• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

திருமந்திரம் - ஐந்தாம் தந்திரம்

1. சுத்த சைவம்

ஐந்தாம் தந்திரம்1. சுத்த சைவம்

சடங்குகளோடு நின்று விடாமல் பதி (தலைவன்), பசு (சீவன்), பாசம் (தளை) இவற்றை நன்கு உணர்ந்து கொண்டு தளைகளிலிருந்து நீங்கித் தலைவனை அடைவது சுத்த சைவம்.

சைவத்தில் சுத்த சைவம், அசுத்த சைவம், மார்க்க சைவம், கடுஞ் சுத்த சைவம் என்று நான்கு வகைகள் உண்டு


#1419 to #1422

#1419. இறைவன் பெருமை

ஊரு முலகமும் ஒக்கப் படைக்கின்ற
பேரறி வாளன் பெருமை குறித்திடின்
மேருவு மூவுல காளியி லங்கெழுந்
தாரணி நால்வகைச் சைவமு மாமே.

ஊர், உலகங்களை ஒரு சேரப் படைக்கும் பேரறிவாளன் பெருமையைக் கூறப்புகுந்தால் மேரு மலையும், மூவுலகாளும் இறைவன் தோற்றுவித்த உலகமும், நால் வகைச் சைவமும் இவன் பெருமைக்கு சமமானவை.
விளக்கம்
மேருமலையின் உயரத்தைம், உலகின் அகலத்தையும், சமயத்தின் ஆழத்தையும் ஒருங்கே கொண்டவன் ஈசன்.

#1420. சிவமாதல் சுத்த சைவம்

சத்துஅ சத்தும் சதசத்தும் தான்கண்டு
சித்துஅ சித்தும் சேர்வுறா மேநீத்தும்
சுத்த மசுத்தமுந் தோய்வுறா மேநின்று
நித்தம் பரஞ் சுத்த செய்வார்க்கு நேயமே.

அழியும் பொருள் எது, அழியாத பொருள் எது என்ற வேறுபாட்டினை அறிந்து கொள்ள வேண்டும். அறிவும் அறியாமையும் ஒன்று சேராமல் இருத்த வேண்டும். சுத்த மாயை அசுத்த மாயை என்னும் இரண்டிலும் பொருந்தாமல் நிற்க வேண்டும். நித்தமும் நித்தியமான பரம்பொருளான இறைவனைப் பார்த்தபடி இருப்பது சுத்த சைவருக்கு ஏற்றது.

சத்து = உண்மைப் பொருள் = சிவபெருமான்.
அசத்து = பொய்யானது = பாசம்
சதசத்து = ஆன்மா = உயிர் = சீவன்
சித்து = அறிவு
அசித்து = அறியாமை

#1421. சைவ சிந்தாந்தர் யார்?

கற்பன கற்றுக் கலைமன்னும் மெய்யோகம் ,
முற்பத ஞானம் முறை முறை நண்ணியே
சொற்பதம் மேவி, துரிசு அற்று மேலான
தற்பரம் கண்டுளோர் சைவசித் தாந்தரே.

கற்க வேண்டியவற்றைக் கற்க வேண்டும். பதினாறு கலைகளை உடைய சந்திர கலையை அறிந்து கொள்ள வேண்டும். சிவ யோகத்தைப் பயில வேண்டும். அகர, உகர, மகர விந்து நாதங்களைப் பற்றிய சரியான அறிவைப் பெற வேண்டும். பிரணவத்தைப் புரியவைக்கும் சந்தீயாதீத கலைகளில் பொருந்த வேண்டும். மாயையை விலக்கி விட்டு உண்மைப் பொருளான சிவனைக் காண்பவர் உண்மையான சைவ சிந்தாந்தர் ஆவர்.

#1422. அறிந்து கொள்ள வேண்டியது யாது?

வேதாந்தஞ் சுத்தம் விளங்கிய சித்தாந்தம்
நதாந்தங் கண்டோர் நடுக்கற்ற காட்சியர்
பூதாந்தம் போதாந்த மாகப் புனஞ்செய்ய
நாதந்த பூரணர் ஞானதே யத்தரே.


சுத்த சைவ சித்தாந்தமே வேதாந்தம் ஆகும். இந்த நல்ல நெறியில் நிற்பவரே நாதாந்தமாகிய சிவனைத் தரிசிப்பவர்கள். அவர்கள் எந்த விதச் சலனமும் இன்றி உலகில் வாழ்வர். பூதாந்தமாகிய தத்துவ முடிவைப் போதாந்தமாகப் (ஞான மயமாகப் ) பயன்படுத்தினால் நாதாந்ததில் பூரணனாகிய சிவன் நம்மால் அறியப்படவேண்டிய பொருள் ஆவான்

 
திருமந்திரம் - ஐந்தாம் தந்திரம்

2. அசுத்த சைவம்


2. அசுத்த சைவம்

சைவ வேடம் பூண்டுச் சரியை, கிரியை என்னும் இரண்டு நெறியில் நிற்பவர்களைப் பற்றிக் கூறுவது அசுத்த சைவம் ஆகும்.


#1423 to #1426
#1423. சரியை கிரியையினர்

இணைஆர் திருவடி ஏத்தும் சீர் அங்கத்து
இணைஆர் இணைக்குழை, ஈரணை முத்திரை
குணம் ஆர் இணைக் கண்டமாலையும் குன்றாது
அணைவாம் சரியை கிரியை யினார்க்கே.

இறைவனின் இணையடிகளைச் சரியை கிரியை என்பவற்றால் தொழும் அடியவர்களின் அடையாளங்கள் இவை ஆகும். ஒவ்வொரு காதிலும் இரண்டு இரண்டாகப் பொருந்தியுள குண்டலங்கள்; திருநீற்றுப் பூச்சு; தலையில் அணியும் உருத்திராக்க மாலை; கண்டத்தில் அணியும் செப மாலை, கண்ட மாலை என்னும் இரண்டு மாலைகள்.
சரியை – இது உடலால் இறைவனுக்குத் தொண்டு செய்வது
கிரியை – இது உடலாலும் உள்ளத்தாலும் இறைவனை வழிபடுவது.

#1424. அசுத்த சைவரில் ஒருவகை

காதுப்பொ னார்ந்த கடுக்க னிரண்டுஞ்ச் சேர்த்
தோதுந் திருமேனி யுட்கட் டிரண்டுடன்
சோதனை செய்து வுபதேச மார்க்கராய்
ஓதி இருப்பார் ஒரு சைவ ராகுமே.


காதில் பொன்னால் ஆகிய இரண்டு கடுக்கன்கள் அணிந்து கொண்டு ; இடையில் ஓராடை, மேலே ஓராடை அணிந்து கொண்டு; அத்துவா சோதனை செய்து கொண்டு; குருவுடம் உபதேசம் பெற்றுக் கொண்டு; சைவ ஆகமங்களைச் சொல்லிக் கொண்டு இருப்பவர் அசுத்த சைவர்களில் ஒரு வகையினர் ஆவர்.

#1425. கடுஞ் சுத்த சைவர்

கண்டங்க ளொன்பதும் கண்டவர் கண்டனர்
கண்டங்க ளொன்பதும் கண்டா யாரும்பொருள்
கண்டங்க ளொன்பதும் கண்டவர் கண்டமாம்
கண்டங்கள் கண்டோர் கடுஞ் சுத்த சைவரே.


மண், நீர், ஒளி, வளி, வெளி, கதிரவன், திங்கள், அக்கினி, விண்மீன் என்னும் ஒன்பதும் நம் உடலிலும் உள்ளன என்று அறிந்து கொண்டவர் அறிய வேண்டியவற்றை அறிந்து கொண்டவர் ஆவர். நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன், விந்து, நாதம், சக்தி, சிவன் என்னும் ஒன்பதாக விளங்கும் மேலான சிவத்தை அறிந்து கொண்டவர் அறிய வேண்டியவற்றை அறிந்து கொண்டவர் ஆவர். இங்கனம் ஒன்பதாக விளங்கும் சிவத்தைத் தமக்குளே கண்டு கொண்டவர் உலகங்கள் அனைத்தையும் கண்டு கொண்டவர் ஆவர்.

#1426. ஞானியர் அறிவாற்றல் உடையவர்

ஞானி புவியெழு நன்னூ லனைத்துடன்
மோன திசையு முழு வெண்ணெண் சித்தியும்
ஏனை நிலமு மெழுதா மறையீறும்
கோனொடு தன்னையும் காணும் குணத்தனே.

ஞானியர் உலகில் தோன்றும் ஞான நூல்கள், மோன நிலை, எண் பெரும் சித்திகள், பிற உலகங்களைப் பற்றிய அறிவு, உபநிடத அறிவு இவை மட்டுமன்றிச் சிவனையும், தன்னையும் நன்கு அறிந்து கொள்ளும் அறிவாற்றல் பெற்றவர்.


 
திருமந்திரம் - ஐந்தாம் தந்திரம்

3. மார்க்க சைவம்


சைவ மார்க்கத்தில் நின்று; வேதாந்தம் , சித்தாந்தம் இவற்றில் நுண்ணிய அறிவு பெற்று, தன் ஆத்ம போதம் முற்றும் இழந்து சிவபோதத்திலேயே நிலைத்திருப்பது மார்க்க சைவம்.

#1427 to #1430


#1427. சுத்த சைவ நெறியினரின் ஒழுக்கம்

பொன் னாற்சிவ சாதனம், பூதி சாதனம்,
நன்மார்க்க சாதனம், மாஞான சாதனம்,
துன்மார்க்க சாதனம் தோன்றாத சாதனனம்
சன்மார்க்க சாதனமாம் சுத்த சைவர்க்கே.


பொன்னால் செய்யப்பட்ட உருத்திராக்கம் அணிதல், திருநீற்றுப் பூச்சு, ஞான சாதனமாகிய ஐந்தெழுத்து மந்திரம், தீயவருடன் சேராமல் நல்லவர்களுடன் சேர்ந்து இருத்தல் இவை சுத்த சைவ நெறி பற்றியவருக்கு உரிய சன்மார்க்கம் ஆகும்.

#1428. ஞானி எனப்படுபவர் யார்?

கேடறு ஞானி கிளர்ஞான பூபதி
பாடறு வேதாந்த சித்தாந்த பாகத்தின்
ஊடுறு ஞானோ தயனுண்மை முத்தியோன்
பாடுறு சுத்தசை வப்பத்த நித்தனே.


குற்றங்கள் நீங்கிய ஒரு ஞானி ஒளிரும் ஞானத்துக்கு மன்னன் ஆவான். துன்பங்களைப் போக்கும் வேதாந்த சித்தாந்தங்களில் சிறந்தவன் உண்மையான முத்தி நிலையை அறிந்தவன் ஆவான். சிறந்த சுத்த சைவத்தில் பற்றுக் கொண்டவன் அழிவில்லாத நித்தியன் ஆவான்.

#1429. சுத்த சைவமும் ஆகமங்களும்

ஆகமம் ஒன்பான், அதில் ஆன நால் ஏழு,
மோகம் இல் நாலேழும் முப்பேதம் உற்று உடன்
வேகம் இல் வேதாந்த சித்தாந்த மெய்ம்மை ஒன்று
ஆக முடிந்த அருஞ் சுத்த சைவமே.


ஆகமங்கள் ஒன்பது:
(1). காரணம், (2). காமிகம் (3). வீரம் (4). சிந்தம் (5). வாதுளம் (6). யாமளம் (7). காலோத்தரம் (8) சுப்பிர பேதம் (9) மகுடம்.

இவையே பின்பு விரிவடைந்து இருபதெட்டு ஆகமங்களாயின. அவை
சைவம், ரௌத்திரம், ஆரிடம் என்று மூன்று வகைகள் ஆயின. சுத்த சைவருக்கு வேதாந்தம், சித்தாந்தம், உண்மை என்ற மூன்றும் ஒன்றாயின.

#1430. அத்தனின் அருட்சக்தியே அம்மை

சுத்தம் அசுத்தம் துரியங்கள் ஓர்ஏழும்
சத்தும் அசத்தும் தணந்த பராபரை
உய்த்த பராபரை உள்ளாம் பராபரை
அத்தன் அருட்சத்தி யாய்எங்கும் ஆமே.


பிறவிக்கு முன்பும், சீவன் பிறவி எடுத்த பின்பும் ஆன்மா மொத்தம் ஏழு வேறு பட்ட நிலைகளில் இருக்கும். அவை சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம் என்னும் ஐந்து வேறுபட்ட நிலைகளில் அடங்கும். இவற்றையும், சத்து, அசத்து என்பவற்றையும் கடந்து விளங்கும் பராபரையே சீவனைச் செலுத்துபவள். அவளே சீவனின் உயிரில் உயிராகப் பொருந்தி இருப்பவள். அவள் சிவனின் அருட் சக்தியாக எங்கும் பரவியும், விரவியும், நிறைந்தும் உள்ளாள்.



 
திருமந்திரம் - ஐந்தாம் தந்திரம்

#1431 to #1434

#1431. ஞானி எல்லாம் வல்ல சித்தர் ஆவார்

சத்தும் அசத்தும் தணந்தவர் தான் ஆகிச்
சித்தும் அசித்தும் தெரியாச் சிவோகமாய்,
முத்தியுள், ஆனந்த சத்தியுள் மூழ்கினோர்
சித்தியும் அங்கே சிறந்துள தானே.


சத்து, அசத்து என்ற இரண்டையும் கடந்துவிட்ட ஒரு ஞானி; அறிவு, அறியாமை என்னும் இரண்டையும் கடந்து; ‘நானே சிவம்’ என்னும் உயரிய நிலையினை அடைவார். சீவனும், சிவனும் ஒன்றிவிட்ட முத்தி நிலையில், ஆனந்த சக்தியுள் மூழ்கி இருக்கும் அவரிடம் அனைத்துச் சித்திகளும் தாமே சிறந்து விளங்கும்.

#1432. சுத்த சைவர் உபாயம்

தன்னைப் பரனைச் சதாசிவ னென்கின்ற
மன்னைப் பதிபசு பாசத்தை மாசற்ற
முன்னைப் பழமல முன்கட்டை வீட்டினை
உன்னத் தகுஞ்சுத்த சைவர் உபாயமே.

ஆன்மாவாகிய தன்னையும், பரனாகிய சிவனையும், சதாசிவன் என்னும் மன்னனையும், பதி, பசு, பாசம் என்ற மூன்றினையும், அனாதியாகிய பாசத் தளையினையும், முத்தி நிலை என்னும் வீடு பேற்றினையும் தடைகளை நீக்கும் வழிகளாகக் கருதுவர் சுத்த சைவர்.

#1433. ஆன்ம போதம் கெட்டால் சிவ போகம் கிட்டும்

பூரணம் தன்னிலே வைத்துஅற்ற அப்போதம்
ஆரணம் அந்தம் மதித்து, ஆனந்தத்தோடு
நேரென ஈராறு நீதி நெடும் போகம்
காரணம் ஆம்சுத்த சைவர்க்குக் காட்சியே.


பூரணனாகிய சிவத்தில் சித்தத்தைப் பொருத்த வேண்டும். ஆன்ம போதத்தை அறவே அழிக்க வேண்டும். வேதாந்தத்தைப் பெரிதாக எண்ண வேண்டும். இதைச் செய்யும் சுத்த சைவர், துவாதசாந்த நிலையில் உயரிய சிவபோகம் அடைந்து அதில் திளைப்பர்.

#1434. மார்க்க சைவ ஞானி

மாறாத ஞான மதிப்பற மாயோகத்
தேறாத சிந்தையைத் தேற்றிச் சிவமாக்கிப்
பேறான பாவனை பேணி நெறி நிற்றல்
கூறாகும் ஞானி சரிதை குறிக்கிலே.
ஞானிக்கு உரிய சரியை எது தெரியுமா ?


சிறந்த ஞானத்தில் மதிப்பு இல்லாமல்; சிறந்த யோகம் பெரிது என்று அறியாமல் இருக்கும் சிந்தையைத் தெளியச் செய்ய வேண்டும். அதில் சிவத்தை குடியேற்ற வேண்டும். ‘சிவோகம்’ என்ற பாவனையுடன் நிலைத்து இருப்பதே ஞானிக்கு உரிய சரியை ஆகும்.
 
திருமந்திரம் - ஐந்தாம் தந்திரம்

#1435 to #1437

#1435. சிவத்துடன் சேர்பவர் யார் ?


வேதாந்தம் கண்டோர் பிரமமித் தியாதரர்
நாதாந்தங் கண்டோர் நடுக்கற்ற யோகிகள்
வேதாந்த மில்லாத சித்தாந்தம் கண்டுளோர்
சாதாரண மன்ன சைவ ருபாயமே.


வேதாந்தத்தை அறிந்தவர்கள் பிரம்ம வித்தையை அறிந்தவர்கள். நாதந்தத்தை அறிந்து கொண்டவர்கள், நன்மைகள் வரும்போது துள்ளாமலும், தீமைகள் வரும் போது துவளாமலும் இருக்கும் சலனமற்ற யோகியர் ஆவர். வேதாந்தக் கொள்கையிலிருந்து மாறுபட்டச் சித்தாந்த அனுபவம் உடையவர்களும் தகுந்த வேறு ஒரு உபாயத்தால் சிவனைச் சேருவர்.


வேதாந்தம் (ஞான மார்க்கம்) கூறுவது:
“வைராக்கியத்தால் சிவனைச் சென்று அடையலாம்”


சித்தாந்தம் (பக்தி மார்க்கம்) கூறுவது:
“அன்பால் சிவனைச் சென்று அடையலாம் ”

எல்
லா மார்க்கங்களும் ஒரே ஈசனிடம்
அவன்
எல்லா அன்பர்களைச் செலுத்தும்.

#1436. பசுவும், பாசமும் பதியை அணுகா!


விண்ணினைச் சென்று அணுகா வியன் மேகங்கள்,
கண்ணினைச் சென்று அணுகாப் பல காட்சிகள்,
எண்ணினைச் சென்று அணுகாமல் எனப்படும்
அண்ணலைச் சென்று அணுகா பசு பாசமே.


வா
னைத் தம் இருப்பிடமாகக் கொண்ட மேகங்கள், வானத்தில் ஒட்டிக் கொள்ளா! கண்ணில் காணும் காட்சிகள் எல்லாம் கண்களில் வந்து ஒட்டிக் கொள்ளா. அது போன்றே எண்ணங்களைக் கடந்து விளங்கும், சிவபெருமானிடம் பசுவான சீவனைத் தளைப்படுத்தும் பாசம் சென்று ஒட்டிக் கொள்ளாது.

விளக்கம்:

முகில்கள் வானில் உலவினாலும் அவற்றால் வானம் முழுவதும் பரவ இயலாது.

காணும் காட்சி ஒன்றானாலும் அது மனிதரிடம் ஏற்படுத்தும் உணர்ச்சிகள் வேறுபாடும்.

சிவத்தை வழிபடும் சீவர்களின் தகுதி அவரவர் பாசநிலைக்கு ஏற்ப மாறுபடும்.

பசுத் தன்மை மிகுந்துள்ளவர்களால் சிவத்தை அறிந்து கொள்ள முடியாது.


#1437. சித்தாந்தம் தரும் சித்தி என்ன?


ஒன்றும் , இரண்டும், இலதுமாய், ஒன்றாக
நின்று , சமய நிராகாரம் நீங்கியே
நின்று பராபரை நேயத்தைப் பாதத்தால்
சென்று, சிவமாதல், சித்தாந்த சத்தியே.


“பிரமம் ஒன்றே!” என்று கூறும் அத்வைத வேதாந்தம். “சிவன் வேறு சீவன் வேறு!” என்று கூறும் துவைத வேதாந்தம். “இயல்பினால் வேறுபடும் பொருட்கள் கலப்பினால் ஒன்றாகும்!” என்று கூறும் சுத்தாத்வைத வேதாந்தம். இந்த சுத்தாத்வைத பாவனையில் நிலை பெற்றுச் சமய நிந்தனையை ஒழிக்க வேண்டும். பராபரையை என்னும் இனிய பொருளைத் திருவடி ஞானத்தால் பெற்ற ஒருவரைச் சிவமாகவே மாற்றிவிடுவது சித்தாந்தம் தரும் சித்தி ஆகும்.




 


4. கடுஞ் சுத்த சைவம்


ஆடம்பரமும், ஆரவாரமும் இன்றி ஞான நிலையில் ‘தானே அவனாக’ நிற்கும் நிலை கடுஞ் சுத்த சைவம். கிரியைகளைத் துறந்து விட்டுத் தூய ஞானம் பெறுவதன் மூலம் கடுஞ் சுத்த சைவர் சாயுச்சியம் அடைவர்

#1438 to #1442

#1438. யார் சுத்த சைவர்?

வேடங் கடந்து விகிர்தன்தன் பால்மேவி
ஆடம் பரமின்றி ஆசாபா சம் செற்றுப்
பாடொன்று பாசம் பசுத்துவம் பாழ்படச்
சாடுஞ் சிவாபோத கர்சுத்த சைவரே


சுத்த சைவர்கள் வெளிக் கோலங்களில் விருப்பம் கொள்ளார். அவர்கள் உலகியல் ஆடம்பரம் இல்லாதவர். ஆசைகளையும், பற்றுகளையும் நீத்து விட்டுப் பிறவிப் பிணியில் பிணைக்கின்ற சீவ போதத்தையும், பாசத்தையும் அழித்து விட்டு அவர்கள் இறைவனைச் சென்று அடைவர்.

#1439. எது சித்தாந்த நெறி?

உடலான ஐந்தையு மோராறு மைந்து
மடலான மாமாயை மற்றுள்ள நீவப்
பாடலான கேவல பாசம் துடைத்துத்
திடமாய்த் தனையுற்றல் சித்தாந்த மார்க்கமே.


உடல் என்று எண்ணி நாம் மயங்கும் ஐந்து கோசங்கள் இவை:

(1). அன்னமய கோசம், (2). பிராணமய கோசம், (3). மனோமய கோசம், (4). விஞ்ஞானமய கோசம், (5). ஆனந்தமய கோசம்.

உடலில் உள்ள ஆறு ஆதாரங்கள் இவை :

(1). மூலாதாரம், (2). சுவாதிட்டானம், (3). மணிபூரகம், (4). அனாஹதம், (5). விசுத்தி, (6). ஆக்ஞா

சிவ தத்துவங்கள் ஐந்து எனப்படுபவை இவை:
(1). சுத்த வித்தை (2). மகேசுரம் (3). சாத்க்கியம் (4). விந்து (5). நாதம்.

இவற்றையும், இவற்றைச் சார்ந்ததவற்றையும் முற்றிலுமாக நீக்கிவிட்டுச் சீவன் தன் உண்மை நிலையினை அறிந்து கொண்டு, அதில் நிலைத்து நிற்பதுவே சித்தாந்த நெறி.

#1440. ஞானமே பெரிது!

சுத்த சிவனுரை தானத்தில் தோயாமல்
முத்தர் பதப்பொருள் முத்திவித் தாமூலம்
மத்தகை யான்மா அரனை யடைந்தற்றால்
சுத்த சிவமாவ ரேசுத்த சைவரே.

சிவன் அருளிய ஆகமங்கள் முக்தியின் நான்கு நிலைகளைக் கூறும்.
(1). சாலோகம், (2). சாரூபம், (3). சாமீபம், (4). சாயுச்சியம் எனப்படும் இந்நான்கு நிலைகளையும் சாராமல், பிரணவ நெறியின் மூலம் நேராக சாயுச்சியம் அடைவது சாலச் சிறந்தது. முக்தர்கள் பிரணவ நெறியின் மூலம் முக்தி அடைவது பரமுக்தியின் மூலம் ஆகும். ஆன்மா உலகப் பொருட்களை வெறுத்து நீக்கிவிட்டுப் பிரணவப் பொருளான இறைவனை அறிந்து கொண்டால் அதுவும் சுத்த சிவமாகவே மாறிவிடும். இத்தகைய முக்தர்கள் சுத்த சைவர்.

#1441. “அது நீ ஆகின்றாய்!”

நானென்றும் தானென்றும் நாடிநான் சாரவே
தானென்று நானென் றிரண்டில்லாத் தற்பதம்
தானென்று நானெற்ற தத்துவ நல்கலால்
தானென்றும் நானெற்றுஞ் சாற்றகில் லேனே.

அறிபவன் நான், அறியப்படும் பொருள் சிவன் என்று எண்ணி ஆராய்ந்து நான் சிவனைச் சென்று சேர்ந்தேன். அப்போது சிவன், சீவன் என்ற இரு வேறு நிலைகள் இல்லை! சீவனே சிவன் என்ற உண்மையை உணர்ந்து கொண்டேன். அதனால் நான், அறிபவன் அறியப்படும் பொருள் என்ற நிலைகளைக் கடந்து, பிரித்து அறிய இயலாத பெரு நிலையை அடைந்து விட்டேன். ‘அது’வாக நானே மாறிவிட்டேன். சிவன், சீவன் என்ற வேறுபாடுகள் இன்றி அவனுடன் ஒன்றி விட்டேன்.

#1442. பர சாயுச்சிய நிலை

சாற்றரிதாகிய தத்துவம் சித்தித்தால்
ஆற்றரி தாகிய ஐந்தும் அடங்கிவிடும்
மேற்றிகழ் ஞானம் விளக்கொளி யாய் நிற்கும்
பாற்பர சாயுச்சிய மாகும் பதியே.


சொல்ல இயலாத அந்தப் பெரு நிலையை அடைந்துவிட்டால், அடக்குவதற்கு அரிதாகிய ஐம்பொறிகளும் தாமே செயல் இழந்து அடங்கி விடும். அதன் பின்னர் ஞானம் விளக்கின் ஒளி போன்று நன்கு ஒளிரும். சிரசின் மேல் சீவன் சிவனுடன் ஒன்றி நிற்றல் கூடும்




 

திருமந்திரம் - ஐந்தாம் தந்திரம்

#1443 to #1446

#1443. சரியை உயிர்நெறி ஆகும்

நேர்ந்திடு மூல சரியை நெறியிதென்று
ஆய்ந்திடும் காலாங்கி கஞ்ச மலையமான்
ஓர்ந்திடும் கந்துரு கேண்மின்கள் பூதலத்து
ஓர்ந்திடும் சுத்த சைவத் துயிரதே.


காலாங்கி, கஞ்ச மலையமான், கந்துரு என்னும் மாணவர்களே கேளுங்கள்! வீடு பேற்றை அடைவதற்கு முதல் அங்கமான சரியை, சுத்த சைவர்களுக்கு உயிரைப் போன்று மிகவும் உயர்ந்தது ஆகும்.

#1444. சிவ பூசை


உயிர்க்கு உயிராய் நிற்றல் ஒண் ஞான பூசை,
உயிர்க்குஒளி நோக்கல் மகாயோக பூஜை,
உயிர்பெறும் ஆவாகனம் புறப்பூசை
செயிற்கு அடை நேசம் சிவபூசை யாமே.


உயிரின் உயிராக இறைவன் இருப்பதை அறிந்து கொள்ளுதல் சிறந்த ஞான பூசை.

உயிருக்கு ஒளி தருபவன் இறைவன் என்று அறிந்து கொள்ளுதல் உயர்ந்த யோக பூசை.
இறைவனைப் பிராணப் பிரதிட்டையாகச் செய்து அன்போடு வழிபடுவது புற பூசை.
வெளியே செய்யும் சிவனின் புறபூசை பின்னர் ஞானபூசையின் வாயிலாக அமையும்.

#1445. நெஞ்சமே அவன் ஆலயம்


நாடும் நகரமும் நற்றிருக் கோயிலும்
தேடித் திரிந்து சிவபெரு மானென்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்வனே.


நாடுகள், நகரங்கள், நல்ல திருக்கோவில்கள் இவற்றைத் தேடிச் செல்லுங்கள். சிவன் வீற்றிருக்கும் தலங்களைப் பாடுங்கள். பாடி அன்புடன் வணங்குங்கள். வணங்கிய அன்பரில் நெஞ்சத்தையே தன் ஆலயமாகக் கொண்டு சிவன் அங்கே விருப்புடன் உறைவான்.


#1446. பக்தி செய்யும் வகைகள்


பத்தர் சரியை படுவோர், கிரியையோர்
அத்தகு தொண்டர் அருள் வேடத்து ஆகுவோர்
சுத்த இயமாதி சாதகர் தூயோகர்
சித்தர் சிவஞானம் செய்து எய்து வோர்களே.


கோவிலில் வழிபாடுகள் செய்து சரியை நெறியில் நின்று சிவனிடம் பக்தி செய்பவர் பக்தர்.

கிரியை வழியில் நின்று சிவ சாதனங்களை அணிந்து கொண்டு சிவ வேடம் தாங்குபவர் தொண்டர்.
அட்டாங்க யோக நெறிகளை உணர்ந்தோ கொண்டு அந்தத் தூய நெறியில் நிற்பவர் தூய யோகியர்.
சிவத்தைத் தனக்குள்ளேயே கண்டு கொண்டு அதனுடன் ஒன்றி நிற்பவர் அனைவரிலும் சிறந்த சித்தர்.




 

திருமந்திரம் - ஐந்தாம் தந்திரம்

#1447 to #1450

#1447. நெறிகளுக்குரிய செயல்கள்

சார்ந்த மெய்ஞானத்தோர் தான் அவனாயினோர்
சேர்ந்தஎண் யோகத்தர் சித்தர் சமாதியோர்
ஆய்ந்த கிரியையோர் அர்ச்சனை தப்பாதோர்;
தேர்ந்த சரியையோர் நீள்நிலத் தோரே.


இறைவனோடு இரண்டற ஒன்றி விட்டவர்கள் ஞானம் மெய் அடைந்தவர்கள்.
அட்டாங்க யோக நெறியில் நின்று அதன் மூலம் சமாதி அடைந்தவர் யோகியர்.
தவறாமல் பூசை, அர்ச்சனை இவற்றைச் செய்பவர்கள் கிரியை செய்பவர்.
திருத்தலங்களுக்குப் பிரயாணம் செய்பவர் சரியை நெறியில் நிற்பவர்கள்.

#1448. உருவ, அருவ வழிபாடுகள்

கிரியை, யோகங்கள், கிளர் ஞான பூசை
அரிய சிவன்உரு அமரும் அரூபம்

தெரியும் பருவத்துத் தேர்ந்திடும் பூசை
உரியன நேயத்து உயர் பூசை யாமே.


கிரியை நெறியில் நிற்பவர்கள் சிவனுடைய உருவ வழிபாட்டை மேற்கொள்ளுவர்.
மெய் ஞானம் அடைந்தவர் அருவ வழிபாட்டினை மேற்கொள்ளுவர்.
அன்பர்கள் தம் மனப் பக்குவத்துக்கு ஏற்ற வண்ணம் இறைவனை உருவமாகவோ அல்லது அருவமாகவோ வழிபடுவார்கள்.

#1449. மருளும் அருளும்

சரியா ஆதி நான்கும், தரும் ஞானம் நான்கும்,
விரிவான வேதாந்த சித்தாந்தம் ஆறும்
பொருளானது; நந்தி பொன்னகர் போந்து
மருள் ஆகும் மாந்தர் வணங்க வைத்தானே.


சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கினாலும் பெறுகின்ற ஞானம் நான்கு வகையானவை. இவை வேதாந்தம், சித்தாந்தம், நாதாந்தம், போதாந்தம், யோகாந்தம், கலாந்தம் இவற்றால் பெறும் ஆறு வகை முடிவுகளைக் கொண்டவை. மருள் கொண்டு மயங்கி நிற்கும் சீவர்களுக்கு, அருள் தந்து அறிவைத் தருவதற்குச் சிவன் சரியை முதலிய நான்கு நெறிகளையும், ஆறு அந்தங்களையும் ஏற்படுத்தி வைத்துள்ளான்.

#1950. தீட்சைகளின் வகைகள்

சமையம் பலசுத்தி தன் செயல் அற்றிடும்
அமையும் விசேடமு மரன்மந் திரசுத்தி
சமைய நிருவாணங் கலாசுத்தியாகும்
அமைமன்னு ஞானமார்க்கம் அபி டேகமே.


ஆன்மாவில் குடி கொண்டுள்ள மலங்களை அகற்ற சமய தீட்சை உதவிடும்.

மந்திரதீட்சை ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களை அகற்ற உதவும்.

நிர்வாண தீட்சை கலைகளில் உள்ள மலங்களை நீக்கி ஆன்மாவை மேன்மைப் படுத்தும்.

திரு முழுக்கட்டு என்னும் அபிடேகம் ஆன்மா ஞான மார்க்கத்தில் நிலை பெற உதவும்.
 
திருமந்திரம் - ஐந்தாம் தந்திரம்

6. கிரியை


மலர்த் தூவி இறைவனை உள்ளத்திலும் புறத்திலும் பூசித்தல் கிரியை எனப்படும்

#1451 to #1453

#1451. வினைகள் வாரா! வினைகள் சாரா!

பத்துத் திசையும் பரம் ஒரு தெய்வம் உண்டு
எத்திக்கு இவர் இல்லை என்ப அமலர்க்
கொத்துத் திருவடி நீழல் சரண் எனத்
ததும் வினைக்கடல் சாராது காணுமே.

பத்துத் திக்குகளிலும் சிவம் பரவி நிற்கின்றது. எத்திக்கில் இல்லை சிவம்? எக்காலத்தில் இல்லை சிவம்? எங்கும் எப்போதும் உள்ளது சிவம். மலம் நீங்கித் தூய்மை அடைந்தவர்கள் அரன் திருவடிகளே சரண் என்று பற்றிக் கொண்டால், தத்தியும் தாவியும் வருகின்ற கடலை ஒத்த வினைகள் நம் அருகில் வாரா! நம்மைச் சாரா!

#1452. உடல் பற்றை ஒழிக்க வேண்டும்

கானுறு கோடி கடிகமழ் சந்தானம்
வானுற மாமல ரிட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி யுணர்பவர்க்கல்லது
தேனமர் பூங்கழல் சேரவொண் ணாதே.


காட்டில் மணம் வீசும் சந்தனம், வானளவாக வளர்ந்த மரங்களின் நறுமண மலர்கள், இவற்றால் இறைவனைப் பூசை செய்தாலும்: உடல் பற்றை முற்றிலுமாக ஒழித்தால் அன்றி, ஒருவனால் சகசிரதளத்தில் தேன் போன்று இனிக்கும் இறைவனின் திருவடிகளை அடைய முடியாது.

#1453. அருளுக்குப் பாத்திரம் ஆகலாம்

கோனக் கன்று ஆயே குரைகழல் ஏத்துமின்
ஞானக் கன்று ஆகிய நடுவேஉழிதரும்
வானக் கன்று ஆகிய வானவர் கைதொழும்
மானக் கன்று ஈசன் அருள் வள்ளம் ஆமே.


ஆவினைத் தொடரும் பசுங் கன்று போல, இறைவனின் ஒலிக்கும் கழல் அணிந்த திருவடிகளைத் தொடர்ந்து போற்றுங்கள். அப்போது ஞானத்தைத் தரும் சுழுமுனையின் நடுவே தோன்றும் ஈசனை வானக் கன்றுகளாகிய தேவர்கள் வந்து பணிவர். பெருமை மிகுந்த காளையை ஊர்தியாகக் கொண்ட இறைவனின் திருவருளுக்குப் பாத்திரம் ஆவீர்கள்.

 
திருமந்திரம் - ஐந்தாம் தந்திரம்

#1454 to #1456


#1454. பக்தியும் அன்பு தான்

இது பணிந்து எண்திசை மண்டலம் எல்லாம்
அது பணி செய்கின்றவள் ஒரு கூறன்
இதுபணி மானிடர் செய்பணி, ஈசன்
பதி பணி செய்வது பத்திமை காணே .

இவனை வணங்கி எட்டு திசைகளிலும் உள்ள மண்டலங்கள் எல்லவற்றிலும் இவன் பணியைச் செய்பவள் சக்தி. அவளைத் தன் உடலின் ஒரு அங்கமாகக் கொண்டவன் ஈசன். அவன் பெருமைகளைப் போற்றிப் புகழ்வதே நாம் செய்ய வேண்டிய பணி . இங்ஙனம் அவனிடம் பக்தி செய்வதும் அன்பின் வெளிப்பாடே.

#1455. சித்தம் சிவமயம் ஆகும்

பத்தன் கிரியை சரியை பயில்வுற்றுச்
சுத்த அருளால் துரிசு அற்ற யோகத்தில்
உய்த்த நெறி உற்று உணர்கின்ற ஞானத்தால்
சித்தம் குருஅருளால் சிவம் ஆகுமே.


பக்தன் சரியை, கிரியை இவற்றைப் பயின்று சுத்த மாயையின் அருள் தரும் ஆற்றலைப் பெறுவான். குற்றமற்ற யோகம் கூறும் நெறியில் தன்னைப் பொருத்திக் கொண்டு, அவன் மெய் ஞானம் அடையும் போது, குரு மண்டல பிரவேசத்தால் அவன் சித்தம் சிவமயம் ஆகிவிடும்.

#1456. விழைவது இறையருளே!

அன்பின் உருகுவன் நாளும் பணி செய்வன்
செம்பொன் செய் மேனிக் கமலத் திருவடி
முன்பு நின்று ஆங்கே மொழிவது எனக்குஅருள்
என்பினுட் சோதி இலங்குகின் றானே.

அன்பினால் உள்ளம் உருகுவேன். தினமும் வழிபாடு செய்வேன். “செம்பொன் போன்ற சகசிர தளத்தில் விளங்குகின்ற உன் திருவடிகளை வணங்கித் துதிக்கும் பேற்றினை எனக்கு அருள்வாய்!” என்று வேண்டுவேன். அப்போது இறைவன் என் தலையின் மேல் சோதி வடிவில் விளங்கி எனக்கு அருள் புரிவான்.

 
திருமந்திரம் - ஐந்தாம் தந்திரம்

7. யோகம்

7. யோகம் = பொருந்துதல்

மூலாதாரத்தில் குண்டலினியுடன் உள்ள பிராணனை மேலே ஏற்றிச் சென்று, துவாதசாந்தத்தில் உள்ள சிவத்துடன் பொருத்துதல் யோகம் எனப்படும். இவ்வாறு பொருத்தி தியானம் செய்தால் ஒளி தோன்றும்.

#1457 to #1461


#1457. உடல் நினைவு கெடும்.

நெறி வழியே சென்று, நேர்மையுள் ஒன்றித்
தறி இருந்தாற் போலத் தம்மை இருத்திச்
சொறியினும் தாக்கினும் துண் என்று உணராக்
குறிஅறி வாளர்க்குக் கூடலும் ஆமே.


மூலாதாரத்தில் இருந்து நேராகச் சென்று பிரமரந்திரத்தை அடைய வேண்டும். அங்கு மெய்ப்பொருளாகிய சிவத்துடன் பொருந்தி இருக்க வேண்டும். மரக்கட்டை போல உடல் உணர்வு என்பதே இல்லாமல் இருக்க வேண்டும். உடலைச் சொரிந்தாலும் அன்றித் தாக்கினாலும் அதை அறியாமல் இருக்க வேண்டும். சிவத்தை அறிந்து அவனுடன் பொருந்தியவருக்கு இதைச் செய்ய இயலும்.

#1458. உச்சியில் உள்ளான்

ஊழி தோறு ஊழி உணர்ந்தவர்க்கு அல்லால்
ஊழிதோறு ஊழி உணரவும் தான் ஒட்டான்
ஆழி அமரும் அரி அயன் என்று உளர்
ஊழி முயன்றும் ஓர் உச்சி உள்ளானே.

நெடுங்காலம் யோகம் பயின்று ஞானம் பெற்றவர்கள் நீங்கலாக வேறு எவராலும் நெடுங் காலமாக உணரப்படாதவன் சிவன். ஆழியில் துயிலும் அரி, அவன் உந்தித் தாமரையில் உள்ள அயன் போன்ற தெய்வங்கள் எத்தனை காலம் முயன்றாலும் அடைய முடியாத உயர்ந்த இடத்தில் உள்ளான் சிவன்.

#1459. சிவயோகத்தின் பயன்

பூவினில் கந்தம் பொருந்திய வாறுபோல்
சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது
ஓவியம் போல உணர்ந்து அறிவாளர்க்கு
நாவி அணைந்த நடுத்தறி ஆமே.

இயற்கையாகவே பூவில் மணம் பொருந்தியுள்ளது. ஆனால் அது மலர் மலரும் போது வெளிப்படுகின்றது. அது போன்றே சீவனுள் சிவம் பொருந்தியுள்ளது. சீவன் பக்குவம் அடைந்தவுடன் சிவம் வெளிப்படும் . ஓவியம் போன்று அசைவின்றி இருந்து சிவத்தை அறிந்து கொண்டவர்கள் புனுகுப் பூனையால் நறுமணம் பெரும் தூணைப் போலச் சிவ ஒளி பெறுவர்.

#1460. பிறவிப் பிணியின் வித்து

உய்ந்தனம் என்பீர், உறுபொருள் காண்கிலீர்
கந்த மலரில் கரக்கின்ற நந்தியைச்
சிந்தை உறவே தெளிந்து இருள் நீங்கினால்
முந்தைப் பிறவிக்கு மூலவித்து ஆமே.


உய்ந்தோம் என்று கூறுவீர் ஆனால் உள்ளே உறையும் உண்மைப் பொருளைக் காண்கிலீர். இன்பம் தரும் சுவதிட்டன மலரில் ஒளிந்திருக்கும் சிவனை சிந்தையில் பொருத்தித் தெளிவு அடைய மாட்டீர். இங்ஙனம் பொருத்தி சிந்தை தெளிந்து அறியாமை இருளை நீக்கிவிட்டால், தொன்று தொட்டு வரும் பிறவிப் பிணியின் விதை நீங்கிவிடும்.

#1461. பிறவி நீங்கும்!

எழுத்தொடு பாடலு மெண்ணென் கலையும்
பழித்தலைப் பாசப் பிறவியும் நீங்கார்
அழித்தலைச் சோமனோடங்கி யருக்கன்
வழித்தலைச் செய்யும் வகையுணர்ந் தேனே.

இலக்கண அறிவோ, இலக்கிய அறிவோ, ஆய கலைகள் அறுபத்து நான்கின் அறிவோ, பழியைத் தரும் பாசத்தின் விளைவாகிய பிறவிப் பிணியை அகற்றா. கீழ் நோக்கிய நிலையில் அழிவைத் தரும் மதி, கதிரவன், அக்கினி இவற்றை வகைப் படுத்தி மேல் நோக்கிச் செலுத்தினேன்! அங்கே ஒளி அமைவதை நான் உணர்ந்தேன்




 
திருமந்திரம் - ஐந்தாம் தந்திரம்

#1462 to #1466


#1462. மெய்த்தவம்

விரும்பிநின் றேசெயின் மெய்த்தவ ராகும்
விரும்பிநின் றேசெயின்மெய்யுரை யாகும்
விரும்பிநின் றேசெயின் மெய்த்தவ மாகும்
விரும்பிநின் றேசெயின் விண்ணவ னாகுமே.


மதி, கதிரவன், அக்கினிகளைச் சிரசில் கொண்டு சேர்க்கும் யோகத்தை விருப்பத்துடன் செய்பவர் மெய்த்தவர் ஆவர். இங்ஙனம் விரும்பிச் செய்பவரின் உரை மெய்யுரை ஆகும். இங்ஙனம் விரும்பிச் செய்பவரின் தவம் மெய்த்தவம் ஆகும். இங்ஙனம் விரும்பிச் செய்பவன் தேவனாகி விடுவான்.
சிவ வடிவம் பெற்றவன் பிரணவ தேசிகன் என்ற பெயர் பெறுவான். இதுவே ஒரு மனிதன் ஒரு தேவ உடல் பெறுவது ஆகும்.

#1463. உடலின் வெம்மை சிவனே

பேணிப் பிறவா உலகு அருள் செய்திடும்;
காணின் தனது கலவியுளே நிற்கும்
நானின் நரக வழிக்கே வழி செய்யும்
ஊனில் சுடும் அங்கி உத்தமன் தானே.


உடலின் வெப்பமாக இருந்து வருவது சிவனே! அது ஆண் பெண் கொள்ளும் உறவில் அக்கினி மண்டலத்தில் மேலும் விளக்கம் அடையும். இதை மேலே எழும்படிச் செய்தால் மீண்டும் பிறவி இல்லாத ஒளி உலகினை அடைவிக்கும். நாணம் கொண்டு இதைச் செய்யத் தவறினால், அதுவே நம்மை நரகத்தில் செலுத்தி, மீண்டும் மீண்டும் வந்து உலகில் பிறக்கச் செய்யும்.

#1464. அத்தனிடம் அன்புறுவர்!

ஒத்தசெங் கோலா ருலப்பிலி மாதவர்
எத்தனை ஆயிரம் வீழ்ந்தனர் எண்ணிலி
சித்தர்கள் தேவர்கள் மூவர் பெருமையாய்
அத்த னிவனென்றே அன்புறு வார்களே.


இந்த உண்மையை அறியாமல் எத்தனையோ செங்கோல் அரசர்களும் , மாதவம் புரிந்த முனிவர்களும் அழிந்து பட்டனர்! இந்த யோகத்தை அறிந்த சித்தரும், தேவரும், மூவரும் தலைவன் சிவன் என்று அறிந்து கொண்டு அவன் மேல் அன்பு செய்வார்கள்.

#1465. அன்பு வைத்தேன்

யோகிக்கு யோகாதி மூன்றுஉள கொண்டு உற்றோர்
ஆகத் தகுகிரியாதி சரியையாம்
தாகத்தை விட்ட சரியை ஒன்றாம், ஒன்றுள்
ஆதித்தன் பத்தியுள் அன்புவைத் தேனே.

யோகம், கிரியை, சரியை என்ற மூன்று நெறிகள் மூலம் யோகியர் மேன்மை அடைவர். கிரியையில் சரியையும், சரியையில் கிரியையும், ஆசைகள் அற்ற சரியையும் உயர்ந்த பயன் தருபவை. உடலில் கதிரவ மண்டலத்தில் உள்ள கதிரவன், சிரசில் ஒளிமண்டலத்தில் சிவசூரியனாக விளங்குவான். அவனிடம் நான் அன்பு கொண்டேன்.

#1466. தீட்சையும் பயனும்

யோகச் சமயமே யோகம் பலவுன்னல்
யோக விசேடமே அட்டாங்க யோகமாம்
யோக நிர்வாணமே உற்ற பரோதயம்
யோக அபிடேகமே ஒண் சித்தி யுற்றலே.


யோக நெறியில் சமய தீட்சை பலவேறு யோக நெறிகளைக் குறித்து சிந்தித்தல் ஆகும்.
யோக நெறியில் சிறந்த தீட்சை அட்டாங்க யோக நெறியில் நிற்பது ஆகும்.
யோக நெறியில் நிர்வாண தீட்சை பராசக்தியின் தரிசனம் பெறுவது ஆகும்.
யோக நெறியில் அபிடேகம் ஒளி மிகுந்த சித்திகளை பெறுவது ஆகும்.
பல வகை யோகங்கள்:
அட யோகம், ராஜ யோகம், இலய யோகம், மந்திர யோகம், குண்டலினி யோகம், சிவ யோகம் முதலியவை.
 
திருமந்திரம் - ஐந்தாம் தந்திரம்

8. ஞானம்


ஞானம் = இறை அறிவு.

ஞானம் (அறிவு), நேயம் (அறியும் செயல்), ஞாதுரு (அறிபவன்)
என்னும் மூன்றும் தமக்குள்ள வேற்றுமைகள் அழிந்து கலந்து
ஒன்றாகி விட்ட உயர்ந்த நிலையே ஞானம் எனப்படும்.

#1467 to #1471

#1467. ஞானம் சிறந்தது

ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை
ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று
ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவாம்
ஞானத்தின் மிக்கார் நரனின் மிக்காரே.

ஞானத்தை விட சிறந்த அறநெறி எதுவும் இல்லை. ஞானத்தைத் தராத சமயமும் நல்ல சமயம் அன்று. ஞானத்துக்கு விரோதமானது வீடு பேற்றினை அளிக்காது. ஞானத்தில் சிறந்தவர் உலகில் உள்ள மனிதர்களில் மேலானவர்.

#1468. ஞானியர் பெற்ற நெறியே ஞானம்

சத்தமும், சத்த மனமும், தகு மனம்
உய்த்த உணர்வும் உணர்த்தும் அகந்தையும்
சித்தம் என்ற இம்மூன்றும் சிந்திக்கும் செய்கையும்
சத்தம் கடந்தவர் பெற்றசன் மார்க்கமே.


நாதம்; நாதத்தின் வடிவாகிய மனம்; அதன் பிரிவுகளாகிய சித்தம், புத்தி, அஹங்காரம்; இவற்றின் உதவியுடன் உள்ள சிந்திக்கும் செயல் இவற்றை கடந்து நிற்பதே ஞானியரின் நெறியாகும். அதுவே ஞானம் எனப்படும்.

#1469. சிவோகம் எய்துவர்

தன்பால் உலகும் தனக்கு அருகு ஆவதும்
அன்பால் எனக்கு அருளாவதும் ஆவன
என்பார்கள் ஞானமும் எய்து சிவோகமும்
பின்பாலின் நேயமும் பெற்றிடும் தானே.

சிவன் சங்கற்பத்தில் உருவாவது உலகு. ‘புறத்தே உள்ள உலகு எனக்கு அருள் தருவதாக அமைந்தது” என்று கூறுவர் ஞானியர். இத்தகைய ஞானம் பின்னர் அவர்களுக்குச் சிவபாவனையைத் தரும். அவர்கள் சிவோகம் என்று கூறும்படிச் சிவத்தை நன்கு அறிந்து கொள்வர்.

#1470. மேலான ஒழுக்கம்

சேரும் சேம இடம் பிரமம் ஆகும்
வருக்கம் சராசரம் ஆகும் உலகம்
தருக்கிய ஆசாரம் எல்லாம் தருமே
திருக்கம் இல் ஞானத்தைத் தேர்ந்து உணர்ந்தோர்க்கே.


அசையும் பொருட்கள், அசையாப் பொருட்கள் இவற்றால் உருவாகிய உலகம் ஞானியாருக்கு மேலான ஒழுக்கத்தைத் தரும். முரண்பாடு இல்லாத ஞானத்தை உணர்ந்தவர்கள் சென்று சேரும் பாதுகாப்பான இடம் பிரமம் என்னும் மெய்ப்பொருள் ஆகும்.

#1471. நீர்த்தொனி அறிவுறுத்தும்

அறிவும் அடக்கமும் அன்பும் உடனே
பிறியா நகர் மன்னும் பேரருளாளன்
குறியும் குணமும் குரைகழல் நீங்கா
நெறிஅறிவார்க்கு இது நீர்த்தொனி ஆமே.ஐயும்


அறிவு, அடக்கம், அன்பு என்னும் மூன்று நற்குணங்கள் பொருந்திய உள்ளக் கோவிலில் குடி கொள்பவன் பேரருள் மிகுந்த சிவபெருமான். அவன் தன் திருவடிகளை இடையறாது எண்ணும் அடியவர்களுக்குத் தன் வருகையும், தன் இருப்பிடத்தையும் அவர்கள் தலையில் அருவி நீரின் சலசலப்பை அமைத்து அதன் மூலம் உணர்த்துவான்.
 
திருமந்திரம் - ஐந்தாம் தந்திரம்

#1472 to #1476

#1472. உடலைக் கடந்த ஒளி

ஞானம் விளைந்து எழுகின்றது ஓர் சிந்தையுள்
ஏனம் விளைந்து எதிரே காண்வழி தொறும்
கூனல் மதி மண்டலத்து எதிர் நீர் கண்டு
ஊனம் அறுத்து நின்று ஒண் சுடர் ஆமே.


ஞானம் விளைந்து சிந்தையில் எழும் போது முகத்தின் முன்பு இளம் பிறை போன்ற ஒளி மண்டலம் விளங்கும். இது தலையை ஒட்டித் தோளின் இரு புறங்களிலும் அமையும். அப்போது இழிந்த உடலைக் கடந்து அவர்கள் ஒளிமயம் ஆவார்கள்.


#1473. ஞானத்தின் நான்கு வகைகள்


ஞானிக்கு உடன் குணம் ஞானத்தில் நான்குமாம்,
மோனிக்கு இவை ஒன்றும் கூடா; முன் மோகித்து
மேல் நிற்றலாம் சத்தி வித்தை விளைந்திடும்
தானிக் குலத்தோர் சரியை கிரியையே.


ஞானத்தில் ஞானம், ஞானத்தில் யோகம், ஞானத்தில் சரியை, ஞானத்தில் கிரியை என்ற நான்கும் ஞானியாரின் இயல்புகள். பிரணவ சித்தி பெற்ற அனுபவம் மிகுந்த ஞானிக்கு இவை நான்கும் தேவை இல்லை.சந்திர மண்டலதின் ஒளியில் விளங்குகின்ற சக்தி மகிழ்வடைந்து அவர்களுக்கு மெய் ஞானத்தைத் தந்துவிடும். ஆதாரங்களில் பொருந்தி யோகம் செய்யும் மற்றவர்களுக்குச் சரியை கிரியை என்பவை உரியவை.


#1474. நான்கு நிலைகள்


ஞானத்தின் ஞானாதி நான்குமா ஞானிக்கு
ஞானத்தின் ஞானமே நானென தென்னாமல்
ஞானத்தின் யோகமே நாதாந்த நல்லொளி
ஞானக் கிரியையே நன் முத்தி நாடலே.


ஞானிக்கு ஞானம் அடைவதில் நான்கு நிலைகள் உள்ளன. ‘நான்’ எனும் அகப் பற்றும், ‘எனது’ என்னும் புறப்பற்றும் அகலுவது ஞானத்தில் ஞானம் பெறுவது. நாதாந்ததில் பேரொளியைக் காண்பது ஞானத்தில் யோகம் அடைவது. நல்ல வீடு பேற்றினை விரும்புவது ஞானத்தில் கிரியை ஆகும்.


#1475. சுத்தன் முத்தன் சித்தன் ஆவான்


நண்ணிய ஞானத்தின் ஞானாதி நண்ணுவோன்
புண்ணிய பாவம் கடந்த பிணக்கற்றோன்
கண்ணிய நேயங் கரை ஞானம் கண்டுளோன்
திண்ணிய சுத்தன் சிவ முத்தன் சித்தனே.


ஞானத்தில் ஞானம் போன்ற நான்கையும் பெற்றவன் நல்வினைகள் தரும் நற்பயனையும், தீ வினைகள் தரும் தீப் பயனையும் கடந்து நிற்பான். கண்ணிய நேயத்தின் ஞான வரம்பைக் கடந்து நிற்பான். திண்ணிய மலங்கள் நீங்கி அவன் சுத்தன், முத்தன், சித்தன் ஆவான்.


#1476. ஞான சமயம் முதலியவற்றின் பயன்


ஞானச் சமயமே நாடுந் தனைக்காண்டல்
ஞான விசேடமே நாடு பரோதயம்
ஞான நிர்வாணமே நன்றி வானருள்
ஞானாபிடேகமே நற்குரு பாதமே.


ஞானத்தில் சமய தீட்சை :
மெய்ப்பொருளை நாடும் ஞானி தானும் மெய்ப்பொருளைப் போன்று ஒளி உருவானவன் என்று உணர்வது.


ஞானத்தில் விசேட தீட்சை:
அங்ஙனம் ஒளியுடன் விளங்குவது


ஞான நிர்வாண தீட்சை:
மெய்ப்பொருளின் அருளைப் பெறுவது


ஞான அபிடேகம்:
குருமண்டலத்தில் இரண்டறக் கலத்தல்.


ஆன்ம தரிசனம் = ஆன்மா தன்னை அறிதல்.

சிவ தரிசனம் = ஆன்மா பராசக்தியை அறிதல்.

சிவ யோகம் = ஆன்மா இடையறாது பரையில் நிற்றல்.

சிவ போகம் = ஆன்மா குரு மண்டலத்தில் அழுந்துதல்.



 


#1477 to #1480


#1477. சன்மார்க்கம்

சாற்றுஞ்சன் மார்க்கமாம் தற்சிவ தத்துவம்
தோற்றங்க ளான சுருதிச சுடர் கண்டு
சீற்ற மொழிந்து சிவயோகச் சித்தராய்க்
கூற்றத்தை வென்றார் குறிப்பறி ந்தார்களே
.

புகழ் பெற்ற சன்மார்க்க நெறி இதுவே. சிவத்தின் உண்மையான வடிவை நாத விந்துக்களில் விளங்கும் சுடரில் காண வேண்டும். சினத்தைக் கை விட வேண்டும். சிவ யோகத்தில் நிலையாகச் சித்தத்தை வைக்க வேண்டும். கூற்றுவனை வென்ற சிவனின் உள்ளக் குறிப்பு அறிந்தவர் பற்றும் சன்மார்க்க நெறி எனப் பெயர் பெற்றது இது.

#1478. சைவநெறி அது தெய்வநெறி

சைவப் பெருமைத் தனிநா யகன்நந்தி
உய்ய வகுத்த குருநெறி ஒன்று உண்டு,
தெய்வச் சிவநெறி, சன்மார்க்கம் சேர்ந்து உய்ய
வையத்து உள்ளார்க்கு வகுத்து வைத்தானே.


பெருமை வாய்ந்த சைவத்தின் தன்னிகரற்ற தலைவன் சிவபெருமான். சீவர்கள் உய்வதற்காகச் சிவன் வகுத்த நெறி ஒன்று உண்டு. அதுவே ஒளி நெறி அல்லது தெய்வநெறி எனப்படும் சன்மார்க்கம். அதன் வழி நடந்து சீவர்கள் உய்வதற்காகச் சிவ பெருமான் அதை அமைத்து அருளியுள்ளான்.

#1479. குருபக்தி தரும் முக்தி

தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்யப்
பரிசிக்கச் கீர்த்திக்கப் பாதுகஞ் சூடக்
குருபத்தி செய்யும் குவலயதோர்க்குத்
தருமுத்தி சார்பூட்டுஞ் சன்மார்க்கம் தானே.


தரிசித்து, பூசித்து, தியானித்து, ஸ்பரிசித்து, புழ்ந்து, திருவடிகளைத் தலைமேல் சூடிக் குரு பக்தி செய்பவர்களுக்கு சன்மார்க்கம் தரும் முக்தி.
விளக்கம்
குருவும் சிவனின் வடிவமே. குருவிடம் பொருந்தி இருப்பது சிவனின் ஆற்றல்.
எனவே அன்பர்கள் குரு பக்தி செய்வதன் மூலம் முக்தி அடையலாம்.

#1480. பிறவிப் பிணி ஒழியார்

தெளிவறி யாதார் சிவனை அறியார்
தெளிவை அறியாதார் சீவனு மாகார்
தெளிவறி யாதார் சிவமாக மாட்டார்
தெளிவறி யாதவர் தீரர் பிறப்பே.

மனத் தெளிவு இல்லாதவரால் சிவபெருமானை அறிய முடியாது.
அவரால் பரந்து விரியும் சீவனின் ஆற்றலையும் அறிய முடியாது.
அதனால் அவரால் ஒரு நாளும் சிவமாக மாற முடியாது.
அதனால் அவரால் பிறவிப்பிணியை ஒழிக்கவும் முடியாது.
 
திருமந்திரம் - ஐந்தாம் தந்திரம்

#1481 to #1483

#1481. ஞான அநுபூதியில் இன்பம்

தான் அவன் ஆகித் தான் ஐந்தாம் மலம் செற்று
மோனம் அது ஆம் மொழிப்பால் முத்தர் ஆவதும்,
ஈனம் இல் ஞான அனுபூதியில் இன்பமும்,
தான் அவனாய் அற்றல் ஆனசன் மார்க்கமே.


சன்மார்க்கம் அடைவிப்பது எவற்றை?

ஆன்மாவாகிய தன்னையே சிவமாக ஆக்கி விடுவது, தன்னிடம் பொருந்தியுள்ள ஐந்து மலங்களை அகற்றுவது; மௌனமான பிரணவத்தை அடைந்து முத்தன் ஆவது; ஈனம் இல்லாத ஞான அநுபூதியில் இன்பம் அடைவது, தன்னிலை அற்றுத் தானே சிவமாக மாறிவிடுவது என்பவை கிட்டும்.


ஐந்து மலங்கள் : ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி.


#1482. சன்மார்கத்தார் மேன்மை


சன்மார்க்கத் தார்க்கு முகத்தொடு பீடமும்
சன்மார்க்கத் தார்க்கு மிடத்தொடு தெய்வமும்
சன்மார்க்கத் தார்க்கு வருக்கந்த் தரிசனம்
எம்மார்க்கத் தார்க்கும் இய்ச்ம்புவன் கேண்மினோ.


சன்மார்க்க நெறியினர் முகம் சிவனின் இருப்பிடம் ஆகும்.
அவர்கள் இருப்பிடமே தெய்வம் உறையும் கோவில் ஆகும்.
அவர்களைக் காண்பதே சிவ தரிசனம் செய்வது ஆகும்.
எந்த மார்க்கத்தில் உள்ளவர்களுக்கும் நான் கூறுவது இதுவே.


#1483. துரியத்தில் துரிசு நீங்கும்


சன்மார்க்க சாதனந் தான்ஞான ஞேயமாம்
பின்மார்க்க சாதனம் பேதையர்க் காய்நிற்கும்
துன்மார்க்கம் விட்ட துரியத் துரிசற்றார்
சன்மார்க்கர் தானவ னாகும்சன் மார்க்கமே.


சன்மார்க்க சாதனம் ஒன்றே சிவத்தை உணர்த்தும் ஞானம் ஆகும்.
இந்த மார்க்கத்தைத் தவிர்த்த பிற அனைத்தும் பேதையர்களுக்கு உரியது.
தீமைகளைத் தரும் மார்க்கத்தை விட்டு விட்டுத் துரியத்தில் பொருந்தி நின்று குற்றங்கள் நீங்கி விளங்குவதே சீவனைச் சிவனாக ஆகும் சன்மார்க்க நெறி.




 
திருமந்திரம் - ஐந்தாம் தந்திரம்

#1484 to #1487
#1484. வேத மார்க்கமே நன் மார்க்கம்

சன்மார்க்க மெய்த வரும்பெருஞ் சீடர்க்குப்
பின்மார்க்க மூன்றும் பிறவியல் பாமென்றால்
நன்மார்க்கந் தானேசிவ னொடு நாடலே
சொன்மார்க்க மென்னச் சுருதி கைக் கொள்ளுமே.

சன்மார்க்கத்தை பயில்பவர்களுக்கு பிற மூன்று மார்க்கங்களாகிய சரியை, கிரியை, யோகம் என்பவை இயல்பாகவே அமையும். அவர்கள் விரும்புவது சிவத்துடன் பொருந்தும் நன்மார்க்கம். இதுவே வேதம் கூறும் பிரணவ நெறி என்று அறிக.

#1485. தானே சிவப் பேரொளி!

அன்னிய பாசமு மாகும் கருமமும்
முன்னு மவத்தையு மூலப் பகுதியும்
பின்னிய ஞானமும் பேதாதி பேதமும்
தன்னொடும் கண்டவர் சன்மார்க்கத் தோரே.

தனக்கு அன்னியமாகிய பாசம்; அந்தப் பாசத்தினால் விளையும் கருமம்; அந்தக் கருமத்தினால் விளையும் பிறப்பு, இறப்பு என்னும் இரு பிணிகள்; இந்தப் பிணிகளுக்குக் காரணமாகிய பிரகிருதி; இவற்றோடு பொருந்தி இவற்றை நன்கு அறிந்து கொள்ளும் ஞானம்; இவற்றுள் நிலவுகின்ற பல வேறுபாடுகள்; இவற்றுடன் ஆன்மாவான தன்னையும் கண்டு கொண்டவர் சன்மார்க்கத்தவர் ஆவார்.

#1486. அசைவானதில்லாமை

பசுபாச நீக்கிப் பதியுடன் கூட்டிக்
கசியாத நெஞ்சங் கசியக் கசிவித்து
ஒசியாத உண்மை சொரூபோ தயதுற்று
அசைவான தில்லாமை யானசன் மார்க்கமே.


ஆன்மாவை பாசத்திலிருந்து பிரித்துப் பதியுடன் சேர்க்க வேண்டும். கனியாத மனத்தை நன்கு கனிய வைக்க வேண்டும். அழியாத மெய்ப் பொருளுடன் சேர்ந்து சிறிதும் அசைவில்லாமல் சமாதியில் இருக்க வேண்டும். இதுவே சிறந்த சன்மார்க்கம் எனப்படும் நன்னெறி ஆகும்.

#1487. சித்த யோகம் தரும்

மார்க்கம் சன்மார்க்கிகட்கு இட்ட வகுப்பது
மார்க்கம் சன்மார்க்கமே அன்றி, மற்றொன்று இல்லை
மார்க்கம் சன்மார்க்கம் எனும் நெறி வைகாதார்
மார்கம்சன்மார்க்கம், ஆம் சித்த யோகமே.

சன்மார்க்கத்தில் உள்ளவர்கள் வகுத்துச் செல்லும் மார்க்கமே சன்மார்க்கம் எனப்படும். சன்மார்க்கத்தில் பொருந்தாதவர்கள் செல்லும் மார்க்கம் சித்திகளைத் தருகின்ற யோக நெறி எனப்படும்.

 
10. சக மார்க்கம்

இது தோழமை நெறி எனப்படும். இந்நெறியில் நிற்பவர்கள் சிவ வடிவினை அடைவார்கள்.

#1488 to #1490

#1488. முத்தியும் சித்தியும் தரும்

சன்மார்க்கம் தானே சகமார்க்கம் ஆனது,
மன்மர்க்கம் ஆம்முத்தி சித்திக்கும் வைப்பதாம்
பின்மார்க்கம் ஆனது, பேராப்பிறந்து இறந்து

உன்மார்க்கம் ஞானத்து உறுதியும் ஆமே?

சன்மார்க்கமே சகமார்க்கமாக ஆனது. ஞானநெறியினைத் தோழமை நெறியால் அடையலாம். மார்க்கங்களில் மன்னன் போன்ற இது முக்தியும் சித்தியையும் அளிக்க வல்லது. வேறு பிற்பட்ட மார்க்கங்கள் பிறவி மரணம் இவற்றை நீக்கா. பிறப்பு இறப்பு இவற்றை அளித்து அவை ஞானத்தை எண்ணி எண்ணி உறுதி அடைவதற்கு வழி வகுக்கும்.

#1489. துவாதச மார்க்கம்

மருவும் துவாதச மார்க்கம் இல்லாதார்
குருவும் சிவனும் சமயமும் கூடார்
வெருவும் திருமகள் வீட்டு இல்லையாகும்
உருவும் கிளையும் ஒருங்கு இழப்பாரே

தலையின் மீது பன்னிரண்டு அங்குலத்தில் பொருந்தியுள்ள துவாதச மார்க்கத்தை அறியாதவர்கள்,
அங்கே இருக்கும் குருமண்டலத்தையும் அறியார். அந்த ஒளி மண்டலத்தில் விளங்கும் சிவத்தையும் அறியார். அவர்கள் இல்லத்தில் இருக்க அஞ்சித் திருமகளும் விலகிச் சென்றிடுவாள். அவர்கள் தங்கள் உருவத்தையும் உறவுகளையும் ஒருங்கே இழந்து நிற்பர்.
துவாதச மார்க்கம் என்னும் பிரசாத நெறி அகரம் முதலான பன்னிரண்டு வழிகளில் இறைவனை அடைதல். இதை அறிந்து கொண்டவர்கள் இறவாத நிலையை அடைவர்.

#1490. யோகசமாதி

யோக சமாதியி னுள்ளே அகலிடம்
யோக சமாதியி னுள்ளே உளரொளி
யோக சமாதியி னுள்ளே உளசத்தி
யோக சமாதி உகந்தவர் சித்தரே.

துவாதசாந்தத்தில் பொருந்தி நிற்பவர் யோக சமாதியை அடைவர்.அங்கே நுட்ப வடிவில் அண்டத்துள் உள்ள அனைத்துமே உள்ளன. அங்கே சிவ சக்தியர் உள்ளனர். உள்ளம் விரும்பி இந்த யோக சமாதியில் அமைபவர் உண்மைச் சித்தர் ஆவர்.




 
திருமந்திரம் - ஐந்தாம் தந்திரம்


#1491 to #1494

#1491. யோகமும் போகமும் பொருந்தும்!

யோகமும் போகமும் யோகியார்க்கு ஆகுமால்
யோகம் சிவரூபம் உற்றிடும் உள்ளதோர்
போகம் புவியில் புருடார்த்த சித்தியாம்
ஆகும் இரண்டும் அழியாத யோகிக்கே.

யோகம், போகம் இரண்டும் யோகியர்க்குப் பொருந்தும். யோகத்தினால் ஒரு யோகி சிவ சாரூப்யம் அடைவார். போகத்தால் புருடார்த்தங்களாகிய அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கையும் பெறுவார். இதனால் அழியாத யோகிக்கு யோகம், போகம் இரண்டுமே நன்றாகப் பொருந்தும்.

#1492. சக மார்க்கம் என்பது எது?

ஆதார சோதனையால் நாடி சுத்திகள்
மேதாதி ஈரெண் கலாந்தத்து விண்ஒளி
போதாலயத்துப் புலன் கரணம் புந்தி
சாதாரணம் கெடலாம் சக மார்க்கமே.


குருவின் அருளால் ஞானம் பெற்றுச் சாதனை செய்வதால் நாடிகள் தூய்மை அடையும். அத்துவா சக்தி வந்து அமையும். மேதை முதலான பதினாறு கலைகளில் விளங்கும் வானமும் ஒலியும் நன்கு புலப்படும். அறிவின் ஆலயம் ஆகிய ஆன்மாவை, ஐம்புலன்களும் ஐம்பொறிகளும் கீழ் நோக்கி இழுக்கும் தம் இயல்பிலிருந்து மாறுபட்டு மேல் நோக்கிச் செலுத்தும் இயல்பை அடைவதே சகமார்க்கம் எனப்படும்.

#1493. சிவன் வந்து பொருந்துவான்

பிணங்கி நிற்கின்ற வைஐந்தையும் பின்னை
அணங்கி எறிவன் அயிர்மன வாளால்,
கணம் பதினெட்டும் கருதும் ஒருவன்
வனாக வல்லான் சிந்தை வந்து நின்றானே.


மாறுபட்டு நின்று ஆன்மாவைக் கீழ் நோக்கி இழுக்கின்ற ஐம்பொறிகளையும் மனம் என்னும் கூறிய வாளால் நான் வருத்தித் துன்புறுத்துவேன். அப்போது பதினெட்டுக் கணங்களும் வணங்குகின்ற, எல்லோரும் வணங்கத் தக்க இறைவன் ஆகிய சிவபெருமான் என் சிந்தையில் வந்து பொருந்தி நிற்பான்.

பதினெட்டுக் கணங்கள் :
அமரர், சித்தர், அசுரர், தைத்தியர், கருடர், கின்னரர், நிருதர், கிம்புருடர், கந்தருவர், இயக்கர், விஞ்சையர், பூதர், பாசாசர், அந்தரர், முனிவர், உரகர், ஆகாய வாசியர், போக பூமியர்.

#1494. உளங் கனிந்து நிற்பான்

வளங்கனி யொக்கும் வளநிறத் தார்க்கும்
வளங்கனி யொப்பதோர் வாய்மைய னாகும்,
உளங் கனிந்துள்ளம் ம் உகந்திருப்பார்க்கு
பழங் கனிந் துள்ளே பகுந்து நின்றானே.


நன்கு விளைந்த கனியினைப் போன்ற செம்மையாளர்களுக்கும், நல்ல ஒரு கனியினைப் போன்று இன்பம் தரும் உண்மைப் பொருள் இறைவனே ஆவான். இறைவன் கனியிலிருந்து சாற்றை வேறுபடுத்துவது போலவே , உள்ளம் கனிந்து உகந்து இருப்பவர்களைத் தத்துவங்களிலிருந்து வேறுபடுத்தி விடுவான். அதன் பிறகு தானும் அவர்களுடன் ஒன்றாகி விடுவான்.


 

திருமந்திரம் - ஐந்தாம் தந்திரம்

11. சற்புத்திர மார்க்கம்

11. சற்புத்திர மார்க்கம்

மகனாகும் தன்மை உடைய நன்னெறி. இதற்கு உரிய செயல்கள் கிரியை, பூஜை முதலியவை. நல்ல ஒரு மகன் தன் அன்புத் தந்தைக்குச் செய்யும் தொண்டு போன்றது இது.


#1495 to #1497
#1495. ஞானம் பெறுவர்

மேவிய சற்புத்திர மார்க்கம் மெய்த்தொழில்
தாவிப்பதாம், சகமார்க்கம், சகத்தொழில்
ஆவது இரண்டும் அகன்று, சகமார்க்கத்
தேவியோடு ஒன்றல், சகமார்க்கத் தெளிவே.


கிரியை வழி நிற்பது சற்புத்திர மார்க்கம். யோகத்தை அளிப்பது சக மார்க்கம். சன்மார்க்கத்தால் தெளிவும் ஞானமும் பெற்றவர்கள், இந்த இரு மார்க்கங்களையும் கடந்து சென்று, யோக சக்தியுடன் பொருந்தி இருப்பர்.

#1496. சற்புத்திர மார்க்கம்.

பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல்
ஆசற்ற நற்றவம், வாய்மை, அழுக்கின்மை
நேசித்திட் டன்னமு நீசுத்தி செய்தன் மற்று
ஆசற்ற சற்புத்திர மார்க்க மாகுமே.


குற்றமற்ற சற்புத்திர மார்க்கத்தின் எட்டு அங்கங்கள் இவை :-

1. பூசை செய்தல்,
2. பாராயணம் செய்தல்,
3. இறைவன் புகழைப் போற்றி வணங்குதல்,
4. சில மந்திரங்களைச் செபம் செய்தல்.
5. நல்ல தவ நெறிகளை மேற்கொள்ளுதல்,
6. உண்மையே பேசுதல்,
7. காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் என்ற ஆறு உட்பகைவர்களை நீக்குதல்,
8. ஹம்ச பாவனையை அன்புடன் செய்து வருதல்.

#1497. ஒரே நெறியைப் பின்பற்ற வேண்டும்

அறுகால் பறவை அலர்தேர்ந்து உழலும்
மறுகால் நரை அன்னம் தாமரை நீலம்
குறுகால், நறுமலர் கொய்வன கண்டும்
சிறுகால் அறநெறி செல்லுகிலாரே.

ஆறு கால்களை உடைய வண்டு, தேனைத் தேடிப் பல மலர்களை நாடி அலைந்து திரியும். வெண்ணிற அன்னம் தாமரை மலரை மட்டுமே நாடும். வண்ணம் மிகுந்த கவர்ச்சியான நீல மலரை நாடாது. கிரியை நெறியைப் பற்றிக் கொண்டவர் நறு மலர்களைக் கொண்டு சிவனை வழிபடுவதைக் கண்ட பின்பும் அங்ஙனம் செய்யாமல் பிற வழிச் சென்று வண்டுகளைப் போலத் திரிபவர்கள் அறிவிலிகள்.



 
Last edited:

திருமந்திரம் - ஐந்தாம் தந்திரம்

#1498 to #1501

#1498. திருவடியே நாம் அடையவேண்டிய கரை

அருங்கரை யாவது அவ்வடி நிழல்
பெருங்கரை யாவது பிஞ்ஞகன் ஆணை
வருங்கரை ஏகின்ற மன்னுயிர்க்கு எல்லாம்
ஒருங்கு அரையாய், உலகு ஏழின் ஒத்தானே!.

பிறவிப் பெருங்கடலின் அரிய கரை எனப்படுவது இறைவனின் திருவடிகளே! அந்தப் பெரிய கரையும் அரன் இடும் ஆணைப்படியே அமைந்திடும். திருவடிக் கரையினை அடையும் அழிவில்லாத உயிர்களுக்கு எல்லாம் ஒரே தலைவனாக ஏழு உலகங்களிலும் விளங்குபவன் நம் சிவபெருமானே ஆவான்.

#1499. தாங்குபவன் சிவன்.

உயர்ந்தும் பணிந்தும் முகந்தும் தழுவி
வியந்தும் மரனடிக் கைமுறை செய்மின்
பயந்தும் பிறவிப் பயனது வாகும்
பயந்தும் பரிக்கிலர் பான்மைய னாமே?

தன் நிலையில் இருந்து உயர்ந்தும், அரன் திருவடிகளைப் பணிந்தும், அதில் மிகுந்த இன்பம் அடைந்தும், அவற்றைத் தழுவிக் கொண்டு ஆனந்தம் அடைந்தும், மீண்டும் அவனிடமே விண்ணப்பம் செய்வீராகுக!
எடுக்க இருக்கும் பல பிறவிகளைத் தடுத்து, எடுத்த பிறவியைப் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்வதற்கு அது ஒன்றே நல்ல வழியாகும். மீண்டும் மீண்டும் இழிந்த நிலையை அடையாமல் தடுத்துத் தாங்குமாறு தன்னிடம் வந்து இறைஞ்சுபவர்களை, இறைவன் ஆதாரமாகத் தாங்கி நின்று தானே அருள் புரிவான்.

#1500. பிரான் வெளிப்படுவான்!

நின்று தொழுவன், கிடந்துஎம் பிரான் தன்னை
என்றும் தொழுவன் எழில்பரஞ் சோதியை
துன்று மலர்தூவித் தொழுமின் தொழுந்தொறும்
சென்று வெளிப்படும் தேவர் பிரானே.

நான் நின்ற வண்ணம் சிவபெருமானைத் தொழுவேன். நான் கிடந்த வண்ணமும் அந்தப் பிரானை என்றும் தொழுவேன். எழில் பரஞ்ஜோதியாகிய நம் சிவபெருமானை அழகிய, மணமிகுந்த நெருக்கமான மலர்களால் நீங்களும் அன்புடன் வழிபடுங்கள். அப்போது அவன் தன்னைத் தொழுது வணங்கும் தன் அடியவர்களின் சிந்தையில் வெளிப்பட்டு அருள் புரிவான்.

#1501. இன்பத்தில் நிலைபெறுவீர்!

திருமன்னு சற்புத்திர மார்க்கச் சரியை
உருமன்னி வாழு முலகத்தீர் கேண்மின்
கருமன்னு பாசங்கை கூம்பத் தொழுது
இரு மன்னு நாடோறு மின்புற் றிருந்தே.

வீடுபேற்றினை அளிக்க வல்லது சற்புத்திர மார்க்கம். அந்த மார்க்கத்துக்கு வாயிலாக அமைவது தொண்டு செய்யும் நன்னெறியாகும். வினைப் பயன்களால் உருவமும் உயிரும் பெற்று வாழும் உலகத்தோரே! நான் கூறுவதைக் கேளுங்கள்! கருவில் செலுத்தி உங்களை உலக வாழ்வில் சிறைப் படுத்தும் வினைப் பயன்கள் அகன்று செல்ல இறைவனை நாள்தோறும் வணங்குவீர்! மாறாத இன்பத்தில் நிலை பெற்று வாழ்வீர்.
 
திருமந்திரம் - ஐந்தாம் தந்திரம்

12. தாச மார்க்கம்

இது ஒரு அடிமையைப் போலத் தொண்டுகள் செய்யும் நெறி.
ஆலயம் சென்று தன் உடலால் தொண்டு புரிகின்ற நெறி இது.

#1502 to #1506

#1502. தாச மார்க்கம்

எளியனல் தீபம் இடல், மலர் கொய்தல்
அளிதின் மெழுகல், அது தூர்த்தல், வாழ்த்தல்,
பளிமணி பற்றல், பல்மஞ் சனம் ஆதி
தளிதொழில் செய்வது தான்தாச மார்க்கமே.


தொண்டு நெறி என்பது செய்வதற்கு எளிதான சிறிய பணிகளைச் செய்வது ஆகும். ஆலயத்தில் தீபம் ஏற்றுவது, மலர்களைக் கொய்வது, ஆலயத்தைப் பெருக்கிச் சுத்தம் செய்வது, ஆலயத்தை மெழுகுவது , இறைவனை வாழ்த்துவது , பூசை நேரத்தில் மணி அடிப்பது, திருமஞ்சனத்துக்கு நீர் கொண்டு வந்து தருவது போன்ற எளிய திருப்பணிகள் செய்வதே தாச மார்க்கம் எனப்படும் தொண்டுகள் செய்யும் நன்னெறி ஆகும்.

#1503. நம் வேந்தனை நாடுவீர்.

அது, இது ஆதிப்பரம் என்று அகல்வர்,
இதுவழி என்று அங்கு இறைஞ்சினர் இல்லை,
விதிவழியே சென்று வேந்தனை நாடும்
அது விது நெஞ்சில் தணிக்கின்ற வாறே.


ஆதிப் பரம் பொருள் அதுவோ இதுவோ என்று ஐயம் கொண்டவர்கள்
துணிவும் உறுதியும் இன்றி மனம் மயங்குவர். “இதுவே பரம் பொருள் . இதனை வழிபடுவதே சிறந்தது!” என்று உறுதியாக வழிபடுபவர் எங்கும் இல்லை! உங்கள் விதி வழிப்படி உங்களுக்கு எந்த இறைவனிடம் பற்று உள்ளதோ அவனையே சென்று வணங்குவீர். பரம் பொருள் அதுவோ இதுவோ என்ற ஐயங்களைப் போக்கும் வழி இது ஒன்றே ஆகும்.

#1504. அரன் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவன்!

அந்திப்பன் திங்கள் அதன் பின்பு ஞாயிறு
சிந்திப்பான் என்றும் ஒருவன் செறிகழல்
வந்திப்பர் வானவர் தேவனை நாள் தோறும்
வந்திப்பது எல்லாம் வகையின் முடிந்ததே
.

திங்களால் உண்டாகின்ற தாழ்ந்த உணர்வுகளை நான் முயன்று அடக்குவேன். அதன் பின்னர் அறிவினால் நிகழும் உயர்ந்த ஆராய்ச்சிகள். ஆராய்ச்சிகளின் பயனாக நான் திடமான ஞானம் பெறுவேன். எங்கும் நிறைந்துள்ள அரன் திருவடிகளை இடையறாது எப்போதும் எண்ணிக்கொண்டே இருப்பேன். அந்த
தேவதேவனை நான் வணங்குவேன். இந்த விதமான் வழிபாட்டினால் எல்லா வழிபாடுகளும் ஒரு முடிவில் பொருந்தும் நிலை ஏற்படும்.

#1505. தொழுதால் வழுத்துவான்!

அண்ணலை வானவர் ஆயிரம் பேர் சொல்லி
உன்னுவர், உள் மகிழ்ந்து, உள் நின்று அடித் தொழக்
கண் அவன் என்று கருது மவர்கட்க்கு ,
பண்ணவன் பேரன்பு பற்றிநின் றானே.


ஆயிரம் திருப் பெயர்களை சொல்லித் தேவர்கள் இறைவனைத் தொழுவார்கள். அர்ச்சனை செய்வார்கள். ஆனாலும் அவன் அவர்களை விடுத்து அரன் தன் உள்மனம் மகிழ்வது எவரிடம் என்று அறிவீரா? கண் போன்று அவனைக் கருத்தில் கொண்டு அவன் திருவடிகளைத் தொழுது நிற்கும் அடியவர்களிடமே! நாத வடிவாகிய இறைவன் தன் அன்பர்களின் அன்புக்கு ஆட்பட்டு அவர்களுக்கு அருளுடன் வெளிப்படுவான்.

#1506. நேசித்தவர் நினைவறியார்!

வாசித்தும் பூசித்தும் மாமலர் கொய்திட்டும்
பாசிக் குளத்தில்வீழ் கல்லா மனம் பார்க்கின்
மாசற்ற சோதிமணி மிடற்ற ண்ணலை
நேசித்திருந்த நினைவறி யாரே.

பாசி படர்ந்த குளத்தில் ஒரு கல்லை வீசினால் பாசி விலகிக் குளம் சிறிது தெளியும். மீண்டும் பாசி மூடி விடும்.
அதுபோலவே இறைவனின் புகழை வாசித்தாலும், அவனை பூசித்தாலும், வாச மலர்களைக் கொய்திட்டாலும், மனம் சிறிது நேரம் மட்டுமே தெளிவடையும். மாசற்ற சோதியாகிய, மணி வண்ண மிடற்றினை உடைய, நீல கண்டப் பெருமானை நினைவில் நிறுத்திக் கொண்டவர் உலக நினைவு அற்றவர் ஆகிவிடுவார்.

 

Latest posts

Latest ads

Back
Top