தந்தை ........... (தொடர்ச்சி)
திடீரெனத் தன் மனைவிக்கு ஏதோ ஆகிவிட்டது என்று பதைத்து, இரவு நேரம் புலம்பி
வந்தான் ஒருவன்! அவன் வீட்டிற்குச் சென்றதுமே, அப்பாவுக்கு விஷயம் புரிந்தது.
மாமியாரிடம் 'சீராடி'விட்டு ( சண்டைதான்!) வெறித்த பார்வையுடன் அந்தப் பெண்
கிடந்தாள்! 'எழுந்திரும்மா' என்ற கனிவான் சொற்களுக்கு, அசையாது கிடந்தாள். உடனே,
தன் கத்திரிக்கோலை எடுத்து 'கிளிக்' என்று சத்தம் போட வைத்த அப்பா, ' வேற
ஒண்ணுமில்லை. நாக்குதான் சிக்கி இருக்கு! கொஞ்சம் நுனியைக் 'கட்' பண்ணினால்,
எல்லாம் சரியாகும்', என்று சொன்னவுடன், வெறித்த கண்களைக் கொஞ்சமாக் ஆட்ட
ஆரம்பித்தாள், அந்தப் பெண். 'அட! கண்ணு அசையறதே!' என்று கூறிவிட்டு,
'உக்காரும்மா' என்றதும் உட்கார்ந்தாள். 'எழுந்திரும்மா' - எழுந்தாள். 'நட, பாக்கலாம்' -
நடந்தாள். 'பேசுவியா?' - பேசினாள்! அந்த வீட்டில் அனைவரும் ஆனந்தக் கூத்தாட,
விட்டால் போதுமென, திரும்பி வந்தார் அப்பா.
அந்த ஊர் மக்கள் எத்தனை புத்திசாலிகள் என்பதற்கு ஓர் உதாரணம். 'டாக்டரு சாமி!
அன்னைக்கு நீங்க எனக்கு அஞ்சு ரூபா கொடுத்தீங்க. இன்னைக்கு ஒரு ஊசி போட்டு
மருந்தும் கொடுத்தீங்க. அதுக்கும் இதுக்கும் சரியாப் போச்சு!'
பர்மாவில் தங்கப் பதக்கத்துடன் மருத்துவப் பட்டம் பெற்று, ராணுவ டாக்டராகச் சேர்ந்து,
இரண்டாம் உலகப் போர் சமயம் இந்தியாவுக்கு நடையாய் நடந்து வந்து, சேலத்தில்
டாக்டர் ராஜாராம் அவர்களின் உதவி டாக்டராகச் சேர்ந்தார். மலைப் பாதைகளைக் கடந்து
வந்தபோது, வழியில் மூங்கில் அரிசியைச் சேகரித்து, அதைச் சமைத்துச் சாப்பிட்டதைக்
கேட்கும்போது, கதை போலவே தோன்றும்! சேலத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை
அனுபவித்ததில், வேறு ஊர் மாற எண்ணம் ஏற்பட்டதாம்! ஆனைமலை என்ற ஊரில்,
மருத்துவர் தேவை என்று அறிந்ததும், அப்பா கேட்ட ஒரே கேள்வி, 'அந்த ஊரில் தண்ணீர்
நல்லாக் கிடைக்குமா?' என்பதே. வற்றாத ஆளியாறு ஓடுவதை அறிந்ததும் இடம்
பெயர்ந்தாராம்! தன் தொழில் மீது அத்தனை உறுதியான நம்பிக்கை கொண்டவர்.
நாம் எல்லோருக்கும் நல்லதே செய்தால், நமக்கும் பல உதவிகளை ஆண்டவன்
செய்வான் எனக் கற்பித்தவர். அப்பா விரும்பிக் கூறும் கதைகளில் இது ஒன்று. ஒரு
நதிக்கரையில் ஒரு சந்நியாசி அமர்ந்திருக்க, தேள் ஒன்று நதியில் தத்தளிப்பது கண்டு
அவர் வெளியில் எடுக்க, தேள் அவர் கையைக் கொட்ட, அவர் கையை உதறியதும், தேள்
மீண்டும் நீரில் விழ, மீண்டும் அவர் காப்பாற்ற, மீதும் அது கொட்ட, அவர் கையை
உதற.... இந்த ACTION REPLAY தொடருவதைக் கண்டு வழிப்போக்கன், 'ஏன் அதைக்
காப்பாற்றிக்கொண்டே இருக்கிறீர்?' என வினவ, அவர் சொன்னாராம், ' காப்பது என்
வழக்கம்; கொட்டுவது அதன் வழக்கம்!' எப்போதும் நல்லதையே நினைத்து நல்லதையே
செய்யவேண்டும் என்பார், அப்பா.
கோவில்களுக்கு அதிகம் செல்ல மாட்டார். 'நம் வீட்டில் இல்லாத ஸ்வாமியா?', என்பார்!
மணி விழா வயதுக்குப் பின், கீதை தினமும் பாராயணம் செய்ய ஆரம்பித்தார். கீதை
காட்டுவதும் கர்ம யோகப் பாதைதானே! அந்த வயதில், ஆசிரியரிடம் வயலின் வாசிக்கக்
கற்றார். தினமும் அதிகாலை டிகிரி காபி குடித்ததும், மாயாமாளவகௌள ராகம்
இசைப்பார். அந்த ராகம் வீட்டிற்கு நல்லதைக் கொண்டு வரும் என்ற குருவின் வாக்கை
வேத வாக்காக மதித்தார். (அவரின் குரு பற்றிப் பின்னர் எழுதுகிறேன்!) 'மிக உன்னத
மனிதர்' என்பது அப்பாவைப் பற்றி ரத்னச் சுருக்கமாக உரைப்பது! அவரின்
நற்பண்புகளையே, நாங்களும் பின்பற்ற விழைகிறோம்!
:blah: தொடரும்...............