• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பகவத்விஷயம் என்றால் என்ன?

  • Thread starter Thread starter V.Balasubramani
  • Start date Start date
Status
Not open for further replies.
V

V.Balasubramani

Guest
பகவத்விஷயம் என்றால் என்ன?

Pranams,

I would like to share a mail I received from one of my friends:

சங்க காலப் புலவர்களுக்கு ஸ்ரீபாஞ்சராத்திர ஆகமங்கள் கூறும் திருமால் நெறியைப் பற்றிய தெளிவு இருந்தது. அவர்கள் தம் பாடல்களில் பல கடவுள்களைப் பற்றிப் பாடினாலும்
, திருமாலைப் பற்றிப் பாடும் போதெல்லாம் ஸ்ரீ பாஞ்சராத்திர ஆகம வைணவக் கரு ​​த்துகளை ஒட்டியே பாடியிருப்பதை நாம் சங்க இலக்கியத்தில் காண முடிகிறது.


உலகளந்த உத்தமனைப் பற்றிய குறிப்புகளும்,நான்கு வியூஹங்களாகத் திருமால் உலகு புரக்கும் வண்ணமும், கண்ணன், பலராமன் என்று இரட்டையர் வழிபாடும் பத்துப் பாட்டு, எட்டுத்தொகைப் பாடல்களில் பல இடங்களிலும் காணக் கிடைக்கின்றன.

சங்க காலத்திறகுப் பின்னர் எழுந்த சிலப்பதிகாரம் திருமால் நெறியையும், நாரணன் தன் பெருமையையும் பேசுவது மக்கள் மத்தியில் ஸ்ரீவைஷ்ணவ ஆகம கருத்துகள் நன்கு பரவியிருந்தமையைக் காட்டுகின்றது.

சங்க காலம், சங்கம் மருவிய காலம் ஆகியவற்றிற்குப் பின் இயற்கையின் உற்பாதங்கள், சமுதாய, அரசியல் குழப்பங்கள் காரணமாகத் தமிழுக்கே தனிப்பெரும் சிறப்பான பொருளதிகாரம், அதிலும் குறிப்பாக அகத்திணை இலக்கணம் பற்றிய ஆழ்ந்த இயல்கள் மறைந்துபட்டன. பெரும் வேந்தர்கள் கூடப் புலவர்களை அழைப்பித்து மறைந்த அகத்திணை இலக்கண நுணுக்கங்களை மீட்பதற்கான வழிவகைகளை நாடினார்கள் என்பதை இறையனார் களவியல் உரைகளினின்றும் அறிய முடிகிறது.

இல்லது, இனியது,நல்லதுஎன்று அன்பின் ஐந்திணையின் சாரமாகக் களவியலைத் தேர்ந்து, உலகியலோடு மாறுபட்ட ஒழுக்கத்தின் நுட்பமாக விதந்தோதுகின்ற முயற்சியை நக்கீரனார் உரை தெற்றெனக் காட்டுவதால் போலும் உருத்திர சன்மன் என்னும் மூங்கைப் பிள்ளை கண்வார்ந்து, மெய்பொடிந்து அந்த உரையை உவந்து காட்டினான் என்று நாம் அறிய முடிகிறது.

பல புலவர்களும் தமிழின் தனிச்சிறப்பான அகத்திணையின் நுட்பங்களை மீட்டெடுக்க முயன்றாலும் சங்கப் புலவர்கள் செறிவாக உள்பொதிந்து வைத்திருந்த அகத்திணை நுட்பங்களை மிகத் திறமையாகவும், அதே நேரத்தில் மிகத் தெய்விகமாகவும் மீட்டெடுத்தவர் சடகோபர் என்னும் நம்மாழ்வார் எனலாம்.

சங்கப் புலவர்களின் இலட்சியக் காதல் மொழியாக வளர்க்கப்பட்ட அகத்திணை திருமாலைப் பரவித் தொழும் பக்திக் காதல் மொழியாக மலர்ந்தது வகுள பாஸ்கர உதயத்தில் என்பது உண்மை. நம்மாழ்வார் செய்த அந்த அரும்பெரும் சாதனை பாரதம் எங்கணும் பெரும் பக்தி இயக்கங்களாகப் பின்னால் மலர அடிப்படையாகியது.

இன்றைய ஹிந்து மதத்தின் ஆணிவேரொன்றை, பெரும் அஸ்திவாரம் ஒன்றை அமைத்தவர் திருக்குருகூர் நம்பி என்னும் நம்மாழ்வார் என்றால் அது சற்றும் உயர்வு நவிற்சியில்லை.

பக்திக்கான காதல் மொழியைக் கண்டது அரும்சாதனை என்றால் அதனினும் பெரும் சாதனைகளும் இயற்றியவர் சடகோபன். வேதங்களின் தத்துவ முடிவுகளான உபநிஷதங்களை அலசி ஆய்ந்து வேதாந்த சாத்திரம் இயற்றினார் வியாசர் என்றால் அறிவைக் கொண்டு ஆய்ந்து தெளியும் அந்த வேதாந்த மறை விளக்கத்திற்கும், பக்தியின் காதல் மொழியில் திருமாலை உன்னித்துணர்ந்து கலக்கும் உள்ளத்தின் ஊக்கத்திற்கும் உற்றதொரு சமன்பாட்டையும் சாதித்தவர் நம்மாழ்வாரேதான்.

அதனாலேயே அறிவு, நம்பிக்கை என்னும் இரு பிளவான பார்வைகளுக்கிடையே ஒரு பெரும் ஒற்றுமையைக் கண்டவரும் அவரே. வேதம் தமிழ் செய்த மாறன் என்று அவரை திருமால் நெறியின் வரவாறு பரவியேற்றும் காரணமே அவர் வேதங்கள் கூறும் உபாஸனம் என்பதை சங்கத் தமிழ் காட்டும் காதல், அன்பின் ஐந்திணை, களவியல் என்பதில் பொருத்திக் காட்டியமையாலேயாகும்.

அவர் எப்படிப் பொருத்திக் காட்டினார் என்பதை நுட்பங்கள் ஒன்றும் சிந்தாமல் சிதறாமல் 13ஆம் நூற் ஸ்ரீஅழகியமணவாளப் பெருமாள் நாயனார் தமது ஆசார்ய ஹ்ருதயத்தில் ஏடுபடுத்தினார். அந்த நுட்பங்கள் நம்மாழ்வார் தொடங்கி மதுரகவியாழ்வார், ஸ்ரீமந் ​ நாதமுனிகள், ஆளவந்தார், ஸ்ரீராமாநுஜர், சுவாமி நம்பிள்ளை அளவும் வந்து அந்த மறைபொருட்கள் நம்பிள்ளையின் சிஷ்யரான ஸ்ரீவடக்குத் திருவீதிப் பிள்ளை அவர்களின் இரண்டாவது குமாரரான ஸ்ரீஅழகியமணவாளப் பெருமாள் நாயனாரால் நூலாக்கப் படுகிறது என்றால் உயர்ந்த தத்துவங்களின் சாரங்களை கால ஓட்டத்தில் மறைந்து போகாமல் காப்பாற்றிப் பேணித் தகுந்த காலம் வாய்க்குங்கால் அவற்றை வெளிப்படுத்தும் உள்வலிவு எத்துணை செறிந்ததாக இருக்கிறது

ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயம் என்பதுதான் நாம் வியக்க வேண்டிய ஒன்று. இத்தனைக்கும் அன்றைய காலங்களில் இன்று உள்ள எந்த வசதிகளும் இல்லை. இடர்ப்பாடுகளோ அதிகம். ஆயினும் காலத்தை வென்று திருமால் நெறி தன் கருவூலங்களைப் பேணிக் காத்துத் தமிழகத்திற்குத் தந்திருப்பதாலேயே காலமெல்லாம் தமிழர்களின் நெஞ்சின் நன்றியைப் பெறும்.

நம்மாழ்வாரின் மிக்குயர்ந்த கொடையின் ஆழ்ந்த பொருள் சிறப்பை நன்கு உணர்ந்த ஸ்ரீமந் நாதமுனிகள் அந்த அருங்கொடையைத் தமிழ்ச் சமயமாக்கிப் பின் வந்தோர் அனைவரும் பயன் பெற வேண்டும் என்று கனவு கண்டார். மக்கள் இயக்கமாக ஒன்று ஆகவேண்டுமெனில் அது முதலில் கோயில் உற்சவ நிகழ்வாக ஆகவேண்டும் என்பதை உணர்ந்தார். கோயில் உற்சவத்தில் தமிழ் ப்ரபந்தங்கள் இடம் பெற வேண்டுமெனில் முதலில் கோயில் ஆகமங்கள் அதற்குத் தகுந்தால் போல் அமைய வேண்டும். பிரதேச மொழிகளில் எழுந்த அருட்பாடல்களுக்கு வரவேற்பு அளிக்கும் ஆகமம் ஸ்ரீவைஷ்ணவ பாஞ்சராத்திர ஆகமம் என்பதை உணர்ந்தார். ஆனால் பெருமபாலான கோயில்களில் வேதத்திற்கே முக்கியத்துவம் தரும்
வைகானஸம் இருந்ததை மாற்றி பாஞ்சராத்திர ஆகமத்திற்குக் கொண்டுவர அவர் காலத்தில் இயலவில்லை. அதற்கு முதலில் பாஞ்சராத்திர ஆகமங்கள் தமது தத்துவ போதனைகளில் வேதாந்த ரீதியான சான்றாண்மை உடையது என்பதை நிலைநிறுத்த வேண்டும். அதற்குத் தம் பேரன் ஆளவந்தாரை உரிய பக்குவம் வரும் காலத்தில் இந்த அரும் பணியில் ஈடுபட வைக்கத் தம் சீடர்களுக்கு வேண்டிய குறிப்புகளைத் தந்து தாம் பகவத் பக்தியில் திருமாலிடம் கலந்து விட்டார்.
யாமுனர் ஆளவந்தாராக ஆகி ஸ்ரீவைஷ்ணவ தர்சனத்தின்பால் திரும்பி ஆகம ப்ராமாண்யம்என்னும் நூலை எழுதியது வரலாறு.

ஸ்ரீபாஞ்சராத்திர ஆகமங்கள் வேதாந்த சம்மதம் உடைய உபாஸனா மார்க்கம் என்று அதில் பலபட நிறுவியிருக்கிறார்.

ஆயினும் கோயில்களில் பாஞ்சராத்திர ஆகமங்களின் நடைமுறையைக் கொண்டுவந்தால்தான் தமிழும், தமிழின் அருளிச் செயல்களும் அன்றாட உற்சவங்களில் இடம் பெற முடியும். அதுவும் வழிவழியாகத் தடைப்படாமல் தொடர்ந்து நடைபெற வேண்டுமானால் திவ்ய ப்ரபந்தங்கள் வேதங்களுக்குச் சமமான அந்தஸ்து உடையவை என்பதைப் புரியவைக்க வேண்டும். அதற்கு வேத வேதாந்தங்கள் மற்ற வடமொழி சாத்திரங்கள் அனைத்தினுடைய ஆழ்பொருள்களும் திவ்யப்ரபந்தங்களின் உள்ளே பொதிந்து கிடக்கின்றன என்று விரிவாக நிரூபிக்க வேண்டும். அந்த நிரூபணத்தை வேத வேதாந்த விதவான்கள் உலகம் மனப்பூர்வமாக ஒப்புக்கொள்ளும்படி வைக்க வேண்டும். அதற்கு ஸ்ரீபாஞ்சராத்திர ஆகமம், திவ்ய ப்ரபந்தங்கள்,குறிப்பாக நம்மாழ்வாரின் திருவாய்மொழி ஆகிய இவற்றைக் கொண்டு வியாஸரின் வேதாந்த தர்சன நூலான ஸ்ரீப்ரும்ஹ சூத்ரங்களுக்கு ஒரு விரிவுரையே செய்தால்தான் அறிஞர் உலகம் அன்று ஏற்றுக்கொள்ளும்.

வேதங்கள் காட்டும் வைணவம் வேள்வியை வடிவமாகக் கொண்டது. வேள்வியின் வடிவே உண்மையில் விஷ்ணுஎன்பது வேதம் கூறும் கருத்து. அனைத்துப் பிரபஞ்சத்தையும் உள்ளடக்கிய தத்துவ நுட்பங்களைத் தம் உட்கிடையாகக் கொண்டது வேதங்கள் காட்டும் வைணவம்.

வேள்வியை மையமாகக் கொண்ட வேதங்களின் வைணவத்தை அனைத்து மக்களுக்கும் பொதுமையாக்கும் பெரும் பணியைச் செய்தவர்கள் பலர். அவர்களில் வேத வியாசரின் பங்கு மிகப் பெரியது. வேதங்களை வகைதொகைபட வகுத்ததோடன்றியில்,வேதங்கள் காட்டும் வைணவ நெறியைக் கோயிலில் வழிபாட்டை மையமாக வைத்து ஆகப்பெரும் சிறந்ததொரு வழிபாட்டு மார்க்கத்தை பாஞ்சராத்திர ஆகமங்களாகவும், நாராயண சம்ஹிதைகளாகவும்,சாத்வத சம்ஹிதைகளாகவும் பல்க வைத்தவர் ஸ்ரீகிருஷ்ண த்வைபாயனர் என்னும் வேத வியாசரே எனலாம்.

இவரேதான் வேதங்களின் தத்துவ முடிவுகளை அறுதியிட்டுரைக்கும் உபநிஷதங்கள் அனைத்தையும்ஸ்ரீகிருஷ்ணரின் பகவத் கீதையின் துணைகொண்டு ஆய்ந்து, தேர்ந்து, நேரிய இயலாக்கி, வேதாந்த சாஸ்திரமாக ஸ்ரீபிருஹ்ம சூத்திரங்கள் என்னும் நூற்பா நூலாக ஆக்கியவர். அனைத்து சாத்திரங்களையும் ஐயம் திரிபறக் கற்று வேத வியாசர் ஒரு தேர்ந்த முடிவுக்கு வந்ததாகக் கூறுகிறார்.

அது என்னவென்றால், ‘வேதங்களைக் காட்டிலும் மிக்க சாத்திரம் இல்லை;கேசவனைக் காட்டிலும் மிக்கதோர் பரதெய்வம் இல்லைஎன்பதாகும். அத்தகைய தீர்மானமான விஷ்ணு பக்தியில் நிலைநின்று அவர் வளர்த்த வழிபாட்டு நெறியே ஸ்ரீபாஞ்சராத்திர ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தம் ஆகும்.

அவர்வழி படிந்து பல வேதம்வல்ல முனிவர்கள் ஆகம நெறியாகிய ஸ்ரீவைஷ்ணவத்தைக் கைக்கொண்டனர். வேதங்கள் தம்முள் மறைபொருளாய்ப் பொதிந்து வைத்துள்ள ஸ்ரீவைஷ்ணவ கோட்பாடுகளை,ஸ்ரீபாஞ்சராத்திர ஆகமங்கள் தெள்ளத் தெளிவாகத் தம்மைக் கற்போருக்கு விளக்கி அவர்கள் படும் அயற்சியை நீக்குகின்றன என்பது அந்த முனிவர்களின் உள்ளக் கருத்தாய் இருந்தது.

அந்த முனிவர்கள் டங்கர்,திரமிடர், போதாயனர் போன்றோர். இதில் போதாயனர் என்பவர் வியாசர் அருளிய ஸ்ரீப்ருஹ்ம சூத்திரங்கள் என்னும் வேதாந்த சாத்திர நூற்பாக்களுக்கு ஸ்ரீபாஞ்சராத்திர ஆகம நெறிப்படி ஒரு விரிவான வியாக்கியானமே எழுதியிருந்தார்.

அந்த வியாக்கியானம் வேத வியாசரின் உள்ளம் உகந்த கொள்கைகளைத் தெள்ளத் தெளிவாக விளக்கும் தன்மைத்தாய் அமைந்திருந்தது.


போதாயனர் போன்றவர்களின் காலத்திற்குப் பிறகு வேத வியாசரே வளர்த்தெடுத்த ஸ்ரீபாஞ்சராத்திர நெறிப்படி வேதாந்த சாத்திரத்தைப் புரிந்து கொள்ளும் அணுகுமுறை அருகிப்போய், வேதாந்தமும், ஸ்ரீவைஷ்ணவ ஆகமங்களும் வெவ்வேறானவை, ஸ்ரீபாஞ்சராத்திர ஆகமங்கள் வேதாந்த முடிவுகளுக்கு முரணானவை என்றெல்லாம் வித்வான்கள் மத்தியில் அபிப்ராயங்கள் நிலவத் தொடங்கின. சமண, பௌத்த தத்துவங்களின் தாக்கங்களைச் சமாளிக்க வேண்டி ஸ்ரீபகவத்பாத ஆதிசங்கரர் உபதேசித்த அத்வைத சித்தாந்தமும், அதன் துணைக் கருத்தான ஜகம் அனைத்தும் மாயை என்னும் கோட்பாடும் பெரும் பிரசாரம் அடைந்து, வேதாந்தம் என்றாலே அது அத்வைத சித்தாந்தம் கூறும் வேதாந்த விளக்கம்தான் என்ற எண்ணம் வித்வான்கள் மத்தியில் பிரபலமடையத் தொடங்கியது.

பல காலத்திற்கு முன்னம் போதாயனர் என்பவரால் ஸ்ரீபாஞ்சராத்திர ஆகமக் கருத்துகளுக்கு ஏற்ப வேதாந்த சூத்ரங்களுக்கு ஒரு விரிவுரை இயற்றப்பட்டு அந்த உரைநூல் காஷ்மீரத்தில் பிரதி இருந்ததாக அறிஞர் மத்தியில் கருத்து இருந்தது. அதைச் சென்று கண்டு படித்து அதன் வழியில் ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாய ரீதியாக வேதாந்த பாஷ்யம் இயற்றுவதும், அதை அறிஞர் உலகம் மறுக்கவொண்ணாமல் நிலைநிறுத்துவதும், அதன் பின்னர் பாஞ்சராத்திர ஆகம நெறியைப் பெருவாரியான கோயில்களில் அமுல்படுத்துவதும், ஆகம் அனுமதியின் அடிப்படையில் தமிழ் வேதமான திவ்ய ப்ரபந்தங்களை அநவரதம் இடையீடின்றி கோயில்களில் உற்சவங்களில் முழங்கச் செய்வதும் ஒரு பெரும் மகானின் வல்லமையால்தான்,வருகையால்தான் முடியும். அதற்கான உழைப்புக்கு வேண்டிய காலம் ஆளவந்தார் விஷயத்தில் கடந்து விட்டிருந்தது. எனவே ஆமுதல்வன் யார் என்று அவாவுடன் அரங்கனை வேண்டியபடி எதிர்நோக்கியிருந்தார் ஆளவந்தார். லக்ஷ்மணமுனி என்றும், இளையாழ்வார் என்றும் பெயர் பெற்ற ஸ்ரீராமாநுஜராகிய எம்பெருமானார் கிடைத்ததும் நேரடியாகச் சந்திக்க முடியாமலேயே ஆளவந்தார் திருநாடு எய்திவிட்டார்.

ஸ்ரீமந்நாதமுனிகளின் கனவையும், ஸ்ரீஆளவந்தாரின் திட்டங்களையும் நனவாக்கி, நடைமுறைப்படுத்தி ஸ்ரீவைஷ்ணவ தர்சனமே எம்பெருமானாரின் தரிசனம் என்று அரங்கனும் அடியார்களும் கொண்டாடும் வகையில் போரப்பொலிய வளர்த்தவர் ஸ்ரீராமாநுஜர். அவரை நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு உரை எழுத அடியார்கள் வேண்டிய போது, ‘தாம் உரை எழுதினால் நம்மாழ்வாரின் பாசுரங்களுக்கு அவ்வளவுதான் பொருள் என்று வரம்பு கட்டியதாக அடியார்கள் நினைத்து மேலும் ஆழ்ந்த பொருள் காணத் தயங்குவர் என்பதற்காகத்தாம் உரை எழுதாமல் தமது சீடர்களை விட்டு உரை எழுதப் பணித்தார். அதனால் திருவாய்மொழிக்குத் தொடர்ந்து பொருள் வளம் கண்டு துய்க்கும் வியாக்கியான சம்ப்ரதாயமான ஸ்ரீபகவத் விஷயம்என்னும் பேரனுபவ மொழிப்பெருக்கு ஒன்றிற்குத் தொடக்கம் செய்தவர் எம்பெருமானாரே ஆவார். வடமொழி வேதாந்த உரைகள் சாத்திரப் பொருள் விளக்கம் என்றால், தமிழ் வேதமான திருவாய்மொழிக்கு வாய்ந்த மணிப்ரவாள உரைகள் ஸ்ரீபகவத் விஷய அருள் விளக்கம் எனலாம்.

திருவாய்மொழிக்கு முதன்முதலில் தோன்றிய வியாக்கியானம் திருக்குருகைப்பிரான் பிள்ளான் இயற்றிய ஆறாயிரப்படி வியாக்கியானம். பராசர பட்டரால் வாதில் வென்று ஆட்கொள்ளப்பட்ட மாதவ வேதாந்தி என்னும் நஞ்சீயரால் எழுந்த உரை ஒன்பதினாயிரப்படி. நஞ்சீயரால் நம்பிள்ளையோ என்று உகந்து உரைக்கப்பட்ட நம்பூர் வரதராசர் என்னும் நம்பிள்ளையின் கட்டளையால் பெரியவாச்சான்பிள்ளை வரைந்தது இருபத்திநாலாயிரப்படி வியாக்கியானம். பெரியவாச்சான்பிள்ளையின் சீடரான வாதிகேஸரி அழகியமணவாளச் சீயர் செய்தது பன்னீராயிரப்படி வியாக்கியானம்.

நம்பிள்ளையின் சொற்பொழிவுகளில் கேட்டவற்றை அப்படியே ஏடுபடுத்திய வடக்குத்திருவீதிப் பிள்ளை தாம் பதிந்தவற்றை நம்பிள்ளைக்குக் காட்ட நம்பிள்ளை அவற்றைப் பிரசாரப்படுத்தாமல் நிறுத்திவிட்டார். ஒருவர் சொல்லி ஒருவர் கேட்கும் வழியில் பலருக்கும் தெரிய வாய்ப்பு இன்றி அந்த உரையானது நெடுங்காலம் வந்துகொண்டிருந்தது. ஸ்ரீஸ்ரீ மணவாள மாமுனிகளின் காலத்தில்தான் நம்பெருமாளின் சந்நிதியில் அருளப்பாடு என்னும் தெய்வ ஆணையால் ஒரு வருஷ காலம் ஸ்ரீஸ்ரீ மணவாள மாமுனிகள் விரித்துரைக்க நம்பெருமாளே தம் உற்சவங்கள் அனைத்தையும் நிறுத்தி அமர்ந்து கேட்டது என்னும் பெருமையுடையதாக ஆனது வடக்குத்திருவீதிப் பிள்ளையினால் பதியப்பட்ட நம்பிள்ளையின் உரைப்பெருக்கு. ஸ்ரீபகவத் விஷயத்திற்கே ஒரு கவசம் போல் திகழ்கிறது என்பதால் ஈடுஎன்னும் பெயருடைத்தாகி, ஈடு முப்பத்தாறாயிரப்படி வியாக்கியானம் என்று அழைக்கப்படுகிறது. சுருக்கமாக நம்பிள்ளை ஈடு என்பதும் இதுவேயாம்.

இந்த ஐந்து வியாக்கியானங்களும் நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழிக்கு எழுந்த உரைகள். இந்த ஐந்து உரைகளும், இவற்றுக்குப் பின்னர் எழுந்த அரும்பதங்கள் மூன்றும் சேர்ந்து ஸ்ரீபகவத் விஷயம் என்று குறிக்கப்படும் என்றாலும் சிறப்பாக ஸ்ரீபகவத் விஷயம் என்று ஈடு வியாக்கியானத்தைக் குறிப்பதும் உண்டு. ஆனால் உண்மையில் நாலாயிர திவ்ய ப்ரபந்தங்கள் என்னும் அருளிச்செயல், அதன் வியாக்கியானங்கள்,அவற்றின் அரும்பதங்கள், இந்த நூல்களின் அடிப்படையில் எழுந்த மூன்று ரஹஸ்யங்களைப்பற்றிய நூல்கள், அவற்றின் வியாக்கியானங்கள் ஆகிய இந்த முழு கருத்துலக எழுத்துகளுமே ஸ்ரீபகவத் விஷயம் என்ற பெயரால் குறிப்பிடப்படுவதும் பொருத்தமே. (மூன்று ரஹஸ்யங்கள் - அஷ்டாக்ஷரம் என்னும் திருமந்திரம், த்வயம் என்னும் மந்திரம், ஸ்ரீமத் பகவத் கீதையின் 18 ஆவது அத்யாயத்தில் உள்ள ஸர்வ தர்மான் பரித்யஜ்யஎன்னும் சுலோகம் ஆகிய மூன்றுக்கும் சேர்ந்து ரஹஸ்யத் திரயம், மூன்று ரஹஸ்யங்கள் என்று பெயர்.)

அதாவது பிரபத்தி நெறி என்பதைப் பற்றி ஆழ அகலமாகத் தத்துவ இயலாக ஆக்கி வைத்திருக்கும் திராவிட வேதம், திராவிட வேதாந்தம் என்று சொல்லத்தக்கவை இந்த நூல்கள். இன்னும் சொல்லப்போனால் திவய ப்ரபந்தம் என்னும் தமிழ் வேதத்தையும், அதன் தத்துவ முடிபுகளான தமிழ் வேதாந்தத்தையுமே ஸ்ரீபகவத் விஷயம் என்னும் சொல் சிறப்பாகக் குறிக்கிறது எனலாம்.

வடமொழி வேதாந்தமானது சுய முயற்சியின்பாற்படும் பக்தி உபாஸனத்திற்கு முக்கியத்துவம் தரும் வேதாந்த விஷயம் என்றால், முற்றிலும் பகவானின் அருள் என்பதையே அடையும் இலக்காகவும், அடைவிக்கும் வழியாகவும் கொண்ட பிரபத்தி நெறி என்பதை முக்கியத்துவம் தந்து அசைக்க இயலாமல் நிறுவிய தமிழ் வேதாந்தம்ஸ்ரீபகவத் விஷயம் என்று கொண்டாடப்படுவது பொருத்தம்தானே!.


ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்



With regards



--
 
Last edited by a moderator:
Status
Not open for further replies.

Latest ads

Back
Top