அரன் என்றால் தீ. காமம் உற்ற தீ தாண்டவமாடும். முன்பு சடை விரித்தாடிய காமமுற்ற அரனின் தாண்டவம் காட்டாறு போல கட்டற்று சண்ட மாருத தீ பிழம்பு நாகங்களாய் எங்கும் அலைந்தது. அரனின் இச்சையால் காமம் எரிந்து, அத்தாண்டவத்தில் தூசி (அணுதுகள்கள்) உருவாகி, மேக மண்டலங்களாகி, ஒளி உண்டு வாழும் சகோர பறவை போல, அம்மேக மண்டலங்கள் ஒளியுண்டு வளர்ந்து அகிலமாகின. கட்டற்ற அரனின் தாண்டவம் அமிழ்ந்து கட்டுண்ட மிருதங்க லயமாகி அகில அடிப்படையானது. அரன் கட்டுண்டால் (ஐம்மை) அரி ஆகிறான். அரி அணுத்துகள்களின் ஆதி மூலம். அவனிலிருந்து திருமகளும் (நாம் செல்வமென கருதும் உயிரற்ற பொருட்கள், மற்றும் உயிர்கள்) எழுகின்றன. எனவே அனைத்திற்கும் அடியில் அரன் தாண்டவம் என உணர்ந்து அனைத்தும் ஒன்றே என, தான் எனும் பற்றற்ற நிலை எய்துபவன் அனைத்தும் ஆள்பவனாகிறான் என்கிறது இப்பாடல்