• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பாரதி பாட்டில் பகவத்கீதை

Status
Not open for further replies.
பாரதி பாட்டில் பகவத்கீதை

Bharati-Stamp2.jpg

11[SUP]th[/SUP] December is Bhrathy’s Birth Day


பாரதி படிக்காத நூல்களே இல்லை என்று தோன்றுகிறது. அவனே கம்பன், இளங்கோ, காளிதாசன் முதலிய பல பெரும் புலவர்களின் பெயர்களைச் சொல்லி பாராட்டுகிறான். பாணிணி, ஆதி சங்கரன், உ.வே.சா, தாகூர், பங்கிம் சந்திர சட்டர்ஜி மற்றும் ஆங்கிலப் புலவர்கள் ஷெல்லி, கீட்ஸ் ஆகிய புலவர்களும் அவனை ஆட்கொண்டனர். ஆழ்வார்கள், சைவப் பெரியார் நால்வர் ஆகியோர் செல்வாக்கும் அவனது பாடல்களில் உள்ளது. குறிப்பாக மாணிக்க வாசகரின் திருப்பள்ளி எழுச்சி போலவே பாரதமாதா திருப்பள்ளி எழுச்சி இருக்கிறது. சங்கப் புலவர்களின் செல்வாக்கு மிகவும் காணப்படுகிறது. ஆயினும் இவை எல்லாவற்றிற்கும் மேலாக பகவத் கீதையின் செல்வாக்குதான் பல பாடல்களில் தூக்கி நிற்கிறது. அது மட்டுமல்ல பிரெஞ்சு தேசிய கீதம், தாமஸ் மூரின் உடோபியா போன்ற துக்கடா மொழிபெயர்ப்புகளை விட்டு விட்டு, ஒரு நூல் என்று எடுத்தால் அவன் பகவத் கீதை மொழிபெயர்ப்பு ஒன்றுதான் மிஞ்சும்.
பாரதியின் பகவத் கீதை மொழிபெயர்ப்பில் இலக்கிய நயம் எதையும் பார்க்கமுடியாது. இது ஓரு புனித நூல். அதில் அவன் சொந்த சரக்கைச் சேர்க்க விரும்பவில்லை. ஆனால் பாரதி பாடல்களில் பகவத் கீதை மேற்கோள் வரும் இடமெல்லாம் இலக்கிய நயத்தைக் காணலாம். கண்ண பிரானைவிட அதே கருத்தை கொஞ்சம் ஆணித்தரமாகவே கூறுவான். இதோ சில இடங்கள்:


போர்க்களத்தே பர ஞானமெய்க் கீதை
புகன்றதெவருடைய வாய்? – பகை
தீர்க்கத் திறந்தரு பேரினள் பாரத
தேவி மலர்த்திரு வாய்.

இந்தியாவின் பணி

எல்லாரும் அமர நிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்களிக்கும்
என்று அவன் கூறுவதே பகவத் கீதையை மனதிற்கொண்டுதான் என்பதை கீழ்கண்ட மேற்கோள் தெள்ளிதின் விளக்கும்:

“எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்”
என்றுரைத்தான் கண்ணபெருமான்;
எல்லாரும் அமர நிலை எய்தும் நன்முறையை
இந்தியா உலகிற்களிக்கும் -–ஆம்
இந்தியா உலகிற்களிக்கும்-- ஆம் ஆம்
இந்தியா உலகிற்களிக்கும் வாழ்க!”


கிருஷ்ணார்ஜுன தரிசனம்

ஆரிய தரிசனம் என்ற பாடலில் கிருஷ்ணார்ஜுன தரிசனம் என்ற தலைப்பில் கீதையின் சாரத்தைப் பிழிந்து தருகிறான்:
வில்லினை எடடா!—கையில்
வில்லினை எடடா!—அந்தப்
புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடடா.
வாடி நில்லாதே-- மனம்
வாடி நில்லாதே;--வெறும்
பேடியர் ஞானப் பிதற்றல் சொல்லாதே

“க்லைப்யம் மாஸ்மகம:” என்ற ஸ்லோகத்தின் பொருளைத் தருவதோடு அடுத்த சிலவரிகளில் ஆன்மா அழியவொண்ணாதது என்பதையும் கூறுகிறான். இதைப் படித்துப் பயனுறவேண்டும்.


ஞான வாள்

“பொய்,கயமை, சினம், சோம்பர்,கவலை, மயல்,
வீண்விருப்பம், புழுக்கம், அச்சம்,
ஐயமெனும் பேயையெல்லாம் ஞானம் என்னும்
வாளாலே அறுத்துத் தள்ளி”

இதுவும் பகவத் கீதை ஸ்லோகத்தின் மொழி பெயர்ப்பே. ஞான வாள்
என்பது கிருஷ்ணனின் சொல்.


சத்ரபதி சிவாஜி சைன்யத்திற்குக் கூறியது

இது ஒரு நீண்ட பாடல். ஆனால் ஒவ்வொரு மாணவனையும் சிறு வயதிலேயே மனப்படம் செய்யச் சொல்லவேண்டிய பாடல். இதில் கீதையின் சாரம் வருகிறது. உத்திஷ்ட! யசோ லப= எழுந்திரு! புகழடை! என்ற வீர வாசகம் வருகிறது. இது கண்ணன் கீதையில் இட்ட உத்தரவு. இதையே வள்ளுவனும் “தோன்றிற் புகழொடு தோன்றுக” என்று பாடினான்.

Bharathy.jpg


“முன்னையோர் பார்த்தன் முனைத்திசை நின்று
தன்னெதிர் நின்ற தளத்தினை நோக்கிட
மாதுலர் சோதரர் மைத்துனர் தாதையர்
காதலின் நண்பர் கலைதரு குரவரென்று

இன்னவர் இருத்தல்கண்டு, இதயம்நொந் தோனாய்த்
தன்னருந் தெய்விகச் சாரதி முன்னர்
ஐயனே! இவர்மீ தம்பையோ தொடுப்பேன்?
வையகத் தரசும் வானக ஆட்சியும்
போயினும் இவர்தமைப் போரினில் வீழ்த்தேன்.

மெய்யினில் நடுக்கம் மேவுகின் றதுவால்
கையினில் வில்லும் கழன்றுவீழ் கின்றது.
வாயுலர் கின்றது; மனம் பதைக்கின்றது,
ஓய்வுறுங் கால்கள், உலைந்தது சிரமமும்,
வெற்றியை விரும்பேன், மேன்மையை விரும்பேன்

சுற்றமிங் கறுத்துச் சுகம்பெறல் விரும்பேன்,
எனையிவர் கொல்லினும் இவரையான் தீண்டேன்,
சினையறுத் திட்டபின் செய்வதோ ஆட்சி?
எனப்பல கூறியவ் விந்திரன் புதல்வன்
கனப்படை வில்லைக் களத்தினில் எறிந்து

சோர்வோடு வீழ்ந்தனன், சுருதியின் முடிவாய்த்
தேர்வயின் நின்றநம் தெய்விகப் பெருமான்
வில்லெறிந் திருந்த வீரனை நோக்கி
புல்லிய அறிவொடு புலம்புகின் றனையால்
அறத்தினைப் பிரிந்த சுயோதனா தியரைச்

செறுத்தினி மாய்ப்பது தீமையென் கின்றாய்,
உண்மையை அறியாய் உறவையே கருதிப்
பெண்மைகொண் டேதோ பிதற்றிநிற் கின்றாய்
வஞ்சகர், தீயர், மனிதரை வருத்துவோர்,
நெஞ்சகத் தருக்குடை நீசர்கள்; இன்னோர்

தம்மொடு பிறந்த சகோதரராயினும்
வெம்மையோ டொறுத்தல் வீரர்தஞ் செயலாம்.
ஆரிய நீதிநீ அறிகிலை போலும்!
பூரியர் போல்மனம் புழுங்குற லாயினை
அரும்புகழ் தேய்ப்பதும் அனாரியத் தகைத்தும்

பெரும்பதத் தடையுமாம் பெண்மையெங் கெய்தினை?
பேடிமை யகற்று! நின் பெருமையை மறந்திடேல்!
ஈடிலாப் புகழினாய்! எழுகவோ எழுக! என்று
மெய்ஞ் ஞானம்நம் இறையவர் கூறக்
குன்றெனும் வயிரக் கொற்றவான் புயத்தோன்

அறமே பெரிதென அறிந்திடு மனத்தனாய்
மறமே உருவுடை மாற்றலர் தம்மைச்
சுற்றமும் நோக்கான் தோழமை மதியான்
பற்றலர் தமையெலாம் பார்க்கிரை யாக்கினன்.
விசயனன் றிருந்த வியன்புகழ் நாட்டில் “
இப்படி எவ்வளவோ இடங்களில் பகவத் கீதையை நேரடியாகவும் இன்னும் பல இடங்களில் மறைமுகமாகவும் போதிக்கிறான்.”பரித்ராணாய சாதூணாம் விநாசாய துஷ்க்ருதாம்: என்ற கருத்தை

“நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி
நயம்புரிவாள் எங்கள் தாய்—அவர்
அல்லவராயின் அவரை விழுங்கிப் பின்
ஆனந்தக் கூத்திடுவாள்”

பாரதி கீதையை மொழிபெயர்த்தபின் கீதை முன்னுரை என்ற கட்டுரையில் கீதை குறித்த தனது அணுகுமுறை என்ன என்று விளக்கினார். இறைவன் எங்கும் உளன், எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தல் வேண்டும் என்பதே அவன் கீதையில் கண்ட உண்மை.

இறுதியாக ‘கண்ணன் பாட்டிலும்’, ‘பாஞ்சாலி சபதத்திலும்’ பல இடங்களில் பகவத் கீதையைக் காண்கிறோம். அவைகளை வரி வரியாகப் படித்துச் சுவைத்துப் பயன் பெறுக.

Read also
நீங்கள் பாரதிப் பித்தன் என்றால் கீழ்கண்ட தலைப்புகளையும் காண்க:

(1).சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே (2).பாரதியுடன் 60 வினாடிகள் (3) பாரதி நினைவுகள் Go to nilacharal.com for items 2 and 3 (4) பாரதி பாட்டில் பழமொழிகள் (5) 60 second Interview with Swami Vivekananda (6) பேய்கள் பற்றி பாரதி & விவேகாநந்தர் (7) சிட்டுக் குருவியிடம் பாரதி கற்ற பாடம்
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top