• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Karaikal Ammaiyar

Status
Not open for further replies.
இறைவனுக்கு அம்மையார் சூட்டும் நாமாலை

இறைவனே தொல்லுலகுக்கு ஆதி. அவனே எவ்வுயிரும் தோற்றுவிப்பான். அழிப்பதும் அவனே. அவன் அருளே உலகெலாம் ஆள்விப்பது, பிறப்பறுப்பது, மெய்ப்பொருளை நோக்க வைப்பது. அவனே மூவேழுலகங்கள் ஆவான். அரி அரன் அயன் என்ற மும்மூர்த்தியும் அவனே.

பல பெருமைகளுக்குரியவனாக இருந்தும் தன் பெருமையை அறியாதவன் போல் எளிவந்த தன்மையனாக உள்ளான். அவனை எக்கோலத்திலும் உருவகம் செய்து கொள்ளலாம். எவ்வுருவிலும் வழிபடலாம். அவனைக் குறித்து எத்தகைய தவத்தை வேண்டுமானாலும் செய்யலாம். அவரவர் விருப்பப்படி அந்தந்தக் கோலத்தில் வந்து அருள் புரிபவன் அவன். எந்த முறைப்படி வழிபட்டாலும் ஈடுபாட்டுடன் சிந்தித்தால் தான் அடைய முடியும். அவனை அடைய வேறு குறுக்கு வழிகள் கிடையாது.
 
அம்மையாரின் அன்பு வழி

அம்மையாருக்கு இறைவன் மேல் அன்பு ஏற்பட்டது எப்பொழுது? பிறந்தது முதலே என்று அவர் கூறுகிறார். மழலை பேசத் தொடங்கியதிலிருந்தே இறைவனுக்கு நாமாலை சூட்டத் தொடங்கினார் அவர். இது பலனை எதிர்பார்த்த அன்பு அல்ல. என் துன்பம் தீர்ப்பாயாக என்று இறைவனிடம் வேண்டும் அவர், ‘எனக்கே அருளாவாறு என்கொல்’ என்று உரிமையோடு சண்டைக்குப் போகிறார். ஆனால், “இறைவன் என் துன்பத்தைக் களையாமல் மீண்டும் பிறக்க வைத்தாலும் என் அன்பு அறாது, அவனல்லாத பிறர்க்கு ஆளாக மாட்டேன், எழுபிறப்பும் அவனுக்கே ஆளாவேன்” என்கிறார். அவனுக்கு ஆட்பட்டோம் என்ற நினைவே இன்பம் தருகிறது அவருக்கு.

பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் (அற்புதத் திருவந்தாதி-1)

இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்
படரும் நெறிபணியா ரேனும்- சுடருருவில்
என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க்
கன்பறா தென்நெஞ் சவர்க்கு. (அ-2)

அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும்
அவர்க்கேநாம் அன்பாவ தல்லால்- பவர்ச்சடைமேல்
பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்
காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள். (அ-3)

பிறையும் புனலும் அனல் அரவுஞ் சூடும்
இறைவர் எமக்கிரங்கா ரேனுங்- கறைமிடற்ற
எந்தையார்க் காட்பட்டேம் என்றென் றிருக்குமே
எந்தையா உள்ள மிது. (அ-23)

தனக்கே அடியனாய்த் தன்னடைந்து வாழும்
எனக்கே அருளாவாறு என்கொல்- (அ-44)

இவ்வாறு, தான் அம்மானுக்கு ஆட்படக் கிடைத்த வாய்ப்பு, தன் தவப் பயனாய்க் கிடைத்தது என்றும் இது பெறற்கரிய பேறு என்றும் அவர் மகிழ்கிறார். “உன் அருளாலே மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன். உன்னை அன்பாலே போர்த்து நெஞ்சினுள் அடைத்து வைத்து விட்டேன். அதில் வேறு யாருக்கும் இடமில்லை. என் நெஞ்சம் நல்ல நெஞ்சம். தனக்கு நன்மை தருவது எது என்று அறிந்து கொண்டு விட்டது. அதனால் காலனையும் வென்றோம், கடுநரகம் கை கழன்றோம், பிறவிக் கடலை நீந்தி விட்டோம்” எனப் பெருமைப்படுகிறார். இந்தப் பெருமித உணர்ச்சி வளர்ந்து செருக்காகவே ஆகிவிட்டதாம். “எந்தையார்க்கு ஆட்செய்யப் பெற்ற இது கொலோ சிந்தையார்க்கு உள்ள செருக்கு” என்று தன் சிந்தையைப் பார்த்து வியக்கிறார்.

யானே தவமுடையேன் என்னெஞ்சே நன்னெஞ்சம்
...................................................
அம்மானுக் காளாயி னேன். (அ-7)

ஆயினேன் ஆள்வானுக் கன்றே பெறற்கரியன்
ஆயினேன் (அ-8)

……………………………………….அருளாலே
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் (அ-9)

தானே தனிநெஞ்சந் தன்னை யுயக்கொள்வான்,
தானே பெருஞ்சேமஞ் செய்யுமால் (அ-14)

இனியோ நாம்உய்ந்தோம் இறைவன் அருள்சேர்ந்தோம்
இனியோர் இடரில்லோம் நெஞ்சே- இனியோர்
வினைக்கடலை ஆக்குவிக்கும் மீளாப் பிறவிக்
கனைக்கடலை நீந்தினோம் காண். (அ-16)

மகிழ்தி மடநெஞ்சே மானுடரில் நீயும்
திகழ்தி பெருஞ்சேமஞ் சேர்ந்தாய் (அ-31)

எந்தையார்க் காட்செய்யப் பெற்ற இதுகொலோ
சிந்தையார்க் குள்ள செருக்கு. (அ- 79)
 
வேத அடிப்படையில் சைவம் வளர்த்தார்


சமண சாக்கிய சமயங்களின் கொள்கைகளில் சிலவற்றை அக்கால மக்களி்ல் எல்லாத் தரப்பினருமே ஏற்றுக் கொண்டிருந்தார்கள். அம்மையாரும் அதற்கு விதிவிலக்கு அல்ல. ஆனால் அவரது கால்கள் வேதத்தில் நிலைபெற்றிருந்தன. அதனால் சமணக் கருத்துகளைச் சைவத்திற்கு ஏற்றபடி மாற்றி அமைத்துக் கொள்கிறார்.

சமண சாக்கியங்கள் வலியுறுத்திய கர்மாக் கொள்கையும் மறுபிறவிக் கொள்கையும் வேதத்தில் இல்லாதவை. அதை ஏற்றுக் கொண்ட அம்மையார் முற்பிறவியில் செய்த வினையின் பயனாகத் தான், தான் மண்ணில் பிறக்க நேர்ந்தது என்று கருதிப் பல முறை வினை என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறார். “சிவனை வணங்குபவரை வினை நெருங்காது, அவனது அடியாரின் நிழலைக் கண்டாலே ஓடிவிடும்” என்று கூறுகிறார் அவர்.

சாக்கிய சமணர்கள் கூறும் அறவழிகளையும் அவர் புறக்கணிக்கவில்லை. தலையாய கொள்கைகளான பஞ்சசீலத்தைக் கடைப்பிடிப்பதோடு தலையாய அண்டத்தானாகிய ஆதிரையான் செம்பொற் கழலடியில் தாழ்ந்து பணிவோரே உண்மையை உணர்ந்தவர் என்கிறார்.

சமண சாக்கியர்கள் அறநெறி மூலம் பிறவிப் பிணியை நீக்க முடியும் என்று போதித்தனர். அம்மையாரோ இறைவன் ஒருவன் தான் அதைச் செய்ய முடியும் என்று நம்பியதால் அவர் அதை இறைவனிடம் வேண்டுகிறார்.

அம்மையார் வணங்கிய பெம்மான் வேதத்தில் நிலை பெற்றவன். அவனை வேதியன் என்றும், வேதப் பொருளான் என்றும், வேதத்திற்கு ஆதியன் என்றும் நாவாரப் புகழ்கிறார் அவர்.

வேதத்தை நம்புவதன் மூலமே இறை நம்பிக்கையை ஊட்டமுடியும் என்பதால் அதற்குப் பெருமதிப்புக் கொடுக்கிறார். அந்தணர்களும், அரசர்களும் வேதநெறியைச் சிக்கலாக்கி, சாமானிய மக்களுக்கு அப்பாற்பட்டதாகச் செய்து விட்ட நிலையில், வைசியரான அவர் காட்டிக் கொடுத்த பக்தி வழி அவர்களுக்கு ஆறுதல் தந்தது. பிறவா நிலை அடைவதற்கு ஒரு எளிய வழி கிடைத்துவிட்டது.

களப்பிரர் காலத்தில் இவ்வுலக வாழ்வைச் சுமை எனக் கருதும் சமண சாக்கிய இயக்கத்துக்கு எதிர் வினை அதே காலத்தவரான அம்மையாரின் பாடல்களில் காண முடிகிறது. அம்மையாரின் பாடல்கள் வானோர் பிரானின் புகழை மட்டும் பாடவில்லை, அக்கால சமண சாக்கியக் கொள்கைகளின் மறுப்பாகவும் அவை விளங்கின.

நூலறிவைப் பயன்படுத்தித் தர்க்க வாதம் செய்து கடவுள் இல்லை என்று கூறி வந்தவர்க்கும், அறிவினால் ஆராய்ந்து நீயே பிரம்மம் என்று உணர்க என்று கூறியவர்க்கும் அம்மையார் அறிவினால் மட்டும் பிரச்சினைகளைத் தீர்த்து விடமுடியாது என்றும் இறை நம்பிக்கை ஒன்றே மனிதனைத் துன்பங்களிலிருந்து கரையேற்றும் என்றும் பதில் அளிக்கிறார். ‘நூலறிவு பேசி நுழைவிலாதார் திரிக’ என்று பூர்வ மீமாம்சகர், வேதாந்திகள், சமணர்கள், சாக்கியர்கள் அனைவரையும் விரட்டுகிறார்.

“எவர் எவரோ எப்படி எல்லாமோ பேசுவார்கள். அவை புரியவில்லையே என்று கவலைப்படாதீர்கள். இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை நம்புங்கள். அறிவினால் அவனை அறிய முடியாது. அவனிடத்தில் பக்தி கொள்வதன் மூலம் அவனது அருளுக்கு ஆளாகிச் சிவகதி என்னும் பிறப்பிலா நிலை அடைய முடியும். நீங்கள் எந்தக் கோலத்தில் எந்த உருவத்தில் வழிபட்டாலும் இறைவன் உங்களுக்கு அந்தக் கோலத்தில் அந்த வடிவத்திலேயே காட்சி கொடு்த்து ஆட்கொள்வான்” என்கிறார் அவர்.

நாத்திகம் பேசுபவர்களை வாதத்தின் மூலம் ஆத்திகராக்க முடியாது. இறைவன் இருப்பதை உள்ளத்தால் தான் உணர முடியும். நீ வணங்கும் இறைவன் எத்தகைய உருவினன் என்று நாத்திகர்கள் கேட்பதற்கு விடை இறுப்பது போல அம்மையார் கூறுகிறார், “பிறந்து மொழி பயின்ற போதே எனக்கு இறைவன் மேல் காதல் ஏற்பட்டுவிட்டது. நான் கண்ணால் பார்த்து அவனிடம் ஆட்படவில்லை. இன்று வரை பார்த்ததும் இல்லை. நான் எப்படி உங்களுக்குக் கூற முடியும்? பிரானவனை எங்குற்றான் என்பீர்கள். என்போல்வார் சிந்தையிலும் இங்குற்றான். காண்பார்க்கு எளிது. உள்முகமாகப் பார்வையைச் செலுத்துபவருக்கு சிந்தையுள் சோதியாய்த் தோன்றுபவன் அவன். அவன் வானத்தானா, தானத்தானா என்று வாதம் செய்யாமல், நெஞ்சத்தான் என்பதை உணருங்கள்” என்கிறார்.

பிறவாமை ஒன்றையே வாழ்வின் குறிக்கோளாகக் கருதிய சமணத்திலிருந்து மாறுபட்டு, “பிறவாமை விரும்பத் தக்கது தான். ஆனால் மீண்டும் பிறப்புளதேல் இறைவனை மறவாமை வேண்டும்” என்று கோரும் அம்மையார் “இறைவனுக்கே எழுபிறப்பும் ஆளாவோம், அவன் தாளைச் சரணடைந்து விட்டதாலேயே மீளாப் பிறவிக் கனைகடலை நீந்தினோம்” என்று பாடுகிறார். அதாவது இறைவனைப் போற்றிப் பாடும் வாய்ப்புக் கிடைக்கப் பெற்றால் அது இவ்வுலக வாழ்வைச் சுமை ஆக்காது என்கிறார்.
 
வேத அடிப்படையில் சைவம் வளர்த்தார்

...
நாத்திகம் பேசுபவர்களை வாதத்தின் மூலம் ஆத்திகராக்க முடியாது. இறைவன் இருப்பதை உள்ளத்தால் தான் உணர முடியும்..
மிக உன்னதமான கருத்து!

திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் சொற்பொழிவில் கேட்டது:

படிப்பு அறிவு இல்லாதவனிடம் 'ட' என்ற எழுத்தைக் காட்டினால், அவன் ஒரு வகைக் கோடு என்றுதான் சொல்லுவான்.

ஆனால் தமிழ் எழுத்து அறிந்தவனோ, உடனே அந்த எழுத்தைத் தெரிந்துகொள்வான்! அதுபோல இறைவனை நெஞ்சில்

உணர்ந்தோர், அவன் இருக்கின்றான் என்பதைத் தெரிந்துகொள்வார்!

:pray2:
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top