• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

மாண்டவர் மீண்டுவந்த அதிசய நிகழ்ச்சிகள்

Status
Not open for further replies.
மாண்டவர் மீண்டுவந்த அதிசய நிகழ்ச்சிகள்

ramayana.jpg


மாண்டவர் மீண்டுவந்த 3 அதிசய நிகழ்ச்சிகள்

உலகப் புகழ் பெற்ற இதிஹாசங்களான ராமாயணத்திலும் மஹா பாரதத்திலும், நெஞ்சை அள்ளும் தமிழ் காப்பியமான சிலப்பதிகாரத்திலும் மூன்று அற்புத நிகழ்ச்சிகள் உள்ளன. வால்மீகி, வியாசர், இளங்கோ ஆகிய மூவரும் பொய் சொல்லவோ, மிகைப் படுத்திக் கூறவோ இல்லை. இந்த நிகழ்ச்சிகள் வரும் இடங்களையும் அவை விவரிக்கப்பட்ட முறையையும் பார்கையில் எவரும் நம்புவார்கள்.


இறந்த பின் நாம் எங்கே போகிறோம்? எவ்வளவு காலத்துக்குப் பின் மீண்டும் பிறப்போம்? இறந்தவர்கள் பலருக்குக் கனவில் வருகிறார்கள். சிலர் நீண்ட காலத்துக்கு முன் இறந்த மஹான்களைப் பார்த்ததாகக் கூறுகிறார்கள். ராகவேந்திரர் போன்றோர் 600 ஆண்டுக் காலம் அங்கே சமாதியில் இருந்து அருள் புரிவதாகப் படிக்கிறோம். இப்படி மாண்டவர்கள் மீண்டும் வர முடியுமா? அதற்கு 2000, 3000 ஆண்டுப் பழமையான இலக்கியங்களில் சான்று உண்டா என்று பார்க்கையில் ‘’உண்டு’’ என்றே சொல்லவேண்டும்.


இந்தக் கட்டுரையாளர் வாழ்விலும் இப்படி ஒரு உண்மைச் சம்பவம் நடந்தது. எங்களுக்கு எல்லாம் மந்திர உபதேசம் செய்த ஆயக்குடி சுவாமிஜி கிருஷ்ணா அவர்கள், மதுரையில் ஒரு வீட்டில் கணபதி ஹோமம் செய்து முடித்த பின்னர், திடீரென்று ஒரு திசையை நோக்கி எல்லோரையும் கீழே விழுந்து நமஸ்காரம் செய்யச் சொன்னார். வெற்றிடத்தை நோக்கி ஏன் நமஸ்காரம் செய்யச் சொல்கிறார் என்ற கேள்வியை யாரும் கேட்பதற்கு முன் அவரே விளக்கமும் கொடுத்தார். அந்த வீட்டில் ஒரு மஹான் இருந்ததாகவும், அவர் இன்று நடந்த பூஜையைப் பார்க்க வந்ததாகவும் கூறினார். பிறகு அந்த வீட்டுச் சொந்தக் காரர் சுவாமிஜியை மாடிக்கு அழைத்துச் சென்று அவர்களுடைய கொள்ளுத் தாத்தாவின் படத்தைக் காட்டி அவர் ஒரு பெரிய மஹான் என்று கேள்விப்பட்டதாகச் சொன்னார்.. மஹா கணபதி பற்றி யார் சந்தேஹம் கேட்டாலும் காஞ்சிப் பெரியவரே இவரிடம்தான் அனுப்புவார்.


ராமாயணத்தில் ஒரு காட்சி

(வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம், அத்தியாயம் 121)
ராமரைப் பார்க்க தசரதர் இந்திரலோகத்திலிருந்து வருகிறார். அவருடைய விமான ரதம் வானில் அந்தரத்தில் நிற்கிறது. அன்போடு ராமரையும் லெட்சுமணரையும் அழைத்து மடியில் உகாரவைத்து அரவணைத்துக் கொள்கிறார். பின்னர் சீதை உள்ளிட்ட மூவருக்கும் ஆசிகள் வழங்கிவிட்டு சீதையிடம் ராமர் மீது கோபம் கொள்ளவேண்டாம் என்றும் அவன் செய்ததெல்லாம் (அக்னிப் பரீட்சை) மக்களின் முன்னிலையில் சீதை உத்தமி என்று காட்டவே என்றும் விளக்குகிறார்.


தசரதர் போவதற்கு முன் ராமர் ஒரு அற்புதமான வேண்டுகோள் விடுக்கிறார். தந்தையே, நீங்கள் கோபத்தில் கைகேயி ‘’என் மனைவி இல்லை என்றும் பரதன் என் பிள்ளை இல்லை’’ என்றும் தலைக்கு முழுக்குப் போட்டுவிட்டு உயிரை விட்டீர்கள். இன்று முதல் மீண்டும் அவர்களை உங்கள் மனைவி, மகன் என்ற நிலைக்கு உயர்த்த வேண்டுகிறேன் என்றவுடன் தசரதரும் அவ்வாறே அருள் புரிந்தார். அத்தியாயத்துக்கு அத்தியாயம், ராமன் உலக மஹா உத்தமன், மனிதருள் மாணிக்கம் என்று காட்டுகிறது ராமாயணம். இதனால் தான் ராமாயணம் காலத்தால் அழியாத காவியமாகத் திகழ்கிறது.


மஹா பாரதத்தில் ஒரு காட்சி

போரில் இறந்தவர்கள் எங்கே போகிறார்கள் என்று ‘ஸ்த்ரீ பர்வ’த்தில் திருதராஷ்டிரனும் யுதிஷ்டிரனும் (தர்மர்) விவாதிக்கிறார்கள். இதற்கு தர்மர் கொடுத்த விளக்கம் கவனிக்கப் படவேண்டியது. போரில் முழு மனதுடன் வீரராக உயிர் இழந்தோர் இந்திர லோகத்துக்கும், அரைகுறை மனதுடன் போரிட்டோர் கந்தர்வலோகத்துக்கும் போகிறார்கள். உயிர்ப் பிச்சை கேட்டவர்களும் புறமுதுகு காட்டியவர்களும் யக்ஷர்களாகிறார்கள் என்று யுதிஷ்டிரர் கூறுகிறார்.
சங்கத் தமிழ் நூலான புறநானூறு மற்றும் பகவத் கீதை முதலியன போரில் இறப்பவர்கள் சொர்க்கலோகத்தை அடைகிறார்கள் என்று திட்டவட்டமாக கூறுகின்றன. இதை ‘’புறநானூற்றில் பகவத் கீதை-பகுதி 1, பகுதி 2’’ மற்றும் ‘’வீரத் தாயும் வீரமாதாவும்’’ என்ற கட்டுரைகளில் முன்பே விளக்கி இருக்கிறேன்.


மஹாபாரதத்தை ஜனமேஜயன் சபையில் வாசித்தபோது போரில் இறந்த பீஷ்மர், துரோணர், அபிமன்யு, துர்யோதணன் ஆகியோர் மீண்டும் வந்ததை ஜனமேஜயனே நம்பவில்லை. இடை மறித்து அப்படியானால் என் தந்தை பரீட்சித்தையும் இப்போது காட்ட முடியுமா? என்று கேட்கிறார். உடனே வியாச மஹரிஷி , பரீட்சித்து மன்னரையும் உயிரோடு காட்டுகிறார்.
thairamayana.jpg


கங்கை நதியில் ஒரு அதிசயக் காட்சி (ஆஸ்ரம வாசிக பர்வம்)

காந்தாரி, குந்தி, திருதராஷ்டிரன் ஆகியோர் போரில் மடிந்த தனது மகன்களையும் உறவினர்கலையும் பார்க்க துடியாய்த் துடிக்கிறார்கள். வியாச மஹரிஷி இந்தத் துடிப்பை அறிந்து ஒரு நாள் எல்லோரையும் கங்கை நதிக்கு வரச் சொல்கிறார். ஊர் மக்கள், அரச குடும்பத்தினர், மா முனிவர்கள் எல்லோரும் அதிசயத்தைக் காண பெரும் கூட்டமாகக் கூடவே, வியாசர் ஒவ்வொருவர் பெயராகச் சொல்லி அழைக்கிறார். துரோணர், பீஷ்மர் தலைமையில் மிகப் பெரிய போர் வீரர் கூட்டம் பெரும் சப்தத்துடன் கங்கை நதியில் இருந்து எழுந்து வருகின்றனர். ஆயிரக் கணக்கில் யுத்தத்தில் இறந்த வீரர் அனைவரும் நதிக்கு மேலே காட்சி தருகின்றனர். எல்லோரும் மகிழ்ச்சியோடு காணப்பட்டனர். இரவு முழுவதும் குடும்பத்தோடு சேர்ந்து சந்தோஷமாக உரையாடுகின்றனர். பழைய பகைமை எல்லாம் மாயமாய் மறைந்தோடிவிட்டன.


இந்த உரையாடல் முடிவதற்குள், வியாசர் ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார். யார் யாருக்கெல்லாம் விருப்பம் இருக்கிறதோ அவர்கள் எல்லோரும் இறந்தவர்கள் திரும்பிச் செல்லும்போது அவர்களுடன் போகலாம் என்று அறிவிக்கிறார். உடனே பல க்ஷத்ரிய குலப் பெண்கள், முன்னர் இறந்த தங்களுடைய கணவர்களோடு சேர்ந்து மேல் உலகம் சென்றனர். மாண்டவர்களின் உருவங்கள் கங்கை நதிக்குள் சென்று மறையும் போது உறவினர்களும் அவர்களுடன் சென்றதாக மஹா பாரதம் கூறுகிறது. இது எல்லாம் போர் முடிந்து 15 ஆண்டுகளுக்குப் பின் நடந்தது.


இந்த நிகழ்ச்சிகள் நமக்குப் புலப்படுத்துவது சில உண்மைகள்: 1.இறந்த பின்னர் பழைய பகைமை மறைந்துவிடும். 2.இறந்தவர்கள் மகிழ்ச்சியான ஒரு உலகத்தில் வசிக்கிறர்கள். 3.வியாசர் போன்ற மந்திர பலம் உடைய மஹரிஷிகள், இறந்தவர்களோடு தொடர்பு கொள்ளமுடியும், அவர்களை பூமிக்கு திரும்ப அழைக்கவும் முடியும். 4.திதி கொடுக்கும் போது இறந்தவர்கள் வந்து பிண்டத்தை வாங்கிக்கொள்வது எல்லாம் உண்மையே என்பதற்கு இது ஒரு சான்று.
mahabharat2.jpg


தமிழில் சிலப்பதிகார அதிசயம்

தமிழ் காவியமான சிலப்பதிகாரத்தில் கோவலன் கொலையுண்ட 14ஆம் நாளில் ஒரு அதிசயம் நடந்தது. கண்ணகி கேரள தேசத்திலுள்ள திருச் செங்குன்றத்தில் ஒரு வேங்கை மரத்தின் கீழே நின்று கண்ணிர் விடுத்தாள். அப்போது விண்ணோரும் வியக்கும் வண்ணம் கோவலன் ஒரு விமானத்தில் வந்து கண்ணகியை மேல் உலகத்துக்கு அழைத்துச் செல்கிறான். இதை கண்ட கானக மக்கள் வியந்து போற்றுகின்றனர். அத்தோடு நில்லாமல் இந்த அற்புதக் காட்சியை சேர மன்னனிடம் வியப்போடு விளக்கினர்.


சேர மன்னன் செங்குட்டுவன், இதைக் கேட்டு அகம் மகிழ்ந்து, உளம் குளிர்ந்து அந்தப் பத்தினித் தெய்வத்துக்கு இன்றே கோவில் கட்ட ஏற்பாடு செய் என்று மந்திரிகளுக்கு உத்தரவு இடுகிறான். புனித இமய மலையில் கல் எடுத்து புனித கங்கையில் அதைக் நீராட்டி அந்தக் கல்லில் கண்ணகி சிலை வடிக்க இமயம் நோக்கிச் செல்கிறான். பின்னர் அவன் எடுத்த சிலைக்கு புனித நீராட்டுகையில் ‘கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன்’ உள்பட பல நாட்டு மன்னர்களும் வருகை தந்து சிறப்பிகிறார்கள் என்று சிலப்பதிகாரம் கூறும் (குன்றக் குரவை காதை, சிலப்பதிகாரம்)
*******
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top