• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

கண்ணனுக்கு காதல் கடிதம்

Status
Not open for further replies.
கண்ணனுக்கு காதல் கடிதம்

letter writing.webp

சிலப்பதிகாரம் அடைக்கலக் காதையில் ஒரு முக்கியமான செய்தி வருகிறது. பஞ்சதந்திரக் கதைகளில் வரும் கீரி-பார்ப்பனி கதையைக் குறிப்பிட்டு பின்னர் நடந்ததை மாடல மறையவன் கூறுகிறான்.

ஒரு பார்ப்பனப் பெண் வீட்டில் கீரி வளர்ந்து வந்தது. அவள் தண்ணீர் பிடிக்கப் போனபோது ஒரு பாம்பு அவளுடைய குழந்தையைச் சீண்ட வந்தது. உடனே கீரி சீறிப் பாய்ந்து அந்தப் பாம்பைக் கொன்றது. வாய் முழுதும் ரத்தம். குழந்தையைக் காபாற்றிவிட்ட பெருமிதத்தோடு வாசலில் நின்றது. வீட்டை நோக்கி வந்த பார்ப்பனப் பெண் கீரிப் பிள்ளையின் வாயில் ரத்தத்தைப் பார்த்தவுடன் தனது குழந்தையைக் கொன்றுவிட்டதாக எண்ணி கீரியின் தலையில் குடத்தைப் போட்டு அதைக் கொன்றுவிடுகிறாள். அவசரப் பட்டோ ஆத்திரப் பட்டோ எதையும் செய்துவிடக் கூடாது என்பது இதன் நீதி.

இதற்குப் பின் பார்ப்பனப் பெண்ணுக்கு என்ன நேர்ந்தது என்பதை சிலப்பதிகாரத்தின் வாயிலாகக் காண்போம். மாடல மறையவன் கோவலனின் பல சிறப்புகளை எடுத்துரைக்கையில் இதையும் கூறுகிறான்: கீரிப் பிள்ளை இறந்த துயரம் பெரிதாக, அதனாற் கைவிடப்பட்ட மனைவியானவள் வருந்திப் பின்வர, வட திசை நோக்கிப் புறப்பட்ட பார்ப்பனன், நின் கையால் உணவுண்டு வாழும் வாழ்வு இனி முறையற்றது என்று கூறி “வடமொழி வாசகம் எழுதிய இந்த ஏட்டினைக் கடமை அறிந்த மாந்தர் கையிலே நீ கொடுப்பாயாக” என்று தந்து போயினன்.
பின்னர் அப்பெண் தெருத்தெருவாக அலைந்து உதவி கேட்டபோது கோவலன் வலியச் சென்று அவளை அழைத்து மறையவர் சொல்லிய நெறிப்படி அவளது பாவம் போக்க தர்மங்கள் பலவும் செய்து அவள் துன்பத்தைப் போக்கினான். அத்தோடு அவளது கணவனையும் தேடிப் பிடித்து அவர்களைச் சேர்த்துவைத்து பொருளும் கொடுத்து அனுப்பினான். கோவலனின் இந்த சமூகத் தொண்டை அவனிடமே மாடல மறையவன் கூறி உனக்கு ஏன் துன்பம் வந்தது என்று கேட்கிறான். உடனே கோவலன் தனக்கு ஏற்பட்ட கனவு பற்றிக் கூறுகிறான் என்று கதை தொடர்கிறது.

இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் “வடமொழி வாசகம் எழுதிய ஏடு” என்பதாகும். வடமொழி எழுதப் படவே இல்லை, பேசப்படவே இல்லை என்று சொல்லுவோருக்கு இந்த ஏடு பதில் சொல்லுகிறது.

“கடவது அன்றுநின் கைத் தூஉண் வாழ்க்கை;
வடமொழி வாசகம் செய்த நல்லேடு
கடனறி மாந்தர் கைந்நீ கொடுக்க” என.....” (அடைக்கலக் காதை)

சிலப்பதிகார காலத்திலேயே (கி.பி.100) வடமொழியை ஏட்டில், எழுத்தில் எழுதினர். அதை கோவலன் வாழ்ந்த புகார் நகரிலே படித்துப் பொருள் உணர்ந்து தான தர்மம் செய்தனர் என்பதை இதன் வாயிலாக அறிகிறோம். அந்த ஏட்டை கோவலனே படித்தான் என்றும் நினைக்க இடமுண்டு. ஆனால் இது தெளிவாகச் சொல்லப்படவில்லை.

மாதவி கடிதம்

இதற்கு முன் புறஞ்சேரி இருத்த காதையில் மாதவி எழுதி அனுப்பிய ஓலை பற்றிய செய்தியும் வருகிறது. அவள் ஏன் என்னை விட்டுப் பிரிந்தீர் என்று வருத்தமுற்று எழுதிய கடிதம் அது. அவள் தமிழில்தான் எழுதி இருப்பாள். இதிலும் ஒரு விஷயம் புலப்படுகிறது. அந்தக் காலத்தில் கடிதம் எழுதும் கலை சிறப்பாக இருந்தது. பெண்களும் கடிதம் எழுதினர். அதை பார்ப்பன தூதர் மூலம் அனுப்பினர் என்று தெரிகிறது. கோசிகன் என்பவன் மூலம் வந்த அதே ஓலையை தன் பெற்றோரிடமும் காட்டும்படி கோவலன் திருப்பி அனுப்புகிறான்.

காதல் கடிதங்கள்

கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த காளிதாசன் என்னும் மாபெரும் வடமொழிக் கவிஞன், அவனுடைய விக்ரமோர்வசீய நாடகத்தில் புரூருவஸ் என்னும் மன்னனுக்கு தேவ லோக அழகி ஊர்வசி, பூர்ஜ பத்திரத்தில் எழுதிய காதல் கடிதம் பற்றிக் குறிப்பிடுகிறான்.
விதர்ப நாட்டு இளவரசி ருக்மிணி எழுதிய காதல் கடிதம் இலக்கியத்தில் அழியாத இடம் பெற்றுவிட்டது. கண்ண பிரானுக்கு ருக்மிணி எழுதிய இக்கடிதம் சிசுபாலவதம் என்னும் சம்ஸ்கிருத காவியத்தில் இருக்கிறது.

காதா சப்த சதி என்னும் பிராக்ருத கவிதைத் தொகுப்பில் அழகான காதல் கடிதக் கவிதைகள் உள்ளன. இது தவிர தமயந்தி தன் கணவன் நளனைக் கண்டுபிடிக்க கவிதை வடிவில் அனுப்பிய விடுகதைகள், கவிஞன் காளிதாசனைக் கண்டுபிடிக்க போஜ ராஜன் எழுதிய விடுகதைக் கவிதைகள் ஆகியனவும் கடித வடிவில் எழுதப்பட்டிருக்கலாம்.ஒரு பெண் காதல் கடிதம் எழுதும் அழகிய சிலை கஜுராஹோவில் இருக்கிறது.

சிவபெருமான் எழுதிய சிபாரிசுக் கடிதம்

அரசியல் தலைவர்களுக்குச் சிபாரிசுக் கடிதம் எழுதும் வழக்கம் இப்போது உள்ளது. இதைத் துவக்கிவைத்தவர் சிவ பெருமான் தானோ என்று எண்ண வேண்டியுள்ளது. சிவ பக்தரான பாணபத்திரர் வறுமையில் வாடவே அவருக்கு பணம் கொடுத்து உதவும்படி சேரமான் பெருமாள் நாயனாருக்கு எழுதிய சிபாரிசுக் கடிதம் அது. சித்தர் ஒருவர் மூலம் சிவன் இதை பாணருக்கு இதை அனுப்பினார். பாணபத்திரர்- ஏமநாதன் பாட்டுப்போட்டி கதை திருவிளையாடல் என்னும் திரைப்படம் மூலம் ஏற்கனவே பிரபலமான ஒன்று. ஆனால் இந்தக் கடிதம் பற்றி பலருக்கும் தெரியாது. கடிதம் எழுதியதோடு நில்லாமல், சேர மன்னன் கனவிலும் தோன்றி பாணபத்திரரை வரவேற்கவும் சிவன் உதவினார்.

மதிபுலி புரிசை மாடக் கூடல் என்னும் வரிகளுடன் இந்தத் திருமுகம்/ கடிதம் துவங்குகிறது.

மதிபுலி புரிசை மாடக் கூடற்
பதிமிசை நிலவும் பானிற வரிச்சிறை
யன்னம் பயில்மொழி லாலவாயின்
மன்னிய சிவன் யான் மொழிதரு மாற்றம்,
பருவக் கொண்மூஉப் படியென பாவலர்க்
குரிமயி னுரிமையி னுதவி யொளிதிகழ்
குருமா மதிபுரை குலவிய குடைகீழ்ச்
செருமா வுகைக்குஞ் சேரலன் காண்க.
பண்பால் யாழ் வல்ல பாணபத்திரன்
றன்போ லென்பா லன்பன் றன் பால்
காண்பது கருதிப் போத்தனன்
மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே

பொருள்: ஆலவாய் எனப்படும் மாடக் கூடலில் வசிக்கும் சிவன் எழுதும் கடிதம் இது. பருவ காலத்து மேகம் போல் வாரி வழங்கும் சேர மன்னனே இக் கடிதத்தைக் காண்க. உன்னைப் போலவே எனக்கு பாணபத்திரனும் அன்பன். அவனுக்குத் தேவையான பொருள்களைக் கொடுத்து அனுப்புவாயாக.

கடிதத்துடன் திருவஞ்சைக் களத்துக்குச் சென்ற பாணரை சேர மன்னனுடைய ஆட்கள் தேடிவந்து கண்டுபிடித்து அழைத்துச் செல்ல ,மன்னனும் பெரும்பொருள் கொடுத்து ஏழடி நடந்து வந்து அவரை வழி அனுப்பி வைத்தான்.( ஏழடி நடந்து வந்து வழி அனுப்புவது வேதத்திலும் திருமணத்திலும்/ சப்தபதி, பத்துப் பாட்டில் கரிகால் வளவன் பாடலிலும் இருப்பதை ஏற்கனவே எழுதி இருக்கிறேன்.)

********************************
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top