• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

தமிழில் பூதம்! பேய்!! பிசாசு!!!

Status
Not open for further replies.
தமிழில் பூதம்! பேய்!! பிசாசு!!!

ghost.jpg



சங்கத் தமிழ் இலக்கியத்தில் பூதம், பேய், பிசாசுகள் பற்றி நிறையவே செய்திகள் உள்ளன. ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி டாக்டர் பட்டம் வாங்கும் அளவுக்கு இருக்கின்றன. 2000 ஆண்டுகளுக்கு முன் ஒரு சமுதாயம் எப்படி இருக்க முடியுமோ அப்படித்தான் தமிழ் சமுதாயமும் இருந்ததது. கிரேக்க நாட்டு தத்துவ ஞானி சாக்ரடீஸ் கூட, மரண தண்டணை நிறை வேறுவதற்கு முன்னால் மறக்காமல் தனது மதக் காணிக்கையைச் செலுத்தும்படி உயிர்த் தோழனிடம் வேண்டிக்கொண்டார். ஒரு கோழி அடித்துக் கும்பிட அனுப்பினார் ஆருயிர்த் தோழனை!! சாக்ரடீஸ் பெயரில் அதிக அன்பு பூண்ட நமது பகுத்தறிவுகளும் திராவிடங்களும் கவனிக்க வேண்டிய விஷயம் இது!


((இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டுகோள். பெருமளவு நேரத்தைச் செலவிட்டு செய்திகளைச் சேகரித்து எனது ஆரய்ச்சியையும் சேர்த்து வெளியிடும் கட்டுரைகளை வேறு இடத்தில் பயன் படுத்துவோர் எனது பெயரையும் சேர்த்துப் போட்டால் தமிழ் மொழி வளரும். தமிழ்த்தாய் உங்களை நெஞ்சார வாழ்த்துவாள்.))

**1.பேய்க்குப் பலியிடுதல்---
’பெருங் களிற்று யானையொடு அருங்கலம் தராஅர்
மெய்பனி கூரா அணங்கெனப் பராவலின்
பலிகொண்டு பெயரும் பாசம் போலத்’’--(பதிற்று.71-23);
பொருள்: தனக்கிடும் பலியினை ஏற்றுக்கொண்டு பலியிட்டவரின் உயிரைக் கவராது செல்லும் பேய் போல, நீயும் நினக்கிடும் திறையைப் பெற்றுக்கொண்டு பகைவரின் உயிரைக் கவராது செல்கிறாய். (பாசம்=பேய்)


**2.சுடுகாட்டில் கண்ணுக்குத் தெரியாத பேய்கள் உலவியதாக நம்பினர்:
வாய்வன் காக்கையும் கூகையும் கூடிப்
பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் காடு (புறம்.238)
நரிகளும் பேயொடு சேர்ந்து பிணங்களை உண்டன: (புறம்.373)
பிணம் தின்னும் பேய்கள்: (புறம்.369) பதிற்று.67

**3.போர்க்களத்தின் நடுவே சில பேய்கள் ஆட, அதனைக் காணும் பொருட்டுப் பல பேய்கள் ஆங்கே நிறைந்திருக்கும்-- பதிற்று.35


**4. பேய் மகள்--- (சிறுபாண்.196-197)
எரிமறிந் தன்ன நாவி னிலங்கெயிற்றுக், கருமறிக்காதிற் கவையடிப் பேய்மக, ணிணனுண்டு சிரித்த தோற்றம் போலப், பிணனுகைத்துச் சிவந்த பேருகிர்ப் பணைத்தா, ளண்ணல் யானை
பொருள்: மேல் நோக்கி எரிகின்ற நெருப்புச் சாய்ந்தாலொத்த நாவினையும், வெள்யாட்டுமறிகளை அணிந்த காதினையும், கவைத்த அடியினுமுடைய பேய்மகள்


**5.பேய் மகளிர்--- (மதுரை.25-28, 162-163)
பலியை பேய் ஏற்றல்--- மதுரை.க்க்காஞ்சி & மணி. 7-84
னிணம்வாய்ப்பெய்த பேய்மளி
ரிணையொலியிமிழ் துணங்கைச்சீர்ப்
பொருள்: பிணங்களையுடைய கொம்புகளையுடையனவாய்ப் பட்ட ஆனையினுடைய திரளின் நிணத்தைத்தின்ற பேய்மகளிருடைய துணங்கை
பொருள் : வரிகள் 161-163: சான்றோர் இருந்த பெரிய அம்பலங்களில் இரட்டையான அடிகளையும் கடிய பார்வைகளையும் உடைய பேயாகிய மகளிர் உலவியாட


**6. இறந்த வீரரின் குருதியைத் தலையில் தடவித் தலைவாரும் பேய்: புறம்.62
‘’பொருது ஆண்டு ஒழிந்த மைந்தர் புண் தொட்டு,
குருதிச் செங்கைக் கூந்தல் தீட்டி,
நிறம்கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர்’’


**7. பேய்கள் சவாரி: பேய் மகள் கழுதூர்தல்--- பதிற்று.13-15--- கழுது என்னும் வகைப்பேய் மீது இன்னொரு பெண் பேய் சவாரி செய்யும்—பேயின் தலை முடி பிளவு பட்டிருக்கும்—தலை விரித்தாடும் பேய்கள்
கவைத் தலை பேய்மகள் கழுதூர்ந்து இயங்க
ஊரிய நெருஞ்சி நீறாடு பறந்தலை

ghost-2.jpg


**8.கொல்லன் பட்டறையில்/தெருவில் ஊசி விற்றது போல என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு (To carry coals to Newcastle). இதற்கு இணையாக பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு என்று ஒரு பழமொழியும் உண்டு. அதாவது எல்லாம் தெரிந்த காட்டில் இருக்கும் தெய்வமான கொற்றவைக்கு பேய் என்ன சொல்லிக் கொடுக்க முடியும்? இந்த பேய் பற்றிய பழமொழியை கலித்தொகையில் காணலாம்.
பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு (கலி.86-8)


**9. சங்க இலக்கிய கலைக்களஞ்சியம் புறநானூறு. பழந்தமிழர் வாழ்வைப் படம் பிடித்துக் காட்டும் நூல். இதில் பேய் பற்றி 62-4, 238-4, 356-3, 359-4, 369-15, 370-25, 371-26 பாடல்களில் வருகிறது.


**10.சங்க இலக்கிய காலத்துக்குப் பின் வந்த மணிமேகலையில் ஆறு வகை உயிரினங்களில் ஒன்றாக பேயும் கூறப்படுகிறது.


**11. நற்றிணையில் பேய்கள்: போரில் பெரும் புண்ணுற்று இறவாது கிடப்போரை நரி முதலியன தீண்டாவண்ணம் பேய் காத்து நிற்றலாகிய புறப்பொருட் கருத்தும் நற்றிணை உவமையில் வைதுக் கூறப்பட்டுள்ளது.
நள்ளிரவில் பேய்கள் உலாவும் என்ற தமிழர் நம்பிக்கையை பாடல்கள் 319, 255 ல் படிக்கலாம்:
கழுதுகால் கிளர ஊர்மடிந்தற்றே (255)
அணங்கு கால் கிளறும் (319)
கழுது, அணங்கு=பேய்


**12.நள்ளிரவில் பேய்கூடத் தூங்கும் என்ற கருத்து பிற்காகால இலக்கியமான திருவிளையாடல் புராணத்திலும் நளவெண்பாவில் வருகிறது.
அணங்கு என்பதை பேய் என்பதைவிட மரம், நீர்நிலைகள், மலை ஆகியவற்றில் உறையும் பெண் தேவதை (யக்ஷி) என்றே சொல்லவேண்டும்.

**13.Ghost , Ghoul என்ற ஆங்கிலச் சொற்கள் தமிழ் சொற்களுக்கு மிகவும் நெருங்கியவை. கூளி= ஆங்கிலம் Ghoul , கழுது= ஆங்கிலம் Ghost

**13. ஐயவி என்னும் வெண் கடுகை புகைத்தால் பேய் முதலிய தீய சக்திகள் நெருங்கா என்ற கருத்து நாடு முழுதும் இருந்ததை அறிகிறோம் ( ஐயவி புகைத்தல் புறம் 98-15, 281-4, 296-2,342-9.இந்தக் கருத்து நாட்டின் வடபகுதியிலும் நிலவியது.


**14.என் அம்மா சொன்ன பேய்: சிறு வயதில் என் அம்மா என் எழுத்தைப் பார்த்துவிட்டு, ‘’ இப்படி பேச்சக்காலும் பேச்சக்கையுமா எழுதாத. வாத்தியார் மார்க் போடமாட்டார் என்று சொல்லுவார். இதற்கு எனக்கு அர்த்தம் தெரியாது. காரைக்கால் அம்மையார் (பேயார்) பதிகங்களைப் படித்த பின்னர்தான், அவர் பேய் பற்றி வருணித்தவைகலைப் படித்தபின்னர் தான், இதற்கு அர்த்தம் புரிந்தது.
பேய்ச்சியின் கால் போலும், பேய்ச்சியின் கை போலும், கோரமாக எழுதாதே, அழகாக எழுது என்பதே உதன் பொருள்.


**15.கலிங்கத்துப் பரணி, கந்தசஷ்டிக் கவசத்திலும் பேய்கள் பற்றிய செய்திகள் உள்ளன. அவற்றின் விளக்க உரையில் காண்க.
ghosts1.jpg


**16.இறந்த உறவினரின் ஆவிகள் தன்னைப் பின் தொடர்ந்து வந்ததாகவும் ஒரு முறை கோவிலில் கடுமையான பிரார்த்தனை செய்தபின்னர் அவை வரவே இல்லை என்றும் சுவாமி விவேகநந்தர் அவரது சம்பாஷணைகள் புத்தகத்தில் கூறியுள்ளார்.


**17.பரணர் பாடிய பேய்கள்:
பரணர் என்னும் சங்கப் புலவர் பாடிய பாடல்களில், ‘’பேய்கள் பிணம் தின்னும்’’, ‘’நடு இரவில் இயங்கும்’’, ‘’பலி கொடுத்தால் பணி செய்யும்’’, ‘’பேய்மகள் பற்றிய பிணம்’’ ‘,’கழுது வழங்கு யாமம்’’, ‘’ஊட்டரு மரபின் அஞ்சுவரு பேய்’’ என்ற கருத்துக்கள் வருவதையும் காண்க.
பரணர் சொல்லும் மிஞிலி கதையிலும் பேய் வருகிறது. ஆய் எயினனுக்கும் மிஞிலிக்கும் மோதல் மூண்டது. எயினனோடு நடக்கும் போரில் எனக்கு வெற்றி தேடித் தருவையின் நினக்கு பெரும்பலி தருவேன் எனப் பாழி நகர்ப் பேயைப் பரவிப் போர்க்களம் புகுந்தான். மிஞிலி வென்றான் என்ற செய்தியைப் பரணர் பாடுகிறார்.

திருக்குறளில் பேய்கள்
திருக்குறளிலும் பேய்கள் உண்டு. ஏற்கனவே திருவள்ளுவரும் ராமகிருஷ்ண பரமஹம்சரும் சொன்ன ‘பேய் காத்த செல்வம்’ கதையை எழுதியுள்ளேன்.

அருஞ்செவ்வி இன்னாமுகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து (565)

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப்படும் (650)
அலகை=பேய்


Please read the following articles in English or Tamil: நான் முன்னர் எழுதி வெளியிட்ட பேய்க் கட்டுரைகளையும் படிக்கவும்:
1.வள்ளுவர் சொன்ன பேய்க்கதை 2). தமிழ்நாட்டை உலுக்கிய பேய் 3.காரைக்கால் அம்மையாருடன் 60 வினாடி பேட்டி 4.Indus Seals: Gods or Ghosts? 5..சிந்து சமவெளியில் பேய் முத்திரை 6. Tamil Ghost that killed 72 people 7.தமிழ் பூதமும் கிரேக்க பூதமும் 8.டெல்பி ஆரூடமும் குறிசொல்வோரும்


உதவிய நூல்கள்: 1.பரணர்—கா.கோவிந்தன் 2.தமிழர் நாகரீகமும் பண்பாடும் --ஆ.தட்சிணாமூர்த்தி 3.தமிழ் சொற்றொடர் அகராதி ---வீ.ஜே.செல்வராசு 4.சங்க இலக்கியம் 5.திருக்குறள்

Pictures are taken from various websites;thanks.
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top