழுமதியஞ் செக்கர் அகல்வானத்
தெங்கும் இனிதெழுந்தால் ஒவ்வாதே- செங்கண்
திருமாலைப் பங்குடையான் செஞ்சடைமேல் வைத்த
சிரமாலை தோன்றுவதோர் சீர்.
-அம்மையார்

வைணவர்களும் தீக்ஷிதர்களும் தங்கள் தங்கள் கொள்கையில் விடாப்பிடியாக நின்றனர். விண்ணகர வளாகத்திலும் தெருவிலும் தோப்புகளிலும் அடிக்கடி கலவரங்கள் நடைபெற்றன. ஒரு கட்டத்தில் இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆகவேண்டும் என்ற நிலை ஏற்பட்டபோது இரு திறத்தாரும் அரசரிடம் முறையிட்டனர்.
அரசர் செங்கணான் ஆலோசித்தார். இப்பொழுதுதான் சமணம் அழிந்து நம் பழம் தமிழ்ச்சமயத்துக்குப் புத்துயிர் வந்துகொண்டிருக்கிறது. இப்பொழுது நம் சமயத்திற்குள்ளேயே பூசல் ஏற்பட்டுவிட்டதே என்று கலங்கினார். அவருடைய முழுப்பெயர் செங்கண் திருமாலைப் பங்குடையான். இது இறைவனுக்கு அம்மையார் சூட்டும் பெயர்களில் ஒன்று. பெயருக்கேற்றபடி திருமாலும் சிவனும் ஒரே உருவின் இரு கூறுகள் என்ற உண்மையை உணர்ந்தவர் அவர். மாலும் அரனும் ஒன்றே என்பதை மக்களுக்கு எப்படிப் புரிய வைப்பது என்று யோசித்தார். தன் தம்பி உத்தம சோழனை அழைத்தார். “நீ நமது முதல் அமைச்சரையும் ஆஸ்தான வேத பண்டிதரையும் அழைத்துக் கொண்டு தில்லை சென்று இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வா. அங்கு நிலைமை மிகக் கொந்தளிப்பாக இருப்பதாகத் தெரிகிறது. எனவே உங்கள் பாதுகாப்புக்கு நூறு வீரர்களையும் அழைத்துச் செல். தில்லை ஊர்த்தலைவரையும் பொது மக்கள் பிரதிநிதி ஒருவரையும் சேர்த்துக் கொள். ஐந்து பேர் கொண்ட இந்தப் பஞ்சாயத்து இரு பக்கத்து நியாயத்தையும் நன்றாகப் பரிசீலித்து எல்லோரும் ஒப்புக் கொள்ளக் கூடிய ஒரு தீர்ப்பை வழங்கட்டும்” என்று உத்திரவிட்டார்.
இளவரசரும் மற்றவர்களும் குதிரைகளில் ஏறித் தில்லையை அடைந்தனர். தில்லையிலும் அக்கம் பக்கத்து ஊர்களிலும் பறையறைந்து நியாயசபை கூடும் விவரம் தெரிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட நாளில் சித்திர கூட வளாகத்தில் பெருங்கூட்டமாக மக்கள் கூடியிருந்தனர். ஒரு மேடை போடப்பட்டிருந்தது. அதில் நடுநாயகமாக இளவரசர் அமர்ந்திருந்தார். முதல் அமைச்சர், வேத பண்டிதர், ஊர்த்தலைவர், பொதுமக்கள் பிரதிநிதி ஆகிய மற்றவர்கள் பக்கத்தில் அமர்ந்திருந்தனர்.
கூட்டம் துவங்கியது. இளவரசர் எழுந்து நின்று “இன்று ஒரு முக்கியமான விஷயத்தில் தீர்ப்பு வழங்குவதற்காக இந்த நியாய சபை கூடி இருக்கிறது. இதில் வாதியாக இருப்பவர் வைணவர்களின் பிரதிநிதியான வாசுதேவ பட்டர். பிரதிவாதி சபாபதி தீக்ஷிதர். இருவரும் நியாய சபையின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் கட்டுப்படுவதாகப் பிரமாணம் செய்கிறீர்களா?” என்று கேட்டார். வாதி, பிரதிவாதி இருவரும் எழுந்து தங்கள் தலை மேல் கை வைத்துப் பிரமாணம் செய்தனர்.
பட்டரைப் பார்த்து, “உங்கள் தரப்பு வாதத்தைக் கூறலாம்” என்றார் இளவரசர்.
வாசுதேவ பட்டர் மேடை மீது ஏறினார். பொதுமக்களைப் பார்த்து, “தமிழ்நாட்டில் பரம்பரையான தெய்வங்கள் மாயோன், சேயோன், வருணன், இந்திரன், கொற்றவைதான். மாயோனின் மறு பெயர்தான் இங்கு உள்ள கோவிந்தராசர். இப்பொழுது காழியில் உருவாகிச் சிலை வடிவில் வணங்கப்படுவது நமது பாரம்பரியத்துக்குப் புறம்பானது. அது இந்த வளாகத்திற்குள் வரக்கூடாது என்பது எங்கள் கட்சி” என்றார்.
ஊர்த்தலைவர் கேட்டார், “பாரம்பரியம் என்று எந்த ஆதாரத்தில் சொல்கிறீர்கள்?”
“தமிழின் பழமையான நூலான தொல்காப்பியத்தை வைத்துத்தான்.”
“தெய்வத்தைப் பற்றிக் கூறும் நூல்களில் பழமையானது தொல்காப்பியம் தானா?”
“இல்லை. வேதம்தான்.”
“வேதம் நமது தமிழ்ப் பாரம்பரியத்துக்கு ஏற்புடையதா, இல்லையா?”
“ஏற்புடையதுதான். தொல்காப்பியத்தில் வேதத்தைப் பற்றி உயர்வாகச் சொல்லப்பட்டிருக்கிறது.”
“அப்பொழுது பாரம்பரியத்தைப் பார்க்க, வேதத்தைத் தானே பிரமாணமாகக் கொள்ள வேண்டும்?”
“ஆம். வேதத்திலும் விஷ்ணு சொல்லப்பட்டிருக்கிறார், அவர்தான் தமிழில் மாயோன் எனக் கூறப்படுகிறார்.”
“விஷ்ணுதான் மாயோன் என்பதற்கு என்ன பிரமாணம்?”
“விஷ்ணு பல அவதாரங்கள் எடுத்தார். அதில் கிருஷ்ணாவதாரம் ஒன்று. அவர் பல அரக்கர்களை மாயங்கள் செய்து அழித்தார். அதனால் அவர் மாயோன் என அழைக்கப்படுகிறார். சிறு வயதில் அவர் ஆயர் பாடியில் வளர்ந்து மாடு மேய்த்தார். அதனால் பசுக்களைக் காப்பவர் என்ற பொருளில் கோவிந்தன் என்றும் அழைக்கப்படுகிறார். எனவே விஷ்ணுதான் மாயோன், கோவிந்தராசர்.”
மக்கள் பிரதிநிதி கேட்டார், “விஷ்ணு கிருஷ்ணராக அவதரித்தார் என்று வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறதா?”
“இல்லை. புராணங்களில்தான் சொல்லப்பட்டிருக்கிறது.”
“வேதத்துக்கும் புராணத்துக்கும் உள்ள உறவு என்ன?”
“வேதம் தெய்வத்தின் வாய்ச்சொல். புராணம் மனிதர் இயற்றியது.”
இளவரசர் சபாபதி தீக்ஷிதரைப் பார்த்தார். அவர் பேசத் தொடங்கினார். “காலப்போக்கில் பல புதுப் புது தெய்வங்களை உருவாக்கிக் கொள்வதற்கு வேதம் சுதந்திரம் கொடுத்திருக்கிறது. நாம் எல்லோரும் இது நாள் வரை கோவிந்தராஜரை வணங்கி வருகிறோம். வேதத்தோடு கூடப் புராணங்களையும் பிரமாணமாக ஏற்பதால்தான் அவரை வேத விஷ்ணுவின் ஒரு வடிவமாகக் கொண்டு வேத மந்திரங்களால் பூசை செய்கிறோம். அதே போல, வேதத்தில் கூறப்பட்ட ருத்ரனின் ஒரு வடிவம்தான் ஆடற்பெருமான். வேதத்தில் ஆதிரை நட்சத்திரத்தை ருத்ரனுக்கு உரியதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆடற்பெருமானை ஆதிரையான் என்று குறிப்பிடுகிறார் அம்மையார். மேலும், அவரை வேதியன், வேதப் பொருளான், வேதத்திற்கு ஆதியன் என்று கூறுகிறார். எனவே அம்மையார் பாடலின் அடிப்படையில் ஆடற்பெருமானை ருத்ரனாக ஏற்பது தவறல்ல.” என்றார்.
“புராணமும் ஒரு பேய் மகள் கூறிய வார்த்தையும் ஒன்றாக முடியுமா?”
“அறியாதவர்கள்தாம் அவரைப் பேய் என இகழ்ந்தார்கள். அவரது பாடலை ஒரு முறையேனும் படித்தவர் அவ்வாறு சொல்ல மாட்டார். திருமால் அடியார்களில் பேயாழ்வார் என்று ஒருவர் சென்ற தலைமுறையில் வாழ்ந்தார். அவர் உண்மையில் பேயா? இறைவனிடம் கொண்ட ஈடுபாட்டின் மிகுதியால் அவர் சராசரி மானிடரிலிருந்து வேறுபட்டதால் பேய் எனப்பட்டார். அது போலத்தான் அம்மையாரும். பேயாழ்வாரின் பாடல்களை நாம் வழிபாட்டுக்குப் பயன்படுத்துகிறோம். திராவிட வேதம் என்று பெயர் கொடுத்து அதை வேதத்துக்குச் சமானமாகக் கருதுகிறோம். அம்மையாரின் பாடல்களும் அந்தப் புகழுக்குத் தகுதியானவை.”
இளவரசர் திருப்தியுடன் தலையசைத்தார். மறுபடியும் வாசுதேவ பட்டரை நோக்கி, “மேற்கொண்டு சொல்லுங்கள்” என்றார்.
“இது புனிதமான இடம். இங்கு மயானத்தாடியைக் கொண்டுவரக்கூடாது. வேண்டுமானால் மயானத்தில் வைத்துக் கொள்ளட்டும்” என்றார்.
சபாபதி தீக்ஷிதர் எழுந்தார். “மயானத்தாடி ஊருக்குள் வரக்கூடாது என்கிறார் பட்டர். புனிதமான காசி நகரத்திற்கே மகா ச்மசானம் என்று பெயர். அவன் ஆடும் இடமெல்லாம் மயானம்தான். இறைவன் இல்லாத இடம் எது? மயானம் என்பது இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் குறிக்கும்.”
“ஆடும் நிலையில் ஒரு தெய்வத்தை வணங்கினால் நம் வாழ்க்கையே ஆடிப் போய்விடும்.” என்றார் பட்டர்.
“உங்கள் நம்பிக்கை அதுவானால் நீங்கள் வணங்க வேண்டாம். மற்றவர்கள் வணங்குவதை நீங்கள் தடுக்க முடியாது” என்றார் தீக்ஷிதர்.
“ஊரின் நடுவில் அந்த ஆடும் சிலையை வைத்தால் ஊருக்கே கெடுதல், ஊரே ஆடிப் போய்விடும்.” இது வாசுதேவரின் அடுத்த வாதம்.
“உட்கார்ந்த ஐயனாரைத் தொழுதால் வாழ்க்கை உட்கார்ந்து விடும், இங்கே படுத்த நிலையில் இருக்கும் கோவிந்தராஜரைப் பூசித்தால் தொழில் படுத்து விடும் என்று யாராவது சொல்கிறார்களா? ஆடும் தெய்வத்தை வணங்கினால் வாழ்க்கை ஆடிப் போய்விடும் என்பது போன்ற நொண்டிச் சாக்குகளை எல்லாம் கருத்தில் கொள்ள வேண்டாம் என்று இந்த நியாய சபையைக் கேட்டுக் கொள்கிறேன்.”
சபையோர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
வாசுதேவர், “உங்களுக்கு உங்கள் தெய்வத்தில் பற்று இருந்தால் அரசரிடம் கேட்டு வேறு இடம் பெற்று அங்கு வைத்துக்கொள்ளுங்கள். இங்கு ஏன் வரவேண்டும்?”
“இந்த இடம் தில்லை அந்தணர்கள் முழுமைக்கும் உரிய சொத்து. இதில் எங்கள் விருப்பப்படி ஒரு தெய்வத்தைப் பிரதிஷ்டை செய்ய எங்களுக்கும் உரிமை உண்டு.”
இளவரசர் மற்றப் பஞ்சாயத்தார்களுடன் கலந்து ஆலோசித்தார். முடிவு என்னவாகுமோ என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் ஆவலுடன் காத்து நின்றனர்.
இளவரசர் எழுந்து பேசலானார்.
“நமது பழம் தமிழ்ச் சமயம் இன்று இரண்டாகப் பிளந்து நியாயசபை வரை வந்திருப்பது துரதிருஷ்டமான விஷயம். நமது முன்னோர்கள் முருகனையும் மாயோனையும், இந்திரனையும், வருணனையும், கொற்றவையையும் வேற்றுமை இல்லாமல் வணங்கினர். இன்று வேதத்தைப் பிரமாணமாகக் காட்டும் பிராமணர்கள் அதைப் பொருள் புரிந்து கொள்வதில் வேறுபட்டு அடிதடி வரை இறங்கி இருப்பது நாட்டுக்கு நல்லதல்ல.
“ஆடற்பெருமான் வேத தெய்வமா என்பது முதல் கேள்வி. நானும் வேதம் பயின்றிருக்கிறேன். வேத வல்லுநர் அருகில் இருக்கிறார். அவரையும் கலந்துகொண்டுதான் பேசுகிறேன். வேதம் பல தெய்வங்களைப் பேசுகிறது. அவற்றில் ஒன்று கூட இன்று வழிபடப்படுவதில்லை. புதிய தெய்வங்கள் எல்லாவற்றையும் நம் சமூகம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஏனெனில் சத்தியமானது ஒன்று, அதை அறிஞர்கள் பலவாறாகப் பேசுகிறார்கள் என்று வேதம் சொல்கிறது. நான் சொல்வதுதான் சத்தியம், மாறுபடுபவர்கள் முட்டாள்கள் என்று கூறவில்லை. மாற்றுக் கருத்து உள்ளவர்களையும் அறிஞர் என்றே போற்றுகிறது. எனவே எந்த உருவில் வழிபட்டாலும் சத்தியம் ஒன்றுதான். அதனால்தான் இங்கு சமணர்கள் ஏற்படுத்திய யக்ஷிணியையும் நாம் வணங்குகிறோம். எல்லா வழிபாடுகளும் அந்த ஒரு சத்தியத்திற்கே போய்ச் சேருகின்றன. எனவே ஆடற்பெருமான் உருவத்தை இங்கு கொண்டுவருவதில் உள்ள முதல் தடை நீக்கப்படுகிறது.
“அம்மையார் ஆடற்பெருமானைத் திருமாலைப் பங்குடையான் என்று குறிப்பிடுகிறார். எனவே திருமால் வேறு, ஆடற்பெருமான் வேறு அல்ல. இருவரும் ஒரே சத்தியத்தின் இரு வேறு தோற்றங்கள். பேயாழ்வாரைப் பற்றிக் குறிப்பிட்டார். அவர் சிவனும் திருமாலும் ஒன்றே என்கிறார்.
தாழ்சடையும் நீள்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழ்அரவும் பொன்னாணும் தோன்றுமால் - சூழும்
திரண்டுஅருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டு உருவும்ஒன்றாய் இசைந்து
என்று கூறுகிறார். “காலத்துக்கு ஏற்ற மாற்றங்கள் செய்துகொள்வதை வேதம் தடுக்கவில்லை. நானும் மற்றவர்களும் நீறு அணிந்திருக்கிறோம். இங்கு வழிபடப்படும் கோவிந்தராசர் திருநெற்றியையும் நீறு அலங்கரிக்கிறது.* இது எங்கிருந்து வந்தது? என் கொள்ளுப் பாட்டனார் காலத்தில் வடமர்கள் வந்தார்கள். அவர்கள் அக்னிஹோத்ரம் செய்த நீற்றை அணிந்திருந்தனர். அம்மையார் இறைவன் உடல் முழுவதும் நீறு அணிந்திருப்பதாகக் கூறுகிறார். எனவே நாம் அதை ஏற்றுக்கொண்டோம். இதோ வாதி, பிரதிவாதி இருவர் நெற்றியிலும் திருநீறு துலங்குகிறது. காலத்துக்கேற்ப, வழிபடுமுறைகளிலோ, வழிபடும் தெய்வங்களிலோ புதுமைகள் புகுவது தவறில்லை. நம் பழம் தமிழ் இலக்கியங்களும் பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல என்று ஒப்புக் கொண்டிருக்கின்றன.
”மயானத்தாடி என்பதற்கு தீக்ஷிதர் அளித்துள்ள விடை ஏற்புடையது. எனவே இரண்டாவது தடையும் நீக்கப்படுகிறது.
“மூன்றாவதாக, இந்த இடத்தின் உரிமை பற்றியது. அரசு ஆவணங்களின்படி இந்தச் சித்திரகூட வளாகம் முழுவதும் அரசுக்குச் சொந்தமானது. பல தலைமுறைகளாக தில்லை அந்தணர்களின் பொது அனுபோகத்தில் இருந்து வருகிறது. இறைவழிபாட்டிற்கெனவே ஒதுக்கப்பட்ட இந்த இடம் இறைவழிபாடு செய்யும் அனைத்து அந்தணர்களின் பொதுச் சொத்து. இதில் வைணவர்களுக்கும் சைவர்களுக்கும் சமமான உரிமை உண்டு. இன்று அவர்களிடையே மீண்டும் ஒன்று சேர முடியாத அளவுக்குப் பிளவு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வளாகத்தை இரண்டாகப் பிரித்து தென்பகுதி வைணவர்களுக்கும் வடபகுதி சைவர்களுக்கும் கொடுக்கப்படவேண்டும் என இச்சபை கருதுகிறது. “
கூடியிருந்த பொதுமக்கள் ஓம் நமச்சிவாய என்றும், ஆடல் வல்லான் போற்றி என்றும், தில்லைக் கூத்தன் வாழ்க என்றும் அம்பலத்தரசன் வெல்க என்றும் கோஷம் எழுப்பித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.
அரசர் செங்கணானுக்குச் செய்தி போயிற்று. பிரச்சினை சுமுகமாக முடிந்தது பற்றி அவர் மகிழ்ந்தார். புதிதாகக் கட்டப்பட்ட தில்லையம்பலத்தில் ஆனந்தக் கூத்தனைத் தரிசிக்க விரும்பிச் சென்றார். தில்லை மக்களும் தீட்சிதர்களும் அவரை மிக மரியாதையுடன் வரவேற்றார்கள். தரிசனம் முடிந்தபின் தீட்சிதர்கள் தங்கள் நன்றியைத் தெரிவிக்கும் வகையில் ஆடற்பெருமானின் பாதம் பதித்த ஒரு மணிமுடியை அவருக்கு அணிவித்தனர். இந்த நிகழ்ச்சியின் நினைவாக அவர் மணிமுடிச் சோழர் எனப் போற்றப்பட்டார்.
------------------------- ------------------------------------------------------ ----------------------------------------
* திருமாலும் மாலடியார்களும் நெற்றியில் திருநீறு அணியும் வழக்கம் இருந்ததை நாலாயிர திவ்வியப் பிரபந்தம் பாடல்கள் 3270, 3280 இரண்டிலிருந்து அறியலாம்.
 
20 வீரரும் சிற்பியும்

இதுவன்றே ஈசன் திருவுருவம் ஆமா
றிதுவன்றே என்றனக் கோர் சேமம்- இதுவன்றே
மின்னுஞ் சுடருருவாய் மீண்டொயென் சிந்தனைக்கே
இன்னுஞ் சுழல்கின்ற திங்கு.
-அம்மையார்

மயிலாடுதுறையில் காவிரிக்கரையில் ஒரு சத்திரம். விடியற்காலை. அங்கு தூங்கிக்கொண்டிருந்த ஒரு இளைஞன் எழுந்து வெளியே வந்தான். சுக்கிரன் உதயமாகிவிட்டதா என்று கிழக்கு திசையைப் பார்த்தான். நிலம் தெளிந்துவிட்டது, புறப்படவேண்டியது தான் என்று உறுதிசெய்து கொண்டவனாக மீண்டும் தான் படுத்திருந்த இடத்திற்கு வந்தான். அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு சிறு துணி மூட்டையைக் கையில் எடுத்துக் கொண்டு கீழே இறங்கினான்.
"தம்பி, வடக்குப் பக்கம் போறீங்களா?” என்று ஒரு குரல் வந்தது. திண்ணையில் படுத்திருந்த ஒருவர் கூப்பிட்டார். "ஆமாங்க" என்றான் இளைஞன். "கொஞ்சம் இருங்க, நானும் வரேன். சேர்ந்து போகலாம்" என்றார் அவர்.
எழுந்தார், தரையில் விரித்திருந்த துண்டை உதறினார், முண்டாசாகக் கட்டிக்கொண்டார். "சரி, வாங்க போவோம்" என்றார்.
இருவரும் வடக்குத் திசை நோக்கிப் புறப்பட்டனர்.
"தம்பி, எங்கே கொள்ளிடம் தாண்டியா, முன்னாடியா?”
"நான் காஞ்சிபுரம் வரைக்கும் போகணுங்க. தில்லையிலே இரண்டு நாள் தங்கிட்டு அப்புறம் போகலாம்னு இருக்கேன்.”
"சொந்த ஊரு காஞ்சிபுரமா அல்லது இந்தப் பக்கமா?”
"காஞ்சிபுரம் பக்கம் தாங்க சொந்த ஊரு. சிராப்பள்ளியிலே மூணு வருசமா வேலை. இப்போ அது முடிஞ்சு வீட்டுக்குப் போறேங்க. தில்லையிலே புதுசா ஒரு உலோகச் சிலை செஞ்சிருக்காங்களாம். ரொம்ப ஒசத்தியா இருக்குன்னு பேசிக்கிட்டாங்க. அதைப் பார்க்கலாமின்னு தான் போறேன்.”
"உண்மை தான் தம்பி. நானும் அந்த ஆடலரசனைப் பார்க்கத்தான் போறேன். என்ன வேலை பாக்கிறீங்க?
"சிற்பிங்க. சிராப்பள்ளியிலே ஒரு பெரிய பாறை இருக்குங்க. அதிலே ரெண்டு இடத்திலே குடைஞ்சு அங்கே சிற்பம் செதுக்கினோங்க. என்னைப் போல இன்னும் இருபது பேர் வேலை செஞ்சாங்க. “
"யாரு ஏற்பாடு சோழராசாவா, பல்லவ ராசாவா?”
"சோழராசா கேட்டுக்கிட்டாராம். அதன் பேரிலே பல்லவ ராசா எங்களை அனுப்பிச்சு வேலை செய்யச் சொன்னாரு. சோழநாட்டிலே கருங்கல் வேலை தெரிஞ்ச சிற்பிகள் இல்லையாமே? நாங்க ஒரு இருபது பேருக்குப் பயிற்சி கொடுத்தோம்.“
"உண்மைதான் தம்பி. இங்கே எல்லாம் சுதை வேலை தான்.
"அண்ணன் இந்தப் பக்கத்து ஆளுங்களா?”
"ஆமாம் தம்பி. நான் சோழநாட்டுக்காரன். ராசா இருக்காரே பழையாறை அங்கே தான் வீடு இருக்கு. படையிலே முப்பது வருசம் இருந்தேன். வயசாயிட்டுது. போதும்னுட்டு இப்போ விவசாயத்தைக் கவனிச்சிக்கிட்டு இருக்கேன். “
"நிறைய சண்டையெல்லாம் போட்டிருப்பீங்க?”
"ஆமாம் தம்பி. சின்ன வயசிலே என்னை உறையூருக்கு அனுப்பிச்சாங்க. அதிலேருந்து அங்கேயே இருந்துட்டேன். இப்போ பழையாறையிலே ராசா இருக்காரே, புண்ணிய வளவன் அவரோட தம்பி புகழ் வளவன் உறையூரிலே இருந்தாரு. அவரோட தலைமையிலே கருவூருக்குப் போய்ச் சண்டை போட்டு ஜெயிச்சோம். களப்பிர மன்னர்களை ஒவ்வொருத்தரா ஜெயிச்சு சேரநாடு முழுக்க சோழராசாவுக்குச் சொந்தமா ஆயிடிச்சி.”
"கடைசியா எப்போ போருக்குப் போனீங்க?”
"கடைசியா நாலு வருசம் முந்தி. உறையூர் புகழ்ச்சோழ ராசா கப்பம் கட்டாத சின்ன ராசாவோட எல்லாம் சண்டை போட்டுக் கப்பம் கட்ட வெச்சாரு. அதிலே பாருங்க, மலையரண் அப்படின்னு ஒரு சின்ன குறுநிலம். அதிலே அதிகன்னு ஒருத்தரு இருந்தாரு. அவரு கப்பம் கட்டமாட்டேன்னு சொன்னதிலே சோழராசாவுக்குக் கோவம் வந்து, "அவன் நாட்டுக்குள்ளே புகுந்து எதிரிப் படை வீரர்கள் தலையை வெட்டிக் கொண்டுவாங்க"ன்னுட்டார். நாங்களும் போனோம். தலைகளைக் கொண்டுவந்து ராசா காலடியிலே வெச்சோம். ஒண்ணு ஒண்ணாப் பார்த்துக்கிட்டே வந்தாரு. ஒரு தலையிலே சடை முடி இருந்தது. ராசாவுக்கு மனசு கலங்கிப் போச்சு. இது சிவனடியாரா இருக்குமோன்னு நினைச்சாரு. ஐயோ தப்புப் பண்ணிட்டேனேன்னு கதறினாரு. மந்திரியைக் கூப்பிட்டு, "என் பிள்ளைக்கு முடி சூட்டுங்க. நான் இனிமே உயிர் வாழ விரும்பல்லை"ன்னு சொல்லித் தீ வளர்த்து அதிலே இறங்கிட்டாருங்க.* நாம் செய்த தப்புக்கு அவரு உயிரை விடும்படியா ஆயிடிச்சேன்னு எங்களுக்கெல்லாம் ரொம்பக் கஷ்டமாயிடிச்சி. அதுவே கடைசியா இருக்கட்டும்னு நான் படையிலேருந்து விலகிட்டேன்.”
"படைவீரர்களைத்தானே நீங்க கொன்னீங்க? சும்மா இருந்த சிவனடியாரைக் கொல்லல்லியே?”
"படைவீரர் தான். எதிரியா இருந்தாலும் சிவனடியாரைக் கொல்லக் கூடாதுங்கிற அளவுக்கு ராசாவோட சிவபக்தி இருந்தது.”
"அப்படித்தாங்க எங்க பல்லவ நாட்டிலே காளத்திங்கிற ஊரிலே மலை மேலே லிங்க வடிவிலே ஒரு பாறை இருந்திச்சு. அதை சிவலிங்கமா நினைச்சு ஒரு ஐயர் பூசை பண்ணிக்கிட்டு இருந்தார். அதைப் பார்த்துட்டு ஒரு காட்டு வேடன் தானும் பூசை பண்றேன்னு ஆரம்பிச்சாருங்க. ஒரு நாளைக்கு சாமி கண்ணிலேருந்து ரத்தம் வருதுன்னு சொல்லி தன் கண்ணையே புடுங்கி அப்பிட்டாருங்க.” *
"அதே மாதிரி பாருங்க. புகழ்த்துணையார் என்கிறவர் சோழநாட்டிலே செருவிலிபுத்தூர் என்ற ஊரிலே இருந்தாரு. அப்போ அந்த ஊரிலே பஞ்சம் வந்தது. எல்லாரும் ஊரை விட்டு வெளியூருக்குப் போயிட்டாங்க. அவர் பசியில் வாடினார். நானும் ஊரை விட்டுப் போயிட்டா கோயில்லே உள்ள சாமி பட்டினி கிடப்பாரேன்னு அங்கேயே இருந்தார். ஒரு நாள் பசியிலே மயக்கம் வந்து லிங்கத்தின் தலைமேலேயே திருமஞ்சனக் குடத்தைப் போட்டுட்டு விழுந்தார். *
"இதே சோழநாட்டிலே சண்டேசர்னு ஒருத்தர். மாடு மேய்ச்சுக்கிட்டிருந்த அவர் மணல்லே லிங்கம் செஞ்சு பூசை பண்ணிக்கிட்டு இருந்தாரு. மாட்டுப் பாலை எல்லாம் அதுக்கு அபிஷேகம் பண்ணிட்டாரு. அதனாலே அவங்க அப்பாவுக்குக் கோவம் வந்து அந்த மணல் லிங்கத்தை கலைச்சுட்டார். சண்டேசர் என்ன செஞ்சார் தெரியுமா? அரிவாளை எடுத்து வந்து அப்பா காலையே வெட்டிட்டாரு.”*
"பக்தி மிகுதியாலே இவங்க சாதாரண சனங்க செய்ய முடியாத வேலையைச் செஞ்சு புகழ் அடைஞ்சுட்டாங்க.”
"இங்கே காழிலே ஆழிப்பேரலை வந்தபோது இளம் புள்ளைங்க எல்லாம் தென்னைமர உச்சியிலே லிங்கத்தைக் கொண்டு வெச்சுக்கிட்டு இருந்தாங்க. எல்லாரும் உசிரு போனாலும் இந்த லிங்கத்தைக் காப்பாத்தியே தீருவோம்னு புடிவாதமா இருந்தாங்க. நல்ல காலம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது. அதிலே தொடங்கி சனங்க லிங்கத்தையே கடவுளா நினைக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஒசந்த பக்தர்களுக்கு இது சரி. ஆனா சாதாரண சனங்களுக்கு இது சரி வராது தம்பி. அடையாளம் அடையாளமாத் தான் இருக்கணும். அதுக்கு ஒரு எல்லை உண்டு. அடையாளத்தையே கடவுளா நினைச்சா, உண்மையான கடவுளை மறந்துடுவாங்க. பிற்காலத்திலே பல அடையாளங்களுக்கு இடையிலே சண்டை பூசல் வரும். “
"புரியல்லீங்களே.”
"கடவுளுக்கு லிங்கம்ங்கிறது ஒரு அடையாளம். இப்போ புதுசா வந்திருக்கிற ஆடலரசன் சிலை ஒரு அடையாளம். படுத்திட்டிருக்கிற கோவிந்தராசா சிலையும் அதே கடவுளுக்கான இன்னொரு அடையாளம். அடையாளத்தையே கடவுளா நினைச்சா என் கடவுள் உன் கடவுள்னு அடிச்சுக்குவாங்க. உண்மையிலே கடவுள் ஒண்ணு தான். அதைக் காணணும்னா அடையாளங்களைக் கடந்து உள்ளே போகணும் தம்பி.
"அம்மையார் கடவுளுடைய உருவத்தைப் பல வகையிலே வருணிக்கிறாங்க. தலையிலே சடை, கழுத்திலே பாம்பு, இடுப்பிலே புலித்தோலு, காலிலே கழல்னு எல்லாம் சொல்றாங்க. இந்த உருவ வர்ணனை எல்லாம் குழந்தைகளுக்கு மனசிலே பதியறதுக்காக சொல்லுறது. கடவுளோட உண்மையான வடிவம் சோதி வடிவம்தான். பக்குவம் அடைய அடைய உருவத்தை விட்டு, கண்ணுக்குத் தெரியற சோதிக்கு நகரணும். அப்புறம் அதையும் விட்டு மனசாலே பார்க்கிற சோதிக்கு நகரணும். அது தாங்க அவங்க சொல்ற பத்திமை. "மின்னும் சுடருருவாய் மீண்டாய் என் சிந்தனைக்கே இன்னும் சுழல்கின்றது இங்கு" அப்படின்னு சொல்றாங்க.
"சரியாச் சொன்னீங்க அண்ணே. அம்மையார் பாட்டெல்லாம் நல்லா ஆழ்ந்து படிச்சிருக்கீங்கன்னு தெரியுது. தமிழ்நாட்டிலே சமணம் குறைஞ்சு சைவம் வளர்ந்ததுக்கு முதல் காரணம் அம்மையார்னு சொல்றாங்க, உண்மையா?”
"உண்மை தான் தம்பி. சமணர்கள் பல பேர் சைவர்கள் ஆயிட்டாங்க ஆனாலும் சமணம் இன்னும் முழுசா அழியல்லே. சைவம் வளரணும்னா கண்ணப்பர், சண்டேசர் போல உணர்ச்சிவசப்பட்ட பக்தியா இல்லாம அம்மையாரைப் போல ஆழ்ந்த நிதானமான பக்தி உள்ளவங்களா நிறைய மகான்கள் பொறக்கணும்.“
"எங்க பல்லவ நாட்டிலே ஒரு மகான் தோன்றி இருக்காருங்க. அவர் முதல்லே சமண சாமியாரா இருந்தவர், அறுபது வயசுக்கு மேலே சைவத்துக்கு வந்து சேர்ந்தாருங்க. அவராலே எங்க ராசா மகேந்திர பல்லவரும் சைவத்துக்கு வந்திட்டாரு. அதனாலே தான் சிராப்பள்ளிலே குகை அமைச்சு சிவனோட சிலையைச் செதுக்கச் சொல்லி ஏற்பாடு செஞ்சாருங்க.”
"நானும் கேள்விப்பட்டேன். ஊர் ஊராப் போயி பாட்டெல்லாம் பாடறாராம்.”
"ஆமாங்க. கையிலே உழவாரத்தை வெச்சுகிட்டு கோயில்கள்லே உள்ள முள் புதரெல்லாம் சுத்தம் பண்றாரு. எல்லாரும் கோவிலுக்கு வாங்க, சிவனைக் கும்பிடுங்கன்னு சொல்றாரு. சனங்க கூட்டம் கூட்டமா அவர் பின்னாடி போறாங்க.”
"நம்ம தமிழ்ச் சமூகத்துக்கு நல்ல காலம் வந்திடிச்சின்னு தோணுது. இந்தக் காழி ஒரு புண்ணிய பூமி தம்பி. இங்கே ஒரு மகான் பிறப்பார்னு எங்க சோழராசாவோட முன்னோர் ஒருத்தர் கனவு கண்டாராம். அதிலேருந்து தான் சோழநாடு வர வர முன்னேறி வருதுன்னு சொல்றாங்க. பார்ப்போம், அந்த மகானும் பிறந்து சைவத்தை அதன் உண்மையான பொருளில் மக்கள் கடைப்பிடிக்கிறாப்பலே செய்வார்னு நம்பிக்கை இருக்கு, தம்பி.
"பாருங்க, பேசிக்கிட்டே வந்ததிலே நடந்து வந்ததே தெரியல்லே. காழி வந்திடிச்சி. இங்கே தங்கி குளிச்சு, சாப்பிட்டு விட்டு வெய்யில் தாழ்ந்ததும் புறப்பட்டா இரவுச் சாப்பாட்டுக்கு தில்லைக்குப் போயிடலாம்.”
----------------------------- --------------------------- -----------------------------------------------------
* இந்தக் கதைகள் பெரியபுராணத்தில் உள்ளன.
 
21 காழிப்பிரான்
வேதநெறி தழைத் தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்
பூதபரம்ப ரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத
சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்
பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்
-சேக்கிழார்
தென்னைமர உச்சியில் லிங்கத் திருமேனியைத் தாங்கி நின்ற விச்வேசரின் பேரன் சிவபாத இருதயர். அவர் ஒரு நாள் வழக்கம்போல் தன் குழந்தையை அழைத்துக் கொண்டு குளத்துக்குப் போனார். சூரிய உதயத்துக்கு முன் நீரில் மூழ்கிக் குளித்து அனுஷ்டானங்களைச் செய்வது அவரது வழக்கம்.
மேற்படியில் குழந்தையை உட்கார வைத்தார். ‘இங்கேயே சமர்த்தாக உட்கார்ந்திரு. அப்பா குளித்துவிட்டு வருகிறேன்’ என்று சொல்லிப் படி இறங்கினார். சித்திரை மாதம். குளத்தில் நீர் நிரம்பியிருக்கவில்லை நாலைந்து படிகள் இறங்கித்தான் நீரை அடைய வேண்டியிருந்தது. கங்கை, யமுனை, கோதாவரி, ஸரஸ்வதி, நர்மதை, சிந்து காவேரி ஆகிய புண்ணிய தீர்த்தங்கள், தான் குளிக்கும் நீரில் கலந்து அதைப் புனிதப்படுத்த வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். தான் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் தன்னை விட்டு நீங்க வேண்டுமென்று உள்ளத் தூய்மைக்காக அகமர்ஷண சூக்தம் சொல்லி நீரில் மூழ்கினார். அவரது தலை தண்ணீருக்குள் மறைந்த நேரம் பார்த்துக் குழந்தை அழுதது. ‘குழந்தைக்குப் பசி நேரம் இல்லையே, என்னைக் காணவில்லை என்று அழுததோ’ என்று நினைத்துக் கொண்டே நீரிலிருந்து தலையைத் தூக்கிய அவர் திரும்பிப் பாராமலேயே, ‘பயப்படாதே, அப்பா இதோ வந்துவிட்டேன்’ என்று சொல்லிக் கொண்டே மேலும் இரண்டு முழுக்குகள் போட்டார். உடல் அழுக்கும் உள்ள அழுக்கும் நீங்கப் பெற்றவராக அவர் படியேறி மேலே வந்த போது குழந்தை அழவில்லை. அது பால் ஒழுகும் வாயுடன் சிரித்துக் கொண்டிருந்தது.
‘ஏது இந்தப் பால்? யார் கொடுத்திருப்பார்கள்?’
“பசித்ததா, குழந்தாய்? யார் அப்பா உனக்குப் பால் கொடுத்தது?” என்று வினவினார்.
குழந்தை விடையளித்தது. “அவன் காதில் தோடு அணிந்திருந்தான் அப்பா.”
‘யாரோ ஆண் வந்திருக்கிறான் போலும். அவன் எதற்குக் குழந்தைக்குப் பால் கொடுக்க வேண்டும்? பொதுவாக ஆண்கள் குழைதான் அணிவார்கள். இவன் வித்தியாசமாக இருந்ததால் குழந்தை மனதில் அந்த அடையாளம் நன்றாகப் பதிந்திருக்கிறது போலும்.’
குழந்தை மேலும் பேசியது, “அவன் காளை மீது வந்தான்.”
‘காளை பூட்டிய வண்டியில் வந்திருப்பான். குழந்தை சொல்லத் தெரியாமல் சொல்கிறது’ என நினைத்துக் கொண்டார்.
“அவன் தலையில் ஒரு சந்திரன் இருந்தது, அப்பா.”
‘தலையில் சந்திரனா? குழந்தைகளுக்குக் கற்பனை அதிகம். எதையோ பார்த்துவிட்டு சந்திரன் என்கிறது போலும்.’
“சுடுகாட்டுச் சாம்பலைப் பூசியிருந்தான் அப்பா.”
‘யாரேனும் காபாலிகனோ?’ முற்காலத்தில் காபாலிகர் என்ற சிலர் உடல் முழுவதும் சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிக் கொண்டு திரிந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறார். இவர் பார்த்ததில்லை. ‘அப்படி யாரேனும் வந்துவிட்டானோ? விஷம் கலந்த பாலைக் கொடுத்திருப்பானோ?’ சிவபாத இருதயருக்கு அச்சம் ஏற்பட்டது
“என் மனதைக் கவர்ந்த திருடன் அப்பா அவன்.”
‘அந்தக் காபாலி குழந்தையைப் பயமுறுத்தவில்லை. இதற்கு மகிழ்ச்சி ஊட்டி இருக்கிறான்.’ சற்றே ஆறுதலாக இருந்தது.
“முற்காலத்தில் தன்னை வழிபட்ட பிரம்மாவுக்கு அருள் புரிந்தவன்.”
“என்னது இது? நீ என்ன சொல்கிறாய், குழந்தாய்?”
“பிரமாபுரத்தில் இருக்கின்ற பெம்மான்.”
“என்னது? நம் சிவனா? என்னென்னவோ புதிர் போட்டு என்னைக் குழப்பிவிட்டாயடா குழந்தாய். சிவன் கொடுத்த பாலையா குடித்தாய்? அதனால்தான் இவ்வளவு அழகாகப் பேசுகிறாயா? எங்கே மறுபடியும் சொல்.”
“தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.”

குழந்தை தாளம் போட்டுக் கொண்டு இசையுடன் பாடியது. மெய் மறந்தார் சிவபாத இருதயர். என்ன அழகு! என்ன இனிமை! இவனுக்கு இசை கற்பித்தது யார்? எனக்கே தெரியாத தமிழ்ப் பாடல் இலக்கணத்தை இவன் எங்கே கற்றான்? பல இதழ் கொண்ட தாமரைப் பூவை ஏடுடைய மலர் என்கிறானே, என்ன சொல்லாட்சி!
“எங்கே, மறுபடியும் சொல்?”
மழலைக் குரல் இனித்ததா, இசை இனித்ததா, பாடலின் அமைப்பு இனித்ததா, பாடலின் பொருளான சிவம் இனித்ததா? மயங்கினார் தந்தை
அவருக்கு அனுஷ்டானத்தில் மனம் செல்லவில்லை. ‘வீட்டுக்குப் போய் செய்துகொள்ளலாம். பகவதி இதைக் கேட்டால் மகிழ்வாள். உடனே வீட்டுக்குப் போகவேண்டும்.’ குழந்தையைத் தோளில் சார்த்திக் கொண்டு ஈர ஆடைகளைக் கையில் எடுத்துக் கொண்டு போனார். போகும்வழி எல்லாம் அந்தப் பாடலைத் திரும்பத் திரும்பச் சொல்லச் சொல்லிக் கேட்டுக் கொண்டே போனார். அவருக்கு அந்தப் பாடல் மனப்பாடம் ஆகிவிட்டது.
“பகவதீ, உன் பிள்ளை பாட்டுப் பாடுகிறான் கேள். பாடடா குழந்தாய்”
தாய் கேட்டாள்.
“எவ்வளவு அழகாகப் பாடுகிறான்! நீங்கள் சொல்லிக் கொடுத்தீர்களா?”
“இல்லை. அவனாகவே பாடினான்.”
“அவனாகவேயா?”
“அதே பாடலையே திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்களே, இன்னும் கேளுங்கள்” என்றது குழந்தை.
அதற்குள் அந்தப் பாடலை ஓலையில் எழுதி வைத்துக் கொண்டார் தந்தை. ஏடும் எழுத்தாணியும் எடுத்து வந்து, “பாடடா, குழந்தை” என்றார்.
குழந்தை அதே நட்டபாடைப் பண்ணில் பாடத் தொங்கியது. அவற்றின் சுவையை அனுபவித்தபடியே ஏட்டில் எழுதிவந்தார் தந்தை.
ஆமை ஓடு, நாகம், பன்றியின் பல் இவற்றை மாலையாக அணிந்தவன், கபாலம் ஏந்தி பிச்சை எடுப்பவன், தொழுதவர்கட்கு அருள்பவன், கங்கை நீர் நிரம்பிய சடைமுடியன், பெண்கள் உள்ளத்தைக் கவர்பவன், மும்மதில்களையும் அம்பு எய்தி அழித்தவன், கொன்றை மலர் அணிந்தவன், இடப்பாகத்தே உமையைக் கொண்டவன், வேதத்தைப் பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் இருப்பவன், மழுவாயுதம் கொண்டவன், கரத்தில் அனலை உடையவன், நடனமாடித் திரிந்தவன், கயிலை மலையைப் பெயர்த்த ராவணனின் வலிமையை அழித்தவன், திருமாலும், நான்முகனும் தேடிச் செயலற, அண்ணா மலையாய் நிமிர்ந்தவன், மத யானைத் தோலை உரித்துப் போர்த்தவன். பித்தன் என்று இறைவனின் தோற்றத்தையும் வீரச் செயல்களையும் பலவாறாக வர்ணித்த குழந்தை ஒவ்வொரு பாட்டிலும் இத்தகையன் பிரளய காலத்திலும் அழியாது நிலை பெற்ற இந்தப் பிரமபுரம் மேவியிருக்கிறான், அவனே என் உள்ளம் கவர் கள்வன் என்றது.
இந்த இறைவனைத் தொழப் புண்ணியம் இன்மையால் புத்தர்களும் அறிவற்ற சமணர்களும் பிழைபட்ட கருத்துக்களைச் சொல்லித் திரிகிறார்கள் என்று சொல்லி முடித்தது.
“இந்தப் பத்துப் பாடல்களையும் நீயேதான் இயற்றினாயா, வேறு யாரிடமிருந்தாவது கற்றுக் கொண்டாயா?” என்று கேட்டாள் தாய். விடையும் பாட்டாகவே வந்தது.
‘இறைவனிடம் மனத்தைப் பதித்து உணரும் ஞானசம்பந்தனாகிய நான்தான் இயற்றினேன்’ என்று உறுதி செய்தது குழந்தை. அது மட்டுமல்ல. ‘இப்பதிகத்தை ஓதுபவர்களின் பழவினைகள் தீர்தல் எளிதாகும்’ என்றும் சொல்லியது.
எல்லாத் தாய்மார்களும் தங்கள் தங்கள் குழந்தையைத் தெய்வ அம்சமாகத்தான் கருதுவார்கள். ஆனால் பகவதி அவ்வாறு கருதிப் பெருமைப்படுவதற்குத் தக்க நியாயம் இருந்தது.
தந்தை அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு குழந்தையை எடுத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்றார். அதற்குள் அவரது மனைவி மூலமாக அக்கம் பக்கத்தவருக்குச் செய்தி பரவி விட்டது. அத்தனை பேரும் இந்தத் தெய்வக் குழந்தையைக் காணக் குழுமினர்.
கோவிலில் குழந்தை தக்கேசிப் பண்ணில் இனிமையாகப் பாடுகிறது. உள்ளத்திலிருந்து தமிழ் பொங்கி வந்தது. பல நாள் சாதகம் செய்த பாடல் போலத் தங்கு தடை இன்றிப் பாடுகிறது.
பத்துப் பாடல்களை முடித்தபின் அவனது தாய் மனதில் தோன்றிய கேள்வி எல்லோர் மனதிலும் தோன்றியது. அதற்கு விடையளிக்கும் முறையில், “தன்னார்வஞ்செய் தமிழின்விரகனாகிய நான் உரைத்த இந்தத் தமிழ்மாலையைப் பல நாளும் பாடி ஆடுங்கள், பரலோகம் நிச்சயம்” என்று கூறி முடித்தது. அனைவரும் வியந்து போற்றினர்.
மறுநாள் சிவபாத இருதயர் அனுஷ்டானங்களை முடித்தபின், குழந்தை கேட்டது, “இந்தக் காழி தவிர வேறு எங்கு கோயில்கள் உள்ளன?”
“இதோ சற்றுத் தூரத்தில் கோலக்கா உள்ளது. அங்கும் உன்னை அழைத்துப் போகிறேன்” என்றார்.
தந்தை தோளில் அமர்ந்து குழந்தை வர, காழி அன்பர்கள் யாவரும் உடன் வந்தனர்.
கோலக்கா கோவிலை அடைந்ததும் உள்ளூர் மக்களும் கூடிவிட்டனர். குழந்தை இறைவனை வணங்கி தக்கராகப் பண்ணை இசைத்து அதில் ஒரு பதிகம் பாடுகிறது. கேட்ட அன்பர்கள் ‘இது விட்ட குறை தொட்ட குறைதான். சென்ற பிறவியில் தமிழும் இசையும் முழுமையாகக் கற்றிருந்தால் அன்றி இவ்வாறு பாடமுடியாது’ என்றனர் சிலர்.
“நமது ஊர்க் குளத்தை வருணிக்கிறது பாருங்கள், ஆற்றிலிருந்து நீர் பாயும் மடையில் வாளை மீன் துள்ளி விளையாடுவதையும் அங்கு மகளிர் நீராடுவதையும் எவ்வளவு அனாயாசமாக ஒரு வரியில் கூறிவிட்டது பாருங்கள்” என்றார் மற்றொருவர்.
“நிழலார் சோலை நீலவண்டினம் குழலார் பண்செய் கோலக்காவு என்று வர்ணிக்கிறதே, என்ன அழகு!” என்று வியந்தார் மற்றொருவர்.
“நேற்று காழியில் பாடிய இரண்டு பதிகங்களும் இரு வேறு பண்கள். இன்று வேறு பண். இசைக் கலையை முழுமையாகக் கற்றவர் தவிர மற்ற யார் இது போலப் பாடமுடியும்?” என்று வியந்தார் மற்றொருவர்.
“பாவம் போக வேண்டுமென்றால் சமணர்களைப் போல் உடம்பைத் துன்புறுத்திக் கொள்ள வேண்டாம் என்கிறது இக்குழந்தை. இந்தப் பாடல்களைப் பாடினாலே இறைவன் வசப்படுவான். பாவத்தை நீக்கி விடுவான்” என்றார் மற்றொருவர்.
“எவ்வளவு அழகாகக் கைகளைத் தட்டித் தாளம் போடுகிறது. பாவம், தாளம் போட்டுப் போட்டுப் பிஞ்சுக் கைகள் கன்றிவிட்டனவே” என்று பரிதாபப்பட்டனர் சிலர். சற்றுநேரத்தில் குழந்தையின் கைகளில் யாரோ ஒரு தாளத்தைக் கொண்டுவந்து கொடுத்தார்கள்.
 
22 வெற்றி யாத்திரை
ஆதியன் ஆதிரையன் அயன் மாலறி தற்கரிய
சோதியன் சொற்பொருளாய்ச் சுருங் காமறை நான்கினையும்
ஓதியன் உம்பர்தங்கோன் உல கத்தினுள் எவ்வுயிர்க்கும்
நாதியன் நம்பெருமான் நண்ணும் ஊர்நனி பள்ளியதே
-சம்பந்தர்
செய்தி வாய்மொழியாகவே அக்கம் பக்கத்து ஊர்களுக்குப் பரவியது. அரைக் காத தூரத்தில் பகவதி அம்மையாரின் பிறந்த ஊரான நனிபள்ளியில்* அச்செய்தி கேட்டதும், அவரது பெற்றோர்கள் தங்கள் பேரனை நினைத்துப் பெருமிதம் அடைந்தனர். அவனைப் பார்க்க வேண்டுமென்று ஆவல் கொண்டனர். உடனே தங்கள் மகன் சம்பந்த சரணாலயனை அனுப்பிக் குழந்தையை அழைத்து வரச் செய்தனர். அவ்வூரைச் சேர்ந்த வேறு பலரும் அவருடன் சேர்ந்துகொண்டனர்.
செய்தி ஊர் ஊராகப் பரவி பழையாறையில் இருந்த அரசன் புண்ணிய வளவனையும் எட்டியது. ‘காழிப்பதியில் ஒரு மகான் தோன்றுவார் என்று என் தாத்தாவின் தாத்தா சொல்லி வந்தது உண்மையாகிவிட்டது. அதனால்தான் ஆழிப் பேரலை இந்த நகரை அழிக்கவிடாமல் இறைவன் காப்பாற்றி இருக்கிறான். இந்த மகானை நான் உடனே தரிசிக்க வேண்டும். அரசன் என்ற முறையில் போனால் மக்கள் என்னைத்தான் கவனிப்பார்கள். நானும் இக்குழந்தை மகானின் தொண்டர்களில் ஒருவனாக மறைந்து நின்று தரிசித்துவிட்டு வருவேன்’ என்று சொல்லிக் கொண்டார்.
முதல் அமைச்சரிடம் மட்டும் ரகசியமாகச் சொல்லிவிட்டு மாறுவேடமணிந்துகொண்டு ஒரு குதிரையில் சென்றார். வழி நெடுக மக்கள் இந்தக் குழந்தை பாடுவதைப் பற்றியே வியந்து பேசுவதைக் கேட்டார். காவிரிக்கரையை அடைந்ததும் அங்கு மக்கள் பேசிக் கொள்வதிலிருந்து நனிபள்ளி என்ற இடத்தில் பெருமான் வந்திருப்பதை அறிந்தார். அங்கு ஊருக்கு வெளியே இருந்த ஒரு தோப்பில் குதிரையிலிருந்து கீழே இறங்கி நடந்து சென்றார்.
கோயிலை அடைந்தார். அங்கே மக்கள் கூடி இருந்தார்கள். சற்று நேரத்தில் சிவபாத இருதயர் தோளில் ஆரோகணித்து ஞானசம்பந்தப் பெருமான் வந்தார். கூடவே ஏடும் எழுத்தாணியும் கொண்டு மாமன் சம்பந்த சரணாலயர் வந்தார். வரும்போதே மக்கள் அனைவரும் ஹர ஹர மகாதேவா என்று கோஷம் எழுப்பினர். குழந்தை மகான் தாளத்தைத் தட்டிக் கொண்டு பியந்தைக் காந்தாரப் பண்ணில் பாடத் தொடங்கினார். கூட்டத்தில் ஒருவராக அமர்ந்து அரசர் கேட்டார். மெய் மறந்தார். பத்துப் பாடல்கள் முடிந்ததும் அருகில் இருந்தவர்கள் பேசத் தொடங்கியதையும் அரசர் கவனித்தார்.
“என்ன அழகான இயற்கை வருணனை! நமது ஊர் இவ்வளவு அழகாக இருக்கிறது என்பது இவர் மூலம்தான் தெரிகிறது. தேரைகள் ஆரைக் கொடிகளை மிதித்துத் துள்ள, அதனைக் கண்ட வாளை மீன்கள் துள்ள, அதனால் வள்ளைக் கொடிகள் துவள, நாரைகள் ஆரல் மீன்களை வாரி உண்ணுமாறு அமைந்த வயல்களில் எருமைகள் படிந்து மகிழும் ஊர். இது போல் நாம் யாராவது இந்த ஊரின் அழகை ரசித்திருக்கிறோமா?” என்றார் ஒருவர்.
“இதுவரையில் இந்த ஊரை அழகற்ற பாலைவனம் என நினைத்திருந்தோம். இதன் நெய்தல் வளம் இப்பொழுதுதான் வெளிப்பட்டிருக்கிறது” என்றார் மற்றவர்.
“விதி முறைப்படி நீராடி, அர்க்கியம் தரும் அந்தணர்கள் வாழும் ஊர் என்று ஊரில் குடியிருப்போரின் சிறப்பையும் போற்றுகிறது பாருங்கள். இந்த மாதிரிப் பாடுவதற்கு நான்கு வேதம் ஆறு சாஸ்திரம் கற்றிருந்தால் கூட முடியாது, இந்த வயதிற்குள் இக்குழந்தை எங்கே கற்றது?” என்று சிலர் பேசிக் கொண்டனர்.
அவர்கள் கூறுவதை எதிரொலிப்பது போல் கடைசிப் பாட்டு வந்தது.
“காழிப் பதியில் நால்வேத, ஆறங்கங்களை அறிந்துணர்ந்தவனாய்த் தோன்றிய ஞானமுனிவன் தந்தையார் தோள்மேல் இருந்து இன்னிசையோடு உரைத்த இப்பதிகத்தை ஓதுங்கள். இறைவனை நினையுங்கள். வினைகள் கெடும். இது நமது ஆணையாகும்.”
“அடா, அடா, என்ன தன்னம்பிக்கை! ஆணையிட்டுச் சொல்கிறாரே!” என்று வியந்தனர்.
அரசர் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு குழந்தை மகானை மனதால் வணங்கி விட்டுச் சத்தமில்லாமல் வெளியேறினார். குதிரை மேல் பயணிக்கும் போது யோசனை செய்துகொண்டே போனார். ‘எதனால் இந்த மகானை நாடி இவ்வளவு கூட்டம் வருகிறது? அவர் குழந்தை என்பதாலா, இறைவனின் சிறப்பையும் அவன் படைத்த இயற்கை அழகையும் அழகிய சொற்களால் போற்றும் அவரது தமிழ்ப் புலமையினாலா, இசை இனிமையாலா, யானையை எதிர்க்கும் சிங்கக் குட்டி என சமணத்தைச் சாடும் துணிச்சலாலா அல்லது இவை எல்லாவற்றின் கலவையாலா? அல்லது இவற்றிற்கு அப்பால் வேறு ஏதாவது உள்ளதா?’ என்று சிந்தித்துக்கொண்டே சென்றார்.
தலைநகர் வந்ததும் முதல் வேலையாகத் தலைமை அமைச்சரைக் கூப்பிட்டுத்தான் கண்டதைச் சொன்னார். “தர்மத்துக்குக் கேடு நேரும்போதெல்லாம் நான் பிறப்பேன் என்று கண்ணன் கூறியது உண்மைதான். ஐநூறு ஆண்டுகளுக்கு முன் அவந்தி தேசத்தில் சைவத்தை நிலைநாட்டிச் சமணத்தை வேரறுத்த லகுலீசர், இப்பொழுது அதே நோக்கத்துக்காக, சோழநாட்டில் அவதரித்துள்ளார். வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நமச்சிவாய மந்திரம் என்று லகுலீசர் சொன்னதையே இவரும் சொல்கிறார். வேள்விகள் செய்வோர் செய்யட்டும், முடியாதவர் வேத மந்திரங்களைக் கூறித் துதிக்கட்டும், அதுவும் இயலாதவர் நமச்சிவாய மந்திர ஜபமாவது செய்யட்டும் அல்லது நான் உரைத்த தமிழ்ப் பாடல்களை ஓதினால் போதும் என்கிறார். எதைச் செய்தாலும் இறை அன்புதான் முக்கியம், காதலாகிக் கசிந்துருகிக் கண்ணீர் மல்குதல்தான் உண்மையான சிவநேசம் என்று கூறுகிறார்.
“நாமாலை சூடியும் பூமாலை புனைந்தும் இறைவனை ஏத்துங்கள், வினை போகும் என்ற அம்மையாரின் கருத்தை இவர் எதிரொலிக்கிறார். இறை அன்பு இல்லாதவர்களை மட்டும்தான் சாடுகிறார். இதுவே பல தரப்பு மக்களையும் இவர்பால் ஈர்க்கிறது. எப்படியோ சிவன் சோழநாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு எந்நாட்டவர்க்கும் இறைவனாகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளத் திருவுள்ளம் கொண்டிருக்கிறான் என்பதே உண்மை. என் குல முன்னோன் செந்தீ வளவனின் கனவு பலித்துவிட்டது.”
அமைச்சர் கூறினார், “வேத வேதாங்கங்களைக் கற்றவர்கள் வீடு வீடாகச் சென்று எவ்வளவு பிரசாரம் செய்தாலும் அது ஒரு சில மக்களையே சென்றடையும். பெரும்பாலான பாமர மக்களை விந்தைச் செயல்கள்தாம் ஈர்க்கும். இவர் மூன்று வயதில் செய்யுள் புனைவது ஒரு விந்தை. அதை இசையோடு பாடுவது இன்னொரு விந்தை. இவர் இன்னும் பல செய்வார் என்று தோன்றுகிறது. அதனால் மக்கள் சமுதாயம் முழுவதும் அவர் வசப்படும்.”
“இளங்கன்று பயமறியாது என்றபடி, கொஞ்சமும் அச்சமில்லாமல் சமணர்களைத் தாக்குகிறார். அவர்களால் அவருக்குத் தீங்கு வரும் வாய்ப்பு உண்டு. அவர் எங்கு சென்றாலும் அங்கெல்லாம் மறைமுகமாக அவருக்குப் பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். நேற்று நான் அவரைத் தரிசித்த நனிபள்ளியில் உள்ள கோயிலின் கருவறையை விரிவுபடுத்தி யானை சுற்றிவரும் அளவுக்குப் பெரிதாக அமைத்து அதன் மேல் ஒரு சிறப்பான வேலைப்பாடு உள்ள விமானம் அமைக்க வேண்டும். அவர் காலடி பட்ட எல்லா ஊர்களும் திரு என்ற அடைமொழி சேர்த்து அழைக்கப்பட வேண்டும். அவர் பிறந்த காழி மிகவும் புண்ணியம் செய்த மண். அது இனி சீர்காழி என்று அழைக்கப்பட வேண்டும்” என உத்திரவிட்டார் அரசர்.
---------------------------------------------- ------------------------------------------------------ -------------------------
* இன்றைய பெயர் புஞ்சை
 
23 அப்பரும் ஆளுடைய பிள்ளையும்
அப்பர்தாம் எங்குற்றார் இப்பொழுதென் றருள்செய்யச்
செப்பரிய புகழ்த்திருநாவுக்கரசர் செப்புவார்
ஒப்பரிய தவஞ்செய்தேன் ஆதலினால் உம்மடிகள்
இப்பொழுது தாங்கிவரப் பெற்றுய்ந்தேன் யான்என்றார்.
-சேக்கிழார்

இவர் பால் மணம் மாறாப் பச்சிளம் பாலகர். அவர் பழுத்து முதிர்ந்தவர்.
இவர் வேதியர் குலத்தவர். அவர் வேறு குலத்தவர்.
இவர் தந்தையின் தோள் மீதும் பல்லக்கிலும் அமர்ந்தே பயணம் செய்தவர். அவர் கால்நடையாகவே எல்லாத் தலங்களையும் சென்று தரிசித்தவர்.
இவர் வேத வேதாங்கங்களை ஓதாது உணர்ந்தவர். அவர் வேறு சமயத்து நூல்களை ஓதி அவற்றின் பயனின்மையை உணர்ந்து துறந்தவர்.
இவர் பிறக்கும்போதே சமணத்தை ஒழிப்பதே எனது குறிக்கோள் என முழங்கியவர். அவர் குறிக்கோள் இல்லாது வாழ்ந்து கெட்டேனே என்று வருந்தியவர்.
இவர் இளமைக்கே உரிய துடிப்பும் பதட்டமும் கொண்டவர். அவர் அனுபவத்தால் பெற்ற பணிவும் கனிவும் கொண்டவர்.
இவர் ஆனந்தமே வடிவானவர். அவர் தன் கடந்த கால வாழ்க்கையை நினைந்து கழிவிரக்கம் கொள்பவர்.
இவர் குழந்தைக்கே உரிய இயல்புடன் ஓடும் நதி, பாடும் குயில், முரலும் வண்டு, துள்ளும் மீன் என்று எல்லாவற்றிலும் உள்ள இன்பத்தை ரசிப்பவர். அவர் மனிதப் பிறவி துன்ப மயமானது என்ற கொள்கையில் வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழித்துவிட்டுக் கடைசியில் இவ்வுலகம் இன்பமானது, இறைவனின் திருவுருவைக் காணப் பெற்றால் எத்தனை பிறவி வேண்டுமானாலும் எடுக்கலாம் என்று உணர்ந்தவர்.
இவர் இறைவனின் உருவத்தைப் பலவாறாக வர்ணித்துக் கேட்பவர் மனதில் அந்த வடிவத்தைப் பதியச் செய்தவர். அவர் நீரிலும் நிலத்திலும் விண்ணிலும் தீயிலும் காற்றிலும் இறைவனைக் கண்டு மகிழ்ந்து மற்றவர்க்கும் காட்டியவர்.
சிவனடியாரை எந்தக் கோளும் நாளும் துன்புறுத்த முடியாது என்னும் அசைக்க முடியாத சிவபக்தி உடையவர் இவர். கோள்கள் மனிதனுக்குத் தீங்கிழைக்க வல்லன என்ற சராசரி மானிடரின் நம்பிக்கைகளை ஏற்றவர் அவர்.
இருவரையும் இணைத்தது சிவம். மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதால் பரகதி கெடாது என்பதில் இருவரும் ஒன்றுபட்டனர். ஊர் ஊராகச் சென்று வேத நெறியைப் பரப்புவதில் ஒன்றுபட்டனர். சிவனைப் போற்றும் தமிழோடு பாடல் இசைத்து மக்களைக் கவர்வதில் இருவரும் ஒன்றுபட்டனர்.
இருவரும் ஒருவரை ஒருவர் காண விரும்பினர்.
இடம் - பூந்துருத்தி.
அப்பர் அங்கு வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்ட ஆளுடைய பிள்ளை, பல்லக்கில் இருந்தபடியே “அப்பர் எங்கு இருக்கிறார்?” என்று வினவ, பல்லக்கின் அடியிலிருந்து குரல் கொடுத்தார் அப்பர், “தங்களைத் தாங்கும் பேறு பெற்று இங்கு உள்ளேன்.”
“அடடா, என்ன அபசாரம்! இவ்வளவு பெரிய சிவத் தொண்டர் என்னைச் சுமப்பதா?” என்று இளையவர் கீழே குதித்துப் பெரியவர் காலில் விழ, அதற்கு முன், “இறைவனால் ஞானப்பால் ஊட்டப் பெற்றவர் முன் நான் மிக மிகத் தாழ்ந்தவன்” என்று கூறி அவர் இவர் காலில் விழ எங்கும் உணர்ச்சி மயம். கூடியிருந்த அன்பர்கள் கண்ணீர் வழிய அவர்களது அன்பைப் போற்றினர்.
அங்கு வயது கரைந்தது. சாதி மறைந்தது. செல்வத்திற்கு மதிப்பில்லை. கல்வியைக் கவனிப்பார் இல்லை. எங்கும் சிவம் ஒன்றே நிறைந்தது.
இருவரும் சேர்ந்தே மறைக்காடு என்னும் தலத்திற்குப் போனார்கள். வேதங்கள் இறைவனைப் பூசித்த பெருமை உடைய பழம்பதி. வேதியராகப் பிறக்காவிடினும் வேத நெறியில் பற்றுக் கொண்ட அப்பர் அவ்வூர்க் கோவிலில் வேதங்களால் அடைக்கப்பட்டிருந்த கதவைத் திறக்குமாறு ஒரு பதிகம் பாடினார். கதவு திறந்தது. ஞான சம்பந்தர் பார்த்தார். வேதங்களை ஓதி அவ்வழியே முத்தி அடைதல் எல்லோர்க்கும் எளிதல்ல. எல்லோர்க்கும் எளிதான வழியான நமச்சிவாய மந்திரம் இருக்க, கடுமையான வழிகளைத் திறந்து விடுவதால் மக்கள் சமயத்தைக் கண்டு அஞ்சி ஓட ஏதுவாகும் என்று கருதி அக்கதவு மூடுமாறு பாடினார்.
 
24 மங்கையர்க்கரசி
மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழ லுருவன் பூதநா யகன்நால் வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடு மமர்ந்த ஆலவா யாவது மிதுவே
-சம்பந்தர்.
அமைச்சரின் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்த பாண்டிய அரசி மங்கையர்க்கரசி நிலை கொள்ளாமல் அந்தப்புரத்தின் முன் முகப்பில் இங்கும் அங்கும் உலவிக் கொண்டிருந்தார். ‘கூப்பிட்ட உடன் வருவதற்கு அவர் என்ன பணியாளா? அவருக்கு எத்தனையோ முக்கியமான அரசாங்கக் காரியங்கள் இருக்கும். எப்படியும் வந்து விடுவார்’ என்று தன்னைத் தானே சமாதானம் செய்துகொண்டாலும் அவரது மனம் தவித்தது.
அமைச்சர் குலச்சிறையார் பழுத்த அனுபவம் உள்ளவர். மங்கையர்க்கரசியின் மாமனாரான சேந்தன் மாறவர்ம பாண்டியன் காலத்திலிருந்து இருந்து வருபவர். சிவபக்தி உள்ள சேந்தன் ஆலவாயில் கோவிலை விரிவுபடுத்தியதற்கு குலச்சிறையாரே காரணம். மங்கையர்க்கரசியின் கணவர் அரிகேசரி பராங்குச வர்மனும் முதலில் சைவ ஆதரவாளராகத்தான் இருந்தார். ஆனால் அரச பதவிக்கு வந்தபின் சமணர்கள் அவரைத் தங்கள் வலையில் வீழ்த்தினர். குலச்சிறையாருக்கு இது பிடிக்கவில்லை. ஆனாலும் தன் நிலை உணர்ந்து அடங்கி இருந்தார். மன்னனுக்கு நல்ல புத்தி வரவேண்டும் என்று நாளும் சிவபெருமானை வேண்டிக் கொண்டிருந்தார். அவர்தான் தன் பிரச்சினைக்குத் தீர்வு காண வல்லவர் என்று அரசி நினைத்தார்.
இதோ அமைச்சர் குலச்சிறையார் வந்துவிட்டார். “வாருங்கள், அமைச்சரே” என்றார் அரசி. “மன்னிக்க வேண்டும், அரசியாரே. அரசர் ஒரு முக்கியமான அரசாங்க வேலை பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். அதனால் உடனே வர முடியவில்லை. சொல்லுங்கள், என்ன விஷயமாகக் கூப்பிட்டீர்கள்?”
“நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற அக்கறை சற்றும் இல்லாமல் அரசர் தன்னுடைய முத்தியைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறார்.”
“அது ஒன்றும் புதிது அல்லவே. அது நீண்ட நாட்களாக நாம் எல்லோரும் கவலைப்படும் விஷயம் தானே.”
“இல்லை. புதிதாகக் கவலைப்படுவதற்குக் காரணம் உள்ளது. நேற்று அவர் எங்கள் மகளுடன் பேசிக்கொண்டிருந்தார். எல்லாம் சமணத்தின் மேன்மை பற்றித்தான். குழந்தை மனதை அது மிகவும் கவர்ந்துவிட்டது. அவள், நானும் சமணத் துறவியாகித் தர்மத்திற்குத் தொண்டாற்றப் போகிறேன், அப்பா என்கிறாள். உண்மையில் அவள் துறவி ஆகிவிடுவாளோ என்று எனக்குக் கவலையாக இருக்கிறது அமைச்சரே.
“நம் நாட்டில் பெண்களுக்குச் சுதந்திரம் இல்லை. பெற்றோர் விருப்பப்பட்ட மணமகனுக்குத்தான் அவள் வாழ்க்கைப்பட வேண்டியிருக்கிறது. அரச குலப் பெண்களின் நிலைமையோ இன்னும் மோசம். அரசியல் விளையாட்டில் அவர்கள் ஒரு பகடைக்காய். களப்பிரர்களை முறியடித்த பாண்டிய மன்னர் தன் மீது படையெடுத்து வரக்கூடாது என்பதற்காக என் தந்தை இவருக்குத் திருமணம் செய்து கொடுத்து விட்டார். என் தந்தை சிவனுக்கு எழுபது மாடக்கோயில்கள் கட்டியவர். என் அண்ணன் புகழ்ச்சோழனோ தன் படைவீரர்கள் ஒரு சிவனடியாரைக் கொன்றதற்குத் தான் பொறுப்பேற்று உயிர் துறந்தவர். இத்தகைய பரம்பரைச் சைவர்களான சோழ வம்சத்தில் பிறந்த நான் இன்று ஒரு சமணரின் மனைவியாகக் காலம் தள்ளுகிறேன். என் குழந்தைகள் சைவத்தை விட்டு விலகிப் போய்விடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது.”
“தங்கள் தந்தையைப் பற்றிக் குறைவாக மதிப்பிடவேண்டாம், தேவி. அவர் சிறந்த ராஜதந்திரி. பாண்டிய மறவர்கள் அகிம்சைக் கொள்கையைக் கைக்கொண்டு வீரம் இழந்துள்ளனர். களப்பிரர்கள் தோற்றதற்குக் காரணம் அவர்களது வீரமின்மையே தவிர பாண்டியர்களின் படைவலிமை அல்ல. எனவே பாண்டியனால் ஆபத்து எதுவும் வராது என்று உங்கள் தந்தைக்குத் தெரியும். பாண்டிய நாட்டைச் சமணத்திலிருந்து மீட்கத்தான் அவர் தங்களை இங்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்.”
“என்னால் பாண்டிய நாட்டை எப்படிச் சமணத்திலிருந்து மீட்க முடியும்? என் கணவரையே மீட்க முடியவில்லையே.”
“அதற்கான காலம் கனிந்து வந்துவிட்டது, அரசியாரே. சோழநாட்டின் பெரும்பகுதி மக்கள் சைவத்தின்பால் ஈர்க்கப்பட்டுவிட்டனர். சென்ற வாரம் மறைக்காட்டில் உள்ள என் மகளைக் காணச் சென்றிருந்தபோது நான் இரு மகான்களை ஒருசேரத் தரிசிக்கும் பேறு பெற்றேன். ஒருவர் முதியவர். வாழ்நாளின் பெரும்பகுதியைச் சமணத் துறவியாகக் கழித்துவிட்டு இறையருளால் சைவத்தை ஏற்றவர். சிவனைப் போற்றி அவர் உருகி உருகிப் பாடும் பாடல்கள் கேட்பவர் நெஞ்சை எல்லாம் கனிய வைக்கும். மற்றவர் ஒரு பாலகன். நம் இளவரசர் வயதுதான் இருக்கும். இவரும் சிவனைப் போற்றி இசையோடு தமிழ்ப்பாடல்கள் பாடுகிறார். இசைக்கு வயப்படாதவர் யார்? எனவே மக்கள் பெரும் அளவில் அவர்களைக் காண வருகின்றனர். இவர்கள் பின்னால் செல்லும் கூட்டம் வர வர அதிகரித்து வருகிறது.
“அப்படியா, என் மகன் வயது உள்ளவருமா பெரும் கூட்டத்தை ஈர்க்கிறார்?”
“ஆம் தேவி. அவர் இறைவனை உள்ளம் கவர் கள்வன் என்கிறார், இவரும் ஒரு உள்ளம் கவர் கள்வன்தான். எந்த ஊருக்குப் போனாலும் அங்குள்ள கோவிலில் வழிபட்டுப் பதிகம் பாடுகிறார். அதில் அந்த ஊரின் இயற்கை அழகை வர்ணிக்கிறார். அதைக் கேட்கும் மக்கள், ஆம், நம் ஊர் அழகானதுதான், அதை நாம் இது வரையில் கவனிக்கவில்லையே என நினைக்கிறார்கள். அவர்கள் அந்த மன நிலையில் இருக்கும்போது சம்பந்தர் இத்தகைய ஊரில் வாழும் இறைவன் இத்தகையவன் என்று அவரது தோற்றத்தையும் சிறப்பித்துப் பாடுகிறார். மக்கள் ஆம், இந்தத் தெய்வத்தையும் நாம் மறந்து விட்டோம் என நினைக்கிறார்கள். ஏழு பாடல்களில் சிவனின் தோற்றத்தை வர்ணித்துவிட்டு எட்டாவது பாடலில் அவரை அடையக் கல்வியோ, செல்வமோ, வீரமோ பயன்படாது. காதலாகிக் கசிந்துருகிக் கண்ணீர் மல்கிப் போற்றுவது ஒன்றே வழி என்பதை எடுத்துரைக்கும் வகையில் ராவணனின் கதையைக் கூறுகிறார். ஒன்பதாவது பாடல் தோறும் இறைவன் சோதி மயமானவன் என்பதை நினைவூட்டி, தீயைப் பார்க்கும் போதெல்லாம் இறைவன் நினைவு வரும்படிச் செய்து விடுகிறார் அந்தச் சொல் சித்தர். பத்தாவது பாடலில், சமணர் சொல் கேளாதீர், நான் பாடும் இந்தத் தமிழ்ப்பாடலைப் பாடி வினைகளை நீக்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லும்போது கூட்டம் மகுடி முன் நாகம் போல அப்படியே அவருக்குக் கட்டுப்பட்டு நிற்கிறது. நான் என்னை இன்னாரென்று அறிமுகப்படுத்திக்கொள்ளாமல் எங்கள் பாண்டி நாட்டுக்கு வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன். அவர் வருவதாக ஒப்புக்கொண்டுள்ளார். அவர் இங்கு வந்தால் சமணம் வீழ்வது திண்ணம்.”
“அப்படியா? நல்ல செய்தி சொன்னீர்கள். அவர்கள் வரும் நாளை எதிர்பார்த்துக் காத்திருப்போம்.”
 
24 மங்கையர்க்கரசி
மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழ லுருவன் பூதநா யகன்நால் வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடு மமர்ந்த ஆலவா யாவது மிதுவே
-சம்பந்தர்.
அமைச்சரின் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்த பாண்டிய அரசி மங்கையர்க்கரசி நிலை கொள்ளாமல் அந்தப்புரத்தின் முன் முகப்பில் இங்கும் அங்கும் உலவிக் கொண்டிருந்தார். ‘கூப்பிட்ட உடன் வருவதற்கு அவர் என்ன பணியாளா? அவருக்கு எத்தனையோ முக்கியமான அரசாங்கக் காரியங்கள் இருக்கும். எப்படியும் வந்து விடுவார்’ என்று தன்னைத் தானே சமாதானம் செய்துகொண்டாலும் அவரது மனம் தவித்தது.
அமைச்சர் குலச்சிறையார் பழுத்த அனுபவம் உள்ளவர். மங்கையர்க்கரசியின் மாமனாரான சேந்தன் மாறவர்ம பாண்டியன் காலத்திலிருந்து இருந்து வருபவர். சிவபக்தி உள்ள சேந்தன் ஆலவாயில் கோவிலை விரிவுபடுத்தியதற்கு குலச்சிறையாரே காரணம். மங்கையர்க்கரசியின் கணவர் அரிகேசரி பராங்குச வர்மனும் முதலில் சைவ ஆதரவாளராகத்தான் இருந்தார். ஆனால் அரச பதவிக்கு வந்தபின் சமணர்கள் அவரைத் தங்கள் வலையில் வீழ்த்தினர். குலச்சிறையாருக்கு இது பிடிக்கவில்லை. ஆனாலும் தன் நிலை உணர்ந்து அடங்கி இருந்தார். மன்னனுக்கு நல்ல புத்தி வரவேண்டும் என்று நாளும் சிவபெருமானை வேண்டிக் கொண்டிருந்தார். அவர்தான் தன் பிரச்சினைக்குத் தீர்வு காண வல்லவர் என்று அரசி நினைத்தார்.
இதோ அமைச்சர் குலச்சிறையார் வந்துவிட்டார். “வாருங்கள், அமைச்சரே” என்றார் அரசி. “மன்னிக்க வேண்டும், அரசியாரே. அரசர் ஒரு முக்கியமான அரசாங்க வேலை பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். அதனால் உடனே வர முடியவில்லை. சொல்லுங்கள், என்ன விஷயமாகக் கூப்பிட்டீர்கள்?”
“நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற அக்கறை சற்றும் இல்லாமல் அரசர் தன்னுடைய முத்தியைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறார்.”
“அது ஒன்றும் புதிது அல்லவே. அது நீண்ட நாட்களாக நாம் எல்லோரும் கவலைப்படும் விஷயம் தானே.”
“இல்லை. புதிதாகக் கவலைப்படுவதற்குக் காரணம் உள்ளது. நேற்று அவர் எங்கள் மகளுடன் பேசிக்கொண்டிருந்தார். எல்லாம் சமணத்தின் மேன்மை பற்றித்தான். குழந்தை மனதை அது மிகவும் கவர்ந்துவிட்டது. அவள், நானும் சமணத் துறவியாகித் தர்மத்திற்குத் தொண்டாற்றப் போகிறேன், அப்பா என்கிறாள். உண்மையில் அவள் துறவி ஆகிவிடுவாளோ என்று எனக்குக் கவலையாக இருக்கிறது அமைச்சரே.
“நம் நாட்டில் பெண்களுக்குச் சுதந்திரம் இல்லை. பெற்றோர் விருப்பப்பட்ட மணமகனுக்குத்தான் அவள் வாழ்க்கைப்பட வேண்டியிருக்கிறது. அரச குலப் பெண்களின் நிலைமையோ இன்னும் மோசம். அரசியல் விளையாட்டில் அவர்கள் ஒரு பகடைக்காய். களப்பிரர்களை முறியடித்த பாண்டிய மன்னர் தன் மீது படையெடுத்து வரக்கூடாது என்பதற்காக என் தந்தை இவருக்குத் திருமணம் செய்து கொடுத்து விட்டார். என் தந்தை சிவனுக்கு எழுபது மாடக்கோயில்கள் கட்டியவர். என் அண்ணன் புகழ்ச்சோழனோ தன் படைவீரர்கள் ஒரு சிவனடியாரைக் கொன்றதற்குத் தான் பொறுப்பேற்று உயிர் துறந்தவர். இத்தகைய பரம்பரைச் சைவர்களான சோழ வம்சத்தில் பிறந்த நான் இன்று ஒரு சமணரின் மனைவியாகக் காலம் தள்ளுகிறேன். என் குழந்தைகள் சைவத்தை விட்டு விலகிப் போய்விடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது.”
“தங்கள் தந்தையைப் பற்றிக் குறைவாக மதிப்பிடவேண்டாம், தேவி. அவர் சிறந்த ராஜதந்திரி. பாண்டிய மறவர்கள் அகிம்சைக் கொள்கையைக் கைக்கொண்டு வீரம் இழந்துள்ளனர். களப்பிரர்கள் தோற்றதற்குக் காரணம் அவர்களது வீரமின்மையே தவிர பாண்டியர்களின் படைவலிமை அல்ல. எனவே பாண்டியனால் ஆபத்து எதுவும் வராது என்று உங்கள் தந்தைக்குத் தெரியும். பாண்டிய நாட்டைச் சமணத்திலிருந்து மீட்கத்தான் அவர் தங்களை இங்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்.”
“என்னால் பாண்டிய நாட்டை எப்படிச் சமணத்திலிருந்து மீட்க முடியும்? என் கணவரையே மீட்க முடியவில்லையே.”
“அதற்கான காலம் கனிந்து வந்துவிட்டது, அரசியாரே. சோழநாட்டின் பெரும்பகுதி மக்கள் சைவத்தின்பால் ஈர்க்கப்பட்டுவிட்டனர். சென்ற வாரம் மறைக்காட்டில் உள்ள என் மகளைக் காணச் சென்றிருந்தபோது நான் இரு மகான்களை ஒருசேரத் தரிசிக்கும் பேறு பெற்றேன். ஒருவர் முதியவர். வாழ்நாளின் பெரும்பகுதியைச் சமணத் துறவியாகக் கழித்துவிட்டு இறையருளால் சைவத்தை ஏற்றவர். சிவனைப் போற்றி அவர் உருகி உருகிப் பாடும் பாடல்கள் கேட்பவர் நெஞ்சை எல்லாம் கனிய வைக்கும். மற்றவர் ஒரு பாலகன். நம் இளவரசர் வயதுதான் இருக்கும். இவரும் சிவனைப் போற்றி இசையோடு தமிழ்ப்பாடல்கள் பாடுகிறார். இசைக்கு வயப்படாதவர் யார்? எனவே மக்கள் பெரும் அளவில் அவர்களைக் காண வருகின்றனர். இவர்கள் பின்னால் செல்லும் கூட்டம் வர வர அதிகரித்து வருகிறது.
“அப்படியா, என் மகன் வயது உள்ளவருமா பெரும் கூட்டத்தை ஈர்க்கிறார்?”
“ஆம் தேவி. அவர் இறைவனை உள்ளம் கவர் கள்வன் என்கிறார், இவரும் ஒரு உள்ளம் கவர் கள்வன்தான். எந்த ஊருக்குப் போனாலும் அங்குள்ள கோவிலில் வழிபட்டுப் பதிகம் பாடுகிறார். அதில் அந்த ஊரின் இயற்கை அழகை வர்ணிக்கிறார். அதைக் கேட்கும் மக்கள், ஆம், நம் ஊர் அழகானதுதான், அதை நாம் இது வரையில் கவனிக்கவில்லையே என நினைக்கிறார்கள். அவர்கள் அந்த மன நிலையில் இருக்கும்போது சம்பந்தர் இத்தகைய ஊரில் வாழும் இறைவன் இத்தகையவன் என்று அவரது தோற்றத்தையும் சிறப்பித்துப் பாடுகிறார். மக்கள் ஆம், இந்தத் தெய்வத்தையும் நாம் மறந்து விட்டோம் என நினைக்கிறார்கள். ஏழு பாடல்களில் சிவனின் தோற்றத்தை வர்ணித்துவிட்டு எட்டாவது பாடலில் அவரை அடையக் கல்வியோ, செல்வமோ, வீரமோ பயன்படாது. காதலாகிக் கசிந்துருகிக் கண்ணீர் மல்கிப் போற்றுவது ஒன்றே வழி என்பதை எடுத்துரைக்கும் வகையில் ராவணனின் கதையைக் கூறுகிறார். ஒன்பதாவது பாடல் தோறும் இறைவன் சோதி மயமானவன் என்பதை நினைவூட்டி, தீயைப் பார்க்கும் போதெல்லாம் இறைவன் நினைவு வரும்படிச் செய்து விடுகிறார் அந்தச் சொல் சித்தர். பத்தாவது பாடலில், சமணர் சொல் கேளாதீர், நான் பாடும் இந்தத் தமிழ்ப்பாடலைப் பாடி வினைகளை நீக்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லும்போது கூட்டம் மகுடி முன் நாகம் போல அப்படியே அவருக்குக் கட்டுப்பட்டு நிற்கிறது. நான் என்னை இன்னாரென்று அறிமுகப்படுத்திக்கொள்ளாமல் எங்கள் பாண்டி நாட்டுக்கு வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன். அவர் வருவதாக ஒப்புக்கொண்டுள்ளார். அவர் இங்கு வந்தால் சமணம் வீழ்வது திண்ணம்.”
“அப்படியா? நல்ல செய்தி சொன்னீர்கள். அவர்கள் வரும் நாளை எதிர்பார்த்துக் காத்திருப்போம்.”
 
25 வெப்பு நோய்
ஆற்ற லடல்விடை யேறு மால வாயான்றிரு நீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே
-சம்பந்தர்.
குலச்சிறையார் ஒற்றர் படையைச் சேர்ந்த நான்கு வீரர்களைத் தனியாகக் கூப்பிட்டு, சம்பந்தரின் இருப்பிடம் அறிந்து போகச் சொன்னார். அவர்கள் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் சம்பந்தரின் தொண்டர்களாக அவர் பின்னாலேயே போக வேண்டும், அவருக்கு ஆபத்து வராமல் பாதுகாக்க வேண்டும் என்று உத்திரவிட்டார்.
பாண்டியநாட்டை நோக்கி சிவக்கன்று வருவதை அறிந்த சமணர்கள் மன்னன் மீது தங்கள் பிடியை இறுக்கினர். சமணத்தின் இறுதிக் கோட்டை அது. அது வீழ்ந்துவிட்டால் தமிழ் மண்ணில் சமணம் இனித் தலை தூக்கவே வாய்ப்பு இல்லை என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். சம்பந்தர் ஆலவாய் நகர எல்லைக்குள் புக விடாமல் தடுக்க வேண்டும் என மன்னனிடம் வேண்டினர். மன்னனும் உடன்பட்டார்.
குலச்சிறையார் ஆலவாய் நகரின் கிழக்கு எல்லையில் ஒரு வீட்டைச் சம்பந்தரும் அவரது அடியார்களும் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தார். இருட்டியபின் உள்ளே இருந்தவர்களைக் கொல்லைப் புறமாக வெளியேற்றி வேறொரு வீட்டில் தங்க வைத்து அதற்குக் காவல் இட்டார்.
முதல் வீட்டில் சம்பந்தர் தங்கியிருப்பதாக நினைத்த சமணர்கள் அதற்குத் தீ வைத்தனர். வீடு எரிந்து சாம்பலாகியது. எதிரி ஒழிந்தான் என்று அவர்கள் கொக்கரித்தனர்.
இரவோடு இரவாகச் சம்பந்தரைத் தன் வீட்டிற்கு அழைத்து வந்து தங்க வைத்த குலச்சிறையார் அரசிக்கு மட்டும் செய்தி எட்டச் செய்தார்.
அரசர் அந்தப்புரத்திற்கு வந்தபோது அரசி கேட்டார், “அன்பரே, சமணத்தின் முக்கியக்கொள்கை அகிம்சை தானே?”
தன் மனைவிக்கும் சமணத்தின் மீது பற்று ஏற்பட்டிருப்பதை அறிந்து அரசர் மகிழ்ந்தார். “ஆம், எந்த உயிர்க்கும் துன்பம் இழைக்கக் கூடாது என்பதுதான் முக்கியம்.”
“நம் மகன் வயது உடைய ஒரு பாலகனை உயிரோடு எரித்துக் கொல்ல உத்திரவிட்டிருக்கிறீர்களே, இதுதான் அகிம்சையா?”
“யார், யார், என்ன சொல்கிறாய்?”
“சோழநாட்டிலிருந்து வந்துள்ள சிவனடியார் தங்கி இருந்த இடத்தில் தீ வைக்கப்பட்டுள்ளது உங்களுக்குத் தெரியாதா?”
“இல்லை தேவி. அவர் சமணத்துக்கு விரோதமாகப் பேசுகிறார் என்பதால் அவரை ஊருக்குள் வரவிடாமல் தடுக்கத்தான் உத்திரவிட்டேன். என்னை மீறிச் சமணர்கள் அவருக்குத் தீ வைத்துவிட்டார்களா? என்ன கொடுமை இது? அகிம்சை பேசுபவர்கள் இப்படிக் கூடச் செய்வார்களா? அவர்களை நம்பி மோசம் போனேனே!”
“கேட்பார் பேச்சைக் கேட்டு அறிவில்லாமல் செயல்படுவது உங்கள் பரம்பரைக்கே வழக்கம். முன்பு ஒரு பொற்கொல்லர் பேச்சைக் கேட்டு நிரபராதியான கோவலனைக் கொன்றதும் அதன் காரணமாக இந்த மதுரை தீக்கிரையானதும் உலகமே அறியும்.”
அரசர் மிக வேதனை அடைந்தார். ‘என் மகன் போல ஒரு பாலகனைத் தீக்கிரையாக்கிய பாவத்தைச் செய்து விட்டேனே, இதை எப்படிப் போக்கிக் கொள்வேன்? இத்தகைய இழி செயல் செய்ய இடம் கொடுத்த என்னை நாட்டு மக்கள் இகழ்வார்களே. நான் எப்படித் தலை நிமிர்ந்து நடப்பேன்? என்னைக் கூன்பாண்டியன் என்று மக்கள் பரிகசிப்பார்களே’ என்று சிந்தித்த வண்ணம் உறங்கப் போனார். உறக்கம் வரவில்லை.
நள்ளிரவில் அவருக்கு உடம்பில் எரிச்சல் கண்டது. அரசியை எழுப்பினார். ‘உடல் முழுவதும் பற்றி எரிகிறது, தாங்க முடியவில்லை’ என்று கதறினார். அரசி அங்கிருந்த சந்தனக் குழம்பை அவர் உடல் முழுவதும் தடவினார். எரிச்சல் அடங்கவில்லை. பணிப்பெண்ணை அழைத்து அரண்மனை வைத்தியரை அழைத்து வரச் சொன்னார்.
வைத்தியர் வந்து பார்த்தார். ஒரு தொட்டியில் அரசரை உட்கார வைத்தார். அவரது கழுத்து வரை நீர் நிரப்பச் சொன்னார். ஒரு பானையில் நீர் நிரப்பிச் சொட்டுச் சொட்டாக அரசர் தலையில் விழுமாறு செய்தார். ‘சூரிய உதயம் வரை இப்படியே இருந்தால் சரியாகி விடும்’ என்றார். சற்று நேரத்தில் தொட்டி நீர் சூடேறி ஆவி மேலெழுந்தது. வைத்தியர், ‘இதற்கு மேல் வைத்திய சாத்திரத்தில் வழி இல்லை. ஏதேனும் மந்திரம் மாயம்தான் செய்ய வேண்டும்’ என்றார்.
ஊர் பூராவும் இந்தச் செய்தி பரவியது. சமண குருமார்கள் ஓடி வந்தனர். அரசருக்கு அவர்கள் முகத்தில் விழிக்கவே பிடிக்கவில்லை. “பேசுவது அகிம்சை, செய்வது கொலைத் தொழில். போங்கள் வெளியே” என்று கத்தினார்.
“இல்லை மன்னா, நாங்கள் மந்திரத்தின் மூலம் உங்கள் நோயை நீக்கிவிடுகிறோம்” என்றார்கள்.
குலச்சிறையார் அரசர் காதில் கிசுகிசுத்தார். “நாட்டு மக்களில் பெரும்பாலானோர் சமண குருமார்களை மிகவும் போற்றி வணங்குகிறார்கள். அவர்களை உடனடியாக வெளியேற்றினால் மக்கள் புரட்சியை எதிர்கொள்ள நேரிடும். அவர்கள் ஒரு பக்கம் மந்திரம் செய்யட்டும். இன்னொரு பக்கம் சைவ குருமார் மந்திரம் செய்யட்டும். எது பலித்தாலும் நமக்கு நல்லதுதான்.”
அரசர் உடன்பட்டார். குலச்சிறையார் தன் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சம்பந்தரை அழைத்து வரச் செய்தார்.
படுத்திருந்த அரசர் சம்பந்தரைப் பார்த்தார். “இவர்தான் அந்த சைவ குருவா? நேற்று அரசி சொன்ன பாலகர் இவர் தானா? இவர் உயிருடன் இருக்கிறாரா? நல்ல வேளை பெரும் பாவத்திலிருந்து தப்பினேன். என் மகன் போலத்தான் இருக்கிறார். அந்தப் பால் வடியும் முகத்தில்தான் என்ன தெய்வீகம்!, கண்களில் என்ன ஒளி!” என்று வியந்தார்.
வலப்பக்கம் சம்பந்தரும் இடப்பக்கம் சமணரும் மந்திரம் செய்து குணப்படுத்த வேண்டும் என்று முடிவாயிற்று. சம்பந்தர் ‘மந்திரமாவது நீறு’ என்று தொடங்கி ஒரு பதிகம் பாடி அரசரின் உடலில் வலப்பக்கத்தில் திருநீற்றைப் பூசினார். ‘அடாடா என்ன மென்மையான கைகள்! என் குழந்தை ஒரு வயதில் என் முகத்தைத் தடவியது போல இருக்கிறதே! அந்த அழகு முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது. அவருடைய இன்னிசையைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது’ என நினைத்த அரசரின் வலப்பக்கத்தில் எரிச்சல் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. இடப்பக்கம் மிக அதிகமாக எரியத் தொடங்கியது. சமண குருமார்களைப் பார்த்து, “நீங்கள் போகலாம். சம்பந்தரே இடப்பக்கத்துக்கும் மருத்துவம் செய்யட்டும்” என்றார் அரசர்.
பதிகம் பாடி முடிவதற்குள் அரசர் வெப்பு நோயிலிருந்து முற்றிலும் விடுதலை பெற்று எழுந்தார். தலை நிமிர்ந்து, ‘நின்ற சீர் நெடுமாறனாக’ விளங்கினார்.
சமணர்கள் விடவில்லை. “இவர் ஏதோ ஒரு பேயை வசப்படுத்தி அதன் மூலம் நோய் குணமானதாக ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார். இவரிடம் உண்மையான தகுதி இருந்தால் எங்களுடன் வாதம் செய்து வெல்லட்டும்” என்றார்கள்.
அரசர் உடன்பட்டார். அரண்மனை முற்றத்தில் மக்கள் முன்னிலையில் நாளைக் காலை விவாதம் நடைபெறும் என்று அறிவிக்கச் செய்தார்.
 
26 வாத சபை
சந்துசேனனும் இந்துசேனனுந் தருமசேனனுங் கருமைசேர்
கந்துசேனனுங் கனகசேனனும் முதலதாகிய பெயர்கொளா
மந்திபோல்திரிந் தாரியத்தொடு செந்தமிழ்ப்பயன் அறிகிலா
அந்தகர்க்கெளி யேனலேன்திரு ஆலவாயரன் நிற்கவே
-சம்பந்தர்

ஊர் மக்கள் பெரும் திரளாகக் கூடி இருந்தனர். சம்பந்தரின் புகழ் ஏற்கெனவே பரவி இருந்ததால் அவரைக் காண விரும்பினர். அவரைக் கொல்லச் சமணர்கள் முயன்றார்கள் என்ற செய்தி அவர் பால் ஒரு அனுதாப அலையை ஏற்படுத்தியிருந்தது.
அரசரும் அரசியும் வந்து உட்கார்ந்தனர். சம்பந்தர் சமண குருவைப் பார்த்துக் கேட்டார். “உங்கள் சமயம் பற்றிச் சொல்லுங்கள்.”
“எங்கள் சமயம் உலகம் தோன்றிய நாள் முதற்கொண்டு இருக்கிறது. ரிஷப தேவரால் ஏற்படுத்தப்பட்டது. அவரைத் தொடர்ந்து மகாவீரர் வரை இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களால் போஷித்து வளர்க்கப்பட்டது. உங்கள் சமயம் நேற்று மழையில் முளைத்த காளான்.”
சம்பந்தர் பேசினார், “இந்த வைகை நதி என்று தோன்றியது என்பதை யார் கூற முடியும்? அது போல என்று பிறந்தது என்று அறியாத தொன்மை உடையது வேதநெறி. அதை எதிர்த்துத்தான் உங்கள் சமயம் தோன்றியது. வைகையில் மக்கள் இறங்கிக் குளிக்கப் பல துறைகள் இருப்பது போல வேதநெறியிலும் பல துறைகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் சைவம். துறை புதிது என்பதால் ஆற்றின் தொன்மை குறையாது.”
அரசர், அரசி, அமைச்சர் மூவரும் மகிழ்ச்சியுடன் தலையசைத்தனர்.
சம்பந்தர் தொடர்ந்தார், “தெய்வம் பற்றிய உங்கள் கோட்பாடு என்ன?”
“அத்தி நாத்தி, அதாவது, உண்டு இல்லை.”
“இது என்னய்யா வழுக்கல் விடை? உண்டா, இல்லையா?”
“நீங்கள் கூறுவது போல உலகத்தைப் படைத்துக் காக்கும் கடவுள் ஒருவர் இல்லை. ஆனால் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த சமணத் துறவிகள் தெய்வமாகப் போற்றப்படுவார்கள். அவர்களுக்கு விசேஷ சக்திகள் உண்டு.”
“உலகத்தைப் படைத்தவர் ஒருவர் இல்லை என்றால் உலகம் எப்படி வந்தது?”
“உலகம் வினைகளின் தொகுதி. ஒவ்வொரு வினைக்கும் ஒரு விளைவு உண்டு. ஒவ்வொரு காரியத்துக்கும் ஒரு காரணம் உண்டு. இவ்வாறு காரண காரியத் தொடர்பால் உலகமும் அதனுள் நடைபெறும் நிகழ்வுகளும் ஏற்படுகின்றன.”
“மனிதன் துன்பத்துக்குக் காரணம் என்ன? அதைத் தீர்க்கும் வழி யாது?”
“துன்பத்துக்குக் காரணம் அவரவர் செய்த தீவினைதான். அதை அனுபவித்துத்தான் தீர்க்க வேண்டும்”
“நேற்று அரசர் உடலில் நோய் கண்டதற்கு அவரது தீவினைதான் காரணமோ?”
“ஆம். முற்பிறவியில் செய்திருப்பார்.”
“முதலில் அவரது உடலின் வலப்பக்கம் மட்டும் நோய் நீங்கியதே, வலப்பக்கம் நல்வினையும், இடப்பக்கம் தீவினையும் செய்ததா?”
மக்கள் ஆரவாரித்தனர். சமணர்கள் தலை குனிந்தனர்.
காலில் மிதிபட்டு எறும்பு முதலான சிற்றுயிர்கள் இறக்கக் கூடாது என்பதற்காக மயிற்பீலியால் தரையைத் துடைத்துக் கொண்டு நடக்கிறவர்கள் இந்தப் பால் மணம் மாறாப் பாலகனைக் கொல்ல முயன்றிருக்கிறார்கள். அவர்கள் இறைக் கொள்கை போலவே அகிம்சைக் கொள்கையும் இரட்டை வேடம் போடுகிறது என்று மக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். சம்பந்தர் வாழ்க, சிவக்கன்று வெல்க என்ற கோஷம் வலுத்தது. மக்கள் தீர்ப்பின் அடிப்படையில் அரசர், வாதத்தில் சமணர்கள் தோற்றதாக அறிவித்தார்.
அவர்கள் விதண்டாவாதம் செய்யத் தலைப்பட்டனர். ‘அனல் வாதம் செய்து உன் சமயத்தின் மேன்மையை நிரூபி’ என்றனர். “அனல் வாதமா? அப்படி என்றால் என்ன?” என்றார் இவர். “நீ உனது பாடல்களை எழுதிய ஏட்டை நெருப்பில் இட வேண்டும். அது அழியாமல் இருந்தால் சைவம் மேன்மையானது என ஒப்புக் கொள்வோம்” என்றனர். சம்பந்தர் ‘போகமார்த்த’ என்று தொடங்கும் பதிகம் ஒன்று பாடினார். ஒவ்வொரு சொல்லாகப் பொருள் புரியும்படி நிறுத்தி நிதானமாக இசையுடன் பாடிக் கொண்டே அதைத் தன் கையாலேயே ஒரு ஏட்டில் எழுதினார். பதிகம் முடிந்தது. ஏடு நெருப்பில் இடப்பட்டது, எரிந்து விட்டது. கைதட்டிக் குதூகலித்தனர் சமணர்கள்.
“அவசரப்படவேண்டாம். என் பாடல் அழியவில்லை. இங்கு கூடியிருக்கும் மக்களில் யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள்” என்றார் சம்பந்தர். ஆம், கூடியிருந்த மக்கள் மனதில் அந்தப் பாடல் பதிந்திருந்தது. அத்தனை பேரும் அதைத் திரும்பக் கூறினர். ஏடுதான் அழிந்தது, பதிகம் அழியவில்லை.
‘புனல் வாதம் செய்தால்தான் நம்புவோம்’ என்றனர் சமணர். ‘உன் பாடல் எழுதிய ஏட்டை வைகையில் இட வேண்டும். அது அடித்துச் செல்லப்படாமல் இருந்தால் ஏற்போம்’ என்றனர்.
சம்பந்தர் உடன்பட்டார். ‘வாழ்க அந்தணர்’ என்று தொடங்கி மற்றொரு பதிகம் பாடினார். முன்பு போலவே அது மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. ஒருவர் மற்றொருவர்க்குச் சொல்லிக் கொடுத்தனர். அது விரைவில் பரவியது. ஏடு நீரில் அடித்துச் செல்லப்பட்டாலும் பாடல் மக்கள் செவி வழியாக மேற்கே ஒரு காதம் தொலைவில் உள்ள திருவேடகம் வரை பரவியது. மக்கள் மனதைச் சம்பந்தர் பாடல் பிணித்திருந்தது என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்? மக்கள் ஆதரவு சைவத்தின் பக்கம் இருப்பதை அறிந்த சமணர்கள் சைவத்தை ஏற்றனர். சமணம் கழுவேறியது.
 
27 நல்லூர்ப் பெருமணம்

காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே
-சம்பந்தர்.

வயது பதினாறு ஆயிற்று. சம்பந்தருக்குத் திருமணம் செய்துவைக்க விரும்பினார் தந்தை. எல்லோரையும் போல இல்லறத்தில் ஈடுபட்டு இன்பம் அனுபவிக்கவா அவர் அவதரித்தார்? இறைவன் தன்னை எதற்காக இந்த உலகிற்கு அனுப்பினான் என்பதை அவர் அறிவார். இறைவன் வழிகாட்டுவான் என்ற நம்பிக்கையில் இருந்ததால் தந்தை சொல்லை மறுக்கவும் இல்லை. நல்லூர்ப் பெருமணம் என்னும் தலத்தில் கோயிலில் இறைவன் திருமுன்பு திருமணம் நிறைவேறியது.
“நல்லூர்ப் பெருமணத்தில் உறைகின்ற ஈசா, கல்லூர்ப் பெருமணம் (அம்மி மிதிக்கும் சடங்கு) எனக்குத் தேவையா? இத்தனைத் தலங்களில் உன்னை நான் பாடினேனே, என்றாவது எனக்குத் திருமணம் செய்து வை என்று கேட்டதுண்டா? என்னை இந்த உலகிற்கு அனுப்பிய நோக்கத்தை நான் நிறைவேற்றி விட்ட நிலையில் இல்லறத்தில் ஈடுபடுத்திச் சோதனை செய்கிறாயே” என்று பாடினார்.
பின் தான் இத்தனை காலம் ஊர் ஊராகப் போய்ப் பிரசாரம் செய்ததின் சாரத்தை மீண்டும் நினைவுபடுத்துவது போலப் பாடத் தொடங்கினார்.
“நான்கு வேதங்களின் சாரமாவது நமச்சிவாய மந்திரம்தான். அதை நாள் தோறும் ஓதுங்கள், அன்புடன் ஓதுங்கள், உள்ளம் உருகி ஓதுங்கள். கடுமையான பாவங்களும் நீங்கும், மீண்டு் பிறவா நிலையான முத்தி கிடைக்கும்” என்று பாடிப் பதிகத்தை முடித்துவிட்டுத் தன் அவதார நோக்கம் நிறைவேறியதை அறிவிக்கும் வகையில் அனைவருடனும் சிவ ஜோதியில் கலந்தார் காழியர் கோன்.

காதலியைக் கைப்பற்றிக் கொண்டுவலம் செய்தருளித்
தீதகற்ற வந்தருளும் திருஞான சம்பந்தர்
நாதன்எழில் வளர்சோதி நண்ணிஅதன் உட்புகுவார்
போதநிலை முடிந்தவழிப் புக்கொன்றி உடனானார்.
-சேக்கிழார்

28 கனவு பலித்தது
தன் வம்சத்தவர் அனைவரும் சிவபாதசேகரர்களாக இருப்பது பற்றி விண்ணுலகில் செந்தீ வளவன் பேரானந்தம் அடைந்தார். “என் கனவு பலித்துவிட்டது. சோழ நாட்டில் மட்டுமன்றி தமிழ் கூறும் நல்லுலகம் முழுவதும் சமணம் முற்றிலும் அழிந்துவிட்டது. இனி, மக்கள் கலாசார வளர்ச்சிக்கான நல்ல பண்புகளைப் பெறுவார்கள். ஆடல், பாடல், ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை எல்லாவற்றிலும் சிறந்து விளங்குவார்கள். சோழரின் படை வலிமை சிறக்கும். தமிழகம் முழுவதும் சோழர் ஆட்சியின் கீழ் வரும். கடல் கடந்தும் வெல்வார்கள். இதை எல்லாம் சாத்தியமாக்கிய மகாதேவர் புகழைப் பறை சாற்றுவதற்காக உலகிலேயே பெரிய லிங்கம் அமைப்பார்கள். வானை முட்டும் விமானங்கள் கட்டுவார்கள். சோழப் பேரரசு அழிந்தாலும் செயற்கரிய சாதனையான இந்தக் கோயில்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு நின்று சோழர் பெருமையைப் பரப்பிக் கொண்டிருக்கும். அரன் நாமமே சூழ்க, வையகம் துயர் தீர்க” என்று வாழ்த்தினார்.
The end
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top