• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Aadi Uthradam 2021

பரமாசார்யர் ஆளவந்தார் திருநட்சித்திரம்
ஆடி உத்திராடம்

சோழ நாட்டின் மன்னரான ஆளவந்தார் ராஜ்ய பரிபாலனத்தில் முழுதும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.அதனால் சம்பிரதாய நிர்வாகத்தில் மயர்வுற்று இருந்தார்.ஆசார்யர் மணக்கால் நம்பி அவரைத் திருத்தி சம்பிரதாய விஷ்யங்களில் ஈடுபடுத்த விளைந்தார்.

ஆனால் மன்னரைச் சென்று சந்திக்க ஒரு சாதாரண மனிதரான அவருக்குப் பல தடைகள். எனவே அவர் ஒரு புதிய யுக்தியைக் கையாண்டார்.

தூதுவளைக் கீரையை அரண்மனைச் சமையல் அறைக்கு நாளும் கொண்டு கொடுத்து வந்தார்.அந்தத் தூதுவளைக் கீரையை மன்னர் ஆளவந்தார் மிக விரும்பி உட்கொண்டார்.ஆறு மாதம் தொடர்ந்து கீரையைக் கொடுத்து வந்த நம்பிகள் சில நாட்கள் கொடுக்காமல் விட்டு விட்டார்.ஏன் கீரை சமைக்க வில்லை,என மன்னர் கேட்க,சமையல்காரர் எப்போதும் கீரை கொடுக்கும் ஒரு வயதான ஸ்ரீவைஷ்ணவர்,சில நாட்க ளாக வருவதில்லை என்று கூறினார்.

.உடனே அவர் படை வீரர்களை அனுப்பி அவரை எங்கிருந்தாலும் அழைத்து வரச் சொன்னார். அவ்வாறாக அரண்மனைக்கு வந்த அவரிடம் மன்னர் அவர் யார் என்பது போன்ற விவரங்களைக் கேட்டார். அப்போது பேசிய நம்பிகளின் மேதாவிலாசத்தைக் கண்ட ஆளவந்தார் அவர் நாளும் வந்து தம்மைச் சந்தித்து உரையாடலாம் என்றார். நம்பிகளும் நாளும் வந்து தூதுவளையைக் கொடுத்து விட்டு மன்னரிடம் சில நல்வார்த்தைகள் உபதேசிப்பார்.இப்படியாக பகவத் கீதையின் 18 அத்யாயங்களையும் உபதேசித்தார்.கீதையைக் கேட்கக்,கேட்ட ஆளவந்தாரின் மனம் மாற ஆரம்பித்தது. நம்பிகள் சரமஸ்லோகத்தின் அர்த்தத்தை விரிவாக உரைத்தவுடன் ஆளவந்தார் தாம் வாழும் வாழ்க்கை அர்த்தமற்றது என்று உணர்ந்தார்.இத்தகைய நல்ல உபதேசங்கள் செய்த நம்பிகளுக்கு சிறந்த சம்பாவனை செய்யவிரும்பினார். ஆனால் நம்பிகளோ தமக்கு எதுவும் வேண்டாமென்றும்,ஆளவந்தாரின் பாட்டனார் விட்டுச் சென்ற விலைமதிக்க முடியாத குலதனம் அவரிடம் இருப்பதாகவும்,அதை இவருக்கு முறையாகக் கொடுக்கவே தூதுவளை கொண்டு, தூது வந்ததாகவும் கூறினார்.

குலதனம் கண்டு,பிறதனம்
மறுகணம் விட்ட,மஹாகணம்!


ஆளவந்தார் உடனே அந்தக் குலதனத்தைக் காண வேண்டும் அன்று விழைய, மணக்கால் நம்பி அவரை அழைத்துக்கொண்டு நேராக ஸ்ரீரங்கம் பெரியகோவில் வந்து,பிரணவாகார விமானக் கர்ப்பஹ்ருகத்துள் புகுந்து அரவணையில் பள்ளி கொண்டிருந்த ஸ்ரீரங்கநாதப் பெருமாள் முன் நிறுத்தினார். திருப்பாணாழ்வாரைப் பேதமை செய்த "கரியவாகிப் புடை
பரந்து,மிளிர்ந்துசெவ்வரியோடி
நீண்ட அப் பெரிய வாய கண்கள்" ஆளவந்தாரையும் பேதமை செய்தன. திருக்கமல பாதங்கள் வந்து இவர் கண்ணிலும் உள்ளன ஒக்கியது."என் அமுதினைக்(குலதனத்தை) கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே" என்ற திருப்பாணாழ்வார் நிலையில் இருந்த ஆளவந்தார் மீண்டும் நாட்டுக்கு/ அரசவைக்குத் திரும்பவில்லை. மன்னரான தம் திரண்ட சொத்துக்களை நினைக்க வில்லை.துறவறம் பூண்டு,
ஸ்ரீரங்கமே இருப்பு, பெரியபெருமாள் கைங்கர்யமே காலட்சேபம் என்றிருந்து விட்டார்.நம்பிகள் பவிஷ்யதாசார்யர் ராமாநுஜர் விக்ரகத்தையும் ஆளவந்தாரிடம் ஒப்படைத்தார்.

யோகமும்,யாகமும்:

நாதமுனிகள் நியமனப்படி, குருகைக்
காவலப்பனிடமிருந்து(நாதமுனிகளிட
மிருந்து யோகக்கலையைக் கற்றறிந்த சீடர்) அஷ்டாங்க யோகத்தைக் கற்றுக் கொள்ளுமாறு ஆளவந்தாரிடம் கூறினார் நம்பிகள்.ஆளவந்தார் குருகைக் காவலப்பனைச் சேவிக்கச் சென்ற போது (ஜெயங்கொண்டம் -காட்டுமன்னார் கோவில் வழியில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பக்கத்தில்) அவர் பகவானைத் தியானித்துயோகநிலையில்
இருந்தார். அவரது யோகத்துக்கு இடையூறு செய்யக் கூடாது என்று வெளியே காத்திருந்தார். அப்போது உள்ளிருந்து குருகைக்காவலப்பன் "இங்கே சொட்டைக் குலத்தைத் சேர்ந்தவர் யாரேனும் வந்துள்ளனரோ ?" என்று கேட்டார். சொட்டைக் குலம் நாதமுனிகளின் குலம்.ஆச்சரியமடைந்த ஆளவந்தார் 'அடியேன் தாசன்' என்று உள்ளே சென்று அவருக்குத் தண்டம் சமர்ப்பித்தார். வெளியே நின்றிருந்த தம்மை சொட்டைக் குலத்தினர் என்று எவ்வாறு அறிந்தார் என்று கேட்டார்.
அதற்குக் குருகைக் காவலப்பன் தாம் யோகத்தில் பரமபதத்தில் உள்ள ஸ்ரீமந்நாராயணனை அனுபவித்துக் கொண்டிருக்கும் போது,பகவான் எதிரில் இருக்கும் தம்மை விட்டு,தம் தோள்களை அழுத்திக் கொண்டு எட்டி,எம்பிப் பார்த்தார்.பகவானுக்குப் பிரியமான தம் ஆசார்யர் நாதமுனிகள் குலத்திலிருந்து யாராவது வந்திருந்தால் மட்டுமே, பகவான் கவனம் தம்மை விட்டு அவர் மீது திரும்பும்!!! என்றார்.

ஆளவந்தாருக்கு அப்போது யோகக்கலை கற்றுத்தரத் தருணம்வரவில்லை என்றும், பிறிதொரு நாளில்,தாம் பரமபதம் எய்துவதற்கு சில நாட்கள் முன் என்று,
தாம் பரமபதம் எய்தும் மாதம்,நாள், கிழமை திதி எல்லாம் குறித்துக்கொடுத்து
வருமாறு நியமனம் செய்தார். ஆனால் அந்த நாளில் ஆளவந்தார்,
திருவனந்தபுரம் ஸ்ரீஅனந்த பத்மநாபர் கோவிலில் பெருமாளைச் சேவித்துக் கொண்டிருந்தார். குருகைக் காவலப்பன் குறித்துக் கொடுத்த ஓலைச்சுவடி நினைவுக்கு வர உடனே அதை எடுத்துப் பார்த்தவர் அன்று தான் அவர் பரமபதம் எய்தும் நாள் என்றறிந்து மிக வருந்தினார்.யோகக்கலையை அவர் பெற முடியவில்லை. அங்கிருந்து ஸ்ரீரங்கம் புறப்பட்டு வந்து சேர்ந்தார்.

யோகக் கலையை ஆளவந்தார் கற்க முடியாமல் செய்ததும் பெருமாளின் திருவுள்ளமே. நாதமுனிகள் உய்யக் கொண்டாரிடம், யோகக்கலையை கற்றுத்தர முன்வந்த போது அவர் மறுத்து விட குருகைக் காவலப்பனுக்குக் கற்றுத் தந்தார்.அவரும் யாருக்கும் கற்றுத்
தராமல், பரமபதம் எய்தியதால் அத்துடன் யோகக்கலை (நாதமுனிகள் வகுத்த சம்பிரதாயப்படியான யோகக்கலை) முடிந்தது.ஜகதாசார்யர் ராமாநுஜரும் தம் உபதேசங்களில் யோகத்தைப் பற்றிச்சொல்லவில்லை. அவர் சீடர்கள் யாருக்கும் அவர் கற்றுத்தரவில்லை.
யோகம் என்பது பகவானை அடையும் ஒரு உபாயமாகக் கொள்ளப் படும்.
ஆனால் நம் சம்பிரதாய த்தில் உபாயமும்,பகவானே!
உபேயமும் பகவானே!!ஆழ்வார்களும்,ஆசார்யர்களும் இந்த உபாய,உபேயத்தையே வலியுறுத்தினர்.
தம்மை அடைய விரும்புவோர் தம்மைத் தவிர யோகம் முதலான பிற உபாயங்களில் ஈடுபடத் தேவையில்லை என்பதை பகவான் மீண்டும் இவ்வாறு உணர்த்தினார் போலும்!! அவர் மீது பக்தி செலுத்துவதற்காகச் செய்யப்படும் திருவாராதனை,பிரபந்தம் சேவித்தல், நாம சங்கீர்த்தனம்,சத் சங்கம்,
ததீயாராதனை இவை எல்லாமே ஒரு வகை யாகமே.எனவே யோகம் வேண்டாம்;யாகமே போதும்!!

"அனந்தபுரம் நடந்த"அநுஹாரம்:

ஒரு முறை ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் முன்பு திருவரங்கப் பெருமாள் அரையர்(ஆளவந்தாரின் பூர்வாஸ்ரமத் திருக்குமாரர்) திருவாய்மொழிப் பாசுரம் 10-2-8

"கடுவினை களையலாகும்
காமனைப் பயந்தகாளை,
இடவகை கொண்டதென்பர்
'எழிலணி யனந்தபுரம்'
படமுடை யரவில்பள்ளி
பயின்றவன் பாதம்காண,
'நடமினோ நமர்களுள்ளீர்!'
நாமும் உமக்கறியச் சொன்னோம்."

என்னும் பாசுரத்தை உணர்ச்சிகரமாக,அபிநயம் செய்து பாடினார்.அங்கு எழுந்தருளியிருந்த ஆசார்யர் ஆளவந்தாரின் திருமுகத்தைப் பார்த்துக்கொண்டே,"நடமினோ,நமர்களுள்ளீர்" என்று மூன்று முறை சேவித்தார்.
ஆளவந்தார் நம்மாழ்வார் தமக்காகவே சொன்னதாகப் பாவித்து சீடர்களையும் (நமர்கள்)அழைத்துக் கொண்டு பெரிய கோவிலிலிருந்து உடனே அனந்தபுரம் நோக்கிப்புறப்பட்டு விட்டார்!! அவருடைய மடத்துக்குக் கூடச் செல்லாமல் புறப்பட்டார்!(அப்படி அங்கு சென்ற போது தான்,குருகைக் காவலப்பன் சொன்ன நாளைத் தவற விட்டார்.)

அற்புதமான அருள்மொழிகள்:

பரமாசார்யர் ஆளவந்தாரின் சரம தசையில், அவருடைய சீடர்கள் தாங்கள் உஜ்ஜீவனம் அடைய, உபதேசித்து அருளுமாறு வேண்டிக் கொண்டனர்.
அப்போது அவர் அருளிய உபதேச மொழிகள்:

1.திவ்யதேசத்தில் கைங்கர்யம் பண்ணுவது மற்றும் அவற்றின் பெருமைகளைச் சிந்தனை செய்வது தான் நமது வாழ்க்கையாக(பொழுது போக்காக) அமையவேண்டும்.

2 .பெரிய பெருமாளுடைய திருவடித்தாமரைகளில் வீணையும்,
கையுமாய் எழுந்தருளியிருக்கும் திருப்பாணாழ்வாரை (திருவடியிலிருந்து திருமுடி வரை) நாம் எப்பொழுதும் வணங்கவேண்டும்.தாம் திருப்பாணாழ்வாரை மட்டுமே உபாயமாகவும், உபேயமாகவும் சிந்தனை செய்து கொண்டிருப்பதாகக் கூறினார். அதோடு அவர் திருப்பாணாழ்வார் (என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே என்று பெரிய பெருமாளையே பாடி,அவர் திருவடியில் சேர்ந்தவர்)குறும்பறுத்த நம்பி (களி மண்ணில் புஷ்பம் செய்து திருவேங்கடமுடையானுக்குச் ஸமர்ப்பித்தவர்) மற்றும் திருக்கச்சி நம்பியை (காஞ்சி தேவப்பெருமாளுக்கு திருவாலவட்டக் கைங்கர்யம் செய்தவர்) ஒரே நிலையில் ஒப்பிட்டு பார்ப்பதாகக் கூறினார்.

3.ஒரு ப்ரபன்னன் தன்னுடைய ஆத்ம யாத்திரைக்கோ (பகவத் விஷ்யம்) அல்லது தேக யாத்திரைக்கோ (லௌகீகம்) கவலைப்படக்கூடாது. ஏனென்றால், ஆத்மா எம்பெருமானுடைய அத்யந்த பரதந்த்ரன்; அதனால் எம்பெருமான் ஆத்ம யாத்திரையை பார்த்துக்கொள்வார். நமது கர்மவினையே தேஹத்திற்குக் காரணம் என்பதால் நம் பாப/புண்யங்கள் தேஹ யாத்திரையை நடத்திச்செல்லும். அதனால் இவை இரண்டிற்குமே நாம் கவலைப்பட அவசியம் இல்லை.

4.பாகவதர்களுக்கு இடையே வேறுபாடுகளை நாம் பார்க்கக்கூடாது. எம்பெருமானை மதிப்பது போல் பாகவதர்களை நாம் மதிக்க வேண்டும்.

5.எப்படி எம்பெருமானுடைய சரணாம்ருதத்தை ஒப்புக்கொள்கிறோ
மோ, அதே போல் ஆசார்யருடைய
ஸ்ரீ பாத தீர்த்ததையும் எற்றுக்கோள்ள வேண்டும்.

6.ஆசார்ய புருஷர்கள் ஸ்ரீ பாத தீர்த்தம் கொடுக்கும் பொழுது, நமது பூர்வாசார்யர்களுடைய சார்பில் வாக்கிய குருபரம்பரை / த்வய மஹாமந்த்ரத்தை அனுசந்தித்துக்கோண்டே கொடுக்க வேண்டும்.

(--அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)

படங்கள்:
காட்டுமன்னார் கோவில் ஆளவந்தார் திருநட்சித்திர உற்சவம்(பழைய படங்கள்)
1 .ஆளவந்தார் புறப்பாடு.
2.வீரநாராயணப் பெருமாளை எதிர்கொண்டழைக்கும் ஆளவந்தார்.
3.ஸ்ரீதேவி,பூதேவி சமேத ஸ்ரீவீரநாராயணப் பெருமாள்,ஸ்ரீமந் நாதமுனிகள்,ஆளவந்தார்.
4 .திருமஞ்சனம்


1627110674971.png

1627110683858.png

1627110691038.png

1627110698121.png
 
இன்று ஆடி மாத உத்திராட நக்ஷத்திரம். சுப நாள். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு சீரிய நாள். ஆச்சார்யன் ஆளவந்தார் அவதார திருநக்ஷத்திரம் ..

ஆளவந்தார் கிபி-976ம் ஆண்டு ஆடி மாதம் உத்தராடம் கூடிய வெள்ளிக்கிழமையில் வீரநாராயணபுரத்தில் அவதரித்தார். நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுத்த நமக்கு அளித்த நாதமுனிகளின் புதல்வர் ஸ்ரீஈஸ்வர முனிகள். அவரது குழந்தைதான் ஆளவந்தாரான யமுனைத்துறைவர் எனப்படும் யாமுனாசாரியர். நாதமுனிகளின் பேரன்.

. நம்முடைய தர்சனத்தில், ஆளவந்தார் வித்வத்சார்வபௌமர்.

திருவரங்கத்து அமுதனார் தமது 'இராமானுச நூற்றந்தாதியில்' யமுனைத்துறைவனின் திருவடி சம்பந்தத்தால், நம் உடையவருக்கே சிறப்பு என அருளிச் செய்துள்ளார். :

'"நிதியைப் பொழியும் முகில்என்று* நீசர்தம் வாசல்பற்றித்
துதிகற்றுலகில் துவள்கின்றிலேன், இனித்* தூய்நெறிசேர்
எதிகட்கிறைவன் யமுனைத் துறைவன் இணையடியாம்
கதி பெற்றுடைய* இராமானுசனென்னைக் காத்தனனே."

- மிக உயர்ந்த முனிவர்களுக்கு எல்லாம் தலைவரான ஆளவந்தாருடைய திருவடிகளை உபாயமாகப் பெற்று, இவ்வுலகத்துக்கே தலைவரான எம்பெருமானார் நம்மைக் காத்து அருள்வார்.

நாதமுனிகளும், யாமுனாச்சார்யராகிய ஆளவந்தாரும் பிறந்த திருத்தலம், ‘காட்டு மன்னனார் கோவில்’. வீரநாராயணபுரம் என சோழர்கள் காலத்திலும் தற்கால வீராணம் ஏரி உள்ள இடத்தில் உள்ள கோவில் ஆளவந்தாரின் அவதார திருத்தலம். இளம்வயதிலேயே வித்வஜ்ஜன கோலாகலர் என்றும் அக்கியாழ்வான் என்றும் புகழ்பெற்ற அறிஞரை வாதத்தில் வென்றார். தனது பன்னிரண்டாம் வயதிலேயே இச்சிறப்பு பெற்றதால் ஆளவந்தார் என புகழ் பெற்றார்.

வாதத்தில் வெற்றி பெற்றதால் கிடைக்கப்பெற்ற ராஜ்ஜியத்தை நிர்வகித்து வந்த காலத்தில், மணக்கால் நம்பி அவரை மறுபடி சம்பிரதாயப்பணிக்கு திரும்பப்பெற தினமும் தூதுவளைக் கீரையை கொண்டு வந்து கொடுக்க ஆரம்பித்தார். ஒரு சமயத்தில் இதனை நிறுத்தி, ஆளவந்தார் இவரை சந்திக்குமாறு சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொண்டு, நம்பி அவரிடம் உங்கள் பாட்டனார் தேடிவைத்த நிதி ஒன்று என்னிடம் இருக்கிறது அதை உம்மிடம் அளிப்பதற்கு இங்கே வந்துவிட்டுப் போவதை தடை செய்யாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். அரண்மனைக்கு சென்று கீதையின் உட்பொருளை அவருக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தவுடன், படிப்படியாக ஆளவந்தாருக்கு ’பரமனே உபேயம், பரமனே உபாயமும்’ என்பதை புரியவைத்தார். பிறகு ஆளவந்தாரை ஸ்ரீரங்கம் அழைத்துச் சென்று பெரியபெருமாளைக் காட்டி திருவரங்கனே குலதனம் என்று நம்பிகள் ஒப்படைத்தார். ஆளவந்தாரும் தம் போக வாழ்க்கையை அக்கணமே துறந்து துறவியாகி ஆன்மீகப்பேரரசரானார்.

ஆளவந்தார் அருளிச் செய்த நூல்கள் " எட்டு" - இவற்றுள் ஸ்தோத்ர ரத்னம், சதுஸ்லோகி, சித்தித்ரயம், ஸ்ரீகீதார்த்த ஸங்க்ரஹம், ஆகம ப்ராமாண்யம், மகாபுருஷ நிர்ணயம் இவை முக்கியமானவை.

ஸ்ரீ ஆளவந்தார் திருவடிகளே சரணம்

1627111063681.png
 
மறை நான்கும் ஓருருவில் மகிழ்ந்து கற்றான் வாழியே!!
(ஸ்ரீஆளவந்தார் திருநட்சித்திரம்--ஆடி உத்திராடம்-இன்று 24/07/21--பதிவு 4)

மறை நான்கும் கற்ற பரமாசார்யர் மறையின் சாரங்களாக 8 கிரந்தங்களை நமக்கு அருளிச் செய்துள்ளார்.

1.ஸ்தோத்ர ரத்னம்: எம்பெருமானை ஸ்தோத்ரம்/துதி செய்யும் மிகச் சிறந்த 65 ஸ்தோத்ரங்கள் கொண்ட நூல். எம்பெருமானார்,கூரத்தாழ்வான்,
பராசரபட்டர்,வேதாந்த தேசிகன் ஆகியோர் இந்த கிரந்தத்தின் அடிப்படையில் பல ஸ்தோத்ரங்களைப் பாடியுள்ளனர். பூர்வாசார்யர்களால் மிகவும் எடுத்துரைக்கப்பட்ட கிரந்தம்.

2.சதுஸ்லோகி: பெரிய பிராட்டியாரைப் போற்றிப் பாடப்பட்ட நான்கு ஸ்லோகங்கள் மட்டுமே கொண்ட நந்நூல்.

3.ஈஸ்வர சித்தி(சித்திதிரயம்):
வேதாந்த தத்துவ விசாரமான இந்நூல்,உடையவர் ஸ்ரீபாஷ்யம் எழுதுவதற்குப் பெரிதும் துணையாக இருந்தது.

4:ஆத்ம சித்தி(ஆத்மா,ஜீவன் பற்றிய விளக்கம்)
5.ஸம்வித் சித்தி:(ஞானம்,பிரத்யட்ச அறிவு பற்றி)

ஈஸ்வர சித்தியுடன் இந்த இரண்டும் சேர்ந்து "சித்திதிரயம்"என்று அறியப்படுகின்றன.ஆத்ம சித்தியும்,
ஈஸ்வர சித்தியும் ஸ்லோகங்கள்,
உரைநடை இரண்டிலும் உள்ளது.ஸம்வித் சித்தி முழுதும் ஸ்லோகங்கள். இவை மூன்றுமே அக்காலத்தில் பிரசித்தி பெற்றிருந்த அத்வைத சித்தாந்த திரயங்களான ப்ரஹ்ம சித்தி,இஷ்ட சித்தி, நிஷ்கர்மசித்தி ஆகியவற்றை மறுதலிக்கும் விசிஷ்டாத்வைத வாதங்களாக அமைந்தன.

6.ஸ்ரீ கீதார்த்த ஸங்ரஹம்:
மணக்கால் நம்பிகளிடம் கீதை கேட்டதே ஆளவந்தாரின் வாழ்வில் ஒரு திருப்பு முனை யாக அமைந்தது. அதன் அடிப்படையில் "கீதார்த்த ஸங்ரஹம்" இயற்றினார்.இந்த கிரந்தம் ராமாநுஜர் "கீதாபாஷ்யம்"இயற்ற ஏதுவானது.

7.மஹா புருஷ நிர்ணயம்: ஸ்ரீமந் நாராயணனின் பரத்துவத்தை நிர்ணயிக்கும் நூல்.இந்த நூலின் வழிகாட்டியுடன்,உடையவர்
திருவேங்கடவர் முன்
"வேதார்த்த ஸங்ரஹம்" என்னும் ஸ்லோகங்களை பாடினார்.
யக்ஞமூர்த்தியை வாதத்தில் வெல்வதற்கு இந்த கிரந்தத்தில் உள்ள மாயாவாத க் கண்டனம் என்னும் பகுதியை எடுத்து வாதிடுமாறு தேவப்பெருமாள் ராமானுஜர் கனவில் உரைத்தார்.

8.ஆகம ப்ராமண்யம்: பாஞ்சராத்ர ஆகமத்தை விரிவாக விளக்கும் நூல்.பல திவ்ய தேசங்களிலும் பாஞ்சராத்ர ஆகமப்படி திருவாராதனைக்
கிரமங்களை ஏற்படுத்த உடையவருக்கு உதவியது.

ஸ்தோத்ர ரத்னம்:

ஸ்தோத்ர ரத்னத்தில் இருந்து சில ரத்னங்களைப் பார்ப்போம்:

குலபதி நம்மாழ்வார்:(5)

முதல் மூன்று ஸ்தோத்ரங்களில் மகா ஆசார்யரும்,தம் தாத்தாவும் ஆன ஸ்ரீமந்
நாதமுனிகளின் பெருமை பாடுகிறார்.4-ஆவது ஸ்தோத்ரத்தில் விஷ்ணு
புராணம் இயற்றிய ஸ்ரீபராசர மகரிஷியின் புகழ் பாடுகிறார்.
5 ஆவது ஸ்தோத்ரத்தில்,
நாதமுனிகளுக்கு நாலாயிரம் நல்கிய நம்மாழ்வாரைப் போற்றுகிறார்.
பொதுத்தனியன்களில் 4 ஆவது தனியனான இந்த ஸ்லோகத்தை நாம் நாளும் சேவிக்கிறோம்:

"மாதா பிதா யுவதய :
தனயா விபூதி : ஸர்வம்
யதேவ நியமேன மத அந்வயானாம் ஆத்யஸ்ய ந :குலபதே :
வகுள அபிராமம்
ஸ்ரீமத் தத அகங்ரியுளம் ப்ரணமாமி மூர்த்னா!!"

"என்னைச் சேர்ந்தவர்களுக்கு எப்போதும்,எக்காலத்தும், தாய், தந்தை, தாரம்,புத்ரர்கள், செல்வம் எல்லாமாக விளங்கும், ப்ரபன்ன ஜன ஸந்தான கூடஸ்தராகிய நம் குலபதியான ஸ்வாமி நம்மாழ்வாரின்,மகிழம்பூ மாலையால் அலங்கரிக்கப் பட்ட சோபையுடைய திருவடிகளைத் தலையால் வணங்குகிறேன்"

"சேலேய் கன்னியரும், பெருஞ் செல்வமும்,நன்மக்களும்,
மேலாத்தாய்தந்தையரும்,அவரேயினியாவரே"(திருவாய்மொழி 5-1-8)ல் நம்மாழ்வார் எம்பெருமானே எல்லாம் என்கிறார்.இதையே ஆளவந்தார்,
நம்மாழ்வாரே எல்லாம் என்கிறார். என்னைச் சேர்ந்தவர்களுக்கு என்று அறுதியிட்டதால் அவருக்கு முன்னோரும்,பின்னோரும்,
இன்னும் வரப்போகும் சந்ததிகள் அனைவருமே அவரைச் சேர்ந்தவர்களே! நம் அனைவருக்கும் குலதெய்வம் நம்மாழ்வார் என்றும், அவருடைய திருவடிகளே நமக்குப் புகலிடம் என்றும் அறுதியிடுகிறார்.

நம்மாழ்வாரின் திருவடிநிலைகளாக ஆராதிக்கப்படும் ஸ்ரீராமாநுஜரே இவை எல்லாம் என்கிறார் மணவாளமாமுனிகள்
"தந்தை நற்றாய் தாரம் தனயர் பெருஞ்செல்வம்
என் தனுக்கு நீயே எதிராசா ! -- இந்த நிலைக்கு,
ஏலாத இவ்வுடலை,இன்றே அறுத்து
பாராதது என்னோ பகர் ?"
(ஆர்த்திப்ரபந்தம் 3).

அபராதங்களுக் கெல்லாம் இருப்பிடமானவன்:(63)

"அமர்யாத ஷூத்ரச் சலமதி அஸஷுயா ப்ரசவபூ:
க்ருதக்நோ துர்மாநி ஸமரபரவேசோ வஞ்சனப்ர:
ந்ருசம்ஸ: பாபிஷ்ட:கதமஹமிதோ து:கஜலதே:
அபாராதுதீர்ணத் ஸவ பரிசரேயம் சரணயோ!!"

1.வரம்பு மீறியவனும்,
2.அற்ப விஷயங்களில் சாபல்யமுடையவனும்,
3.நின்றவா நில்லா நெஞ்சினை யுடையவனும்,
4.பொறாமையின் பிறப்பிடமானவனும்,
5.நன்றி கெட்டவனும்,
6.துர்க அஹங்காரமுள்ளவனும்,
7.காமத்துக்கு வசப்பட்டவனும்,
8.பிறரை வஞ்சிப்பவனும்,
9.கொடுந்தொழில் புரிபவனும்,
10.மஹாபாபியும்

ஆன அடியேன் கங்குகரையற்ற இந்தத் துன்பக்கடலில் நின்றும்,
கரை சேர்ந்தவனாய் நின் திருவடிகளில் எங்ஙனே கைங்கர்யம் செய்யப் பெறுவேன்?"

அரசு அதிகாரத்தையும்,சர்வ சம்பத்தை யும் முற்றும் துறந்து, துறவியாகி, பெரியபெருமாள் கைங்கர்யத்துக்கே தம்மை முழுதும் அர்ப்பணித்துக் கொண்ட ஆசார்யப்பெருமான் ஆளவந்தாரே தம்மைப் பற்றி இப்படிச் சொல்கிறார் என்றால் நாம் எல்லாம் எங்கே நிற்பது???
இந்த ஸ்வாமி இந்த அபராதங்களில் எதையும் நினைத்துக் கூடப்
பார்த்திராதவர். ஆனால் அவர் தன்னைத் தானே இவ்வாறு தாழ்த்திச் சொல்வதன் மூலம் நமக்கெல்லாம் ஒரு உறுதியான நம்பிக்கை அளிக்கிறார். எம்பெருமான் திருவடிகளைச் சரணடைந்தால் அவர் நம்மை ஏற்றுக்கொண்டு அருள்வார் என்பதே.

இந்த நம்பிக்கையை 63,64 ஆவது ஸ்தோத்ரங்களில் எம்பெருமான் எப்படி ராமனாக வந்து, மகாபாவியான காகாஸுரனையும் மன்னித்து
ஏற்றதையும்,கண்ணனாக வந்து, அபச்சாரம் பல செய்த சிசுபாலனையும் மன்னித்ததையும் சொல்லி,
விபீஷணருக்கு ராமராக அளித்த பிரதிக்ஞை--("ஒரு காலே சரணாக அடைபவனுக்கும்,உனக்கே நாமாட் செய்வோம் என்று பிரார்த்திப்பவனுக்கும் அபயம் அளிக்கிறேன்.இது எனது கடமை")யையும் கூறி அடியேனும் அருள்புரிய உரியேன் அன்றோ?" என்று சொல்கிறார்.

கடைசியும்,65 ஆவதுமாகிய ஸ்லோகத்தில்,என்நடவடிக்கை
களைக் கவனியாமல்,ஸ்ரீமந் நாதமுனிகளின் மேன்மையைக் கடாட்சித்து அடியேனையும் அநுக்ரஹம் செய்தருள வேண்டும் என்று பிரார்த்தித்து முடிக்கிறார்.
நாதமுனிகளின்,ஆளவந்தாரின்,எம்பெருமானாரின், அஸ்மத் ஆசார்யரின் பிள்ளைகளான/சீடர்களான நம்மையும் எம்பெருமான், இந்த மஹானுபாவர்களின் மேன்மையைக் கடாட்சித்து, கடைத்தேற்றுவார் என்பது திண்ணம்!!

குரு பூர்ணிமா நந்நாளில்,பரம குரு
ஸ்ரீஆளவந்தாரின் திருநட்சித்திரம் அமைந்தது இந்த ஆண்டின் சிறப்பு !!!

ஸ்ரீஆளவந்தார் வாழித் திருநாமம்:

"மச்சணியும் மதிளரங்கம்வாழ்வித்தான் வாழியே!
மறை நான்கும் ஓருருவில்மகிழ்ந்துகற்றான் வாழியே!
பச்சையிட்ட ராமர்பதம்பகருமவன் வாழியே!
பாடியத்தோன் ஈடேறப்பார்வைசெய்தோன் வாழியே!
கச்சி நகர் மாயனிரு கழல்பணிந்தோன் வாழியே!
கடக உத்தராடத்துக்காலுதித்தான் வாழியே!
அச்சமற மனமகிழ்ச்சிஅணைந்திட்டான் வாழியே!
ஆளவந்தார் தாளிணைகள்
அனவரதம் வாழியே !!!"

(--அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)

படங்கள்:
1.ஸ்தோத்ர ரத்னம்.
மற்றவை: காட்டு மன்னார் கோயிலில் திருநட்சித்திர உற்சவம்.(2020)

1627111106493.png
 

Latest ads

Back
Top