I have posted long back about this in this forum. Copy pasting it again for easy reference:
..............................
ஒன்றறி வதுவே யுற்றறி வதுவே
இரண்டறி வதுவே யதனொடு நாவே
மூன்றறி வதுவே யவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே யவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே யவற்றொடு செவியே
ஆறறி வதுவே யவற்றொடு மனனே
நேரிதி னுணர்ந்தோர் நெறிப்படுத் தினரே என்கிறார், தொல்காப்பியர்.
ஓரறிவுயிர்:
மெய்யினால் உணரும் உணர்வுடைய புல், மரம் முதலியவற்றை ஓரறிவு உயிர்களாகக் கூறுவர்.
ஈரறிவுயிர்:
மெய்யினால் உணர்ந்து கொள்வதுடன் வாயினால் உணரும் சுவை உணர்வுடையவைகள் ஈரறிவு உயிர்களாகும்.
சங்கு, நத்தை, அலகு, நொள்ளை என்பனவும் கொள்ளலாம் என்பது இளம்பூரணர் கருத்து.
மூவறிவுயிர்:
தொடுதல், சுவைத்தல் என்ற இரண்டு உணர்வுடன் மூக்கினால் உணர்ந்து கொள்ளும் திறன் படைத்தவைகள் மூவறிவு உயிர்களாகும்
சிதலும், எறும்பும் உற்றுணர்வும் நாவுணர்வும் மூக்குமுடையனவாதலால் மூவறிவுயிராகும்.
நான்கறிவுயிர்:
தொடுதல், சுவைத்தல், நுகர்தல் என்ற மூன்று உணர்வுடன் பார்த்தல் திறன் படைத்தவைகள் நான்கறிவுயிர்களாகும்.
நண்டிற்கும் தும்பிக்கும் செவியுணர்வு ஒழித்து ஒழிந்த நான்கு உணர்வுகளும் உள.
ஐயறிவுயிர்:
தொடுதல், சுவைத்தல், நுகர்தல், பார்த்தல் என்ற நான்கு உணர்வுடன் கேட்டல் திறன் படைத்தவைகள் ஐயறிவுயிர்களாகும்.
மாவும் மாக்களும் ஐயறி வினவே. மாவென்பன நாற்கால் விலங்கு. மாக்களெனப்படுவார் மனவுணர்ச்சியில்லாதவர்.
ஆறறிவுயிர்:
ஐந்து அறிவோடு பகுத்தறிவும் திறன் படைத்தவன் மக்கள் பகுத்தறியும் திறன் அற்றவர்களை மாக்கள் என்று அழைப்பர்.
தொல்காப்பியர் மரபியலுள் ஒன்று முதல் ஆறறிவு படைத்த உயிரினங்களின் இயல்பையும் அவ்வுயிரினங்கள் தொடர்பான
மரபு வழிப்பட்ட பெயரினங்களையும் ஆராய்ந்து பல அரிய உண்மைகளைக் கூறுகிறார். இச்செய்திகள் மூலம்
தொல்காப்பியரின் உயிரியல் அறிவு தொடர்பான சிந்தனைகளை விளங்கிக் கொள்ள முடிகிறது.
அறிவியல் வளராத பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உயிர்களின் இனம், பெயர், பாகுபாடு, அறிவு போன்றவை குறித்து
ஆராய்ந்து தெளிவாக உணர்த்திய தொல்காப்பியனாரின் புலமை வியப்புக்குரியது.