OK NOW FOR THE MAIN TOPIC : PERIYARs BELIEF IN GOD ... I will try to translate everything in english. please give me some time:
ஈ.வே. ராமசாமி நாயக்கரின் பண்பாடு பற்றி உயர்வாகப் பேசுகிறார்களே-அந்த உயர்ந்த பண்பாடு உடைய ஈ.வே. ராமசாமி நாயக்கருடையப் பேச்சுகள் பல எப்படியிருந்தன என்பதைப் பற்றி பார்க்குமுன் – அவரை விமர்சிக்கும் முன் – ஒன்றை நினைவுப்படுத்திக் கொள்ளவேண்டும்.
அதாவது வீரமணி கூறுகிறார்:-
‘‘பெரியாருடைய கருத்துக்கு ஒருவர் மறுப்புச் சொல்ல வேண்டுமென்று சொன்னால் பெரியாரைப் பற்றி சங்கராச்சாரியார் எழுதிய நூலை ஆதாரமாகக் கொள்ளக்கூடாது. பெரியாரைப் பற்றிப் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்ட நூலை வைத்துப் போசினால்தான் அது முழுமையான நிலையை அடையும்.’’.
ஆகவே வீரமணியின் இந்த கருத்தை நினைவில் கொண்டு விமர்சனத்தை மேலே தொடர்வோம்.
1937-ல் ஈ.வே. ராமசாமி நாயக்கர் ‘நவமணி’ ஆண்டுமலரில் எழுதுகிறார்:-
‘‘எனக்குச் சிறுவயது முதற்கொண்டு ஜாதியோ, மதமோ கிடையாது. அதாவது நான் அனுஷ்டிப்பது கிடையாது. ஆனால் நிர்ப்பந்தமுள்ள இடத்தில் போலியாகக் காட்டிக் கொண்டிருப்பேன். அதுபோலவே கடவுளைப் பற்றியும் மனதில் ஒரு நம்பிக்கையோ, பயமோ கொண்டிருந்ததும் இல்லை. நான் செய்யவேண்டுமென்று கருதிய காரியம் எதையும் கடவுள் கோபிப்பாரோ என்றோ, தண்டிப்பாரோ என்றோ கருதி (எந்த காரியத்தையும்) செய்யாமல் விட்டிருக்கமாட்டேன். கடவுள் மகிழ்ச்சியடைவாரென்று கருதியோ, சன்மானம் அளிப்பார் என்று கருதியோ எந்த காரியத்தையும் செய்திருக்கவும் மாட்டேன்.
எனது வாழ்நாளில் என்றைக்காவது ஜாதி, மதத்தையோ, கடவுளையோ உண்மையாக நம்பியிருந்தேனா என்று இன்னும் யோசிக்கிறேன். இதற்கு முன்பும் பல தடவை யோசித்திருக்கிறேன். எப்பொழுதிலிருந்து இவைகளில் எனக்கு நம்பிக்கையில்லையென்றும் யோசித்து யோசித்துப் பார்த்திருக்கிறேன். கண்டுபிடிக்க முடியவே இல்லை’’
என்றும்,
90-வது ஆண்டு மலரில்,
‘‘நான் 1920-இல் காங்கிரசில் சேர்ந்தேன். அதற்கு முன்பு 1900 முதல் பார்ப்பனரல்லாதார் நல உணர்ச்சி கொண்டவனாக இருந்துவந்தேன். நான் 1900-க்கு முன்பே கடவுள், மத, ஜாதி விஷயங்களில் நம்பிக்கை இல்லாதவனாக இருந்து வந்தேன்’’
என்றும் கூறுகிறார்.
இதைப் படிப்பவர்களுக்கு ‘அடடா! ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு பிறந்ததிலிருந்தே கடவுள் பற்று இருந்ததில்லை. அவர் ஒரு நாத்திகப் பிழம்பாகத்தான் பிறந்ததிலிருந்தே இருந்திருக்கிறார்’ என்றுதான் தோன்றும். ஆனால் ஈ.வே. ராமசாமி நாயக்கர், ‘பண்பாடு மிக்கவர்,’ ‘பொய் சொல்லாதவர்’ என்றெல்லாம் அவரின் அடியார்கள் மார்தட்டிக் கூறுகின்றார்களே அந்த ஈ.வே. ராமசாமி நாயக்கரின் இந்தக் கூற்று உண்மையா?
எனக்கு சிறுவயது முதற்கொண்டு கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்லும் ஈ.வே. ராமசாமி நாயக்கர் தன்னுடைய 46 வயது வரை கடவுள் பற்று, மதப்பற்றுமிக்கவராக, நம்பிக்கையாளராக இருந்திருக்கிறார் என்பதுதான் வரலாறு காட்டும் உண்மை. அந்த வரலாற்று உண்மையை, வீரமணி சொல்கின்றாற்போல, ஈ.வே. ராமசாமி நாயக்கருடைய பத்திரிகையான ‘குடியரசு’ இதழிலேயே காண்போம்.
46 வயதுவரை ஈ.வே. ராமசாமி கொண்ட கடவுள் நம்பிக்கை!
ஈ.வே. ராமசாமி நாயக்கரின் முதல் குடியரசு இதழ் 02-05-1925 -இல் வெளியானது. அதில குடியரசு என்று தலையங்கம் இட்டு இவ்வாறு இருக்கிறது:-
‘‘தாய்திரு நாட்டிற்கு யாம் இதுகாறும் இயற்றிவரும் சிறு தொண்டினை ஒரு சிறு பத்திரிகை வாயிலாகவும் எம்மால் இயன்ற அளவு ஆற்றிவரல் வேண்டுமென இரண்டாண்டுகளுக்கு முன்னர் எம்மிடத்து எழுந்த பேரவா இன்று நிறைவேறும் பேற்றை அளித்த இறைவன் திருவடிகளில் இறைஞ்சுகின்றோம்.’’
இவ்வாறு துவங்கும் தலையங்கம்
‘‘இப்பெருமுயற்சியில் இறங்கியுள்ள எமக்குப் போதிய அறிவையும், ஆற்றலையும் எல்லாம் வல்ல இறைவன் தந்தருள்பாலிப்பானாக’’
என்று முடிகிறது.
மேலும் அதே குடியரசில்,
‘‘இம்மண்ணுலகை நீத்து விண்ணுலகமெய்திய செய்தியைக் கேள்வியுற்று நாம் பெரிதும் வருந்துகின்றோம். அவரது இடது கன்னத்தில் முளைத்த சிறு கொப்பளமே அவரது ஆவியைக் கொள்ளை கொண்ட கூற்றுவன்! அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் அருள்வானாக’’
என்று இருக்கிறது.
ஈ.வே. ராமசாமி நாயக்கரால் ஆரம்பிக்கப்பட்ட, ஈ.வே. ராமசாமி நாயக்கரை ஆசிரியராகக் கொண்ட குடியரசு இதழ் இறைவனைப் பற்றிக் கூறுகிறதென்றால் அதில் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு உடன்பாடு உண்டு என்றுதானே அர்த்தம். மேலும் தலையங்கங்கள் தன்னால் எழுத்தப்பட்டது என்று ஈ.வே. ராமசாமி நாயக்கரே எழுதியிருக்கிறார். அப்படி இருக்கும்போது குடியரசில் எழுதப்பட்ட, தலையங்கத்தில் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு உடன்பாடு உண்டு என்றுதானே பொருள்!
இந்த ஆதாரங்கள் கூட போதாது என்பவர்களுக்கு மேலும் சில ஆதாரங்கள் இதோ!
அதற்குமுன், வீரமணியின் பொய்!
வீரமணியிடம், ‘பெரியார் பிறவி நாத்திகரா? அல்லது (பின்தாங்கிய) வயது வந்தபின் நாத்திகரா?’ என்று கேள்வி கேட்டதற்கு, வீரமணி, ‘‘அய்யாவின் கூற்றுப்படி அவர்களுக்குத் தெரிந்த காலம் முதல் கடவுள் நம்பிக்கை இருந்ததாகத் தெரியவில்லை என்றாலும் குடியரசின் துவக்க கால இதழ்களில் கடவுள் பற்றி சில தலையங்கங்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பதாலோ அவர் பிறகு நாத்திகரானார் என்று குறிப்பிட முடியாது. அப்போது உடன் இருந்தவர்கள் எழுதவும் ஒருவேளை அனுமதித்திருக்கக்கூடும்’’ என்று கூறுகிறார். (நூல்:- வீரமணியின் பதில்கள்)
வீரமணி சொல்வதுபோல வைத்துக் கொண்டாலும் நாத்திகப் பத்திரிக்கையில் ஆத்திகக் கருத்துக்களை ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஏன் அனுமதித்தார்? ஈ.வே. ராமசாமி நாயக்கர் அப்போது அனுமதித்தார் என்றால் அவர் வழிப்படி நடக்கும் தாங்கள் உண்மை இதழிலும் விடுதலை நாளேட்டிலும் கடவுளை வேண்டுகிற, கடவுளை நம்புகிற கட்டுரைகளை எழுத அனுமதிப்பீர்களா?
ஆனால் வீரமணி சொல்கின்ற மாதிரி உண்மை அதுவல்ல. ஈ.வே. ராமசாமி நாயக்கர் தன்னுடைய 46 வயது வரை கடவுளை நம்பினார். அதை மறைக்க ஈ.வே. ராமசாமி நாயக்கரும், வீரமணியும் பொய் சொல்கிறார்கள். ஈ.வே. ராமசாமி நாயக்கரும் அவருடைய சீடர் வீரமணியும் பொய் சொல்வதில் வல்லவர்கள். இருப்பினும் உண்மையை யாராலும் மறைக்க முடியாது என்பதை இவர்களுக்கு நாம் எடுத்துக்காட்டுவோம். இதோ! அதே முதல் குடியரசில் ஈ.வே. ராமசாமி நாயக்கரே பத்திரிகாலய திறப்பு விழாவில் பேசிய பேச்சு வெளியிடப்பட்டிருக்கிறது.
அதில்,
‘‘ஸ்ரீமான் ஈ.வே. ராமசாமி நாயக்கர் அவர்கள் ஸ்ரீலஸ்ரீ சுவாமிகளைப் பத்திரிகாலயத்தைத் திறந்து வைக்கும்படி கேட்டுக்கொண்டபோது கீழ்க்கண்டவாறு பேசினார்’’ என்று குறிப்பு எழுதி அதன் கீழ் ஈ.வே. ராமசாமி நாயக்கர் பேசிய பேச்சு அச்சிடப்பட்டு இருக்கிறது.
மேலும் அதில்,
‘‘இப்பத்திரிகாலயத்தை திறப்பதற்கு ஈசன் அருளால் ஸ்ரீசுவாமிகள் போன்ற பெரியார் கிடைத்தது அரிதேயாகும். இறைவன் அருளாலும், சுவாமிகளது அருளாலும் பத்திரிகை என்றும் நிலைபெற்று மற்ற பத்திரிகைகளிடமுள்ள குறையாதுமின்றி செவ்வனே நடைபெற வேண்டுமாய் ஆசீர்வதிக்கும்படி சுவாமிகளை வேண்டுகிறேன்’’ என்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் பேசியிருக்கிறார்.
இதன்மூலம் நமக்கு தெரிவதென்ன? ஈ.வே. ராமசாமி நாயக்கர் கடவுள் மீது 46 வயது வரை நம்பிக்கை கொண்டிருந்தார் என்பதுதானே! மேலும் சில ஆதாரங்கள் இதோ!
பேராசிரியர் ந.க. மங்கள முருகேசன் என்பவர் ‘சுயமரியாதை இயக்கம்’ என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூலுக்கு மு. கருணாநிதி அணிந்துரையும், க. அன்பழகன் வாழ்த்துரையும், தி.க. பொதுச்செயலாளர் கி. வீரமணி பாராட்டுகளையும் வழங்கியுள்ளனர். இப்படிப்பட்ட இந்நூலில் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் கடவுள் நம்பிக்கையைப் பற்றி வருபவற்றைப் பார்ப்போம்.
* வ. வே. சு. அய்யர் மறைவு குறித்து குடியரசில் பெரியார் எழுதுகையில் ‘‘அவரது ஒரே புதல்வன் நிலை கண்டு எமதுள்ளம் நடுக்கமெய்துகிறது; எல்லாம் ஆண்டவன் செயல்’’ என்று எழுதினார்.
(குடியரசு 07-06-1925)
* காந்தியடிகள் உண்ணா நோன்பு இருந்தபோது ‘‘தப்பிதம் செய்த மக்களை தண்டித்தல் தவறு என உணர்ந்து அவர்களைப் பரிசுத்தப்படுத்த மகாத்மா உண்ணாவிரதம் மேற்கொண்டதை நினைக்க, அவருடைய அரிய மேன்மை மலை மேலேற்றிய தீபம் போல் ஜொலிக்கிறது. அஹிம்சையின் தத்துவமும் விளங்குகிறது. உண்ணாவிரதத்தின் போது அவருக்கு போதிய வலிமை அளித்த கடவுளுக்கு எமது வணக்கம்’’ என்று பெரியார் எழுதினார்.
(குடியரசு 06-12-1925)
* சித்தரஞ்சன் தாசின் புதல்வர் மறைவு குறித்து எழுதுகையில் ‘‘சென்ற ஆண்டில் விண்ணவர்க்கு விருந்தினராய்ச் சென்ற தேசபந்து சித்தரஞ்சன் தாசின் அருமையான ஏகபுதல்வன் கடந்த ஜீன் மாதம் 26-தேதி இறைவன் திருவடியெய்தினார் என அறிய நாம் பெரிதும் வருந்துகின்றோம்’’ என்று எழுதினார்.
(குடியரசு 04-07-1926)
மேற்கண்ட ஆதாரங்களை வைத்துப் பார்க்கும் போது ஈ.வே. ராமசாமி நாயக்கர் கடவுள் நம்பிக்கையில் ஊறித் திளைத்திருக்கிறார் என்பது வெள்ளிடைமலையெனத் தெற்றென விளங்கும். மேலும் ஈ.வே. ராமசாமி நாயக்கர், ஆத்திகர்கள் எவ்வாறு ஒரு நற்காரியத்திற்கு ஆன்மிகப் பெரியவர்களை அழைப்பார்களோ அதேபோல் தனது குடியரசு பத்திரிகாலயத்தை தொடங்கிவைத்திட ஸ்ரீலஸ்ரீ திருப்பாதிரிப் புலியூர் ஞானியர் சுவாமிகள் என்னும் சமய ஞானியையே அழைத்தார் என்பதிலிருந்தும் அவரது கடவுள் நம்பிக்கையை அறியலாம். ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாதிருந்தால் வேறு தலைவர்களை அழைத்திருப்பார். அவருக்கு கடவுள் நம்பிக்கை இருந்த காரணத்தால்தான் சமய ஞானியை அழைத்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது என்பது அவரது குடியரசு தலையங்கத்திலிருந்து நாம் அறியலாம்.
இதிலிருந்து என்ன தெரிகிறது?
ஈ.வே. ராமசாமி நாயக்கர் கடவுளை நம்பியிருக்கிறார். அதாவது தன் வாழ்நாளின் மொத்த வயதில் பாதி வயது வரை (46 வயது வரை) கடவுள் நம்பிக்கையில் கழித்திருக்கிறார்.
ஆனால் ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொல்வது என்ன? ‘யோசித்து யோசித்துப் பார்க்கிறேன். கண்டுபிடிக்கவே முடியவில்லை’ என்று சொல்கிறார். யோசித்து ஏன் பார்க்க வேண்டும்? 02-05-1925-ஆம் ஆண்டு குடியரசு இதழைப் பார்த்தாலே போதுமே! அந்த குடியரசு இதழ் காணாமல் போய்விட்டது அல்லது கண்டுபிடிக்க முடியவில்லை என்றுகூட இவர்கள் பொய் சொல்வார்கள். ஆனால் அந்த முதல் குடியரசு இதழ் என்ன ஐந்தாயிரம் வருடத்திற்று முந்தைய இதழா? அல்லது புனல்வாதம் செய்து ஆற்றில் விட்டுவிட்டாரா? அல்லது அனல்வாதம் செய்து நெருப்பில் போட்டுவிட்டாரா?
ஈ.வே. ராமசாமி நாயக்கர் ‘நவமணி’ இதழில் கடவுள் நம்பிக்கை சிறுவயது முதல் இல்லை என்று எழுதியது. 1937-ல். முதல் குடியரசு வெளிவந்தது 1925. அதாவது முதல் குடியரசு இதழ் வெளிவந்து 12 வருடங்கள்தான் ஆகிறது. இந்த 12 வருடங்களுக்குள் தன்னுடைய 46 வயது வரை கொண்டிருந்த கடவுள் நம்பிக்கையை மறுத்து சிறுவயது முதல் கடவுள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்று சொல்வது கடைந்தெடுத்த பொய் அல்லவா? ஹிந்து மதத்தின் பழமையான நூல்களை தேடித்தேடி ஆராய்ந்து இந்த நூலில் இப்படியிருக்கிறது, அந்த நூலில் அப்படியிருக்கிறது என்ற சொல்லத் தெரிந்த ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு, தான் வெளியிட்ட முதல் குடியரசு இதழை கண்டுபிடித்து எனக்குக் கடவுள் நம்பிக்கை இருந்தது என்று உண்மையைச் சொல்ல துணிவு இல்லையே! இதுதான் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் பண்பாடா?
கண்டுபிடிப்பது கூட கடினமாக இருந்திருக்கலாம். ஞாபகம் கூடவா ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு இருந்திருக்காது? தனது 46 வயது வரை நம்பியிருந்த கடவுள் பற்றை 12 வருடத்திற்குள்ளாக ஈ.வே. ராமசாமி நாயக்கர் மறந்திருப்பார் என்று கூறுவது அதைவிடப் பொய்யாகும். தன்னுடைய கடவுள் நம்பிக்கையை ஈ.வே. ராமசாமி நாயக்கர் மறைத்து போலி விளம்பரத்திற்காகப் பொய் சொல்லியிருக்கிறார் என்பதுதான் உண்மை.
ஈ.வே. ராமசாமி நாயக்கர் ஏன் 46 வயது வரை கொண்டிருந்த கடவுள் நம்பிக்கையை மறைத்துப் பொய் சொல்ல வேண்டும்?
எல்லாம் விளம்பரமோகம்தான்.
1937-ல் ஈ.வே. ராமசாமி நாயக்கரை பழுத்த நாத்திகவாதி என்று மக்கள் நம்பத்தொடங்கினர். அவரை பகுத்தறிவு பகலவனாக மக்கள் ஏற்கத் தொடங்கினர். அப்போது போய் நான் 46 வயது வரை கடவுளை நம்பினேன். பிறகு விட்டுவிட்டேன் என்று மக்களிடம் சொன்னால் தன்னை எங்கே பழுத்த நாத்திகவாதியாக – பகுத்தறிவு பகலவனாக ஏற்றுக் கொண்டு மரியாதை தரமாட்டார்களோ என்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் நினைத்தார். அதனால்தான் ஈ.வே. ராமசாமி நாயக்கர் சிறுவயது முதல் கடவுள் நம்பிக்கை இல்லை என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளப் பொய் சொன்னார். விளம்பரமோகம் யாரை விட்டது?ஆனால் தன்னுடைய கடந்தகால வாழ்க்கையை மறைத்துப் பொய் சொல்லி திரியும் நடிகர்-நடிகைகளுக்கும், அவர்களைப் போலவே பொய் சொல்லி திரியும் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்பதுதான் நம் மனதில் எழுத் கேள்வி! இப்படிப் பொய் சொல்பவர்தான் பெரியாரா என்றக் கேள்வியைத்தான் கேட்கத் தோன்றுகிறதல்லவா?
தலைவரே பொய் சொல்லும்போது அவருடைய அடியார்கள் பொய் சொல்லாதவர்களாக இருப்பார்களா? அதனால்தான் வீரமணியும் இந்த விஷயத்தில் உண்மையை மறைத்துப் பொய் சொல்லியிருக்கிறார். ஈ.வே. ராமசாமி நாயக்கர் எழுதிய குடியரசு இதழை வைத்துத்தான் இப்போது வீரமணியிடம் கேள்வி கேட்கிறோம்.
ஈ.வே. ராமசாமி நாயக்கர் 46 வயது வரை கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தாரா? இல்லையா? இதை திராவிடர் கழகம் தெளிவுபடுத்தட்டும். அதன்பிறகு ஈ.வே. ராமசாமி நாயக்கரின் பண்பாடு எத்தன்மை வாய்ந்தது என்பதை பரிசீலிப்போம். அதுவரை ஈ.வே. ராமசாமி நாயக்கரின் பண்பாடு என்பது பொய் சொல்வதிலே அடங்கியிருக்கிறது என்று சொல்வதில் என்ன தவறு இருக்கமுடியும்?
- தொடரும்
குறிப்பு:
ஈ.வே. ராவின் தலைமையில் நடந்த நிகழ்ச்சி
1971-ம் ஆண்டு ஜனவரி மாதம் 6-ம் தேதி தினமணி நாளிதழில் வந்த செய்தி:
நாத்திக மாநாடு; முகூர்த்தக்கால் நடப்பட்டது! மஞ்சள், குங்குமம் மாவிலைக் கொத்துடன் – என்ற தலைப்பில் இருந்த செய்தியில் சேலம் போஸ் மைதானத்தில் 1971-ல் ஜனவரி 16,17-ம் தேதிகளில் ‘பகுத்தறிவாளர்கள் மாநாடு’ ஒன்று நடத்தப்பட உள்ளது. இம்மாநாட்டிற்கு ஈ.வே. ராமசாமி நாயக்கர் தலைமை தாங்க உள்ளார். அதற்காக ஒரு பெரிய பந்தலும் போடப்பட்டுள்ளது. இந்தப் பந்தல் போடுவதற்கு முன்பாக ‘மாவிலை, வேப்பிலை’ கட்டப்பட்ட முகூர்த்தக்கால் நடப்பட்டு மஞ்சள் குங்குமமும் பூசப்பட்டது. அவ்வழியே சென்ற மக்கள் இதனைக் கண்டு வியப்படைந்தனர். (நன்றி: விஜய பாரதம் 10-02-2002)