இருபதாயிரம் தமிழ் பழமொழிகள்
தமிழ் மொழி மிகவும் வளமான மொழி. உலகிலேயே அதிகமான பழமொழிகள் இதில் தான் இருக்கின்றன. சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்னர் மூன்று ஆங்கிலேயர்கள் 19,000க்கும் மேலான பழமொழிகளைத் தொகுத்து ஆங்கில மொழிபெயர்ப்புடன் வெளியிட்டனர். சம்ஸ்கிருதத்தில் சுபாஷிதங்கள் எனப்படும் பாடல் வகை நீதிக் களஞ்சியம், தனிப்பாடல்கள் இருபதாயிரத்தும் மேலாக இருக்கின்றன. ஆயினும் தமிழ் மொழிதான் பழமொழித் தொகுப்பில் உலகில் முன்னிலையில் நிற்கிறது.
வெள்ளைக்கரகள் தொகுப்பதற்கு முன்னரும் தமிழ் மொழியில் பழமொழித் தொகுப்பு இருந்தது. இதை பெர்சிவல் என்பவரே தன் நூல் முகவுரையில் குறிப்பிடுகிறார். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர் பெருமான் பழ மொழிகளைக் கொண்டே சிவன் மீது ஒரு பதிகம் பாடிவிட்டார். அதற்கு முன்னர் முன்றுரை அரையனார் என்பார் பழமொழி 400 என்ற தொகுப்பில் 400 வெண்பாக்களையும் பழமொழிகளைக் கொண்டு முடிக்கிறார். இப்படி ஒரு நூல் உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லை. இதிலும் தமிழுக்கே முதலிடம்!! கம்பன், தன் ராமாயணத்தில் நிறைய பழமொழிகளைக் கையாளுகிறான்.
பழமொழி என்பது என்ன? ஒரு சமூகத்தின் பழங்கால ஞானம், அறிவு ஆகியன ரத்தினச் சுருக்கமாக பேச்சு நடையில் வெளிப்படும் ஒரு சொற்றொடர். தமிழ் பழமொழிகள் பேசாத பொருளே இல்லை. ஆகையால் தமிழ் பழமொழிகளை இந்த சமூகத்தின் கலைக்களஞ்சியம் என்று கூறலாம்.
தனிப்பாடல்கள், சங்க இலக்கியப் பாடல்கள் அல்லது திருக்குறள் போன்ற நீதிநெறி இலக்கியப் பாடல்கள் கற்றோருக்கு மட்டுமே தெரியும். ஆனால் பழமொழிகளோ எனில் எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கும் தெரியும். கிராமப் புறப் பெண்களின் வாயில் பழமொழிகள் புகுந்து விளையாடும். சண்டை சச்சரவானாலும் சரி, பொழுதுபோக்கு அரட்டைக் கச்சேரியானாலும் சரி, கிண்டல், வேடிக்கையானாலும்சரி எல்லா இடங்களிலும் சரளமாகப் புழங்கும்
ஆயிரக கணக்கான ஆண்டு அனுபவம், பழமொழிகளில், எதுகை மோனையுடன் வரும் நாலைந்து சொற்களில் அடங்கிவிடும்
யானை பற்றி நூறு பழமொழிகள்
யானை பற்றி மட்டுமே நூற்றுக்கும் மேலான பழமொழிகள் கிடைத்திருக்கின்றன. பறவைகளில் காகமும், பிராணிகளில் யானையும் தமிழர்களை மிகவும் கவர்ந்துவிட்டதன. ஆனை வரும் பின்னே, மணி ஓசைவரும் முன்னே, ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன், யானை உண்ட விளாங்கனி போல, யானை தன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக்கொள்ளும், யானைக்கும் கூட அடி சறுக்கும்--- இப்படி நூற்றுக்கும் மேலாகப் படிக்கலாம்
சமயம், பெண்கள், பண்புகள், உணவு, மருத்துவம், பழக்க வழக்கங்கள், மிருகங்கள், தாவரங்கள், ஜாதிகள், அரசு, தொழில்கள், சோதிடம், அறிவியல், வானசாத்திரம், பருவநிலை, விவசாயம்—இப்படி ஏராளமான விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். 20,000 பழமொழிகள் ஒவ்வொன்று பற்றியும் ஆராய்ந்து தனித் தனி கட்டுரை எழுதலாம். சில பழமொழிகளுக்கு நேரிடையான பொருளும் எதிர்ப்பத பொருளும் கிடைக்கும்.
முதல் முதலில் ரெவரண்டு பெர்சிவல் என்பவர் 1842 ஆம் ஆண்டு 2000-க்கும் குறைவான பழமொழிகளுடன் ஒரு புத்தகம் வெளியிட்டார். பின்னர் அவரே 1877 ல் மூன்றாம் பதிப்பை வெளியிட்ட போது அதில் 6156 தமிழ் பழமொழிகள் இருந்தன. அவர் தொகுப்பில் விட்டுப் போன பழமொழிகளாக எடுதுத் தொகுத்து 9415 பழமொழிகளுடன் ஜான் லசாரஸ் என்பவர் 1894ல் வெளியிட்டார். பின்னர் ரெவரண்ட் ஹெர்மன் ஜென்சன் என்பவர் 1897ம் ஆண்டில் 3644 பழமொழிகளுடன் இன்னும் ஒரு நூலை வெளியிட்டார். இவற்றைத் தொகுத்தவர்கள் ஆங்கிலேயர்கள். அவர்களுக்கு இதன் பொருளை விளக்கியதில் நம்மவரின் பங்கே அதிகம் அதுமட்டுமல, நம்மவர்களும் பழமொழிகளைத் திரட்டித் தந்தனர். இந்த 3 புத்தகங்களும் தமிழ் பழமொழிகளின் ஆங்கில மொழி பெயர்ப்புகளுடன் வந்தன.
சமயம் பற்றிய பழமொழிகள் (பழமொழிகளில் இந்து மதம் என்ற என் கட்டுரையைப் படிக்கவும்):
தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் (நரசிம்மாவதாரம் கதை), எல்லாம் அவன் செயல், நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும், தலைக்கு வந்தது தலைப் பாகையுடன் போனது (கர்ணன் கதை) இப்படி மதம் தொடர்பாக நூற்றுக் கணக்கில் பழமொழிகள் உண்டு.
சோதிடப் பழமொழிகள்
ஓடிப் போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு, அகப் பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி,முப்பது ஆண்டு வாழ்ந்தவனும் இல்லை, முப்பது ஆண்டு தாழ்ந்தவனும் இல்லை (சனிக் கிரகத்தின் சுழற்சி), பரணி தரணி ஆள்வான், அவிட்ட நட்சத்திரக் காரனுக்கு தவிட்டுப் பானை எல்லாம் தங்கம்—இப்படி நிறைய சோதிட பழமொழிகள் .
ஆயிரக் கணக்கான ஆண்டுகளில் ஒரு சமுதாயம் சம்பாதித்த அனுபவம் எல்லாவற்றையும் பழரசமாகப் பிழிந்து கொடுப்பது போன்றது பழமொழி.
பெண்களுக்கும் ஜாதிகளுக்கும் ஆதரவாகவும் எதிராகவும் பழமொழிகள் கிடைக்கின்றன. ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே, பெண் என்றால் பேயும் இரங்கும், பெண் பாவம் பொல்லாதது, பெண் புத்தி பின் புத்தி இப்படி எதிரும் புதிருமாகப் படிக்கலாம்.
ஆலும் வேலும் பல்லுக் குறுதி, வறுத்த பயற்றை விடாதே, சுட்ட எண்ணெயைத் தொடாதே, உடம்பைக் கடம்பால் அடி, அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம், சுப்பிரமணியத்துக்கு மேல் தெய்வமும் இல்லை, சுக்குக்கு மேல் மருந்தும் இல்லை, மருந்தே ஆயினும் விருந்தோடு உண்--- இப்படி நூற்றுக் கணக்கான மருத்துவப் பழமொழிகள்.
ஆடிப் பட்டம் தேடி விதை, எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறினால் மழை பெய்யும் என்பன பருவ நிலை, விவசாயம் பற்றிப் பேசும்.
தாய்க்குப் பின் தாரம் என்று சினிமாப் பட தலைப்புகளில் கூட பழமொழி இடம்பெறும்
இரு பொருள்படும் பழமொழிகள்
சில பழமொழிகளுக்கு இன்றுவரை அர்த்தமே தெரியவில்லை. இன்னும் சில பழமொழிகளுக்கு இருவேறு விதமாகப் பொருள் சொல்லலாம். தனக்கு மிஞ்சித்தான் தான தருமம் என்று ஒரு பழமொழி. இது தன் சக்திக்கும் அப்பால் போய் ஒருவர் செய்வதே தானம் என்பாரும் உளர்; தனக்குப் பின் மிஞ்சிப் போனதைக் கொடுப்பதே தானம் என்பாரும் உளர். ஆக இது போன்ற பழமொழிகளுக்கு அவரவர் விருப்பப்படி வியாக்கியானம் செய்யலாம்!!
உலகில் எல்லா மொழிகளிலும் பழமொழிகள் இருக்கும். சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்பதோடு அதைப் பேச்சு மொழியில் சுவைபடச் சொல்லுவதே இதன் இலக்கணம். தமிழ் மொழியில் இது உச்சநிலையை எட்டி, தமிழுக்குத் தனிப் பெருமையை ஈட்டித் தந்துள்ளது.
***************