• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

நம்மாழ்வாரைக் காட்டி அருளிய கருடாழ்வார்

கருடன் தேவர்களுடன் போரிட்டு, அவர்களிடமிருந்த அமிர்த கலசத்தைப் பெற்றுவந்து தனது பெரிய தாயார் கத்ருவிடம் கொடுத்து, அவளிடம் அடிமைப் பட்டிருந்த தன் தாயார் வினதையையும்,தன்னையும் கத்ருவின் அடிமைத் தளையிலிருந்து மீட்ட நாள் ஆடி மாதப் பஞ்சமி.ஒரு ஆடிப்பஞ்சமி நந்நாளில் தான் எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் கருடனைத் தமது வாகனமாக ஏற்றுக் கொண்டார்.கருடன் அவதரித்ததும் ஆடி மாதத்தில் தான்.
ஆடி சுவாதி கருட ஜெயந்தியாகக் கொண்டாடப் படுகிறது.

கருடாழ்வார் பற்றி பல வைபவங்கள் உள்ளன. இந்தப் பதிவில் ஆழ்வார் திருநகரி கருட வைபவம் பற்றி பார்ப்போம்:

ஆழ்வார் திருநகரியில் கருடனுக்குத் தனி ஏற்றம்.கோவில் மதில் மேல் வட,கிழக்கு மூலையில் உள்ள கருடாழ்வாருக்கு ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சித்திரத்
தன்று திருமஞ்சனம் நடக்கிறது.அந்த மூலையில் தனியாக 'பக்ஷிராஜன் சந்நிதி'உள்ளது.கருடனுக்கு இரண்டு உயரமான தீப ஸ்தம்பங்கள் உள்ளன.
முன்பு நித்யமும் ஸ்தம்பங்களில் தீபம் ஏற்றுவார்களாம்.இப்போது சில நாட்களில் ஏற்றுகிறார்கள்.. இந்தக் கருடனுக்கு தினமும் ஆறு காலப் பூஜை நடக்கிறது. ஆடி மாதம் சுவாதி கருட அவதார உற்சவம் இங்கு 10 நாட்கள் நடக்கிறது.அங்குள்ள மண்டபத்தில்
10 நாட்களும் திவ்ய பிரபந்த சேவாகாலம் நடைபெறுகிறது.இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டமின்றி, திருமஞ்சனம் செய்தார்கள்

பக்கத்துக் கிராமங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் 10 நாட்கள் விரதமிருந்து, கருடனுக்குப் பால்குடம் எடுத்து வருவார்கள்.இது அல்லாமல் தினமும் பலரும் நேர்ந்து கொண்டு வந்து சிதறு தேங்காய் உடைக்கின்றனர்.பிரார்த்தனகளை நிறைவேற்றும் வரப்பிரசாதி.(சிதறிய தேங்காயை எடுத்து உலர்த்திக் கொப்பரை/எண்ணெய் செய்வதற்
காகவே பணியாட்கள் உள்ளனர்;ஒரு கொட்டகையும் உள்ளது)

நம்மாழ்வாரும்,கருடாழ்வாரும்:

மற்ற பெருமாள் கோவில்களைக் காட்டிலும் இங்கு கருடனுக்கு ஏன் இத்தனை விசேஷம்? முகமதியர்கள் படையெடுப்பின் போது நம்மாழ்வாரைக் காப்பாற்ற அர்ச்சகர்கள் அவரை எடுத்துக்
கொண்டு பல்வேறு ஊர்களுக்குச் சென்றனர்.(நம்மாழ்வார் நியமனப்படி,
மதுரகவி ஆழ்வார் தாமிரபரணி தீர்த்தத்தைக் காய்ச்சிய போது உருவான விக்ரகம்;நம்மாழ்வார் உற்சவ மூர்த்தி).
அப்போது நேர்ந்த பல இடர்ப்பாடுகளில் நம்மாழ்வார் விக்ரகம் இருமுறை காண வில்லை.ஒவ்வொரு முறையும் கருடனே ஆழ்வாரைக் காட்டிக் கொடுத்தார்.

கேரளாவில் திருக்கணாம்பி
(கோழிக்கோடு பக்கத்தில்),நம்மாழ்வாரை
எழுந்தருளப் பண்ணிக் கொண்டு போய் திருவாராதனை செய்து வந்தனர். ஶ்ரீரங்கத்தின் மீது ஊலுக்கான்(முகமது பின் துக்ளக்),படையெடுத்து வந்த போது நம்பெருமாளையும்,உபய நாச்சிமார்
களையும், எடுத்துக்கொண்டு பிள்ளை
லோகாசார்யர் தெற்கு திசை நோக்கி வந்தார். ஜோதிஷ்குடியில் லோகாசார்யர் பரம பதம் எய்தியபின்னர், அவருடைய சீடர்கள் நம்பெருமாளை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு கேரளா பக்கம் வந்தார்கள்.அவர்களும் திருக்கணாம்பி வந்து சேர்ந்தனர்.

அங்கு நம்பெருமாள், நம்மாழ்வாருக்கு
தம் வட்டமனையையும்,முத்துச்சட்டை யையும் கொடுத்தார்.அங்கிருந்து மீண்டும் புறப்பட்டு நதியைக் கடக்க படகில் சென்றனர்.நம்பெருமாள் சென்ற படகு முன்னால் சென்று விட்டது. ஆழ்வார் சென்ற படகு நதியின் அலை களில் தடுமாறியதில் நம்மாழ்வார் தண்ணீரில் விழுந்து விட்டார்.

நதியின் ஆழத்தில் எங்கு விழுந்தார் என்று தெரியவில்லை.அப்போது அங்கு பறந்து வந்த கருடன் ஓரிடத்தில் வட்டமிட்டு ஆழ்வார்அங்கிருப்பதைக் காட்டினார்.ஆழ்வாரை மீட்டவர்கள் மேலும் பயணம் தொடர்வதுஆபத்தானது என்று கருதி,ஆழ்வாரை முத்திரிப்பூ மலை அடிவாரத்தில், ஓரிடத்தில் பத்திரமாக மண்ணில் மூடி வைத்து
விட்டுத் திரும்பி விட்டனர்.சில காலம் கழித்து ஆழ்வாரை மீட்டு ஆழ்வார் திருநகரிக்குக் கொண்டுவரச் சென்றவர்களுக்கு ஆழ்வாரை வைத்திருந்த இடம் தெரியவில்லை. அப்போது ஆழ்வார் இருக்கும் இடத்திலி
ருந்து ஒரு கருடன் கூவி அவர்களுக்குக் காட்டியது.மிகச் சிரமப் பட்டு,அவர்கள் ஆழ்வாரை எடுத்துக் கொண்டு திருநகரி வந்தனர்.

ஆழ்வார் திருநகரி முகமதியர் படையெ
டுப்பில் சீரழிந்து காடாக மாறி விட்டது.
காட்டில் பல புளிய மரங்கள் வளர்ந்து விட்டன.ஆழ்வார் வாசம் செய்த புளியமரம் எது என்று அவர்களால் --திருவாய்மொழிப்பிள்ளை மற்றும் சிஷ்யர்கள்-- கண்டு பிடிக்க முடிய
வில்லை. அப்போதும் ஒரு கருடன் வந்து அவர்களுக்குக் காட்டிக் கொடுத்தார்.
அங்கே காட்டுக்குள் இருந்த கோவிலைக் கண்டுபிடித்து புணர் நிர்மாணம் செய்து நம்மாழ்வார் விக்ரகத்தையும் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்ய ஆரம்பித்தனர்.

இவ்வாறாக கருடாழ்வார் நம்மாழ்வாரை மீண்டும் ஆழ்வார் திருநகரிக்குக் கொண்டு வந்து சேர்க்க பேருதவி புரிந்தார்.அவருக்கு நன்றி செலுத்தும் வகையில் இங்கு கருடனுக்கு விசேஷ ஆராதனை நடைபெறுகிறது.

ஒன்பது கருட சேவை:

நம்மாழ்வார் திருநட்சித்திரம்-வைகாசி விசாக உற்சவத்தின் ஐந்தாம் திருநாள்
அன்று இரவு நவ திருப்பதி திவ்ய தேசங்களின் எம்பெருமான்கள் அவரவர் கருட வாகனத்தில் எழுந்தருள்வது கண்கொள்ளாத தரிசனம் ஆகும்.
நம்மாழ்வார் ஹம்ச வாகனத்திலும், அவரது உத்தம சீடர் மதுரகவி ஆழ்வார் பிறங்கி நாற்காலியிலும் எழுந்தருள்
வார்கள்.

நான்கு கரங்கள் கொண்ட கருடன்

திருக்குருகூருக்கும்,கருடனுக்கும் உள்ள அருந்தொடர்பு நம்மாழ்வார்காலத்துக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இருந்தது.திருக்குருகூர் புராதனமான வராக ஷேத்திரம்.இந்த ஊரில் ஆதியில் வந்து கடாட்சித்தவர் லட்சுமிவராகரான ஞானப்பிரான்ஆவார்.அவருக்குப் பின்னால் வந்தவர் தான் ஆதிநாதப் பெருமாள் (பொலிந்து நின்ற பிரான்).ஆனால் திருமலை போல பின்னால் வந்த பெருமாள் பிரபலம்
அடைந்தார்.எனவே ஆழ்வார் திருநகரி கோவில் 'ஆதிநாதப் பெருமாள்/ஆழ்வார் கோவில்' என்று அழைக்கப்படுகிறது.
இப்போதுள்ள கோவிலில் ஆதிநாதருக்கு வலப்புறம் ஞானப்பிரான் சந்நிதி உள்ளது.ஞானப்பிரான் சந்நிதிக்கு எதிரில் உள்ள சந்நிதிக் கருடன் நான்கு கரங்களுடன் இருக்கிறார். சங்கு,சக்கரங்களைஏந்தியவாறும்,வலது கீழ்க்கரம் அபயஹஸ்தமாகவும்,இடது கீழ்க்கரத்தில் நாகனை ஏந்தியும் உள்ளார்.பல கோவில்களிலும் கருடன் இரு கரங்களில் அஞ்சலி செய்தவாறு இருப்பார்.சில கோவில்களில் சங்கு,சக்கரம் தரித்திருந்தாலும் மற்ற இரு கரங்களிலும அஞ்சலி செயதவாறே இருப்பார்.இந்த ஒரு கோவிலில் மட்டுமே இவ்வாறு நான்கு கரத்தானாக இருக்கிறார்.இதற்கு விளக்கம் சொன்ன அர்ச்சகர் பெருமாள் வராக அவதாரம் எடுத்த போது,பூமியை மீட்க கடலுக்குள் செல்லும்முன் தம் சங்கு சக்கரங்களை கருடனிடம் கொடுத்ததால் கருடன் அவற்றை ஏந்திக்கொண்டு இங்கு வராகப்பெருமாள் முன் நிற்கிறார் என்றார்.நாகனும் கருடனுடன் இருப்பதால், நாகனைக் கையில் ஏந்தியவாறும்,பெருமாள் இருக்கிறார்--அஞ்சேல் என்ற அபய ஹஸ்தத்துடனும் சேவை சாதிக்கிறார் என்றார்.

(--அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)

படங்கள்:
1,2,3,4:ஆழ்வார் கருடன் & திருமஞ்சனம்.
5:நான்கு கரக் கருடன்
6.ஒன்பது கருட சேவை
7.நம்மாழ்வார் ஹம்ச வாகனத்தில்


1628923859360.png


1628923953157.png


1628923962883.png


1628923970816.png


1628923978243.png


1628923986660.png


1628923993076.png
 

Latest ads

Back
Top