மயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம் - 9
"கந்தரநுபூதி" -- 9
சரியான நேரத்துக்கு சாஸ்திரிகள் வீட்டை அடைந்தேன்.
இந்தமுறை மறக்காமல், நாயரையும் பார்த்துவிட்டு, அவனையும் கூடவே அழைத்துவந்தேன்!
எனக்கு முன்னாலேயே மன்னார் வந்திருந்தான். சாஸ்திரிகளுடன் எதைப் பற்றியோ பேசிக்கொண்டிருந்தவன்,
எங்களைப் பார்த்ததும், அப்படியே அதை நிறுத்திவிட்டு, 'வாங்க, வாங்க! நேரத்தோட வண்ட்டாப்புல க்கீது!'
என வரவேற்றான்!
'பின்ன நாங்க எந்து செய்யி? சேட்டன் இப்போழ் வாரம் ஒரு முறையாய்ட்டுத் தானே சம்சாரிக்கின்னு!'
எனச் சிணுங்கினான் நாயர்!
'தோ பார்றா? நாயருக்குக் கோவம் வர்றத!' எனச் சிரித்த மன்னார், சட்டென்று சீரியஸாகி,
'சரி, அப்போ அடுத்த பாட்டைப் பாக்கலாமா? அதுக்கும் முன்னாடி நான் சொன்னது நெனைப்பிருக்கட்டும்.
மனசைப் பாத்து சொல்ற மூணாவுது பாட்டு இது!
மொதப் பாட்டுல, கல்லான எம்மனசு மேல ஒன்னோட காலை வையிப்பான்னு கெஞ்சினாரு.
ரெண்டாவது பாட்டுல, வெனையாவே செஞ்சு செஞ்சு கெட்டுப்போன மனசுக்கு ஒரு வளி காமிச்சாரு.
இன்னான்னு? ஒன்னுதுன்னு ஒண்ணுத்தியும் ஒங்கிட்ட வைச்சுக்காமக் கொடுத்திட்டு, கந்தனோட காலு ரெண்டையும்
கெட்டியாப் புடிச்சுக்கினியான்னா, நீ படுற வெனையெல்லாம் சுட்டெரிஞ்சு சாம்பலாயிப் போயிரும்னாரு.
இப்ப, இதுல இன்னா சொல்றார்னு பாப்பம்! அதுக்கும் முந்தி, பாட்டைப் படி' என்றான்.
நானும் படித்துக் காட்டினேன்.
அமரும் பதிகே ளகமா மெனுமிப்
பிமரங் கெடமெய்ப் பொருள்பே சியவா
குமரன் கிரிரா சகுமா ரிமகன்
சமரம் பொருதா னவநா சகனே
அமரும் பதி கேள் அகமாம் எனும் இப்
பிமரம் கெட மெய்ப் பொருள் பேசிய ஆ
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பொரு தானவ நாசகனே
'ஒரு பெரிய சங்கதியை முருகன் இவுருக்கு சொன்னாருன்னு போன பாட்டுல சொன்னேன்ல.
அத்தச் சொன்னது ஆருன்னு இந்தப் பாட்டுல சொல்லிக் கூத்தாடுறாரு அருணகிரிநாதரு.
'பேச்சையெல்லாம் வுட்டுட்டு 'கம்'முன்னு கெட'ன்னு சொன்னாராம்.
அந்த சத்திய வாக்கைக் கேட்டதுமே, ஒரு மூணுவிதமான மயக்கம் இவுருக்கு தீந்துபூட்டுதாம்!
இன்னான்னானு வரிசையா பட்டியலு போடுறாரு.
'அமரும் பதி'ன்னா இருக்கற ஊரு.
'கேள்'னா கேக்கறது இல்லை! சொந்தக்காரங்கன்னு அர்த்தம்! சொந்தமின்னா, அல்லாருந்தான்!
பொண்டாட்டி, புள்ளை, மாமன், மச்சான்னு அல்லாரையுமேத்தான் சொல்றாரு.
இந்த 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'னு கோஷம் போடுவாங்களே ஆளாளுக்கு மேடையுல அது
ரெண்டுந்தான் மேல சொன்ன ரெண்டும்!
அடுத்தாப்புல, 'டகால்டி'யா ஒரு வார்த்தை போடுறாரு!... 'அகம்'னு.
அகம்னா வூடுன்னும் அர்த்தம் வைச்சுக்கலாம், நானுன்ற இந்த அகங்காரத்தியும் சொல்லலாம்.
மேல சொன்ன மூணையும் ... என்னோட ஊரு, என்னோட சாதிசனம், என்னோட வூடுன்றதுல்லாமே
மனசுக்குள்ள ஒரு கெர்வத்தைக் குடுத்து என்னிய ஆட்டுது! ஒரு மயக்கத்தைக் குடுக்குது.
அத்தத்தான் 'பிமரம்'னு சொல்றாரு.
மொறையாப் பாத்தா, பிரமம்னுதான் சொல்லியிருக்கணும்!
ஆனா, அதெல்லாம் ஒரு மயக்கத்தைக் குடுக்கறதால, அந்த வார்த்தையே கொஞ்சம் திரும்பிப்பூடுது!
பிரமம், பிமரம் ஆயிருது!
இதுமாரி 'டமாசு'ல்லாம் அடிக்கடி பண்ணுவாரு நம்ம அருணகிரிசாமி!
முருகன் சொன்ன 'மெய்ப்பொருளால'... சத்திய வாக்கால... இந்த மயக்கமில்லாம் தீந்திருச்சாம் இவுருக்கு!
இந்த அதிசியத்த இன்னான்னு நான் சொல்லுவேன்னு குதிக்கறாரு!
அதான் 'கெட மெய்ப்பொருள் பேசிய ஆ!'
இத்தச் சொன்னது ஆருன்னு இப்ப அடுத்த பட்டியலு போடுறாரு!
இதுலியும் ஒரு மூணு வருது!
சொன்னது குமரன், அது ஆருன்னா கிரிராச குமாரியோட மகன், அவன் இன்னா பண்ணினான்னா,
சமரம் பொரு தானவ நாசகன்னு வரிசியா அடுக்கிக்கினே போறாரு!
மொதல்ல சொன்ன மூணுக்கும், இப்ப சொல்ற மூணுக்கும் எதுனாசும் சம்பந்தம் க்கீதான்னு பாத்தா,
... ஆமா! க்கீதுன்னு புரியவரும்!
'குமரன்'னாலே மலையிருக்கற ஊருலல்லாம் ஒக்காந்துக்கினு கீறவன்னு அல்லாருக்கும் தெரியும்!
அப்போ, குமரன்னதுமே ஏதோ ஒரு ஊரு ஒன்னோட நெனைப்புக்குத் தானா வந்திரும்!
மலைராசன் பொண்ணு பெத்த புள்ளைன்னு அடுத்த வார்த்தை! 'கிரிராசகுமாரி மகன்'னு!
இதுல ஒரு சொந்த பந்தத்தையும், அவரோட சொந்த வூடு எதுன்னும் லேசா தொட்டுக் காமிக்கறாரு!
'தனு'ன்னு ஒரு ராட்சசி பெத்த புள்ளைங்களான ராட்சசங்கள்லாம் சண்டைக்கு வந்தாங்களாம்.இவுரை எதுத்து!
'தனு' பெத்ததால தானவர்னு அவங்களுக்குப் பேரு! அவங்களையெல்லாம் ஒண்ணுமில்லாம நாசம் பண்ணினவர்னு
மூணாவதா சொல்றாரு. ...'சமரம் பொரு தானவ நாசகன்'னு!
சாமியோடையே சண்டை போட வர்றான்னா, அவன் எவ்ளோ பெரிய மடையனா இருக்கணும்?
புத்தி கெட்டுப் போனாத்தானே, ஒரு மயக்கம் வந்தாத்தானே, இதும்மாரில்லாம் செய்யத் தோணும்!
இப்ப ரெண்டியும் சேத்துப் பாத்தியானா, ஊரு, சொந்தம், வூடுன்ற மூணு வித மயக்கமும் மனசைப் போட்டுக்
கொய[ழ]ப்பறப்ப, தன்னோட அடியாருங்களைக் காப்பாத்தறதுக்காவ, முருகன் சண்டை போட வந்திருவான்னு
பூடகமா சொல்லிக் காட்றாரு நம்மாளு!
போன பாட்டுலியே சொன்னாமாரி, முருகன் சண்டை போட்டார்னா, ஆரும் அளிஞ்சுபோவ மாட்டாங்க!
அதுக்குப் பதிலா, அந்தக் கொணங்களை மட்டும் தொரத்திட்டு, ஒனக்கு ஒரு உண்மையைக் காட்டுவாருன்னு
இந்தப் பாட்டுல புரிஞ்சுக்கணும்!
இப்ப ஒரு சட்டை அளுக்காயிருச்சுன்னா, தூக்கியா கெடாசிடறோம்? அதுல க்கீற அளுக்கை மட்டும் சோப்பு போட்டுத்
தொவைச்சு சுத்தம் பண்ணித் திரும்ப மாட்டிக்கறோம்ல?
அதும்மாரித்தான் இங்கியும்!
மயக்கந்தான் கெட்டுப் போவும்! நீ கெட மாட்டே! ஏன்னா, அப்பத்தானே ஒனக்கு அநுபூதின்னா இன்னான்னு புரியும்!
இன்னா? சொல்றது வெளங்குதா?' என்றான்.
'ஏதோ கொஞ்சம் புரியுது மன்னார்! அப்பிடீன்னா, அடுத்த பாட்டுதான் இந்த வரிசையில் கடைசி பாட்டுல்லை?
அது என்னன்னு தெரிஞ்சுக்க ஆசையா இருக்கே!' என்றேன்.
சாஸ்திரிகளைப் பார்த்து என்னைக் காட்டி உதட்டைப் பிதுக்கினான் மயிலை மன்னார்!
'ம்ம்... என்னத்தைச் சொல்றது?' என்பதுபோல் என்னை ஒரு இரக்கத்துடன் பார்த்தார் சாஸ்திரிகள்.
நாயர் ஒன்றும் பேசாமல், மௌனமாக எழுந்து நடையைக் கட்டினான்!
'அடுத்த வாரம் பாப்பம்! நாங்க வரோம் சாமி!' என சாம்பு சாஸ்திரிகளிடம் சொல்லிக்கொண்டுவிட்டு,
என் தோளின் மீது கையைப் போட்டவாறே நடக்கத் தொடங்கினான் மன்னார்.
மாலைநேர மயிலை மாடவீதி வழக்கம்போலக் களை கட்டியிருந்தது!
**********
[தொடரும்]