• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

23. பிண்டாதித்தன்

23. பிண்டாதித்தன்
பிண்டம் = உடம்பு
ஆதித்தன் = கதிரவன்
உடலில் உள்ள கதிரவன் பிண்டாதித்தன்.



#1985 to #1988

#1985. விரிசுடர் காணுமே

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்
கன்றாய நந்தி கருத்து ளிருன்தனன்
கொன்று மலங்கள் குழல்வழி யோடிட
வென்று விளங்கும் விரிசுடர் காணுமே.

நிற்றல், இருத்தல், கிடத்தல், நடத்தல் என்ற பலவேறு செயல்களைச் செய்யும் போது, யானைக் கன்றினை ஒத்த சிவபெருமான் என் கருத்தினில் நிறைந்து இருந்தான். அதனால் நான் என் மன மலங்களை வெல்ல முடிந்தது. சூக்கும நாடி என்னும் சுழுமுனை வழியே நான் கீழே நோக்கமல் மேல் நோக்கிச் சென்றபோது பரந்த கதிர்களுடன் விளங்குகின்ற கதிரவனைக் காண முடிந்தது.

#1986. ஆதித்தன் அடங்கும் இடம்

ஆதித்தன் ஓடி அடங்கும் இடம் கண்டு
சாதிக்க வல்லவர் தம்மை உணர்ந்தவர்
பேதித்து உலகம் பிதற்றும் பிதற்று எல்லாம்
ஆதித்தனோடு அடங்குகின் றாரே.


ஆதித்தன் வலம் வந்த பின் அடங்கும் இடமாகிய ஈசானத்தைக் கண்டு கொண்டு, சகசிரதளத்தை அடைந்து அங்கு நிற்பவர் தம்மை உணர்ந்தவர் ஆவர். இதை அறியாமல் பல வேறு கருத்துக்ளைக் கொண்டவர், கீழே உள்ள கதிரவனை மேலே எழச் செய்யும் வகை அறியாமல் வீணே அழிந்து படுவர்.

#1987. உருகிக் கிடக்கும் உள்ளன்பு தானே

உருவிப் புறப்பட் டுலகை வலம் வந்து
சொருகிக் கிடக்கும் துறையறி வாரில்லை
சொருகிக் கிடக்கும் துறையறி வாளர்க்கு
உருகிக் கிடக்குமென் உள்ளன்பு தானே.


மூலாதாரத்திலிருந்து புறப்பட்டுக் கதிரவன், உலகம் ஆகிய உடலை வலம் வருகின்றான். பின்பு ஈசானத் திசையில் அவன் அடங்குகின்றான். இந்த உண்மையை மக்களில் பலரும் அறிவதில்லை.
இந்த உண்மையை அறியும் அறிவு உடையவர்களைக் கண்டால், என் உள்ளம் உருகி அன்பு அவரிடம் பாய்ந்து செல்லும்.
 
24. மனவாதித்தன்

24. மனவாதித்தன்
மனத்தில் விளங்கும் கதிரவன்


#1988 to #1991

#1988. பௌர்ணமி ஆகும்

எறிகதிர் ஞாயிரும் மின்பனி சோரும்
எறிகதிர் சோமன் எதிர்நின்று ஏறிப்ப
இருகதிர் உள்ளே இயங்கும் என் ஆவி
ஒரு கதிர் ஆகில், உவாஅது ஆமே.


எரிக்கும் கதிர்களை எறியும் கதிரவன், மற்றும் ஒளியுடன் கூடிய பனியைச் சொரியும் திங்கள் இவை இரண்டும் மாறி மாறி உடலில் விளங்கும் போது, இந்த இரண்டு கதிர்களுடன் அவற்றின் உள்ளே இயங்குகின்ற என் ஆவியும் இணைந்து அவை முழுமை அடையும் போது தோன்றுவதே பௌர்ணமி என்னும் முழு நிலவு.

#1989. சிந்தை தெளிந்தவர் சிவம் ஆவார்

சந்திரன், சூரியன்தான் வரின் பூசனை;
முந்திய பானுவில் இந்து வந்து ஏய்முறை
அந்த இரண்டும் உபய நிலத்தில்
சிந்தை தெளிந்தார் சிவம்ஆயி னாரே.


முதலில் சூரியனிடம் சந்திர கலை வந்து முறைப் படிப் பொருந்தும். பின்பு சூரிய கலை சந்திர கலையில் வந்து பொருந்தும். இதுவே பூசனை முறை ஆகும். இந்த இரண்டு கலைகளும் தத்தம் இயக்கம் இன்றி மேல் நோக்கிய சகசிர தளத்தில் பொருந்தி நிற்கும் போது, சிந்தை தெளிந்தவர் சிவம் ஆகிவிடுவார்.
மூலாதாரத்தில் உள்ள அக்கினி திங்களுடன் பொருந்தினால் கதிரவன் உடலின் வலப்பக்கம் உதிப்பான். உதித்த கதிரவன் மூலாதாரத்தில் உள்ள அக்கினியுடன் கூடிப் பின்னர் சகசிர தளத்தில் மேல் நோக்கிச் செல்வான்.

#1990. பூரணையாகும்

ஆகும் கலையோ டருக்கன் அனல்மதி
ஆகும் கலையிடை நான்கென லாமென்பர்
ஆகும் அருக்கன் அனல்மதி யோடொன்ற
ஆகுமப் பூரணை யாமென் றறியுமே.


திங்கள், கதிரவன், மூலாதாரத்தின் அக்கினி என்ற மூன்றும பொருந்தும் போது சீவனின் உடலில் மதி மண்டலம் உண்டாகும். இந்த மதி மண்டலத்தில் ஆன்ம ஒளியும் கலந்து நான்கு கலைகள் ஆகிவிடும். குண்டலினியின் அக்கினி, கதிரவன், சந்திரன் என்னும் மூன்றும் ஒன்றாகப் பொருந்துவதே பௌர்ணமி என்று அறிந்து கொள்வீர்.

#1991. பேரண்டத்தூடே பிறங்கொளி

ஈரண்டத்து அப்பால் இயங்கிய அவ்வொளி
ஓர் அண்டத்தார்க்கும் உணரா உணர்வது;
பேரண்டத்தூடே பிறந்கொளியாய் நின்றது
ஆர் அண்டத் தக்கார் அறியத்தக் காரே.


தீ மண்டலம், கதிரவ மண்டலம் என்னும் இரண்டு மண்டலங்களைக் கடந்து விளங்குவது ஆகும் சந்திர மண்டலம். அதன் ஒளி காம உணர்வோடு வாழும் மக்களுக்குப் புலனாகாது. தலைக்கும் மேலே விளங்குகின்ற பிரம்மண்டத்தைக் கிழித்துக் கொண்டு ஒளி விடுபவர் யார்? அந்த உயரிய நிலையை அடைந்தவரே அந்த ஒளியினை அறிந்து கொள்ள முடியும்!
 
#1992 to #1995

#1992. அருள் இலார் இருள் நிற்பர்

ஒன்பதில் மேவி உலகம் வலம் வரும்,
ஒன்பதும் ஈசன் இயல் அறிவார் இல்லை
முன்பு அதில் மேவி முதல்வன் அருள் இலார்
இன்பம் இலார் இருள் சூழ நின்றாரே.

மன மண்டலத்தில் இருக்கும் கதிரவன், உடலில் உள்ள ஒன்பது தத்துவங்களிலும் பொருந்தி, உடல் என்னும் உலகத்தை வலம் வரும். இந்த ஒன்பது தத்துவங்களும் ஈசனின் சக்தி நிலை என்று அறிந்து கொண்டவர்கள் இல்லை. ஆன்மா இந்த ஒன்பது தத்துவங்களில் பொருந்தி உள்ளது. எனினும் சிவன் அருள் பெறாதவர் இன்பம் பெறமுடியாமல் இருள் சூழ்ந்த அண்ட காயத்தைச் சென்று அடைவர்.

விளக்கம்
ஒன்பது தத்துவங்கள்:
1. மண், 2. நீர், 3. தீ, 4. காற்று, 5. வானம், 6. கதிரவன், 7. திங்கள்,. 8. அக்கினி, 9. விண்மீன்.


#1993. உள்ளத்தே அருணோதயம்

விந்து அபரம், பரம் இரண்டாய் விரிந்து
அந்த அபரம் பரநாதம் ஆகியே
வந்தன தம்மில் பரம்கலை ஆதி வைத்து
உந்தும் அருணோதயம் என்ன உள்ளத்தே.


ஒரே விந்து இரண்டாக விரியும். அது தூலமான அபரவிந்து என்றும் சூக்குமமான பரவிந்து என்றும் இரண்டாகும். தூல விந்துவே மேல் நோக்குடன் இருக்கும் போது பரநாதம் ஆகும். அப்போது நிவிருத்தி போன்ற ஐந்து பரங்கலைகள் தோன்றும். அதனால் ஞானக் கதிரவனின் உதயம் நிகழும்.

விளக்கம்
தூல அபரவிந்து வீரியம் ஆகிவிடும்.
சூக்குமமான பரவிந்து ஒளி ஆகிவிடும்.


#1994. ஐங்கலைக்கு ஓர் உதயம்

உள்ள அருணோதயத்து எழும் ஓசை தான்
தெள்ளும் பரநாதத் தின்செயல் என்பதால்,
வள்ளல் பரவிந்து வைகரி ஆதிவாக்கு
உள்ளன ஐந்கலைக்கு ஒன்றாம் உதயமே.


மன மண்டலத்தில் உதய சூரியன் போல உதிக்கும் ஒலியே தெளிவான பரநாதத்தின் செயல் ஆகும். இந்தப் பரவிந்துவுடன் சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி என்னும் வாக்குகள் கூடும் பொழுது நிவிருத்தி போன்ற ஐந்து கலைகள் தோன்றும்.

#1995. திசைகள் பத்திலும் உதயம் செய்வான்

தேவர் பிரான்திசை பத்துஉத யம்செய்யும்
மூவர் பிரான் என முன் ஒரு காலத்து
நால்வர் பிரான் நடு வாய்உரை யாநிற்கும்
மேவு பிரான் என்பர் விண்ணவர் தாமே.


சிவன் பத்துத் திசைகளிலும் உதித்து வெளிப்படுவான். பண்டைக் காலத்தில் இவனை மூவர் பிரான்
(மூவர் = நான்முகன், திருமால், உருத்திரன்) என்று கூறி வந்தனர். பிற்காலத்தில் இவனை நால்வருள் நடுநாயகம் ( நால்வர் = நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுரன்) என்று புகலுகின்றனர்.
விண்ணகத் தேவர்கள் இவனைத் தங்களின் தன்னிகரற்ற தலைவன் என்று போற்றுவர்.
 
25. ஞானாதித்தன்

25. ஞானாதித்தன் = ஞானக் கதிரவன்


#1996 to#2000

#1996. கை இருள் நீங்கக் கலந்து எழுந்தான்

பொய் இலன்,மெய்யன்; புவனாபதி எந்தை
மை இருள் நீக்கும் மதிஅங்கி, ஞாயிறு,
செய் இருள் நீக்கும் திருவுடை நந்தி என்
கை இருள் நீங்கக் கலந்து எழுந்தானே.


உலகங்களின் தலைவனும், என் தந்தையும் ஆகிய சிவபெருமான் வெறும் கற்பனையின் படைப்பு அல்ல. அவன் உணமையாகவே உள்ளவன் தான். திங்கள், கதிரவன், அக்கினி என்ற மூன்றும் அண்ட கோசத்தில் கீழ் முகமாக இயங்கின. அப்போது அங்கு இருள் நிறைந்து இருந்தது. அந்த மை இருளை நீக்குவதற்காக என் நந்தி பிரான் கீழிருந்து மேல் வரைக் கலந்திருந்தான்.

#1997. கனிச் சுடராய் நின்ற கயிலை ஈசன்

தனிச்சுடர் ஏற்றித் தயங்கு இருள் நீங்க
அனித்திடும் மேலை அருங்கனி ஊறல்
கனிச்சுட ராய்நின்ற கயிலையில் ஈசன்
தனிச்சுடர் மேல் கொண்ட வண்ணமும் ஆமே.


சிவ ஒளியானது தன்னிகர் அற்ற ஒரு சுடர். அது அண்ட கோசத்தில் நிறைந்து இருந்த இருளை நீக்கியது. இனிக்கும் அருங் கனியின் சுவையைப் போல அமுதம் ஊறச் செய்தது.. கனிந்த சுடர் போல் நிற்கும் கயிலையின் ஈசன், ஒரு ஒப்பற்ற சுடராக என் தலை மீதும் விளங்கும் தன்மை உடையவன்.

#1998. ஆர் அறிவார் இது நாயகம் என?

நேர்அறி வாக நிரம்பிய பேரொளி
போர்அறி யாது, புவனங்கள் போய் வரும்;
தேர் அறியாத திசை யொளி ஆயிடும்
ஆர் அறிவார் இது நாயகம் ஆமே.

உண்மை அறிவாகத் திகழும் சிவப் பேரொளி ஆன்மாவிடம் நிரம்பி இருக்கும். அது தங்கு தடை இன்றி எல்லா உலகங்களிலும் விரவி நிற்கும். இதன் ஆழத்தை ஒருவனாலும் தெரிந்து கொள்ள முடியாது. இதுவே புவனங்களின் நாயகன் வீசும் ஒளி என்ற உண்மையை யார் அறிவார்?

#1999. நின்றவிடத்தே நிலை நேர் அறிவார்

மண்டலத் துள்ளே மலர்ந்து எழும் ஆதித்தன்
கண்டிடத் துள்ளே கதிரொளி ஆயிடும்
சென்ற இடத்து எட்டுத்திசை எங்கும் போய்வரும்
நின்றிடத்தே நிலை நேர் அறிவார்க்கே.


சுவாதிட்டானத்தில் இருந்து மலர்ந்து எழுகின்ற கதிரவன், ஞான ஆதித்தனாக மன மண்டலத்தில் ஒளிர்வான்.
இதனைத் தான் இருக்கும் இடத்திலேயே அறிந்து உ ணர்ந்து கொண்ட ஒரு ஞானிக்குத் தான் இருக்கும் இடத்திலிருந்தே எட்டுத் திசைகளில் எங்கும் போய் வரும் ஆற்றல் வாய்க்கும்.

#2000. சுடர் விடும் சோதி

நாபி, கண், நாசி, நயனநடுவினும்
தூபியோடு ஐந்தும் சுடர்விடு சோதியைத்
தேவர்கள் ஈசன், திருமால், பிரமனும்
மூவருமாக உணர்ந்திருந் தாரே.


உந்தி, கண், மூக்கின் நுனி, புருவங்களின் மத்தி, உச்சித் துளையாகிய பிரமரந்திரம் என்ற இந்த ஐந்து
இடங்களிலும் சுடர் விட்டு ஒளிர்கின்ற சோதியைத் தேவர்களும், ஈசன், திருமால், பிரமன் என்ற மூவர்களும் நன்கு உணர்ந்து கொண்டு இருந்தனர்.
 
26. சிவாதித்தன்

26. சிவாதித்தன்
சிவன் ஆகிய ஆதித்தன்


#2001 to #2004

#2001. அருணோதயத்தில் இருள்போல் நீங்கும்

அன்றிய பாச இருளும் அஞ்ஞானமும்
சென்றிடும் ஞானச் சிவப் பிரகாசத்தால்;
ஒன்றும் இரு சுடராம், அருணோதயம்
துன்று இருள் நீங்குதல் போலத் தொலைந்ததே.


சீவனை பந்தப்படுத்தும் பாச இருளும், அதன் விளைவாகத் தோன்றும் அஞ்ஞானமும், சிவாதித்தனின் ஒளிக்கதிர் வீச்சில் அழிந்துவிடும். கதிரவன் உதிக்கும் முன்பு தோன்றும் அருணோதயத்தில், கரிய அடர்ந்த இருள் தொலைவதைப் போல அவை இரண்டும் தொலைந்து போய்விடும்.

#2002. மேவிய காயத்து அடங்கும் பரிசு

கடம்கடந் தோறும் கதிரவன் தோன்றில்
அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான்
விடம் கொண்ட கண்டனும் மேவிய கையது
அடங்கிட நின்றதும் அப்பரி சாமே.

நீர் நிறைந்த குடங்கள் அனைத்திலும் கதிரவன் பிரதிபலிப்பான். அவனை அவற்றுள் அடங்கும்படி மூடி வைத்தாலும், அவன் அந்தக் குடங்களுக்குள் அடங்கிவிட மாட்டான். அவன் உலகெங்கிலும் ஒளி வீசிக் கொண்டு தான் இருப்பான். விடம் உண்ட நீலகண்டப் பெருமானும் அங்ஙனமே. அவன் விருப்பத்துடன் எல்லா சீவன்களிலும் எழுந்தருளினாலும், அவற்றில் அவன் அடங்கி விட மாட்டான்.

#2003. விரிசுடர் மூன்றும் ஒன்றாம்

தானே விரிசுடர்மூன்றும் ஒன்றாய் நிற்கும்
தானே அயன் மால் என நின்று தாபிக்கும்
தானே உடல், உயிர் வேறு அன்றி நின்றுளன்
தானே வெளி ஒளி தான் இருட்டு ஆகுமே.

சிவபெருமான், தானே பரந்த கதிர்களை உடைய சூரியன், தண்ணொளி பொழியும் நிலவு, சுட்டு எரிக்கும் அக்கினி என்ற மூன்றும் பொருந்திய ஒரு பேரொளியாக நிற்கின்றான். சிவபெருமான், தானே திருமால், தானே நான்முகன் என்று நின்று, தானே தலைவன் என்பதைத் தாபிக்கின்றான். சிவபெருமான் தானே சீவர்களின் அறிவற்ற உடலிலும், அறிவுற்ற உயிரிலும், பிரிவின்றிக் கலந்து நிற்கின்றான். அவனே ஒளியாகவும், அவனே வெளியாகவும், அவனே இருளாகவும் நிற்கின்றான்.

#2004. ஐவர்க்கு இடம் ஆறு அங்கம்

தெய்வச் சுடர் அங்கி, ஞாயிறும், திங்களும்,
வையம், புனல், அனல், மாருதம், வானகம்
சைவப் பெரும்பதி தாங்கிய பல்லுயிர்
ஐவர்க்கு இடம் இடை ஆறு அங்கமே.

தெய்வத் தன்மை பொருந்திய சிவாக்கினி, கதிரவன், திங்கள், வையகம், புனல், அனல், மாருதம், வானகம் என்னும் எட்டு இடங்களும் சிவபெருமான் உறைகின்ற திருமேனிகள் ஆகும். இந்தத் திருமேனிகளைத் தாங்குகின்ற பல்லுயிர்களும், சத்தியோசாதர், வாமதேவர், அகோரர், தத்புருடர், ஈசானர் என்ற ஐவரும் பொருந்து இடங்கள் ஆறு. அவை இதயம், தலை, சிகை, கவசம், நேத்திரம், அத்திரம்.
 
27. பசு இலக்கணம்

கட்டப்பட்ட பசுவின் இலக்கணம்

#2005 & #2006

#2005. ஈசன் அம்ச வடிவானவன்

உன்னும் அளவில் உணரும் ஒருவனைப்
பன்னும் மறைகள் பயிலும் பரமனை
என்னுள் இருக்கும் இளையா விளக்கினை
அன்ன மயம் என்று அறிந்து கொண்டேனே.


அவனை இடையறாது உன்னுவதம் மூலமே உணர்ந்து கொண்டு விடலாம் . அவனை மறைகள் அனைத்தும் பன்னிப் பன்னிப் புகழ்ந்து போற்றுகின்றன. என்னுள் அவன் ஒரு தூண்டா விளக்காக உறைந்துள்ளான். அவன் அம்ச வடிவினன் என்று நான் அறிந்து கொண்டேன்.

#2006. மடவன்னம் பேறு அணுகாது!

அன்னம் இரண்டு உள ஆற்றங் கரையினில்
துன்னி இரண்டும் துணை பிரியாதன்னம்;
தன்னிலை அன்னம் தனி ஒன்று அது என்றக்கால்
பின்ன மடவன்னம் பேறு அணுகாதே.


சீவனின் வாழ்வு என்னும் நதிக்கரையில் இரண்டு அன்னங்கள் இருக்கின்றன. அவை ஒன்றை விட்டு ஒன்று இணை பிரியாதவை என்றாலும், சீவன் ஆகிய அன்னம் சிவன் ஆகிய அன்னத்தைத் தன்னிலும் வேறானதாகக் கருதி வாழ்ந்திருந்தால், அறியாமையில் அமிழ்ந்துள்ள அந்த மட அன்னம் என்றுமே உயரிய சிவப் பேற்றை அடையாது.
 
28. புருடன்

= காலம் முதல் அராகம் ஈறாக ஐந்தையும் பொருந்திப் போகத்துக்கு உன்முகப்பட்டு நிற்கும் ஆன்மா


#2007 to #2010

2007. ஆத்மா ஞானம் பெறவதற்கே

வைகரி யாதியு மாயா மலாதியும்
பொய்கரி யான புருடாதி பேதமும்
மெய்கரி ஞானம் கிரியா விசேடத்துச்
செய்கரி ஈசனனாதி செய்ததே.


வைகரி, மத்திமை, பைசந்தி, சூக்குமை என்னும் வாக்குகள், மாயை முதலிய மலங்களும், பொய்யான இன்பங்களை அனுபவிக்கும் புருடன் முதலிய வித்தியா தத்துவங்கள்; பிறவிப் பிணியை நீக்கும் ஞானம் இவற்றை ஈசன் அனாதி காலத்தில் செய்தது எதற்கு என்று தெரியுமா? உலகில் உதித்த உயிர்கள் அனைத்தும் உய்வடையும் பொருட்டே ஈசன் இவற்றை அமைத்துள்ளான்.

வாக்குகள் நான்கு:-
வைகரி = செவி ஓசை
மத்திமை = மிடற்று ஓசை
பைசந்தி = நினைவு ஓசை
சூக்குமை = நுண் ஓசை


மலங்கள் மூன்று:-
ஆணவம், கன்மம், மாயை

வித்தியா தத்துவங்கள் ஏழு :-
காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மூலப்பிரகிருதி


#2008. அணுவில் அணுவை அணுகலும் ஆமே

அணுவில் அணுவினை, ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறு இட்டு
அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே.


அணுவுக்குள் உள்ள அணுவை ஓராயிரம் கூறாக ஆக்குங்கள். அந்த ஆயிரத்தில் ஒரு கூற்றை உம்மால் நெருங்க முடிந்தால், அப்போது அணுவுக்குள் அணுவாக உள்ள ஆதிப் பிரானை உம்மால் அணுகவும் முடியும், அவனை அடையவும் முடியும்.

#2009. நடர் கொண்ட நல்வழி நாடலும் ஆமே

படர்கொண்ட ஆலதின் வித்துஅது போலச்
சுடர் கொண்ட அணுவினைத் தூவழி செய்ய,
இடர்கொண்ட பாச இருள்அற ஓட்டி
நடர் கொண்ட நல்வழி நாடலும் ஆமே.


எங்கும் படர்ந்து பரவி வளரும் தன்மை ஒரு சிறு ஆல விதைக்குள் ஒளிந்துள்ளது. அது போன்றே பாசங்களும், பந்தங்களும், அவற்றை நீக்குவதற்குத் தேவையானவையும் ஒரு சிறு ஆன்மாவில் ஒளிந்துள்ளன. ஆன்மாவை இறையருளால் நல்வழிப் படுத்த வேண்டும். அப்போது துன்பங்களைத் தோற்றுவிக்கும் அறியாமை என்ற இருளை முற்றிலுமாக அழித்துவிட முடியும். சீவன் சிவனையும் சிவகதியையும் நாடவும் அடையவும் முடியும்.

2010. அணுவுள் அவனும், அவனுள் அணுவும்

அணுவுள் அவனும் அவனுள் அணுவும்
கணுஅற நின்ற கலப்பது உணரார்
இணையிலி ஈசன் அவன் எங்கும் ஆகித்
தணிவுஅற நின்றான் சராசரந் தானே.


அணுவைப் போன்ற சீவனுக்குள் சிவன் இருக்கின்றான். அணுவைப் போன்ற சீவன் சிவனுக்குள் இருக்கின்றது. சிவனும் சீவனும் பிரிவு அறக் கலந்து நிற்பதை எவரும் உணருவதில்லை. இணையற்ற ஈசன் இங்கு அங்கு என்னாதபடி எங்கும் நிறைந்துள்ளான். அவன் இயங்கும் பொருட்கள், இயங்காப் பொருட்கள் என்று அனைத்திலும் இடைவெளி இன்றி நிறைந்துள்ளான்.
 
29. சீவன்

29. சீவன் = உயிர் = ஆன்மா

#2011 to #2014

#2011. ஆவியின் கூறு நூறாயிரத்து ஒன்றே

மேவிய சீவன் வடிவுஅது சொல்லிடில்
கோவின் மயிர்ஒன்று நூறு உடன் கூறுஇட்டு
மேவிய கூறுஅது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறு நூறாயிரத்து ஒன்றே.


உடலில் பொருந்தி இருக்கும் உயிரின் அளவு என்ன என்று தெரியுமா? பசுவின் மயிர் ஒன்றை நூறு கூறாக ஆக்குங்கள். அதில் ஒன்றை எடுத்து அதை மேலும் ஆயிரம் கூறாக ஆக்குங்கள். அதுவே உயிரின் அளவு ஆகும். புருடன் பசுவின் ஒரு மயிர் அளவு என்றால் அவன் உயிர் அதில் லட்சத்தில் ஒரு பங்கு ஆகும்.

#2012. தானே அறியும் தவத்தின் அளவே

ஏனோர் பெருமைய னாயினும் எம்மிறை
ஊனே சிறுமையின் உட்கலந்து அங்குளன்
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியும் தவத்தின் அளவே.


ஏனைய தெய்வங்களைக் காட்டிலும் பெருமை வாய்ந்தவன் எம் ஈசன். ஆயினும் தன் தனிப் பெருங் கருணையினால் இந்த சிறு உடலிலும் அதன் உயிராக வந்து பொருந்துகின்றான். வானோர்களும் அறிந்து கொள்ள முடியாத அளவினனாகிய அவனைச் சீவன் தான் செய்யும் தவத்தின் அளவுக்கு ஏற்ப அறிந்து கொள்ள முடியும்.

#2013. சிவன் உருக் கொள்வர்

உண்டு, தெளிவன் உரைக்க வியோகமே
கொண்டு பயிலும் குணமில்லை ஆயினும்
பண்டு பயிலும் பயில் சீவனார் பின்னைக்
கண்டு சிவன் உருக் கொள்வர் கருத்துளே.


யோகத்தில் பொருந்திப் பயில்வதற்குத் தேவையான ஈடுபாடு இல்லாதவன் ஆயினும், யோகத்தால் தெளிவடைந்த ஒரு நல்ல குருநாதனிடம் பெறுகின்ற உபதேசத்தாலும், முன்பு கொண்டிருந்த பழைய வாசனையாலும், எத்தனையோ பிறவிகளில் செய்த தன் விடாமுயற்சியாலும், ஒருவன் சிவ வடிவம் பெற முடியும்.

#2014. ஆய துரியம் புகுந்து அறிவாகும்

மாயா உபாதி வசத்து ஆகும் சேதனத்து
ஆய குரு அருளாலே அதில் தூண்ட,
ஓயும் உபாதியோடு ஒன்றினொன் றாதுஉயிர்
ஆய துரியம் புகுந்து அறிவகுமே.


மாயையின் செயல் தனு, கரணம், புவனம், போகம் இவற்றால் உயிருக்கு ஓயாத துன்பம் விளைவிப்பது ஆகும். துன்பத்தில் தத்தளிக்கும் உயிரைக் காத்துத் துரிய நிலைக்குக் கொண்டு செல்வது எங்ஙனம்? ஆய அறிவுடைய குருவின் அருளால் அது தூண்டப் பட வேண்டும். மாயையின் உபாதிகளில் அது பொருந்தாமல் முயற்சியுடன் பயிற்சி செய்து வரவேண்டும். அப்போது உயிர் ஞான வடிவாகித் துரியத்தில் துயர் இன்றி விளங்கலாம்.
 
30. பசு

30. பசு = கட்டப்பட்டுள்ள உயிர்

#2015 & #2016

#2015. மற்றைப் பசுக்கள் வறள் பசுக்கள்

கற்ற பசுக்கள் கதறித் திரியினும்
கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினும்
முற்ற பசுக்க ளொருகுடம் பால்போது
மற்றைப் பசுக்கள் வறள்பசு தானே.


வேதங்கள், ஆகமங்கள் இவற்றைக் கற்ற பின்பும் அனுபவ அறிவு இல்லாமல் புலம்பிக் கொண்டு உலகில் திரிவார்கள் சிலர். கோவலனிடம் கொண்டுள்ள செல்வாக்கையும், அவனிடம் பெற்ற விருதுகளையும் காட்டிக் கொண்டு உலகில் திரிவார்கள் சிலர். முதிர்ந்த அனுபவ அறிவு கொண்ட ஒருவரே உலகத்தோர்க்கு உதவுகின்ற ஞானப் பாலைத் தருகின்ற வள்ளல் பசு ஆவார். மற்றவர்கள் அனைவரும் பால் சுரக்காத வறண்ட பசுக்களைப் போன்றவர்களே.

#2016. கொல்லை செய் நெஞ்சம் குறிப்பு அறியாது

கொல்லையில் மேயும் பசுக்களைச் செய்வதுஎன்
எல்லை கடப்பித்து இறைவன் அடிகூட்டி
வல்ல செய்து ஆற்ற மதித்தபின் அல்லது
கொல்லை செய் நெஞ்சம் குறிப்பு அறியாதே.


சுவாதிட்டானம் என்னும் வயலில் மேய்ந்து காமச் செயல்களில் ஈடுபடும் பசுக்களை என்ன செய்வது?
முதலில் அவற்றைக் காம எல்லையைக் கடக்கச் செய்ய வேண்டும். பின்னர் அவற்றை ஈசன் அடிகளை நோக்கிச் செலுத்த வேண்டும். அவை திருவருளைப் பெறும் ஆற்றலை உண்டு பண்ண வேண்டும்.அவற்றைச் சிவஞானியர்கள் கூட்டத்தில் சேர்க்க வேண்டும். இல்லையேல் கொல்லை வயலில் மேயும் உள்ளக் கருத்தை அவர்கள் மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.
 
31. போதன்

31. போதன் = சிவஞானி
சிவஞானத்தைத் தன் அனுபவத்தால் கண்டு உணர்ந்து கொண்டவன்.


#2017 to #2019


#2017. சீவனார் சிவனார் ஆகிவிடுவார்!

சீவன் எனச் சிவனார் என்ன, வேறு இல்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்;
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவன் ஆயிட்டு இருப்பரே.


சீவன், சிவன் என்று இரு வேறு பொருட்கள் இல்லை. சீவத் தன்மையில் இருக்கும் வரை சீவனால் சிவனை அறிந்து கொள்ள இயலாது. சீவன் சிவனை அறியும் ஞானம் பெற்றவுடன் சீவனே சிவனாக மாறிவிடுவான்.

#2018. கண விளக்கு ஆகிய கண்காணி ஆவான்

குணவிளக்கு ஆகிய கூத்தப் பிரானும்
மணவிளக்கு ஆகிய மன்உயிர்க் கெல்லாம்
பணவிளக்கு ஆகிய பல்தலை நாகம்
கணவிளக்கு ஆகிய கண்காணி ஆமே.


கூத்தர் பிரான் ஒரு அற்புதமான குணவிளக்கு. பக்குவம் அடைந்த பின்பு, பல தலைகளை உடைய ஒரு பாம்பின் படங்களில், விளக்கு போன்று அற்புத நாகமணிகள் ஒளிரும். அதைப் போன்றே உயிர்க் கூட்டத்தை மேற்பார்வை செய்யும் கண்காணி ஆகிய ஈசன், அவை பக்குவம் அடைந்தவுடன் அவற்றுக்குத் தன் ஒளியை அளிப்பான்.

#2019. அறியாமை நீங்கியவன்

அறிவாய், அறியாமை நீங்கி யவனே
பொறிவாய் ஒழிந்து எங்கும் தான் ஆன போதன்,
அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவன்
செறிவு ஆகி நின்ற அச்சீவனும் ஆமே.


அறிவு வடிவானவன் சிவன். அவன் அறியாமை என்பதே இல்லாதவன். ஐம்புலன்களின் உதவி இன்றியே அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஞான வடிவானவன். அறிவும் அவனே. அறிவை அறிபவனும் அவனே. அறிவில் பொருந்தி நிற்கும் சீவனும் அவனே.
 
#2020 to #2022

#2020. ஆறாறுக்கு அப்புறம் ஆகி நின்றான்

ஆறாறின் தன்மை அறியாது இருந்தேனுக்கு
ஆறாறின் தன்மை அறிவித்தான் பேர்நந்தி;
ஆறாறின் தன்மை அருளால் அறிந்த பின்
ஆறாறுக்கு அப்புறம் ஆகி நின்றானே.


ஆறாறு முப்பத்தாறு தத்துவங்களை நான் அறியாமல் இருந்தேன். ஆறாறு முப்பத்தாறு தத்துவங்களை எனக்கு உணர்த்தினான் என் நந்திப் பெருமான். ஆறாறு தத்துவங்களை நான் அவன் அருளால் அறிந்து கொண்ட பின்னர், அவன் அந்த ஆறாறு தத்துவங்களைக் கடந்து நின்றான்.
முப்பத்தாறு தத்துவங்கள்:-

1. சிவ தத்துவங்கள்…………… 5
2. வித்தியா தத்துவங்கள்……7
3. ஆன்ம தத்துவங்கள்………24

சிவ தத்துவங்கள் ஐந்து:​-
1. நாதம். 2. விந்து. 3. சாதாக்கியம் 4. ஈசுவரம். 5. சுத்த வித்தை

வித்தியா தத்துவங்கள் ஏழு :-
1. காலம், 2. நியதி, 3. கலை, 4. வித்தை, 5. ராகம், 6, மாயம், 7. புருடன் (ஆன்ம

ஆன்ம தத்துவங்கள் இருபத்து நான்கு:-
பஞ்ச பூதங்கள் ( நிலம், நீர், நெருப்பு, வளி, வெளி)…………………………5
பஞ்ச தன்மாத்திரைகள் ( ஓசை, ஊறு, ஒளி, சுவை, மணம் )………….5
பஞ்ச ஞானேந்திரியங்கள் (கண், நாசி, நாவு, செவி, தோல்)…………..5
பஞ்ச கர்மேந்திரியங்கள் (வாக்கு, பாணி, பாதம், குய்யம், குதம்)…..5
அந்தக் கரணங்கள் (மனம், புத்தி, சித்தம், அகங்காரம் )………………….4


#2021. நவமான தத்துவம் நாடகிலரே

சிவம் ஆகிய அருள், நின்று அறிந்து ஓரார்
அவம் ஆம் மலம் ஐந்தும் ஆவது அறியார்
தவம் ஆன செய்து தலைப்பறி கின்றார்
நவமான தத்துவம் நாட கிலாரே.


பிரிவின்றி சிவத்துடன் சீவன் பொருந்தி இருக்கும் ததிருவருளை அறிந்து சித்தம் தெளிய மாட்டார். துன்பங்களைத் தரும் ஐந்து மலங்கள் தம்மிடம் எவ்வாறு பொருந்தி உள்ளன என்பதையும் அறியார் கடினத் தவம் செய்து தம்மைத் தாமே வருத்திக் கொள்கின்றனர். தோழமை நெறியில் எளியவனாக உள்ள சிவனை இவர்கள் அறியார். என்னே இவர் தம் அறியாமை!

#2022. நாதன் நல்லோர்க்கருள் நல்குவான்

நாள்தோறும் ஈசன் நடத்தும் தொழில் உன்னார்
நாள்தோறும் ஈசன் நயந்து ஊட்டல் நாடிடார்
நாள்தோறும் ஈசன் நல்லோர்க்கு அருள் நல்கலால்
நாள்தோறும் நாடார்கள் அந்நாள் வினையாளரே.

நாள் தோறும் வினைகளைச் செய்து வருபவர்கள் ஈசன் நமக்குச் செய்யும் அருட்செயல்களை நினைவில் கொள்ளார். நம் வினைகளுக்கு ஏற்ற பயன்களை அவன் அன்புடன் ஊட்டுவதையும் அவர்கள் உணர்ந்து கொள்ள மாட்டார். நாள் தோறும் ஈசன் நல்லவர்களுக்கு அருள் நல்குவதை அறியாதவர்கள், நாள் தோறும் பல்வேறு வினைகளில் ஈடுபடுகின்றனர்.
 
முப்பத்தாறு தத்துவங்கள் will recur in many many future posts.

This poem is the 2020 th in the Ezhaam thanthiram of Thirumanthiram.

It is also #7188 in this thread - in case you need to refer to this in future.
 
32. இந்திரியங்களை அடக்கும் அருமை

32. இந்திரியங்களை அடக்கும் அருமை
ஐம் பொறிகளையும் ஐம் புலன்களின் மேல் செல்லாமல் அடக்குகின்ற பெருமை


#2023 to #2026

#2023. ஆக மதத்தன ஐந்து களிறுகள்

ஆக மதத்தன ஐந்து களிறுகள் உள,
ஆக மதத்தறி யோடு அணை கின்றில;
பாகனும் எய்த்து, அவை தாமும் இளைத்த பின்
யோகு திருந்துதல் ஒன்று அறியோமே.


சீவன் உடலில் மிகுந்த மதம் பொருந்திய ஐந்து வலிமையான யானைகளைப் போல ஐந்து பொறிகள் உள்ளன. அவைகளைக் கட்டுத் தறியில் இணைப்பதும் மிகவும் கடினமான செயல். ஆன்மா என்னும் யானைப் பாகன் இளைத்துத் தளர்ந்து போன பிறகு, அந்த யானைகளும் வலுவிழந்த பிறகு, அவன் அவற்றை யோக நெறியால் திருத்துவது எதற்கு என்று எனக்குத் தெரியவில்லை. பொறிகள் நல்ல நிலையில் இருக்கும்போதே யோகத்தால் அவற்றை வசப்படுத்த வேண்டும்.

#2024. வருத்தினும் வழி நடவாதே

கருத்தின் நன்னூல் கற்றுக் கால்கொத்திப் பாகன்
திருத்தலும் பாய்மாத் திகைத்தன்றிப் பாயா,
எருத்து உற ஏறி இருக்கிலும் ஆங்கே
வருத்தினும் அம்மா வழிநட வாதே.


கருத்துள்ள நல்ல நூல்களைக் கற்றறிந்து, பிராண வாயுவைக் கட்டுபடுத்திய பின்பு, ஆன்மா தன் ஐந்து பொறிகளைத் திருத்தி அமைக்க வேண்டும். வேகமாகப் பாய்ந்து செல்லும் பொறிகளை திருத்தி அமைத்த பின்பு, பாகன் அதன் மீது வலிமையுடன் அமர்ந்து இருந்த போதிலும், அதை வருத்திச் செலுத்த முயன்ற போதிலும் அது முன்பு போன வழியில் நடவாது.

#2025. கோல் கொண்டு மேய்ப்பான் ஒருவன்

புலம் ஐந்து, புள் ஐந்து, புள் சென்று மேயும்
நிலம் ஐந்து , நீர் ஐந்து, நீர்மையும் ஐந்து,
குலம் ஒன்று, கோல் கொண்டு மேய்ப்பான் ஒருவன்
உலம் வந்து போம் வழி ஒன்பது தானே.


பஞ்ச பூதங்கள் ஆகிய இடங்கள் ஐந்து. ஞானேந்திரியங்கள் என்னும் பறவைகள் ஐந்து. அவை சென்று
மேய்கின்ற நிலம் ஆகிய தன்மாத்திரைகள் ஐந்து. இயங்கும் தனமை கொண்ட கர்மேந்திரியங்கள் ஐந்து. அவற்றின் செல்பாடுகளும் ஐந்து. இவை அனைத்தையும் இணைக்கும் மாயை ஒன்று. அறிவு என்னும் கோலைக் கொண்டு இவற்றை மேய்க்கும் ஆன்மா ஒருவன். அவனை வருத்தும் உடலில் இருப்பதோ ஒன்பது வாயில்கள்.

#2026. எஞ்சாது இறைவனை எய்தலும் ஆம்

அஞ்சு உள சிங்கம், அடவியில் வாழ்வன,
அஞ்சும் போய் மேய்ந்து தம் அஞ்சு அகமே புகும்
அஞ்சின் உகிரும் எயிறும் அறுத்திட்டால்
எஞ்சாது இறைவனை எய்தலும் ஆமே.

உடல் என்னும் காட்டில் பொறிகள் என்னும் ஐந்து சிங்கங்கள் உள்ளன. அவை ஐந்தும் தினமும் அகத்தை விட்டுப் புறத்தில் சென்று அங்குள்ள பொருட்களைப் பற்றி நிற்கும். பின்பு மீண்டும் அவை அகத்தே வந்து சேரும். புற விஷயங்களில் ஈடுபாடு கொண்டுள்ள மனத்தையும், புற விஷயங்களில் ஈடுபடுகின்ற கருவிகளையும், நாம் முயன்று அடக்கி விட்டோம் என்றால் உறுதியாக இறைவனைச் சென்று அடைய முடியும்.
 
#2027 to #2030

#2027. ஐவரும் ஐந்து சினத்தோடே நின்றால்!

ஐவர் அமைச்சருள் தொண்ணூற் றறுவர்கள்,
ஐவரும் ஐந்தருஆளக் கருதுவர்,
ஐவரும் ஐந்து சினத்தோடே நின்றிடில்
ஐவர்க்கு இறை இறுத்து ஆற்றகி லோமே.

உடலின் ஐந்து பொறிகள் ஐந்து அமைச்சர்கள் என்றால், அவர்களுக்குத் தத்துவங்கள் என்ற பெயருள்ள தொண்ணூற்றாறு பிள்ளைகள் உள்ளார்கள். இந்த ஐந்து அமைச்சர்களும், அவர்களின் தொண்ணூற்றாறு பிள்ளைகளும் தத்தம் விருப்பம் போல நம்மை ஆள முயற்சி செய்வார்கள். இந்த ஐவரும் ஐந்து வகையான உணர்வுகளுடன் நம்மை ஆட்டிப் படைத்தால், அந்த ஐவரையும் காணிக்கை தந்து திருப்திப் படுத்த நம்மால் முடியாது.

#2028. கொல்ல நின்று ஓடும் குதிரை

சொல்லகில் லேன்சுடர்ச் சோதியை நாடொறும்
செல்லகில் லேன்திரு மங்கையு அங்குஉள
வெல்லகில் லேன்புலன் ஐந்துடன் தன்னையும்
கொல்லநின்று, ஓடும் குதிரைஒத் தேனே.


சுடர் விடும் சோதிப் பிரானை நான் நாள் தோறும் துதிக்கும் வல்லமையைப் பெறவில்லை. திருவருள் அம்மையும் அங்கு இருப்பதைப் போற்றும் வல்லமையைப் பெறவில்லை நான். தறிகெட்டு ஓடும் ஐம்புலன்களையும், அவற்றின் வழியே செல்லும் உள்ளத்தையும், கட்டுப் படுத்தும் வலிமையைப் பெறவில்லை . கொல்வதற்கு அழைத்துக் கொண்டு போகும் குதிரையின் மேல் அமர்ந்தவன் போல
ஆனேனே!

#2029. எண்இலி இல்லது ஓர் இன்பமது ஆமே

எண்இலி உடைத்து அவ் இருட்டறை
எண்இலி இல்லியோடு ஏகின் பிழைதரும்
எண்இலி இல்லியோடு ஏகாமை காக்குமேல்
எண்இலி இல்லது ஓர் இன்பமது ஆமே.

உடல் என்னும் இருட்டறை எண்ணற்ற தொளைகளை உடையது. மனம் இந்த எண்ணற்ற தொளைகளின் வழியே வெளியே ஓடிப் புற உலக இன்பங்களை நாடினால் அது உயிரின் குற்றம் ஆகும். ஆனால் உயிர் மனத்தைப் பின்பற்றி எண்ணற்ற தொளைகள் வழியே சென்று பொருள் இன்பத்தை நாடாமல் காத்துக் கொண்டால், எண்ணங்கள் அற்ற தெளிந்த உள்ளத்தில் அளவில்லாத இன்பம் தோன்றும்.

#2030. துதியின் பெருவலி தொல் வானுலகம்

விதியின் பெருவலி வேலைசூழ் வையம்
துதியின் பெருவலி தொல்வா னுலகம்
மதியின் பெருவலி மானுடர் வாழ்க்கை
நிதியின் பெருவலி நீர்வலி தானே.


கடல் சூழ் உலகில் ஒருவன் வாழும் வாழ்வு அவன் செய்த வினைப்பயன்களுக்கு ஏற்ப அமையும். ஈசனைத் துதிப்பதற்கு ஏற்ப அவனுடைய விண்ணுலக வாழ்வு அமையும். ஒருவன் பெற்ற அறிவின் வல்லமைக்கு ஏற்ப அவன் வாழ்வு அமையும். உலக நோக்கை மாற்றி அமைக்கும் வலிமையால் எண்சித்திகள் அமையும்.
 
33. இந்திரியங்களை அடக்கும் முறை

33. இந்திரியங்களை அடக்கும் முறை


2031 to #2034

#2031. இனி யாம் ஏதமிலோமே

குட்டம் ஒரு முழம் உள்ளது, அரை முழம்
வட்டம் அமைந்தது ஓர் வாவியுள் வாழ்வன
பட்டன மீன் பல, பரவன் வலை கொணர்ந்து
இட்டனம் யாம் இனி யேதமி லோமே.

சந்திர மண்டலம் என்னும்குளம் ஒரு முழ அகலமும் அரை முழஆழமும் கொண்டது. இதன் வடிவம் வட்டம். இந்தக் குளத்தில் விஷய வாசனைகள் என்னும் ஏராளமான மீன்கள் வாழ்கின்றன. ஈசன் என்ற வலைஞன் தன் வலையை அந்தக் குளத்தில் வீசினான். வலையில் அங்கிருந்த மீன்கள் எல்லாம் அகப்பட்டு கொண்டு விட்டன. அதனால் நான் துன்பமயமான பிறவிப் பிணியிலிருந்து விடுதலை பெற்று விட்டேன்.

#2032. அடக்கல் உறும் அவன் தானே அமரன்

கிடக்கும் உடலில் கிளர்இந் திரியம்
அடக்கல் உறும் அவன்தானே அமரன்
விடக்கு இரண்டு இன்புற மேவுறு சிந்தை
நடக்கின் நடக்கும், நடக்கும் அளவே.


அறிவு முடங்கிக் கிடக்கையில் உடலில் இந்திரியங்கள் கிளர்த்து எழும். அங்ஙனம் எழுந்து உடல் இன்பத்தை நாடுகின்ற பொறிகளை அடக்கும் வல்லமை படைத்தவனே ஓர் அமரன் ஆவான். உணவு அருந்துதல், பெண்ணுடன் பொருந்துதல் என்ற இந்த இரண்டு இன்பங்களில் ஒருவனது மனம் பொருந்தி இருக்கும் வரை அவன் மூச்சின் இயக்கம் இருந்து கொண்டுதான் இருக்கும். அவனுக்கு பிராண வெற்றி கிடைக்கவே கிடைக்காது.

#2034. முழக்கி எழுவன மும்மத வேழம்

முழக்கி எழுவன மும்மத வேழம்
அடக்க அறிவுஎன்னும் கோட்டையை வைத்தேன்
பிழைத்தன ஓடிப் பெருங்கேடு மண்டிக்
கொழுத்தன வேழம் குலைக்கின்ற வாறே.


ஐம்பொறிகள் ஆகிய யானைகள் மும்மதங்களால் பீடிக்கப்பட்டன. அவை பெருத்த ஓசையுடன் பிளிறிக் கொண்டு எழுந்தன. அறிவு என்ற கோட்டையில் நான் அவற்றை அடைத்து வைத்தேன். என்றாலும் அவை அறிவிக் கோட்டையில் இருந்து தப்பிச் சென்று விட்டன. அவைகள் கேடு விளைவிக்கும் புலங்களில் மண்டி, அங்கு உண்டு கொழுத்து அலைகின்றன.
 
#2035 to #2037


#2035. ஐந்தில் ஒடுங்கில் அரன்பதம் ஆவது

ஐந்தில் ஒடுங்கில் அகல்இடம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அருந்தவம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அரன்பதம் ஆவது
ஐந்தில் ஒடுங்கில் அருள் உடையாரே.


பிரணவம் என்ற ஐந்தில் ஒடுங்கினால் நாதாந்தம் என்னும் அகன்ற இடம் சாதகனுக்கு அனுபவத்தில் கிடைக்கும். இங்ஙனம் பிரணவத்தில் ஒடுங்குவதே தவங்களில் சிறந்த அருந்தவம் ஆகும். இதுவே சிவபதம் அடையும் வழி ஆகும். பிரணவத்தில் ஒடுங்கி நிற்பவரே ஈசனின் அருள் பெற்றவர் ஆவர்.

பிரணவத்தில் உள்ள ஐந்து:-
அகரம் + உகரம் + மகரம் + நாதம் + விந்து


#2036. பெருக்கில் பெருக்கும், சுருக்கில் சுருக்கும்

பெருக்கப் பிதற்றில் என்? பேய்த்தேர் நினைந்து என் ?
விரித்த பொருட்கெல்லாம் வித்து ஆவது உள்ளம்,
பெருக்கில் பெருக்கும்; சுருக்கில் சுருக்கும்;
அருத்தமும் அத்தனை; ஆய்ந்துகொள் வார்க்கே.


நிறைய நிறையப் பேசுவதால் என்ன பயன்? கானல் நீரைப் போன்ற உலகத்தைப் பற்றி எண்ணுவதால்
என்ன பயன் ? உலகத்தில் பரந்து விரிந்து விரவியுள்ள பொருட்கள் அத்தனைக்கும் உள்ளமே ஒரு வித்து ஆகும். உலகத்தைப் பற்றி நினைக்க நினைக்க அது அத்தனை பெரிதாகவும், இன்றியமையாததாகவும் ஆகிவிடும். உலக சிந்தனையை ஒழித்துச் சிவனை நினைத்தால் உலகம் சுருங்கிவிடும். அதன் முக்கியத்துவம் குறைந்துவிடும். நன்கு ஆராய்ந்து அறிந்து கொள்பவருக்கு இதன் உண்மைப் பொருள் விளங்கும்.

#2037. துளைக் கொண்ட அவ்வழி தூங்கும்

இளைக்கின்றவாறு அறிந்து இன்னுயிர் வைத்த
கிளைக்குஒன்றும் ஈசனைக் கேடுஇல் புகழோன்
தளைக்கொன்ற நாகம் அஞ்சு ஆடல் ஒடுக்கத்
துளைக்கொண்டது அவ்வழி தூங்கும் படைத்தே.


பொறிகளின் வழியே சீவன் சென்று அழிந்துபடுவதை அறிந்து கொண்டவன் ஈசன். அது நிகழாமல் தடுக்க அவனே சிவனடியார்கள் என்னும் சிறந்த சுற்றத்தை அமைத்துத் தந்தான். பாசத் தளைகளில் இருந்து விடுபட்ட சீவன், ஐம்பொறிகளையும் அடக்கி, அவற்றின் ஐந்து விதக் குறும்புகளையும் அடக்கிவிட்டு, பிரமரந்திரம் என்னும் உச்சித் தொளையை அடைந்து அங்கு இன்புற்று ஓய்ந்திருக்கும்.
 
#2038 to #2040

#2038. மேலை விதி அது தானே

பாய்ந்தன பூதங்கள் ஐந்தும் படர் ஒளி
சார்ந்திடு ஞானத் தறியினில் பூட்டிட்டு
வாய்ந்து கொள், ஆனந்தம் என்னும் அருள் செய்யில்
வேய்ந்து கொள் மேலை விதி அது தானே.


தூலத் தன்மை மாறிவிட்டால் ஐம்பூதங்கள் சூக்குமத் தன்மையை அடைந்து ஐந்து வகை ஒளியாக மாறிவிடும். அவற்றை மேல்முகமாக நிமிர்ந்து விட்ட, ஞானத்தறி ஆகிய சகசிர தளத்தில் பூட்டி விடுங்கள். ஆனந்த சக்தி உமக்கு வாய்த்தால் அதைச் சென்னி மேல் சூடிக் கொள்ளுங்கள். இதுவே சிறந்த பழமையான நெறி ஆகும்.

#2039. வடக்கொடு தெற்கு மனக் கோயிலாகும்

நடக்கின்ற நந்தியை நாடோறு முன்னில்
படர்கின்ற சிந்தையைப் பைய ஒடுக்கிக்
குறிக்கொண்ட சிந்தை குஏற்கும் றிவழி நோக்கில்
வடக்கோடு தெற்கு மனக்கோயி லாமே.


எல்லா சீவன்களிடமும் பொருந்தி, அவற்றை இயக்குபவன் சிவன். அவனை நாள் தோறும் இடையறாது சிந்தித்து வந்தால், உலக விஷயங்களில் படர்ந்து செல்லும் சிந்தனைகள் மெள்ள மெள்ளத் தாமாகவே ஒடுங்கிவிடும். எண்ணங்களை ஆதாரச் சக்கரங்களின் வழியே செலுத்தினால் தலையில் இடப் பக்கமான வடக்கும், வலப் பக்கமான தெற்கும் ஒரு மனக் கோவிலாக மாறிவிடும்.

#2040. குன்று விழுவதில், தாங்கலும் ஆமே

சென்றன நாழிகை நாள்கள் சிலபல;
நின்றது நீள் பொருள் நீர்மேல் எழுத்து ஒத்து
வென்று புலன்கள் விரைந்து விடுமின்கள்;
குன்று விழுவதில் தாங்கலும் ஆமே.


இந்த சாதனைகளில் பல காலம் கழிந்து போனது. அதன் பிறகு உலகப்பொருட்கள் நீர் மேல் எழுத்தைப் போன்று மறைந்து போயின. புலன்களின் வழியே புறவுலகுக்குச் செல்லும் விருப்பத்தை விரைவாக விட்டு விடுங்கள். அப்போது உங்களால் ஒரு குன்று விழுந்தாலும் அதைத் தாங்க இயலும்.
 
#2041 to #2043

#2041. நாதனை உள்ளத்து ஒருங்கலும் ஆமே

போற்றிசைத் துப்புனி தன்திரு மேனியைப்
போற்றி செய்; மீட்டே புலன் ஐந்தும் புத்தி யால்;
நால் திசைக்கும், பின்னை, யாருக்கும் நாதனை
ஊற்றுகை உள்ளத்து ஒருங்கலும் ஆமே.


சகசிர தளத்தில் விளங்குபவன் ஈசன். போற்றியும் இசைத்தும் அந்தப் புனிதனின் திருமேனியைப் போற்றுங்கள். புறவுலகை நாடிச் செல்லும் ஐம்பொறிகளை புத்தியால் அடக்கி நாதனைத் தொழுவீர். நான்கு திசைகளுக்கும் அவனே நாதன். எல்லாவற்றுக்கும் அவனே நாதன். அப்போது அமுதம் போல இன்பத்தைச் சுரக்கும் உள்ளத்தில் ஒடுங்கி இன்புறலாம்.

#2042. சகளத்தினுள்ளே அரிக்கின்ற ஐவர்

தரிக்கின்ற நெஞ்சம் சகளத்தி னுள்ளே
அரிக்கின்ற ஐவரை யாருமுணரார்
சிரிக்கின்ற வாறு சிலபல பேசில்
வரிக்கொண்ட மைசூழ் வரையது வாமே
.

சீவனின் உடலில் பொருந்தியுள்ள அவன் உள்ளத்தின் உதவியுடன், அவனை அரித்துத் தின்கின்றன ஐந்து பொறிகள். இந்த ஐந்து கள்வர்களை எவரும் உணர்ந்து கொள்வதே இல்லை! நாம் நகைப்புக்கு இடமாகின்ற உலக விஷயங்களையே பேசிக் கொண்டு இருக்கும் வரை, அண்டகோசம் என்னும் உயர்ந்த இடம் எப்போதும் கரிய கனத்த இருளால் சூழப்பட்டே இருக்கும்.

#2043. கருத்தினுள் எய்தியவனை இசையால் ஏத்துமின்

கைவிடல் ஆவது ஒன்று இல்லை கருத்தினுள்
எய்தியவனை இசையால் ஏத்துமின்;
ஐவருடைய அவாவினில் தோன்றிய
பொய்வருடைய புலன்களும் ஐந்தே.


ஐம்பொறிகளை அடக்கி விட்ட பின்பு, விட்டு விடுவதற்கு என்று எதுவுமே இராது. உள்ளத்தில் வந்து பொருந்தியுள்ள ஈசானை நேசத்துடன் இனிய இசையால் ஏத்துங்கள். இல்லையென்றால் பொய்யான விஷயங்களைச் சென்று பொருந்துவதற்கு ஐம்பொறிகள் ஆவல் கொள்ளும்.
 
34. அசற்குரு நெறி

நல்ல மார்க்கத்தை அறியாத ஒரு குரு.
சற்குருவின் எதிர்மறைச் சொல் அசற்குரு


#2044 to #2048

#2044. உண்மை ஓராதோன் அசற்குரு

உணர்வு ஒன்று இலா மூடன் , உண்மை ஓராதோன்
கணுவின்றி வேதாகம நெறி காணான்
பணிவு ஒன்று இலாதோன், பரநிந்தை செய்வோன்
அணுவின் குணத்தோன் அசற்குகு வாமே
.

சிவனை உணர்ந்திராதவன், அறிவில்லாத மூடன், மெய்ப் பொருளை ஆராயாதவன், வேதங்கள் ஆகமங்களைக் கற்றுத் தெளியாதவன், பணிவு என்பதே இல்லாதவன், பிறரை நிந்திப்பவன், உலக வாழ்வைத் தன் குறிக்கோளாக உடையவன் அசற்குரு ஆவான்.

#2045. அந்தகர் ஆவோர் அசற்குரு

மந்திர தந்திர மாயோக ஞானமும்
பந்தமும் வீடும் தரிசித்துப் பார்ப்பவர்
சிந்தனை செய்யாத் தெளிவியா தூண் பொருட்டு

அந்தக ராவோர் அசற்குரு வாமே.

மந்திரம், தந்திரம், சிறந்த யோகம், ஞானம், பாசம், முக்தி இவற்றைச் சிந்தித்து அறிந்து கொள்வதற்கு எந்த முயற்சியும் செய்யாமல், உண்மை ஞானம் பெறுவதற்கு சிறிதும் முயற்சி செய்யாமல், வயிறு வளர்ப்பதற்காகத் திரிபவன், ஒரு குருடனக்கு ஒப்பான அசற்குரு ஆவான்.

#2046. காமாதி நீங்காதவன் அசற்குரு

ஆமாறு அறியாதோன், மூடன், அதிமூடன்,
காமாதி நீங்காக் கலதி, கலதிகட்கு
ஆமாறு அசத்து அறிவிப்போன் அறிவு இலோன்
கோமான் அலன்; அசத்து ஆகும் குரவனே.


முக்தி அடைவிக்கும் வழியை அறியாதவன், அறிவில்லாதவன், அறிவற்ற செயல்களைச் செய்பவன்,
காமம், குரோதம், மோகம், லோபம், மதம், மாற்சரியம் என்னும் மன மலங்கள் அகலாதவன், கீழ் மக்களுக்கு மெய்யை அறிவுறுத்தாமல் பொய்யைக் கற்பிக்கின்றவன், இவன் சிறந்த சற்குருவாக மாட்டான். இவன் ஓர் அசற்குரு ஆவான்.

#2047. கற்பாய கற்பங்கள் நீங்காமல் கற்பித்தால் அசற்குரு

கற்பாய கற்பங்கள் நீங்காமல் கற்பித்தால்
தற்பாவங் குன்றும் தனக்கே பகையாகும்
நற்பா லாரசுக்கு நாட்டுக்குங் கேடென்ற
முற்பாலே நந்தி மொழிந்து வைத்தானே.


கற்பனைகள் தோற்றுவிக்கும் உலக வாழ்வைப் பற்றிய சிந்தனை நீங்காமல், ஒரு குரு மந்திர உபதேசம் செய்தால், அதில் சிவபாவம் சிறப்பாக வெளிப்படாது. அது அவனுக்கு கேடாக முடியும். சிவபாவமுமும், உலக போகமும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டு எதிர் மறையானவை. அதனால் தீமையே விளையும். இத்தகைய அசற்குரு வாழும் நாடும் கேடுறும் என்று அன்றே என் நந்திப் பெருமான் கூறியுள்ளான்.

#2048. குருடருக்குக் கோல் காட்டும் குருடன் அசற்குரு

குருடர்க்குக் கோல்காட்டிச் செல்லும் குருடர்
முரணும் பழங்குழி வீழ்வார்கள் முன்பின்
குருடரும் வீழ்வார்கள் முன்பின் அறவே
குருடரும் வீழ்வார் குருடரோ டாகியே.


ஒரு குருடனுக்குக் கோல் காட்டிச் செல்லும் இன்னொரு குருடன், தான் அறியாத வழியில் செல்லும் போது பழைய குழியில் விழுந்து விடுவான். அவன் கோலைப் பற்றிக் கொண்டு வந்த குருடனும் அதே குழியில் விழுவான் .அது போன்றே ஞானம் பெறாத ஓர் அசற்குரு காட்டும் வழியில் செல்கின்ற அறிவில்லாத மாணவர்கள் அந்த அசற்குருவுடன் ஒரு சேரக் குழியில் வீழ்வர்.
 
35. சற்குரு நெறி

‘சத்’ என்னும் உண்மைப் பொருளை உணர்ந்த ஒரு நல்ல குரு சற்குரு.

#2049 to #2052

#2049. பாசம் தணிப்பவன் சற்குரு

தாள்தந்து அளிக்கும் தலைவனே சற்குரு
தாள்தந்து தன்னை அறியத் தரவல்லோன்
தாள்தந்து தத்துவாதீதத்துச் சார்சீவன்
தாள்தந்து பாசம் தணிக்குமவன் சத்தே.


சிவத்தின் திருவடி ஆகிய சிவ உணர்வை, ஒரு உத்தம குரு, தன் சீடன் தலையின் மீது பதிக்கும் ஆற்றல் பெற்றவனாக இருக்க வேண்டும். அத்தகைய உத்தம குரு சிவன் திருவடி உணர்வைத் தந்து சீவன் தன் உண்மையான வடிவத்தை அறியச் செய்யும் ஆற்றல் பெற்றவன். சிவன் தாளைத் தந்து, சீவனை முப்பத்தாறு தத்துவங்களையும் கடக்கச் செய்பவன் சற்குரு. சீவனின் பாசத் தளையை அகற்றி
அவனுக்கு ஞானம் அளிக்க வல்லவன் சற்குரு.

#2050. தவிர வைத்தான் பிறவித் துயர்

தவிரவைத் தான்வினை தன்அடி யார்கோள்
தவிரவைத் தான் சிரத்தோடு தன் பாதம்;
தவிரவைத் தான் நமன் தூதுவர் கூட்டம்;
தவிரவைத் தான்பிற வித்துயர் தானே.

ஒரு சற்குரு தன்னிடம் உபதேசம் பெறும் மாணவனின் தீவினைகள் நீங்கும்படித் திருவருள் செய்வான்.
நாடி வருகின்ற தீமைகள் அகன்று செல்லுபடி அவன் தன் மாணவனின் சிரசின் மீது தன் திருவடிகளைச் சூட்டி அருள் செய்வான். யமனும் அவன் தூதுவர்களும் தன் மாணவனை அணுகாத வண்ணம் சற்குரு காப்பாற்றுவான். அவன் தன் மாணவனின் பிறவித் துன்பம் நீங்கும்படிச் செய்வான்.

#2051. மறித்துப் பிறவியில் வந்து அணுகாரே

கறுத்த இரும்பே கனகம்அது ஆனால்
மறித்து இரும்புஆகா வகையது போலக்
குறித்தஅப் போதே குருவருள் பெற்றால்
மறித்துப் பிறவியில் வந்து அணுகாரே.


ரசவாதத்தால் கரிய இரும்பு பொன்னாக மாறும். ஆனால் ஒரு போதும் அது மீண்டும் இரும்பாக மாறாது. அது போன்றே பக்குவம் அடைந்து குருவருள் பெற்றுவிட்ட மாணவன், மீண்டும் பிறவிச் சுழலில் வந்து சிக்கிக் கொள்ள மாட்டான்.

#2052. நேசத்து நாடி மலமற நீக்குவோர்

பாசத்தை நீக்கிப் பரனொடு தன்னையும்
நேசத்து நாடி மலமற நீக்குவோர்
ஆசற்ற சற்குரு ஆவோ ரறிவுற்றுப்
பூசற் கிரங்குவோர் போதக் குருவன்றே.


மாணவனின் பாசத் தளைகளை நீக்கிவிட்டு, சிவனுக்கும் சீவனுக்கு உள்ள தொடர்பை நேசத்துடன் நாடச்
செய்து, அவன் மனமலங்களை நீக்குபவன் ஒரு சற்குரு. சிவ அனுபவம் சிறிதும் பெறாமல், வீண் ஆரவாரத்துடன் பிறரிடம் விதண்டா வாதம் செய்பவன் ஒரு நல்ல குரு அல்ல.
 
#2053 to #2056

#2053. நேயர்க்கு அளிப்பவன் நீடும் குரவனே

நேயத்தே நிற்கும் நிமலன், மலம் அற்ற
நேயத்தை நல்கவல் லோன், நித்தன், சுத்தனே
ஆயத்தவர் தத்துவம் உணர்ந்தாங்கு அற்ற
நேயர்க்கு அளிப்பவன் நீடும் குரவனே.


நேயப் பொருள் ஆகிய சிவனுடன் பொருந்தி இருக்கும் மலம் நீங்கிய ஒரு சற்குருவே தன் மாணவனுக்கும் மலம் நீங்கிய நேயப் பொருளாகிய சிவத்தை நல்க இயலும். அத்தகைய குரு நித்தியன், அவன் சுத்தன். அவன் தன் மாணவர்களின் மனப் பக்குவத்தை ஆராய்ந்து அறிந்து கொண்டு , குணம் குறைந்தவரின் குறைகளைப் போக்கும் சிறந்த குரு ஆவான்.

#2054. திரிமலம் தீர்ந்து சிவகதி ஆகும்

பரிசன வேதி பரிசித்த தெல்லாம்
வரிசை தரும் பொன் வகையாகு மாபோல்
குருபரி சித்த குவலய மெல்லாம்
திரிமலந் தீர்ந்து சிவகதி யாமே.


பரிசன வேதி என்னும் ரசவாதம் செய்யும் பொருள் தொட்ட பொருட்கள் எல்லாம் மேன்மை பெற்ற தூய பொன்னாக மாறிவிடும். அது போன்றே சற்குருவின் திருவடி பட்ட உலகத்தவர் யாவரும் தங்கள் மும் மலங்கள் அழியப் பெற்று சிவகதியை அடைவார்கள்.

#2055. தானே என்று நின்ற சற்குரு

தானே என் நின்ற சற்குரு சந்நிதி
தானே என நின்ற தன்மை வெளிப்படின் ,
தானே தனைப் பெற வேண்டும் சதுர்பெற
ஊனே எனநினைந்து ஓர்ந்துகொள் உன்னிலே.


தானே சிவன் என்பது போல் உள்ள சற்குருவின் சந்நிதியில், ஆன்மா தன் உண்மை நிலையைத் தானே உணர்ந்து கொள்ளும். நீயும் ஆன்மாவின் உண்மை நிலையை அறிந்து கொள்ள விரும்பினால், உன் சற்குருவை. உடலுடன் உன் எதிரே வந்து நிற்கும் சிவன் எனக் கருதுவாய் ஆகுக!

#2056. கருவழி கண்டவர் காணாத வழி

வரும்வழி போம்வழி மாயா வழியைக்
கருவழி கண்டவர் காணா வழியைப்
பெருவழி யாநந்தி பேசும் வழியைக்
குருவழி யேசென்று கூடலு மாமே.

பிறக்கும் வழி, போகும் வழி, இவை இரண்டும் அல்லாத இறவாத வழி ஒன்று உள்ளது. இதனைக் கரு இடுவதையே தம் வாழ்வின் செயலாகக் கொண்டவர் அறிகிலர். இந்த இறவாத வழியை, நந்திப் பிரான் ஏத்திப் புகழும் வழியை அடைவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? சிவானுபவம் மிக்க ஒரு சற்குரு காட்டும் பாதையில் நடந்து சென்றாலே போதும்.
 
#2057 to #2060

#2057. பாசம் நீக்குபவன் நல் குரவன்

குருவென் பவனே வேதாக மம்கூறும்
பரவின்ப னாகிச் சிவயோகம் பாவித்து
ஒருசிந்தை யின்றி உயர்ப்பாசம் நீக்கி
வருநல் குரவன்பால் வைக்கலு மாமே.


சிவகுரு என்பவன் வேதங்கள், ஆகமங்கள் கூறும் பேரின்ப வடிவானவன். அவ்வடிவினன் உயரிய சிவயோகத்தைச் சீவனிடம் கொண்டு சேர்ப்பான். திருவடி உணர்வு பெற்ற அந்த சீவனிடம் வேறு எந்த சிந்தனைகளும் உண்டாவதில்லை. சீவனின் பாசத் தளைகளை அகற்றி, அவனை உயர்வடையச் செய்து சிவனிடம் கொண்டு சென்று சேர்ப்பவன் ஒரு சற்குரு.

#2058. சிவபரத்தே சேர்ப்பவன் சற்குரு

சத்தும் அசத்தும் சதசத்தும் தான் காட்டிச்
சித்தும் அசித்தும் சிவபரத்தே சேர்த்துச்
சுத்தம் அசுத்தம் அறச்சுக மானசொல்
அத்தன், அருட்குரு வாமனன் கூறிலே.


சத்து (அழிவற்ற சிவம்), அசத்து (அழிகின்ற மாயையின் காரியங்கள்), சதசத்து (ஆன்மா) என்ற இந்த மூன்று பொருட்களின் உண்மை இயல்பை உணர்த்துபவன் சற்குரு. சித்து (அறிவு மயம்) ஆகிய ஆன்மாவையும், அசித்து (அறிவற்றவை) ஆகிய முப்பத்தாறு தத்துவங்களையும், சிவத்துடன் சேர்ப்பவன் சற்குரு. சுத்த மாயை, அசுத்த மாயை என்ற இரண்டும் விலகும்படி இன்ப வடிவாகிய பிரணவத்தை உபதேசம் செய்பவன் சற்குரு.

#2059. தற்பரம் மேவுவோன் சாதகன் ஆவான்

உற்றிடும் ஐம்மலம் பாசம் உணர்வினால்
பற்றுஅறு நாதன் அடியில் பணிதலால்
சுற்றிய பேதம் துரியம் மூன்றால் வாட்டித்
தற்பரம் மேவுவோன் சாதக ராமே.


பாச உணர்வினால் சீவனிடம் ஐந்து மலங்கள் வந்து பொருந்தும். அவை ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி எனப்படும். நாதனின் அடிகளைப் பணிவதால் சீவனின் பற்று அற்று விடும். ஆன்மாவைச் சுற்றி இருப்பது பேத ஞானம். இதை மூன்று வகைத் துரியங்களால் அழித்து விட்டு மேலான தற்பரத்தைச் சென்று மேவுபவர் மேலான சாதகர் ஆவார்.

மூன்று வகைத் துரியம்:-
1. சீவ துரியம்
கேவல நிலையில் கனவு, நனவு, உறக்கம் என்ற மூன்று நிலைகளையும் தாண்டிய நிலை.
2. சிவ துரியம்
பரத்தின் நிலை போலச் சிவத்துக்கு நின்மலத்தில் அமையும் நிலை
3. பர துரியம்
சகல நிலையில் சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி என்னும் நிலைகளையும் தாண்டிய நிலை


#2060. செல்ல சிவகதி சேர்த்தல் விளையாட்டே

எல்லாம் இறைவன் இறைவி உடன் இன்பம்;
வல்லார் புலனும்; வருங்கால் உயிர்தோன்றிச்
செல்லா மலம் ஐந்து அடங்கியிட்டு ஓங்கியே
செல்லாச் சிவகதி சேர்த்தல் விளையாட்டே.


சீவன்கள் அனைவரும் இன்பம் அனுபவிப்பதற்குத் தேவையான வலிமை மிகுந்த புலன்களுடன் தோன்றியுள்ளன. அவை இன்பம் நுகரச் செல்கையில், இறைவனும் இறைவியும் அந்த சீவனின் உள்ளத்தே வந்து தோன்றினர். அதனால் சொல்லாமலேயே அந்தச் சீவனின் ஐந்து மலங்களும் அகன்று சென்றன. சீவன் மீண்டும் வராத சிவகதியை அடையச் செய்வது சிவசக்தியருக்கு ஒரு விளையாட்டே!
 
#2061 to #2063

#2061. மோனத்துள் வைத்தல் முத்தன் செய்கையே

ஈனப் பிறவியில் இட்டலும் மீட்டு ஊட்டி,
தானத்துள் இட்டுத் தனை ஊட்டித் தாழ்த்தலும்
ஞானத்துள் மீட்டலும், நாட்டலும் வீடுற்று
மோனத்தில் வைத்தாலும் முத்தன்தன் செய்கையே.


அனைத்தும் அவன் செயலே! சீவனை ஓர் இழிந்த பிறவியில் செலுத்துவது; பிறகு அதிலிருந்து அந்தச் சீவனை மீட்பது; போகத்தை அனுபவிக்கச் செய்வது; உயர்ந்த தானத்தில் கொண்டு இடுவது; அந்தப் பதவிகளின் இன்பத்தை அளிப்பது; மீண்டும் பிறவிக்கு கடலில் உந்துவது; மீண்டும் சிவஞானம் தருவது; வீடுபேற்றைத் தருவது; மோனப் பெருவாழ்வை அளிப்பது இவை அனைத்துமே முத்தியைத் தருகின்ற அத்தனின் செயல்களே.

#2062. அத்தனின் அருள் விளையாட்டு

அத்தன் அருளின் விளையாட்டு இடம் சடம்
சித்தொடு அசித்து அற, தெளிவித்துச் சீவனைச்
சுத்தனும் ஆக்கித் துடைத்து மலத்தினைச்
சத்துடன் ஐங்கரு மத்துஇடும் தன்மையே.


ஐந்தொழில்களைப் புரிந்து சிவன் விளையாடும் இடம் சீவனின் உடலாகிய சடம். சிவன் புரியும் இந்த ஐந்தொழில்களின் நோக்கம் தான் என்ன?

சீவனுக்கு அறிவை அளித்து, அதன் அறியாமையை அகற்றி, சீவனைத் தெளிவித்து, சீவனின் மலத்தினைப் போக்கி, அவனைத் தூய்மை உடையவன் ஆக்கித் தன்னுடன் இணைத்து கொள்வதே சிவன் ஆற்றும் ஐந்தொழில்களின் நோக்கம் ஆகும்.

#2063. ஈசன் நேசத்துள்ளே நின்ற நின்மலன்

ஈசத் துவங்கடந் தில்லையென் றப்புறம்
பாசத்து ளேயென்றும் பாவியும் அண்ணலை
நேசத்து ளேநின்ற நின்மலன் எம்மிறை
தேசத்தை எல்லாம் தெளியவைத் தானே.


ஈசத்துவம் என்ற நிலையைக் கடந்து வேறு எதுவுமே இல்லை. அப்புறமாய் நிற்கும் அண்ணலைப் பாசம் உள்ளபோதே பாவியுங்கள். அவனைப் பற்றி நில்லுங்கள். நேசத்துள் நிற்கும் நின்மலன் ஈசன் பாசத்தில் பொருந்தினாலும் அதில் ஒட்டிக் கொள்ள மாட்டான். அவனே இந்த தேசத்தை எல்லாம் ஒளி மயம் ஆக்கினான்.
 

Latest posts

Latest ads

Back
Top