மலையாள ஸம்சாரம் (sushi Krishnamoorthi)
என்ன! தலைப்பே ஒரு கோக்குமாக்கா இருக்கேன்னு பாக்கறீங்களா? அதுதான் சமாசாரமே? ‘ஸம்சாரம்’ ன்னு தமிழிலே சொன்னா அது மனைவின்னு அர்த்தம். அதே ‘ஸம்சாரம்’ ன்னு மலையாளத்தில் சொன்னா அதுக்கு ‘ பேசறது ’ ன்னு கூட அர்த்தம் உண்டு. இந்த மலையாள சம்சாரத்தால் (இங்கே ‘‘ பேசறது ’ ன்னே அர்த்தம்’ நான் கல்யாணம் ஆன புதுசுலே பட்ட கஷ்டங்கள் தான் இந்த தலைப்பு வைக்கவே காரணம். படிச்சுத்தான் பாருங்களேன். அப்போ புரியும்.
என்னுடைய சொந்த ஊர் கலை செழிக்கும் தஞ்சை என்றாலும் நான் வளர்ந்தது எல்லாம் அன்றைய பம்பாய் – இன்றைய மும்பையில்தான். எங்கள் கல்யாணம் மும்பையில் நடந்தது . அதன் பிறகு நாங்கள் எனது புக்ககமான திருவனந்தப்புரம் சென்றோம். எனக்கு எல்லாமே கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற்போல் இருந்தது. பம்பாயில் இரண்டு படுக்கையறைக் கொண்ட சின்ன அபார்ட்மெண்டில் இருந்த எனக்கு இந்தத் தெருவில் வாசல், ரேழி ,ஹால், பூஜையறை – பின் தெருவில் தோட்டம், என்று நீளமான கொஞ்சம் இருட்டான வீட்டைப் பார்க்கும் பொழுதே ஆச்சரியம்ம்மாக இருந்தது. (ஆமாம் அவ்வளவு ஆச்சரியம் தான் )
வீட்டில் நுழைந்து ஆரத்தி எல்லாம் எடுத்தப் பிறகு எல்லோரும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். பக்கத்து வீடு , எதுத்த வீடு என்று எல்லோரும் இந்த ‘பம்பாய்’ மாட்டுப் பொண்ணு எப்படி என்றுப் பார்க்க கூடி விட்டார்கள். திடுமென்று என் நாத்தனார் ‘கிச்சன்’ எங்கே என்றுக் கேக்க எனக்கு ஒரே ஆச்சரியம். “ நான்தான் புதுசு – எனக்கு கிச்சன் எங்கே என்று இன்னும் தெரியாது – ஆனால் இந்த வீட்டிலேயே பிறந்து வளர்ந்த இவங்களுக்கு ‘கிச்சன்’ எப்படி தெரியாமல் போகும்” என்று மனதிலேயே நினைத்துக் கொண்டேன். ஏனென்றால் பம்பாயில் ‘கிச்சன்’ என்றால் சமையல் செய்யும் இடம் - அதாவது ‘ அடுக்களை – அதற்குள் என் கணவர் கையில் ஒரு தூக்குடன் உள்ளே நுழைய ‘இதோ கிச்சனே வந்தாச்சு’ என்று என் மாமியார் கூற அப்பொழுதுதான் எனக்குப் புரிந்தது ‘கிச்சன்’ என்பது ‘கிருஷ்ணமூர்த்தி’ என்கிற என் அருமந்த கணவரின் செல்லப் பெயர் என்பது. ஏதோ புது மணப்பெண் என்பதால் வாய் திறக்காமல் இருந்ததால் நான் பிழைத்தேன். இப்பொழுது போல் தைரியம் இருந்திருந்தால் ‘என்ன ! கிச்சன் கூட தெரியாதா? அப்போ சமையல் எல்லாம் எப்படி செய்வீர்கள்?” என்றுக் கேட்டு எல்லோர் கேலிக்கும் ஆளாகி இருப்பேன்.
அதன் பிறகு விருந்து நடந்தது. முதலில் ஜோடியாக எங்கள் இருவருக்கும் விருந்து பரிமாறி விட்டு என் மாமியார் , ஒர்ப்பிடிகள், நாத்தனார் என்று எல்லோரும் சாப்பிட அமர்ந்தார்கள்
. நானும் கூட வந்திருந்த சில விருந்தினர்களும் பரிமாறிக் கொண்டிருந்தோம். திருமென்று என் மாமியார் ‘சுசீலா ! பொடித்தூவல் கொண்டு வா” என்றுக் கூற நானும் கிச்சனுக்கு (அடுக்களைக்கு) விரைந்தேன். ஆனால் பொடித்தூவல் என்றால் என் வரைக்கும் அது எதோ பொடி என்று நினைத்து தேட ஆரம்பித்தேன். எந்தப் பொடியும் என் கண்ணில் படவில்லை. அப்பொழுது நல்ல வேளையாக பின் வாசல் வழியாக கிச்சனில் நுழைந்த என் கணவர் ‘கிச்சன்’ ‘என்ன தேடறே?” என்றுக் கேட்க நானும் ‘அம்மா போடித்தூவல் கேட்டா – ஆனா இங்கே எந்தப் பொடியையும் காணோம்’ என்றுக் கூற அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. “ பொடித்தூவல் அந்த அடுக்கில் இருக்குப் பாரு” என்றுக் கூறி அடுக்கை எடுத்துக் என் கையில் கொடுத்தால் அதில் தேங்காய் போட்ட ‘பீன்ஸ்’ கறி. எங்கள் வீட்டில் எல்லாமே கறியோ, கூட்டோ தான். பிறகு விருந்து எல்லாம் முடிந்த பிறகு ‘போடித்தூவல்’ பற்றிய விவரம் இவர் எல்லோருக்கும் கூற சிரிப்பு வெடிதான். காளன், ஓலன், சேனை எரிசேரி எல்லாமும் எனக்குத் தெரிய வந்தாலும் அதை பறிமாறுவது என்னவோ எனக்கு தமிழ் கரண்டி என்றால் அவருக்கு அது மலையாள ‘ஆப்பை’ யால்தான்.
திருவனந்தபுரத்தில் என்னை பல இடங்களுக்கு அழைத்துச் சென்றார் என் கணவர். ஆனால் அப்பொழுது ‘ஆட்டோ’ எல்லாம் கிடையாததால் கிட்டே உள்ள இடங்களுக்கு நடந்தே சென்றும் , தள்ளி உள்ள இடங்களுக்கு பஸ்ஸிலும் சென்று வந்தோம். அது மாதிரி ஒரு முறை நடந்தே ஒரு பகவதி கோவிலுக்குச் சென்று விட்டு திரும்பி வரும் பொழுது ஒரே வெய்யிலாக இருந்ததால் மிகவும் வியர்த்து வடிந்தது. நான் அவரிடம் ‘ ரொம்ப வேசர்க்கிறது இல்லையா” என்றுக் கூற அவர் ‘ இன்னும் கொஞ்ச தூரம் தான் - அம்மா சமைச்சு வச்சிருப்பா - வீட்டிலே போன உடனே சாப்பிட வேண்டியதுதான் ‘ எனக் கூற ‘ என்ன இவர் – வேசர்க்கிறது என்றால் சாப்பிடலாம் என்கிறார் – நான் சொன்னது புரியலையோ?’ என்று நினைத்துக் கொண்டு ( மலையாள பாஷையில் வெசக்கிறது என்றால் பசிக்கிறது என்பது அப்புறம்தானே தெரிந்தது) “ ஒரே சூடா இருக்கு - sweatingஆக இருக்கு “ என்று புரியும் படியாகக் கூறினேன். அதற்கு அவர் ‘ ஒ ! ஆமாம் - இன்னிக்கு கொஞ்சம் சூடு அதிகம்தான். வா ! தணல்லே நடக்கலாம்’ என்றாரே பார்க்கலாம். எனக்கு வெளிச் சூட்டினால் அவருக்கு ஏதாவது ஆகிவிட்டதோ என்று சந்தேகம் வந்து விட்டது. பின்னே என்ன? தணல் என்றால் தமிழில் சிவந்து எரியும் நிலக்கரி (கங்கு) – அதில் போய் நடக்கலாம் என்றால் சந்தேகம் வராமல் என்ன செய்யும். அப்புறம் தானே தெரிந்தது மலையாளத்தில் ‘தணல்’ என்றால் ‘ மரத்தடி நிழல்’ என்று. இப்பொழுது கூட வீட்டு வேலை செய்யும் அச்சி ‘ நான் ராவுலே வரும்’ ன்னு சொன்னா ‘எதுக்கு ராவுலே? காலைலே வா – போறும்” ன்னு தான் எனக்குச் சொல்லத் தோணும். அப்படியும் விடாமல் அச்சி “ அது தன்னே பறையறது - நான் ராவுலே வரும் “ னு சொல்ல , இப்போவும் ராவு எது காலை எதுன்னு குழப்பமான நிலைதான்.
என் மாமியார் திருவனந்தபுரத்திலும் நாங்கள் சென்னையிலும் இருந்ததால் சமையல் குறிப்பு எல்லாம் கடிதம் மூலமாகத்தான். நானும் கடிதம் மூலமாகவே காளன், சேனை எரிசேரி, ஓலன் என்று பல விதமான மழையாள சமையல் கற்றுக் கொண்டேன். ஆனால் ஓலன் சரியானபடி அமைய நான் பட்ட பாடு இருக்கிறதே அதை வார்த்தையால் விவரிக்க இயலாது. என் மாமியார் எழுதியக் குறிப்பில் ஓலனுக்கு சேர்க்க வேண்டிய கறிகாய் என்பதில் ‘பூசணிக்காய்’ என்றுக் குறிப்பிட்டிருந்தார். நானும் கடையில் போய் கால் கிலோ வெள்ளை பூசணிக்காய் வாங்கி மற்றக் காய்கறிகள் எல்லாம் சேர்த்து தேங்காய்பால் சேர்த்து அருமையாக (என்னைப் பொறுத்தவரை அருமையாக) ஓலன் செய்து கணவர் வந்தவுடன் ஒரு சின்னக் கிண்ணத்தில் ஓலன் வைத்து கொடுத்தேன். அவர் ஆவலுடன் ஒரு வாய் சாப்பிட்டவர் ‘நன்னா தான் இருக்கு. ஆனா அம்மா பண்ணறது போல இல்லை” என்றார். எனக்கு ஒரே ஏமாற்றம். ஓலன் எனக்கு ஒரு சவாலாகவே ஆகிவிட்டது. கிட்டத்தட்ட 10 முறைகள் செய்தும் வசிஷ்டர் வாயால் மகரிஷி பட்டம் கிடைக்காத நிலைதான். நானும் விடாமல் ‘மனம் தளராத வேதாளம் ‘ போல முயற்சி செய்து வந்தேன். அப்புறம் ஒரு முறை திருவனந்தப்புரம் சென்ற பொழுது மாமியாரை ஓலன் செய்துக் காட்டச் சொன்ன பொழுதுதான் தெரிந்தது. அவர்கள் பரங்கிக்காயை (சிவப்பாக உள்ளது) பூசணிக்காய் என்றும் , பூசணிக்காயை ‘கொம்பளங்காய்’ என்றும் கூறுவது வழக்கம் என்று. அதனாலேயே நான் மாமியார் பரங்கிக்காய்க்குப் பதிலாக பூசணிக்காய் உபயோகித்து ஓலன் செய்தால் அம்மா பிராண்டட் ஓலன் எப்படி வரும்? ஆனால் அதன் பிறகு நானும் ‘ஓலன் ராணி’ ஆகி ஒரு பத்திரிகைக்கு சமையல் குறிப்பு ‘ஓலன்’ பண்ணும் முறை எழுதி பரிசும் வாங்கினேன் என்பது வேறு கதை.
இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம். பாதி நேரம் நான் கஷ்டப்பட்டேன் என்றாலும் மற்ற நேரம் கூடி இருந்தவர்களும் கஷ்டப் பட்டார்கள் என்பதுதான் உண்மை. ஆனால் சிலசமயம் இந்த மாதிரி ‘மலையாள ஸம்சாரங்களால்’ நன்மையையும் ஏற்படுவது உண்டு. அதையும் சொல்ல வேண்டும் இல்லையா ? நான் எழுதி மங்கையர் மலரில் எனக்குப் பரிசு வாங்கிகொடுத்த ‘ கப்பலண்டி’ சம்பவம் தான் அது.
1971’ம் வருடம். எனக்கு மாற்றல் கிடைத்து நாங்கள் சென்னையில் புதுக் குடித்தனம் வைத்த நேரம். எனக்கு சென்னை புதிது என்பதால் ஒரு ஞாயிறன்று என்னை புகழ் வாய்ந்த மெரீனா பீச் அழைத்துச் சென்றார் என் அருமைக் கணவர். பீச் மணலில் கால் வைத்து நடந்து பிறகு அலைகளில் விளையாடி நாங்கள் களைத்துப் போய் மணலில் அமர்ந்திருந்தோம். அப்பொழுது அவர் ‘என்ன - கப்பலண்டி சாப்பிடலாமா?” என்றுக் கேட்டவுடன் எனக்கு மனதில் பல பல எண்ணங்கள். எல்லாமே வண்ண வண்ண ‘ டெக்னிக் கலர்’ ரொமான்டிக் காட்சிகள் தான். நாங்கள் இருவரும் சினிமா ஜோடிகள் போல் ஒரு படகில் ஏறி (பின்னணியில் லாலாலாலா என்று பாட்டு வேறு) தூரத்தில் நிற்கும் கப்பலுக்குச் சென்று ‘கப்பலண்டி’ வாங்கி
படகிலேயே அமர்ந்து சாப்பிடுவது போலவும் – பின்னால் வெள்ளை நிற தேவதைகள் பாரதி ராஜா படத்தில் வருவது போல பாடிக்கொண்டே ‘slow motion’ நடனம் ஆடுவது போலவும் பல காட்சிகள். இதெல்லாம் நினைத்த வினாடியில் அங்கெ ஒரு சிறு அரை டிராயர் பையன் கையில் ஒரு கூடையுடன் வந்து நிற்க, என் கணவர் ‘ ரெண்டு பொட்டலம் கொடுப்பா” என்றுக் கூறி அவனிடம் சில்லறையைக் கொடுத்து விட்டு என் கையில் ஒரு பொட்டலத்தைக் கொடுத்து விட்டு தானும் தன் பொட்டலத்தைப் பிரித்தார். பொட்டலத்தைப் பிரித்தால் என் நிலையைப் பார்த்து பல்லைக் காட்டிக் கொண்டு சிரிப்பது போல் குண்டு குண்டாய் வேர்க்கடலை. நான் கண்ட கனவு என்ன ? கையில் உள்ள வேர்க்கடலையைப் பார்த்து என் முகம் ஏன் அவ்வளவு கோபமாக மாறியது என்று அன்று என் கணவருக்குப் புரிந்திருக்காது. ஆனால் இப்பொழுது இதை படித்தால் புரியும். வேர்க்கடலையை வாயில் அள்ளிப் போட்டுக் கொண்டு வழ வழக் குரலில் ‘ஏன் கப்பலண்டி சாப்பிடலை? காந்தி கூட கப்பலண்டி சாப்பிடுவது நல்லது என்று சொல்லி இருக்கார்’” என்றுக் கூறியதைக் கேட்டதும் எனக்கு அழுவதா சிரிப்பதா என்றுத் தெரியவில்லை . இருந்தாலும் ‘எனக்கு பசியில்லை - காந்தி சொன்னா மாதிரி நீங்களே சாப்பிடுங்கோ “ என்றுக் கொடுத்து விட்டேன். எனக்கு எப்படி தெரியும் – நம்ம ஊர் வேர்க்கடலை மலையாள ராஜ்ஜியத்தில் கப்பலண்டி என்று. ‘வெளிநாட்டிலிருந்து கப்பலில் வந்ததாலும் அவர்கள் ‘அண்டிப்பருப்பு’ எனக் கூறும் முந்திரிப்பருப்பு போல் கொஞ்சம் சுவையில் இருப்பதாலும் ‘ கப்பலண்டி’ என்ற நாமகரணம் பெற்றது என்று – இந்தக் கப்பலண்டி பெயர் காரணமும் பிரிதொரு நேரத்தில் என் கணவர் எனக்குக் கூறியதுதான். இருந்தாலும் மங்கையர் மலர் பரிசு வாங்கிக் கொடுத்ததால் இன்று எனக்கும் கப்பலண்டி பிரியமான விஷயம் தான்.
என்ன நண்பர்களே ! இப்பொழுது ஒத்துக் கொள்கிறீர்களா - நான் கொடுத்துள்ள ‘மலையாள ஸம்சாரம் ‘ என்ற தலைப்பு இந்தக் கட்டுரைக்குப் பொருத்தமானதுதான் என்று.
(சுசி கிருஷ்ணமூர்த்தி)
மலையாள ஸம்சாரம்