• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

இலக்கியங்களும் முற்பிறவியும்

இலக்கியங்கள் சொல்வது என்ன

பற்பல சங்க கால இலக்கியங்களிலும், திருக்குறளிலும் இம்மை, மறுமை, ஏழு பிறப்பு, ஏழேழ் பிறப்பு என்பன சொல்லப்படுகின்றன. வாழும் வாழ்வியல் இலக்கியங்கள் இவற்றை பற்றி ஏன் பேச வேண்டும்..? இம்மை, மறுமை, எழுமை, ஏழ் பிறப்பு, ஏழேழ் பிறப்பு என்றால் என்ன..?

இம்மை என்பது இப்போதைய பிறப்பு. மறுமை என்பது வரப் போகும் அல்லது மறுபடியும் பிறக்க போகும் பிறப்பு.

வீடு பேறு என்றால் என்ன

எல்லா பிறப்புகளுக்கும் 'நான்' எனும் உணர்வு அடிப்படையாகும். அந்த உணர்வு தான் உயிர். 'நான்' எனும் உணர்வு இறைவனின் வீட்டிலிருந்து பிரிந்து வந்து பல்வேறு வடிவங்களை கொள்கிறது. அந்த உணர்வு மீண்டும் இறையவனின் வீட்டிற்கு திரும்பி செல்வது தான் பேறு. அந்த வீடு பேறை எவ்வாறு வாழ்ந்து பெறுவது என்று சொல்வதே நம் இலக்கியங்கள்.

மாகடலில் அலைகள் மாறி மாறி எழுந்து அமிழ்வது போல, 'நான்' எனும் உணர்வு எழுவதும் அமிழ்வதுமாக இருக்கிறது. அது பல் வேறு உடல் வடிவங்கள் கொண்டாலும் எல்லா உயிர்களும் ஒரு குடும்பம் அல்லது ஒரு மாகடலில் எழும் அலையே என்பது நம் பண்டைய காலத்து எண்ணமாக இருந்தது.

அமிழ்கின்ற கடல் அலை மீண்டும் எழுவது போல, அமிழும் 'நான்' எனும் உணர்வே, மீண்டும் மீண்டும் வேறு வேறு வடிவங்களில் எழுகிறது. இதை நாம் பொதுவாக சொல்லலாமே அன்றி, இப்போது எழுந்த இந்த அலை, முன்பு எழுந்த அதே அலை தான் என நம்மால் அடையாள படுத்த முடியாது.

வினைப்பயன் என்றால் என்ன

நம்முடைய இன்றைய செயல்களின் தாக்கம் சமூகத்தில் ஏற்பட்டு, அதன் விளைவுகள் பின்னாளில் வரும் பிறப்புகளை பாதிக்கும். அது மட்டுமன்றி, நம் தற்போதைய வாழ்க்கை முறை (இம்மை) தாக்கத்தினால், வரப் போகும் பிறப்புகள் (மறுமை) புதிய குணங்களுடன் பிறக்கும். எனவே வாழ்வு முறையை விவரிக்கும் இலக்கியங்கள் இம்மை மறுமை பற்றி பேசுகின்றன.

நம் செயல்களின் தாக்கம் சமூகத்தில் சுற்றி திரிந்து வேறொரு கால கட்டத்தில் நமக்கு நம்மையோ அல்லது நமக்கு பின்னால் வரும் பிறப்புகளையோ திரும்பி வந்து தாக்கும் என்பதை நம் இலக்கியங்கள் நமக்கு தெரிவிகின்றன. அக்கால இலக்கியங்கள் இந்த சமூக பார்வைத் தெளிவோடு தான் எழுதப் பட்டுள்ளன.

ஆனால் அதே நேரம் தனி நபர்கள் பார்வையில், 'நான்' எனும் உணர்வு, 'தான்' என்று மாறி, வரும் பிறப்புகளில் 'தான்' மீண்டும் வேறு வடிவத்தில் எழ முடியும் எனும் எண்ணம் இருந்தது. அதனால் நாம் இன்று செய்யும் செயலுக்கேற்ப, வரும் பிறப்புகளில் (மறுமையில்) நன்மை மற்றும் தீமையை அனுபவிக்க போவது, 'நான்' உணர்வு கொண்ட ஏதோ ஓர் உயிர் அல்ல, அது 'தான்' உணர்வு கொண்ட நம் உயிரே என்ற சிந்தை மாந்தரை கட்டுப்படுத்தியது.

பொதுவாக பேசும் போது சமூகப் பார்வையையும், தனி நபர் பேசும் போது தனி நபர் பார்வையும் கலந்தே நம் இலக்கியங்கள் வெளிப்படுத்துகின்றன.

இலக்கியத்தில் முன் பிறவி ?

ஆனால் இலக்கியங்கள் வருங்கால நலனுக்கான செயல் பற்றி சொல்லினவே தவிர (இம்மை மறுமை), முன் காலத்தில் செய்த செயலினால் இன்றைய நலன் அழிந்தது என்று எங்கும் சொல்லவில்லை. நம்மால் கடந்த காலத்தை மாற்ற முடியாது. எதிர் காலத்தை மாற்ற முடியும்.

நம் தற்கால வாழும் முறையை சீர் அமைத்து எதிர் கால வாழ் முறையை உயர்த்தலாம். இதுவே இலக்கியங்கள் சொன்னதே தவிர, நம் துன்பங்களுக்கும் இன்பங்களுக்கும் சப்பை காட்டும் வேலையை அவை செய்ய வில்லை


இம்மை மறுமை

உயிர்கள் ஏழு விதமாக எழுகின்றன. அதையே எழுமை என்கிறார்கள். இப்படி ஏழு விதமாக எழுந்த உயிர்கள் ஏழு விதமாக வாழ்ந்து, புதிய உயிர்களை தோற்றுவித்து இறக்கின்றன.

எழுந்த உயிர்கள் இம்மை என்றும் அவை எழுப்ப போகும் உயிர்கள் மறுமை என்றும் பொருள் கொள்ளலாம். முன் எழுந்த உயிர்களுக்கு பெயர் ஏதும் இல்லை. ஏனென்றால் இலக்கியங்கள் அதை பற்றி பெரிதும் பேசவே இல்லை

ஏழ் பிறப்பும் ஏழேழ் பிறப்பும்

புல், பூடு, மரம், புழு, பாம்பு, பறவை, பல வகை மிருகங்கள் - இவை ஏழு விதமான பிறப்புகள்.

மனிதர், பேய், கணம், கல், அசுரர், முனிவர், தேவர் - இவை ஏழு விதமான வாழும் முறைகள்.

எழும் ஏழு பிறப்புகளும், வாழும் ஏழு முறைகளும் தாவர சங்கமம் (Community Relationship or Symbiotic Relationship) ஆகும். தாவரம் என்பது உயிர்களை குறிக்கிறது. சங்கமம் என்பது அவை கூட்டாக வாழும் முறையை குறிக்கிறது.

ஏழு பிறப்புகள்

ஐம்பூதங்களிலிருந்து உணவு தயாரித்து வாழும் சிறு உயிர்கள் எல்லாமே புல் வகை தான். (Protista or Monera)

பிற உயிர்களிலிருந்து உணவு தயாரிக்கும் சிறு உயிர்கள் பூடு வகைகள்.(Fungi)

ஐம்பூதங்களிலிருந்து உணவு தயாரிக்கும் பெரு உயிர்கள் எல்லாமே மர வகை தான். (Plantae)

பிற உயிர்களிலிருந்து உணவு தயாரித்து வாழும் பெரு உயிர்கள் நாலு வகைப்படும். (Animalia)

  • ஊர்ந்தும் பறந்தும் வாழ்பவை புழுக்கள்
  • ஊர்ந்து வாழ்பவை பாம்புகள்
  • பறந்து வாழ்பவை பறவைகள்
  • நடப்பவை மிருகங்கள்
இப்படி எழும் ஏழு உயிர்களும் ஏழு பிறப்புகளாகும். இந்த ஏழு விதமான உயிர்களும் தாவர சங்கமாகி வாழும் பொது ஏழு விதமான வாழும் முறைகளை கடை பிடிக்கின்றன.

ஏழு வாழும் முறைகள்
  1. தனக்கும் பிறர்க்கும் நன்மையாய் வாழ்வது தேவர் வாழ்க்கை. (Mutualism)
  2. தனக்கு நன்மையாகவும் பிறர்க்கு தீமையாகவும் வாழ்வது அசுரர் வாழ்க்கை (Predation)
  3. தனக்கு நன்மை-தீமை இல்லாமல் பிறர்க்கு நன்மையாய் வாழ்வது முனிவர் வாழ்க்கை (commensalism)
  4. தனக்கு தீமையாகவும் பிறர்க்கு நன்மையாகவும் வாழ்வது கணங்கள் வாழ்க்கை (sacrificial)
  5. தனக்கு நன்மை-தீமை இல்லாமல் பிறர்க்கு தீமையாய் வாழ்வது பேய் வாழ்க்கை (Parasitism)
  6. தனக்கும் பிறர்க்கும் நன்மை தீமை இல்லாமல் வாழ்வது கல் வாழ்க்கை (Neutralism)
  7. தனக்கும் பிறர்க்கும் தீமையாய் வாழ்வது மனிதர் வாழ்க்கை (Competitive relationship)

இப்படி ஏழு விதமான உயிர்கள் எழுந்து ஏழு விதமாக வாழும் வாழ்வைத்தான் நம் ஆன்றோர் ஏழேழ் பிறப்பு என்று சொல்கின்றார்கள்.

திருவாசகம்/சிவபுராணம் உரை 26-32

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.



ஏழு பிறப்புகள் ஏழு விதமாக தாவர சங்கமத்தில் வாழ்கின்றன. 'நான்' என்பது இல்லாத பிறப்பே இல்லை. 'நான்' இந்த ஏழேழ் பிறப்புகளிலும் பிறந்து பிறந்து இளைக்கின்றது, அதாவது சோர்கின்றது.

தாவர சங்கமம் என்பது ஒரு சூழல் சுழல். 'நான்' எனும் உணர்வு இந்த ஏழு பிறப்புகளிலும், ஏழு வாழ் முறைகளிலும் அகப்பட்டு, மாறி மாறி இதே பிறப்புகளை ஏற்படுத்தும். இதனின்று விடுபட அந்த மெய்யானவன் பொன்னடி பற்றினால், கல், மனிதர், அசுரர், பேய் வாழ்க்கை பார்வை விடுபட்டு, முனிவர், தேவர், கணங்கள் பார்வை என உயர்ந்து உயர்ந்து, 'நான்' எனும் உணர்வு, அந்த இறைவனின் வீடு பேறு பெறும் என்கிறது திருவாசகம்.

குறள் 62
இதை தான் வள்ளுவர் குறள் 62ல் கூறுகிறார்.

எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்காப்
பண்புடை மக்கட் பெறின் (குறள் 62)

பண்புடைய மக்கள் பெற்றால் எழும் பிறப்புகளில் எல்லாம் தீயவை அண்டாது. ஏனென்றால் மறுமை என்பது நமக்கு அடுத்து வரும் பிறப்புகளின், அதாவது நம் மக்களின் மூலமாக வருவது. நன் மக்கள் உருவாகும் போது, 'நான்' எனும் உணர்வுக்கு நல்ல வடிவங்களே கிடைக்கும்.

குறள் 98
சிறுமையின் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும் (குறள் 98)


எந்த விதமான சிறுமையும் இல்லாத இனிய சொல் இவ்வாழ்வை சீரடைய வைத்து, அதன் மூலம் வரும் வாழ்விலும் இன்பம் தரும். ஏனென்றால் மறுமை என்பது நமக்கு அடுத்து வரும் பிறப்புகளின், இன் சொல் நம் சமூகத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி அதன் விளைவு, 'நான்' எனும் உணர்வுக்கு நல்ல வடிவங்களே கிடைக்கும்.

குறள் 107

எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தங்கள்
விழுமம் துடைத்தவர் நட்பு (குறள் 107)

எழுகின்ற ஏழு வித பிறப்புகளுமே தங்களுடைய துன்பம் துடைத்தாரின் நட்பை எண்ணி அதற்கேற்ப நடந்து கொள்வர்

குறள் 126

ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்புடைத்து (குறள் 126)


ஆமை தன் நான்கு கால்கள் மற்றும் தலை ஆகியவற்றை ஓட்டுக்குள் ஒன்றாக அடக்குவது போல, எழும் பிறப்புகள் ஐம்புலன்களை ஒன்றாக அடக்கினால் அவை தங்களை காத்துக் கொள்ளும்

குறள் 398

ஒருமைக்கண் தான் பெற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்புடைத்து (குறள் 398)


ஏழு பிறப்புகளிலும் பிறப்பு பெரும் ஒன்றான கல்வி பாதுகாப்பு அளிக்கும். ஒரு பிறப்பில் பெரும் கல்வி பிறப்பு குணங்களை, செயல்களை மாற்றி அமைத்து பின்னால் எழும் எல்லா பிறப்புகளுக்குமே பாதுகாப்பும் உயர்வும் தரும்.

குறள் 459

மன நலத்தினாகும் மறுமை மற்ற அஃதும்
இன நலத்தின் ஏமாப்புடைத்து (குறள் 459)


மன நலம் தான் வரும் காலப் பிறப்புகளை (மறுமையை) ஆக்குகிறது. மற்றவை எல்லாம் (இம்மை அதாவது இப்பிறப்பு) இன நலத்தால் (தற்போதைய சூழலால்) ஆகுகிறது.

குறள் 835

ஒருமை செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக்கு அழுந்தும் அளறு (குறள் 835)


பேதையர் தங்களின் செயலினால் பின் எழும் எல்லா பிறப்புகளுக்கும் துன்பம் தருவார். நம் இப்பிறப்பு செயல்கள் இப்போது மட்டுமன்றி வருங்காலத்தில் எழும் எல்லா பிறப்புகளை பாதிக்கும்.

குறள் 1042

இன்மை ஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும் (குறள் 1042)


இல்லாமை ஒரு பாவி. அதனுடைய தாக்கம் இப்பிறப்பில் (மட்டும்) அன்றி வரும் பிறப்புகளிலும் இருக்கும்.

பழமொழி நானூறு

மறுமையொன் றுண்டோ மனப்பட்ட எல்லாம்
பெறுமாறு, செய்ம்மினென் பாரே – நறுநெய்யுள்
கட்டி யடையைக் களைவித்துக் கண்சொரீஇ
இட்டிகை தீற்று பவர். (பழமொழி நானூறு)


கண்ணுக்கு கரியாக தோன்றும் நெய்யுள்ள கார் அடையை உண்ணாது, கண்ணுக்கு அழகாக தோன்றும் செங்கலை உண்ணுவது போன்றது, வரும் பிறப்புகள் பற்றி கவலை அற்று இப்பிறப்பில் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்பவர்களின் எண்ணம்.

இப்பிறப்பில் நாம் செய்யும் செயல்கள் வருங்கால பிறப்புகளை மாற்றி அமைக்கும். இப்போது நன்றாக இருக்கிறது என்று செயல்படுவது என்பது பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது என்று செங்கலை சாப்பிடுவது போன்றதாகும்.

நாலடியார் 275

எறி நீர்ப் பெருங்கடல் எய்தி இருந்தும்
அறுநீர் சிறு கிணற்று ஊறல் பார்த்து உண்பர்
மறுமை அறியாதார் ஆக்கத்தின் சான்றோர்
கழி நல் குரவே தலை (நாலடியார் 275)


மறுமை என்பதை பற்றி அறியாதவர்களின், தங்களின் தற்போதைய வாழ்க்கை முறை எப்படி வருங்கால வாழ்க்கையை மாற்றும் என்பதை பற்றி அறியாதவர்களின் ஆக்கம, பெரும் கடல் நீர் போன்றது. அது மற்றவர்களுக்கு பயன் தராது. அதை பற்றி அறிந்தவரின் ஆக்கம் சிறு ஊறல் ஆக இருந்தாலும், மற்றவர்கள் அருந்தும் சிறு ஊற்று போன்று பயன் தரும்.

குறுந்தொகை 49

அணிற்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்து
மணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்ப
இம்மை மாறி மறுமை யாயினும்
நீயா கியரென் கணவனை
யானா கியர்நின் னெஞ்சுநேர் பவளே (குறுந்தொகை 49)


தலைவன் முட்செடியின் மலர் போன்றவன். மணி நிறமுடையவன். அவன் கடல் சேர்ந்தவன். தலைவன் தலைவியை மனையாளாக பார்க்கிறான். நெஞ்சுக்கு நேர்ந்தவளாக இல்லை. இது தலைவிக்கு குறை. எனவே தலைவி, இப்பிறப்பில் தான் இல்லை, வரும் பிறப்புகளிலாவது தலைவனின் நெஞ்சுக்கு பிடித்தவளாக இருக்க வேண்டும் என்று கூறுகிறாள்.

இங்கு தலைவி, 'தாம்' எனும் உணர்வு கொண்டு,பேசினாலும், எல்லா பிறப்பிலும் தலைவன் தலைவி என்பவர் நெஞ்சுக்கு நேர்ந்தவர்களாக, காதலர்களாக இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள். வெறும் மனையாளாக இருப்பது சிறப்பு அல்ல.

நாலடியார் 58

தம்மை இகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற்
றெம்மை இகழ்ந்த வினைப்பயத்தான் - உம்மை
எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று
பரிவதூஉம் சான்றோர் கடன்.(நாலடியார் 58)


தன்னை ஒருவர் இகழ்ந்தால், அதை பொறுப்பது மட்டுமல்லாமல், அதனால் இன்னொரு பிறப்பில் நெருப்பு தழலில் வீழ்வது போன்ற துன்பம் அவர்க்கு ஏற்படுமே என்று அந்த ஒருவருக்காக வருந்துவது சான்றோரின் குணம்.


இங்கு 'தாம்' எனும் உணர்வு கொண்டு, அதே உயிர் பின்னாளில் வேறு வடிவத்தில் துன்புறும், என்று கூறப்பட்டாலும், சான்றோர் பிறர்க்கு வரும் துன்பம் கண்டு வருந்துவர் என்பதே பொருள்.

முடிவுரை

இம்மையும் மறுமையும், தற்காலத்து உயிர்கள் புரியும் வினை பயனின் விளைவாக, எதிர் காலத்து உயிர்கள் எதிர்கொள்ளும் நிகழ்வாகவே இலக்கியங்கள் சித்தரிக்கின்றன. அதில் தனி நபர் வெளிப்பாடு வரும் போது, பொதுவாக 'நான்' என்ற உணர்வு எழும் உயிர்கள் என்றில்லாமல், 'தான்' என்ற உணர்வு வெளிப்பட்டு, அதனால் எதிர்கால இன்ப துன்பத்தை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று அழுத்தி கூறப்பட்டுள்ளது.

இலக்கியங்கள் இன்றைய காலத்தில் நாம் எதிர் கொள்ளும் சவால்களுக்கு பழங்காலத்தில் விடை தேடவில்லை.

'நான்' எனும் உணர்வு இறைவனின் வீட்டிலிருந்து பிரிந்து வந்து எழுவதே தண்டனை தான். அந்த உணர்வு மீண்டும் இறையவனின் வீட்டிற்கு திரும்பி செல்வது தான் பேறு. அந்த வீடு பேறை எவ்வாறு வாழ்ந்து பெறுவது என்று சொல்வதே நம் இலக்கியங்கள்.
 
Last edited:

Latest ads

Back
Top