• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஸ்ரீ சுகப்பிரம்ம மகரிஷி ஜெயந்தி

இன்று(25-6-24) ஆனி திருவோணம்
ஸ்ரீ சுகப்பிரம்ம மகரிஷி அவதரித்த நாள் சிறப்பு பதிவு!

சுகமான வாழ்வு அருளும்
ஸ்ரீ சுகப்பிரம்ம மகரிஷியின் வரலாறு:

ஸ்ரீ சுகப்பிரம்ம மகரிஷி அவதரித்தது ஓர் ஆனி மாதம், திருவோணம் நட்சத்திர தினமாகும்.

அந்த நாளில் அவரது ஜயந்தி விழா கொண்டாடப்படுகிறது.

இன்று 25-6-24 செவ்வாய் கிழமையில் ஆனி, திருவோணம் அமைகின்றது.

பகவத் கீதையின் 10 ஆவது அத்யாயமான விபூதி யோகத்தில்
ஸ்ரீ கிருஷ்ணன், முனிவர்களில் நான் வியாசன் என்று கூறுகிறார்.

மஹாபாரதக் கதை எழுதிய வியாசரின் மகனே ஸ்ரீ சுகப் பிரம்மம்.

கிருதாசீ என்ற தேவமங்கையின் அழகில் மயங்கிய வியாசர், அவளிடம் மனதைப் பறி கொடுத்தார்.

அவரிடம் இருந்து தப்பிக்க கிளியாக மாறினாள்.

ஆனாலும் முனிவரின் தபோ பலத்தால் கர்ப்பம் தரித்தாள்.

ரிஷியின் கர்ப்பம் ஆனதால் உடனடியாக அவர்களுக்கு ஓர் மகன் பிறந்தான்.

ஸ்ரீ சுகப்பிரம்ம மகரிஷி இந்த உலகில் முதன் முதலில் தோன்றியதே 12 வயது பாலகனாகத்தான் என்று கூறப்படுகிறது.

குழந்தைக்கு முகம் கிளி போன்றும், உடல் மனிதனைப் போன்றும் இருந்தது.

சுகா என்றால் கிளி. அதனால் கிளி முகம் கொண்ட அக்குழந்தைக்கு சுகர் என்று பெயரிட்டனர்.

பிறந்த உடனேயே இவருக்கு ஞானம் வந்து விட்டது .

எள் முனையளவு கூட களங்கமில்லாத மனதுடையவர் ஆக இருந்தார்.

ஒருநாள் வியாசர் சுகப்பிம்மா இங்கே வா என்றார். வருகிறேன் என்று சுகப்பிரம்மர் மட்டுமல்ல அங்கே நின்ற மரம் மட்டை செடி கொடி எல்லாம் வருகிறேன் என்றது .இதைக்கண்டு சுகப்பிரம்மருக்கு பெருமை பிடிபடவில்லை .ஆஹா நான் வருகிறேன் என்று சொன்னால் ஊரில் உள்ள மரம் மட்டை செடி கொடிகள் எல்லாம் கூட நான் வருகிறேன் என்று கூறுகிறது.அப்படி என்றால் அனைத்திலும் நான் இருக்கிறேனா அப்படி என்றால் நான் எவ்வளவு பெரிய ஆள் என்று நினைத்தாரோ இல்லையோ அவருடைய ஞானம் அக்கணமே அவரை விட்டுப் போய்விட்டது.

உடனே வியாசர் மகனிடம் சுகா தற்பெருமையால் உனது ஞானம் அனைத்தையும் இழந்தாய் .நீ உடனே சென்று ஜனகரை பார்த்து உபதேசம் பெற்று வா என்று கூறினார். சுகரும் உடனே தந்தை சொல் கேட்டு ஜனகரை பார்க்க மிதிலைக்கு சென்றார்.

மகாராஜாவாக இருந்தும் ஜனகர் தாமரை இலைத் தண்ணீர் போல் ராஜாங்கத்தில் குடும்ப வாழ்வில் பட்டும் படாமல் இருந்தார். அவரை சந்திப்பதற்காக வாயிற்காப்போனிடம் அனுமதி கேட்டார் .அதற்கு அவன் சுவாமி இங்கே நில்லுங்கள் நான் போய் அரசரிடம் அனுமதி பெற்று வருகிறேன். நீங்கள் யார் என்று கேட்டால் என்ன சொல்ல வேண்டும் என்று கேட்டான்.

அதற்கு உடனே சுகப்பிரம்ம மகரிஷி அவர்கள் வந்திருக்கிறார்கள் என்று உன் மன்னனிடம் சொல் என்று கூறினார் .உடனே சென்று மன்னனிடம் அவர் கூறியபடியே கூறினான். உடனே மன்னர் ஜனகர் அவர் நாலைந்து பேர்களுடன் வந்து இருக்கிறார் .அவரை மட்டும் தனியாக வரச்சொல் என்று கூறினார் .அது கேட்டு அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. தனியாகத்தானே வந்திருக்கிறார் .பின் ஏன் மன்னர் இவ்வாறு கூறினார் என்று குழம்பிப்போய் எதிர்த்து கேள்வி கேட்க முடியாத காரணத்தினால் மன்னர் கூறியதை வந்து அப்படியே சுகப்பிரம்மரிடம் கூறினான்.

அவர் உடனே சரி சுகப்பிரம்மம் வந்திருக்கிறது என்று சொல் என்று கூற காவலனும் மன்னனிடம் அவ்வாறே சொல்ல இன்னும் ஒரு ஆள் கூட இருக்கிறார் .அவரையும் விட்டுவிட்டு வரச்சொல் என்று கூறினார்.காவலனுக்கு மேலும் குழப்பம் .இருந்தும் அவரிடம் சுவாமி இன்னுமொருவர் தங்களுடன் உள்ளாராம். அவரையும் விட்டு விட்டு வர சொன்னார் மன்னர் என்று கூறினார்.

சரியப்பா சுகப்பிரம்மன் வந்திருக்கிறான் என்று சொல் என்று சொன்னதும் அவனும் அவ்வாறு சொல்ல அவரை உடனே உள்ளே வரச் சொல் என்று ஜனக மகாராஜா அனுமதி கொடுத்தார்.அவரைக் கண்டதும் ஜனக மகாராஜா அவரிடம் பேசவில்லை .எழுந்து அவருக்கு ஆசனம் வழங்கவில்லை .அதற்கு பதிலாக அங்குள்ள மொட்டை அடித்த தலையுடன் உள்ள ஒருவனை அழைத்து அவனை அமர வைத்து அவன் தலையில் ஒரு தட்டை வைத்து தட்டில் நிறைய எண்ணையை ஊற்றினார்.

டேய் நீ உடனே புறப்பட்டு கீழரத வீதி மேல ரதவீதி என்று அனைத்தையும் சுற்றிவிட்டு இங்குவா. தட்டு கீழே விழக்கூடாது .மேலும் தட்டிலிருந்து ஒரு சொட்டு எண்ணெய் கூட கீழே சிந்தக் கூடாது. அவ்வாறு சிந்தினால் உன் தலையை வாங்கி விடுவேன் என்று எச்சரித்தார். அவன் கிளம்பினான். செல்லும் வழியெல்லாம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் வானவேடிக்கை கச்சேரி முதலியன நடந்துகொண்டிருந்தது .ஆனால் அவன் எதிலும் கவனம் செலுத்தவில்லை. தட்டிலும் எண்ணெயிலேயேயுமே கவனம் செலுத்தி அனைத்து வீதிகளையும் சுற்றி விட்டு மன்னனிடம் வந்தான். மன்னனும் ஒரு சொட்டு கூட சிந்தாமல் இருப்பதைக் கண்டு அவனை மன்னித்து போகும்படி கூறினார். அவனும் உயிர் தப்பியது என்று மிகுந்த மகிழ்ச்சியோடு ஓடி ஒளிந்தான்.

அப்போதும் அவர் சுகரிடம் பேசவில்லை .ஆனால் இதை அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த சுகர் அதிலிருந்து அவர் ஒரு விஷயத்தை நன்கு புரிந்து கொண்டார். அதாவது ஒரு மனிதனுக்கு உயிர் போய்விடும் என்ற நிலை ஏற்பட்டால் சுற்றுப்புறத்தில் என்ன நடந்தாலும் அதைக் கண்டுகொள்ளாமல் கருத்தை தட்டின் மீது மட்டும் செலுத்தி மீண்டுவந்தான் .அதுபோல நாமும் மனதை அடக்கி கடவுளின் மீது மட்டும் பக்தியை செலுத்தினால் அகங்காரம் தானே அடங்கும். மீண்டும் ஞானம் பிறக்கும் என்ற உபதேசத்தை ஜனகர் உபதேசிக்காமல் அவரிடம் பெற்று அங்கிருந்து மிக மகிழ்ச்சியுடன் கிளம்பினார்.

இதிலிருந்து நாம் உணர்வது என்னவென்றால் தற்பெருமை மட்டும் ஒருவனுக்கு ஏற்பட்டு விட்டால் அவன் பக்தி ஞானம் அனைத்தையும் இழந்து விடுவான் என்பது தின்னம் .ஆகவே எக்காரணம் கொண்டும் ஒருவனுக்கு தற்பெருமை மற்றும் ஏற்படக்கூடாது.

இதுவே சுகருக்கு மீண்டும் ஞானம் திரும்பி வந்த கதை.

ஸ்ரீ சுகரை தொடர்ந்து த்யானித்தாலே நமக்கு பரம ஞானம் சித்திக்கும்.

சதா சர்வ காலமும் ப்ரஹ்மத்திலேயே லயித்த ஒரே ரிஷி சர்வேஸ்வரனாகிய சிவபெருமானுக்கு பிறகு இவர் ஒருவர் மட்டுமே.

தந்தையை மிஞ்சிய தனயனாய் அபார ப்ரம்ம ஞானம் மிக்கவராய் விளங்கினர் ஸ்ரீ சுகப்பிரம்ம மகரிஷி.

இவர் தேவ குருவான ப்ரஹஸ்பதியின் சிஷ்யர்.

திருப்பதி ஸ்ரீ வெங்கடாசலபதியின் மாமனாரான ஆகாசராஜனின் குலகுரு.

பத்மாவதி (திருமலை ஸ்ரீ வேங்கடவனின் மனைவி) என்று ஆகாசராஜனின் குழந்தைக்கு தெய்வீக திருநாமம் சூட்டிய பெருமைக்குரியவர்.

ஸ்ரீநிவாசன், பத்மாவதி தெய்வீகத் திருமணத்தை முன்னின்று நடத்தியவர் சுகப்பிரம்ம ரிஷி.

மேலும் குபேரனிடம் கல்யாணத்திற்காக கடன் வாங்க ஸ்ரீநிவாசனுக்கு ஜாமீன் கொடுத்தாராம்.

திருப்பதியில் இவர்
வாசம் செய்ததாகக் கூறப்படுவதற்கு இணங்க, "திருச்சுகனூர்' என்று அழைக்கப்பட்ட இடமே தற்போது மருவி "திருச்சானூர்' ஆனதாகக் கூறப்படுகிறது.

பொதுவாக குரு பரம்பரை பின்வருமாறு வரையறுக்கபட்டுள்ளது:

நமது குரு பரம்பரையில் சுகருக்கு சிறப்பான இடம் உண்டு.

ஸ்ரீ சதாசிவன் - ஸ்ரீமன் நாராயணன் - சதுர் முக ப்ரஹ்மா - வசிஷ்டர் - சக்தி - பராசரர் - வ்யாஸர் - சுக ப்ரஹ்மம் - கௌட பாதர் - கோவிந்தா பகவத் பாதர் - ஸ்ரீ ஆதி சங்கராச்சார்யர் என்று வருகிறது.

தினமும் அதி காலையில் இந்த குரு பரம்பரையை நினைத்து வணங்கினால் சகல தேவதைகளை வணங்கிய பலன் கிடைக்கும்.

இறவா வரம் பெற்ற சிரஞ்சீவி மார்க்கண்டேயன் இவரது சீடன். இவரது மற்றொரு சீடர் கௌடபாதர். அவரது சீடர் கோவிந்த பகவத் பாதர். அவரது பிரதான சீடர் ஆதி சங்கரர்.

அர்ஜுனனின் பேரனும் அபிமன்யுவின் மகனுமான பரீஷத்து, ஓர் முனிவரின் சாபத்தால் ஏழு நாட்களில் உயிர் போகும் என்பதறிந்து, அவனுக்கு சப்தமாகமாக (7 நாட்களும் க்ரம பாராயணம்) செய்வித்து ஸ்ரீ வைகுண்ட பிராப்தி அளித்த பொழுது அவருக்கு வயது 16 மட்டுமே.

அதன்படியே இன்றும் உபன்யாசகர்கள் "ஸப்தாஹம்' - அதாவது ஏழு நாள்களில் பாகவதம் பிரவசனம் - செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள் என்பர்.

சப்த ரிஷிகளே எழுந்து நின்று மரியாதையை செலுத்தும் அளவிற்கு அபரோக்ஷ மகா மகா ஞானி.

இன்று ஸ்ரீமத் பாகவத சப்தாக பாராயணம் என்ற முறைக்கு அன்றே வித்திட்ட ஒரே ரிஷி ஸ்ரீ சுக பிரம்மம்தான்.

இவர் ஒருவரால்தான் ஸ்ரீமன் நாராயணனின் அனந்த கல்யாண குணங்களையும், விசேஷங்களையும் மற்றும் லீலைகளையும் கூறும் ஸ்ரீமத் பாகவதம் என்னும் மகா காவியம் நமக்கு கிடைத்தது.

இந்து தர்மத்தை நிலைக்க செய்ததில் பெரும் பங்களித்த ஆதி சங்கரரின் குருவுக்கு குருவானவர் சுகப்பிரம்ம ரிஷி.

தமிழகத்தில் சேலத்தில் உள்ள சிவன் கோயில் மூலவர் இவரால் வழிபடப்பட்டவர். அதனால் அந்த இறைவனின் திருநாமம் சுகவனேஸ்வரர் ஆனது.

இக்கோயிலில் சுகப்பிரம்ம ரிஷிக்கு தனி சந்நிதி உண்டு.

சேலம் மாவட்டம்,
மேட்டூர் வட்டத்தில் தெத்திகிரிப்பட்டி கிராமத்தில் உள்ள
அபய ஆஞ்சநேயர் ஆலயத்திலும் சுகருக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது.

ஓம் வேதாத்மஹாய வித்மஹே

வியாச புத்ராய தீமஹி;

தந்நோ சுகர் ப்ரசோதயாத்!

சுகரூபாய வித்மஹே சுபீக்ஷ காரகாய தீமஹி
தன்னோ சுகப்பிரம்ம ப்ரசோதயாத்!

சுகப்பிரம்ம மகரிஷி, நாடியில் வந்து அருளிய ஸ்லோகம்

ஸ்ரீ வித்யா ரூபிணி; சரஸ்வதி; சகலகலாவல்லி;
சாரபிம்பாதரி; சாரதா தேவி; சாஸ்திரவல்லி;
வீணா புஸ்தக தாரிணி;
வாணி; கமலபாணி; வாக்தேவி: வரதாயாகி;

புஸ்தக ஹஸ்தே; நமோஸ்துதே!

மேற்கண்ட ஸ்லோகத்தை தினமும் மூன்று முறை குழந்தைகளை ஜெபம் பண்ணைச் சொல்லுங்கள். குழந்தைகள் படித்தவற்றை மனதில் வைத்துக்கொள்ளவும், மனதில் நின்றவற்றை தேர்வில் எழுதி நல்ல மதிப்பெண்கள் வாங்கவும், இது சரஸ்வதி தேவியின் அருளை பெற்றுத் தரும்.
 

Latest ads

Back
Top